Wednesday, December 12, 2012

எம்.ஜி.ஆரும் ரஜினியும்...


 
ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

இந்தப்பதிவு எம்.ஜி.ஆரை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல, மாறாக ரஜினியின் வளர்ச்சியையும் அவரது புகழின் உச்சத்தையும் பொறுக்கமுடியாமல் ரஜினியை எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு சிறுமைப்படுத்த நினைக்கும் மூத்த தலைமுறைக்கும், சில இன்றைய தலைமுறைக்கும் மட்டுமே!!

 எம்.ஜி.ஆர், ரஜினி இருவருமே தத்தமது காலங்களில் சிகரம் தொட்ட சாதனையாளர்கள். இவர்கள் இருவரும் வர்த்தகரீதியான படங்களிலே அதிகமாக நடித்துள்ளதாக சில உலகத்தரம்வாய்ந்த(?) விமர்சககர்கள் கூறுவார்கள், இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் சம காலப்பகுதிகளில் புதிய முயற்சிகளுக்கு பணம்போட எந்த தயாரிப்பாளரும் துணிந்திருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவின் கல்லாவே இவர்களால்தான் இன்றுவரை நிரம்பியிருக்கின்றது என்பதை இந்த இருவரையும் பிடிக்காதவர்கள் கூட  ஒத்துக்கொள்வார்கள்.

எம்.ஜி.ஆர். இருக்கும்போது எம்.ஜி.ஆரை மோசமாக விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் இப்போது எம்.ஜி.ஆரை வைத்து ரஜினியை விமர்சனம் செய்வது அவ்வப்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. எம்.ஜி.ஆர் எப்படி சிகரம் தொட்ட சாதனையாளரோ அதேபோல் ரஜினியும் சிகரம்தொட்ட சாதனையாளர்தான்; சில விடயங்களில் எம்.ஜி.ஆர் தொட்ட உயரத்தை ரஜினி தொடாததும், சில விடயங்களில் ரஜினி எம்.ஜி.ஆரை விட அதிகமாக சாதித்திருப்பதும் யாரும் மறுக்கமுடியாதது. இதற்கு பல காரணங்கள் உண்டு; அவற்றை நான்குபிரிவாக பிரித்து பார்ப்போம்.

 1 ) சினிமா
 2 ) அரசியல்
 3 ) ரசிகர்கள்
 4 ) சமூக விஞ்ஞான வளர்ச்சி

 சினிமா

 எம்.ஜி.ஆர் அவர்கள்  தான் வாழ்ந்த காலத்தில் தமிழ்சினிமாவில் எட்டாத உயரமில்லை.1950 களின் நடுப்பகுதி முதல் 1970 களின் நடுப்பகுதிவரை 20 ஆண்டுகள் இவர் தமிழ்சினிமாவின் சக்கரவர்த்தியாக இருந்துள்ளார். எம்.ஜி.ஆரின் தோல்விப்படங்களின் வசூலை அந்தக்காலத்து ஏனைய நடிகர்களின் வெற்றிப்படங்கள் எட்டாதது இவரது உச்சத்திற்கு சான்று. அன்றைய திராவிட முன்னேற்றக்கழக கொள்கைகள் எம்.ஜி.ஆர் படங்கள் மூலமாகவே மக்களுக்கு அதிகளவில் எடுத்து செல்லப்பட்டது. சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகளில் முதல்முதலாக ரசிகர்மன்றங்கள் தொடக்கப்பட்டது எம்.ஜி.ஆருக்கே.

 எம்.ஜி.ஆருக்கு ஆரம்பகாலங்களில் ஒருகட்சியும் அதனது கொள்கைகளும் பக்கபலமாக இருந்தன. ஆனால் ரஜினிக்கு எந்தவித பின்னணியும் இருக்கவில்லை. எம்.ஜி.ஆர் தான்வாழ்ந்த காலத்தில் எப்படி தமிழ்சினிமாவின் சக்கரவர்த்தியாக இருந்தாரோ அதேபோல் 1978 முதல் இன்றுவரை 34 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் ரஜினிதான் இங்கு சக்கரவர்த்தி, ஆனால் ரஜினி தமிழ்சினிமாவையும் தாண்டி இந்தியசினிமாவின் சக்கரவர்த்தி.

