Friday, March 15, 2013

நீங்களும் எழுதலாம் வாருங்கள்........என் சாதாரண எழுத்துக்களுக்கு சிறிதளவேனும் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தது எப்பூடி... ப்ளாக்தான், அதை தொடரலாமென்று இருக்கின்றேன். "இனிமேல் குடிக்கவே மாட்டேன்" என்று சொல்லும் குடிமகன் போலவே; கடந்த 2 ஆண்டுகளில் இப்படி பல தடவைகள் கூறிவிட்டேன்!!! இருப்பினும் இம்முறை வாரம் குறைந்தது இரு பதிவாவது எழுத முயற்சிக்கின்றேன்!!! # மற்றும் பின்னூட்ட, ஓட்டுப்போடும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் அறவே இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!!

எமது எண்ணங்களை, விருப்பு வெறுப்புகளை, கோபத்தை, மகிழ்ச்சியை, ஆதங்கத்தை, சொல்லிப் புரியவைக்க முடியா விடயங்களை அந்தந்தத்  தருணங்களில் எழுத்தில் கொண்டுவருவது சிறப்பு. எமது வாழ்வின் கடந்தகால பக்கங்களையும் அப்போதைய எம் எண்ணங்களையும் நிலையான ஒரு ஆவணமாக சேமித்து; காலங்கள் கடந்த பின்னர் பசுமையான நினைவுகளாய் மீட்டுப் பார்க்க எழுத்துக்களை பதிந்து வைத்தல் சுலபமான மற்றும் எளிமையான வழிமுறை!! சிலருக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு; அனால் அது குறிப்பிட்டவரின் எண்ணமாக மட்டும் இருக்கும். தனிப்பட்ட விடயங்களை எழுதிவைக்க நாட்குறிப்பு மிகச்சரியான வழிமுறை; ஆனால் பொதுவான எண்ணங்களை பொதுவில் முன்வைத்தால்தான் அதன் மாறுபட்ட கோணங்களின் அலசல்களும், தெளிவும் கிடைக்கப்பெறும். அதற்கு இன்றைய இணைய உலகு சமூகத்தளங்கள், வலைப்பூக்கள், இணையதளங்கள் என பலவழிகளை எமக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றது!

எழுத்து என்றால் இலக்கியமாகவும் இலக்கணப்பிழை இன்றியும்தான் இருக்கவேண்டும் என்றில்லை என்பது என் அபிப்பிராயம்; எண்ணங்களை பதிவு செய்வதுதான் இங்கு பிரதானம். எழுத்துப் பழக்கம் பழகப்பழக; எங்கெங்கோ கேட்ட/வாசித்த வார்த்தைகள் இயல்பாக எழுத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும். எழுத எழுத அதிகளவில் தமிழ் சொற்கள் பரிச்சியமாகும், எழுத்து நடை அழகாகும்; ஓரிரு ஆண்டுகளில் ஆரம்பித்த இடத்துடன் ஒப்பிடுகையில் எழுத்தின் தரம் மிகவும் முதிர்ச்சியும் வழர்ச்சியும் அடைந்திருக்கும். மற்றும் எழுத்து என்று சொன்னதும் சிலர் சமூகம் சார்ந்த, அறிவியல், விஞ்ஞானம், இலக்கியம் போன்ற விடயங்களைத்தான் தேவையென முன்னிறுத்திப் பேசுவார்கள். என்னைப் பொறுத்தவரை மேற்சொன்னவைக்கு பொழுதுபோக்கு சார்ந்த எழுத்துக்கள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல!! அது விளையாட்டோ, சினிமாவோ அல்லது வேறு எந்த சுவாரசியமான விடயமாக இருந்தாலும். இங்கு வாசகர்கள்தான் நுகர்வோர்; எது தேவை என்பதை நுகர்வோர்தான் தீர்மானிக்கவேண்டும், விமர்சகர்களில்லை!! அதே நேரம் எழுதுபவரது எழுத்துக்கள் எது சம்பந்தப்பட்டவை என்பது நுகர்வோருக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம், அது அபாசமானவை என சொல்லப்படும் எழுத்துக்களாக இருந்தாற்கூட.


