Wednesday, December 12, 2012

ரஜினிகாந்த் - 2000 களில்



ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

1999 படையப்பா வெற்றியின் பின்னர் ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகரித்திருந்தது; பத்திரிகைகள் ரஜினியின் அடுத்த திரைப்படம் பற்றி ஒவ்வொரு விதமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. மூன்றாண்டுகளாக தனது அடுத்த திரைப்படம் பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடாத ரஜினிகாந்த் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாற்போல தனது அடுத்த திரைப்படத்தை அறிவித்தார். 'பாபா' - இதுதான் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க இருப்பதாக அறிவித்த திரைப்படம்; தனது ஆன்மீக தேடலான பாபாஜியினை தமிழ் மக்களுக்கும் அறியப்படுத்துவதே ரஜினியின் முக்கிய நோக்கமாக இருந்தது. 'பாபா' திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரிக்க ஆரம்பித்திருதது.

பத்திரிகைகளின் சினிமா செய்திகளில் 'பாபா' பற்றிய ஒரு வதந்தியாவது அன்று குறைந்தபட்சம் இடம் பெற்றிருந்தது; சினிமா சம்பந்தமாக பேசுபவர்களால் 'பாபா'வை தவிர்க்க முடியவில்லை. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் 2002 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பதினோராம் திகதி 'பாபா' வெளிவந்தது. மிகப்பிரமாண்டமான ஓப்பினிங் பாபாவிற்கு கிடைத்தது, ரசிகர்களுக்கு 'பாபா' பிடித்திருந்தாலும் பொதுமக்களின் எதிர்பார்ப்பை 'பாபா' பூர்த்திசெய்யவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு படம் போகவில்லை; தயாரிப்பு செலவினைவிட அதிகமாகவே வசூலித்திருந்தாலும் அதிகவிலைக்கு விற்கப்பட்ட காரணத்தால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்ப்பட்டது; ரஜினிகாந்தின் சொந்த தயாரிப்பாகையால் நஷ்டமடைந்த விநியோகிஸ்தர்களுக்கு பணத்தை திரும்ப கொடுத்தார். இது ரஜினி மீது விநியோகிஸ்தர்களுக்கு மேலும் நம்பிக்கையையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கியது.

என்னதான் பாபா தோல்விப்படமாக அமைந்தாலும் அந்த ஆண்டின் அதிகம் வசூலித்த திரைப்படம் பாபாதான்; மிகப்பெரும் வெற்றியாக கணிக்கப்பட்ட திரைப்படங்களின் வசூல்கள் பாபாவின் வசூலை நெருங்க கூட முடியவில்லை. ஆளும் தி.மு.கவின் மௌன ஆதரவுடன் கூட்டணி கட்சியான பா.ம.கவினர் பாபா திரைப்படத்திற்கு எதிராக திரையரங்குகளை முற்றுகையிட்டு நடத்திய விஷம எதிர்ப்பு போராட்டமும் பாபாவின் வசூலை பாதித்திருந்தது. அவர்களது எதிர்ப்பு இல்லாவிட்டால் படம் வெற்றியடைந்திருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் இன்னமும் அதிகமான வசூலை கொடுத்திருக்கும். பாபாவின் தோல்வி ரஜினியை விமர்சிப்பவர்களுக்கும், ரஜினியின் வீழ்ச்சியை எதிர்பார்த்து வருடக்கணக்கில் காத்திருந்தவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்தது என்றால் மிகையில்லை. இன்றுவரை ரஜினியை பிடிக்காதவர்களுக்கு 'பாபா' அவ்வப்போது உதவிக்கொண்டுதான் இருக்கின்றது!!!



பாபாவின் தோல்வி, ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான மௌனம் என்பன பாபாதான் ரஜினியின் இறுதித் திரைப்படமோ என்கின்ற மாயையை உருவாக்கியது. நேரடியாகவும், மறைமுகமாகவும் ரஜினி அவளவுதான்! ரஜினியின் காலம் முடிந்துவிட்டது! என பேச்சுக்கள் அடிபடத் தொடங்கின. அடுத்த தலைமுறை நடிகர்கள் நான்தான், நான்தான் சூப்பர் ஸ்டார் என தமக்குத்தானே அடைமொழி போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர்; பாபா வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்தும் ரஜினியிடமிருந்து எந்த அறிவிப்பு வெளியாகாதது அவர் ரசிகர்களுக்கும் ரஜினியின் அடுத்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை குறைக்க ஆரம்பித்திருந்தது. ரஜினி அவளவுதானா? அவர் சினிமா கேரியர் முடிந்து விட்டதா? என பலரும் மனக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் வெளியாகியது 'சந்திரமுகி' அறிவிப்பு.

திடீரென அறிவிக்கப்பட்ட பட அறிவிப்பு, பெண்ணின் பெயரில் படத்தின் தலைப்பு, புதிய மாற்றங்களுடன் தமிழ் சினிமா என பல காரணிகள் ரஜினி ரசிகர்கள் தவிர்த்து மற்றயவர்களுக்கு சந்திரமுகிமீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் பத்திரிகை செய்திகளில் சந்திரமுகி பற்றிய செய்திகளுக்கு குறைவில்லை. ரஜினி திரைப்படங்களுடன் மற்றைய நடிகர்கள் தங்கள் திரைப்படங்களை வெளியிடத் தயங்கிய நிலைமாறி சந்திரமுகியுடன் போட்டிக்கு விஜயின் சச்சின், அஜித்தின் வரலாறு, விக்ரமின் அந்நியன், கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் என நான்கு திரைப்படங்கள் தயாராக இருந்தன; காரணம் ரஜினியின் வீச்சு குறைந்திருக்கும் என்கின்ற நம்பிக்கை!!!

படப்பிடிப்பு பாதியும் முடிவடையாத நிலையில் அஜித்தின் வரலாறு; விக்ரம், ஷங்கர் போன்றோருக்கு ரஜினி மீதிருந்த மரியாதை காரணமாக அந்நியனும் தள்ளிப் போக 2005 ஆம் ஆண்டு சித்திரை வருடப்பிறப்பிற்கு விஜயின் 'சச்சின்', கமலஹாசனின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படங்களுடன் கூடவே வெளிவந்ததுதான் சந்திரமுகி. 1992 ஆம் ஆண்டு 'குணா' திரைப்படத்தை 'தளபதி' திரைப்படத்துடன் வெளியிட்ட  பின்னர் எந்த கமல் படமும் ரஜினி திரைப்படத்துடன் சேர்ந்து வெளிவந்ததில்லை; ரஜினியை ஜெயிக்க கமலுக்கு கிடைத்த சந்தர்ப்பமாக மும்பை எக்ஸ்பிரஸும்; ரஜினி படத்துடன் ஜெயித்தால் நம்பர் வண்ணாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தில் விஜயின் சச்சினும் சந்திரமுகிக்கு போட்டியாக வெளிவந்தன.



ஓப்பினிங் முதற்கொண்டு திரைப்படத்தின் வசூல்வரை எவற்றிலும் கூடவந்த இரு திரைப்படங்களாலும் சந்திரமுகியை நெருங்ககூட முடியவில்லை. ரஜினி ரசிகர்களையும் தாண்டி மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட சந்திரமுகி வரலாறு காணாத வெற்றி பெற்றது; சந்திரமுகியின் வெற்றி ரஜினி இன்னமும் மக்கள் மனங்களில் வாழ்கிறார் என்பதை உணர்த்தியது. உச்ச நட்ச்சத்திர நாற்காலி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரஜினியினுடயதுதான் என சந்திரமுகி வெற்றி உணர்த்தியது; மூன்றாண்டுகால வனவாசத்தின் பின்னர் மீண்டும் தனக்காக காத்திருந்த நாற்காலியில் உட்கார்ந்தார் சூப்பர் ஸ்டார். முன்னதாக சந்திரமுகி ஆடியோ ரிலீசில் பேசிய ரஜினிகாந்த் "விழுந்தா எழுந்திரிச்சிக்காம இருக்கிறதுக்கு நான் ஒன்றும் யானை இல்லை; குதிரை" என்று கூறியிருந்தார்; அவர் சொன்னதுபோலவே தான் குதிரைதான் என்பதையும் நிரூபித்தார்.

சந்திரமுகி வெளியானகாலத்தில் அப்போது ஐந்து வயதுகூட நிரம்பாத குழந்தைகளும் தங்களுக்கு பிடித்த ஹீரோவாக ரஜினிகாந்த் பெயரை உச்சரித்தது ஆச்சரியமான உண்மை; பாபா திரைப்படம் வெளிவரும்போது பிறந்திராத, அல்லது ஓரிரு வயது கூட நிரம்பியிராத குழந்தைகள் சந்திரமுகி என்னும் ஒற்றை திரைப்படத்தில் ரஜினியை தமக்கு பிடித்த ஹீரோவாக உணர்கிறார்கள் என்றால் அதிலுள்ள மாஜிக் என்னவென்பது புரியாத புதிரே!! ரஜினி என்னும் மூன்றெழுத்து மந்திரம் வாங்கிவந்த வரமா? இல்லை ரஜினியின் வசீகரமா? இல்லை இனந்தெரியாத சக்தியா? 1978 இல் ஆரம்பித்த ஈர்ப்பு 2005 இலும் ரஜினிகாந்திடம் குறையவில்லை!!!! ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே அமைந்த வரமிது.

சந்திரமுகி வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்திலிருந்த வேளையில் 'சிவாஜி' திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியது. முதல்வன் திரைப்படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் ஷங்கர் கூட்டணி சிவாஜியில் இணைந்தது. 2007 ஆனி மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிவாஜி மிகப்பெரும் சாதனைகளை புரிந்தது. அதிகளவு திரையில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டு மிகக் குறைந்த நாட்களில் பணத்தை எடுக்கும் புதிய யுக்தியை சிவாஜி தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. 6.2 கோடிகளுக்கு அபிராமி ராமனாதனால் வாங்கப்பட்ட சிவாஜி சென்னையில் மட்டும் 20 க்கு மேற்ப்பட்ட திரையரங்கில் வெளியிடப்பட்டு 12 கோடிகள்வரை வசூலித்து.



வெளிநாடுகளுக்கும் தமிழ் சினிமா வியாபாரத்தை விஸ்தரித்த பெருமையும் சிவாஜியையே சாரும். இங்கிலாந்து பாக்ஸ் ஆபீசில் முதல் பத்து இடங்களுக்குள் வந்த ஒரே தமிழ் திரைப்படம் என்கின்ற பெருமையை பெற்ற சிவாஜி; அமேரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், டுபாய், தென்னாபிரிக்கா என தமிழ் சினிமாவை உலகநாடுகளுக்கு விஸ்தரித்து தமிழ் சினிமாவின் வியாபாரத்தை மிகப்பெருமளவில் அதிகரிக்கும் உக்தியை அறிமுகப்படுத்தியது. வட இந்தியாவும், வட இந்திய ஊடகங்களும் வியக்குமளவிற்கு ரஜினியின் புகழை உயர்த்தியதும் சிவாஜி என்றால் மிகையில்லை. சிவாஜி வெளியான அதே தினம் வெளியான அமிதாபச்சன், அபிசேக்பச்சன் நடித்த ஜூம் பராபர ஜூம் திரைப்படத்தைவிட மும்மையில் அதிகளவிலான ஓப்பினிங்கை பெற்ற சிவாஜியை பார்த்து வட இந்திய ஊடகங்கள் ஆச்சரியப்பட்டன!

சிவாஜியின் வீச்சு இந்தியாவின் பிரபல ஆங்கில ஊடகங்கள் ரஜினியை தலையில் தூக்கிவைத்து கொண்டாட ஆரம்பித்தன; ரஜினியின் எளிமை, ஊடகங்களை மதிக்கும் பண்பு என்பன ரஜினிமீது அவர்களுக்கு மென்மேலும் ஈர்ப்பை ஏற்ப்படுத்தின. இந்தியாவின் சூப்பர்ஸ்டார் யாரென CNN நடாத்திய கருத்து கணிப்பில் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனைவிட அதிகளவு வாக்குகள் பெற்றது ரஜினிகாந்தை 'இந்தியன் சூப்பர் ஸ்டார்' என வடஇந்திய ஊடகங்கள் அழைக்க காரணமாக அமைந்தது. தொடர்ந்து NDTV நடாத்திய INDIAN OF THE YEAR வாக்கெடுப்பில் ஷாருக்கானை பின்தள்ளி அதிகவாக்கு பெற்று ரஜினி வெற்றி பெற்றமை மேலும் வட இந்தியாவை ரஜினிபால் ஈர்க்க காரணமாக அமைந்தது. குறிப்பிட்ட நிகழ்வில் வட இந்தியாவின் முன்னணி இயக்குனர் கரன் ஜோகோர் ரஜினிகாந்திடம் காம்பிளிமென்ட்டாக கேட்ட "ரஜினிகாந்தால் செய்ய முடியாத காரியம் ஏதாவது இருக்கின்றதா?" என்னும் கேள்வியே ரஜினியை வடஇந்தியா எந்தளவிற்கு உயரத்தில் வைத்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு.

சிவாஜிக்கு அடுத்து ரஜினி நடித்த திரைப்படம் குசேலன்; ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பி.வாசு இயக்கிய குசேலனில் ரஜினி நடிகராகவே நடித்திருப்பார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய குசேலனை ரஜினியை முன்னிறுத்தி விளம்பரம் செய்த கவிதாலயாவும், பிரமிட் சமீராவும் அதிக விலைக்கு குசேலனை விற்றனர். மக்கள் ரஜினியிடம் எதிர்பார்க்கும் விடயங்கள், மிகக் குறைந்த நேரமே ரஜினி திரையில் தோன்றுவது, மற்றும் மோசமான திரைக்கதை காரணமாக குசேலன் சரியாக போகவில்லை. ரஜினியின் பெயருக்காக மிகப்பெரும் ஓப்பினிங்கை கொடுத்த குசேலன் அடுத்தடுத்த வாரங்களில் வசூலில் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது; இதற்கு ரஜினியின் ஒகேனக்கல் உண்ணாவிரத பேச்சின் பின்னணியிலான சம்பவங்களும்; அதை ஊதிப் பெரிதாக்கி காரியம் சாதித்த ஊடகங்களின் பங்கும் முக்கியமானவை.



இந்தத்தடவையும் நஷ்டமடைந்த விநியோகிச்தர்களை ரஜினி கைவிடவில்லை; தன்னால் நஷ்டமடைந்தவன் யாரும் இருக்ககூடாது என்பதில் ரஜினி எப்போதும் அவதானமாக இருப்பவர்.  நஷ்டத்தொகையை தனது கைக்காசில் திரும்பக் கொடுத்தார். திரைப்படம் வெளிவரும் முன்னரே "குசேலனில் பசுபதி 50 % வடிவேலு 25 % நான் 25 %" என ரஜினி பல தடவை விளங்க கூறியும் பணத்திற்காக ரஜினியை முன்னிறுத்தி தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் செய்த விளம்பரத்திற்கு இறுதியில் பொறுப்பேற்றவர் ரஜினி!! ஒருவழியாக குசேலனும் பாபா வரிசையில் ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு கிடைத்த மற்றுமொரு கருவியாக அமைந்தது; ஆனாலும் குசேலனில் இறுதிக் காட்சியில் தன்னை பிடிக்காதவர்களையும் தன் நடிப்பால் கண்கலங்க வைத்திருப்பார் சூப்பர்ஸ்டார்.

