Wednesday, December 12, 2012

ரஜினிகாந்த் - 1980 களில்ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

1970 களில் மத்தியில் இயக்குனர்கள் கைகளுக்குள் தமிழ் சினிமா தாவியதில் இருந்து கிளாசிக் திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு அதிகமாகவே கிடைக்க ஆரம்பித்தன. அந்த கிளாசிக் திரைப்படங்கள் 1980 களிலும் தொடர்ந்தன ஆயினும் கிளாசிக் திரைப்படங்களை விட வணிகரீதியான திரைப்படங்களே அதிகளவில் மக்களிடத்தே அதீத வரவேற்ப்பை பெற ஆரம்பித்தன. இந்த வணிக சினிமா மாற்றத்திற்கு அன்று ஏ.வி.எம் நிறுவனம் முக்கிய காரணியாக கூறப்பட்டது. ஜனரஞ்சக சினிமாப் பாணியை உடைத்து வணிக சினிமாப் பாதையை மீண்டும் தொடக்கிவைத்த திரைப்படங்கள்தான் முரட்டுக்காளை மற்றும் சகலகலா வல்லவன்.

திரைப்படங்களில் ஒன்றாக நடித்துவந்த ரஜினிகாந்த், கமலஹாசன் இருவரும் "இனிமேல் தனித் தனியாகத்தான் நடிப்பது, சேர்ந்து நடிப்பதில்லை" என்று முடிவெடுத்த நிலையில் 'ஏ.வி.எம்'மிற்க்காக ரஜினி, கமல் இருவருக்கும் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் திரைப்படங்கள்தான் ரஜினி கமலுக்கு வணிக ரீதியான வர்த்தகத்தை உயர்த்திய திரைப்படங்கள். முரட்டுக்காளை - ரஜினி என்கின்ற ஹீரோவின் உதயமும், ரஜினிகாந்த் என்கின்ற மிகச்சிறந்த குணச்சித்திர நடிகனது அஸ்தமனமும் ஆரம்பித்த திரைப்படம். அதுவரை ரஜினி ஸ்டையில் பிரபல்யம் என்றாலும் 'ஸ்டையில்' என்றால் ரஜினி என்று சொல்லவைத்த முரட்டுக்காளை 1980 களின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம்.

முரட்டுக்காளை ரஜினியை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக, ஒரு மாஸ் ஹீரோவாக, வசூல் சக்கரவர்த்தியாக வெளிக்காட்டியதற்கு 10 மாதங்களுக்கு முன்பாக வெளிவந்த திரைப்படம்தான் பில்லா; அமிதாப்பச்சனின் 'டான்' திரைப்படத்தின் தமிழாக்கம்தான் பில்லா. அதுவரையான தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்த பில்லாவில்; பில்லா கேரக்டர் 'மாஸ்' என்றால், ராஜப்பா கேரக்டர் கிளாஸ். பில்லா படப்பிடிப்பின்போது இடம்பெற்ற சுவாரசியமான சம்பவம் ஒன்று; பொது இடமொன்றில் ஷூட்டிங்கின் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரஜினியைப் பார்த்து கூட்டத்தில் நின்ற ஒரு சிலர் 'பைத்தியம்' என்று கூவினர். அந்த இடத்தில் ரஜினிக்கு ஆதரவாக கூட்டத்தில் இருந்து கூவியவர்களை சரமாரியாக திட்டித்தீர்த்தார் நடிகை மனோரமா.அதே மோனரமா 1996 தேர்தல்களில் ரஜினியை கேவலமாகவும், இழிவாகவும் மேடைகளில் பேசிவந்தார்; அதனால் அவருக்கு தமிழ் சினிமாவின் வாய்ப்புக்களே இல்லாமல் போகும் அளவிற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ரஜினி மௌனம் மட்டுமே காத்துவந்தார்; தனது அடுத்த திரைப்படத்தில் மனோரமாவிற்கு சந்தர்ப்பம் வழங்கி மீண்டும் அவர் திரைவாழ்க்கையை தொடங்கி வைத்தார். தொடர்ந்தும் மௌனம்  காத்துவந்த ரஜினி மனோரமாவின் 50 ஆம் ஆண்டு விழாவில் பில்லா ஷூட்டிங் சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு "அன்றைக்கு என்னை அணைத்த கை, எத்தனை தடவை அடித்தாலும் தாங்குவேன்" என்று கூறினார்; கலங்கியது மனோரமா கண்கள் மட்டுமல்ல, எம் கண்களும்தான்!!! 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்னும் குறளுக்கினங்க ரஜினி மனோரமாவிற்கு சந்தர்ப்பம் கொடுத்தார் என நினைத்திருந்த எமக்கு; இல்லையில்லை அவர் 'எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொண்ட மகற்கு' என்னும் குறளுக்குத்தான் அதிக முக்கியம் கொடுக்கிறார் என்பது புரிந்தது!!!

