Wednesday, January 18, 2012

"விரும்பிய துறையை தேர்ந்தெடுத்துக்கோ" வாழ்க்கைக்கு சரிவருமா?





இங்கிலீஸ்காரன், Taare Zameen Par, 3 Idiots, நண்பன் திரைப்படங்களில் சொல்லப்பட்ட; இன்றைய இளைஞர்களால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துத்தான் "விரும்பிய துறையை தேர்ந்தேடுத்துக்கோ". பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எந்ததுறை பிடிக்கிறதோ!! அதே துறையில் அவர்களது திறமையை வளர்க்க முன்வரவேண்டும் என்கின்றதுதான் இதன் சாரம். திரைப்படங்கள் மட்டுமல்ல சமூகத்திலும் இந்த விடயம் சம்பந்தமான பேச்சுக்கள், ஆலோசனைகள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கேட்ப்பதற்க்கும், ரசிப்பதற்கும் இந்த விடயம் நன்றாகத்தான் இருக்கின்றது; ஆனால் நடைமுறை வாழ்வில் சாத்தியமா என்பதில்த்தான் எனக்கு நிறைய சந்தேகங்கள்!!! மேற்குறிப்பிட்ட திரைப்படங்களை குறைசொல்வதோ, அந்த திரைப்படங்களில் சொல்லப்பட்ட மையக்கருவை குறை சொல்வதோ என் நோக்கமல்ல; அந்த கருத்தில் எனக்கு சில சந்தேகங்களும், உடன்பாடில்லாத நிலையும் உள்ளது; அதை தெளிவு படுத்தவே இந்த பதிவு!!!

ஒரு இளைஞனுக்கு, யுவதிக்கு அல்லது சிறுவர்களுக்கு தங்களுக்கு பிடித்த துறை எது என்பது எந்த வயதில் புலப்படும்? 15, 16 வயதுவரை பெரும்பாலும் அனைவருக்கும் கல்வி என்பது ஒன்றுதான். இந்த வயதுக்குட்ப்பட்ட காலப்பகுதியில் கல்வி தவிர்த்து வேறு துறைகளில் தமது எதிர்கால துறையை தேர்ந்தெடுக்க சிந்திப்பவர்கள் விளையாட்டு, கலை, தொழில்நுட்ப்பம், வியாபாரம் மற்றும் பரம்பரை சார்ந்த தொழில் போன்றவற்றில்த்தான் பெரும்பாலும் ஈடுபாட்டுடன் காணப்படுவார்கள்.

இதில் தொழில்நுட்ப்பம் என்று குறிப்பிடுவது மின்சாரம், மோட்டார்கள், வாகனங்கள் போன்றவற்றினை கையாளும் மற்றும் திருத்தம் திறன் படைத்தவர்களைத்தான். இவர்களில் தொழில்நுட்பம், வியாபாரம் மற்றும் பரம்பரை சார்ந்த தொழில்களில் ஈடுபாடு உடையவர்களுக்கு தாம் விரும்பினால் தமக்கு விருப்பமான துறையை 15,16 வயதுகளில் தேர்ந்தெடுப்பதில் பெரியளவில் பாதிப்புக்கள் இல்லை!!! இவர்களில் அதிகமானவர்கள் வாழ்க்கையில் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள்!!! அனாலும் கல்வியை இடை நிறுத்தியதற்கு எப்போதாவது வருந்தவும் செய்வார்கள்!!



அதே நேரம் இந்த வயதில் விளையாட்டுத்துறை மற்றும் கலைத்துறையில் ஈடுபாடுடையவர்கள் கல்வியை நிறுத்திவிட்டு மேற்ப்படி துறைகளை தேர்ந்தெடுத்து தமது எதிர்காலத்தை நிர்ணயிப்பது சரியான முடிவா என்றால்; என்னை பொறுத்தவரை இல்லையென்றே தோன்றுகிறது!!! சச்சின் டெண்டுல்க்கர், லதா மங்கேஷ்கர், ஏ.ஆர்.ரஹுமான் எல்லோருமே சாதனையாளர்கள்தான், மறுக்கவில்லை; அதே நேரம் இதுதான் எனது கேரியர் என்று படிப்பை நிறுத்திவிட்டு விளையாட்டிலும் சினிமாவிலும் வாழ்வை தேடி காணாமல்போன பல ஏ.ஆர்.ரஹுமான்களும், சச்சின் டெண்டுல்க்கர்களும் எமது கண்ணுக்கு தெரிவதில்லை; எண்ணிக்கையில் மிக மிக அதிகமாய்!!! "வெற்றிகளுக்கு அதிக பெற்றோர்கள், தோல்விகள் அநாதை" என்கின்ற பழமொழியை மெய்ப்பிப்பதுபோல நாம் வென்றவர்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்கின்றோம், தோற்றவர்களை பொருட்படுத்துவதில்லை!!

