Wednesday, December 12, 2012

ரஜினிகாந்த் - 1990 களில்


ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

சிவாஜிராவில் இருந்து ரஜினிகாந்தாக மாறி 1975 இல் தொடங்கிய ஓட்டம் 1990 வரை நிற்கவே இல்லை; வருடத்திற்கு குறைந்தது 10 படங்கள் (நான்கு மொழிகளில்), சினிமா விழாக்கள் என ஓடிக்கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு அப்போது தேவைப்பட்டது ஓய்வு! ஓய்வு! ஓய்வு! 30 வருடங்களுக்குள் செய்யவேண்டிய வேலையை வெறும் 15 ஆண்டுகளுக்குள் செய்து முடித்த களைப்பு; வேண்டியளவு பணம், புகழ், செல்வாக்கு, பெருமை, உச்ச நட்சத்திர அந்தஸ்து என எல்லாமே கிடைத்தாகிவிட்டது, அப்போது அவருக்கு தேவைப்பட்டது அமைதி, ஓய்வு, குடும்பத்துடன் கழிப்பதற்கு நேரம். இந்த நிலையில் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட மிகச்சிறந்த முடிவுதான் படக்குறைப்பு.

மாக்கெட்டில் இருக்கும் எந்த நடிகனுமே வருடத்தில் குறைந்தது ஐந்து, ஆறு திரைப்படங்களை நடிப்பது அன்றைய காலகட்டத்தின் வழமை. வருடத்திற்கு பத்து பன்னிரண்டு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த் திடீரென தனது படங்களை வெகுவாக குறைக்க ஆரம்பித்தார். 90 களின் நடுப்பகுதி தொடக்கம் வருடத்திற்கு ஒரு படம் என திரைப்படங்களின் எண்ணிக்கையை மிகையாக குறைத்துவிட்டார். 1996, 1998 ஆம் ஆண்டுகளில் எந்த திரைப்படங்களும் வெளிவரவில்லை; திரைப்படங்களை குறைக்க குறைக்க ரஜினியின் மாக்கெட் அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது. வருடத்தில் 10 தடவை பார்த்து ரசித்த ரஜினிகாந்தை வருடத்தில் ஒரு தடவைதான் திரையில் காணலாம் எனும் நிலை வந்தவுடன் ஒவ்வொரு திரைப்படத்திற்க்குமான எதிர்பார்ப்பு உயர ஆரம்பித்தது.

ஒவ்வொரு திரைப்படத்தையும் ரசிகர்கள் தலைமேல் வைத்துக் கொண்டாட ஆரம்பித்தார்கள்; 1980 களில் தமிழ் சினிமாவின் சாதனைகளை முறியடிக்க தொடங்கிய ரஜினி படங்கள்தான் தமிழ் சினிமாவின் வசூலின் அளவுகோலாக எப்போதும் இருந்து வந்துள்ளன; 1990 களில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவின் அதிகபட்ச வசூலை ஒவ்வொரு ரஜினி திரைப்படங்களும் முன்னைய ரஜினி திரைப்படங்களின் வசூலை முறியடித்து சாதனைமேல் சாதனை படைக்க ஆரம்பித்தது. அதேசமயம் 90 களில் அடுத்த தலைமுறை நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என தமிழ் சினிமாவில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. தலைமுறை மாற்றம் ஆரம்பமான 1990 களில் நடுப்பகுதிகளில் ரஜினியின் சமகால நடிகர்கள் பலர் மாக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தனர். ஆனால் ரஜினியின் மாக்கெட் தமிழ் நாடு, தென்னிந்தியா இந்தியா தாண்டி ஜப்பான்வரை அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.



1990 களின் முற்பகுதியில் கணிசமான அளவு திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்; அவற்றில் அதிகமானவை வெற்றித் திரைப்படங்கள். பணக்காரன், தர்மதுரை, மன்னன், தளபதி, அண்ணாமலை, எஜமான், உழைப்பாளி, வீரா என வசூலில் சக்கை போடுபோட்ட ரஜினி திரைப்படங்களுக்கு மகுடம் வைத்தாற்போல 1995 பொங்கல் திருநாளுக்கு (தை 12) வெளிவந்ததுதான் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹிட் திரைப்படமான 'பாட்ஷா'. பாட்ஷாவுக்கு முன்னர் வெளிவந்த மணிரத்தினம் இயக்கிய 'தளபதி' ரஜினியின் திரை வாழ்க்கையில் மற்றுமொரு முக்கிய மைல்க்கல். ரஜினிகாந்த், மணிரத்தினம், இளையராஜா என தமிழ் சினிமாவின் முதல்வர்கள் இணைந்து கொடுத்த தளபதி ரஜினிக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் முக்கிய மைல்க்கல்தான்.

