Wednesday, December 12, 2012

ரஜினியும் திரையிசையும்....



ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

ரஜினியின் திரைவாழ்க்கை வெற்றியில் பிரதான பங்குவகிக்கும் முக்கிய காரணிகளில் திரையிசைப் பாடல்களும் ஒன்று. இன்றைய தேதியில் ரஜினி படத்திற்கு எந்த மாதிரிப் பாடல்களை போட்டாலும் அவை ஹிட்டாகிவிடும், இது இன்றைய ரஜினியின் 'மாஸ்' பவர், ஆனால் அன்றைய ரஜினியின் வெற்றிக்கு முத்தான திரையிசைப் பாடல்கள் மிக முக்கியமான பங்களிப்பை செய்தன என்பது யாருமே மறுக்க முடியாதது. அந்தவகையில் ரஜினியின் திரையிசைப் பாடல்களுக்கு இசையமைத்தவர்கள், பின்னணி பாடியவர்கள், பாடல்களை எழுதியவர்கள் என மூன்று பிரிவினருமே மறக்க கூடாதவர்கள். இவர்கள் பற்றிய பார்வையே இந்தப்பதிவு.


எம்.எஸ்.விஸ்வநாதன்



ரஜினியின் முதல் திரைப்படமான 'அபூர்வராகங்கள்' திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த எம்.எஸ்.வி அவர்கள் ரஜினியின் முதல் வாயசைவிற்கு இசையும் குரலும் கொடுத்தவர். மூன்று முடிச்சு திரைப்படத்தில் "மண வினைகள் யாருடனோ!! மாயவனின் விதிவலைகள்" பாடல்தான் ரஜினி வாயசைத்த முதல் திரையிசைப்பாடல். அதன்பின்னர் சில பாடல்களை ரஜினிக்காக எம்.எஸ்.வி பாடியிருந்தாலும் "சம்போ சிவ சம்போ "பாடல் மிகவும் பிரபலமானது. அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு திரைப்படங்கள் தவிர அவர்கள், நினைத்தாலே இனிக்கும், பில்லா, பொல்லாதவன், தீ, தில்லு முல்லு, ராணுவ வீரன், போக்கிரிராஜா போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த எம்.எஸ்.வி இறுதியாக இசையமைத்த ரஜினி படம் 'சிவப்பு சூரியன்'. ஆரம்ப காலங்களில் தனக்கு குரல் கொடுக்க முன்னணி 'பின்னணி பாடகர்கள்' தயங்கியபோது எந்தவித தயக்கமுமிலாமல் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.வி என்று ரஜினி அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா



எத்தனை எத்தனை காலத்தால் அழிக்கமுடியாத அருமையான பாடல்களை ரஜினி படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார்!!! அப்படி ரஜினி படங்களுக்கு இளையராஜா இசையமைத்த அத்தனை பாடல்களையும் விரிவாக எழுதுவதென்றால் ஒரு தனிப்பதிவே போதாது!! முடிந்தவரை சுருக்கமாக பார்த்தால்; இளையராஜா இசையமைத்த ரஜினியின் முதல்த் திரைப்படமான 'கவிக்குயில்' திரைப்படத்தை தொடர்ந்து புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, பைரவி, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, முள்ளும் மலரும், பிரியா, தர்ம யுத்தம், 6 - 60 வரை போன்ற பல திரைப்படங்களுக்கும் 70 களில் இளையராஜா இசையமைத்துள்ளார். இவற்றில் பைரவி திரைப்படத்தில் "நண்டூருது நரியூருது" பாடலையும் 1980 இல் வெளிவந்த அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தில் "அம்மா நீ சுமந்த பிள்ளை" பாடலையும் ரஜினிக்காக டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் குரலில் ஒலிக்கச் செய்தது சிறப்பித்திருப்பார்.

