Wednesday, December 12, 2012

ரஜினிகாந்த் - 2000 களில்



ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

1999 படையப்பா வெற்றியின் பின்னர் ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகரித்திருந்தது; பத்திரிகைகள் ரஜினியின் அடுத்த திரைப்படம் பற்றி ஒவ்வொரு விதமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. மூன்றாண்டுகளாக தனது அடுத்த திரைப்படம் பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடாத ரஜினிகாந்த் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாற்போல தனது அடுத்த திரைப்படத்தை அறிவித்தார். 'பாபா' - இதுதான் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க இருப்பதாக அறிவித்த திரைப்படம்; தனது ஆன்மீக தேடலான பாபாஜியினை தமிழ் மக்களுக்கும் அறியப்படுத்துவதே ரஜினியின் முக்கிய நோக்கமாக இருந்தது. 'பாபா' திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரிக்க ஆரம்பித்திருதது.

பத்திரிகைகளின் சினிமா செய்திகளில் 'பாபா' பற்றிய ஒரு வதந்தியாவது அன்று குறைந்தபட்சம் இடம் பெற்றிருந்தது; சினிமா சம்பந்தமாக பேசுபவர்களால் 'பாபா'வை தவிர்க்க முடியவில்லை. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் 2002 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பதினோராம் திகதி 'பாபா' வெளிவந்தது. மிகப்பிரமாண்டமான ஓப்பினிங் பாபாவிற்கு கிடைத்தது, ரசிகர்களுக்கு 'பாபா' பிடித்திருந்தாலும் பொதுமக்களின் எதிர்பார்ப்பை 'பாபா' பூர்த்திசெய்யவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு படம் போகவில்லை; தயாரிப்பு செலவினைவிட அதிகமாகவே வசூலித்திருந்தாலும் அதிகவிலைக்கு விற்கப்பட்ட காரணத்தால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்ப்பட்டது; ரஜினிகாந்தின் சொந்த தயாரிப்பாகையால் நஷ்டமடைந்த விநியோகிஸ்தர்களுக்கு பணத்தை திரும்ப கொடுத்தார். இது ரஜினி மீது விநியோகிஸ்தர்களுக்கு மேலும் நம்பிக்கையையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கியது.

என்னதான் பாபா தோல்விப்படமாக அமைந்தாலும் அந்த ஆண்டின் அதிகம் வசூலித்த திரைப்படம் பாபாதான்; மிகப்பெரும் வெற்றியாக கணிக்கப்பட்ட திரைப்படங்களின் வசூல்கள் பாபாவின் வசூலை நெருங்க கூட முடியவில்லை. ஆளும் தி.மு.கவின் மௌன ஆதரவுடன் கூட்டணி கட்சியான பா.ம.கவினர் பாபா திரைப்படத்திற்கு எதிராக திரையரங்குகளை முற்றுகையிட்டு நடத்திய விஷம எதிர்ப்பு போராட்டமும் பாபாவின் வசூலை பாதித்திருந்தது. அவர்களது எதிர்ப்பு இல்லாவிட்டால் படம் வெற்றியடைந்திருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் இன்னமும் அதிகமான வசூலை கொடுத்திருக்கும். பாபாவின் தோல்வி ரஜினியை விமர்சிப்பவர்களுக்கும், ரஜினியின் வீழ்ச்சியை எதிர்பார்த்து வருடக்கணக்கில் காத்திருந்தவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்தது என்றால் மிகையில்லை. இன்றுவரை ரஜினியை பிடிக்காதவர்களுக்கு 'பாபா' அவ்வப்போது உதவிக்கொண்டுதான் இருக்கின்றது!!!



