Wednesday, December 12, 2012

ரஜினிகாந்த் - 1970 களில்


ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

1970 கள் - தமிழ் சினிமாவின் நிறம் மீண்டுமொருதடவை மாற ஆரம்பித்த காலப்பகுதி இது; 1950 களுக்கு முன்னால் பாடல்களால் கதை சொன்ன தமிழ் சினிமாவை அண்ணாத்துரை, கருணாநிதி போன்ற திராவிட எழுத்தாளர்கள் வசனத்தால் கதை சொல்லும் ஊடகமாக மாற்றி அமைத்தார்கள். 1950 களில் வசனகர்த்தாக்களுக்கு முன்னுரிமை அதிகம் இருந்திருந்தாலும் 1960 களில் தமிழ் சினிமா கதாநாயகர்களது கைகளுக்கு தாவியது; சிவாஜி கணேஷன், எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற மாபெரும் நடிகர்கள் தங்கள் ஆளுமையை மக்களிடம் வியாபித்திருந்தனர். நடிகர்களுக்காகவே படம் பார்க்கும் காலமாக மாறிய 1960 களை உடைத்து இயக்குனர்கள் தங்களது ஆதிக்கத்தை தமிழ் சினிமாவில் படரவிட ஆரம்பித்த காலப்பகுதிதான் 1970கள்.

ஒரு இயக்குனராக நடிகர்களின் இமேஜை உடைத்த முதல் இயக்குனர் ஸ்ரீதர் என்றாலும் அவரால் ஒரு 'காதலிக்க நேரமில்லை' மட்டும்தான் 1960 களில் வெற்றிகரமாக கொடுக்க முடிந்தது. ஆனால்1970 களில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், மகேந்திரன், பாலுமஹேந்திரா என பெரும் இயக்குனர் கூட்டமே தமிழ் சினிமாவை தம்வசப் படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் 1970 களின் நடுப்பகுதியில் தமிழ் சினிவாவிற்கு இயக்குனர் சிகரத்தால் கைப்பிடித்து அழைத்து வரப்பட்டவர்தான் இன்று இந்திய சினிமாவே உச்சத்தில் வைத்து கொண்டாடும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் எனப்படும் சிவாஜிராவ் கெய்க்வாட். சமகாலத்தில் இயக்குனர் பஞ்சு அருணாச்சலத்தால் தமிழ் சினிமாவுக்கு அழைத்துவரப்பட்ட மற்றுமொரு மாபெரும் சக்தி - இசைஞானி இளையராஜா.

"கண்ணா லட்டு திங்க ஆசையா?" "கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?" யாருக்குத்தான் ரெண்டு லட்டு திங்க ஆசை இருக்காது!!!! பழையசாதம் போட்டாகூட பராவாயில்லை என்னும் நிலையில் இருந்த சிவாஜிராவ் என்னும் இளைஞனை பார்த்து இயக்குனர் பாலச்சந்தர் "கண்ணா உனக்கு மூணு லட்டு திங்க ஆசையா?" என்று கேட்கிறார்!!! தலைகால் புரியாத சிவாஜிராவிற்கு தன் 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தின் சந்திரகாந்தின் பிள்ளைகளில் ஒருவரான ரஜினிகாந்த் என்னும் பெயரை சூட்டுகிறார்; மற்றைய பிள்ளையின் 'ஸ்ரீகாந்' என்னும் பெயர் இன்னுமொரு நடிகருக்கு ஏற்க்கனவே சூட்டியாகி விட்டதால் மீதமிருந்த பெயர்தான் 'ரஜினிகாந்த்'.ஆரம்பங்களில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்ட ரஜினிகாந்திற்கு நடிகர் நாகேஷ் நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார். பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகரான நாகேஷின் ஆதரவும் அரவணைப்பும் ரஜினிகாந்திற்கு முதல் படத்திற்கு மிகவும் உதவியாக அமைந்திருந்தது. என்னதான் தான் சிறப்பாக நடிக்கவேண்டும் என நினைத்தாலும் சில நேரங்களில் சொதப்பிய ரஜினிகாந்த் பாலச்சந்தரால் திட்டப்பட்டு ஸ்டூடியோவிற்கு வெளியேயும் அனுப்பப்படுள்ளார்; அப்போதெல்லாம் அவருக்கு பக்கதுணை ஒரு சிகரட் மட்டும்தான். ஒரு சிகரட்டை பற்றவைத்து பிரெஷ் ஆகி மீண்டும் குறிப்பிட்ட காட்சிகளை கச்சிதமாக நடித்துக் கொடுத்திருப்பார் ரஜினிகாந்த்.

அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, அந்துலேனி காதா (தெலுங்கு) இவை மூன்றும்தான் பாலச்சந்தர் ரஜினிக்கு கொடுத்த மூன்று லட்டுக்கள். இவற்றுக்கு இடையில் 'கதா சங்கமா' என்னும் தெலுங்குப் படத்திலும் ரஜினி நடித்திருப்பார். அபூர்வராகங்களில் பெரிதாக வேடமில்லை என்றாலும் யார் இந்த முரட்டு இளைஞன் என்று பலராலும் திரும்பிப் பார்க்கப்பட்டார்; அறிமுகக்காட்சியில் ரஜினியின் விம்பத்திற்கு முன்னால் எழுதப்பட்ட வாசகம் 'சுருதி பேதம்'. பின்னொரு நாளில் முதல் காட்சியிலேயே அவ்வாறு எழுதப்பட்டது வருத்தமாக இல்லையா என கேட்டதற்கு; ரஜினி சொன்னபதில்  "பாலச்சந்தர் எடுத்த முதல்ப் படம் 'நீர்க் குமிழி' அவர் என்ன நீர்க்குமிழி போல காணாமலா போய்விடார்?" என்பதுதான். அடுத்து மூன்று முடிச்சு, அவர்கள் என பாலச்சந்தர் படங்களில் தன் குணச்சித்திர நடிப்பால் தமிழ் ரசிகர்களை கொள்ளையிட ஆரபித்த ரஜினிகாந்த் பாலச்சந்தரை விட்டு வெளியில் வந்து நடித்த முதல் திரைப்படம் கவிக்குயில்.

குனச்சித்திரவேடம், வில்லன் வேடம் என நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தை முதல் முதலாக கதாநாயகனாக்கிய திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறி'. அதுவரை நேர்மறையான பாத்திரங்களில் மட்டும் நடித்துவந்த சிவகுமாரை வில்லானாக்கி ரஜினிகாந்தை கதானாயனாக்கி எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'புவனா ஒரு கேள்விக்குறி' இன்றுவரை ரஜினியின் மிகச்சிறந்த நடிப்பாற்றல் உள்ள திரைப்படங்கள் வரிசையில் முக்கியமானது; 'ராஜா என்பார் மந்திரி' என்பார் பாடலில் ரஜினியின் பெர்போமான்ஸ் இப்போது பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கும். அதுவரை ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறிதான்'. அன்று ஆரம்பித்த ரஜினி எஸ்.பி.முத்துராமன் நட்பு ரஜினியின் 25 படங்களை எஸ்.பி.எம் இயக்கிய பின்னரும் இன்றுவரை தொடர்கின்றது.'பரட்டை' தமிழ் சினிமா மறக்க முடியாத கேரக்டர்களில் ஒன்று; பாரதிராஜா என்னும் இமயத்தின் அறிமுகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் கிடைத்த மாபெரும் கலைப்படைப்பு '16 வயதினிலே'; தமிழ் சினிமாவின் பாணியையே மாற்றிப் போட்ட படைப்பு இது. ஸ்ரூடியோக்களில் சுற்றித்திரிந்த கேமராவை கிராமங்களுக்குள் கொண்டு சென்று புதுமை புரிந்த பாரதிராஜா வசன உச்சரிப்பிலும் மிகப்பெரும் மாறுதலை உருவாக்கினார்; நாடக பாணியில் இருந்து வழுக்கி வசனங்களை யதார்த்தத்திற்கு மாற்றிய திரைப்படமிது. 'பரட்டை' 'சப்பாணி' கேரக்டர்கள் ரஜினி, கமலுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கும் மறக்க முடியாதவை. ரஜினிகாந்த் & கமல்ஹாசனின் முதல் வெள்ளிவிழா திரைப்படமும் இதுதான் (240 நாட்கள்).

