Tuesday, July 24, 2012

நல்லூர் முருகன் கோவிலும், திருவிழாவும், நானும்!!!!




இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் முன்னாள் தலைநகரான நல்லூரின் மத்தியில் அமைந்திருக்கும் முருகன் கோவில்தான் நல்லூர் கந்தசுவாமி கோவில்;யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்று!!! நல்லூர் என்கின்ற சொல் ஒரு பிரதேசத்தை குறிப்பிட்டாலும் பொதுவான பழக்கத்தில் நல்லூர் என்ற சொல் கந்தசுவாமி கோவிலைத்தான் பிரதி பலிக்கின்றது. இலங்கையின் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான நல்லூர் ஆலயம்தான் இலங்கையின் மிகப்பெரிய கோவில் என்றும், பணக்கார கோவில் என்றும்கூட சொல்லலாம்!! பொதுவாகவே இலங்கையில் நான்கு முருகன் கோவில்கள் மிகப் பிரபலமானவை; கதிர்காம கந்தன், நல்லூர் கந்தன் (அலங்காரக்கந்தன்), செல்வசந்நிதி முருகன் (அன்னதானக்கந்தன்), மாவிட்டபுர கந்தன்(அபிஷேககந்தன்) ஆகிய நான்கும்தான் முக்கியமான முருகன் கோவில்கள்!!! இவற்றில் நல்லூர் கந்தசுவாமி கோவில் மட்டும்தான் தனி ஒருவருக்கு சொந்தமானது!!

நல்லூர் கந்த சுவாமி கோவிலின் மிகச்சிறந்த பண்பு ஒழுக்கம் மற்றும் சமத்துவம்!!! இன்குள்ளதுபோல நேரந்தவறாமையை வேறெந்த கோவிலிலும் பார்க்க முடியாது!!! அதிகாலை 4.30 மணிக்கு அடிக்கும் நல்லூர் கோவில் மணி யாழ்நகரின் பெரும் பகுதிகளுக்கு அலாரம்; நல்லூர் மணியோசை கேட்டு கண்விழிக்கும் யாழ்ப்பான வாசிகள் ஏராளம்!!! இந்த மணியோசையின் ஒலி என்றுமே நேரம் தவறியதில்லை!!! திருவிழா காலங்களிலும் கொடி ஏற்றம், தேர்(வசந்த மண்டப பூஜை) என்பன சொல்லிவைத்த நேரத்திற்கு தவறி நடந்ததில்லை!!! அடுத்த மிகச்சிறந்த விடயம் பாகுபாடு பார்க்காமை!!! ஆண்களில் எவராக இருந்தாலும் மேற்சட்டையுடன் கோவிலின் உள்ளே செல்ல முடியாது; அவர் அமைச்சரோ, பிரதமராகவோ இருந்தாலும்!!! மேற்சட்டை இல்லாமல் ஆண்களும்; புடவை, சல்வாரில் பெண்களும் கோவிலின் உள்ளே செல்லவேண்டும் என்கின்ற சட்டத்தில் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அந்த சட்டம் யாவர்க்கும் பொதுவானது என்பது வரவேற்க்கத்தக்கது !!!

அடுத்து அர்ச்சனை டிக்கட்டின் விலை; இங்கு பூசகரிடம் பணம் கொடுத்து அர்ச்சனை செய்யமுடியாது!!! அர்ச்சனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் டிக்கட் எடுத்துத்தான் அர்ச்சனை செய்யவேண்டும்; டிக்கட்டின் பெறுமதி 1 ரூபா!!! உங்களுக்கு 1000 ரூபாக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என்றால் வரிசையில் நின்று 1000 ஒரு ரூபாய் டிக்கட்டுகளை வாங்கித்தான் செய்யமுடியும்; இதுதான் நல்லூருக்கும் ஏனைய கோவில்களுக்குமான மிகப்பெரும் வேறுபாடு!!! இவை தவிர்த்து கோவிலின் தூய்மை எப்போதும் பேணப்படுவதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய மிக முக்கியமானவிடயம்!!