குசேலனின் சறுக்கல் பாபா அளவிற்கு ரஜினிமீது எதிர்மறையை தோற்றுவிக்கவில்லை; குசேலனின் தோல்வி ஒரு முழுமையான ரஜினி படத்திற்கு ஏற்ப்பட்டதில்லை என்பது குசேலனை வைத்து ரஜினியை விமர்சிப்பவர்களின் மனச்சாட்சிக்கும் தெரிந்திருந்தது. அத்துடன் சமகாலத்தில் ரஜினி சங்கருடன் எந்திரன் திரைப்படத்திற்கு தயாராகியிருந்தமையும் குசேலனால் எதிர்மறை தாக்கத்தை பெரிதாக உண்டாக்கவில்லை. அ டுத்து ரஜினியின் எந்திரன் திரைப்படத்தை சுஜாதா அவர்களின் வசனத்தில் ஷங்கர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது; ஆனால் துரதிஸ்டவசமாக சுஜாதா அவர்கள் இயற்கை எய்தியிருந்தார். இது எந்திரன் மீது நிச்சயம் தாக்கத்தை உண்டாக்கும் என்று எதிர்வு கூறப்பட்டது.

சுஜாதாவின் மரணம், தயாரிப்பாளர்கள் மாற்றமென இழுத்தடித்த எந்திரன் படப்பிடிப்பு நிறைவடைந்து ஒருவழியாக 2010 புரட்டாதி 30 ஆம் திகதி எந்திரன் வெளியாகியது; இந்தியாவிலேயே எந்திரன் அளவிற்கு வேறெந்த திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்ததில்லை. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிய எந்திரன் இந்தியா சினிமாவின் அனைத்து சாதனைகளையும் தன்னகப்படுத்திக் கொண்டது. சென்னை பாக்ஸ் ஆபீசில் 17 கோடிவரை வசூலித்த எந்திரன் இந்தியாவில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கின்ற பெருமையை பெற்றது. இங்கிலாந்து, அமேரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், டுபாய், இலங்கை என ரிலீசான அத்தனை நாடுகளிலும் மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்தது.



ஆந்திராவில் முதல் வாரத்தின் சாதனையை முறியடித்த எந்திரன் மிகப்பெரும் வசூலை வசூலித்தது; குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் வெளியிட அனுமதிக்கப்பட்ட கர்நாடகாவில் திரையரங்கு போதாமையால் மேலும் பல திரையரங்குகளை எந்திரனுக்கு அவர்களாகவே வழங்கினார்கள். அந்த ஆண்டு எந்திரனால் கர்நாடாக அரசுக்கு கிடைத்த வரி ஒரு ஆண்டு முழுவதும் சேர்த்தாலும் கிடைக்காத அளவிற்கு அதிகம். கேரளாவில் மோகன்லால், மம்முட்டி பட வசூல்களை ஒரு வாரத்திலேயே கடந்து எட்ட முடியாத இலக்கை உச்ச வசூலாக நிர்ணயித்தது. வட இந்திய ஊடகங்களும், வட இந்திய நடிகர்களும் ரஜினியை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடினர்.

எந்திரன் வெற்றி விளம்பரத்தால் கிடைத்த வெற்றி என்றும், சன் நெற்வேக் இல்லையென்றால் இந்த வெற்றி கிடைத்திருக்காது என்பதும் சிலரது வாதம்; நிச்சயம் எந்திரனில் சன் நெற்வேக்கின் விளம்பரத்தின் பங்கும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் இதைவிட அதிகளவு விளம்பரம் செய்து 150 கோடி பட்ஜெட்டில் ஒரு தமிழ் திரைப்படத்தை ரஜினி இல்லாமல் எந்திரன் அளவிற்கு வேறொரு நடிகனை வைத்து வசூலிக்க முடியமா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். 40 % க்கும் அதிகமாக பேசப்படும் ஹிந்தியில் உருவாகிய ஒரு திரைப்படம் ஏற்படுத்திய சாதனையை வெறும் 5 % பேசப்படும் தமிழ் மொழியிலான திரைப்படத்தால் முறியடிப்பதென்பது ரஜினிகாந்தால் மட்டுமே நிகழ்த்தக் கூடிய அதிசயம்.; அதனால்தான் ரஜினிகாந்த் வட இந்தியர்களும் ஒத்துக்கொள்ளும் இந்தியன் சூப்பர்ஸ்டாராக இந்திய திரையுலகின் முதல்வனாக இன்னமும் வெற்றியுடன் வலம் வருகின்றார்.

எந்திரன் வெற்றியின் பின்னர் ரஜினியின் அடுத்த திரைப்பட அறிவிப்பு குறுகிய காலத்திலேயே 'ரானா' என வெளிவந்தது; கே.எஸ்.ரவிக்குமார் இயக்க ரஜினி நடிக்கும் சரித்திரப் படம்தான் 'ரானா' என நாம் அறியுமுன்னர்; நாம் கனவிலும் நினையாத கொடிய நோய் ரஜினிகாந்தை ஆட்கொண்டது. கோடான கோடி ரசிகர்களின் பிரார்த்தனை, குடும்பத்தினரின் அரவணைப்பு, வைத்தியர்களின் கவனிப்பான மருத்துவம், ரஜினியின் தன்னம்பிக்கை என பல காரணிகளால் நோயை வென்று மீண்டும் பழைய ரஜினியாக மாறிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினியின் நோய்க்காலத்தில் அவர் ரசிகர்கள் பட்ட வேதனையும், அவர்கள் செய்த நேர்த்திகளும், அவர் நோயின் பிடியிலிருந்து மீண்டு வரும்போது இரவு 11 மணிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் சொல்லும் ரஜினியை எந்தளவிற்கு ரசிகர்கள்   நேசிக்கின்றார்கள்  என்று!!



ரானா பிற்போடப்பட்ட நிலையில் சௌந்தர்யா இயக்கத்தில் அனிமேஷன் 'கோச்சடையன்' திரைப்படத்தில் நடித்துவரும் ரஜினி அடுத்து முழுநீள அக்ஷன் படமொன்றில் நடிக்கலாமேன்று எதிர்வு கூறப்படுகின்றது சொல்கின்றார்கள், ரானா நிறுத்தப்படும் என சிலர் எதிர்வு கூறுகிறார்கள், ஷங்கருடன் ரஜினி மீண்டும் இணைகிறார் என்கின்றார்கள்; சிலர் ராஜமௌலி என்கின்றனர், சிலர் கே.வி.ஆனந்த் என்கின்றனர்; இறுதியாக மணிரத்தினம் என்கின்றனர்!! எது வேண்டுமானாலும் நடக்கட்டும், ஆனால் ரஜினியின் உடல்நிலை ரொம்ப முக்கியம். முழுமையான உடற்தகுதி வந்தவுடன் நடித்தால் போதும் அது எதுவோ  முதல்ஷோ பார்க்கும் கோடிக் கணக்கானவர்களில் ஒருவனாக நானும் அங்கிருப்பேன்.  எங்களுக்கு திரும்ப திரும்ப பார்ப்பதற்கு 150 திரைப்படங்களை ரஜினி கொடுத்துள்ளார்; இப்போது 100 ஆண்டுகள் அவர் தன் குடும்பத்தோடு சந்தோசமாக இருப்பதுதான் எங்களுக்கு வேண்டியது.

1975 இல் ஆரம்பித்த 37 வருட பயணம் 1978 இல் கைப்பற்றிய 34 வருட உச்ச நட்சத்திர அந்தஸ்து இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பது ஆச்சரியமான மாபெரும் சாதனை. சிவாஜி, எந்திரன் வசூலின் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ரஜினிக்கு அருகில் எந்த துருவ நட்சத்திரங்களும் இல்லை என்கின்ற உண்மை புரியும். எந்த நடிகனுமே எப்போதும் தக்க வைத்திருந்திருக்காத 34 வருட உச்ச அந்தஸ்தை 2010 களில் எப்படி ரஜினி தக்க வைத்துக் கொண்டார் என்பதை அடுத்த பத்தாண்டுகளின் பின்னால் அலசுவோம்; இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எமது உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்தை பரிமாறிக் கொள்வோம்......

தலை கனத்திடாத எம் தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்........


ரஜினிகாந்த் - 1990 களில்


ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

சிவாஜிராவில் இருந்து ரஜினிகாந்தாக மாறி 1975 இல் தொடங்கிய ஓட்டம் 1990 வரை நிற்கவே இல்லை; வருடத்திற்கு குறைந்தது 10 படங்கள் (நான்கு மொழிகளில்), சினிமா விழாக்கள் என ஓடிக்கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு அப்போது தேவைப்பட்டது ஓய்வு! ஓய்வு! ஓய்வு! 30 வருடங்களுக்குள் செய்யவேண்டிய வேலையை வெறும் 15 ஆண்டுகளுக்குள் செய்து முடித்த களைப்பு; வேண்டியளவு பணம், புகழ், செல்வாக்கு, பெருமை, உச்ச நட்சத்திர அந்தஸ்து என எல்லாமே கிடைத்தாகிவிட்டது, அப்போது அவருக்கு தேவைப்பட்டது அமைதி, ஓய்வு, குடும்பத்துடன் கழிப்பதற்கு நேரம். இந்த நிலையில் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட மிகச்சிறந்த முடிவுதான் படக்குறைப்பு.

மாக்கெட்டில் இருக்கும் எந்த நடிகனுமே வருடத்தில் குறைந்தது ஐந்து, ஆறு திரைப்படங்களை நடிப்பது அன்றைய காலகட்டத்தின் வழமை. வருடத்திற்கு பத்து பன்னிரண்டு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த் திடீரென தனது படங்களை வெகுவாக குறைக்க ஆரம்பித்தார். 90 களின் நடுப்பகுதி தொடக்கம் வருடத்திற்கு ஒரு படம் என திரைப்படங்களின் எண்ணிக்கையை மிகையாக குறைத்துவிட்டார். 1996, 1998 ஆம் ஆண்டுகளில் எந்த திரைப்படங்களும் வெளிவரவில்லை; திரைப்படங்களை குறைக்க குறைக்க ரஜினியின் மாக்கெட் அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது. வருடத்தில் 10 தடவை பார்த்து ரசித்த ரஜினிகாந்தை வருடத்தில் ஒரு தடவைதான் திரையில் காணலாம் எனும் நிலை வந்தவுடன் ஒவ்வொரு திரைப்படத்திற்க்குமான எதிர்பார்ப்பு உயர ஆரம்பித்தது.

ஒவ்வொரு திரைப்படத்தையும் ரசிகர்கள் தலைமேல் வைத்துக் கொண்டாட ஆரம்பித்தார்கள்; 1980 களில் தமிழ் சினிமாவின் சாதனைகளை முறியடிக்க தொடங்கிய ரஜினி படங்கள்தான் தமிழ் சினிமாவின் வசூலின் அளவுகோலாக எப்போதும் இருந்து வந்துள்ளன; 1990 களில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவின் அதிகபட்ச வசூலை ஒவ்வொரு ரஜினி திரைப்படங்களும் முன்னைய ரஜினி திரைப்படங்களின் வசூலை முறியடித்து சாதனைமேல் சாதனை படைக்க ஆரம்பித்தது. அதேசமயம் 90 களில் அடுத்த தலைமுறை நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என தமிழ் சினிமாவில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. தலைமுறை மாற்றம் ஆரம்பமான 1990 களில் நடுப்பகுதிகளில் ரஜினியின் சமகால நடிகர்கள் பலர் மாக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தனர். ஆனால் ரஜினியின் மாக்கெட் தமிழ் நாடு, தென்னிந்தியா இந்தியா தாண்டி ஜப்பான்வரை அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.



1990 களின் முற்பகுதியில் கணிசமான அளவு திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்; அவற்றில் அதிகமானவை வெற்றித் திரைப்படங்கள். பணக்காரன், தர்மதுரை, மன்னன், தளபதி, அண்ணாமலை, எஜமான், உழைப்பாளி, வீரா என வசூலில் சக்கை போடுபோட்ட ரஜினி திரைப்படங்களுக்கு மகுடம் வைத்தாற்போல 1995 பொங்கல் திருநாளுக்கு (தை 12) வெளிவந்ததுதான் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹிட் திரைப்படமான 'பாட்ஷா'. பாட்ஷாவுக்கு முன்னர் வெளிவந்த மணிரத்தினம் இயக்கிய 'தளபதி' ரஜினியின் திரை வாழ்க்கையில் மற்றுமொரு முக்கிய மைல்க்கல். ரஜினிகாந்த், மணிரத்தினம், இளையராஜா என தமிழ் சினிமாவின் முதல்வர்கள் இணைந்து கொடுத்த தளபதி ரஜினிக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் முக்கிய மைல்க்கல்தான்.

மகாபாரதத்தின் 'கர்ணன்' கதையை அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றால்போல மாற்றி தனது பாணியில் மணிரத்தினம் வழங்கிய தளபதியில் ரஜினியின் பெர்போமன்ஸ் மிகச்சிறப்பாக இருக்கும்; பலநாட்களுக்கு பின்னர் ரஜினிகாந்த் என்னும் நடிகனை புதிய பரிமாணத்தில் பார்த்த மகிழ்ச்சி ரசிகர்களுக்கு; ரஜினி ரசிகர்களையும் தாண்டி அனைவரையும் ஈர்த்த ரஜினி திரைப்படங்களுக்குள் 'தளபதி'யும் ஒன்று. இந்தக் காலப்பகுதியில் ரஜினிக்கு அதிக திரைப்படங்களை இயக்கியவர்கள் இருவர்; ஒருவர் சுரேஷ் கிருஷ்ணா, மற்றையவர் பி.வாசு;

பி.வாசு இயக்கிய பணக்காரன், உழைப்பாளி, மன்னன் என மூன்று திரைப்படங்களும் ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி என பொழுதுபோக்குக்கான அம்சங்களுடன் வெளிவந்து மக்களின் அமோக வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்கள். மன்னன் திரைப்படத்தில் 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' பாடலில் ரஜினி தன நடிப்பால் மக்களின் கண்களை பனிக்க வைத்திருப்பார் (இளையராஜா & ஜேசுதாஸ் அவர்களும்தான்) இதே மன்னன் திரைப்படத்தில்த்தான் ரஜினி பாடிய ஒரே பாடலான 'அடிக்குது குளிரு' பாடலும் இடம்பெற்றது.

சுரேஷ் கிருஷ்ணா - தற்செயலாக ரஜினியின் திரை வாழ்க்கையில் நுழைந்தவர்; அண்ணாமலை திரைப்படத்தினை கவிதாலயாவிற்க்காக இயக்குனர் பாலச்சந்தரின் உதவியாளர் 'வசந்த்' இயக்குவதாக இருந்தது. இறுதிநேரத்தில் வசந்த் விலக அந்த வாய்ப்பு பாலச்சந்தரின் மற்றுமொரு உதவியாளரான சுரேஷ் கிருஷ்ண வசம் போனது. அண்ணாமலை திரைப்படம் வணிகரீதியாக எவ்வளவு வெற்றி பெற்றதோ; அதேயளவிற்கு ரஜினியின் நடிப்பும் பாராட்டுப் பெற்றது. ஸ்டையில், காமடி, வசன உச்சரிப்பு என சூப்பர்ஸ்டார் பிச்சு உதறி இருப்பார். முதல் முறையாக தேவாவின் அதிரடி பின்னணி இசையுடன் சூப்பர்ஸ்டார் வாசகம் டைட்டிலில் போடப்பட்டு அமோக வரவேற்ப்பு பெற்றதும் அண்ணாமலை திரைப்படத்தில்த்தான்.