80 களில் ரஜினியின் திரைப்படங்களில் 80 வீதமான திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களில் 90 வீதமானவை சூப்பர் ஹிட்டான பாடல்களே. அவற்றில் ஜானி, புதுக்கவிதை, தம்பிக்கு எந்த ஊரு, நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன், குரு சிஷ்யன், வேலைக்காரன், ராஜாதிராஜா, தர்மத்தின் தலைவன் போன்ற திரைப்படங்கள் மிக முக்கியமானவை. ரஜினி நடித்த ஒரே ஆங்கிலத் திரைப்படமான BloodStone திரைப்படத்துக்கு இசையமைத்த இளையராஜா அவர்கள் ரஜினி தனது திரைவாழ்வில் பாடிய ஒரே பாடலான "அடிக்குது குளிரு" பாடலை மன்னன் திரைப்படத்தில் பாடவைத்திருப்பார்.

90 களின் முற்பாதியில் பணக்காரன், அதிசயப்பிறவி, தளபதி, மன்னன், பாண்டியன், உழைப்பாளி, எஜமான், வள்ளி போன்ற திரைப்படங்களுக்கு இசயமைத்த் இளையராஜா ரஜினிக்கு இறுதியாக இசையமைத்த திரைப்படம் வீரா. ரஜினிக்காக இளையராஜா பாடிய முதல்ப்பாடல் பணக்காரனில் "உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி" பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

.ஆர்.ரஹ்மான்




முத்து, படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரன் என ரஜினியின் ஐந்து திரைப்படங்களுக்கு இசையமைத்த ரஹ்மான் ரஜினிக்கு ஆறாவதாக இசையமைக்கும் திரைப்பப்படம் கோச்சடையான் என்பது குறிப்பிடத்தக்கது. 1995 இல் இருந்து இன்றுவரை ரஜினி நடித்துள்ள 12 திரைப்படங்களில் 6 திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது விஷேடம். முத்து திரைப்படத்தில் ரஜினி வாயசைக்கா விட்டாலும் பின்னணியில் "விடுகதையா இந்த வாழ்க்கை" என ஹரிகரனின் குரலில் ரஜினி படமொன்றில் முதல்முறையாக பாடலொன்றை ஒலிக்கச் செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரபோஸ்




ரஜினியின் திரைப்படங்களில் மாங்குடி மைனர் திரைப்படத்தை முதல்முதலாக இசையமைத்திருந்த சந்திரபோஸ் தொடர்ந்து விடுதலை, மனிதன், ராஜா சின்ன ரோஜா திரைப்படங்களுக்கும் இசையமைத்திருந்தார். விடுதலை திரைப்படத்தில் "ஊருக்குள்ள நம்மை பற்றி கேட்டுப்பாருங்க" பாடல் மிகவும் பிரபல்யமானது. தொடர்ந்து மனிதன் , ராஜா சின்ன ரோஜா திரைப்படங்களில் அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாயின. 'மனிதனில்' ரஜினிக்காக எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் மூவரையும் பின்னணி குரல் கொடுக்கவைத்த சந்திரபோஸ் 'ராஜா சின்ன ரோஜா'வில் எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மனோ மூவரையும் பின்னணி குரல் கொடுக்க வைத்திருப்பார், ஒரு திரைப்படத்தில் ரஜினிக்கு மூன்று பேர் பின்னணி குரல் கொடுத்தது சந்திரபோசின் இசையில் குறிப்பிடத்தக்க விடயம்.

ரஜினி சந்திரபோஸ் கூட்டணியல் உருவாகிய மனிதன், ராஜா சின்ன ரோஜா திரைப்படங்கள்தான் இளையராஜாவின் பிரிவுக்கு பின்னர் நல்ல வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருந்த வைரமுத்துவுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது . இரண்டு திரைப்படங்களிலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுதியிருப்பார், எல்லாமே சூப்பர்ஹிட்டானாலும் ராஜா சின்ன ரோஜாவில் "சூப்பர் ஸ்டாரு யாரின்னு கேட்டால்" பாடல் ரசிகர்களின் மிகப்பெரும் அபிமானம் பெற்ற பாடலாக அமைந்தது.