பாபாவின் தோல்வி, ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான மௌனம் என்பன பாபாதான் ரஜினியின் இறுதித் திரைப்படமோ என்கின்ற மாயையை உருவாக்கியது. நேரடியாகவும், மறைமுகமாகவும் ரஜினி அவளவுதான்! ரஜினியின் காலம் முடிந்துவிட்டது! என பேச்சுக்கள் அடிபடத் தொடங்கின. அடுத்த தலைமுறை நடிகர்கள் நான்தான், நான்தான் சூப்பர் ஸ்டார் என தமக்குத்தானே அடைமொழி போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர்; பாபா வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்தும் ரஜினியிடமிருந்து எந்த அறிவிப்பு வெளியாகாதது அவர் ரசிகர்களுக்கும் ரஜினியின் அடுத்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை குறைக்க ஆரம்பித்திருந்தது. ரஜினி அவளவுதானா? அவர் சினிமா கேரியர் முடிந்து விட்டதா? என பலரும் மனக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் வெளியாகியது 'சந்திரமுகி' அறிவிப்பு.

திடீரென அறிவிக்கப்பட்ட பட அறிவிப்பு, பெண்ணின் பெயரில் படத்தின் தலைப்பு, புதிய மாற்றங்களுடன் தமிழ் சினிமா என பல காரணிகள் ரஜினி ரசிகர்கள் தவிர்த்து மற்றயவர்களுக்கு சந்திரமுகிமீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் பத்திரிகை செய்திகளில் சந்திரமுகி பற்றிய செய்திகளுக்கு குறைவில்லை. ரஜினி திரைப்படங்களுடன் மற்றைய நடிகர்கள் தங்கள் திரைப்படங்களை வெளியிடத் தயங்கிய நிலைமாறி சந்திரமுகியுடன் போட்டிக்கு விஜயின் சச்சின், அஜித்தின் வரலாறு, விக்ரமின் அந்நியன், கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் என நான்கு திரைப்படங்கள் தயாராக இருந்தன; காரணம் ரஜினியின் வீச்சு குறைந்திருக்கும் என்கின்ற நம்பிக்கை!!!

படப்பிடிப்பு பாதியும் முடிவடையாத நிலையில் அஜித்தின் வரலாறு; விக்ரம், ஷங்கர் போன்றோருக்கு ரஜினி மீதிருந்த மரியாதை காரணமாக அந்நியனும் தள்ளிப் போக 2005 ஆம் ஆண்டு சித்திரை வருடப்பிறப்பிற்கு விஜயின் 'சச்சின்', கமலஹாசனின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படங்களுடன் கூடவே வெளிவந்ததுதான் சந்திரமுகி. 1992 ஆம் ஆண்டு 'குணா' திரைப்படத்தை 'தளபதி' திரைப்படத்துடன் வெளியிட்ட  பின்னர் எந்த கமல் படமும் ரஜினி திரைப்படத்துடன் சேர்ந்து வெளிவந்ததில்லை; ரஜினியை ஜெயிக்க கமலுக்கு கிடைத்த சந்தர்ப்பமாக மும்பை எக்ஸ்பிரஸும்; ரஜினி படத்துடன் ஜெயித்தால் நம்பர் வண்ணாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தில் விஜயின் சச்சினும் சந்திரமுகிக்கு போட்டியாக வெளிவந்தன.



ஓப்பினிங் முதற்கொண்டு திரைப்படத்தின் வசூல்வரை எவற்றிலும் கூடவந்த இரு திரைப்படங்களாலும் சந்திரமுகியை நெருங்ககூட முடியவில்லை. ரஜினி ரசிகர்களையும் தாண்டி மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட சந்திரமுகி வரலாறு காணாத வெற்றி பெற்றது; சந்திரமுகியின் வெற்றி ரஜினி இன்னமும் மக்கள் மனங்களில் வாழ்கிறார் என்பதை உணர்த்தியது. உச்ச நட்ச்சத்திர நாற்காலி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரஜினியினுடயதுதான் என சந்திரமுகி வெற்றி உணர்த்தியது; மூன்றாண்டுகால வனவாசத்தின் பின்னர் மீண்டும் தனக்காக காத்திருந்த நாற்காலியில் உட்கார்ந்தார் சூப்பர் ஸ்டார். முன்னதாக சந்திரமுகி ஆடியோ ரிலீசில் பேசிய ரஜினிகாந்த் "விழுந்தா எழுந்திரிச்சிக்காம இருக்கிறதுக்கு நான் ஒன்றும் யானை இல்லை; குதிரை" என்று கூறியிருந்தார்; அவர் சொன்னதுபோலவே தான் குதிரைதான் என்பதையும் நிரூபித்தார்.