ரஜினி படங்கள் தமிழகத்தையும் தாண்டி தென்னிந்திய Box office கள் அனைத்திலும் வசூலில் சாதனைபடைத்தன. சிவாஜி மும்பாய் Box office இல் அமிதாப்பச்சனின் படத்தையும்(ஜூம் பராபர ஜூம்) தாண்டிய ஓப்பினிங்குடன் மிகப்பெரிய வசூலையும் அள்ளியது. இந்திரன் தமிழகம் தாண்டி தெற்கில் ஆந்திரா, கேரளா கர்நாடகா என அனைத்து இடங்களிலும் வசூல் மழையை பொழிந்தது; வாடா இந்தியாவில் மிகப்பெரும் அலையை தமிழ் சினிமாவை வியந்து பார்க்கவைத்தது!! தவிர வேறு சில பிற மாநிலங்கள், வெளிநாடுகள் என எந்திரனும், சிவாஜியும் செய்த சாதனைகள் இந்தியதிரையுலகின் முடிசூடாமன்னன் ரஜினிதான் என வடஇந்தியர்களையும் ஒத்துக்கொள்ளவைத்தது. காரணம் குறுகிய மக்கள் தொகைக்கான தமிழ் சினிமாவை, இந்தியாவின் மிகப் பெரும்பான்மையானோர்  பார்க்கும் ஹிந்தி சினிமாவுக்கு நிகராக தூக்கி நிறுத்தியதுதான்!! 

அதுதவிர அமெரிக்கா, இங்கிலாந்து, டுபாய், சிங்கப்பூர் , மலேசியா, இலங்கை என தமிழர்கள் அதிகமாகவுள்ள நாடுகளிலும் தென்னாபிரிக்கா,ஜப்பான் போன்ற தமிழர்கள் மிகக்குறைவாகவுள்ள நாடுகளிலும் எந்திரன், சிவாஜி திரைப்படங்கள் சமகாலங்களில் அனைத்து இந்தியப்படங்களின் சாதனைகளையும் முறியடித்தது; குறிப்பாக சிவாஜி இங்கிலாந்து Box office இல் முதல் பத்து இடங்களுக்குள் வந்து வரலாற்றுச்சாதனை படைத்தது. இதன் மூலம் வெளிநாட்டு சந்தைகளில் தமிழ்சினிமாவுக்கு வியாபாரத்தை பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தினார் ரஜினி.

தமிழ் சினிமாவின் தரத்தை உலகத்தரத்துக்கு கொண்டுசெல்ல சில நடிகர்களும் இயக்குனர்களும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ்சினிமாவையே உலகநாடுகளுக்கு எடுத்துசென்று சாதனை படைத்தவர் ரஜினி. சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகளில் முதல்முதலாக ரசிகர் மன்றங்கள் தொடக்கப்பட்டது எம்.ஜி.ஆருக்கே என்றாலும் இன்று தமிழர்கள் வாழும் நாடுகள் அனைத்திலும் ரஜினி ரசிகர்மன்றங்கள் மிகப்பெரியளவில் பெருகியுள்ளது. குறிப்பாக ஜப்பானியர்கள் நூற்றுக்கணக்கில் ரசிகர்மன்றன்களை வைத்துள்ளது ரஜினி தமிழக, இந்திய மக்களையும் தாண்டி வேற்றுமொழி மக்கள்மீது செலுத்திய ஆதிக்கத்துக்கு சான்று.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் தமிழகத்திலும், வேறொருநாளில் ரிலீஸ் செய்யப்பட்டு இலங்கையிலும் வசூலை அள்ளிக்கொட்டியது வரலாறு. அதுதவிர கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் நன்றாக ஓடியது. ஆனால் ரஜினி தமிழகத்தையும் தாண்டி தென்னிந்தியா, இந்தியா, உலகநாடுகள் என தனது வீச்சை விஸ்தரித்திருக்கிறார். அன்று தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருந்த எம்.ஜி.ஆரையும் தாண்டி இன்று ரஜினி இந்தியசினிமாவின் உச்சநட்சத்திரமாக விளங்குகிறார்; இதனால் எம்.ஜி.ஆர் ரஜினியைவிட குறைவானவர் என்று அர்த்தமில்லை. எம்.ஜி.ஆருக்கு தனது படங்களை வெளிநாடுகளிலும், இந்தியா முழுவதிலும் வெளியிடும் வசதிவாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையவில்லை என்பதே உண்மை, சிலநேரங்களில் அந்தவாய்ப்பு அமைந்திருந்தால் எம்.ஜி.ஆரும் உலகநாடுகளுக்கு தனது படங்களின் வீச்சை விஸ்தரித்திருந்திருக்கலாம்.