என்னை பொறுத்தவரை பதிவுலகமும் Facebook ம் நிறையக் கற்றுக் கொடுத்திருக்கின்றன; தமிழில் பல புதிய சொற்கள், சொல்லாடல் முறை, வசன அமைப்பு, கட்டுரை வடிவமைப்பு என பல விடயங்களை இணையம் அனுபவம் மூலம் எமக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றது. கூடவே இங்கு எம்மை ஏகலைவனாக்கிய பல துரோணாச்சாரியார்களும் உள்ளனர்; அவர்கள் வயதில், எழுத்தில், அனுபவத்தில் உச்சம் தொட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. எவரிடமும் இருந்து நல்ல விடயங்களை எடுத்துக்கொள்ளலாம்; ஆனால் எவரையும் முன்மாதிரியாக மட்டும் எடுத்துக்கொள்ளல் கூடாது, அது ஒருவரது சுயத்தை பறித்துவிடும். இசைக்கருவி வாசிப்பவர் ஒருவரை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும், எப்படி இவரால் இலகுவாக வாசிக்க முடிகின்றது என்று!! அவர் ஒன்றும் முதல் நாளில் வாசித்து ஆச்சரியப்படுத்தவில்லை; பலநாள் வாசித்துப்பழகிய பயிற்சி + அனுபவம்தான் அவரது திறன். தமிழும் அப்படித்தான் எழுத எழுத எம்முள் அதுவாக ஆட்சிசெய்ய ஆரம்பிக்கும், ஆகவே நண்பர்களே நினைப்பதை எழுத ஆரம்பியுங்கள். எழுத ஆரம்பித்த புதிதில், அனுபவ எழுத்துக்களை வாசிக்கும்போது; நிறையவே பின்னுக்கு நிற்பதுபோல தோன்றும். அந்த அனுபவ எழுத்துக்களும் ஒருநாள் ஆரம்பிக்கும்போது மழலைதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; ஆனால் எவரையும் பின்பற்றி மட்டும் எழுத ஆரம்பிக்காதீர்கள்.

தான் நடித்த பழைய திரைப்படங்களை பார்க்கும்போது மோசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக தோன்றும் என்று ஒரு செவ்வியில் நடிகர் சூர்யா சொல்லியிருப்பார்; எழுத்துக்களும் அப்படித்தான் கடந்த காலத்து எழுத்துக்களை படிக்கும்போது மிகப் பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்சம் இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம் என்று தோன்றும்; அதுதான் எமது எழுத்தின் அனுபவ முதிர்ச்சி. அதை நான் உணர்கின்றேன், நான் எழுதிய பதிவுகளில் எனக்கு திருப்தியனவை வெறும் 10 சதவிகிதத்திக்கு உள்ளேதான். எழுத்து நடை, எழுத்துப்பிழை, அணுகிய முறை என நிறைய திருத்தங்களை அவை எமக்கு உணர்த்தும். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இப்போது எழுதும் எழுத்துக்களும் இதே மனநிலையை அப்போதும் கொடுக்கலாம். பின்னூட்டல்களில் 'வாக்குவாதம்' உச்சம் பெற்ற நேரங்களில், எனது பொறுமையை இழந்த சமயங்களில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி யிருக்கின்றேன். ஒருவருக்கு ஒன்றை புரியவைக்க முடியாதபோது, எம்மை/எமக்கு பிடித்தவரை மோசமான/தாங்கொணா சொற்கொண்டு சீண்டிப் பார்க்கும்போது; அந்தக் கணத்து கோபம் தகாத வார்த்தையாகி பின்னூட்டல்களில் வெளிப்பட்டிருக்கின்றன. அவற்றை நான் நீக்கவில்லை, அவை எனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். அவற்றை பார்க்கும் போதெல்லாம் எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படவேண்டும்; அதுதான் என்னை செதுக்கும். ஆனாலும் இன்றுவரை இந்த விடயத்தில் நான் செதுக்கப்படாத கல்லாக இருப்பது வேதனையான உண்மை; இப்போதெல்லாம் முடிந்தளவு முயற்சிக்கின்றேன்!!