நீங்கள் கேட்க்கலாம் உங்களுக்கு நேர்மறையான எண்ணம் இல்லையா என்று; நேர்மறையாக சிந்தித்தால் மட்டுமே வாழ்வில் ஜெயிக்க முடியாது, எதையும் நடைமுறையில் சிந்திப்பது அவசியம்!!! கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும் இன்னும் சில கவிஞர்களும் எமக்கு வெற்றியாளர்கள்; அதேநேரம் கவிதையே வாழ்க்கை என்று வாய்ப்பில்லாமல் திரும்பியவர்கள் ஏராளம்!!! கவிதை மட்டுமல்ல பாடகன், இயக்குனர், போட்டோகிராபி, டான்ஸ் என எமக்கு தெரிந்த வெற்றியாளர்களைவிட தோல்வியாளர்களே அதிகம். அப்படியானால் விளையாட்டு, கலை துறைகளில் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடாதா? என நீங்கள கேட்க்கலாம்; நிச்சயமாக உங்களுக்கு பிடித்த துறையில் நீங்கள் முயற்சி செய்யலாம், கூடவே கல்வியுடன்!!!

அதாவது பிடித்த துறையில் முயற்சி செய்யும் அதே நேரம் கல்வியையும் நிச்சயம் சம அளவி முக்கியத்துவப் படுத்தல் வேண்டும்; குறிப்பிட்ட துறையில் முதற்படி வைக்கும் வரையாவது குறைந்தது கல்வியை தொடர வேண்டும். சச்சினை முன்மாதிரியாக பார்ப்பவர்கள்; சச்சினைவிட டிராவிட்டை முன்மாதிரியாக பார்ப்பது சிறந்தது. டிராவிட் ஒரு பட்டதாரி, ஒருவேளை கிரிக்கட் அவருக்கு கைகொடுக்காவிட்டால் அவருக்கு கேரியருக்கு அவருடைய டிகிரி உதவியிருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடகராகியிருக்காவிட்டால் அவர் ஒரு பொறியியலாளராக வேலை பார்த்திருப்பார். என்னதான் விடாது முயற்ச்சித்தாலும் முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியளிப்பதில்லை; ஒரு துறையில் கடின முயற்சி வெற்றியளிக்காதபோது கைகளில் ஒரு டிகிரி இருந்தால்; கல்வி துணை இருக்கின்றது என்கின்ற நம்பிக்கையாவது மீதமிருக்கும்!!!!



இங்கே கல்வி தவிர்த்து வேறொரு துறை பிடிக்கின்றதென்றால் அது அநேகருக்கு பொழுதுபோக்கு சார்ந்தோ, கல்விமீதிருக்கும் பிடிப்பின்மை சார்ந்தோதான் பிடிக்க காரணமாக அமைகின்றது. இப்படியானவர்கள் குறிப்பிட்ட துறைகளில் இலக்கை அடைவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!! காரணம் இந்த துறைகளில் போட்டி மிகமிக அதிகம். இப்படி எதையும் சாராமல் உண்மையான திறமையுடன், கடின உழைப்பை கொடுத்தவர்களுக்கே இந்த துறைகளில் இலக்கை அடைவதற்கு சவால்கள் அதிகம்!! இந்த துறைகளில் முயற்ச்சிப்பவர்கள் மேலே சொன்னதுபோல கையில் துணைக்கு கல்வியாலான தகமையை வைத்திருத்தல் அவசியம்!!!

சரி இப்போது கல்வி சார்ந்த துறைகளிலேயே பிடித்ததை தேர்ந்தெடுப்பதை பற்றி ஆராய்வோம்; 16 வயதில் கிட்டத்தட்ட எமக்கு எந்த துறை சரிவரும் என்பது ஓரளவுக்கு எமக்கு தெரிந்திருக்கும். கணிதமா, விஞ்ஞானமா, வணிகமா, கலையா, தொழில் நுட்பமா தங்களுக்கு வரும் என்பது பலருக்கும் இந்த வயதில் தெரிந்திருக்கும். ஆனாலும் சிறுவயது கனவு ஒன்று சமூகத்தால், பெற்றோரால் விதைக்கப்பட்டிருக்கும்; இதனால் தனக்கு விஞ்ஞானம் சரிவராது என்று தெரிந்தும், டாக்டராகும் விருப்பத்தில் கடும் முயற்சி எடுத்தும்கூட தோற்றுப்போன பலர் இருக்கின்றார்கள்!!! அதே நேரம் நண்பன் படிக்கின்றான் என்பதற்காக தனக்கு சரிவராத துறையை விரும்பி தேர்ந்தெடுத்தவர்களும் இருக்கின்றார்கள்; அதே நேரம் பெற்றோரால் பலவந்தமாக ஒரு துறையில் தள்ளி விடப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். இவற்றை எல்லாம் கடந்து சரியான முடிவை எடுப்பவர்களும் இருக்கின்றார்கள், எண்ணிக்கையில் குறைவாய்!!!