ஒவ்வொரு வருடமும் ஆடி/ஆவணி மாதங்களில் 25 நாட்கள் திருவிழாவாக நடத்தப்படுகின்றது!!! முதல்நாள் கொடி ஏற்றத்துடன் தொடங்கும் திருவிழா 25 ஆம் நாள் மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தாலும் மறுநாள் நிகழும் பூங்காவனத் திருவிழாவுக்கும் மக்கள் கூட்டம் அலைமோதும்!!! யாழ் குடாநாட்டு இந்துக்களில் குறிப்படத்தக்களவு மக்கள் 25 நாட்களும் விரதம் இருப்பவர்கள், பலர் தினத்துக்கு தினம் (கொடியேற்றம், மஞ்சம், கார்த்திகை, தேர், தீர்த்தம்) விரதம் இருப்பவர்கள், கிட்டத்தட்ட 90 % க்கும் அதிகமான இந்துக்கள் மாமிச உணவுகளை இந்த 25 நாட்களுக்கும் உண்ணமாட்டார்கள்!! இவை தவிர்த்து பெரும்பாலான இளைஞர்கள் (முதியவர்கள் கூட) தினமும் கோவிலின் வெளிவீதியை சுற்றி (கிட்டத்தட்ட 500 மீட்டர்கள்) அங்க பிரதட்சணம் செய்வார்கள்!!! முதல் நாட்களில் தலை சுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் பின் நாட்க்களில் சர்வசாதாரணமாக சுற்றி வருவார்கள்; ஒவ்வொரு திருவிழா முடியும்போதும் இவர்களில் அதிகமானவர்கள் 10 kg வரை குறைந்திருப்பார்கள்!!!

ஆரம்ப நாட்களில் அமைதியாக அளவான மக்கள் எண்ணிக்கையில் நடந்துகொண்டிருக்கும் திருவிழா 17,18 ஆம் திருவிழாக்களின் பின்னர் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்!!! மக்கள் கூட்டம் இறுதி நாட்களை நெருங்க நெருங்க அலைமோத தொடங்கும்!!! இறுதிநாளான 25 ஆம் நாள் தீர்த்த திருவிழா நல்லூரின் மிகவும் பிரசித்தமான திருவிழாக்களில் ஒன்று!!! அன்று வரும் காவடிகளின் கண்கொள்ளாக் காட்சியை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது!!! பால்க்காவடி, பறவைக்காவடி, செடில்காவடி, தூக்குக்காவடி என வகைவகையான காவடிகளின் நேர்த்திகள் வியக்கவைக்கும்!!! வயது வேறுபாடின்றி காவடி ஆடுபவர்கள் தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றிக்கொண்டு இருப்பார்கள்!!! கூட்டம் கூட்டமாக மேளதாளங்களுடன் வரும் நூற்றுக்கணக்கான காவடிகள் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்!!!

இறுதி 10 நாட்களுக்கும் மாலை நேரங்களில் இளசுகளின் படையெடுப்பு அதிகமாக இருக்கும்; முருகனை கும்பிட ஒரு பக்தர்கூட்டம் என்றால்; அலங்கார பதுமைகளான பெண்களை சைட் அடிக்க ஒரு கூட்டமும் அலைமோதும்; இவர்கள் திருவிழா முடிந்த பிற்பாடு நான்கு வீதிகளிலும் மணல்மேல் உட்கார்ந்து கடலை சாப்பிட்டுக்கொண்டே கடலைபோடும் அழகு தனி!! :-)) கோவில் வீதிகளில் ஒழுக்கத்தை பேணுவதற்கு நலன்புரி சங்கம், சாரணர்கள், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையை சேர்ந்தவர்கள் சீருடையில் விறுவிறுப்பாக செயர்ப்படுவதும் அழகாக இருக்கும்!!! காணமால் போன சிறுவர்கள்/பொருட்களை பெற்றோரிடம்/உரியவரிடம் ஒப்படைக்க ஒலிபெருக்கியில் அப்பப்போ ஒலிபரப்புவேறு செய்துகொண்டிருப்பார்கள்!!!