சந்திரமுகி வெளியானகாலத்தில் அப்போது ஐந்து வயதுகூட நிரம்பாத குழந்தைகளும் தங்களுக்கு பிடித்த ஹீரோவாக ரஜினிகாந்த் பெயரை உச்சரித்தது ஆச்சரியமான உண்மை; பாபா திரைப்படம் வெளிவரும்போது பிறந்திராத, அல்லது ஓரிரு வயது கூட நிரம்பியிராத குழந்தைகள் சந்திரமுகி என்னும் ஒற்றை திரைப்படத்தில் ரஜினியை தமக்கு பிடித்த ஹீரோவாக உணர்கிறார்கள் என்றால் அதிலுள்ள மாஜிக் என்னவென்பது புரியாத புதிரே!! ரஜினி என்னும் மூன்றெழுத்து மந்திரம் வாங்கிவந்த வரமா? இல்லை ரஜினியின் வசீகரமா? இல்லை இனந்தெரியாத சக்தியா? 1978 இல் ஆரம்பித்த ஈர்ப்பு 2005 இலும் ரஜினிகாந்திடம் குறையவில்லை!!!! ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே அமைந்த வரமிது.

சந்திரமுகி வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்திலிருந்த வேளையில் 'சிவாஜி' திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியது. முதல்வன் திரைப்படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் ஷங்கர் கூட்டணி சிவாஜியில் இணைந்தது. 2007 ஆனி மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிவாஜி மிகப்பெரும் சாதனைகளை புரிந்தது. அதிகளவு திரையில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டு மிகக் குறைந்த நாட்களில் பணத்தை எடுக்கும் புதிய யுக்தியை சிவாஜி தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. 6.2 கோடிகளுக்கு அபிராமி ராமனாதனால் வாங்கப்பட்ட சிவாஜி சென்னையில் மட்டும் 20 க்கு மேற்ப்பட்ட திரையரங்கில் வெளியிடப்பட்டு 12 கோடிகள்வரை வசூலித்து.



வெளிநாடுகளுக்கும் தமிழ் சினிமா வியாபாரத்தை விஸ்தரித்த பெருமையும் சிவாஜியையே சாரும். இங்கிலாந்து பாக்ஸ் ஆபீசில் முதல் பத்து இடங்களுக்குள் வந்த ஒரே தமிழ் திரைப்படம் என்கின்ற பெருமையை பெற்ற சிவாஜி; அமேரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், டுபாய், தென்னாபிரிக்கா என தமிழ் சினிமாவை உலகநாடுகளுக்கு விஸ்தரித்து தமிழ் சினிமாவின் வியாபாரத்தை மிகப்பெருமளவில் அதிகரிக்கும் உக்தியை அறிமுகப்படுத்தியது. வட இந்தியாவும், வட இந்திய ஊடகங்களும் வியக்குமளவிற்கு ரஜினியின் புகழை உயர்த்தியதும் சிவாஜி என்றால் மிகையில்லை. சிவாஜி வெளியான அதே தினம் வெளியான அமிதாபச்சன், அபிசேக்பச்சன் நடித்த ஜூம் பராபர ஜூம் திரைப்படத்தைவிட மும்மையில் அதிகளவிலான ஓப்பினிங்கை பெற்ற சிவாஜியை பார்த்து வட இந்திய ஊடகங்கள் ஆச்சரியப்பட்டன!