 அரசியல்

 இந்த விடயத்தில்தான் அதிகமாக ரஜினியை எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு குறைவாக மதிப்பிடும் ரஜினிக்கு எதிரான விமர்சகர்கள் அதிகம். எம்.ஜி.ஆர் தனியாக கட்சியமைத்தார் ஆட்சியைப்பிடித்தார், மூன்றுமுறை தொடர்ந்து C.M ஆனார், இவை அனைத்தும் மிகப்பெரிய சாதனைகள்தான். ஆனால் ரஜினி அரசியலில் இன்னமும் காலடி எடுத்துவைக்கவில்லை!! ஒருதடவை ரஜினியின் voice ஆல் தி.மு.க,  த.மா.கா கூட்டணி வெற்றியடைந்ததாக கூறப்பட்ட போதும் சரி 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றதேர்தலில் பா.ம.க வுக்கு எதிராக ரஜினியின் கோபம் தோல்வியடைந்தபோதும்சரி ரஜினி நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை. ரஜினி நேரடியாக அரசியலில் ஈடுபடும் பட்சத்தில்தான் அரசியல் ரீதியாக இருவரையும் ஒப்பிடமுடியும்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை திட்டமிடப்பட்ட ஒன்று, ஆரம்பகாலங்கள் முதலே தி.மு.கவினர் தமது கொள்கைகளை எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் மூலமாகவே மக்களுக்கு புரியவைத்தனர். காலப்போக்கில் எம்.ஜி.ஆரும் தனது அரசியல் எதிர்காலத்துக்கு ஏற்றமாதிரி பாமர மக்களை ஈர்க்கும்பொருட்டு தன்னை சிறந்தமனிதனாக வெளிக்கொண்டுவரும் பாத்திரங்களிலேயே முழுக்கமுழுக்க நடித்துள்ளார். அண்ணாவின் கொள்கைகளும், கலைஞரின் சிந்தனைகளும் எம்.ஜி.ஆர் மூலமாகவே மக்களை சென்றடைந்ததால் அந்தக்கருத்துக்கள் அன்றைய பாமர மக்களால் எம்.ஜி.ஆரின் சொந்தக்கருத்தாகவே கணிக்கப்பட்டது.

அதனால்தான் அண்ணாவின் மறைவுக்குபின்னர் கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்குமான பூசலில் கட்சி இரண்டாக உடைந்தபோதும் எம்.ஜி.ஆரை கலைஞரால் இறுதிவரை ஜெயிக்கமுடியவில்லை. அந்தநேரத்தில் திராவிடகழகம் செயலிழந்த நிலையில் இருந்தததும், காங்கிரஸ் ஹிந்தி ஆதரவு கட்சி என்று முத்திரை குத்தப்பட்டதும் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிந்து சென்ற எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடக்கி வெல்வதற்கு சாதகமான காரணங்களாக இருந்தன. திரையில் பாடி, ஆடி, சண்டைபோடும் எம்.ஜி.ஆர் உண்மையில் அப்படிப்பட்ட சாகசகாரர்தான் என அன்றைய மக்களில் பெரும்பான்மையானோர் நம்பினார்கள். அன்றைய மக்களின் அறியாமை கூட எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு முக்கியகாரணம்.

