Wednesday, December 12, 2012

ரஜினியும் கமலும்.....


ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

1975 ஆம் ஆண்டில் அபூர்வராகங்களில் தனது முதல் திரை பிரவேசத்தை மேற்கொண்ட ரஜினியின் முதல் நாயகன் 'கமல்ஹாசன்'தான். அன்று ஆரம்பித்த இருவருக்குமிடையிலான நட்பு; அடுத்த சில ஆண்டுகளில் போட்டி நடிகர்களாக மாறி 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை தொடர்வது ஆச்சரியமான உண்மை!!! ஆனால் ரசிகர்களை பொறுத்தவரை 1970 களின் பிற்பகுதிமுதல் இன்றுவரை ரஜினியா? கமலா? உசத்தி என்கின்ற வாதங்களும், போட்டிகளும் இருந்தவண்ணம்தான் உள்ளது!! ஆனால் இந்த வாதங்களை எல்லாம்தாண்டி இவ்விரு ஜாம்பவான்களும் சிகரம் தொட்ட சாதனையாளர்கள்தான் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.

பெரும்பான்மையான ரசிகர்களை பொறுத்தவரை தமது நாயகன் எல்லாவிடயத்திலும் நம்பர் 1 ஆக இருக்கவேண்டும் என்பதில் அவர்களது பார்வை காணப்படும்; இந்தவிடத்தில் தமது நாயகனதும், போட்டி நாயகனதும் பிளஸ், மைனஸ் தெரிந்தாலே போதும் இந்த குடுமிப்பிடி வீண்சண்டையை நிறுத்துவதற்கு!!! எல்லா விடயங்களிலும் ஒருவரால் நம்பர் 1 ஆக இருக்கமுடியாது; அது ரஜினியோ, கமலோ வேறு எவரோ!! இங்கு ரஜினியை பொறுத்தவரை ரஜினியின் விம்பம்தான் முன்னிலைப்படுத்தப்பட்டு ரசிக்கப்படுகிறது. ஆனால் கமலை பொறுத்தவரை கமலின் விம்பத்திலும் பார்க்க கமலின் திறமை வெளிப்பாடுகளையும், மாறுபட்ட திறனையும்தான் ரசிகர்கள் அதிகம் விரும்பி ரசிக்கின்றார்கள்!!

ரஜினியை பொறுத்தவரை ரஜினி தேர்ந்தெடுத்த பாதை வணிக சினிமாவுக்கானது; ஆனால் கமலது பாதை தேடல் நிறைந்த, புதுமையை விரும்பும் கலைஞனது பாதை; இந்தவிடத்தில்தான் ஒரு நாயகனாக ரஜினியால் கமலை தாண்டி மக்களது மனதில் அதிகளவில் இடம்பிடிக்க முடிந்தது!!! மக்கள் விரும்பும் சினிமாவை கொடுக்கும் கலைஞனாக ரஜினியும், தான் விரும்பும் சினிமாவை மக்களுக்காக கொடுப்பதில் கமலும் ஆரம்பம் முதலே 'தமது பாதை இதுதான்' என்பதில் முடிவோடும் தெளிவோடும் இருந்தனர்; ஆனாலும் வணிக சினிமாவின் தேவை தமது இருப்பிற்கு அவசியம் என்பதால் கமல் அவ்வப்போது வணிக சினிமாவின் கதவை தட்டிக்கொண்டிருப்பதும் தவிர்க்க முடியாதது!!

இருவரது திரைப்படகளில் உள்ள கிளாஸ், மாஸ் தன்மைகளை கே.எஸ்.ரவிக்குமார் ஒரு இடத்தில் சிறப்பாக சொல்லியிருப்பார்; அதாவது ரஜினிக்கு 60% மாஸ் & 40 % கிளாஸ், கமலுக்கு 60% கிளாஸ் & 40% மாஸ் இருக்கும் படங்களைத்தான் தான் இயக்குவதாக கூறியிருந்தார்!! மிகச்சரியான கூற்று, அதைதான் ரசிகர்களும் வேண்டுகின்றார்கள்; ரசிகனுக்கு வேண்டியதை கொடுக்காமல் படம் ஓடவில்லை என்று கூறுவது நியாயமில்லை. இந்தவிடத்தில்தான் கமலின் சில பரிசோதனை முயற்சிகள் தோல்வியடைகின்றன!! மேற்சொன்னதை கே.எஸ்.ரவிக்குமார் ரஜினி, கமல் இருவரையும் இயக்கிய திரைப்படங்களின் மூலம் நிரூபித்துமிருப்பார்.