தேவா




அண்ணாமலையில் இருந்து ரஜினி படங்கள் ஆரம்பிக்கும் முன்னர் 'SUPER STAR RAJINI' என வரும் டைட்டிலுக்கு இசையமைத்து திரையரங்கையே அதிரவைத்தவர் தேவா. 'சிவாஜி' திரைப்படத்தில் அந்த இசை மாற்றப்பட்டாலும் தேவாவின் இசையில் (காப்பியாக இருந்தாலும்) இருந்த 'கிக்' இப்போ இல்லை என்பதே உண்மை. அண்ணாமலை, பாட்ஷா என ரஜினியின் இரண்டு மெகாஹிட் திரைப்படங்களிலும் அனைத்துப் பாடல்களையும் பட்டிதொட்டியெங்கும் பிரபலாமகுமாறு இசையமைத்த தேவா இறுதியாக ரஜினிக்கு இசையமைத்த அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினியின் வாயசைவில் முதல்முதலில் ஹரிகரனை "நகுமோ நகுமோ" என பின்னணி பாடவைத்திருப்பார். பாட்ஷாவின் மிகப்பெரும் வெற்றியில் தேவாவின் இசையும் முக்கிய காரணங்களில் ஒன்றென்பதை மறுக்க முடியாது.

இவர்களைத் தவிர ஐந்து  திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த ஷங்கர் கணேஷ் மற்றும் எஸ்.பி.பி, விஜய பாஸ்கர், 'கொடிபறக்குது' புகழ் ஹம்சலேகா, வித்யாசாகர் போன்றோரும் ரஜினி திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களில் முக்கியமானவர்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்




தமிழ் சினிமாவின் அதிக பாடல்களை பாடிய இந்த ஜாம்பவான்தான் ரஜினிக்கும் அதிகமான பாடல்களை பாடியவர் என்பது சிறப்பம்சம். ஆரம்பகாலம் முதல் இன்றுவரை தொடர்ந்து ரஜினிக்காக பின்னணி பாடல்களை பாடிவரும் இந்த 'முன்னணி' பாடகர் பாடிய பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாதவை. ரஜினிக்கு 100% ஒரு குரலென்றால் அது எஸ்.பி.பி அவர்களுடைய குரல்தான். அனைத்து வகையான பாடல்களையும் ரஜினிக்காக எஸ்.பி.பி பாடினாலும் ஆரம்பபாடல்கள் (opening song) மிகவும் பிரபலமானவை. "வந்தேண்டா பால்க்காரன்", "அதுதாண்டா இதுதாண்டா", "ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்", "ஒருவன் ஒருவன் முதலாளி", "என்பேரு படையப்பா ", "தேவுடா தேவுடா", "பல்லேலக்கா பல்லேலக்கா", "புதிய மனிதா" என ரஜினிக்கு எஸ்.பி.பி 'ஆரம்பபாடல்' பாடிய அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள் என்பது விஷேடம்.

"ராமன் ஆண்டாலும்", "ராஜாவுக்கு ராஜா நான்டா", "வாழுமட்டும் நன்மைக்காக", "மை நேம் இஸ் பில்லா", "நான் பொல்லாதவன்", ""ராக்கம்மா கையை தட்டு" போன்ற பாடல்களை பாடும்போது கம்பீரமாக ஒலிக்கும் எஸ்.பி.பியின் குரல்; "காதலின் தீபம் ஒன்று", "ராத்திரியில் பூத்திருக்கும்", "சுந்தரி கண்ணால் என்ன சேதி", "வா வா இதயமே", "ஒரு ஜீவன்தான்" என காதல்ப்பாட்டு பாடும்போது கொஞ்சலாகவும்; "ராஜா சின்ன ரோஜாவோடு" , "தோட்டத்தில பாத்திகட்டி" என பாடும்போது குழந்தைத்தனமாகவும் ரஜினியே பாடுவதுபோல இருக்கும், இதுதான் எஸ்.பி.பி & ரஜினி கூட்டணியின் பலம்.