ஆனால் இன்றைய சூழல் அப்படியா இருக்கின்றது? மக்களுக்கு நிழல் எது நிஜம் எது என்று நன்றாக புரிந்துள்ளது, ரஜினி அரசியலுக்கு வந்து  ஜெயித்தால்கூட  அது ரஜினி என்கிற நடிகனுக்கு கிடைத்த வெற்றியாக கருதமுடியாது!! ரஜினி என்கிற தலைவன்/மனிதன் மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகவே கணிக்கப்படும்! அது தவிர ரஜினியும் ஆரம்பகாலம் முதலே அரசியலில் ஈடுபடுவதற்காக திரைப்படங்கலை தேர்ந்தெடுத்து  நடித்து, ஆரம்பகாலங்களிலேயே தி.மு.க வின் அடிப்படை உறுப்பினராக இருந்து இன்று கழகத்தில் நல்ல பதவியிலுமிருந்து, கலைஞரின் காலத்துக்கு பின் ஸ்டாலினுடன் முரண்பட்டு தனிக்கட்சியமைக்கும் நிலை வந்திருந்தால்...... இந்த இடத்தில்  சிந்தித்துபாருங்கள் ரஜினி முதல்வராகுவது கடினமான விடயமாக இருந்திருக்குமா?

அதற்காக ரஜினி அரசியலுக்கு ஒருவேளை வந்தால்  ஜெயிக்க முடியாதென்றில்லை; அனால் எம்.ஜி.ஆர் காலத்திலும் பார்க்க மிகமிக மோசமான அரசியல் கட்சிகள், அந்தக்கட்சிகளுக்கு சொந்தமான பக்கசார்பான மிகப்பலமான ஊடகங்கள், ரௌடி அரசியல், கள்ளவோட்டு ஜனநாயகம் , வாக்காளர்களுக்கு லஞ்சம்  என மோசமான அரசியல் கலாச்சாரம் நிலவும் தமிழகத்தில் நேர்மையான முறையில் ஆட்சியைப்பிடிப்பதர்க்கு நிறையவே சிரமங்களை ரஜினி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது ரஜினிக்கும் தெரியும்!!

எப்படி சினிமாவை பொறுத்தவரை ரஜினி தமிழகத்தினுள் ஆதிக்கம்செலுத்திய எம்.ஜி.ஆரையும் தாண்டி இந்தியாவிலும் , உலகளவிலும் ஆதிக்கஞ்செலுத்த சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சாதகமாயிருந்தனவோ; அதேபோல் அரசியல் விடயத்தில் எம்.ஜி.ஆரின் காலத்துடன் ஒப்பிடுகையில் சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் ரஜினிக்கு பாதகமானவை என்பதை யாரும் மறுக்கமுடியாது. எது எப்படி இருப்பினும் ரஜினி நேரடியாக அரசியலில் ஈடுபடும் சந்தர்ப்பம் உருவானால்தான் அவரது அரசியல் பலம் எப்படி இருக்குமென்று கூறமுடியும்.

 ரசிகர்கள்

இரண்டு பேருமே தத்தமது காலங்களில் அதிகமான ரசிகர்களினை தம்மகத்தே கொண்டிருந்தாலும் எம்.ஜி.ஆருக்கு பெண் ரசிகர்களும், பாட்டாளிவர்க்க ரசிகர்களும் ரஜினியை விட அதிகமாகவே காணப்பட்டார்கள். எம்.ஜி.ஆர் படங்களில் தாய்க்கும், தாய்க்குலங்களுக்கும் முன்னுரிமை கொடுத்தல், புகைப்பிடிக்கும் குடிக்கும் காட்சிகள் இல்லாமை என்பன பெண் ரசிகர்களும்; தொழிலாளர்களுக்காக பாடுபடும் பாத்திரங்களில் அதிகமாக நடித்ததன் மூலம் பாட்டாளிவர்க்கத்தினரும்  ரஜினியைவிட அதிகளவில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்களாக காணப்பட்டமைக்கு  முக்கிய காரணங்களாகும்.