பெற்றோர்கள் பலர் தங்கள் விருப்பத்தை திணிக்கின்றார்கள் (சில பெற்றோர் பிள்ளைகளை புரிந்து சரியான முடிவை எடுப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்); மாணவர்கள் பலருக்கோ சொந்தமாக, சரியான முடிவெடுக்கும் வயதும் அனுபவமும் இல்லை; அப்படியானால் எப்படி துறையை சரிவர தேர்ந்தெடுப்பது? இந்த விடயத்தை சரியாக தீர்மானிப்பதற்கு நாடவேண்டிய முக்கிய நபர்கள் ஆசிரியர்கள். ஒரு மாணவனின் பிளஸ், மைனஸ் நன்கறிந்தவர்கள் அவர்கள்தான். மாணவனின் விருப்புக்கு அமைவான துறையை அவனால் தொடரமுடியுமா என்பதை ஆசிரியர் துணைக்கொண்டு அறிந்து, ஆமென்றால் அந்த துறையிலும், அந்த துறை சரியாக வராதென்றால் மாற்றுத் துறையையும் (மாணவனுக்கு புரியும்படி , விரும்பும்படி எடுத்துக் கூறி) தேர்ந்தெடுத்து கொடுப்பது பெற்றோர்களின் கடமை. அதாவது பிடித்த துறையை மாணவன் தேர்ந்தெடுப்பதிலும் சரியான துறையை தேர்ந்தெடுப்பதுதான் சால சிறந்தது!!!!

சிலருக்கு குறிப்பிட்ட வயதில் படிப்பு சுத்தமாக எடுபடவில்லை என்றால் அவர்களை மேலும் படிக்கத் தூண்டுவதில் பயனேதுமில்லை, காலமும், பணமும்தான் விரயம்!!! இவர்களுக்கு தொழில் முயற்சி ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். இவர்களில் அதிகமானவர்களுக்கு தமது எதிர்காலம் பற்றிய எந்த திட்டமும் இருக்காது, பணம் படைத்த குடும்பத்தை சார்ந்த இந்த வகையினர் சொந்த தொழில் அல்லது வெளிநாடு சென்று பிழைத்துக் கொள்வார்கள்; பணமில்லாமல் இந்த வகையில் சிக்கிக்கொள்ளும் பல இளைஞர்கள் மற்றும் யுவதிகள்தான் பாவம், பல முதலாளிகளுக்காக தம் வாழ்வை தொலைத்து தினமும் 10, 12 மணித்தியாலங்களுக்குமேல் குறைந்த சம்பளத்தில் அடிமாடுகள்போல உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!!!! இவர்களுக்கு என்ன வழி என்பதுதான் புரியவில்லை!!!!!



அடுத்து சிலருக்கு பிடித்த துறை என்பது அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும்; சிலருக்கு பிடித்த துறை சம்பந்தமாக எந்தவித ஐடியாக்களுமே இல்லாமல் இருக்கும். சிலருக்கு சில துறைமீது அதிக ஈடுபாடிருக்கும், ஆனால் அதை அடைவது, எட்டுவது எட்டாக்கனியாக இருக்கும். எப்படி பார்த்தாலும் பிடித்த துறையினை சரியாக தேர்ந்தெடுத்து, அதில் பயணித்து வெற்றியடைந்தவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக மிக குறைவே!!! அதே நேரம் கிடைத்த துறையை பிடித்த துறையாக மாற்றி அதில் வெற்றி அடைந்தவர்கள் ஒப்பீட்டளவில் மிக மிக அதிகம்!!! பிடித்த துறையில் முயற்சி செய்வது தவறல்ல; அது அமையாவிட்டால் வேறு துறைகளிலும் செயற்ப்பட முடியும் என்கின்ற நம்பிக்கையும், தகுதியும் அவசியம், அதற்க்கு கல்வி அவசியம்!

இன்றைக்கு படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல் எத்தனை பேர் இருக்கின்றார்கள்!!! ஒரு இலக்கை முன் வைத்துத்தான் எல்லோருமே ஒரு துறையில் கற்கின்றார்கள், ஆனால் அந்த துறையிலேயே எதிர்பார்த்த வெற்றியை பெற்று கற்கை சார்ந்த வேலை செய்பவர்களைவிட; இலக்கை அடையாமலும், இலக்கை அடைந்தும் சிலபல காரணங்களுக்காக வேறு துறையில் வேலை செய்பவர்களே அதிகம்!!! இவர்களும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றார்கள். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய விடயம் பிடித்த துறை அமையாவிட்டால்கூட பரவாயில்லை; பிடிக்காத துறையை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது!!!! அது வாழ்வின் நின்மதியை குலைத்துவிடும்!!!!

"பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக்கோ" என்பதிலும் பார்க்க; "உனக்கு தகுதியான(Capacity) சரியான துறையை தேர்ந்தெடுத்துகோ; இல்லையா கிடைத்த துறையை பிடித்த துறையாக மாற்றிக்கோ; முடிந்தவரை பிடிக்காத துறையை தவிர்க்கப்பார்" என்பதித்தான் எனக்கு உடன்பாடு!!!

குறிப்பு 1 - பதிவிலே கல்வி முக்கியம் என்று பல தடவை குறிப்பிட காரணம்; இன்றைய வாழ்க்கை கல்வியை பின்னியே காணப்படுகின்றது. மற்றும் எமது கல்வி முறையில் (Education System) உள்ள தவறுகள், மற்றும் குறைபாடுகள் சம்பந்தமாக குறிப்பட்ட திரைப்படங்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள் இங்கு பதிவில் எடுத்துக்கொள்ளப் படவில்லை.

குறிப்பு 2 - இந்தப்பதிவுக்கான கருபொருளுக்கு சொந்தக்காரர் எனது தம்பிதான்; நாங்க ரெண்டு பெரும் பேசும்போது ஒரு விஷயம் புரிந்தது; இன்றைக்கு வரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் இதுதான் எங்கள் துறை என்று ஒரு இலக்கும் நிலையாக இருக்கவே இல்லை; இது எங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தானா இல்லை மத்தவங்களுக்குமா என்கிறதை செக் பண்ணி பாத்ததில; பலபேரு நம்ம லிஸ்டில இருக்கிறாங்க :-)) எனக்கு அப்பப்ப பிடித்த துறை மாறிக்கிட்டே இருந்திருக்கு; நிலையாக எதுவுமே இருந்ததில்லை, அப்படி அப்பப்போ பிடித்த துறைகளில் ஒரு சிலவற்றை நான் முயற்ச்சித்திருந்தால் 99 சதவிகதம் நான் தோல்வியடைந்தவனாகத்தான் இருந்திருப்பேன் என்பது இப்போது எனக்கு புரிகிறது!!!! (முயற்ச்சிக்காமலும் அதே நிலைமைதான்; அது வேறு சொந்தக்கதை :p)

இந்த விடயத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், இது என் சொந்தக்கருத்து; உங்கள் எண்ணம், கருத்துக்கள் வேறுபடலாம்!!!!! அதை நீங்கள் தாரளமாக பகிரலாம்!!!

Tuesday, January 17, 2012

நண்பன் - எனது பார்வையில்





பலபேரும் விமர்சனம் (?), தங்கள் பார்வை எல்லாம் எழுதி முடித்து விட்டார்கள்; இந்நிலையில் எனது பார்வையில் நண்பனை எழுதணுமான்னு யோசித்தேன்!! கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்னமே எந்தப்படத்துக்குமே நெகட்டிவ் ரிவியூ எழுதிறதில்லை என்கிற முடிவை எடுத்திருப்பதால் இதுவரை எந்த விஜய் படத்திற்கும் எனது பார்வையை எழுதவில்லை :p (காவலன் திரையங்கில் பார்க்கவில்லை) இந்தத்தடவை எழுதாவிட்டால் மீண்டும் எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமென்று சொல்ல முடியாது!! :p எனவே இந்த தடவை எழுதலாமென்று எழுதுகிறேன்; முடிந்தவரை பக்கச்சார்பில்லாமல்!!!

3 இடியட்ஸ் - எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலானவர்களுக்கும் மிகவும் பிடித்த திரைப்படம் என்பதில் யாருக்கும் எதிர்க்கருத்து இருக்காது என்று நம்புகின்றேன்!!!! 3 இடியட்ஸ்சில் ஒரு மாஸ் ஹீரோவுக்குரிய அடையாளங்களான பஞ்சு டயலாக்குகள், சண்டைக்காட்சிகள், ஓவர் பில்டப்புகள் எதுவுமே இல்லை; ஆனால் இவை எதுவும் இல்லாமலேயே அமீர்கான் கேரக்டருக்குள் ஒருவித 'மாஸ்' இருக்கும் (Taare Zameen Par இல் கூடத்தான்); அது மட்டுமல்லாமல் ஒருவித துரு துருப்பான, அப்பாவித்தனமான செய்கையும் உள்வாங்கப்பட்டிருக்கும்!!! அமீர்க்கான் தவிர்த்து வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேரக்டர் அது; இன்னும் சொல்லப்போனால் அமீர்க்கானுக்காகவே உருவாக்கப்பட்ட கேரக்டர் அது!!!! அந்த கேரக்டரை தமிழில் சுமப்பதற்கு........