மகாபாரதத்தின் 'கர்ணன்' கதையை அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றால்போல மாற்றி தனது பாணியில் மணிரத்தினம் வழங்கிய தளபதியில் ரஜினியின் பெர்போமன்ஸ் மிகச்சிறப்பாக இருக்கும்; பலநாட்களுக்கு பின்னர் ரஜினிகாந்த் என்னும் நடிகனை புதிய பரிமாணத்தில் பார்த்த மகிழ்ச்சி ரசிகர்களுக்கு; ரஜினி ரசிகர்களையும் தாண்டி அனைவரையும் ஈர்த்த ரஜினி திரைப்படங்களுக்குள் 'தளபதி'யும் ஒன்று. இந்தக் காலப்பகுதியில் ரஜினிக்கு அதிக திரைப்படங்களை இயக்கியவர்கள் இருவர்; ஒருவர் சுரேஷ் கிருஷ்ணா, மற்றையவர் பி.வாசு;

பி.வாசு இயக்கிய பணக்காரன், உழைப்பாளி, மன்னன் என மூன்று திரைப்படங்களும் ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி என பொழுதுபோக்குக்கான அம்சங்களுடன் வெளிவந்து மக்களின் அமோக வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்கள். மன்னன் திரைப்படத்தில் 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' பாடலில் ரஜினி தன நடிப்பால் மக்களின் கண்களை பனிக்க வைத்திருப்பார் (இளையராஜா & ஜேசுதாஸ் அவர்களும்தான்) இதே மன்னன் திரைப்படத்தில்த்தான் ரஜினி பாடிய ஒரே பாடலான 'அடிக்குது குளிரு' பாடலும் இடம்பெற்றது.

சுரேஷ் கிருஷ்ணா - தற்செயலாக ரஜினியின் திரை வாழ்க்கையில் நுழைந்தவர்; அண்ணாமலை திரைப்படத்தினை கவிதாலயாவிற்க்காக இயக்குனர் பாலச்சந்தரின் உதவியாளர் 'வசந்த்' இயக்குவதாக இருந்தது. இறுதிநேரத்தில் வசந்த் விலக அந்த வாய்ப்பு பாலச்சந்தரின் மற்றுமொரு உதவியாளரான சுரேஷ் கிருஷ்ண வசம் போனது. அண்ணாமலை திரைப்படம் வணிகரீதியாக எவ்வளவு வெற்றி பெற்றதோ; அதேயளவிற்கு ரஜினியின் நடிப்பும் பாராட்டுப் பெற்றது. ஸ்டையில், காமடி, வசன உச்சரிப்பு என சூப்பர்ஸ்டார் பிச்சு உதறி இருப்பார். முதல் முறையாக தேவாவின் அதிரடி பின்னணி இசையுடன் சூப்பர்ஸ்டார் வாசகம் டைட்டிலில் போடப்பட்டு அமோக வரவேற்ப்பு பெற்றதும் அண்ணாமலை திரைப்படத்தில்த்தான்.



அண்ணாமலை அசுர வெற்றியை தொடர்ந்து சுரேஷ்கிருஷ்ணா ரஜினியை வைத்து இயக்கிய இரண்டாவது திரைப்படம் 'வீரா'; மீனா, ரோஜா என அன்றைய இரு கனவுக் கன்னிகளையும் ரஜினிக்கு ஜோடியாக்கி இளையராஜாவின் இசையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய வீரா ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக வெற்றி பெற்றது. 1994 புது வருடப்பிறப்பில் வெளிவந்த வீராவிற்கு பின்னர் 1995 பொங்கலுக்குத்தான் அடுத்த ரஜினி படம் வெளிவந்தது ; ஒரு ரஜினி படத்திற்கும் அடுத்த ரஜினி படத்திற்கும் இடையில் இத்தனை பெரிய இடைவெளி அதுவரை ஏற்பட்டதில்லை. இந்த இடைவெளி அடுத்த ரஜினி திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தே மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது; அப்படி மிகுந்த எதிர்பார்ப்புக்கள் உள்ள நேரத்தில் வெளியாகிய திரைப்படம்தான் 'பாட்ஷா'