அண்ணாமலை அசுர வெற்றியை தொடர்ந்து சுரேஷ்கிருஷ்ணா ரஜினியை வைத்து இயக்கிய இரண்டாவது திரைப்படம் 'வீரா'; மீனா, ரோஜா என அன்றைய இரு கனவுக் கன்னிகளையும் ரஜினிக்கு ஜோடியாக்கி இளையராஜாவின் இசையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய வீரா ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக வெற்றி பெற்றது. 1994 புது வருடப்பிறப்பில் வெளிவந்த வீராவிற்கு பின்னர் 1995 பொங்கலுக்குத்தான் அடுத்த ரஜினி படம் வெளிவந்தது ; ஒரு ரஜினி படத்திற்கும் அடுத்த ரஜினி படத்திற்கும் இடையில் இத்தனை பெரிய இடைவெளி அதுவரை ஏற்பட்டதில்லை. இந்த இடைவெளி அடுத்த ரஜினி திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தே மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது; அப்படி மிகுந்த எதிர்பார்ப்புக்கள் உள்ள நேரத்தில் வெளியாகிய திரைப்படம்தான் 'பாட்ஷா'

தமிழ் சினிமாவின் 'ட்ரெண்ட செட்டர்' திரைப்படமாக, வணிக சினிமாவின் சிகரமாக, 'மாஸ்' ஹீரோவின் உச்சமாக இன்றும், என்றும் சொல்லப்படும் பாட்ஷாவின் வீச்சு ரஜினியை பலமடங்கு மேல உயர்த்தியது; தமிழ் சினிமா அதுவரை அப்படி ஒரு திரைப்படத்தை மக்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடி பார்த்ததில்லை. பாட்ஷாவிற்கு பின்னர் பாட்ஷாவின் சாயலில் நிறைய தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன; அதில் பல முன்னணி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் பாட்ஷா சாயலில் இன்னுமொரு திரைப்படத்தின் காட்சிகளில்கூட நடித்ததில்லை; அதுதான் ரஜினியின் இமாலய வெற்றியின் ரகசியம். பட்டி தொட்டியெங்கும் ரஜினியின் நாமம் வேதமாக ஆரம்பித்தது பாட்ஷாவின் பின்னர்தான் என்றால் அது மிகையில்லை.

அடுத்து அதே ஆண்டு வெளிவந்த 'முத்து' திரைப்படம் தமிழகம், இந்தியா கடந்து ஜப்பானிலும் அதீத வரவேற்ப்பை பெற்றது. தமிழ் சினிமாவை தமிழன்/இந்தியன் அல்லாத நாடு ஒன்றிற்கு கொண்டு சென்று பெருமை சேர்த்தார் ரஜினிகாந்த். ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகரிக்க காரணமான முத்து திரைப்படம்தான் ரஜினியுடன் ரவிக்குமார் இணைந்த முதல் திரைப்படம். அடுத்து ரஜினி நடித்த அருணாச்சலம் திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக அமையாவிட்டாலும்; ரசிகர்களாலும், மக்களின் எதிர்பார்ப்பாலும் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் படையப்பா; பாட்ஷா, முத்து திரைப்படங்களில் வசூலை எல்லாம் தாண்டி மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்த படையப்பாவின் வசூலை அடுத்த 6 ஆண்டுகளுக்கு வெளிவந்த எந்த திரைப்படத்தாலும் (சந்திரமுகி வரும்வரை) நெருங்க முடியவில்லை.



திரைப்படம் தாண்டி ரஜினி சம்பந்தமான முக்கியமான மூன்று விடயங்களையும் 1990 களில் தவிர்க்க முடியாது. அவை ரசிகர்கள், அரசியல், ஆன்மிகம். ஆன்மீகத்தை எடுத்துக் கொண்டால் ரஜினியின் மாறுதலுக்கு அது மிக முக்கிய பங்காற்றியது என்றால் அது மிகையில்லை. கோபக்கார, நின்மதியற்ற , மன அழுத்தத்தில் இருந்த ரஜினிகாந்தின் மாற்றத்திற்கு ஆன்மிகம் மிகப்பெரும் உதவியாக இருந்தது. அவரது உடை, தோற்றம், பேச்சு என எல்லாவற்றிலும் ஆன்மிகம் ஆட்சி செய்யத் தொடங்கியது. அவரது பேச்சுக்கள் மெல்ல மெல்ல ஸ்திரமாகவும், தெளிவாகவும் அதேநேரம் முதிர்ச்சி உள்ளதாகவும் மாறத் தொடங்கியது; அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்தையும் நிதானமாக சரியான முறையில் கையாளத் தொடங்கியிருந்தார்.

தனது புறத் தோற்றத்தின் இமேஜை உடைத்தெறிந்தார்; அதுவரை எந்த நடிகனுக்கும் வராத துணிவு அது. முதுமையை, வழுக்கையை, நரைத்த தலையை அவர் மறைக்க விரும்பவில்லை! ரசிகர்கள் ரஜினிகாந்தின் புறத்தை விரும்பவில்லை, அகத்தை விரும்புகிறார்கள் என கணக்கு போட்டார்; அவர் கணக்கு தப்பவில்லை! மரண வீடுகளுக்கும் மேக்கப்போடு செல்லும் நடிகர்களுக்கு மத்தியில் பொது விழாக்களுக்கும் மழிக்காத தாடியுடன், சீவாத பரட்டை தலையுடன், சாதாரண வெள்ளை ஜிப்பாவில் ரஜினி வந்தது ரஜினிமீது மக்களுக்கு மரியாதையை மேலும் மேலும் அதிகரிக்க செய்ததன்றி குறைக்கவில்லை. தனது இமேஜை உடைத்ததுதான் ரஜினியின் மிகப்பெரும் சாதனை; தன்னை மறைக்க எந்த அவசியமும் இல்லாமல் போனது ரஜினிக்கு மிகப்பெரும் சுமையை இறக்கிய மனநிலையை நிச்சயம் கொடுத்திருக்கும்.

ரசிகர்கள், ரசிகர் மன்றங்கள் என ரஜினியை ஆயிரமாயிரம் இளைஞர்கள் பின்பற்ற ஆரம்பித்திருந்தார்கள்; இந்தியாவிலேயே ஒரு நடிகனுக்கு அதிகளவு ரசிகர் மன்றம் அமையப்பெற்றது ரஜினிக்குத்தான். நற்காரியங்கள் பலவும் மன்றங்களால் செய்யப்பட்டாலும் பலர் தம் குடும்பங்களை கவனிக்காமல் மன்றங்களில் மூழ்கி கிடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வெளிவந்தன. உடனடியாக புதிதாக ரசிகர் மன்றங்கள் எவற்றையும் ஆரம்பிக்க வேண்டாம் என ரஜினி உத்தரவு போட்டார்; இன்றுவரை அது நடைமுறையில் உள்ளது. உங்களை, பெத்தவங்களை, குடும்பத்தை, முதல்ல கவனியுங்க; அப்புறம்தான் மத்ததெல்லாமே என ரசிகர்களுக்கு பலதடவைகள் எடுத்து கூறியுள்ளார். அவருக்காக உயிரை கொடுக்க ரசிகர்கள் காத்திருந்தாலும் இதுவரை தன் எந்த தேவைக்கும் ரசிகர்களை அவர் பயன் படுத்தியதில்லை; இனிமேலும் பயன்படுத்த மாட்டார்!!



அரசியல் - 1996 தேர்த்தல் ரஜினியை அரசியல்பால் ஈர்த்தது, அன்றைய ஜெயலிதாவை எதிர்த்து ரஜினி குரல் குடுத்ததுதான் ரஜினியின் அரசியல்மீதான முதல் ஈடுபாடு. தன் கைகளுக்குள் தஞ்சம் புகவந்த சிமாசனத்தையே தனக்கு நம்பகமான தன்னைவிட சிறந்தவர்கள் என தான் நினைத்தவர்களிடம் விட்டுக்கொடுத்தவர் ரஜினிகாந்த். வராதே வராதே என கெஞ்சினாலும் அடம்பிடித்து அரசியலில் நுழையும் நடிகர்கள் மத்தியில், வா வா என எத்தனை பேர் அழைத்தும் இன்னமும் மவுனம் காக்கும் ரஜினியை சிலர் அரசியலில் முடிவெடுக்க பயப்படுகிறார் என்கிறார்கள்; சிலரோ சினிமாவுக்காக மக்களை உசுப்பேத்துகிறார் என்கிறார்கள்; சிலர் என்னய்யா இவர் ஒன்றில் வாறன் என்று சொல்லணும், இல்லை வரலயின்னு சொல்லணும், எதுக்கோ இப்படி குழப்புகிறார் என்கிறார்கள்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லயா? என்பதற்கு ரசிகர்களைவிட, மக்களைவிட; அரசியல் வாதிகளும், கட்சிகளும், அவர்கள் ஊடகங்களும்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. மனச்சாட்சி உள்ளவர்களுக்கு உண்மையான காரணம் தெரியும்; பயம். ரசிகர்களை உசுப்பேற்றி படத்தை ஓட்ட வைக்கிறார் என்பதை 'அபத்தம்' என்பதை தவிர வேறேது சொல்லமுடியாது. அரசியலுக்குள் ரஜினியின் பெயர் அடிபட தொடங்கிய 1996 களின் பின்னர் ரஜினி எத்தனை படங்களில் நடித்திருப்பார்? வெறும் 7 திரைப்படங்கள்தான்; முன்னைய 145 திரைப்படங்களையும் ரஜினி அரசியல் இமேஜை போர்த்திக்கொண்டு நடித்து தன்னை உச்ச நட்ச்சத்திரமாக வெளிக்காட்டவில்லை. மக்கள் ரசிப்பது ரஜினிகாந்த் என்கின்ற நடிகனை; ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கின்ற சஸ்பென்ஸ்சிற்கும் ரஜினி படம் ஓடுவதற்கும் என்ன சம்மந்தம்? என்ன லாஜிக்?

அப்படியானால் ரஜினி ஏன் குழப்புகிறார்? இதை குழப்பமாக பார்த்தால் குழப்பமாகத்தான் தெரியும்; 1996 இல் டூடடர்ஷனுக்கு ரஜினி கொடுத்த நேர்முகத்தின் ஒலிப்பதிவை கீழே இணைக்கிறேன். அதில் ரஜினி தன் அரசியல் நிலைப்பாட்டை எத்தனை தெளிவாக சொல்லியுள்ளார் என்பதை நீங்கள் அறியலாம்; அன்று அவர் சொல்லிய நிலைப்பாட்டிலிருந்து சிறிதாவது மாறியுள்ளாரா என்பதை அதனை கேட்ட பின்னர் கூறுங்கள். அரசியல் மட்டுமல்ல பிற விடயங்களிலும் அவரது முதிர்ச்சியான பதில்கள் ஆச்சரியப்பட வைக்கும்; வேறெந்த நடிகனுக்கும் இத்தனை துணிவாக, மனதில் பட்டதை இத்தனை முதிர்ச்சியோடு கூறும் பக்குவம் இருக்குமா என்பது சந்தேகம்தான்!! அதுதான் ரஜினிகாந்த் மூன்று தலைமுறை கடந்தும் இன்னமும் உச்ச நட்ச்சத்திரமாக இருக்கும் இரகசியம் ....



1975 தொடங்கிய சிவாஜிராவின் பயணம் 1990 ஆம் ஆண்டுகளில் யாருமே நெருங்கமுடியாத உயரத்தில்; 25 ஆண்டுகள் தன்னகத்தே தக்கவைத்திருந்த சிம்மாசனத்தை 2000 களில் ரஜினிகாந்த் எப்படி தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்......

ரஜினிகாந்த் - 1980 களில்



ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

1970 களில் மத்தியில் இயக்குனர்கள் கைகளுக்குள் தமிழ் சினிமா தாவியதில் இருந்து கிளாசிக் திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு அதிகமாகவே கிடைக்க ஆரம்பித்தன. அந்த கிளாசிக் திரைப்படங்கள் 1980 களிலும் தொடர்ந்தன ஆயினும் கிளாசிக் திரைப்படங்களை விட வணிகரீதியான திரைப்படங்களே அதிகளவில் மக்களிடத்தே அதீத வரவேற்ப்பை பெற ஆரம்பித்தன. இந்த வணிக சினிமா மாற்றத்திற்கு அன்று ஏ.வி.எம் நிறுவனம் முக்கிய காரணியாக கூறப்பட்டது. ஜனரஞ்சக சினிமாப் பாணியை உடைத்து வணிக சினிமாப் பாதையை மீண்டும் தொடக்கிவைத்த திரைப்படங்கள்தான் முரட்டுக்காளை மற்றும் சகலகலா வல்லவன்.

திரைப்படங்களில் ஒன்றாக நடித்துவந்த ரஜினிகாந்த், கமலஹாசன் இருவரும் "இனிமேல் தனித் தனியாகத்தான் நடிப்பது, சேர்ந்து நடிப்பதில்லை" என்று முடிவெடுத்த நிலையில் 'ஏ.வி.எம்'மிற்க்காக ரஜினி, கமல் இருவருக்கும் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் திரைப்படங்கள்தான் ரஜினி கமலுக்கு வணிக ரீதியான வர்த்தகத்தை உயர்த்திய திரைப்படங்கள். முரட்டுக்காளை - ரஜினி என்கின்ற ஹீரோவின் உதயமும், ரஜினிகாந்த் என்கின்ற மிகச்சிறந்த குணச்சித்திர நடிகனது அஸ்தமனமும் ஆரம்பித்த திரைப்படம். அதுவரை ரஜினி ஸ்டையில் பிரபல்யம் என்றாலும் 'ஸ்டையில்' என்றால் ரஜினி என்று சொல்லவைத்த முரட்டுக்காளை 1980 களின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம்.

முரட்டுக்காளை ரஜினியை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக, ஒரு மாஸ் ஹீரோவாக, வசூல் சக்கரவர்த்தியாக வெளிக்காட்டியதற்கு 10 மாதங்களுக்கு முன்பாக வெளிவந்த திரைப்படம்தான் பில்லா; அமிதாப்பச்சனின் 'டான்' திரைப்படத்தின் தமிழாக்கம்தான் பில்லா. அதுவரையான தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்த பில்லாவில்; பில்லா கேரக்டர் 'மாஸ்' என்றால், ராஜப்பா கேரக்டர் கிளாஸ். பில்லா படப்பிடிப்பின்போது இடம்பெற்ற சுவாரசியமான சம்பவம் ஒன்று; பொது இடமொன்றில் ஷூட்டிங்கின் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரஜினியைப் பார்த்து கூட்டத்தில் நின்ற ஒரு சிலர் 'பைத்தியம்' என்று கூவினர். அந்த இடத்தில் ரஜினிக்கு ஆதரவாக கூட்டத்தில் இருந்து கூவியவர்களை சரமாரியாக திட்டித்தீர்த்தார் நடிகை மனோரமா.