இயல்பிலேயே எனக்கு தாழ்வு மனப்பாங்கு அதிகம்; அதிலும் இங்கிலீஷ் மொழி புலமைக்குறைவு எனக்கு மிகப்பெரும் தாழ்வு மனப்பான்மை. சில இங்கிலிஸ் மொழியிலான தவறுகளை குத்திக்காட்டிய (சுட்டிக்காட்டிய அல்ல) பின்னூட்டங்கள் தாழ்வு மனப்பான்மையை இன்னும் எண்ணை  ஊற்றி வழர்த்துவிட்டன. இப்போது மிகப்பெருமளவு மீண்டுவிட்டேன்; முழுமையாக மீளமுடியும் என்கிற நம்பிக்கையும் உண்டு. இதை சொல்ல காரணம் இங்கே பிழை சொல்ல, குறை பிடிக்க, குத்திக்காட்ட பலபேர் இருக்கின்றார்கள், அந்தக்நேரங்களில் அவற்றை நேர்மறையில் அணுகி திருத்திக்கொள்வது புத்திசாலித்தனம்; அதனை என்னைபோன்று தாழ்வு மனப்பான்மையாக்கி புளுங்கிக்கொள்வது அர்த்தமற்றது. மற்றும் ஒரு கருத்தை விவாதத்திற்கு முன்வைக்கும்போது எமக்கு இருக்கும் மிகப்பெரும் பிரச்சனை குறிப்பிட்ட கருத்தை நியாயப்படுத்தாலே அன்றி, அதற்கான சரியான முடிவை பெறுவதல்ல. பலருக்கும் தோற்றுப்போக சம்மதமில்லை, அதனால்தான் ஒருநிலையில் தம்பக்கம் தவறு என்று தெரிந்தாலும்; ஒத்துக்கொள்ளாமல் சமாளிப்பது, விதண்டாவாதம் பேசுவது, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது என அந்த விவாதத்தை சீர்குலைத்து ஒன்றுமில்லாமல் செய்துவிடுகின்றார்கள். இந்தப் பலரில் என்னுடன் சேர்த்து மிகப் பெரும்பான்மையானவர்கள் உள்ளனர் என்பது ஆரோக்கியமற்ற உண்மை!!


ஒருவர் அல்லது ஒரு விடயம் சார்ந்த எண்ணங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்றில்லை. முன்னர் தவறாக கணித்து எழுதியதை இன்று சரியாகவும், முன்னர் சரியாக கணித்து எழுதியதை இன்று தவறாகவும் உணர்ந்தால் தயக்கமின்றி இன்றைய மனநிலையை பதிவு செய்யலாம; அதில் தவறில்லை. ஜதார்த்தத்தில், காலத்திற்கு ஏற்ப, காலம் கொடுக்கும் அனுபவத்திற்கு ஏற்ப சில எண்ணங்கள் மற்றும் முடிவுகள் மாறுபடலாம். ஆரம்பத்தில் நாத்திகம் பேசிய கவியரசர் இறுதியில் 'அர்த்தமுள்ள இந்துமதம்' படைத்ததுபோல!! ஆனால் இதன் பின்னணியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு பக்கச்சார்பு காரணியும் இருக்கக்கூடாது என்பது அவசியம். பக்கச் சார்ப்பில்லாமல் எழுதவது என்பது எம்மை நாமே ஏமாற்றும் செயல்; முடிந்தளவு தவிர்க்கப் பார்க்கலாம். வாசிப்பவருக்கு வெறுப்பு ஏற்படாதவரை பிடித்ததை அல்லது பிடித்தவரை பற்றி எவ்வளவும் உயர்த்தியும் எழுதலாம்; ஆனால் பிடிக்காததை அல்லது பிடிக்காதவரை விமர்சிக்கும்போது சரியான நியாயம் இருக்கவேண்டும்; அதேநேரம் இதை அடிக்கடி செய்வதும் வாசிப்பவருக்கு எரிச்சலை கொடுக்கும். இப்போதெல்லாம் நான் விஜய், கருணாநிதி, சீமான், கௌதம் மேனன் பற்றி எழுதுவதை நன்கு குறைத்துவிட்டேன் :-)