தமிழ் சினிமாவின் 'ட்ரெண்ட செட்டர்' திரைப்படமாக, வணிக சினிமாவின் சிகரமாக, 'மாஸ்' ஹீரோவின் உச்சமாக இன்றும், என்றும் சொல்லப்படும் பாட்ஷாவின் வீச்சு ரஜினியை பலமடங்கு மேல உயர்த்தியது; தமிழ் சினிமா அதுவரை அப்படி ஒரு திரைப்படத்தை மக்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடி பார்த்ததில்லை. பாட்ஷாவிற்கு பின்னர் பாட்ஷாவின் சாயலில் நிறைய தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன; அதில் பல முன்னணி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் பாட்ஷா சாயலில் இன்னுமொரு திரைப்படத்தின் காட்சிகளில்கூட நடித்ததில்லை; அதுதான் ரஜினியின் இமாலய வெற்றியின் ரகசியம். பட்டி தொட்டியெங்கும் ரஜினியின் நாமம் வேதமாக ஆரம்பித்தது பாட்ஷாவின் பின்னர்தான் என்றால் அது மிகையில்லை.

அடுத்து அதே ஆண்டு வெளிவந்த 'முத்து' திரைப்படம் தமிழகம், இந்தியா கடந்து ஜப்பானிலும் அதீத வரவேற்ப்பை பெற்றது. தமிழ் சினிமாவை தமிழன்/இந்தியன் அல்லாத நாடு ஒன்றிற்கு கொண்டு சென்று பெருமை சேர்த்தார் ரஜினிகாந்த். ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகரிக்க காரணமான முத்து திரைப்படம்தான் ரஜினியுடன் ரவிக்குமார் இணைந்த முதல் திரைப்படம். அடுத்து ரஜினி நடித்த அருணாச்சலம் திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக அமையாவிட்டாலும்; ரசிகர்களாலும், மக்களின் எதிர்பார்ப்பாலும் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் படையப்பா; பாட்ஷா, முத்து திரைப்படங்களில் வசூலை எல்லாம் தாண்டி மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்த படையப்பாவின் வசூலை அடுத்த 6 ஆண்டுகளுக்கு வெளிவந்த எந்த திரைப்படத்தாலும் (சந்திரமுகி வரும்வரை) நெருங்க முடியவில்லை.



திரைப்படம் தாண்டி ரஜினி சம்பந்தமான முக்கியமான மூன்று விடயங்களையும் 1990 களில் தவிர்க்க முடியாது. அவை ரசிகர்கள், அரசியல், ஆன்மிகம். ஆன்மீகத்தை எடுத்துக் கொண்டால் ரஜினியின் மாறுதலுக்கு அது மிக முக்கிய பங்காற்றியது என்றால் அது மிகையில்லை. கோபக்கார, நின்மதியற்ற , மன அழுத்தத்தில் இருந்த ரஜினிகாந்தின் மாற்றத்திற்கு ஆன்மிகம் மிகப்பெரும் உதவியாக இருந்தது. அவரது உடை, தோற்றம், பேச்சு என எல்லாவற்றிலும் ஆன்மிகம் ஆட்சி செய்யத் தொடங்கியது. அவரது பேச்சுக்கள் மெல்ல மெல்ல ஸ்திரமாகவும், தெளிவாகவும் அதேநேரம் முதிர்ச்சி உள்ளதாகவும் மாறத் தொடங்கியது; அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்தையும் நிதானமாக சரியான முறையில் கையாளத் தொடங்கியிருந்தார்.