சிவாஜியின் வீச்சு இந்தியாவின் பிரபல ஆங்கில ஊடகங்கள் ரஜினியை தலையில் தூக்கிவைத்து கொண்டாட ஆரம்பித்தன; ரஜினியின் எளிமை, ஊடகங்களை மதிக்கும் பண்பு என்பன ரஜினிமீது அவர்களுக்கு மென்மேலும் ஈர்ப்பை ஏற்ப்படுத்தின. இந்தியாவின் சூப்பர்ஸ்டார் யாரென CNN நடாத்திய கருத்து கணிப்பில் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனைவிட அதிகளவு வாக்குகள் பெற்றது ரஜினிகாந்தை 'இந்தியன் சூப்பர் ஸ்டார்' என வடஇந்திய ஊடகங்கள் அழைக்க காரணமாக அமைந்தது. தொடர்ந்து NDTV நடாத்திய INDIAN OF THE YEAR வாக்கெடுப்பில் ஷாருக்கானை பின்தள்ளி அதிகவாக்கு பெற்று ரஜினி வெற்றி பெற்றமை மேலும் வட இந்தியாவை ரஜினிபால் ஈர்க்க காரணமாக அமைந்தது. குறிப்பிட்ட நிகழ்வில் வட இந்தியாவின் முன்னணி இயக்குனர் கரன் ஜோகோர் ரஜினிகாந்திடம் காம்பிளிமென்ட்டாக கேட்ட "ரஜினிகாந்தால் செய்ய முடியாத காரியம் ஏதாவது இருக்கின்றதா?" என்னும் கேள்வியே ரஜினியை வடஇந்தியா எந்தளவிற்கு உயரத்தில் வைத்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு.

சிவாஜிக்கு அடுத்து ரஜினி நடித்த திரைப்படம் குசேலன்; ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பி.வாசு இயக்கிய குசேலனில் ரஜினி நடிகராகவே நடித்திருப்பார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய குசேலனை ரஜினியை முன்னிறுத்தி விளம்பரம் செய்த கவிதாலயாவும், பிரமிட் சமீராவும் அதிக விலைக்கு குசேலனை விற்றனர். மக்கள் ரஜினியிடம் எதிர்பார்க்கும் விடயங்கள், மிகக் குறைந்த நேரமே ரஜினி திரையில் தோன்றுவது, மற்றும் மோசமான திரைக்கதை காரணமாக குசேலன் சரியாக போகவில்லை. ரஜினியின் பெயருக்காக மிகப்பெரும் ஓப்பினிங்கை கொடுத்த குசேலன் அடுத்தடுத்த வாரங்களில் வசூலில் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது; இதற்கு ரஜினியின் ஒகேனக்கல் உண்ணாவிரத பேச்சின் பின்னணியிலான சம்பவங்களும்; அதை ஊதிப் பெரிதாக்கி காரியம் சாதித்த ஊடகங்களின் பங்கும் முக்கியமானவை.



இந்தத்தடவையும் நஷ்டமடைந்த விநியோகிச்தர்களை ரஜினி கைவிடவில்லை; தன்னால் நஷ்டமடைந்தவன் யாரும் இருக்ககூடாது என்பதில் ரஜினி எப்போதும் அவதானமாக இருப்பவர்.  நஷ்டத்தொகையை தனது கைக்காசில் திரும்பக் கொடுத்தார். திரைப்படம் வெளிவரும் முன்னரே "குசேலனில் பசுபதி 50 % வடிவேலு 25 % நான் 25 %" என ரஜினி பல தடவை விளங்க கூறியும் பணத்திற்காக ரஜினியை முன்னிறுத்தி தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் செய்த விளம்பரத்திற்கு இறுதியில் பொறுப்பேற்றவர் ரஜினி!! ஒருவழியாக குசேலனும் பாபா வரிசையில் ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு கிடைத்த மற்றுமொரு கருவியாக அமைந்தது; ஆனாலும் குசேலனில் இறுதிக் காட்சியில் தன்னை பிடிக்காதவர்களையும் தன் நடிப்பால் கண்கலங்க வைத்திருப்பார் சூப்பர்ஸ்டார்.