ரஜினியின் பாதையை கமல் தேர்வு செய்திருந்தால் 'ரஜினி காணமல் போயிருப்பார்' என்பது சில பேரது வாதம், இது முட்டாள்த்தனமான வாதம்!! ரஜினி இந்தப்பாதையை தேர்ந்தெடுத்தார் என்பதைவிட; மக்களால் இந்த பாதைக்கு ரஜினி தள்ளப்பட்டார் என்பதுதான் உண்மை. குணச்சித்திர வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு; பொழுதுபோக்கு திரைப்படங்களை தேர்ந்து நடிக்கும்படி தூண்டியது மக்களின் ரசனை. துருதுரு பேச்சு, விறுவிறு நடை, கலகலப்பான சுபாவம், கண்களில் இருந்த ஈர்ப்பு என ரஜினிகாந் என்னும் இளைஞனை அன்று மக்கள் தமது அன்றாட வாழ்வின் அங்கமாக, தங்களில் ஒருவனாக உணர்ந்தனர்; அதனால்தான் சமூக கோபங்களை அவன்மூலம் ஆக்ஷன் வணிக சினிமாவாக உள்வாங்கி திருப்திப்பட்டனர்!! அதேநேரம் கமலை காதல் நாயகனாகவும், வேறுபட்ட பாத்திரப்படைப்பை கொடுக்கும் கலைஞனாகவும்தான் ஏற்றுக்கொண்டனர்!!

ரஜினி கொடுக்கும் வசூலை கமலால் கொடுக்கமுடியவில்லை என்பது சில கமல் ரசிகர்களது ரஜினி எதிர்ப்புக்கு காரணம்; நல்ல சினிமாவை மக்கள் ரசிக்கவில்லை என்பதும் இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு!! மக்களது தேவை என்பது நல்ல சினிமாவா? பொழுதுபோக்கு சினிமாவா? என்பதை சமூகத்தின் நிலைதான் தீர்மானிக்கின்றது. பாட்டாளிவர்க்கத்தையும், பொழுதுபோக்கு விரும்பிகளையும்தான் தமிழ்சினிமா இன்றுவரை அதிகளவில் கொண்டுள்ளது!! இது வாழும் சமூகத்தின் வாழ்க்கைமுறை, மக்களின் பொழுதுபோக்கு தேவை, எதிர்பார்ப்புக்கள் போன்ற விடயங்களில்தான் தங்கியுள்ளது!! இதனை மாற்றி பொழுதுபோக்கு சினிமாவை விடுத்து மாறுபட்ட கலைப்படைப்புக்களை மக்கள் முன்னுரிமை கொடுத்து கொண்டாடும் நிலைக்கு சமூகம் வந்தால்தான் கலைப்படைப்புக்களுக்கு பொழுதுபோக்கு சினிமாவை தாண்டிய வருமானம் கிடைக்கும்!! அதேநேரம் தமிழ் சினிமா ரசிகர்கள் மாறுபட்ட சினிமாக்களை ரசிக்கவில்லை என்று அர்த்தமில்லை; ஒப்பீட்டளவில் மாறுபட்ட சினிமாவை ரசிப்பவர்களைவிட எண்ணிக்கையில் குறைவு, அவ்வளவுதான்!!!

ரஜினியால் எப்படி கமல்போன்ற வேறுபட்ட கலைப்படைப்புக்களை கொடுப்பது கடினமான காரியமாக இருக்குமோ, அதேபோல கமலால் ரஜினி படங்களுக்கு இணையான வணிகத்தை ஈட்டுவதும் கடினம்; இதுதான் ஜதார்த்தம்!! இந்த ஜதார்த்தத்தை புரிந்துகொண்டால் ரசிகர்களுக்குள் போட்டியில்லாமல் இருவரையும் ரசிக்கலாம். ஆனால் ரஜினியை கமலுக்கு முன்னால் பெயர் சொல்லுவது, விழாக்களில் கமலை ரஜினிக்கு முன்னதாக பேச அழைப்பது, நடிகர்களின் தரவரிசையில் எப்போதும் கமல் ரஜினிக்கு பின்னிற்பது போன்ற விடயங்களை சில கமல் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிப்பார்த்தால் தேசியவிருதுகளை கமல் வாங்கும்போதும், ரஜினி தனது 'குரு' என்று கமலை விழிக்கும்போதும் ரஜினி ரசிகர்களுக்கும் கோபம் வரவேண்டும்!! நாயகர்களை முன்னிறுத்துவது வணிகசினிமாவை அளவுகோலாக வைத்துத்தான்; அதனால்தான் ரஜினி பெயர் கமலுக்கு முன்னால் உள்ளது. அதேநேரம் நடிப்பு, கலைஞன் என வரிசைப்படுத்தும்போது கமலைத்தான் யாராக இருந்தாலும் முன்னிறுத்துவார்கள்; இது அவர்கள் இருவரும் தேர்ந்தேடுத்த பாதை!! அதன் விளைவுகள்தான் இன்று இருவருக்கும் கொடுக்கப்படும் மாறுபட்ட இடங்களின் முன்னுரிமை!!