தனது புறத் தோற்றத்தின் இமேஜை உடைத்தெறிந்தார்; அதுவரை எந்த நடிகனுக்கும் வராத துணிவு அது. முதுமையை, வழுக்கையை, நரைத்த தலையை அவர் மறைக்க விரும்பவில்லை! ரசிகர்கள் ரஜினிகாந்தின் புறத்தை விரும்பவில்லை, அகத்தை விரும்புகிறார்கள் என கணக்கு போட்டார்; அவர் கணக்கு தப்பவில்லை! மரண வீடுகளுக்கும் மேக்கப்போடு செல்லும் நடிகர்களுக்கு மத்தியில் பொது விழாக்களுக்கும் மழிக்காத தாடியுடன், சீவாத பரட்டை தலையுடன், சாதாரண வெள்ளை ஜிப்பாவில் ரஜினி வந்தது ரஜினிமீது மக்களுக்கு மரியாதையை மேலும் மேலும் அதிகரிக்க செய்ததன்றி குறைக்கவில்லை. தனது இமேஜை உடைத்ததுதான் ரஜினியின் மிகப்பெரும் சாதனை; தன்னை மறைக்க எந்த அவசியமும் இல்லாமல் போனது ரஜினிக்கு மிகப்பெரும் சுமையை இறக்கிய மனநிலையை நிச்சயம் கொடுத்திருக்கும்.

ரசிகர்கள், ரசிகர் மன்றங்கள் என ரஜினியை ஆயிரமாயிரம் இளைஞர்கள் பின்பற்ற ஆரம்பித்திருந்தார்கள்; இந்தியாவிலேயே ஒரு நடிகனுக்கு அதிகளவு ரசிகர் மன்றம் அமையப்பெற்றது ரஜினிக்குத்தான். நற்காரியங்கள் பலவும் மன்றங்களால் செய்யப்பட்டாலும் பலர் தம் குடும்பங்களை கவனிக்காமல் மன்றங்களில் மூழ்கி கிடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வெளிவந்தன. உடனடியாக புதிதாக ரசிகர் மன்றங்கள் எவற்றையும் ஆரம்பிக்க வேண்டாம் என ரஜினி உத்தரவு போட்டார்; இன்றுவரை அது நடைமுறையில் உள்ளது. உங்களை, பெத்தவங்களை, குடும்பத்தை, முதல்ல கவனியுங்க; அப்புறம்தான் மத்ததெல்லாமே என ரசிகர்களுக்கு பலதடவைகள் எடுத்து கூறியுள்ளார். அவருக்காக உயிரை கொடுக்க ரசிகர்கள் காத்திருந்தாலும் இதுவரை தன் எந்த தேவைக்கும் ரசிகர்களை அவர் பயன் படுத்தியதில்லை; இனிமேலும் பயன்படுத்த மாட்டார்!!



அரசியல் - 1996 தேர்த்தல் ரஜினியை அரசியல்பால் ஈர்த்தது, அன்றைய ஜெயலிதாவை எதிர்த்து ரஜினி குரல் குடுத்ததுதான் ரஜினியின் அரசியல்மீதான முதல் ஈடுபாடு. தன் கைகளுக்குள் தஞ்சம் புகவந்த சிமாசனத்தையே தனக்கு நம்பகமான தன்னைவிட சிறந்தவர்கள் என தான் நினைத்தவர்களிடம் விட்டுக்கொடுத்தவர் ரஜினிகாந்த். வராதே வராதே என கெஞ்சினாலும் அடம்பிடித்து அரசியலில் நுழையும் நடிகர்கள் மத்தியில், வா வா என எத்தனை பேர் அழைத்தும் இன்னமும் மவுனம் காக்கும் ரஜினியை சிலர் அரசியலில் முடிவெடுக்க பயப்படுகிறார் என்கிறார்கள்; சிலரோ சினிமாவுக்காக மக்களை உசுப்பேத்துகிறார் என்கிறார்கள்; சிலர் என்னய்யா இவர் ஒன்றில் வாறன் என்று சொல்லணும், இல்லை வரலயின்னு சொல்லணும், எதுக்கோ இப்படி குழப்புகிறார் என்கிறார்கள்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லயா? என்பதற்கு ரசிகர்களைவிட, மக்களைவிட; அரசியல் வாதிகளும், கட்சிகளும், அவர்கள் ஊடகங்களும்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. மனச்சாட்சி உள்ளவர்களுக்கு உண்மையான காரணம் தெரியும்; பயம். ரசிகர்களை உசுப்பேற்றி படத்தை ஓட்ட வைக்கிறார் என்பதை 'அபத்தம்' என்பதை தவிர வேறேது சொல்லமுடியாது. அரசியலுக்குள் ரஜினியின் பெயர் அடிபட தொடங்கிய 1996 களின் பின்னர் ரஜினி எத்தனை படங்களில் நடித்திருப்பார்? வெறும் 7 திரைப்படங்கள்தான்; முன்னைய 145 திரைப்படங்களையும் ரஜினி அரசியல் இமேஜை போர்த்திக்கொண்டு நடித்து தன்னை உச்ச நட்ச்சத்திரமாக வெளிக்காட்டவில்லை. மக்கள் ரசிப்பது ரஜினிகாந்த் என்கின்ற நடிகனை; ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கின்ற சஸ்பென்ஸ்சிற்கும் ரஜினி படம் ஓடுவதற்கும் என்ன சம்மந்தம்? என்ன லாஜிக்?