குசேலனின் சறுக்கல் பாபா அளவிற்கு ரஜினிமீது எதிர்மறையை தோற்றுவிக்கவில்லை; குசேலனின் தோல்வி ஒரு முழுமையான ரஜினி படத்திற்கு ஏற்ப்பட்டதில்லை என்பது குசேலனை வைத்து ரஜினியை விமர்சிப்பவர்களின் மனச்சாட்சிக்கும் தெரிந்திருந்தது. அத்துடன் சமகாலத்தில் ரஜினி சங்கருடன் எந்திரன் திரைப்படத்திற்கு தயாராகியிருந்தமையும் குசேலனால் எதிர்மறை தாக்கத்தை பெரிதாக உண்டாக்கவில்லை. அ டுத்து ரஜினியின் எந்திரன் திரைப்படத்தை சுஜாதா அவர்களின் வசனத்தில் ஷங்கர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது; ஆனால் துரதிஸ்டவசமாக சுஜாதா அவர்கள் இயற்கை எய்தியிருந்தார். இது எந்திரன் மீது நிச்சயம் தாக்கத்தை உண்டாக்கும் என்று எதிர்வு கூறப்பட்டது.

சுஜாதாவின் மரணம், தயாரிப்பாளர்கள் மாற்றமென இழுத்தடித்த எந்திரன் படப்பிடிப்பு நிறைவடைந்து ஒருவழியாக 2010 புரட்டாதி 30 ஆம் திகதி எந்திரன் வெளியாகியது; இந்தியாவிலேயே எந்திரன் அளவிற்கு வேறெந்த திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்ததில்லை. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிய எந்திரன் இந்தியா சினிமாவின் அனைத்து சாதனைகளையும் தன்னகப்படுத்திக் கொண்டது. சென்னை பாக்ஸ் ஆபீசில் 17 கோடிவரை வசூலித்த எந்திரன் இந்தியாவில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கின்ற பெருமையை பெற்றது. இங்கிலாந்து, அமேரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், டுபாய், இலங்கை என ரிலீசான அத்தனை நாடுகளிலும் மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்தது.



ஆந்திராவில் முதல் வாரத்தின் சாதனையை முறியடித்த எந்திரன் மிகப்பெரும் வசூலை வசூலித்தது; குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் வெளியிட அனுமதிக்கப்பட்ட கர்நாடகாவில் திரையரங்கு போதாமையால் மேலும் பல திரையரங்குகளை எந்திரனுக்கு அவர்களாகவே வழங்கினார்கள். அந்த ஆண்டு எந்திரனால் கர்நாடாக அரசுக்கு கிடைத்த வரி ஒரு ஆண்டு முழுவதும் சேர்த்தாலும் கிடைக்காத அளவிற்கு அதிகம். கேரளாவில் மோகன்லால், மம்முட்டி பட வசூல்களை ஒரு வாரத்திலேயே கடந்து எட்ட முடியாத இலக்கை உச்ச வசூலாக நிர்ணயித்தது. வட இந்திய ஊடகங்களும், வட இந்திய நடிகர்களும் ரஜினியை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடினர்.