அதே மோனரமா 1996 தேர்தல்களில் ரஜினியை கேவலமாகவும், இழிவாகவும் மேடைகளில் பேசிவந்தார்; அதனால் அவருக்கு தமிழ் சினிமாவின் வாய்ப்புக்களே இல்லாமல் போகும் அளவிற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ரஜினி மௌனம் மட்டுமே காத்துவந்தார்; தனது அடுத்த திரைப்படத்தில் மனோரமாவிற்கு சந்தர்ப்பம் வழங்கி மீண்டும் அவர் திரைவாழ்க்கையை தொடங்கி வைத்தார். தொடர்ந்தும் மௌனம்  காத்துவந்த ரஜினி மனோரமாவின் 50 ஆம் ஆண்டு விழாவில் பில்லா ஷூட்டிங் சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு "அன்றைக்கு என்னை அணைத்த கை, எத்தனை தடவை அடித்தாலும் தாங்குவேன்" என்று கூறினார்; கலங்கியது மனோரமா கண்கள் மட்டுமல்ல, எம் கண்களும்தான்!!! 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்னும் குறளுக்கினங்க ரஜினி மனோரமாவிற்கு சந்தர்ப்பம் கொடுத்தார் என நினைத்திருந்த எமக்கு; இல்லையில்லை அவர் 'எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொண்ட மகற்கு' என்னும் குறளுக்குத்தான் அதிக முக்கியம் கொடுக்கிறார் என்பது புரிந்தது!!!

பில்லா, முரட்டுக்காளை வெற்றிகள் ரஜினியை வணிக சினிமாவின்பால் ஈர்க்க ஆரம்பித்தது; விரும்பியோ விரும்பாமலோ ரஜினி வணிக சினிமாவின் வட்டத்துக்குள் தன்னை உட்புகுத்திக் கொண்டார். விநியோகிஸ்தர்களின் விருப்பம், தயாரிப்பாளர்களின் நோக்கம், ரசிகர்களின் ஆதரவு எல்லாம் ஒன்று சேர்ந்து ரஜினி என்னும் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகனை தமிழ் சினிமாவின் உச்ச நட்ச்சத்திரமாக மாற்றியது. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகன் ரஜினிகாந்த் மறைக்கப்பட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உருவாகிய இந்த தருணம் நன்மையா? தீமையா? என்றால் பதில் சொல்வது முடியாதது! ஒன்றை இழந்தால்த்தால் இன்னொன்றை பெறமுடியும் என்பது ரஜினிக்கும் விதிவிலக்கல்ல; அன்று முதல் ரஜினியின் திரைவாழ்க்கைப் பாதை மாற ஆரம்பித்தது.

காளி, அன்புக்கு நான் அடிமை, கழுகு, தீ, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா என வணிக சினிமா ரஜினிகாந்த்தை கையகப்படுத்தியிருந்த காலகட்டத்திலும் ஜானி, பொல்லாதவன், நெற்றிக்கண், தில்லு முல்லு போன்ற ரஜினியின் கிளாஸ் திரைப்படங்களும் அத்தி பூத்தாற்போல அவ்வப்போது வந்துகொண்டுதான் இருந்தன. ஜானி - ரஜினியின் திரைவாழ்க்கையின் மற்றுமொரு மாணிக்கம்; மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினி ஸ்ரீதேவியின் காதலை மகேந்திரன் சொன்ன அழகு அற்ப்புதம். அசோக்குமாரின் ஒளிப்பதிவில் ரஜினி, ஸ்ரீதேவி கொள்ளை அழகு. ஜானியில் அமைதியான ரஜினியை, இரட்டை வேடங்களில் இயல்பான யதார்த்தமான கேரக்டர்களாக தன் கதையின் நாயகர்களாக மகேந்திரன் அமர்த்தியிருப்பார்; இப்பொது பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்!!



தில்லு முல்லு - ரஜினிக்கும் நகைச்சுவை வரும் என்பதை கே.பாலச்சந்தர் உணர்த்திய திரைப்படம்; ரஜினியை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும் ரஜினி திரைப்படங்களில் இது முதன்மையானது. ரஜினியுடன் சேர்ந்து தேங்காய் சீனிவாசனும், சௌகார் ஜானகியும் பண்ணும் ரகளை சொல்லில் அடங்காதவை. ரஜினி, தேங்காய் சீனிவாசன் காமடி காட்சிகளின் டைமிங் இப்போதல்ல எப்போது பார்த்தாலும் மனதை லயிக்க வைப்பவை. இந்த திரைப்படத்தின் பெயரை கேட்டது ஞாபகம் வரும் ஒரு சோகமான விடயமும் உண்டு; ஆம் ரஜினி, கமல் இணைந்து நடித்த இறுதி திரைப்படம் இதுதான். பணம், அந்தஸ்து, ரசிகர்கள் என பல காரணிகள் ரஜினி கமலை திரையில் பிரித்தாலும், இன்றுவரை திரைக்கு வெளியே இவர்களது நடப்பு தொடர்வது மகிழ்ச்சியான ஆரோக்கியமான விடயம்.

நெற்றிக்கண் - பாலச்சந்தர் தயாரிக்க எஸ்.பி.எம் இயக்கிய நெற்றிக்கண் ரஜினியின் நடிப்பாற்றலை பறைசாற்றும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. நெற்றிக்கண் 'கிழட்டு' சக்கரவர்த்தியின் பெர்போமன்ஸ் ரஜினிகாந்தால் மட்டுமே கொடுக்கப்பட கூடியவை. ஆரம்பகாலங்களில் நாடகங்களில்கூட துரியோதனன் வேடம் போட்ட பழக்கமோ என்னமோ தெரியவில்லை; நெகடிவ் கேரக்டர் என்றால் ரஜினிக்கு அல்வா சாப்பிடுவது போன்று அமைந்து விடுகின்றது, நெற்றிக்கண்ணை பார்த்தவர்களுக்கு அது புரியும். 1982 களின் நடுப்பகுதிகளில் ரஜினியால் தனது பாணியில் இருந்து விலகி நடிக்கப்பட்ட அடுத்தடுத்து வெளிவந்த புதுக்கவிதை, எங்கேயோ கேட்டகுரல் போன்ற திரைப்படங்களுக்கு போதிய வரவேற்பு கிட்டாததால் ரஜினி அடுத்தடுத்து வணிக சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தொடர்ந்து மூன்று முகம், பாயும்புலி, துடிக்கும் கரங்கள், சிகப்பு சூரியன் என விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் விரும்பும் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்; இக்காலப்பகுதியில் வெளிவந்ததுதான் ரஜினியின் முதல் ஹிந்தி திரைப்படம் அந்தாகனூன்; அமிதாப்பச்சன் கௌரவ வேடத்தில் நடித்திருந்த 'அந்தாகனூன்' ரஜினிக்கு ஹிந்தியில் மிகப்பெரும் வெற்றியை தேடித் தந்ததோடல்லாமல் தொடர்ந்தும் ஹிந்தியில் மிகப்பெரும் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்தது. இந்த திரைப்படம் தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து இயக்கிய 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படத்தின் மொழிமாற்றல் திரைப்படம்.  ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 1980 களின் நடுப்பகுதியில் ரஜினிகாந்த் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். வேற்று மொழிகளில் நடித்தாலும் ரஜினிகாந்தின் வேர் தமிழ் நாட்டிலேயே ஸ்திரமாக ஊன்றியிருப்பதை ரஜினி நன்றாகவே உணர்ந்திருந்தார்.



தமிழில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த ரஜினியை தமிழ் ரசிகர்கள் 'தலைவர்' என்னும் ஸ்தானத்திற்கு உயர்த்தி மரியாதை செய்தகாலமாக 1980 களின் பிற்பகுதி அமைந்தது. தொடர்ச்சியாக வெற்றிமேல் வெற்றிகள், ரசிகர்களை கவரும் வகையில் ஜனரஞ்சகமான கமர்சியல் சினிமாக்களில் ரஜினி பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார். படிக்காதவன், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், மனிதன், குருசிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜாதிராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை என ரஜினியின் வெற்றியும்; அதனாலான வியாபாரமும் மளமளவென வளர தொடங்கியது. 1978 இல் கைப்பற்றிய தமிழ் சினிமாவின் சிமாசனம் 1980 களின் இறுதியில் இன்னும் ஸ்திரமாக ரஜினியின் கைகளிலேயே......

இந்த பத்து ஆண்டுகளுக்குள் (1980 கள்) ரஜினியின் ரசிகர்களும், செல்வாக்கும், பெயரும், புகழும் மிகப்பெருமளவில் வளர்ந்திருந்தன; ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்ப்பு மலையென அதிகரித்திருந்தது, மெல்லமெல்ல அரசியல் பற்றிய பேச்சுக்களும் அரசல்புரசலாக ஒலிக்க ஆரம்பித்திருந்தன; இந்நிலையில் ரஜினியின் மனதில் ஆன்மீகமும் நுழைந்திருந்தது. 80 களின் ஆரம்பத்திலும் நடுப்பகுதிகளிலும் ரஜினிக்கு இருந்த மன அழுத்தங்களும், தெளிவின்மையும், குழப்பங்களும், கலகங்களும், மனச் சஞ்சலங்களும் 80 களின் இறுதியில் நீங்கி ரஜினிகாந்த் ஓரளவு தெளிவாகியிருந்தார். ரஜினியே நினைத்தாலும் ஒதுங்கி செல்ல முடியாத அளவிற்கு ரசிகர்கள் அவர்மீது ஏதோவொரு  எதிர்பார்ப்பை வைத்திருப்பதையும் நன்கு புரிந்து வைத்திருந்தார்; இதனால்தான் என்னமோ ஆன்மிகம் பிடித்திருந்தாலும் சினிமாவை ரஜினிகாந்தால் தவிர்க்க முடியவில்லை......


ரஜினிகாந்த் - 1970 களில்


ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

1970 கள் - தமிழ் சினிமாவின் நிறம் மீண்டுமொருதடவை மாற ஆரம்பித்த காலப்பகுதி இது; 1950 களுக்கு முன்னால் பாடல்களால் கதை சொன்ன தமிழ் சினிமாவை அண்ணாத்துரை, கருணாநிதி போன்ற திராவிட எழுத்தாளர்கள் வசனத்தால் கதை சொல்லும் ஊடகமாக மாற்றி அமைத்தார்கள். 1950 களில் வசனகர்த்தாக்களுக்கு முன்னுரிமை அதிகம் இருந்திருந்தாலும் 1960 களில் தமிழ் சினிமா கதாநாயகர்களது கைகளுக்கு தாவியது; சிவாஜி கணேஷன், எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற மாபெரும் நடிகர்கள் தங்கள் ஆளுமையை மக்களிடம் வியாபித்திருந்தனர். நடிகர்களுக்காகவே படம் பார்க்கும் காலமாக மாறிய 1960 களை உடைத்து இயக்குனர்கள் தங்களது ஆதிக்கத்தை தமிழ் சினிமாவில் படரவிட ஆரம்பித்த காலப்பகுதிதான் 1970கள்.

ஒரு இயக்குனராக நடிகர்களின் இமேஜை உடைத்த முதல் இயக்குனர் ஸ்ரீதர் என்றாலும் அவரால் ஒரு 'காதலிக்க நேரமில்லை' மட்டும்தான் 1960 களில் வெற்றிகரமாக கொடுக்க முடிந்தது. ஆனால்1970 களில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், மகேந்திரன், பாலுமஹேந்திரா என பெரும் இயக்குனர் கூட்டமே தமிழ் சினிமாவை தம்வசப் படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் 1970 களின் நடுப்பகுதியில் தமிழ் சினிவாவிற்கு இயக்குனர் சிகரத்தால் கைப்பிடித்து அழைத்து வரப்பட்டவர்தான் இன்று இந்திய சினிமாவே உச்சத்தில் வைத்து கொண்டாடும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் எனப்படும் சிவாஜிராவ் கெய்க்வாட். சமகாலத்தில் இயக்குனர் பஞ்சு அருணாச்சலத்தால் தமிழ் சினிமாவுக்கு அழைத்துவரப்பட்ட மற்றுமொரு மாபெரும் சக்தி - இசைஞானி இளையராஜா.

"கண்ணா லட்டு திங்க ஆசையா?" "கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?" யாருக்குத்தான் ரெண்டு லட்டு திங்க ஆசை இருக்காது!!!! பழையசாதம் போட்டாகூட பராவாயில்லை என்னும் நிலையில் இருந்த சிவாஜிராவ் என்னும் இளைஞனை பார்த்து இயக்குனர் பாலச்சந்தர் "கண்ணா உனக்கு மூணு லட்டு திங்க ஆசையா?" என்று கேட்கிறார்!!! தலைகால் புரியாத சிவாஜிராவிற்கு தன் 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தின் சந்திரகாந்தின் பிள்ளைகளில் ஒருவரான ரஜினிகாந்த் என்னும் பெயரை சூட்டுகிறார்; மற்றைய பிள்ளையின் 'ஸ்ரீகாந்' என்னும் பெயர் இன்னுமொரு நடிகருக்கு ஏற்க்கனவே சூட்டியாகி விட்டதால் மீதமிருந்த பெயர்தான் 'ரஜினிகாந்த்'.



ஆரம்பங்களில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்ட ரஜினிகாந்திற்கு நடிகர் நாகேஷ் நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார். பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகரான நாகேஷின் ஆதரவும் அரவணைப்பும் ரஜினிகாந்திற்கு முதல் படத்திற்கு மிகவும் உதவியாக அமைந்திருந்தது. என்னதான் தான் சிறப்பாக நடிக்கவேண்டும் என நினைத்தாலும் சில நேரங்களில் சொதப்பிய ரஜினிகாந்த் பாலச்சந்தரால் திட்டப்பட்டு ஸ்டூடியோவிற்கு வெளியேயும் அனுப்பப்படுள்ளார்; அப்போதெல்லாம் அவருக்கு பக்கதுணை ஒரு சிகரட் மட்டும்தான். ஒரு சிகரட்டை பற்றவைத்து பிரெஷ் ஆகி மீண்டும் குறிப்பிட்ட காட்சிகளை கச்சிதமாக நடித்துக் கொடுத்திருப்பார் ரஜினிகாந்த்.

அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, அந்துலேனி காதா (தெலுங்கு) இவை மூன்றும்தான் பாலச்சந்தர் ரஜினிக்கு கொடுத்த மூன்று லட்டுக்கள். இவற்றுக்கு இடையில் 'கதா சங்கமா' என்னும் தெலுங்குப் படத்திலும் ரஜினி நடித்திருப்பார். அபூர்வராகங்களில் பெரிதாக வேடமில்லை என்றாலும் யார் இந்த முரட்டு இளைஞன் என்று பலராலும் திரும்பிப் பார்க்கப்பட்டார்; அறிமுகக்காட்சியில் ரஜினியின் விம்பத்திற்கு முன்னால் எழுதப்பட்ட வாசகம் 'சுருதி பேதம்'. பின்னொரு நாளில் முதல் காட்சியிலேயே அவ்வாறு எழுதப்பட்டது வருத்தமாக இல்லையா என கேட்டதற்கு; ரஜினி சொன்னபதில்  "பாலச்சந்தர் எடுத்த முதல்ப் படம் 'நீர்க் குமிழி' அவர் என்ன நீர்க்குமிழி போல காணாமலா போய்விடார்?" என்பதுதான். அடுத்து மூன்று முடிச்சு, அவர்கள் என பாலச்சந்தர் படங்களில் தன் குணச்சித்திர நடிப்பால் தமிழ் ரசிகர்களை கொள்ளையிட ஆரபித்த ரஜினிகாந்த் பாலச்சந்தரை விட்டு வெளியில் வந்து நடித்த முதல் திரைப்படம் கவிக்குயில்.