அதேநேரம் எம்.ஜி.ஆருக்கு இருந்ததைவிட அதிகளவு குழந்தைகளும், படித்த, மேல்தட்டு மக்களும் ரஜினிக்கு ரசிகர்களாக காணப்படுகின்றனர். ரஜினியின் ஸ்டைலும், துருதுருநடிப்பும் குழந்தைகளுக்கு ரஜினியின்பால் அதிக ஈர்ப்பை ஏற்படுத்த முக்கியகாரணம். ஆரம்பகாலம்முதல் படித்த மேல்தட்டு மக்கள் சிவாஜியையும் பின்னர் கமலையுமே அதிகமாக ரசித்து வந்தனர்;  தம்மை ரசனைமிக்கவர்களாக காட்டிக்கொள்ள இவர்கள் எம்.ஜி.ஆர், ரஜினியை பிடித்திருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்வதில்லை. ஆனால் இன்று அமெரிக்க, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என வளர்ந்த நாடுகளில்கூட ரஜினி படங்கள் வெளியாகும் தினத்தில் கம்பியூட்டர் இஞ்ஜினியர்கள் முதல் டாக்டர்கள் வரை திரையரங்க வாசல்களில் தேங்காய், கற்பூரத்துடன் நிற்பது ரஜினியை படித்த மேல்தட்டு மக்களும்  தற்போது அதிகளவில் ரசிப்பதற்கு சான்று.

அது தவிர வேற்றுமாநில, வேற்றுமொழி பேசுகின்ற, வேற்றுநாட்டு ரசிகர்கள் ரஜினிக்கு அதிகமாக இருப்பது வியப்பான உண்மை. இவர்களில் அதிகமானவர்கள் விளையாட்டு வீரர்கள்; இந்தியாவின் டோனி, டிராவிட், கும்ளே, லியாண்ட பேஸ் மற்றும் இலங்கையின் முரளிதரன், ஜெயசூர்யா தென்னாபிரிக்காவின் மக்காயா நிற்றினி என்போர் அவர்களில் முக்கியமானவர்கள்.

 சமூக விஞ்ஞான வளர்ச்சி

 இந்த விடயங்களில் இரண்டு பேருக்கும் சாதகமான, பாதகமான காரணிகள் உண்டு; எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவரது திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சிகளும் உண்மை என்று அன்றைய ரசிகர்கள் நம்பினார்களென்றால் அதற்க்கு அன்றைய விஞ்ஞான சமூக வழர்ச்சியின்மையே முக்கியகாரணம், இதுவே எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு மிகப்பெரும் சாதகமான காரணியாக இருந்தது.

அதுதவிர அன்றைய காலப்பகுதியில் சினிமா தவிர வேறெந்த பொழுதுபோக்கு அம்சங்களும் சிறப்பானதாக இருந்ததில்லை!! வீடுகளுக்கே சினிமாவை கொண்டுவரும்(T.V , V C R , CD Player ) சாதனங்கள் விரல்விட்டு எண்ணுமளவிற்கே இருந்ததுவும்; இணையத்தள, தொலைக்காட்சி விமர்சனங்களென மக்களைக்குழப்பும் காரணிகள் இல்லாததும், தொலைக்காட்சி அலைவரிசைகளில் இன்றுபோல் திரைப்படங்களை  உடனுக்குடன் போதுமேன்கின்றளவுக்கு  ஒளிபரப்பாமையும், மெகா சீரியல்களின் ஆதிக்கம் இல்லாதமையும்  மக்கள் அனைவரையும் திரையரங்கிற்கு கொண்டுவந்தது.

எம்.ஜி.ஆருக்கு இந்த விடயங்கள் சாதகமானதாக இருந்தாலும் வெளிநாடுகளுகளில் படங்களை வெளியிடமுடியாமை; மற்றும் இன்றைய திரைப்படங்களின் வெறிக்கு தேவையென அனைவரும் நம்பும்  திரைப்படங்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விளம்பரங்களை, ப்ரமோஷன்களை அன்று இன்றுபோல் செய்யமுடியாததுவும் பாதகமானகாரணிகளே.

ரஜினிக்கும் 90 களின் நடுப்பகுதிவரை இந்தக்காரணங்கள் பொருந்தினாலும்,  தற்போதைய நிலையில் இந்த விஞ்ஞான சமூக வளர்ச்சி சில விடயங்களில் சாதகமாகவும் சிலவிடயங்களில் பாதகமாகவும் இருக்கின்றன. இன்று ரசிகர்களுக்கு சினிமா எப்படியெடுக்கின்றார்கள் அதில் நடிகனின் பங்கு என்ன? இயக்குனர்களின் பங்கு என்ன? தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு என்ன? என்று அனைத்தும் அத்துப்படி. இதனால் நிழலுக்கும் நிஜத்துக்குமான வித்தியாசம் இன்று மக்களுக்கு நன்குதெரியும்,  அன்றைய காலகட்டத்தில் இருந்ததைப்போல் மக்களின் அறியாமை இன்று சினிமாவிற்கு சாதகமாக இருக்காது.