விஜய் - ஆமாங்க; விஜய் தவிர்த்து 'பாரி' கேரக்டருக்கு சத்தியமா எனக்கு வேற சொய்ஸ் தெரியலைங்க; சூர்யா நடிக்கப் போறதா முதல்ல பேசிக்கிட்டாங்க; என்னை பொறுத்தவரைக்கும் சூர்யா இல்லை பாரி கேரக்டருக்கு தெற்க்கில யார் நடித்திருந்தாலும் விஜய் கொடுத்த வெளிப்பாட்டில் பாதிகூட தேறியிருக்குமா என்கிறது சந்தேகம்தான்!!! அதற்காக விஜய் அமீர்க்கானை ஓவர் டேக் செய்துவிட்டதாகவோ ஈடுகொடுத்து நடித்ததாகவோ அர்த்தமல்ல; தன்னாலான அதிகபட்ச்சத்தை நிறைவாக ஓவர் ஆக்ட் செய்யாமல் கொடுத்திருக்கிறார்; மற்றும் விஜய் தன்னை அமீர்க்கானோடு ஒப்பிட வேண்டாம் என்று சொன்ன பிற்ப்பாடு ஒப்பிடுவதும் அழகல்ல; அதற்க்கான தேவையும் இல்லை!!!!! சந்தேகமே இல்லாமல் நண்பனின் முதல்வன் விஜய்தான்.



ஜீவா - தனுஷ், சிம்பு கூட எந்த விதத்திலும் சளைக்காமல் போட்டிபோடக்கூடிய இளம் நடிகர்களில் ஜீவா முக்கியமானவர்; ஆகா ஓகோன்னு சொல்றமாதி இல்லையின்னாலும் குடுத்ததை திருப்தியாக ஓவர் ஆக்ட் செய்யாமல் நடித்திருக்கிறார். ஜீவாவிற்கு பலமான அவரது வசன உச்சரிப்பும், முகபாவமும் நண்பனுக்கும் ஜீவாவுக்கும் பலம்!!!

ஸ்ரீகாந்த் - சப்பிறைஸ் பக்கேஜ்; மாதவன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட ஈடாக மாட்டார் என்கின்ற எனதெண்ணத்தை தவிடுபொடியாகியவர்!!! எனக்கு மாதவன் கேரக்டருக்கும் ஸ்ரீகாந்த் கேரக்டருக்கும் பெரிதாக வேறுபாடு தெரியல!!!! பார்ப்பதற்கு மாதவனைவிட பிரெஷாக வேறு இருக்கிறார்!!!! முகபாவங்களில் இயல்பாகவும், விஜய்க்கும் ஜீவாவுக்கும் ஈடுகொடுத்தும் சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இனிமேலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் இதுபோன்ற நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்தால் அவருக்கும், தமிழ் சினிமாவிற்கும் நல்லது!!!!


இலியானா - இடுப்புக்காக மட்டுமே ஹீரோயினை தேர்ந்தெடுத்த மாதிரி இருக்கு!!! தமிழ் ரசிகர்களுக்கு எப்பவுமே கொஞ்சம் சதை போட்டாத்தான் பிடிக்கும் என்கிறது உண்மைதான்; அதே நேரம் 'சிலிம்மான' சிம்ரனையும் கொண்டாடியவங்க நம்மாளுகதான்:p இலியானாவை சிலிம் என்று கூட சொல்ல முடியாது; அநியாயத்திற்கு எழும்பும் தோலுமாக இருக்கின்றார்!!! எலும்பெல்லாம் திரையை விட்டு வெளிய வருற மாதிரியே இருக்கு; தெலுங்கு ரசிகர்களை புரிஞ்சிக்கவே முடியலைப்பா!!!! அப்புறம் இலியானா நடிப்பு? நண்பனுக்கும் 3 இடியட்சுக்குமான மிகப்பெரும் இடைவெளி!!! அழகான முகம் இருந்தா மட்டும் போதுமா? கொஞ்சூண்டாவது எக்ஸ்பிரஷன்!!! ம்ம்ம்ஹீம்....



சத்யன் & சத்யராஜ்; சத்யன் - கேரக்டரை எல்லோரும் புகழ்ந்து தள்ளீட்டாங்க; நிச்சயம் சத்யனுக்கு இது ஒரு திருப்புமுனைதான்; அருமையான தெரிவு!!! காமடி காட்சிகளில் மட்டுமல்ல கோபப்படும்போதும் சத்யன் ஆச்சரியப்பட வைத்தார்!!!! சத்யராஜ் - எனது எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை; அக்மார்க் ஓவர் ஆக்டிங்!!! 'வைரஸ்' கேரக்டில் பூமி இராணியுடன் மிகப்பெரும் முரண்!!! பல இடங்களில் 'வைரஸ்' கேரக்டரில் இருந்து அமைதிப்படை சத்யராஜ் கிளம்புகிறார். ஆனாலும் 3 இடியட்ஸ் பார்க்காதவர்களை சத்யராஜ் கவருவார் என்று நம்பலாம்!!!