எந்திரன் வெற்றி விளம்பரத்தால் கிடைத்த வெற்றி என்றும், சன் நெற்வேக் இல்லையென்றால் இந்த வெற்றி கிடைத்திருக்காது என்பதும் சிலரது வாதம்; நிச்சயம் எந்திரனில் சன் நெற்வேக்கின் விளம்பரத்தின் பங்கும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் இதைவிட அதிகளவு விளம்பரம் செய்து 150 கோடி பட்ஜெட்டில் ஒரு தமிழ் திரைப்படத்தை ரஜினி இல்லாமல் எந்திரன் அளவிற்கு வேறொரு நடிகனை வைத்து வசூலிக்க முடியமா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். 40 % க்கும் அதிகமாக பேசப்படும் ஹிந்தியில் உருவாகிய ஒரு திரைப்படம் ஏற்படுத்திய சாதனையை வெறும் 5 % பேசப்படும் தமிழ் மொழியிலான திரைப்படத்தால் முறியடிப்பதென்பது ரஜினிகாந்தால் மட்டுமே நிகழ்த்தக் கூடிய அதிசயம்.; அதனால்தான் ரஜினிகாந்த் வட இந்தியர்களும் ஒத்துக்கொள்ளும் இந்தியன் சூப்பர்ஸ்டாராக இந்திய திரையுலகின் முதல்வனாக இன்னமும் வெற்றியுடன் வலம் வருகின்றார்.

எந்திரன் வெற்றியின் பின்னர் ரஜினியின் அடுத்த திரைப்பட அறிவிப்பு குறுகிய காலத்திலேயே 'ரானா' என வெளிவந்தது; கே.எஸ்.ரவிக்குமார் இயக்க ரஜினி நடிக்கும் சரித்திரப் படம்தான் 'ரானா' என நாம் அறியுமுன்னர்; நாம் கனவிலும் நினையாத கொடிய நோய் ரஜினிகாந்தை ஆட்கொண்டது. கோடான கோடி ரசிகர்களின் பிரார்த்தனை, குடும்பத்தினரின் அரவணைப்பு, வைத்தியர்களின் கவனிப்பான மருத்துவம், ரஜினியின் தன்னம்பிக்கை என பல காரணிகளால் நோயை வென்று மீண்டும் பழைய ரஜினியாக மாறிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினியின் நோய்க்காலத்தில் அவர் ரசிகர்கள் பட்ட வேதனையும், அவர்கள் செய்த நேர்த்திகளும், அவர் நோயின் பிடியிலிருந்து மீண்டு வரும்போது இரவு 11 மணிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் சொல்லும் ரஜினியை எந்தளவிற்கு ரசிகர்கள்   நேசிக்கின்றார்கள்  என்று!!



ரானா பிற்போடப்பட்ட நிலையில் சௌந்தர்யா இயக்கத்தில் அனிமேஷன் 'கோச்சடையன்' திரைப்படத்தில் நடித்துவரும் ரஜினி அடுத்து முழுநீள அக்ஷன் படமொன்றில் நடிக்கலாமேன்று எதிர்வு கூறப்படுகின்றது சொல்கின்றார்கள், ரானா நிறுத்தப்படும் என சிலர் எதிர்வு கூறுகிறார்கள், ஷங்கருடன் ரஜினி மீண்டும் இணைகிறார் என்கின்றார்கள்; சிலர் ராஜமௌலி என்கின்றனர், சிலர் கே.வி.ஆனந்த் என்கின்றனர்; இறுதியாக மணிரத்தினம் என்கின்றனர்!! எது வேண்டுமானாலும் நடக்கட்டும், ஆனால் ரஜினியின் உடல்நிலை ரொம்ப முக்கியம். முழுமையான உடற்தகுதி வந்தவுடன் நடித்தால் போதும் அது எதுவோ  முதல்ஷோ பார்க்கும் கோடிக் கணக்கானவர்களில் ஒருவனாக நானும் அங்கிருப்பேன்.  எங்களுக்கு திரும்ப திரும்ப பார்ப்பதற்கு 150 திரைப்படங்களை ரஜினி கொடுத்துள்ளார்; இப்போது 100 ஆண்டுகள் அவர் தன் குடும்பத்தோடு சந்தோசமாக இருப்பதுதான் எங்களுக்கு வேண்டியது.