அதேபோல் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ரஜினி தன்னை விஸ்தரித்ததற்கு விஞ்ஞான வளர்ச்சி பேருதவி புரிந்தன!!  இந்த விடயத்தில் விஞ்ஞான வளர்ச்சி சாதகமாக இருந்தாலும்; இன்று பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி, D V D Player, கம்பியூட்டர் வருகையால் தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு சானல்கள் , வீட்டிலேயே தொலைக்காட்சிகளில் புதிய திரைப்படங்கள், இன்டர்நெட், Facebook  என மக்களுக்கு நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகரித்திருப்பதும்;  திருட்டு V C D களும் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதற்கு  மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. இருந்தாலும் இவஎல்லாவர்ரையும் தாண்டி இன்றும் ரஜினி படங்களுக்கு வரும் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்வது ஆச்சரியமான அதேநேரம் மிகப்பெரும் சாதனை என்பதை மறுக்கமுடியாது!!

எம்.ஜி.ஆர், ரஜினி இருவரையும் ஒப்பிடுவதே தவறானதாகும்;  இருவருமே தத்தமது காலங்களில் உச்சத்தை தொட்ட சாதனையாளர்களே. எம்.ஜி.ஆரை விட ரஜினியோ,  ரஜினியை விட எம்.ஜி.ஆரோ எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை. அரசியல், சினிமா, ரசிகர்கள் என்பவற்றில் சிலவிடயங்களில் ரஜினியும் சிலவிடயங்களில் எம்.ஜி.ஆரும் ஒருவரைவிட ஒருவர் அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்களென்றால் அதற்கு முக்கியகாரணம் அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்த சமூகக்கட்டமைப்பு, மக்களின் சிந்தனைவளர்ச்சி, விஞ்ஞான தொழில்நுட்பவளர்ச்சி, அரசியல் சூழ்நிலை, மக்களின்தேவை போன்ற சந்தர்ப்பசூழ்நிலைகளே காரணம். ஆனால் இன்னுமொருவர் இவர்களது உச்சங்களை எட்டுவார்களா என்றால் அது சந்தேகமே!! அதற்கும் மேற்குறிப்பிட்ட காரணிகளே முக்கியகாரணமாக இருக்கும்.

ரஜினி உச்சத்திலிருக்கும்போது எம்.ஜி.ஆரோ(1978-2009) இல்லை எம்.ஜி.ஆர் உச்சத்திலிருக்கும்போது ரஜினியோ(1955 -1972) அறிமுகமாகியிருந்தால் இருவருமே பத்தோடு பதினொன்றாகத்தான் இருந்திருப்பார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை, இதுதான் இவ்விருவரதும் தத்தமது காலத்து உச்சகட்ட செல்வாக்கிற்கு சான்று.

இந்தப்பதிவு ரஜினியை எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு சிறுமைப்படுத்த நினைப்பவர்களுக்காக மட்டுமே அன்றி எம்.ஜி.ஆரை விமர்சிப்பதற்காக அல்ல. 

 நன்றி 

12 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

அண்ணே எம்.ஜி.ஆர் அரசியலுக்காகவே படம் நடித்தவர் , அவருடைய பட கதை அரசியலை சேர்த்து தான் எழுதபட்டே இருக்கும் .

ஆனால் ரஜினி இன்னும் அப்படி ஒரு படமும் நடிக்கவில்லை .

.....................

எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வருவார் என்று எல்லோருக்கும் முதலிலேயே தெரியும் , ஆனால் ரஜினி இன் முடிவு என்ன என்று யாருக்குமே தெரியாது.