ஹாரிஸ் ஜெயராஜ் - பாடல்கள் அளவிற்கு பின்னணி இசை கவரவில்லை; உயிர்ப்பான, சென்டிமென்ட், விறுவிறு காட்சிகளுக்கு ஹாரிஸின் பின்னணியில் உயிர் இல்லை, ஷங்கர் கூடவா கவனிக்கவில்லை!!! ஆனாலும் பாடல்களில் ஹாரிஸ் கலக்கியிருப்பதை பாராட்டியே தீரவேண்டும்!! ஆட்டைய போட்டாலும், ரசிகர்களின் பல்ஸை புரிந்து வைத்திருக்கும் இசையமைப்பாளர்களில் ஹாரிஸ் நம்பர் 1 தான்.

மனோஜ் பரமஹம்சா - "என்னையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்? கொஞ்சம் கூட தெளிவில்லை"; நான் பார்த்த திரையரங்கின் திரையை வைத்து சொல்வதானால் இப்படித்தான் சொல்லவேண்டும் :-) மூணு மாசம் தோய்க்காத வேட்டியை கட்டிவிட்ட மாதிரியே இருந்திச்சு!!! வாங்கிற காசுக்கு கொஞ்சமாவது நல்ல திரையில போடலாமே!!!! ஒரிஜினல் DVD யில்த்தான் முழுமையான ஒளிப்பதிவை ரசிக்கமுடியும்; இருப்பினும் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.

ஆண்டனி - இந்த திரைப்படத்தில் குறைவான வேலை இவருக்குத்தான்; எதை எங்க கட் பண்ணி எப்படி சொருகணும் என்கின்ற ஒரு டென்ஷனும் இல்லை; இருக்கிற படத்தில 2 பாடல்களை சேர்த்தது தவிர ஆங்காங்கே சிறு சிறு கிராபிஸ்க் வேலைகள்தான்; ஷங்கர் படத்தில் இவளவு சுலபமாக இதற்கு முன்னர் ஆண்டனி வேலை செய்திருக்க மாட்டார் !!


மதன் கார்க்கி -
வசனங்கள் பளிச் பளிச் என்று இருக்கின்றன; 3 இடியட்சில இருந்து எனக்கு புதுசா தெரிஞ்ச ஒரே விடயம் வசனங்கள்தான் (ஏன்னா அங்கதான் வசனம் புரியாதே!!); கார்க்கி பல இடங்கள்ள முத்திரை பதித்திருக்கின்றார். விண்வெளியில் பென்சில் பாவிக்கமுடியாத காரணத்தை சொன்ன விதம், அதிகமானவர்கள் குறிப்பிட்ட ஆம்பிலன்ஸ் & பீசா வசனம் என்பன சிறப்பான சில உதாரணங்கள்; குறிப்பாக "அவனா நீ" பக்கா :-) பாடல்கள் தவிர்த்து திரைக்கதை, வசனம் என தனது ஆளுமையை கார்க்கி வளர்த்துக்கொள்ள ஷங்கர் பக்கபலமாக இருப்பது வைரமுத்துவுக்ககத்தான் என்றாலும் கார்க்கி அவற்றிற்கு தகுதியானவர்தான்!!!



ஷங்கர் - ரசிகர்களின் பல்ஸ் அறிந்த ஒரே (ஆமாங்க ஒரே தான்) இயக்குனர். ஆனால் ஷங்கர் நண்பனில் காணாமல் போயிருந்தார் என்பதுதான் உண்மை!! படத்தை அச்சாரம் மாறாமல் மாற்றி அமைத்ததற்காக சொல்லவில்லை; எந்த புதுமையையும் இந்த கதையில் புகுத்த முடியாது, அப்படி புகுத்தியிருந்தால் படம் வேறுமாதிரி ஆகியிருக்கு அபாயம் உண்டு; அந்த வகையில் ஷங்கரை பாராட்டாலாம்!!! அதேநேரம் 60 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் பிரம்மாண்டத்தை நண்பனில் எங்கும் காணவில்லை!!! டிப்பிக்கல் ஷங்கர் பட பாடல்கள் விஷுவலில் மிஸ்ஸிங் மிஸ்ஸிங் மிஸ்ஸிங்!!!! அதிலும் நான் பெரிதும் எதிர்பார்த்த 'அஸ்கு லஸ்கா' பாடல் விஷுவலாக ஏமாற்றம்!!!

ஜெமினி - 3 இடியட்ஸ் திரைப்படத்தை தமிழில் உரிமையை வாங்கி நண்பனாக வெளியிட்டமைக்கு Hats Off. அந்த சின்னப்பசங்களுக்கு ஜட்டியை மறைக்க டிரஸ் வாங்கி குடுக்க சொல்லி நம்ம நண்பர்கள் சிலர் சிபாரிசு செய்தாங்க :-) வேண்டவே வேண்டாம் அவங்களுக்கு அந்த ஜட்டிதான் அழகு :-)))

நண்பன் - தமிழ் ரசிகர்கள் கண்டிப்பா பாக்கணும்! (3 இடியட்ஸ் பாத்தவங்களும் பார்க்கலாம், புது அனுபவம் கிடைக்கும்)

குறிப்பு - நண்பனில் மட்டுமல்ல தற்பொழுது இளைஞர்கள் வட்டத்தில் பொதுவாக சொல்லப்படுகின்ற ஒரு மெசேஜ் - "விரும்பிய துறையை தேர்ந்தேடுத்துக்கோ"; எனக்கு இந்த மெசேஜில் சில சந்தேகங்கள் மற்றும் மாற்றுக் கருத்து உண்டு; அவற்றை நாளை பதிவிடுகிறேன்.