எழுத்துக்கான அங்கீகாரம் கிடைப்பதும், கிடைக்காமல் விடுவதும் எழுதுபவர்களது எழுத்தின் திறமையின் அடிப்படையில் இல்லை என்னும் மாயை இங்குண்டு! இங்கு பலரும் அங்கீகாரம் என நினைப்பது பின்நூட்டல்களையும், ஓட்டுக்களையும், Like களின் எண்ணிக்கையையும்தான். அவற்றை பெறுவதாயின் ஒரு குழு அமைத்து பண்டமாற்று காலம்போல செயற்பட வேண்டும், அப்படி கிடைக்கப்பெறும் எண்ணிக்கைதான் உங்கள் எழுத்தின் அங்கீகாரம் என நினைப்பது தவறு. உங்கள் பதிவுக்கான ஒரு பின்னூட்டமேனும் பதிவு சார்ந்து சொல்லப்பட்டால், விவாதிக்கப்பட்டால், பாரட்டப்பட்டால் அதுதான் எழுத்திற்கான அங்கீகாரம். அதிகளவிலானவர்கள் வாசிக்கும் வண்ணம் சரியான இடங்களில் தொடுப்பை இடுவதன் மூலம் பதிவை விளம்பரப்படுத்தலாம், அதில் தவறில்லை; ஆனால் கருத்துக்களை வலிந்து பெற்றுக்கொள்ளுதல் எழுத்துக்கான அங்கீகாரமல்ல, அவை எழுதுபவருக்கு கொடுக்கப்படும் போலி கௌரவம்.

எழுத்துலக இளைஞர்கள் சிலர் தங்கள் எழுத்துக்கள் கண்டு கொள்ளப்படவில்லை என அங்கலாய்ப்பது தேவையற்றது. நன்றாக எழுதுங்கள், சொல்லவந்த விடயத்தை தெளிவாகவும், கவர்ச்சிகரமாகவும் எழுதிக்கொண்டே வாருங்கள்; உங்களை வாசிப்பவர்கள் ஒருநாள் அதிகரிப்பார்கள், உங்கள் எழுத்து ஒருநாள் விவாதிக்கப்படும். அன்று நீங்கள் உணரும் எழுத்துக்கான அங்கீகாரம் இன்று நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரமாக இருக்காது. உங்களை படிக்க சிலர் தயாராக இருகின்றார்கள் என்பதை உங்கள் எழுத்து உங்களுக்கு உணர்த்தினால் போதும்; அதுதான் அங்கீகாரம். ஒரு பதிவை எழுதி முடித்தவுடன்; சொல்லவந்த விடயத்தை வாசிப்பவர்களுக்கு சரியாக, அழகாக, தெளிவாக சொல்லி முடித்துவிட்டோம் என்கிற திருப்தி ஏற்படுமே!! அந்த சுய நம்பிக்கைதான் உங்கள் எழுத்தின் உண்மையான அங்கீகாரமாக இருக்கும். ஆகவே தயக்கமின்றி தொடர்ந்து உங்கள் எண்ணங்களை எழுதுங்கள், எழுதிக்கொண்டே இருங்கள்......

இதை சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் சாதிக்கவில்லை; ஆயினும் எனக்கு இப்போது எழுதுவதில் திருப்தி கிடைக்கின்றது, எனது பதிவுகளை ஒரு சிலரேனும் விரும்பி படிப்பார்கள் என்கின்ற நம்பிக்கையும் சந்தோசமும் ஏற்பட்டிருக்கின்றது, பல நல்ல நண்பர்கள் எழுத்தின் மூலம் கிடைத்திருக்கின்றார்கள், சிலவருடங்களாக தொடர்ந்து எழுதிகொண்டிருப்பதால் எழுத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தோன்றுகின்றது. அந்த நம்பிக்கையில்தான் மேலே சில விடயங்களை சொன்னேன். இது அறிவுரை அல்ல, எனது அனுபவம்!!!