1975 இல் ஆரம்பித்த 37 வருட பயணம் 1978 இல் கைப்பற்றிய 34 வருட உச்ச நட்சத்திர அந்தஸ்து இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பது ஆச்சரியமான மாபெரும் சாதனை. சிவாஜி, எந்திரன் வசூலின் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ரஜினிக்கு அருகில் எந்த துருவ நட்சத்திரங்களும் இல்லை என்கின்ற உண்மை புரியும். எந்த நடிகனுமே எப்போதும் தக்க வைத்திருந்திருக்காத 34 வருட உச்ச அந்தஸ்தை 2010 களில் எப்படி ரஜினி தக்க வைத்துக் கொண்டார் என்பதை அடுத்த பத்தாண்டுகளின் பின்னால் அலசுவோம்; இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எமது உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்தை பரிமாறிக் கொள்வோம்......

தலை கனத்திடாத எம் தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்........


12 வாசகர் எண்ணங்கள்:

Inayathulla P.A. said...

மனிதர்களை வழிகேட்டில் எடுத்து செல்வது சினிமாவே !

கிரி said...

// எந்திரன் வெற்றி விளம்பரத்தால் கிடைத்த வெற்றி என்றும், சன் நெற்வேக் இல்லையென்றால் இந்த வெற்றி கிடைத்திருக்காது என்பதும் சிலரது வாதம்; //

எந்திரனை விட அதிக விளம்பரம் செய்யப்பட ரா ஒன் நிலை என்ன ஆனது என்று இதே வாய்கள் கூறினால் தேவலை.

கிரி said...

தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Jayadev Das said...

பாபா, குசேலன் ஆகிய படங்கள் ஓடாததற்கு அந்தப் படங்கள் ரசிகர்களுக்கு [ரஜினி ரசிகர்கள் அல்ல சினிமா ரசிகர்கள்!!] திருப்தியாக இல்லை என்பதைத் தவிர்த்து வேறெந்த காரணமும் இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை நண்பரே!! Happy Rajini Birthday!!

Pavi said...

எனது வாழ்த்துக்களும்

Arun Kumar said...

சந்தரமுகி முன்னர் ஜக்கு பாய் படம் தொடராமல் கை விடப்பட்டது. தலைவர் ஜக்குபாய் ஓடாது என்று கணித்து விட்டார்,

N.H.பிரசாத் said...

ஒரு சில தகவல்கள் தவறானதாக இருந்தாலும், பதிவு மிகவும் அருமை நண்பரே. பகிர்தலுக்கு நன்றி.

எப்பூடி.. said...

@ N.H.பிரசாத்

//ஒரு சில தகவல்கள் தவறானதாக இருந்தாலும், பதிவு மிகவும் அருமை நண்பரே. பகிர்தலுக்கு நன்றி.//


தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்தலாம் நண்பரே. நன்றி

இரவு வானம் said...

நல்ல்ல பதிவு தல, தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தர்ஷன் said...

ரஜினி என்ற இந்திய நட்சத்திரத்தை பாலிவுட்டும் கூட உச்சம் இவர்தான் என்பதை ஏற்றுக் கொண்டது இந்தக் காலத்தில்தான்.
ரொம்பவும் குறைவான படங்கள், ஆனால் எப்போதும் இல்லாத வகையில் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு வேறு முகங்கொடுக்க நேரிட்டது.
புதிய அலை இயக்குனர்கள் புதிய பாதையில் சினிமாவைக் கொண்டு செல்ல, சில பேர் அடங்க மாட்டேனென்று பழைய மாதிரியே துள்ள “கண்ணா அதெல்லாம் எனக்கு மட்டும்தான் வரும், முடியும் என தலைவர் சத்தமில்லாமல் சொல்லிக் காட்டிய காலம்

ilavarasan said...

அருமையான பதிவு,
நன்றி அண்ணா.

praveen kumar said...

என் தலைவர்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)