Friday, January 13, 2012

வேட்டை - எனது பார்வையில்





மாலை 6 மணிக்கு கிரிக்கெட் விளையாடி முடிந்த பின்னர் நண்பனுடன் ஒரு வேலையாக Town போகவேண்டி இருந்ததால் அப்படியே ராஜா திரையரங்கில் வேட்டை 14 ஆம் திகதியா இல்லை 15 ஆம் திகதியா ரிலீஸ் என்று கேட்பதற்கு சென்றோம்(15 என்றுதான் முதல் எழுதி வச்சிருந்தாங்க). அங்கு சென்றபோதுதான் 15 நிமிடத்தில் 'வேட்டை' திரையிடப் படப்போவதாக கூறினார்கள். கைகால் கூட கழுவவில்லை; ஓகே, பரவாயில்லை பார்த்துவிடுவோம் என்று உள்ளே சென்றுவிட்டோம்.

UTV க்ரூப்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதேஸ் இணைந்து தயாரிக்க; ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால், தம்பி ராமையா நடிப்பில்; யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க, ராஜீவனின் கலையில், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில், பிருந்தா சாரதி வசனமெழுத, என்.லிங்குசாமி இயக்கிய திரைப்படம்தான் வேட்டை.

முன்னமே பார்த்த பல திரைப்படங்களில் வந்த கட்சிகளின் சாயல், ஓரளவிற்கு ஊகிக்க கூடிய அடுத்துவரும் கட்சிகள், 'ஹீரோகுடும்பத்தை' வில்லன் கிளைமாக்ஸ்வரை கண்டுகொள்ளாமல் வழமைபோல கிளைமாச்சில் கொலைசெய்ய வருவது, அதேபோல ஹீரோவை கிளைமாச்சில் மட்டும்தான் கொல்லவேண்டும் என்பதுபோல திரைப்படத்தின் இடையில் சந்தர்ப்பம் கிடைத்தும் கொல்லாமல் அடித்துவிட்டு மட்டும் போவது, வில்லனால் பாதிக்கப்பட்ட கேரக்டரை வைத்தே வில்லனை கொல்வது; இப்படி இதற்கு முன்னர் வந்த வழமையான கமர்சியல் சினிமாக்களின் வரிசையில்த்தான் 'வேட்டை'யும்...

ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து லிங்குசாமியின் விறுவிறு வேகமான திரைக்கதை 2.30 மணித்தியாலங்களுக்கு திரையரங்கில் கட்டிப்போடுமளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. கதை எல்லோருக்கும் ட்ரெயிலரிலேயே தெரிந்திருக்கும்; சாதாரண கதைதான், அதற்க்கு வேகமான விறுவிறுப்பான திரைக்கதையினை லிங்குசாமி தனது வழமையான ஸ்டையிலில் கலக்கலாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன், காமடி கலவையாக நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே காதல், கல்யாணம், சென்டிமென்ட் தூவப்பட்டுள்ளது. ஒரு மசாலாப்படத்திற்கு திரைக்கதை அமைப்பதில் இயக்குனராக லிங்குசாமி வெற்றி பெற்றுள்ளார்.



ஆர்யா - துரு துரு கேரக்டருக்கு சரியான தேர்வு; இயற்கையிலேயே அமைந்த குரல்தான் என்றாலும் ஆர்யாவின் வசன உச்சரிப்புக்கு அவரது குரல் மிகப்பெரும் பலம்; ஆக்ஷனுக்கும் நகைச்சுவைக்கும் ஆர்யா குரலால் கொடுக்கும் வேறுபாடு சிறப்பு. படம் முழுவதும் ஆர்யாவின் டைமிங் காமடி களை கட்டுகிறது; ஆக்ஷனிலும் பட்டையை கிளப்புகிறார். அடுத்த தலைமுறை நடிகர்கள் அனைவருக்கும் ஆர்யாவால் நிச்சயம் சிறந்த போட்டியை கொடுக்க முடியும்!!!

மாதவன் - முதலில் மாதவனுக்கு Hats Off; மாதவனுக்கு ஆர்யாவைவிட குறைவான வேடம்தான்; ஆனாலும் தன்னைவிட யூனியர் நடிகர் ஆர்யா என்பதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கொடுத்த வேடத்திற்கு சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்த மாதவனை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமல்ல தமிழ்த் திரைப்படங்களிலும் இமேஜ் பார்க்காமல் இணைந்து நடிக்கும் கலாச்சாரம் இப்போது உருவாகி இருப்பது மகிழ்ச்சியே! மாதவனின் முகம் காட்டும் உணர்ச்சிகள் குறையவில்லை, ஆனால் அவரது உடல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை; இந்த திரைப்படத்தை பொறுத்தவரை அவரது கேரக்டர் ரீதியாக ஓகே, ஆனாலும் மாதவன் உடம்பை குறைப்பது அவசியம்!!!