குனச்சித்திரவேடம், வில்லன் வேடம் என நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தை முதல் முதலாக கதாநாயகனாக்கிய திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறி'. அதுவரை நேர்மறையான பாத்திரங்களில் மட்டும் நடித்துவந்த சிவகுமாரை வில்லானாக்கி ரஜினிகாந்தை கதானாயனாக்கி எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'புவனா ஒரு கேள்விக்குறி' இன்றுவரை ரஜினியின் மிகச்சிறந்த நடிப்பாற்றல் உள்ள திரைப்படங்கள் வரிசையில் முக்கியமானது; 'ராஜா என்பார் மந்திரி' என்பார் பாடலில் ரஜினியின் பெர்போமான்ஸ் இப்போது பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கும். அதுவரை ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறிதான்'. அன்று ஆரம்பித்த ரஜினி எஸ்.பி.முத்துராமன் நட்பு ரஜினியின் 25 படங்களை எஸ்.பி.எம் இயக்கிய பின்னரும் இன்றுவரை தொடர்கின்றது.



'பரட்டை' தமிழ் சினிமா மறக்க முடியாத கேரக்டர்களில் ஒன்று; பாரதிராஜா என்னும் இமயத்தின் அறிமுகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் கிடைத்த மாபெரும் கலைப்படைப்பு '16 வயதினிலே'; தமிழ் சினிமாவின் பாணியையே மாற்றிப் போட்ட படைப்பு இது. ஸ்ரூடியோக்களில் சுற்றித்திரிந்த கேமராவை கிராமங்களுக்குள் கொண்டு சென்று புதுமை புரிந்த பாரதிராஜா வசன உச்சரிப்பிலும் மிகப்பெரும் மாறுதலை உருவாக்கினார்; நாடக பாணியில் இருந்து வழுக்கி வசனங்களை யதார்த்தத்திற்கு மாற்றிய திரைப்படமிது. 'பரட்டை' 'சப்பாணி' கேரக்டர்கள் ரஜினி, கமலுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கும் மறக்க முடியாதவை. ரஜினிகாந்த் & கமல்ஹாசனின் முதல் வெள்ளிவிழா திரைப்படமும் இதுதான் (240 நாட்கள்).

தொடர்ச்சியாக தமிழ், கன்னடம், தெலுங்கு என பல படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவந்த ரஜினிக்கு 'சூப்பர் ஸ்டார்' டைட்டிலை படத்தின் போஸ்டர்களிலும், பானர்களிலும் பொறித்து 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஆக்கியவர் இன்றைய முன்னணி தயாரிப்பாளரும், அன்றைய முன்னணி விநியோகிஸ்தருமான கலைப்புலி எஸ்.தானு அவர்கள்தான். அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை! 1975 களின் பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜியின் தாக்கம் கிட்டத்தட்ட இல்லாமல் போயிருந்த காலகட்டத்தில் அடுத்த தலைமுறை நாயகர்கள் என்று அன்று ஆரூடம் கூறப்பட்ட ஜெயஷங்கர், ரவிச்சந்திரன், விஜயகுமார், சிவகுமார் போன்றோரால் தமிழ் சினிமாவை வணிகரீதியாக ஓரடிகூட முன்னால் கொண்டுசெல்ல முடியவில்லை.

அந்தக்காலப்பகுதியில் ரஜினி நடித்த படங்களின் வசூல் சொல்லிக்கொள்ளும் படியாகவும், வணிகரீதியாக விநியோகிச்தர்களுக்கு லாபம் தரும் அளவிற்கு கிடைத்ததால் ரஜினி நடிக்கும் படங்களை விநியோகிஸ்தர்கள் தேடித்தேடி வாங்க ஆரம்பித்திருந்தார்கள். இந்நிலையில்த்தான் எஸ்.தானுவால் 'பைரவி' திரைப்படத்தின் விளம்பரங்களில் 'சூப்பர் ஸ்டார்' என விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் அக்காலப்பகுதிகளில் எந்த ரஜினி பட டைட்டிலிலும் 'சூப்பர் ஸ்டார்' பட்டம் அடைமொழியாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை.



பைரவியை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினி, கமலின் மற்றுமொரு சிறந்த படைப்பான 'இளமை ஊஞ்சல் ஆடுகிறது' வெளியாகியது; கமலுக்கு ரஜினியைவிட அதிக முக்கியத்துவம் இருக்கும் (ஸ்கோப்) கேரக்டர்களே வழங்கப்பட்டுவந்த காலத்தில், கமலுக்கு நிகரான வேடத்தை ஸ்ரீதர் அவர்கள் ரஜினிக்கும் கொடுத்திருப்பார். ரஜினியின் மிகச்சிறந்த பெர்போமான்ஸ் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. 1978 ஆனி மாதம் 'பைரவி' திரைப்படத்திற்கு 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் இட்ட நேரம் அடுத்தடுத்து ரஜினி படங்கள் வசூலில் சக்கை போடு போட ஆரம்பித்தன.

இளமை ஊஞ்சல் ஆடுகின்றதை தொடர்ந்து 1978 ஆவணி மாதம் 15 ஆம்  திகதி இந்திய சுதந்திரதின நன்னாளில் வெளிவந்த திரைப்படதான் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்'. கதாசிரியராக இருந்த மகேந்திரனை தனக்காக ஒரு படம் இயக்கித்தர வேண்டும் என்று வேணு செட்டியார் கேட்டுக்கொண்டதற்க் கிணங்க மகேந்திரன் எழுதிய திரைக்கதைதான் 'முள்ளும் மலரும்'. திரைக்கதையுடன் செட்டியாரை சந்தித்த மகேந்திரன் தன் கதைக்கு ரஜினிகாந்தான் நாயகன் என்றதும் செட்டியார் முடியவே முடியாது என மறுத்துவிட்டார், ரஜினி இல்லாவிட்டால் 'முள்ளும் மலரும்' இயக்கமாட்டேன் என்று மகேந்திரன் கூறிவிட்டார்; நீண்ட சமரசத்திற்கு பின்னர் செட்டியார் ஒருவாறு ஒத்துக்கொண்டார்.

ஆனாலும் அவருக்கு பெரிதாக ஈடுபாடில்லை, படம் முடியும் தருவாயில் படத்தினை பார்த்த செட்டியார் படத்தின் குறைவான வசனங்களை சுட்டிக்காட்டி இந்த படம் ஒன்றுக்கும் உதவாது என்று கூறிவிட்டார். மேலதிக செலவிற்கும், விளம்பரத்திற்கும் பணம் கொடுக்கவும் மறுத்துவிட்டார். இந்த நேரத்தில் கமல்ஹாசன் மற்றும் ஒரு சில திரையுல நண்பர்கள் உதவியுடன் மகேந்திரன் முள்ளும் மலரும் திரைப்படத்தை வெளியிட்டார். விளம்பரமின்மையால் முதல்வாரம் படம் மிகவும் மந்தமாகவே ஓடியது; அடுத்தடுத்த வாரங்களில் Word Of Mouth மூலம் திரைப்படம் பற்றிய நேர்மறையான கருத்துக்கள் மக்களை சென்றடைய படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக மிக முக்கியமான திரைப்படமாகவும், தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த திரைப்படமாக இன்றளவும் பேசப்படுகின்றது; என்றும் பேசப்படும்.



முள்ளும் மலருமை தொடர்ந்து 1978 மார்கழி மாதத்தில் ரஜினிகாந்த் நடித்த மற்றுமொரு மாபெரும் வெற்றித் திரைப்படம் வெளியாகியது. சுஜாதாவின் கதைக்கு எஸ்.பி முத்துராமன் திரைவடிவம் கொடுக்க முழுக்க முழுக்க சிங்கப்பூரில் உருவான முதல் திரைப்படமான 'பிரியா' பாடல்களாலும், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ரஜினிகாந்தின் துருதுரு நடிப்பாலும் வெள்ளிவிழாக் கண்டது. அடுத்து 1979 களில் தர்ம யுத்தம், நான் வாழவைப்பேன், அன்னை ஓர் ஆலயம், நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்ப்புத விளக்கும், ஆறிலிருந்து அறுபதுவரை என ரஜினியின் வெற்றிகள் தொடர்ந்தன.

'ஆறிலிருந்து அறுபதுவரை' திரைப்படத்தின் வெற்றி ரஜினியின் திரைப்பயணத்தில் கிடைத்த மிக முக்கியமான வெற்றியாக கணிக்கப்பட்டது. காரணம் தனது பாணியில் இருந்து (துருதுரு) விலகி, முழுமையாக உடல் மொழியை மாற்றி 'சந்தானம்' கேரக்டராகவே ரஜினி வாழ்ந்திருப்பார். எஸ்.பி.எம் இந்த படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என தானும் ரஜினியும் பயந்ததாகவும்; முதல்வாரம் எப்படியும் கூட்டம் வரும், இரண்டாம் வாரம் திங்கட்கிழமை காட்சியை பார்த்தால் முடிவு தெரிந்துவிடும் என்பதால் பொறுத்திருந்து திங்கள் மக்கள் கொடுத்த அதீத வரவேற்பில் மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1975 களில் சினிமா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு உணவுக்கே பண நெருக்கடியான சூழலில் நண்பனின் அறையில் ஏதாவதொரு கம்பனி தன்னை கூப்பிடாதா? அதிலும் தான் சந்தித்து பேசும்போது தனக்கு "உன்னை ஞாபகம் வைத்திருக்கிறேன்" என்று கூறிய கே.பி கூப்பிட மாட்டாரா என தினம் தினம் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜிராவ் என்னும் கரிய, வரண்ட தோல், குட்டிக் கண், பரட்டை தலை, ஆறடி உயரம் கொண்ட இளைஞன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் நாட்டின் மிகப்பெரும் நட்ச்சத்திரம்; அதிலும் உச்ச நட்சத்திரம், நினைத்துக் கூட பார்க்கமுடியாத அபரிமிதமான வளர்ச்சி.......



இந்த இடத்தை அடைய சிவாஜிராவ் என்னும் அந்த இளைஞன் பட்டபாடு கொஞ்ச நெஞ்சமில்லை. சினிமாக் கனவுடன் சினிமா கல்லூரிக்காக நண்பனின் பணத்தில் சென்னைக்கு வந்தவன் வீதியோரங்களில் தூங்கியிருக்கிறான், உணவகங்களின் சமையல் அறைகளில் அடுப்பு வெக்கையில் தூங்கியிருக்கிறான், கட்டணம் கட்ட பணமில்லாமல் கூலிவேலை செய்திருக்கிறான், சக மாணவர்களால் ஏழ்மையின் நிமித்தம் ஏளனமும் செய்யப்பட்டிருக்கிறான்; எத்தனை அவமானங்களைத்தான் அவன் கல்லூரிக் காலங்களில் சந்தித்திருப்பான்!!! அத்தனைக்கும் அன்று அவனுக்கு உறுதுணையாய் நின்றவர்கள் அவன் நண்பர்கள், இன்றைக்கும் அவர்கள் அவனுக்கு நண்பர்கள்தான்!!! அதுதான் இன்றைய அவன் உயரத்தின் ரகசியம்!

இந்த 5 ஆண்டுகளில் ஒரு மிகப்பெரும் சினிமா இண்டஸ்ரிக்கே முதல்வனாகுவதென்பது வெளியில் இருந்து பார்த்தால் வியப்பாக தோன்றும், ஆனால் அதற்க்கு சிவாஜிராவ் கொடுத்த உழைப்பு இருக்கிறதே!!! அது ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகம். தினமும் 16 மணி நேர வேலை, 2 மணி நேரம்தான் தூக்கம்; வருடத்திற்கு குறைந்தது நான்கு மொழிகளிலும் 15 படங்கள்; இத்தனைக்கும் அவன் ஷூட்டிங்கிற்கு நேரம் தவறியதில்லை!!! முன்னுக்கு வரவேண்டும் என்கின்ற வெறி, அவனுள் இருந்த சினிமா மீதான மோகம், தொழில் மீதிருந்த பக்தி; இவைதான் ஐந்தே ஆண்டுகளில் வெறும் சிவாஜிராவை 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தாக மாற்றியது........

ரஜினியும் ரசிகர்கள் & விமர்சகர்களும்....



ரசிகர்கள்


ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 


சிவாஜிராவிலிருந்து 'இந்திய சூப்பர்ஸ்டார் ' ரஜினிகாந்தாக தன்னை மாற்றிக்கொண்ட நடிகரது மாபெரும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான சக்தி என்றால் அது அவரது ரசிகர்கள்தான். கோடானகோடி ரசிகர்களை தனது தனித்தன்மையான ஆற்றலால் தன்வசம் ஈர்த்த ரஜினிகாந்தின் ரசிகர்களின் எண்ணிக்கை 1975 முதல் இன்றுவரை ஆரோகணத்தில் செல்வதுதான் ஆச்சரியப்பட வைக்கும் உண்மை; இது ரஜினி இன்னமும் சினிமாவில் நடிக்கும் காலம்வரை தொடரப்போகும் விடயம்தான். ரஜினியின் வெற்றியை அன்றும், இன்றும், என்றும் கொண்டாடும் ரசிகர்களை பற்றி சொல்வது நாங்களே எங்களைப் பற்றி சொல்வது போலாகிவிடும்; இருப்பினும் சில விடயங்களை மட்டும் பகிர்கிறேன்.

ரஜினி என்கின்ற நடிகனை அதிகமானவர்களுக்கு பிடிப்பது அவர்களது முதற் பார்வையில்த்தான்!! முதல் முதலாக ரஜினியை திரைப்படத்தில் பார்க்கும்போதே பலரும் ரஜினி ரசிகர்கள் ஆகிவிடுகின்றனர்; அப்படி ரஜினியை பலருக்கும் பிடித்துப் போவதற்கு என்ன காரணமென்று சரியாக சொல்ல முடியாது, ஆனால் ஏதோ ஒருவித ஈர்ப்பு அவரிடம் உண்டென்று மட்டும் சொல்லலாம். 3 வயதில் ரஜினி என்கிற நடிகனது தோற்றம் மட்டும்தான் ஒரு குழந்தைக்கு தெரியும், அவரது திறமைகளை ஆராயுமளவிற்க்கு குழந்தைகளுக்கு திறன் இருப்பதில்லை. அப்படியிருக்க பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் ரஜினியை பிடித்துபோகிறது என்பதற்கான காரணத்தை என்னவென்று கூறுவது? அதைவிட ஆச்சரியமான விடயம் அந்த குழந்தைகளில் அதிகமானவை இறுதிவரை ரஜினியை ரசிப்பதுதான், அதுதான் ரஜினியின் பவர்.