அப்படியானால் ரஜினி ஏன் குழப்புகிறார்? இதை குழப்பமாக பார்த்தால் குழப்பமாகத்தான் தெரியும்; 1996 இல் டூடடர்ஷனுக்கு ரஜினி கொடுத்த நேர்முகத்தின் ஒலிப்பதிவை கீழே இணைக்கிறேன். அதில் ரஜினி தன் அரசியல் நிலைப்பாட்டை எத்தனை தெளிவாக சொல்லியுள்ளார் என்பதை நீங்கள் அறியலாம்; அன்று அவர் சொல்லிய நிலைப்பாட்டிலிருந்து சிறிதாவது மாறியுள்ளாரா என்பதை அதனை கேட்ட பின்னர் கூறுங்கள். அரசியல் மட்டுமல்ல பிற விடயங்களிலும் அவரது முதிர்ச்சியான பதில்கள் ஆச்சரியப்பட வைக்கும்; வேறெந்த நடிகனுக்கும் இத்தனை துணிவாக, மனதில் பட்டதை இத்தனை முதிர்ச்சியோடு கூறும் பக்குவம் இருக்குமா என்பது சந்தேகம்தான்!! அதுதான் ரஜினிகாந்த் மூன்று தலைமுறை கடந்தும் இன்னமும் உச்ச நட்ச்சத்திரமாக இருக்கும் இரகசியம் ....



1975 தொடங்கிய சிவாஜிராவின் பயணம் 1990 ஆம் ஆண்டுகளில் யாருமே நெருங்கமுடியாத உயரத்தில்; 25 ஆண்டுகள் தன்னகத்தே தக்கவைத்திருந்த சிம்மாசனத்தை 2000 களில் ரஜினிகாந்த் எப்படி தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்......

5 வாசகர் எண்ணங்கள்:

கோவை நேரம் said...

ரஜினியின் பிறந்த நாள் பரிசா.....இந்த பதிவு ..அருமை.....

Arun J Prakash said...

கலக்கல், தலைவரை பற்றிய உண்மையான பதிவு. ரொம்ப அருமையா எழுதி உள்ளீர்.
அதுவும் அரசியலை பற்றிய அந்த பத்தி உண்மையான வார்த்தைகள். ரசித்துப் படித்தேன்.

யாழ் மைந்தன் said...

எந்திரன் படம் வர முன்னாடி ஒரு சந்திப்பில எந்திரன் படம் வந்த பிறகு அரசியல் varatha பத்தி சொல்லுறன் என்று சொன்னார் இன்னும் பதில் இல்லையே? happy birth day ரஜினி

Loganathan Gobinath said...

சூப்பர். அசத்துறீங்க.

தர்ஷன் said...

தலைவரின் வாழ்வில் நல்லதும் கெட்டதும் கலந்திருந்த தசாப்தம், தலைவர் தேவையில்லாத அரசியல் சுழலுக்குள் சிக்கிக் கொண்டது வருத்தம். தலைவர் படங்களை குறைத்துக் கொள்ள தேவையில்லாமல் நாக்குலாம்புழுக்கள் எல்லாம் படமெடுத்து ஆட முயன்று தேவையில்லாமல் தமிழ் சினிமாவை பின்னால் எடுத்து சென்றதும் இக்காலத்தில்தான்.
தலைவரின் அசாத்திய சாதனைகள் தளபதி,அண்ணாமலை,பாஷா மூன்றும் போதும் காலகாலத்துக்கும்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)