அமலாபால் & சமீராரெட்டி - வழமையான கமர்சியல் பட நாயகிகள்தான்; அமலாபாலுக்கு பாடல்கள் அதிகம் என்பதாலோ என்னமோ சமீராரெட்டிக்கு அமலாபாலை விட சற்று அதிகமான காட்சிகள்; சமீரா உடல் எடையையும் நன்றாக குறைத்திருக்கின்றார், நடிப்பிலும் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்; ஆனாலும் பார்க்கும்போது நோ பீலிங்க்ஸ்; அதேநேரம் அமலாபாலுக்கு பாடல் தவிர்ந்த காட்சிகள் குறைவென்றாலும் பார்ப்பவர்களுக்கு செம பீலிங்க்ஸ்:-)



தம்பி ராமையா கேரக்டர் படத்திற்கு பக்கபலம்; நாம் தமிழ் சினிமாவில் பார்த்த போலிஸ் கேரக்டர்தான் என்றாலும் தம்பி ராமையாவின் நடிப்பு வெளிப்பாடு சிறப்பு; ஒரு காட்சியில் மாதவன் சந்தேகப்படும்போது தம்பி ராமையா கொடுக்கும் அப்பாவித்தனமான பதில் சென்டிமென்ட் & மாஸ். நாசர் போலிஸ் மேலதிகாரியாக மூன்று காட்சிகளில் வந்தாலும் டைமிங் காமடியிலும் முகபாவத்திலும் அசத்துகிறார். வில்லன்கள் 2 பேர் வாறாங்க; அதில் ஒருவர் பக்கா டம்மி; மற்றவரும் கிட்டத்தட்ட அப்படித்தான், ஆனாலும் அவர் ஹீரோக்கு நாலு அடி அடிக்க பெர்மிஷன் வாங்கியிருக்கிறார்; நம்ம கேப்டனுக்கு வில்லன் பொன்னம்பலம் முதல்ல நாலு குடுக்கிற மாதிரி!

யுவன்ஷங்கர்ராஜா இசையில் 'பப்பரப்பா' பாடல் தவிர்த்து ஏனையவை பெரிதாக இம்ப்ரெஸ் செய்யவில்லை; ஆயினும் நீரவ்ஷாவின் கேமராவில் அத்தனை பாடல்களும் கண்ணுக்கு குளிர்ச்சி. 'பப்பரப்பா' பாடலில் இசையும், ஒளிப்பதிவும், நடனமும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. பாடல்களில் வைத்த குறையை யுவன் பின்னணி இசையில் வைக்கவில்லை; ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கு தேவையான பின்னணி இசையை யுவன் பக்காவாக கொடுத்திருக்கிறார். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு சிறப்பாக இல்லை என்றால்த்தான் ஆச்சரியம்!! நீரவ்ஷாவும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஆண்டனியின் படத்தொகுப்பு, ராஜீவனின் கலை, பிருந்தா மற்றும் ராஜ சுந்தரத்தின் நடனம், சண்டைப்பயிற்சி என்பன ஒரு கமர்சியல் திரைப்படத்தின் தேவையை திருப்திகரமாக பூர்த்தி செய்திருக்கின்றன. மிகப்பெரும் ஏமாற்றம் நா.முத்துக்குமார்!!!! கமர்சியல் படம்தான் என்றாலும் பாடல்வரிகளில் நா.முத்துக்குமாரிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றோம்!!! அதிலும் 'உன்னோட பாப்பாவை பெத்துக்கிறேன்' போன்ற மூன்றாம்தர வரிகள் நா.முத்துக்குமாருக்கு அழகல்ல!!! அடுத்து வேட்டையின் இன்னுமொரு பலம் பிருந்தா சாரதி; ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கு தேவையான வசனங்களை அப்பப்போ ஆங்காங்கே திறம்பட எழுதி கிளாப்ஸ் வாங்குகிறார்; அதிலும் மாதவன் சொல்லும் "எனக்கே ஷட்டாரா" வசனத்திற்கு செம கிளாப்ஸ் & விசில்.

உங்களுக்கு பொழுதுபோக்கிற்கு திரைப்படம் வேண்டுமா? நீங்கள் தாராளமாக 'வேட்டை'க்கு செல்லலாம்; 21/2 மணிநேரம் எப்படி முடிந்தது என்பதே தெரியாதளவிற்கு உங்கள் பொழுதுபோக்கிற்கு 'வேட்டை' உத்தரவாதம்!!!!

வேட்டை - செமையா ஆடியிருக்காங்கலே.....