தொடர்ச்சியாக தமிழ், கன்னடம், தெலுங்கு என பல படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவந்த ரஜினிக்கு 'சூப்பர் ஸ்டார்' டைட்டிலை படத்தின் போஸ்டர்களிலும், பானர்களிலும் பொறித்து 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஆக்கியவர் இன்றைய முன்னணி தயாரிப்பாளரும், அன்றைய முன்னணி விநியோகிஸ்தருமான கலைப்புலி எஸ்.தானு அவர்கள்தான். அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை! 1975 களின் பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜியின் தாக்கம் கிட்டத்தட்ட இல்லாமல் போயிருந்த காலகட்டத்தில் அடுத்த தலைமுறை நாயகர்கள் என்று அன்று ஆரூடம் கூறப்பட்ட ஜெயஷங்கர், ரவிச்சந்திரன், விஜயகுமார், சிவகுமார் போன்றோரால் தமிழ் சினிமாவை வணிகரீதியாக ஓரடிகூட முன்னால் கொண்டுசெல்ல முடியவில்லை.

அந்தக்காலப்பகுதியில் ரஜினி நடித்த படங்களின் வசூல் சொல்லிக்கொள்ளும் படியாகவும், வணிகரீதியாக விநியோகிச்தர்களுக்கு லாபம் தரும் அளவிற்கு கிடைத்ததால் ரஜினி நடிக்கும் படங்களை விநியோகிஸ்தர்கள் தேடித்தேடி வாங்க ஆரம்பித்திருந்தார்கள். இந்நிலையில்த்தான் எஸ்.தானுவால் 'பைரவி' திரைப்படத்தின் விளம்பரங்களில் 'சூப்பர் ஸ்டார்' என விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் அக்காலப்பகுதிகளில் எந்த ரஜினி பட டைட்டிலிலும் 'சூப்பர் ஸ்டார்' பட்டம் அடைமொழியாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை.பைரவியை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினி, கமலின் மற்றுமொரு சிறந்த படைப்பான 'இளமை ஊஞ்சல் ஆடுகிறது' வெளியாகியது; கமலுக்கு ரஜினியைவிட அதிக முக்கியத்துவம் இருக்கும் (ஸ்கோப்) கேரக்டர்களே வழங்கப்பட்டுவந்த காலத்தில், கமலுக்கு நிகரான வேடத்தை ஸ்ரீதர் அவர்கள் ரஜினிக்கும் கொடுத்திருப்பார். ரஜினியின் மிகச்சிறந்த பெர்போமான்ஸ் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. 1978 ஆனி மாதம் 'பைரவி' திரைப்படத்திற்கு 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் இட்ட நேரம் அடுத்தடுத்து ரஜினி படங்கள் வசூலில் சக்கை போடு போட ஆரம்பித்தன.

இளமை ஊஞ்சல் ஆடுகின்றதை தொடர்ந்து 1978 ஆவணி மாதம் 15 ஆம்  திகதி இந்திய சுதந்திரதின நன்னாளில் வெளிவந்த திரைப்படதான் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்'. கதாசிரியராக இருந்த மகேந்திரனை தனக்காக ஒரு படம் இயக்கித்தர வேண்டும் என்று வேணு செட்டியார் கேட்டுக்கொண்டதற்க் கிணங்க மகேந்திரன் எழுதிய திரைக்கதைதான் 'முள்ளும் மலரும்'. திரைக்கதையுடன் செட்டியாரை சந்தித்த மகேந்திரன் தன் கதைக்கு ரஜினிகாந்தான் நாயகன் என்றதும் செட்டியார் முடியவே முடியாது என மறுத்துவிட்டார், ரஜினி இல்லாவிட்டால் 'முள்ளும் மலரும்' இயக்கமாட்டேன் என்று மகேந்திரன் கூறிவிட்டார்; நீண்ட சமரசத்திற்கு பின்னர் செட்டியார் ஒருவாறு ஒத்துக்கொண்டார்.