பில்லா, முரட்டுக்காளை வெற்றிகள் ரஜினியை வணிக சினிமாவின்பால் ஈர்க்க ஆரம்பித்தது; விரும்பியோ விரும்பாமலோ ரஜினி வணிக சினிமாவின் வட்டத்துக்குள் தன்னை உட்புகுத்திக் கொண்டார். விநியோகிஸ்தர்களின் விருப்பம், தயாரிப்பாளர்களின் நோக்கம், ரசிகர்களின் ஆதரவு எல்லாம் ஒன்று சேர்ந்து ரஜினி என்னும் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகனை தமிழ் சினிமாவின் உச்ச நட்ச்சத்திரமாக மாற்றியது. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகன் ரஜினிகாந்த் மறைக்கப்பட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உருவாகிய இந்த தருணம் நன்மையா? தீமையா? என்றால் பதில் சொல்வது முடியாதது! ஒன்றை இழந்தால்த்தால் இன்னொன்றை பெறமுடியும் என்பது ரஜினிக்கும் விதிவிலக்கல்ல; அன்று முதல் ரஜினியின் திரைவாழ்க்கைப் பாதை மாற ஆரம்பித்தது.

காளி, அன்புக்கு நான் அடிமை, கழுகு, தீ, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா என வணிக சினிமா ரஜினிகாந்த்தை கையகப்படுத்தியிருந்த காலகட்டத்திலும் ஜானி, பொல்லாதவன், நெற்றிக்கண், தில்லு முல்லு போன்ற ரஜினியின் கிளாஸ் திரைப்படங்களும் அத்தி பூத்தாற்போல அவ்வப்போது வந்துகொண்டுதான் இருந்தன. ஜானி - ரஜினியின் திரைவாழ்க்கையின் மற்றுமொரு மாணிக்கம்; மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினி ஸ்ரீதேவியின் காதலை மகேந்திரன் சொன்ன அழகு அற்ப்புதம். அசோக்குமாரின் ஒளிப்பதிவில் ரஜினி, ஸ்ரீதேவி கொள்ளை அழகு. ஜானியில் அமைதியான ரஜினியை, இரட்டை வேடங்களில் இயல்பான யதார்த்தமான கேரக்டர்களாக தன் கதையின் நாயகர்களாக மகேந்திரன் அமர்த்தியிருப்பார்; இப்பொது பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்!!தில்லு முல்லு - ரஜினிக்கும் நகைச்சுவை வரும் என்பதை கே.பாலச்சந்தர் உணர்த்திய திரைப்படம்; ரஜினியை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும் ரஜினி திரைப்படங்களில் இது முதன்மையானது. ரஜினியுடன் சேர்ந்து தேங்காய் சீனிவாசனும், சௌகார் ஜானகியும் பண்ணும் ரகளை சொல்லில் அடங்காதவை. ரஜினி, தேங்காய் சீனிவாசன் காமடி காட்சிகளின் டைமிங் இப்போதல்ல எப்போது பார்த்தாலும் மனதை லயிக்க வைப்பவை. இந்த திரைப்படத்தின் பெயரை கேட்டது ஞாபகம் வரும் ஒரு சோகமான விடயமும் உண்டு; ஆம் ரஜினி, கமல் இணைந்து நடித்த இறுதி திரைப்படம் இதுதான். பணம், அந்தஸ்து, ரசிகர்கள் என பல காரணிகள் ரஜினி கமலை திரையில் பிரித்தாலும், இன்றுவரை திரைக்கு வெளியே இவர்களது நடப்பு தொடர்வது மகிழ்ச்சியான ஆரோக்கியமான விடயம்.