அடுத்து ரஜினி ரசிகர்கள் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால்; ரஜினியை கண்மூடித்தனமாக ரசிக்கிறார்கள் என்பதுதான், இதில் தவறென்ன இருக்கிறது? ரஜினியை கொண்டாடும் யாருமே ரஜினிக்காக அவரையோ அவர் படங்களையோ கொண்டாடுவதில்லை, மாறாக தங்கள் மகிழ்ச்சிக்காகவும் அதில் கிடைக்கும் ஆத்ம திருப்திக்காகவும்தான் கொண்டாடுகிறார்கள் & கொண்டாடுகின்றோம். எதுவுமே கிடைக்காமல் ஒருவரை & ஒன்றை யாருமே கொண்டாட மாட்டார்கள், அப்படி கொண்டாடவும் முடியாது, இதை புரிந்து கொள்ள முடியாதவர்களை ஒன்றும் செய்யமுடியாது. தங்களுக்கு மகிழ்ச்சி & ஆத்மதிருப்தி கிடைக்கும் பட்சத்தில் தங்களுக்கு பிடித்த யாரையும் கொண்டாடலாம், அதில் தப்பில்லை; ஆனால் அதனால் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்வது அவசியம்.



ரசிப்புத்தன்மை பலவிதம்; சில ரசிகர்கள் அமைதியாக ரசிப்பார்கள், சிலர் ஆர்ப்பாட்டமாக ரசிப்பார்கள். சிலர் ஆர்ப்பாட்டத்தின் உச்சமாக கட்டவுட்டுகள், பாலாபிசேகங்கள் என கொண்டாடுவார்கள்; இவை அவரவர் தங்கள் விருப்பத்திற்கேற்ப வெளிப்படுத்தும் மகிழ்ச்சியின் அளவுகோல்கள், இது அவரவர் தனிப்பட்ட உணர்வு, இதில் என்ன தவறு இருக்கிறது? பணம் வீண்விரயம் என சப்பைக்கட்டு கட்டுபவர்கள் யாரேனும் இருப்பின் குடிவகைகள், புகைப்பொருட்கள் , பொழுதுபோக்கு அம்சங்கள், ஆடம்பர உணவு, அலங்கார பொருட்கள், ஆடம்பர பொருட்கள், உல்லாச பயணம் என பணத்தை எந்தவிதமான சந்தோசமான காரியங்களுக்கும் விரயமாக்காதவர்களாக உணவு , உடை , உறையுள், மருத்துவம் மற்றும் முக்கியமான அதியவாவசிய தேவைகளுக்கு மட்டும் பணத்தை செலவு செய்பவர்களாக இருக்கிறீர்களா என சுயபரிசோதனை செய்துவிட்டு இந்த விடயத்தைப் பற்றி பேசுங்கள்.

மிகவும் மகிழ்ச்சியான செய்தியை கேட்ட ஒருவர் புன்சிரிப்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார், இன்னொருவர் துள்ளிக்குதிப்பார், மற்றொருவர் கட்டியணைப்பார், இன்னுமொருவர் முத்தமிடுவார்; இது மனிதர்களுக்கு மனிதர் மாறுப்படும், ஒவ்வொருவரும் தமது உணர்ச்சிகளை ஒரேமாதிரி வெளிப்படுத்த முடியாது, அப்படி எதிர்பார்க்கவும் முடியாது. அதேபோலத்தான் ரசிப்புத்தன்மையும், அடுத்தவன் சுதந்திரத்தில் தலையிடாமல் தனக்கும் & அடுத்தவனுக்கும் பாதிப்பில்லாமல் எது செய்தாலும் அதில் தவறில்லை. அது அவரவர் தனிப்பட்ட விடயம், அதில் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை.

அனைத்து ரஜினி ரசிகர்களுக்கும் "ரஜினியை ரசிப்போம், எதிரிகளை பார்த்து சிரிப்போம், குடும்பங்களை கவனிப்போம், வாழ்க்கையில் ஜெயிப்போம்".

விமர்சகர்கள்.




ரஜினியை எப்படி பலருக்கு பிடிக்கின்றதோ; அதேபோல சிலருக்கு பிடிக்காமலும் இல்லை, அப்படி ரஜினியை பிடிக்காதவர்களில் பலர் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஏதாவதொரு வகையில் ரஜினியை வம்புக்கு இழுத்து மோசமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டவர்கள்.

அப்படி ரஜினியை விமர்சிப்பவர்களை மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம்,

1)சிலருக்கு முதல்பார்வையிலேயே ரஜினியை பிடிக்காமல் போய்விடுகிறது. ரஜினியை முதல் பார்வையில் பலருக்கு பிடித்து போவதற்கு எப்படி காரணம் தெரியாமல் இருக்கின்றதோ; அதேபோல சிலருக்கு முதல் பார்வையிலேயே ரஜினியை பிடிக்காமல் போவதற்கும் காரணம் தேவையில்லை.

2) தங்களுக்கு பிடித்த நடிகர் ஒருவருக்கு போட்டியாக ரஜினியை நினைத்து தங்களது அபிமான நடிகரால் ரஜினியின் உச்சத்தை அடைய முடியவில்லையே என்கின்ற இயலாமையால் சிலரும், தங்களது அபிமான நடிகர் தொட்ட உச்சங்களை ரஜினி தொட்டுவிடுவாரோ என்கின்ற பயத்தில்(பழசுகளில்) சிலரும் ரஜினியை கண்மூடித்தனமாக எதிர்க்கின்றார்கள்.

3) பிரபலமான ஒருவரை விமர்சிக்கும்போது தங்களை இலகுவாக அதிகமானவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ளலாம் என்கின்ற லாஜிக் அடிப்படையில் பிரபலங்கல் மீது எதிர் விமர்சனங்களை மட்டுமே வைக்கும் சில சுயதம்பட்ட 'அறிவு ஜீவிகள்' ரஜினியை விமர்சிப்பதற்கு வேறெந்த காரணமும் தேவையில்லை.

இந்த மூன்று பிரிவினரும் ரஜினியை வாழ்க்கையில் தவறே செய்யக்கூடாத 'அவதார புருஷர்' போன்று இருக்கவேண்டும் என்பது போன்றும், ரஜினியின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பது போன்றும் கருத்துக்களை அள்ளித் தெளிப்பவர்கள். ரஜினியின் ஒவ்வொரு செயற்ப்பாட்டிலும் குறை கண்டுபிடிக்கும் இவர்கள் ரஜினி ஒன்றை செய்தால் அதற்கு மாற்றீடாக இன்னொன்றை செய்திருக்கவேண்டும் என்றும்; அந்த மாற்றீட்டை ரஜினி செய்திருந்தால் அது தவறு முதலில் செய்ததை செய்திருக்க வேண்டுமென்றும் கூறுபவர்கள். இவர்களுக்கே தாங்கள் செய்வது சந்தர்ப்பவாத அரசியல் என்பது நன்கு தெரிந்திருந்தும் தங்களது இயலாமையை வெளிக்காட்டிக் கொள்வதற்காகவும் தங்களது பிரபலத்துக்காகவும் இவர்கள் இவற்றை நிறுத்தப் போவதில்லை.



இவர்களில் ரஜினியை பிடிக்காதவர்களை எடுத்துக்கொண்டால்; ரஜினியின் புகைப்படங்களை பார்க்கும்போதும், ரஜினியின் பெயரை கேட்கும்போதும் ரசிகனுக்கு எப்படி உற்சாகம் ஏற்படுகிறதோ, அதேபோல இவர்களுக்கு எரிச்சலும் வெறுப்பும் உண்டாகும், இது சாதாரண மனித இயல்பு, அந்த மனித இயல்பின் வெளிப்பாடுதான் இவர்களது ரஜினிமீதான வலிந்த தாக்குதல்கள். இந்த 'சொற்' தாக்குதல்களால் ரஜினிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதென்பது இவர்களுக்கு தெரிந்தாலும் குறைந்த பட்சம் ரசிகர்கள் மனதையாவது காயப்படுத்தலாமே என்கின்ற 'அற்ப' எண்ணந்தான் இவர்களது இயலாமைக்கு ஓரளவேனும் மருந்துபோடுகிறது.

ரஜினியை விமர்சிக்கும் மூன்று பிரிவினரையும் மேலும் ஐந்து வகையாக பிரிக்கலாம்

1) நேரடியாக ரஜினியை விமர்சிப்பவர்கள், இவர்கள் எந்த விடயமானாலும் நேரடியாக ரஜினியை குறை கூறுபவர்கள் அல்லது திட்டுபவர்கள். தாங்கள் சொல்லும் கருத்து விதண்டாவாதமாக இருப்பினும் நேரடியாக கருத்துக்ககளை கூறுபவர்கள். இவர்கள் நேரடியான எதிர்ப்பாளர்கள்.

2) கண் மூடித்தனமான எதிர்ப்பாளர்கள், இவர்களுக்கு ரஜினி பெயரை கேட்டாலே திட்டவேண்டும் போலிருக்கும். உதாரணமாக ரஜினியின் 60 ஆவது திருமணவிழா வாழ்த்தில் கூட "நாசமா போ" என வாழ்த்துமளவிற்கு இவர்களது இயலாமை அல்லது வெறுப்பு ரஜினிமீது இருக்கும், இவர்களை நினைத்து வருத்தப்பட மட்டும்தான் முடியும்.

3) இந்த பிரிவினர்தான் மிகவும் மோசமான பேர்வழிகள், இவர்கள் தங்களை ரஜினி ரசிகர்கள் என்கின்ற போர்வையில் வெளிக்காட்டிக்கொண்டு தங்களுக்கு 'ரஜினி', 'ரஜினி ரசிகன்' என தாங்களே பெயர் சூட்டிக்கொண்டு "நானும் ரஜினி ரசிகன்தான் ஆனால்....." என ஆரம்பித்து "தலைவர் மகள் கல்யாணத்துக்கு சாப்பாடு போடலையே என்று கஷ்டமா இருக்கு", "தலைவர் அரசியலுக்கு வர்றதா ஏமாத்திட்டு இருக்கிறாரு", "தலைவர் இந்த விடயத்தில் இப்பிடி செய்திருக்க கூடாது" என்று நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள். இந்த 'கருப்பு ஆடுகள்' முதல் இரு பிரிவினரோடும் ஒப்பிடுகையில் முழுக் கோழைகள்.

4)நான்காவது பிரிவினர் ஆடு நனைகிறதென்று அழும் ஓநாய்கள், இவர்கள்தான் "என்னடா உங்க தலைவர் இப்பிடி செய்திட்டாரே", "அடடா உங்க தலைவருக்கு இப்படி ஆகிப்போச்சே" என்று ஆதரவாக பேசுபவர் போல் ஜாடை பேசுபவர்கள். தாங்கள் பேசுவது நியாயமில்லை என்று அவர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரியுமென்பது தெரிந்தாலும் ரசிகர்களுக்கு எரிச்சலையும், பொதுப்பார்வை உள்ளவர்களுக்கு குழப்பத்தையும் ஏற்ப்படுத்துவதே இவர்களின் நோக்கம், இவர்கள் புத்திசாலிகள்.

5) சமூகம், சீர்திருத்தம், தமிழ்நாடு, இந்தியா, உலகம், முதலாளித்துவம், ஆணாதிக்கம், கம்யூனிசம், ஏழைகள், சுரண்டல், ஒலக சினிமா, தரமான சினிமா என ஏதேதோ சொல்லி ரஜினியை விமர்சிக்கும் இவர்கள்; தங்களை 'அறிவு ஜீவிகள்' போல் காட்டிக்கொள்வதில் கில்லாடிகள். ரஜினியை பிடிக்காதவர்களும் இந்த லிஸ்டில் இருந்தாலும் தங்களது பிரபல்யத்திற்காக ரஜினியை விமர்சிப்பவர்களே இந்த பிரிவில் அதிகம். பீர் பாட்டில் உடைக்கும்போது பொங்கி எழுவதுபோல பொங்கும் இவர்களது சமூகஅக்கறை ரஜினிபடம் ரிலீசாகி 3 வாரத்தில் 4 பீர் அடிச்சவன் போல மட்டையாகிவிடும். வேறு எந்த நடிகரது திரைப்படம் வெளிவந்தாலும் மீண்டும் சமூகஅக்கறை பொங்காது, அடுத்த ரஜினி படத்திற்காக இவர்களது சமூகஅக்கறை காத்திருக்கும்.



இவர்கள் அனைவரும் 'மாரித் தவளைகள்' போல் கத்திய பின்னர் இறுதியாக இயலாமையில் சொல்லும் ஒரு வீரவசனம் "முட்டாள் ரசிகர்கள்", உலகத்திலேயே எவன் அடுத்தவனை முட்டாளென்று சொல்கிறானோ அவனைவிட அடிமுட்டாள் யாராகவும் இருக்க முடியாதென்கிற உண்மை தெரிந்தும் அவர்கள் அந்த வசனத்தை சொல்கிறார்கள் என்றால் அவர்களை நினைத்து கோபப்படுவதா? இல்லை பாவப்படுவதா?

 ரஜினியை விமர்சிப்பது ரஜினியை பொறுத்தவரை பொசிடிவ்வான விடயம்; விமர்சனங்களால் தன்னை செப்பனிடத்தெரிந்த  ரஜினிக்கு, வேண்டாத வலிந்த விமர்சனங்களுக்கு புன்னகையையும் உதிர்க்கத் தெரியும்!! ஆனால் ரசிகர்களுக்குத்தான் ரஜினி அளவுக்கு பக்குவம் கொஞ்சமும் கிடையாது, வீண்  சொற்களை  ஏற்றுக்கொள்ள முடியாமல்  மனம் குமுறுவார்கள்!! ஆரம்பத்தில் இது கஷ்டமாக இருக்கும், ஆனால்  போகப்போக பழகி இறுதியில் அவர்களும் பக்குவப்பட்டு விடுவார்கள்!! விமர்சகர்களே ரஜினியை விமர்சிப்பது ரஜினிக்கு வீழ்ச்சி அல்ல எழுச்சி!!! சாதாரண நடிகனை சூப்பர் ஸ்டார் ஆக்கி, இந்திய சூப்பர் ஸ்டாராக அழகுபார்த்த விமர்சகர்களால் ரஜினியை இன்னமும் உயரத்திற்கு கொண்டு செல்லமுடியும்!! :-)
பிரியமான எதிர்மறையான விமர்சகர்களே "Better Luck In Future" but We Know It's Impossible.....

* இங்கு எதிர்மறையான விமர்சகர்களே  என குறிப்பிட்டுள்ளது எதிராக மட்டும் விமர்சிப்பவர்களை.....

ரஜினியும் திரையிசையும்....



ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

ரஜினியின் திரைவாழ்க்கை வெற்றியில் பிரதான பங்குவகிக்கும் முக்கிய காரணிகளில் திரையிசைப் பாடல்களும் ஒன்று. இன்றைய தேதியில் ரஜினி படத்திற்கு எந்த மாதிரிப் பாடல்களை போட்டாலும் அவை ஹிட்டாகிவிடும், இது இன்றைய ரஜினியின் 'மாஸ்' பவர், ஆனால் அன்றைய ரஜினியின் வெற்றிக்கு முத்தான திரையிசைப் பாடல்கள் மிக முக்கியமான பங்களிப்பை செய்தன என்பது யாருமே மறுக்க முடியாதது. அந்தவகையில் ரஜினியின் திரையிசைப் பாடல்களுக்கு இசையமைத்தவர்கள், பின்னணி பாடியவர்கள், பாடல்களை எழுதியவர்கள் என மூன்று பிரிவினருமே மறக்க கூடாதவர்கள். இவர்கள் பற்றிய பார்வையே இந்தப்பதிவு.