கே.ஜே .ஜேசுதாஸ்




எஸ்.பி.பி அளவிற்கு பாடவில்லை என்றாலும் அதிகமான பாடல்களை ரஜினிக்காக பாடிய பாடகர்களில் இவரும் ஒருவர். பிரியா திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் ஜேசுதாஸ் அவர்கள்தான் பாடியிருப்பார்கள், அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல்கள். அதேபோல 'நல்லவனுக்கு நல்லவன்' திரைப்படத்தில் "உன்னைத்தானே தஞ்சமென்று", "சிட்டுக்கும் செல்ல சிட்டுக்கும்" என மென்மையாக பாடிய ஜேசுதாஸ் "வச்சிக்கவா உண்ண மட்டும்" பாடலில் மிரட்டியிருப்பார். புதுக்கவிதையில் "வெள்ளைப் புறா ஒன்று" எனவும் அண்ணாமலையில் "ஒரு வெண்புறா" எனவும் இதயத்தை வருடும் பாடல்களை ரஜினிக்காக பின்னணி பாடிய ஜேசுதாஸ் தர்மதுரை திரைப்படத்தில் "மாசி மாசம் ஆளான பொண்ணு" பாடலில் மோகத்தையும் "அண்ண என்ன தம்பி என்ன" பாடலில் கோபத்தையும் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் "முத்துமணி சுடரே வா" பாடலில் பாசத்தையும் பொளிந்திருப்பார். மன்னன் திரைப்படத்தில் பாடிய "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" பாடலால் அனைத்து இதயங்களையும் கவர்ந்தவர் ஜேசுதாஸ்.

மலேசியா வாசுதேவன்




எஸ்.பி.பிக்கு அப்புறம் ரஜினிக்கு பொருத்தமான குரலென்று மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலை சொல்லலாம். " பொதுவாக என் மனசு தங்கம்" எனும் பாடல்மூலம் ரஜினிக்கு மிகப்பெரும் வரவேற்பை ஏற்ப்படுத்திக் கொடுத்த மலேசியா வாசுதேவன் ரஜினிக்காக அதிகமான பாடல்களை பாடியவர்களில் முக்கியமான ஒரூவர். "சுப்பண்ணா சொன்னார் அண்ணா", "நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா", "ஆசை நூறு வகை", "மனிதன் மனிதன்", "வெத்தலையை போட்டேண்டி", என்னோட ராசி நல்ல ராசி", "என் தாயின் மீது ஆணை" என வேகமான பாடல்களை ரஜினிக்காக பின்னணி பாடிய மலேசியா வாசுதேவன் அவர்கள் "வா வா வசந்தமே", "ஒத்துகிட்டு ஊத்துதடி", "ஆகாய கங்கை", "ஒரு தங்க ரதத்தில்" போன்ற மென்மையான பாடல்களையும் பாடியுள்ளார்.

மனோ




'வேலைக்காரன்' திரைப்படத்தில் "வேலை இல்லாதவன்தான்" பாடலை முதல் முதலாக ரஜினிக்காக பின்னணி பாடிய மனோ இளையராஜாவின் தயாரிப்பான 'ராஜாதிராஜா' திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் "மீனம்மா மீனம்மா", "எங்கிட்ட மோதாதே", "மலையாளக் கரையோரம்" என முத்தான மூன்று பாடல்களை பாடியுள்ளார். அவைதவிர "பாண்டியனின் ராட்சியத்தில்", "உழைப்பாளி இல்லாத", "நூறு வருஷம்", "ஜிங்கிடி கின்கிடி உனக்கு", "மலைக்கோவில் வாசலில்", "உலகத்துக்காக பிறந்தவன்" போன்ற சூப்பர் ஹிட்டான பாடல்களையும் ரஜினிக்காக பின்னணி பாடியுள்ளார். படையப்பாவில் ரஹ்மானின் இசையில் "ஓஹோஹோகோ கிக்கு ஏறுதே" பாடல் பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத்தவிர ஜெயச்சந்திரன், அருண்மொழி, ஹரிகரன், ஷங்கர் மகாதேவன், கார்த்திக் என அதிகமான பின்னணிப் பாடகர்கள் ரஜினிக்காக பின்னணி பாடியுள்ளனர். ரஜினியின் திரைப்படங்களில் பணியாற்றிய மேலே பெயர்குறிப்பிட்டுள்ள இசையமைப்பாளர்களுக்கும், பின்னணிப் பாடகர்களுக்கும்; பெயர் குறிப்பிடாத இசையமைப்பாளர்களுக்கும், பின்னணிப் பாடகர்களுக்கும் ரஜினி ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.



இசையமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு திரையிசையில் முக்கிய இடத்தை வகிக்கும் பாடலாசிரியர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவது முறையல்ல. எந்தெந்த பாடலை யார்யார் பாடினார்கள்? என்கிற சரியான தகவல்கள் தெரியாததனால் அவர்களைபற்றி விபரமாக குறிப்பிட்டு எழுதவில்லை. இருந்தாலும் ரஜினிக்காக அதிகமான திரைப்பட பாடல்களை எழுதிய வைரமுத்து அவர்களுக்கும் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்று உருகிய வாலி அவர்களுக்கும், ஆரம்பகாலங்களில் ரஜினிக்கு பாட்டெழுதிய 'கவியரசர்' கண்ணதாசன் அவர்களுக்கும்; மற்றும் பெயர் குறிப்பிடாத அனைத்து பாடலாசிரியர்களுக்கும் ரஜினி ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்....

13 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

இசையமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு திரையிசையில் முக்கிய இடத்தை வகிக்கும் பாடலாசிரியர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவது முறையல்ல.


.......வெற்றிக்கு இவர்களும் காரணமே!

philosophy prabhakaran said...

சந்திரபோஸ் என்ற ஒரு இசை அமைப்பாளர் பற்றி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை... இன்றே தெரிந்துக்கொண்டேன்...

philosophy prabhakaran said...

// எஸ்.பி.பிக்கு அப்புறம் ரஜினிக்கு பொருத்தமான குரலென்று மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலை சொல்லலாம் //

என்னைக் கேட்டால் எஸ்.பி.பியை விட மலேசியாவின் குரலே ரஜினிக்கு பொருத்தமானது என்று சொல்லுவேன்...

philosophy prabhakaran said...

// இசையமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு திரையிசையில் முக்கிய இடத்தை வகிக்கும் பாடலாசிரியர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவது முறையல்ல. //

அவசரப்படாதீங்க... இன்னும் நாள் இருக்கு... நிச்சயமா எழுதுவாரு...

Rajini said...

ரஜினிகாந்தின் படங்கள் வெற்றிக்கு இளையராஜாவின் இசை பெரும்பங்கு வகித்திருக்கிறது. மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இளையராஜா எல்லோருக்குமே இசையமைத்தாலும் சிலருக்கு ஸ்பெஷலாக கவனிப்பார். பாரதிராஜா இயக்கிய படங்கள், ரஜினி படங்கள், சிவாஜி நடித்த/தயாரித்த படங்கள், பாலச்சந்தர் இயக்கிய படங்கள் இந்த வகையில் சேரும். ரஜினிக்கு இளையராஜா கடைசியாக இசையமைத்துக் கொடுத்த வீராவில் கூட பாடல்கள் ஹிட்டாயின. என்னதான் பணத்துக்கு இசையமைத்தாலும் அதற்கும் மேல் ஒரு ஈடுபாடு இளையராஜாவுக்கு ரஜினி படங்களுக்கு கொடுப்பார். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ரஜினி இளையராஜாவை நம்பியே இருந்தார். ஆனால், ஒரு கட்டம், இளையராஜா இசையமைத்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை மக்களிடம் எடுபடவில்லை என்ற நிலை வந்ததும், அவர் ஒதுக்கப் பட்டார். அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் போன்றோரை விட இவர் கொடிய எதிரியாகிப் போனார். என்ன கொடுமை?????????????