எம்.ஜி.ஆர் கால அரசியலுக்கும் , தற்போதைய அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

Unknown said...

this comment is copied from another blog

http://shaaji.blogspot.com/2009/01/blog-post_8145.html

ஆனால் சென்னையில் ஓட்டேரி மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட இந்த போஸ்டர் இது வரை நாம் பார்த்த போஸ்டர்களுள் சிறந்த ஒன்று என்று தாராளமாக சொல்லலாம். போஸ்டரில் புரட்சி ஏற்படுத்தும் திருச்சி ரசிகர்களுக்கு கூட இது தோன்றாதது ஆச்சரியம் தான்.அப்படி என்ன இந்த போஸ்டரில் விஷேஷம் என்கிறீர்களா?

http://shaaji.blogspot.com/2009/01/blog-post_8145.html ( visit this link to see the poster)

சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு (1970) புரட்சி தலைவர் எம்.ஜி.யாரை வைத்து முரசொலி மாறனின் தயாரிப்பில் வெளியான படம் எங்கள் தங்கம். அதில் எம்.ஜி.யாருக்கு ஜோடி ஜெயலலிதா.

இன்று 2009 இல் முரசொலி மாறனின் புதல்வன் கலாநிதி மாறனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் எந்திரன். “History repeats itself” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. வரலாறு புதிதாக பிறப்பதில்லை. அது திரும்ப திரும்ப நடக்கூடிய ஒன்று என்று அதற்க்கு அர்த்தம்.

போஸ்டர் கூறும் செய்தி என்ன?

“அன்று முரசொலி மாறன் தயாரிப்பில் புரட்சி தலைவரின் எங்கள் தங்கம்.

இன்று கலா நிதி மாறன் தயாரிப்பில் புரட்சி வீரனின் எந்திரன் - வெற்றியடைய வாழ்த்துகிறோம்.”

ஸ்ரீ.கிருஷ்ணா said...

rocking...

அ.ஜீவதர்ஷன் said...

dialog

//எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வருவார் என்று எல்லோருக்கும் முதலிலேயே தெரியும் , ஆனால் ரஜினி இன் முடிவு என்ன என்று யாருக்குமே தெரியாது.

எம்.ஜி.ஆர் கால அரசியலுக்கும் , தற்போதைய அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.//

உங்கள் கருத்து நூறு சதவிகிதம் சரியானது

அ.ஜீவதர்ஷன் said...

dialog said

//this comment is copied from another blog//

nice

அ.ஜீவதர்ஷன் said...

ஸ்ரீ.கிருஷ்ணா

//rocking...//

thanks.

கிரி said...

"எம்.ஜி.ஆர், ரஜினி இருவரையும் ஒப்பிடுவதே தவறானதாகும், இருவருமே தத்தமது காலங்களில் உச்சத்தை தொட்ட சாதனையாளர்களே."

சரியான பார்வை

நீங்கள் கடைசியாக கூறிய விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளன..

அ.ஜீவதர்ஷன் said...

கிரி

//சரியான பார்வை

நீங்கள் கடைசியாக கூறிய விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளன..//

உங்கள் தொடர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்....

சிங்கக்குட்டி said...

உண்மை ரஜினியை யாருடனும் ஒப்பிடுவது என்றால் அங்கு எதோ அரசியல் நடக்கிறது என்று அர்த்தம்.

அதே போல் ஒரிஜினல் டி.வீ.டி-யே கையில் கொடுத்தாலும் ரஜினி படத்தை திரையில் பார்க்கத்தான் அவர் எதிரிகளும் கூட விரும்புவார்கள்.

அ.ஜீவதர்ஷன் said...

சிங்கக்குட்டி

//உண்மை ரஜினியை யாருடனும் ஒப்பிடுவது என்றால் அங்கு எதோ அரசியல் நடக்கிறது என்று அர்த்தம்.

அதே போல் ஒரிஜினல் டி.வீ.டி-யே கையில் கொடுத்தாலும் ரஜினி படத்தை திரையில் பார்க்கத்தான் அவர் எதிரிகளும் கூட விரும்புவார்கள்.//


நீங்கள் கூறுவது 100% சரி

r.v.saravanan said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் எப்பூடி

அ.ஜீவதர்ஷன் said...

r.v.saravanan kudandhai

// நல்ல பதிவு வாழ்த்துக்கள் எப்பூடி//

நன்றி.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)