4 வாசகர் எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளி விட்டு, மறுபடியும் தொடர வாழ்த்துக்கள்...

Unknown said...

\\எழுத்து என்றால் இலக்கியமாகவும் இலக்கணப்பிழை இன்றியும்தான் இருக்கவேண்டும் என்றில்லை என்பது என் அபிப்பிராயம்; எண்ணங்களை பதிவு செய்வதுதான் இங்கு பிரதானம்.//

யாழ் ஜீவா கலங்கவேண்டாம், குற்றம் சொல்ல குழுவாக வருவார்கள், சும்மா ஒரு வார்த்தை எழுத சொன்னால் போதும் ஓடியே போவார்கள். தொடர்ந்து எழுதவும்.

பூ விழி said...

அட இவ்வளவு வாசகர்(நண்பர்கள் ) வட்டங்கள் வைத்திருக்கும் நீங்களே இப்படியெல்லாம் சொன்ன நாங்கலாம் என்ன செய்வது எழுதலாம் வாங்கனு சொல்லிடீங்க அப்புறம் என்ன எனக்கெல்லாம் வந்து சொல்லி கொடுத்து போங்க கலந்துவிடேன் நண்பர் வட்டத்தில்

Jayadev Das said...

\\இம்முறை வாரம் குறைந்தது இரு பதிவாவது எழுத முயற்சிக்கின்றேன்!!!\\ சொன்ன வாக்கை காப்பாத்தணும்!!


\\எழுத்து என்றால் இலக்கியமாகவும் இலக்கணப்பிழை இன்றியும்தான் இருக்கவேண்டும் என்றில்லை என்பது என் அபிப்பிராயம்; எண்ணங்களை பதிவு செய்வதுதான் இங்கு பிரதானம். \\ மிகச் சரி.

\\ஆனால் எவரையும் பின்பற்றி மட்டும் எழுத ஆரம்பிக்காதீர்கள்.\\ நாம் எழுத்தும் ஸ்டைலில் நாம் படிக்கும் எழுத்துக்களின் தாக்கம் இருக்கத்தானே செய்கிறது!!

\\இயல்பிலேயே எனக்கு தாழ்வு மனப்பாங்கு அதிகம்; அதிலும் இங்கிலீஷ் மொழி புலமைக்குறைவு எனக்கு மிகப்பெரும் தாழ்வு மனப்பான்மை.\\ உணகளுக்கு குஜராத்தி தெரியாது, ஒரியா தெரியாது, அவ்வளவு ஏன் பக்கத்தில் அந்தமானில் வசிக்கும் ஆதி வாசிகள் பேசும் மொழி கூடத்தான் தெரியாது, அதுக்கெல்லாம் எப்பவாச்சும் வருத்தப் பட்டிருக்கீங்களா? இங்கிலீஸ் மட்டும் தெரியலைன்னு வருத்தப் படலாமா? ஹா......ஹா...ஹ..... நான் என் பிளாக்கில் அடிப்படை ஆங்கிலம் குறித்து எழுதலாம்னு நினைப்பதுண்டு, ஆனா கம்பியூட்டர் Blog-ல்லாம் தெரிஞ்சவங்களுக்கு ஆங்கிலம் தெரியாமலா இருக்கும்னு விட்டு விடுவேன்!! உங்களுக்காகவாவது எழுதறேன் இருங்க!!

\\உங்கள் பதிவுக்கான ஒரு பின்னூட்டமேனும் பதிவு சார்ந்து சொல்லப்பட்டால், விவாதிக்கப்பட்டால், பாரட்டப்பட்டால் அதுதான் எழுத்திற்கான அங்கீகாரம். \\ உண்மை. ஆனாலும் நிறைய பேர் படிக்க வேண்டும் என்ற ஆதங்கம் வரத்தான் செய்கிறது.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)