இதனிடையே திருடர்களின் கைவண்ணமும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும்!!! தங்க நகைகளை கோவிலுக்குள் அணிந்து கொண்டு வராதீர்கள் என வீதிவீதியாக ஒலிபெருக்கியில் அறிவுறுத்தியும் பலரும் அதனை பின்பற்றுவதில்லை; தாலிக்கொடிகள், சங்கிலிகள், நெக்லஸ்கள் என ஒரு 100 பவுணாவது திருடர்களால் வருடா வருடம் தேற்றப்படும்!! இறுதி நாட்களில் கோவிலின் வீதிகளில் கடைகளும் குறிப்பாக ice cream, கச்சான் கடைகள் மக்கள் கூட்டத்தால் மாலை நேரங்களில் அலைமோதும்!!! குடும்பம் குடும்பமாக, உறவினர்களுடன், நண்பர்களுடன் சேர்ந்து ice cream குடிப்பது ஒரு தனி சுகம்!!! விளையாட்டு பொருட்கள் விற்பனை கடை நூற்றுக்கணக்கில் காணப்படும்; ஒவ்வொரு கடைகளுக்கும் முன்னாலும் சிறுவர்கள் தாய் தந்தையரிடம் தமக்கு வேண்டிய பொருட்களை கேட்டு அடம்பிடித்து அழுதுகொண்டிருப்பார்கள்!!!

குழந்தைகளாக இருக்கும்போது தமது பெற்றோரிடம் விளையாட்டு பொருள்கேட்டு அழுதவர்களது குழந்தைகள் இன்று அவர்களிடம் விளையாட்டுப் பொருள் கேட்டு அழுகின்றபோது காலத்தின் வேகத்தையும் அனுபவத்தையும் உணரமுடிகின்றது!!! ஆனாலும் இது ஒரு சுகமான, எண்ணிப்பார்க்கையில் மகிழ்வான அனுபவம் என்பதையும் மறுக்க முடியாது!!! 25 நாட்களும் அனைத்து அன்னதான மடங்களிலும் அன்னதானம் வழங்கப்படும்; அங்கு சபை வைக்கும் இளைஞர்களின் சுறுசுறுப்பும், முண்டியடிக்கும் பக்தர்கள் கூட்டமும் என அந்த இடமே மதிய நேரங்களில் கலகலப்பாக இருக்கும்!!! என்னதான் வீட்டில் பல கறிகளுடன் சமைத்து சாப்பிட்டாலும் கோவில் அன்னதான சாப்பாட்டில் இருக்கும் சுவை தனித்துவமானது என்பதை அதிகமானவர்கள் அனுபவித்திருப்பார்கள்!!!

எனக்கும் நல்லூருக்குமான தொடர்பு எனக்கு 5 வயதாக இருக்கும்போது ஆரம்பித்தது!!! எனக்கு 5 வயதாக இருக்கும்போது வீட்டில் பால்க்காவடி நேர்த்தி வைத்ததனால் அந்த வயதில் இருந்து 20 வயதுவரை பால்க்காவடி எடுத்திருக்கின்றேன்!!! பல வருடங்கள் வேறு இடங்களில் உள்ள கோவில்களில் இருந்து நல்லூரை நோக்கியும், சில வருடங்கள் நல்லூர் கந்த சுவாமி கோவிலில் இருந்தே கோவிலை சுற்றியும் காவடி எடுத்திருக்கின்றேன்!!! அண்ணன்கள்(பெரியம்மா பிள்ளைகள்) அயலவர்கள் என ஒரு 10,15 பேராவது ஒரு குழுவாக செல்வது வழக்கம்!! சிறு வயதில் இருந்து ஆடத்தொடங்கியதால் எனக்கு ஆடுவது சுலபமாகவும், விருப்பமாகவும் இருக்கும் :-)) என் நண்பர்கள் 20 வயதிலும் பால்காவடி எடுப்பதாக கிண்டல் பண்ணத் தொடங்கியதுதான் நான் 20 வயதில் காவடி எடுக்கும் நேர்த்தியை நிறுத்த காரணமாக அமைந்தது!!


20 வயதில் குறைந்தபட்சம் முதுகில் முள்ளுக்குத்தி செடில்காவடியாவது எடுப்பார்கள்; எனக்கு அந்த துணிவில்லை என்பதால் நிறுத்திவிட்டேன்!!! ஆனால் இப்போதும் மேளச்சத்தத்துடன் அடுத்தவர்கள் காவடி ஆடுவதை பார்க்கும்போதெல்லாம் ஆடணும்ன்னு தோணும்!! (ஆடின காலும் பாடின வாயும்..... :P) வெளிநாட்டு இடைவெளி, உறவில் இடைவெளி போன்ற காரணங்களெல்லாம் நீங்கி மீண்டும் அனைவரும் ஒருநாள் ஒருமித்து யாழில் நல்லூர் உற்சவகாலத்தில் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் அந்த திருவிழாவில் மீண்டும் ஒன்றாக சேர்ந்து காவடி எடுப்பது என ஒரு எண்ணம்!!!! (கண்டிப்பாக பால்க்காவடிதான்:p) என்று காவடியை நிறுத்தினேனோ அன்றிலிருந்து எனக்கும் நல்லூர் முருகனுக்குமான இடைவெளி அதிகரிக்க ஆரம்பித்தது; அந்த இடைவெளி இறுதி 6 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழாக்காலங்களில் கோவிலுக்கு உள்ளே நான் செல்லாத அளவுக்கு அதிகரித்தது ஆச்சரியம்!!!