நெற்றிக்கண் - பாலச்சந்தர் தயாரிக்க எஸ்.பி.எம் இயக்கிய நெற்றிக்கண் ரஜினியின் நடிப்பாற்றலை பறைசாற்றும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. நெற்றிக்கண் 'கிழட்டு' சக்கரவர்த்தியின் பெர்போமன்ஸ் ரஜினிகாந்தால் மட்டுமே கொடுக்கப்பட கூடியவை. ஆரம்பகாலங்களில் நாடகங்களில்கூட துரியோதனன் வேடம் போட்ட பழக்கமோ என்னமோ தெரியவில்லை; நெகடிவ் கேரக்டர் என்றால் ரஜினிக்கு அல்வா சாப்பிடுவது போன்று அமைந்து விடுகின்றது, நெற்றிக்கண்ணை பார்த்தவர்களுக்கு அது புரியும். 1982 களின் நடுப்பகுதிகளில் ரஜினியால் தனது பாணியில் இருந்து விலகி நடிக்கப்பட்ட அடுத்தடுத்து வெளிவந்த புதுக்கவிதை, எங்கேயோ கேட்டகுரல் போன்ற திரைப்படங்களுக்கு போதிய வரவேற்பு கிட்டாததால் ரஜினி அடுத்தடுத்து வணிக சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தொடர்ந்து மூன்று முகம், பாயும்புலி, துடிக்கும் கரங்கள், சிகப்பு சூரியன் என விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் விரும்பும் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்; இக்காலப்பகுதியில் வெளிவந்ததுதான் ரஜினியின் முதல் ஹிந்தி திரைப்படம் அந்தாகனூன்; அமிதாப்பச்சன் கௌரவ வேடத்தில் நடித்திருந்த 'அந்தாகனூன்' ரஜினிக்கு ஹிந்தியில் மிகப்பெரும் வெற்றியை தேடித் தந்ததோடல்லாமல் தொடர்ந்தும் ஹிந்தியில் மிகப்பெரும் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்தது. இந்த திரைப்படம் தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து இயக்கிய 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படத்தின் மொழிமாற்றல் திரைப்படம்.  ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 1980 களின் நடுப்பகுதியில் ரஜினிகாந்த் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். வேற்று மொழிகளில் நடித்தாலும் ரஜினிகாந்தின் வேர் தமிழ் நாட்டிலேயே ஸ்திரமாக ஊன்றியிருப்பதை ரஜினி நன்றாகவே உணர்ந்திருந்தார்.தமிழில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த ரஜினியை தமிழ் ரசிகர்கள் 'தலைவர்' என்னும் ஸ்தானத்திற்கு உயர்த்தி மரியாதை செய்தகாலமாக 1980 களின் பிற்பகுதி அமைந்தது. தொடர்ச்சியாக வெற்றிமேல் வெற்றிகள், ரசிகர்களை கவரும் வகையில் ஜனரஞ்சகமான கமர்சியல் சினிமாக்களில் ரஜினி பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார். படிக்காதவன், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், மனிதன், குருசிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜாதிராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை என ரஜினியின் வெற்றியும்; அதனாலான வியாபாரமும் மளமளவென வளர தொடங்கியது. 1978 இல் கைப்பற்றிய தமிழ் சினிமாவின் சிமாசனம் 1980 களின் இறுதியில் இன்னும் ஸ்திரமாக ரஜினியின் கைகளிலேயே......

இந்த பத்து ஆண்டுகளுக்குள் (1980 கள்) ரஜினியின் ரசிகர்களும், செல்வாக்கும், பெயரும், புகழும் மிகப்பெருமளவில் வளர்ந்திருந்தன; ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்ப்பு மலையென அதிகரித்திருந்தது, மெல்லமெல்ல அரசியல் பற்றிய பேச்சுக்களும் அரசல்புரசலாக ஒலிக்க ஆரம்பித்திருந்தன; இந்நிலையில் ரஜினியின் மனதில் ஆன்மீகமும் நுழைந்திருந்தது. 80 களின் ஆரம்பத்திலும் நடுப்பகுதிகளிலும் ரஜினிக்கு இருந்த மன அழுத்தங்களும், தெளிவின்மையும், குழப்பங்களும், கலகங்களும், மனச் சஞ்சலங்களும் 80 களின் இறுதியில் நீங்கி ரஜினிகாந்த் ஓரளவு தெளிவாகியிருந்தார். ரஜினியே நினைத்தாலும் ஒதுங்கி செல்ல முடியாத அளவிற்கு ரசிகர்கள் அவர்மீது ஏதோவொரு  எதிர்பார்ப்பை வைத்திருப்பதையும் நன்கு புரிந்து வைத்திருந்தார்; இதனால்தான் என்னமோ ஆன்மிகம் பிடித்திருந்தாலும் சினிமாவை ரஜினிகாந்தால் தவிர்க்க முடியவில்லை......


16 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

ரஜினியின் மனோரம்மாவுடன் ஏற்பட்ட சம்பவம் அவர் பரந்த மனதுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு...

தொடருங்கள் ஜீவ்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

N.H. Narasimma Prasad said...

தலைவர் பற்றிய இந்த தொடர்பதிவு மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

bandhu said...

//ஜனரஞ்சக சினிமாப் பாணியை உடைத்து வணிக சினிமாப் பாதையை மீண்டும் தொடக்கிவைத்த திரைப்படங்கள்தான் முரட்டுக்காளை மற்றும் சகலகலா வல்லவன்//
இந்த இரண்டு படங்களுமே ரஜினி, கமல் என்று பார்க்காம பார்த்தால் வெறும் குப்பைகள் தான். இவை வராமல் இருந்தால் நமக்கு நல்ல படங்கள் பல கிடைத்திருக்கும்!

காரிகன் said...