எம்.எஸ்.விஸ்வநாதன்



ரஜினியின் முதல் திரைப்படமான 'அபூர்வராகங்கள்' திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த எம்.எஸ்.வி அவர்கள் ரஜினியின் முதல் வாயசைவிற்கு இசையும் குரலும் கொடுத்தவர். மூன்று முடிச்சு திரைப்படத்தில் "மண வினைகள் யாருடனோ!! மாயவனின் விதிவலைகள்" பாடல்தான் ரஜினி வாயசைத்த முதல் திரையிசைப்பாடல். அதன்பின்னர் சில பாடல்களை ரஜினிக்காக எம்.எஸ்.வி பாடியிருந்தாலும் "சம்போ சிவ சம்போ "பாடல் மிகவும் பிரபலமானது. அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு திரைப்படங்கள் தவிர அவர்கள், நினைத்தாலே இனிக்கும், பில்லா, பொல்லாதவன், தீ, தில்லு முல்லு, ராணுவ வீரன், போக்கிரிராஜா போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த எம்.எஸ்.வி இறுதியாக இசையமைத்த ரஜினி படம் 'சிவப்பு சூரியன்'. ஆரம்ப காலங்களில் தனக்கு குரல் கொடுக்க முன்னணி 'பின்னணி பாடகர்கள்' தயங்கியபோது எந்தவித தயக்கமுமிலாமல் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.வி என்று ரஜினி அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா



எத்தனை எத்தனை காலத்தால் அழிக்கமுடியாத அருமையான பாடல்களை ரஜினி படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார்!!! அப்படி ரஜினி படங்களுக்கு இளையராஜா இசையமைத்த அத்தனை பாடல்களையும் விரிவாக எழுதுவதென்றால் ஒரு தனிப்பதிவே போதாது!! முடிந்தவரை சுருக்கமாக பார்த்தால்; இளையராஜா இசையமைத்த ரஜினியின் முதல்த் திரைப்படமான 'கவிக்குயில்' திரைப்படத்தை தொடர்ந்து புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, பைரவி, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, முள்ளும் மலரும், பிரியா, தர்ம யுத்தம், 6 - 60 வரை போன்ற பல திரைப்படங்களுக்கும் 70 களில் இளையராஜா இசையமைத்துள்ளார். இவற்றில் பைரவி திரைப்படத்தில் "நண்டூருது நரியூருது" பாடலையும் 1980 இல் வெளிவந்த அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தில் "அம்மா நீ சுமந்த பிள்ளை" பாடலையும் ரஜினிக்காக டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் குரலில் ஒலிக்கச் செய்தது சிறப்பித்திருப்பார்.

80 களில் ரஜினியின் திரைப்படங்களில் 80 வீதமான திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களில் 90 வீதமானவை சூப்பர் ஹிட்டான பாடல்களே. அவற்றில் ஜானி, புதுக்கவிதை, தம்பிக்கு எந்த ஊரு, நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன், குரு சிஷ்யன், வேலைக்காரன், ராஜாதிராஜா, தர்மத்தின் தலைவன் போன்ற திரைப்படங்கள் மிக முக்கியமானவை. ரஜினி நடித்த ஒரே ஆங்கிலத் திரைப்படமான BloodStone திரைப்படத்துக்கு இசையமைத்த இளையராஜா அவர்கள் ரஜினி தனது திரைவாழ்வில் பாடிய ஒரே பாடலான "அடிக்குது குளிரு" பாடலை மன்னன் திரைப்படத்தில் பாடவைத்திருப்பார்.

90 களின் முற்பாதியில் பணக்காரன், அதிசயப்பிறவி, தளபதி, மன்னன், பாண்டியன், உழைப்பாளி, எஜமான், வள்ளி போன்ற திரைப்படங்களுக்கு இசயமைத்த் இளையராஜா ரஜினிக்கு இறுதியாக இசையமைத்த திரைப்படம் வீரா. ரஜினிக்காக இளையராஜா பாடிய முதல்ப்பாடல் பணக்காரனில் "உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி" பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

.ஆர்.ரஹ்மான்




முத்து, படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரன் என ரஜினியின் ஐந்து திரைப்படங்களுக்கு இசையமைத்த ரஹ்மான் ரஜினிக்கு ஆறாவதாக இசையமைக்கும் திரைப்பப்படம் கோச்சடையான் என்பது குறிப்பிடத்தக்கது. 1995 இல் இருந்து இன்றுவரை ரஜினி நடித்துள்ள 12 திரைப்படங்களில் 6 திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது விஷேடம். முத்து திரைப்படத்தில் ரஜினி வாயசைக்கா விட்டாலும் பின்னணியில் "விடுகதையா இந்த வாழ்க்கை" என ஹரிகரனின் குரலில் ரஜினி படமொன்றில் முதல்முறையாக பாடலொன்றை ஒலிக்கச் செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரபோஸ்




ரஜினியின் திரைப்படங்களில் மாங்குடி மைனர் திரைப்படத்தை முதல்முதலாக இசையமைத்திருந்த சந்திரபோஸ் தொடர்ந்து விடுதலை, மனிதன், ராஜா சின்ன ரோஜா திரைப்படங்களுக்கும் இசையமைத்திருந்தார். விடுதலை திரைப்படத்தில் "ஊருக்குள்ள நம்மை பற்றி கேட்டுப்பாருங்க" பாடல் மிகவும் பிரபல்யமானது. தொடர்ந்து மனிதன் , ராஜா சின்ன ரோஜா திரைப்படங்களில் அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாயின. 'மனிதனில்' ரஜினிக்காக எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் மூவரையும் பின்னணி குரல் கொடுக்கவைத்த சந்திரபோஸ் 'ராஜா சின்ன ரோஜா'வில் எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மனோ மூவரையும் பின்னணி குரல் கொடுக்க வைத்திருப்பார், ஒரு திரைப்படத்தில் ரஜினிக்கு மூன்று பேர் பின்னணி குரல் கொடுத்தது சந்திரபோசின் இசையில் குறிப்பிடத்தக்க விடயம்.

ரஜினி சந்திரபோஸ் கூட்டணியல் உருவாகிய மனிதன், ராஜா சின்ன ரோஜா திரைப்படங்கள்தான் இளையராஜாவின் பிரிவுக்கு பின்னர் நல்ல வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருந்த வைரமுத்துவுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது . இரண்டு திரைப்படங்களிலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுதியிருப்பார், எல்லாமே சூப்பர்ஹிட்டானாலும் ராஜா சின்ன ரோஜாவில் "சூப்பர் ஸ்டாரு யாரின்னு கேட்டால்" பாடல் ரசிகர்களின் மிகப்பெரும் அபிமானம் பெற்ற பாடலாக அமைந்தது.


தேவா




அண்ணாமலையில் இருந்து ரஜினி படங்கள் ஆரம்பிக்கும் முன்னர் 'SUPER STAR RAJINI' என வரும் டைட்டிலுக்கு இசையமைத்து திரையரங்கையே அதிரவைத்தவர் தேவா. 'சிவாஜி' திரைப்படத்தில் அந்த இசை மாற்றப்பட்டாலும் தேவாவின் இசையில் (காப்பியாக இருந்தாலும்) இருந்த 'கிக்' இப்போ இல்லை என்பதே உண்மை. அண்ணாமலை, பாட்ஷா என ரஜினியின் இரண்டு மெகாஹிட் திரைப்படங்களிலும் அனைத்துப் பாடல்களையும் பட்டிதொட்டியெங்கும் பிரபலாமகுமாறு இசையமைத்த தேவா இறுதியாக ரஜினிக்கு இசையமைத்த அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினியின் வாயசைவில் முதல்முதலில் ஹரிகரனை "நகுமோ நகுமோ" என பின்னணி பாடவைத்திருப்பார். பாட்ஷாவின் மிகப்பெரும் வெற்றியில் தேவாவின் இசையும் முக்கிய காரணங்களில் ஒன்றென்பதை மறுக்க முடியாது.

இவர்களைத் தவிர ஐந்து  திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த ஷங்கர் கணேஷ் மற்றும் எஸ்.பி.பி, விஜய பாஸ்கர், 'கொடிபறக்குது' புகழ் ஹம்சலேகா, வித்யாசாகர் போன்றோரும் ரஜினி திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களில் முக்கியமானவர்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்




தமிழ் சினிமாவின் அதிக பாடல்களை பாடிய இந்த ஜாம்பவான்தான் ரஜினிக்கும் அதிகமான பாடல்களை பாடியவர் என்பது சிறப்பம்சம். ஆரம்பகாலம் முதல் இன்றுவரை தொடர்ந்து ரஜினிக்காக பின்னணி பாடல்களை பாடிவரும் இந்த 'முன்னணி' பாடகர் பாடிய பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாதவை. ரஜினிக்கு 100% ஒரு குரலென்றால் அது எஸ்.பி.பி அவர்களுடைய குரல்தான். அனைத்து வகையான பாடல்களையும் ரஜினிக்காக எஸ்.பி.பி பாடினாலும் ஆரம்பபாடல்கள் (opening song) மிகவும் பிரபலமானவை. "வந்தேண்டா பால்க்காரன்", "அதுதாண்டா இதுதாண்டா", "ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்", "ஒருவன் ஒருவன் முதலாளி", "என்பேரு படையப்பா ", "தேவுடா தேவுடா", "பல்லேலக்கா பல்லேலக்கா", "புதிய மனிதா" என ரஜினிக்கு எஸ்.பி.பி 'ஆரம்பபாடல்' பாடிய அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள் என்பது விஷேடம்.

"ராமன் ஆண்டாலும்", "ராஜாவுக்கு ராஜா நான்டா", "வாழுமட்டும் நன்மைக்காக", "மை நேம் இஸ் பில்லா", "நான் பொல்லாதவன்", ""ராக்கம்மா கையை தட்டு" போன்ற பாடல்களை பாடும்போது கம்பீரமாக ஒலிக்கும் எஸ்.பி.பியின் குரல்; "காதலின் தீபம் ஒன்று", "ராத்திரியில் பூத்திருக்கும்", "சுந்தரி கண்ணால் என்ன சேதி", "வா வா இதயமே", "ஒரு ஜீவன்தான்" என காதல்ப்பாட்டு பாடும்போது கொஞ்சலாகவும்; "ராஜா சின்ன ரோஜாவோடு" , "தோட்டத்தில பாத்திகட்டி" என பாடும்போது குழந்தைத்தனமாகவும் ரஜினியே பாடுவதுபோல இருக்கும், இதுதான் எஸ்.பி.பி & ரஜினி கூட்டணியின் பலம்.

கே.ஜே .ஜேசுதாஸ்




எஸ்.பி.பி அளவிற்கு பாடவில்லை என்றாலும் அதிகமான பாடல்களை ரஜினிக்காக பாடிய பாடகர்களில் இவரும் ஒருவர். பிரியா திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் ஜேசுதாஸ் அவர்கள்தான் பாடியிருப்பார்கள், அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல்கள். அதேபோல 'நல்லவனுக்கு நல்லவன்' திரைப்படத்தில் "உன்னைத்தானே தஞ்சமென்று", "சிட்டுக்கும் செல்ல சிட்டுக்கும்" என மென்மையாக பாடிய ஜேசுதாஸ் "வச்சிக்கவா உண்ண மட்டும்" பாடலில் மிரட்டியிருப்பார். புதுக்கவிதையில் "வெள்ளைப் புறா ஒன்று" எனவும் அண்ணாமலையில் "ஒரு வெண்புறா" எனவும் இதயத்தை வருடும் பாடல்களை ரஜினிக்காக பின்னணி பாடிய ஜேசுதாஸ் தர்மதுரை திரைப்படத்தில் "மாசி மாசம் ஆளான பொண்ணு" பாடலில் மோகத்தையும் "அண்ண என்ன தம்பி என்ன" பாடலில் கோபத்தையும் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் "முத்துமணி சுடரே வா" பாடலில் பாசத்தையும் பொளிந்திருப்பார். மன்னன் திரைப்படத்தில் பாடிய "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" பாடலால் அனைத்து இதயங்களையும் கவர்ந்தவர் ஜேசுதாஸ்.

மலேசியா வாசுதேவன்




எஸ்.பி.பிக்கு அப்புறம் ரஜினிக்கு பொருத்தமான குரலென்று மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலை சொல்லலாம். " பொதுவாக என் மனசு தங்கம்" எனும் பாடல்மூலம் ரஜினிக்கு மிகப்பெரும் வரவேற்பை ஏற்ப்படுத்திக் கொடுத்த மலேசியா வாசுதேவன் ரஜினிக்காக அதிகமான பாடல்களை பாடியவர்களில் முக்கியமான ஒரூவர். "சுப்பண்ணா சொன்னார் அண்ணா", "நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா", "ஆசை நூறு வகை", "மனிதன் மனிதன்", "வெத்தலையை போட்டேண்டி", என்னோட ராசி நல்ல ராசி", "என் தாயின் மீது ஆணை" என வேகமான பாடல்களை ரஜினிக்காக பின்னணி பாடிய மலேசியா வாசுதேவன் அவர்கள் "வா வா வசந்தமே", "ஒத்துகிட்டு ஊத்துதடி", "ஆகாய கங்கை", "ஒரு தங்க ரதத்தில்" போன்ற மென்மையான பாடல்களையும் பாடியுள்ளார்.

மனோ




'வேலைக்காரன்' திரைப்படத்தில் "வேலை இல்லாதவன்தான்" பாடலை முதல் முதலாக ரஜினிக்காக பின்னணி பாடிய மனோ இளையராஜாவின் தயாரிப்பான 'ராஜாதிராஜா' திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் "மீனம்மா மீனம்மா", "எங்கிட்ட மோதாதே", "மலையாளக் கரையோரம்" என முத்தான மூன்று பாடல்களை பாடியுள்ளார். அவைதவிர "பாண்டியனின் ராட்சியத்தில்", "உழைப்பாளி இல்லாத", "நூறு வருஷம்", "ஜிங்கிடி கின்கிடி உனக்கு", "மலைக்கோவில் வாசலில்", "உலகத்துக்காக பிறந்தவன்" போன்ற சூப்பர் ஹிட்டான பாடல்களையும் ரஜினிக்காக பின்னணி பாடியுள்ளார். படையப்பாவில் ரஹ்மானின் இசையில் "ஓஹோஹோகோ கிக்கு ஏறுதே" பாடல் பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத்தவிர ஜெயச்சந்திரன், அருண்மொழி, ஹரிகரன், ஷங்கர் மகாதேவன், கார்த்திக் என அதிகமான பின்னணிப் பாடகர்கள் ரஜினிக்காக பின்னணி பாடியுள்ளனர். ரஜினியின் திரைப்படங்களில் பணியாற்றிய மேலே பெயர்குறிப்பிட்டுள்ள இசையமைப்பாளர்களுக்கும், பின்னணிப் பாடகர்களுக்கும்; பெயர் குறிப்பிடாத இசையமைப்பாளர்களுக்கும், பின்னணிப் பாடகர்களுக்கும் ரஜினி ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.



இசையமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு திரையிசையில் முக்கிய இடத்தை வகிக்கும் பாடலாசிரியர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவது முறையல்ல. எந்தெந்த பாடலை யார்யார் பாடினார்கள்? என்கிற சரியான தகவல்கள் தெரியாததனால் அவர்களைபற்றி விபரமாக குறிப்பிட்டு எழுதவில்லை. இருந்தாலும் ரஜினிக்காக அதிகமான திரைப்பட பாடல்களை எழுதிய வைரமுத்து அவர்களுக்கும் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்று உருகிய வாலி அவர்களுக்கும், ஆரம்பகாலங்களில் ரஜினிக்கு பாட்டெழுதிய 'கவியரசர்' கண்ணதாசன் அவர்களுக்கும்; மற்றும் பெயர் குறிப்பிடாத அனைத்து பாடலாசிரியர்களுக்கும் ரஜினி ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்....

ரஜினியும் தயாரிப்பாளர்களும்....



ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

யாரை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படுகிறீர்கள்? யார் படத்தை விநியோகிக்க ஆசைப்படுகிறீர்கள்? யார் படத்தை திரையிட விரும்புகிறீர்கள்? என்னும் கேள்வியை முறையே தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களை கேட்கும் பட்சத்தில் அவர்கள் அனைவரதும் ஒருமித்த பதில் 'ரஜினிகாந்த்' என்பதாக மட்டும்தான் இருக்கும். யார் படம் பார்க்க பிடிக்கும் ? என்கிற கேள்விக்கான பெரும்பான்மை யானவர்களது பதிலாக 'ரஜினிகாந்த்' என்னும் விடை கிடைப்பதே முதலீட்டாளர்கள் ரஜினி என்னும் குதிரைமீது எவ்வளவு வேண்டுமென்றாலும் பந்தயம் கட்டலாம் என முடிவெடுப்பதற்கு முக்கிய காரணம். அது தவிர சில நேரங்களில், சில காரணங்களுக்காக போட்ட பணம் கிடைக்காதவிடத்து அதை ரஜினியிடம் திரும்ப பெற்றுவிடலாம் என்கின்ற அதீத நம்பிக்கையும் மற்றுமொரு காரணம்.

தனது அண்மைக்கால திரைப்படங்களின் தயாரிப்புக்களை தனது வளர்ச்சியில் ஆரம்பகாலங்களில் பங்கெடுத்தவர்களுக்கு கொடுத்து தனது நன்றியை வெளிக்காட்டிவருகிறார் ரஜினி. சிவாஜி திரைப்படத்தை ஏ.வி.எம்.சரவணன் மற்றும் பஞ்சு அருணாச்சலம் ஆகியோருக்கும், குசேலனை கே.பாலச்சந்தருக்கும், சந்திரமுகியை சிவாஜி குடும்பத்தினருக்கும் தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்த ரஜினியின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பை "ரஜினிகாந்தால் நஷ்டப்பட்ட ஒரே தயாரிப்பாளர்" என ரஜினியால் குறிப்பிடப்பட்ட பாட்ஷா தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு கொடுப்பார் என நம்பப்படுகிறது.

எந்திரன் திரைப்படம்  மிகப்பெரும் பட்ஜெட் என்பதால் அவற்றால் ஒருவேளை நஷ்டம் ஏற்ப்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் அளவிற்கு 'சக்திமிக்க' தயாரிப்பாளராக அதன்  தயாரிப்பாளர் இருக்கவேண்டும் என்பதை மனதில்வைத்தே அந்த திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ரஜினியை வைத்து பல தயாரிப்பாளர்கள் பல திரைப்படங்களை தயாரித்திருப்பினும் அதிகமான மற்றும் முக்கியமான ரஜினி திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் சிலரை இந்தப்பதிவின்மூலம் நினைவு கூருவோம்.

கவிதாலயா




ரஜினியை திரையுலகிற்கு கரம்பிடித்து அழைத்துவந்த ரஜினியின் ஆசான் கே.பாலச்சந்தர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம் ரஜினியை வைத்து கிட்டத்தட்ட பத்து திரைப்படங்களை தயாரித்துள்ளது. நெற்றிக்கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, ஸ்ரீராகவேந்திரா, வேலைக்காரன், சிவா, முத்து, அண்ணாமலை, குசேலன் போன்ற திரைப்படங்கள் கவிதாலயா தயாரிப்பில் ரஜினி நடித்த முக்கியமான திரைப்படங்களாகும். இத்தனை திரைப்படங்களை ரஜினிக்காக கவிதாலயா தயாரித்தபோதும் இந்த திரைப்படங்களில் எந்த திரைப்படத்தையும் கே.பாலச்சந்தர் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

ரஜினிக்கான கவிதாலயாவின் அதிகமான திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள்; இவர் நெற்றிக்கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, ஸ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன் என ரஜினிக்கான கவிதாலயாவின் பாதிக்கு மேற்ப்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 'அண்ணாமலை' திரைப்படத்தை முதலில் இயக்குனர் வசந்த் இயக்குவதாக இருந்தது, இறுதிநேரத்தில் வசந்த் விலகியதை தொடர்ந்து சுரேஷ் கிருஷ்ணாவின் கைகளுக்கு 'அண்ணாமலை' மாற்றப்பட்டது. சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் அண்ணாமலையின் மாபெரும் வெற்றி கவிதாலயாவிற்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது. தொடர்ந்து முத்து திரைப்படமும் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் அதிகமான வசூலை கவிதாலயாவிற்கு அள்ளிக்கொட்டிய மற்றுமொரு திரைப்படம்.

இறுதியாக கே.பாலச்சந்தருக்காக குசேலன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ரஜினி நடித்து கொடுத்த போதும் பிரமிட் சமீராவின் தவறான விளம்பர உக்தியினாலும் சில முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் 'அரசியல்' நடவடிக்கைகளாலும் எதிர்பார்த்த வசூலை குசேலனால் வசூலிக்க முடியவில்லை. திரைப்படத்தின் தவறுகளுடன்; திரைப்படத்தில் தனது பங்கு 25 % தான் என்பதை ரஜினி மீண்டும் மீண்டும் கூறியும் 'பிரமிட் சமீரா' குசேலனை ரஜினி படம் என விளம்பரப்படுத்தி, அதிகவிலைக்கு விற்ற பேராசையே 'குசேலன்' சரியாக போகாததற்கு முக்கிய காரணம்.

.வி.எம்




ரஜினியின் சினிமா கேரியரில் மிக முக்கிய இடம் வகிக்கும் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏ.வி.எம்தான். வர்த்தக சினிமாவிற்குள் ரஜினி காலடி எடுத்துவைத்த முதல்  திரைப்படமான 'முரட்டுக்காளை' திரைப்படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனம் ரஜினியை வைத்து தயாரித்த ஒன்பது திரைப்படங்களுமே வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்தான். முரட்டுக்காளை, போக்கிரிராஜா, ராஜா சின்ன ரோஜா, மனிதன், மிஸ்டர் பாரத், நல்லவனுக்கு நல்லவன், பாயும் புலி, எஜமான், சிவாஜி என ஏ.வி.எம்மின் ஒன்பதும் ரஜினியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான திரைப்படங்கள். இவற்றில் சிவாஜி, எஜமான் தவிந்த ஏனைய எழு திரைப்படங்களையும் இயக்கியவர் ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

விளம்பரம் செய்வதில் ஏ.வி.எம்மை மிஞ்சுவதற்கு ஆட்களே இல்லை என்பார்கள், அதை உண்மை என்று நிரூபித்த திரைப்படம்தான் எஜமான். ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் எஜமானில் இல்லாததால் இரண்டாம் வாரம் படத்தின் வசூலில் சிறு தொய்வு ஏற்ப்பட்டது. உடனடியாக சுதாகரித்த ஏ.வி.எம் நிறுவனம் 'வானவராயன்' (ரஜினி) போன்ற மணமகன் வேண்டுமென பெண்களும் 'வைத்தீஸ்வரி' (மீனா) போன்ற மணமகள் வேண்டுமென ஆண்களும் வேண்டுவது போன்ற விளம்பரங்களை பத்திரிகைகளில் வரச்செய்து மக்களிடம் 'எஜமான்' திரைப்படத்தை எடுத்துச் சென்று 175 நாட்கள்வரை ஓடுமளவிற்கு செய்தது.

ஏ.வி.எம்மின் விளம்பர உக்திக்கு இப்போதுகூட உதாரணாமாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'உறவுக்கு கை கொடுப்போம்' நெடுந்தொடரின் விளம்பரத்தை சொல்லலாம், மூன்று வயது சிறுமி கொஞ்சும் தமிழில் பேசும் விளம்பரத்தால் வீட்டில் எப்போதுமே 8 - 8.30 வரை சண் டிவியை விட்டு வேறெதையும் மாற்றாத ரிமோட் இப்போது 'திருமதி செல்வம்' மெகா தொடருக்கிடையில் அடிக்கடி கலைஞர் டிவி பக்கமும் தாவுகிறது, அதுதான் ஏ.வி.எம்.


சத்யா மூவிஸ்




ரஜினியின் திரை வாழ்க்கையின் மிகப்பெரும் திரைப்படமான பாட்ஷா திரைப்படத்தை தயாரித்த நிறுவனம்தான் சத்யா மூவிஸ். சத்யா மூவிஸும் தேசார் பில்ம்ஸ்சை போலவே ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆரை வைத்து திரைப்படங்களை இயக்கி பின்னர் ரஜினியை வைத்து அதிகமான திரைப்படங்களை இயக்கிய நிறுவனம்தான். பாட்ஷா, பணக்காரன், ராணுவ வீரன், ஊர்க்காவலன், தங்க மகன், மூன்றுமுகம் போன்ற திரைப்படங்களை தயாரித்த சத்யா மூவிஸ் அடுத்ததாக ரஜினி நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று நம்பப்படும் நிறுவனங்களில் ஒன்று.

தேவர் பிலிம்ஸ்




ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான 'தேவர் பிலிம்ஸ்' எம்.ஜி.ஆர் காலத்தின் பின்னர் ரஜினியை தனது ஆஸ்தான நாயகனாக மாற்றிக்கொண்டது. பல திரைப்படங்களை ரஜினிக்காக தேவர் பிலிம்ஸ் தயாரித்திருந்தாலும் அன்புக்கு நான் அடிமை, அன்னை ஓர் ஆலயம், தாய்வீடு, ரங்கா என்பன முக்கியமானவை. வழக்கமாக தேவரது திரைப்படங்களில் மிருகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே வழக்கம், அந்தவகையில் 'அன்னை ஓர் ஆலயம்' திரைப்படத்தில் இரண்டாவது நாயகனாக 'யானைக்குட்டி' ஒன்று நடித்திருக்கும், அதேபோல 'தாய்வீடு' திரைப்படத்தில் நாய் ஒன்று ரஜினியுடன் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும்.

சுரேஷ் ஆட்ஸ்




கே.பலாஜின் தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் ஆட்ஸ் ரஜினிக்காக தயாரித்த மாப்பெரும் வெற்றித் திரைப்படம்தான் பில்லா. பாலாஜி தயாரிப்பில் எம்.எஸ்.வி இசையில் பி.கிருஷ்ணமூர்த்தி இயக்கிய பில்லா திரைப்படம்தான் ரஜினியின் முதல் இரட்டைவேட திரைப்படம். பில்லாவாகவும் ராசப்பாவாகவும் ரஜினி ஒரு கலக்கு கலக்கிய திரைப்படத்தில் தயாரிப்பாளர் பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர் ரஜினியை வைத்து தயாரித்த இன்னுமொரு திரைப்படம் 'தீ'. இலங்கையின் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை 'தீ' திரைப்படம் மறக்க முடியாததொரு திரைப்படம், 1981 இல் இந்தியாவில் 'தீ' திரைப்படம் வெளியாகியிருந்தாலும் 1983 ஆம் ஆண்டுதான் யாழ்ப்பாணத்தில் 'ராணி திரையரங்கில்' (இப்போது அந்த திரையரங்கே இல்லை) வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடியது. ராணி திரையரங்கில் 'தீ' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த வேளையில்த்தான் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாகவிருந்த 'யாழ் நூலகம்' சிங்கள காடையர்களால் 'தீ' வைக்கப்பட்ட வன்முறை சம்பவமும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான பிரபலங்கள் ரஜினியை வைத்து தயாரித்த திரைப்படங்கள் என்று பார்த்தால் இளையராஜா அவர்களின் 'பாவலர் கிரியேசன்' தயாரிப்பில் வெளிவந்த ராஜாதி ராஜா திரைப்படமும் பாரதிராஜாவின் 'மனோஜ் கிரியேசன்' தயாரிப்பில் வெளிவந்த கொடிபறக்குது திரைப்படமும் முக்கியமானவை. இதில் 'ராஜாதி ராஜா' திரைப்படத்தை ஆர்.சுந்தர்ராஜனும் 'கொடிபறக்குது' திரைப்படத்தை பாரதிராஜாவும் இயக்கியிருப்பார்கள். இவர்களைவிட நடிகர் திலகத்தின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான 'சிவாஜி புரொடக்சன்' மன்னன், சந்திரமுகி என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்தது, அந்த இரண்டு திரைப்படங்களையும் பி.வாசு அவர்கள் இயக்கியிருப்பார். அதேபோல் ரஜினியின் அதிக திரைப்படங்களுக்கு 'வசனம் எழுதிய பஞ்சு அருணாச்சலம் அவர்கள் ஆறிலிருந்து அறுபது வரை, கழுகு, எங்கேயோ கேட்ட குரல் ,தம்பிக்கு எந்த ஊரு, குருசிஷ்யன், வீரா போன்ற திரைப்படங்களை தயாரித்திருப்பார்.



வள்ளி, அருணாச்சலம், படையப்பா, பாபா என தனது சில திரைப்படங்களை ரஜினி தானே தயாரித்தபோதும் 'பாபா'வில் அரசியல் சாக்கடைகள் சிலர் செய்த அட்டூழியத்தால் 'பாபா'விற்கு பின்னர் இன்றுவரை எந்த திரைப்படத்தையும் ரஜினி தயாரிக்கவில்லை!! இனிவரும் காலங்களிலும் தயாரிப்பார் என்று தோன்றவில்லை. கை கொடுக்கும் கை, மாவீரன் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ரஜினியே தயாரித்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இது சரியான தகவலா? என்பது தெரியவில்லை, தெரிந்தவர்கள் உறுதிபடுத்துங்கள்.(மாவீரனில் ரஜினி இணை தயாரிப்பாளர் என்பதையும், 'கை கொடுக்கும் கை' தயாரிப்பாளர் விஜயகுமார் என்பதையும் பின்நூட்டல்மூலம் சில நண்பர்கள் சொல்லியுள்ளனர்)

சூப்பர் ஸ்டாரை வைத்து திரைப்படங்களை தயாரித்த மேலே பெயர் குறிப்பிட்ட திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், பெயர் குறிப்பிடாத தயாரிப்பாளர்களுக்கும் ரஜினி ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்......