கடந்த மாதம் நான் கோவிலுக்கு உள்ளே சாதரணமான நாள் ஒன்றில் செல்லும்வரை எனது நல்லூர் முருகனின் நேரடி தரிசனத்தின் இடைவெளி 6 வருடங்களுக்கு மேல்!!! கடந்த ஆண்டுகூட ஒருநாளாவது திருவிழா நாட்க்களில் பூஜை நேரங்களில் கோவிலுக்குள் செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன்; முழுக்க முழுக்க நேரமிருந்து அது சாத்தியப்படாமல்போக என்னகாரணம் என்று புரியவில்லை!!! அதேநேரம் மாலையில் தினமும் கோவில் வீதியில் நண்பர்களுடன் நேரத்தை பொழுதுபோக்காக போக்கியது குறிப்பிடத்தக்கது!!! 15 நாட்கள் கடந்த பின்னர்தான் கோவில் வீதிகள் களைகட்டும் என்பதால் இம்முறையும் மாலைநேரங்களில் (7 மணிக்கு பின்னர்) 15 நாட்களின் பின்னர் எம்மை சந்திப்பவர்கள் சந்திக்கலாம் :-))) இந்த ஆண்டு நிச்சயம் கோவிலுக்குள்ளே திருவிழா காலத்தில் செல்லவேண்டும்!!!!



என்னை பொறுத்தவரை நல்லூர் திருவிழா என்பது ஒரு கோவில் திருவிழா என்பதையும் தாண்டி ஒரு சிறப்பான மகிழ்வான அனுபவம்!!! மனதில் துன்பங்கள், வேதனைகள், வேண்டுதல்களோடு பக்திப்பரவசத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் திளைக்க; அரோகரா ஓசைகளும், கற்பூர வாசனையும், நாதஸ்வர, தவில் இன்னிசைகளும் மனதை லயிக்கவைக்கும் சூழல் அது!!! இளசுகளுக்கோ பக்தியையும் தாண்டி மனதுக்கு பிடித்த வண்ணமயமான காட்சிகள் :-) கோவிலை அண்டிய சூழல் முழுவதும் விறுவிறுப்பு, பரபரப்பு, ஆச்சாரம் ஆக ஒருவித சுகந்தமான உணர்வு!!! ஆங்காங்கே கோவில்களிலும், கோவிலை அண்டிய வீதிகளும் தண்ணீர்ப்பந்தல்; உறவுகள், நண்பர்கள், என ஒருமித்து ஒன்று சேரும் ஒரு ஒன்றுகூடல் மகிழ்ச்சி; இப்படி நிறையவே சொல்லிக்கொண்டு போகலாம்!!

குறிப்பாக மதுபான சாலைகளுக்கு விடுமுறை கொடுக்கும் இளைஞர்கள்!! இந்த 25 நாட்களில் உடலுக்கு மதுவையும், புகையும் செலுத்துவதில்லை!! {25 நாள் முடிந்து 26 ஆம் நாள் அனைத்து யாழ்நகர மதுபானசாலைகளிலும் நல்லூரில் இருந்ததை விட கூட்டம் அதிகம் என்பது தனிக்கதை :-))} டீ.ஆர் பாணியில் சொல்வதானால் 25 நாட்களுக்கும்; சுற்றிலும் அடியார் படை, தினமும் அன்னதான மடை, வாகன போக்கு வரத்து தடை, வீதிகளின் ஓரங்களில் கடை, நாகரிகமான உடை, அலங்கரிக்கப்பட்ட சடை, தேநீர்க்கடைகளில் சுடசுட வடை, யாராக இருப்பினும் கால் நடை, அசைவத்திற்கும் மதுவுக்கும் விடை!!!