நீங்கள் ஒரு தவறான செய்தியை கொடுத்துள்ளீர்கள். எஸ் எ சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை என்ற படமே பின்னர் அந்தாகானூன் என்று ஹிந்தியில் வெளி வந்தது. அதில் ரஜினி நடித்தார். ரஜினியே விஜயகாந்த் பின்னாடி செல்கிறார் என்று நாங்கள் அப்போது கிண்டல் அடிப்பதுண்டு.

Unknown said...

super~!!!!

umarfarook said...

அற்புதமான பதிவு... மிகவும் ரசித்து படித்தேன்... தொடர வாழ்த்துக்கள்

umarfarook said...

நல்ல பதிவு...வாழ்துக்கள்

எப்பூடி.. said...

@ காரிகன்

நன்றி, திருத்திவிட்டேன்.

நாய் சேகர் said...

http://tasmacdreams.blogspot.com/2011/12/blog-post.html

கிரி said...

மனோரமா பற்றி அவருடைய 50 விழாவில் குறிப்பிட்டது மனதை நெகிழச் செய்தது.

அந்த வீடியோ தற்போது YouTube ல் சரியாக வருவதில்லை வேகமாக ஓடுகிறது.. வேறு தேடியும் கிடைக்கவில்லை.

Unknown said...

தலைவர் பற்றிய நல்ல கலக்கல் தொடர்பதிவு. சூப்பர்...

தர்ஷன் said...

தலைவரின் 80 களின் முற்பாதி பெரும்பாலும் எக்‌ஷன் படங்கள், இரண்டாம் பாதியில் காமெடியையும் கலந்து கொடுத்தார்.
வருடத்துக்கு 10 படங்கள் வரையில் நடித்தவர் தயாரிப்பாளர்களுக்காகவும் வினியோகஸ்த்தர்களுக்காகவும் மட்டும் அல்லாமல் தனது ஆத்மதிருப்திக்காகவும் படங்கள் ஒன்றிரண்டு செய்திருக்கலாம்.
80 களில் இளையராஜா துணையில்லாமல் வெற்றிக் கொடி நாட்டியவர் அவர் மட்டுமே. நிறைய படங்களில் சந்த்ரபோஸ் மற்றும் வேறு சிலர் இசையமைத்திருப்பர்
உண்மையிலேயே எத்தனை பெரிய சாதனை 70 கள் 89 கள் 90கள் 2000 அடுத்து இப்பவும் 5 தசாப்தங்களாக அவருக்குப் பிறகுதான் எல்லோரும்

Suresh Subramanian said...

nice post... www.rishvan.com

Jayadev Das said...

\\இந்நிலையில் ரஜினியின் மனதில் ஆன்மீகமும் நுழைந்திருந்தது.\\ ரஜினிக்கு ஆன்மீகத் தேடல் நீங்க நினைப்பதற்கு ரொம்ப காலத்திற்கும் முன்னதாகவே இருந்திருக்கிறது எனபது அவருடைய பழைய படங்களைப் பார்த்தால் தெரியும், உதாரணத்திற்கு கீழே உள்ள சில வசனங்கள் ஆரம்ப காலப் படம் ஒன்றில் உபயோகித்திருக்கிறார். இது மட்டுமல்ல மேலும் பல ஆரம்ப படங்களிலேயே அவர் ஆன்மீக விஷயங்களை அங்கங்கே பேசியிருக்கிறார். நாம் படம் பார்க்கும் போது கவனிப்பதில்லை.

"ஆணும் பெண்ணும் ஒரு போதும் சமாமாவே இருக்க முடியாது". "இந்த பெண்களும், அரசியல்வாதிகளும் அவங்க நினைச்சத அடைவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வாங்க".
"ஒரு பெண் என்பவன் எப்பவும் அடுத்தவங்களை சார்ந்தே இருக்க வேண்டும், பிறந்தப்போ தாய் தந்தையர், சகோதரன் மீது சார்ந்திருக்கிறாள், பருமடைந்த பின்னர் கணவனைச் சார்ந்திருக்கிறாள், வயதான பின்னர் தனது மகன்கள் மீது சார்ந்திருக்கிறாள். அவள் ஒரு போதும் தன்னிச்சையாக [இண்டேபெண்டேன்ட்] இருக்கவே முடியாது"

http://www.youtube.com/watch?v=wPmiYeNhOcM
http://www.youtube.com/watch?v=bXMqK2WKt0M&feature=related

கார்த்தி said...

தில்லுமுல்லு நான் ரசித்து பாத்த ரஜினியின் நகைச்சுவை திரைப்படம்!
ரஜினி ஸ்ரீதேவி காதல் பற்றி சொல்ல மாட்டீங்களா??

Gobinath said...

பின்னுறீங்க. மனோரமா சம்பவத்தை பற்றி இன்றுதான் முழுவதும் அறிந்து கொண்டேன்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)