KICHA said...

chumma kalakkaringa

enna railu pudhu perla varudu pola...

SPB-ILAYARAJA-RAJINI indha kootani endrum arumaidhan

ம.தி.சுதா said...

அருமையான பார்வை ஜீவ்... நீங்கள் குறிப்பிட்டதில் “விடுகதையா இந்த வாழ்க்கை” பாடல் எனக்க எந்த நேரமும் பிடித்த ஒன்று. எங்காவது அதைக் கேட்டால் நின்று கேட்டுவிட்டுத் தான் போவேன் (கொஞ்ச நாள் என் ரிங்கிங் டொனும் கூட)

muthu123 said...

ஜேசுதாஸ் பாடியதில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலை விட்டு விட்டீர்களே , தலைவரே மன்னன் படம் ஹிட் ஆனதுக்கு காரணம் அது ஜேசுதாஸ் பாடியதால் தான் என்று கூறி உள்ளார்

R.Gopi said...

பாடகர்களின் வரிசையில் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடலை குறிப்பிடும் போது, அவர் பாடிய மிக மிக முக்கியமான பாடலான “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” பாடல் இங்கு மிஸ்ஸிங்....

இன்னமும் முக்கியமாக ரஜினி அவர்களின் 100வது படமான “ஸ்ரீராகவேந்திரர்” படத்தில் பெரும்பான்மையான (முழுமையான) பாடல்களை பாடியிருப்பாரே!!

r.v.saravanan said...

good jeevadharshan

நாஞ்சில் மனோ said...

அருமையான பதிவு சூப்பர்
வாழ்த்துக்கள் மக்கா...

எப்பூடி.. said...

@ Chitra

@ philosophy prabhakaran

@ Rajini

@ KICHA

@ ம.தி.சுதா

@ muthu123

@ R.Gopi

@ r.v.saravanan

@ நாஞ்சில் மனோ

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

...........................................

@ Rajini

//இளையராஜா இசையமைத்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை மக்களிடம் எடுபடவில்லை என்ற நிலை வந்ததும், அவர் ஒதுக்கப் பட்டார். //

எம்.எஸ்.வி, பின்னர் ராஜா, இப்போ ரகுமான் யாராக இருந்தாலும் அவரவர் காலத்தில் தங்களாலான பங்களிப்பை செய்துள்ளனர். எம்,எஸ்.வி முதல் 3 படத்திற்கும் இசயமைத்ததற்க்காக ரஜினி பின்னர் ராஜாவை பயன்படுத்தியதற்க்காக எம்.எஸ்.வியை ஒதுக்கியதாக சொல்லலாமா? இயக்குனரோ, நடிகரோ, இசையமைப்பாளரோ உச்சத்தில் இருந்தால்த்தான் வாய்ப்பு. அதுதான் சினிமா.

//அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் போன்றோரை விட இவர் கொடிய எதிரியாகிப் போனார். என்ன கொடுமை?????????????//

எல்லாமே தெரிந்தமாதிரி பேசக்கூடாது.

.................................................

KICHA

//enna railu pudhu perla varudu pola...//

:-)

....................................................

@ muthu123

//ஜேசுதாஸ் பாடியதில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலை விட்டு விட்டீர்களே , தலைவரே மன்னன் படம் ஹிட் ஆனதுக்கு காரணம் அது ஜேசுதாஸ் பாடியதால் தான் என்று கூறி உள்ளார்//

@ R.Gopi

//பாடகர்களின் வரிசையில் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடலை குறிப்பிடும் போது, அவர் பாடிய மிக மிக முக்கியமான பாடலான “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” பாடல் இங்கு மிஸ்ஸிங்....//


வாலி அவர்களை குறிக்கும்போது 'அம்மா என்றழைக்காத' பாடலை சொல்லியதால் ஜேசுதாசின் பாடல்களில் சொல்லவில்லை, இருந்தாலும் பரவாயில்லை இதோ சேர்த்து விடுகிறேன்.

ilavarasan said...

மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான பதிவு, நன்றி.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)