ரஜினியால் எப்படி கலைப்படைப்புக்களில் கமலுக்கு முன்னிற்க முடியாதோ; அதேபோல் கமலால் வணிக சினிமாவில் ரஜினியை பின்தள்ள முடியாது!! கமலால் வணிக சினிமாவில் முன்னிற்க வேண்டுமென்றால் எமது சமூகத்தில் சினிமாவின் மீதான எண்ணப்பாடு மாறவேண்டும்; ஆனால் அது சாத்தியமற்றது!! ஆக ரஜினியின் பலமெது, கமலின் பலமெது என்பதை புரிந்து வைத்திருந்தால் ரஜினியா? கமலா? என்கின்ற வாதமே தேவையற்றது!! இதை ரஜினியும், கமலும் நன்கு தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றார்கள்; ரஜினி சற்று அதிகமாகவே!! இதையே ரசிகர்களும் புரிந்துவிட்டால் இருவரையும் ரசிக்கலாம். பல ரசிகர்கள் இன்று இதை உணர்ந்துவிட்டார்கள், மீதி சிலர் உணரவேண்டும்!

8 வாசகர் எண்ணங்கள்:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

//மக்கள் ஒருவரது திறமையை கலைநயத்தோடு ரசிப்பதை விட பொழுதுபோக்கிற்காகவே அதிகமாக திரையரங்கிற்கு வருகின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது சந்தோசமான ஒரு ஜனரஞ்சகமான சினிமா அதனால்த்தான் ரஜினி படங்களுக்கு மக்கள் அதிகளவு வரவேற்ப்பை கொடுக்கின்றனர்.
//
மறுக்க முடியாத உண்மை

Vaanathin Keezhe... said...

நன்று... தெளிவான பார்வை. வாழ்த்துக்கள் நண்பரே.

என்வழி

சுடுதண்ணி said...

அருமையான, தெளிவான பதிவு.. நன்றி

ethavuthu Irukkum said...

//ரஜினியும் கமலும் என்னதான் நண்பர்களாக இருந்தாலும் 80 வீதமான ரசிகர்கள் தங்களுக்குள் மோதத்தான் செய்கிறார்கள். //

சமீப காலமாக அப்படி மோதல் எதுவும் இல்லை. சமீப காலம் என்றால் 5 முதல் 10 வருடங்களாக.
மிக சரியான பதிவு. வாழ்த்துக்கள்.
சுகுமார்

Rakesh Kumar said...

Good writeup. There will only be Rajini Kamal or Kamal Rajini whichever way you put it. There will never be another of these two. We are witnessing the peak of the "Big Two"s of Tamizh cinema and for the last time. Thanks of the writeup.

r.v.saravanan said...

இருவரும் இதே நட்புடன் இன்னும் நீண்டநாட்களுக்கு சாதிக்க வேண்டும் என்பது எல்லோரைப்போலவே எனது விருப்பமும் கூட.

yes எனது விருப்பமும் கூட.

நித்ய அஜால் குஜாலானந்தா said...

//தமிழ் சினிமாவை உலத்தரதுக்கு கொண்டுசெல்ல தினமும் புதிதுபுதிதாக சிந்திக்கும் ஒருமனிதர். // ஆங்கிலப் படத்து கதைகளை திருட்டுத் தனமா காப்பியடிச்சு தமிழில் எடுப்பதுதான் உலகத் தரத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியோ? குஷ்டமப்பா.. சீ... கஷ்டமப்பா!

எப்பூடி.. said...

@ ஸ்ரீ.கிருஷ்ணா


//மறுக்க முடியாத உண்மை//


thanks for ur support for all.


................................................


@ Vaanathin Keezhe...


// நன்று... தெளிவான பார்வை. வாழ்த்துக்கள் நண்பரே.//


thaks for your compliment.


................................................


@ சுடுதண்ணி


//அருமையான, தெளிவான பதிவு.. நன்றி//


நன்றிகள்

------------------------------------------


@ EGreens

//சமீப காலமாக அப்படி மோதல் எதுவும் இல்லை. சமீப காலம் என்றால் 5 முதல் 10 வருடங்களாக. மிக சரியான பதிவு. வாழ்த்துக்கள். சுகுமார்//


மோதல்கள் என்று நான் குறிப்பிட்டது இணையத்தளங்களில் இடம்பெறும் கருத்து மோதல்களையே, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்.

................................................


@ Rakesh Kumar

//Good writeup. There will only be Rajini Kamal or Kamal Rajini whichever way you put it. There will never be another of these two. We are witnessing the peak of the "Big Two"s of Tamizh cinema and for the last time. Thanks of the writeup.//

small correction "big Two" of indian cinema, thanks for your comment.

................................................


@ r.v.saravanan kudandhai

//yes எனது விருப்பமும் கூட.//

நன்றி நண்பரே.

.............................................


Jayagopal

// ஆங்கிலப் படத்து கதைகளை திருட்டுத் தனமா காப்பியடிச்சு தமிழில் எடுப்பதுதான் உலகத் தரத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியோ? குஷ்டமப்பா.. சீ... கஷ்டமப்பா!//


அண்ணே இந்த பதிவு எழுதிய காலத்தில அதை யாரும் கண்டு பிடிக்கல, பின்னாடிதான் சொன்னாய்ங்க, ஆனாலும் எங்களுக்கு உலக தரமான சினிமாவை (திருடினா கூட) அறிமுகப்படுத்தியது அவர்தானே? :-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)