ஆனாலும் அவருக்கு பெரிதாக ஈடுபாடில்லை, படம் முடியும் தருவாயில் படத்தினை பார்த்த செட்டியார் படத்தின் குறைவான வசனங்களை சுட்டிக்காட்டி இந்த படம் ஒன்றுக்கும் உதவாது என்று கூறிவிட்டார். மேலதிக செலவிற்கும், விளம்பரத்திற்கும் பணம் கொடுக்கவும் மறுத்துவிட்டார். இந்த நேரத்தில் கமல்ஹாசன் மற்றும் ஒரு சில திரையுல நண்பர்கள் உதவியுடன் மகேந்திரன் முள்ளும் மலரும் திரைப்படத்தை வெளியிட்டார். விளம்பரமின்மையால் முதல்வாரம் படம் மிகவும் மந்தமாகவே ஓடியது; அடுத்தடுத்த வாரங்களில் Word Of Mouth மூலம் திரைப்படம் பற்றிய நேர்மறையான கருத்துக்கள் மக்களை சென்றடைய படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக மிக முக்கியமான திரைப்படமாகவும், தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த திரைப்படமாக இன்றளவும் பேசப்படுகின்றது; என்றும் பேசப்படும்.முள்ளும் மலருமை தொடர்ந்து 1978 மார்கழி மாதத்தில் ரஜினிகாந்த் நடித்த மற்றுமொரு மாபெரும் வெற்றித் திரைப்படம் வெளியாகியது. சுஜாதாவின் கதைக்கு எஸ்.பி முத்துராமன் திரைவடிவம் கொடுக்க முழுக்க முழுக்க சிங்கப்பூரில் உருவான முதல் திரைப்படமான 'பிரியா' பாடல்களாலும், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ரஜினிகாந்தின் துருதுரு நடிப்பாலும் வெள்ளிவிழாக் கண்டது. அடுத்து 1979 களில் தர்ம யுத்தம், நான் வாழவைப்பேன், அன்னை ஓர் ஆலயம், நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்ப்புத விளக்கும், ஆறிலிருந்து அறுபதுவரை என ரஜினியின் வெற்றிகள் தொடர்ந்தன.

'ஆறிலிருந்து அறுபதுவரை' திரைப்படத்தின் வெற்றி ரஜினியின் திரைப்பயணத்தில் கிடைத்த மிக முக்கியமான வெற்றியாக கணிக்கப்பட்டது. காரணம் தனது பாணியில் இருந்து (துருதுரு) விலகி, முழுமையாக உடல் மொழியை மாற்றி 'சந்தானம்' கேரக்டராகவே ரஜினி வாழ்ந்திருப்பார். எஸ்.பி.எம் இந்த படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என தானும் ரஜினியும் பயந்ததாகவும்; முதல்வாரம் எப்படியும் கூட்டம் வரும், இரண்டாம் வாரம் திங்கட்கிழமை காட்சியை பார்த்தால் முடிவு தெரிந்துவிடும் என்பதால் பொறுத்திருந்து திங்கள் மக்கள் கொடுத்த அதீத வரவேற்பில் மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1975 களில் சினிமா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு உணவுக்கே பண நெருக்கடியான சூழலில் நண்பனின் அறையில் ஏதாவதொரு கம்பனி தன்னை கூப்பிடாதா? அதிலும் தான் சந்தித்து பேசும்போது தனக்கு "உன்னை ஞாபகம் வைத்திருக்கிறேன்" என்று கூறிய கே.பி கூப்பிட மாட்டாரா என தினம் தினம் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜிராவ் என்னும் கரிய, வரண்ட தோல், குட்டிக் கண், பரட்டை தலை, ஆறடி உயரம் கொண்ட இளைஞன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் நாட்டின் மிகப்பெரும் நட்ச்சத்திரம்; அதிலும் உச்ச நட்சத்திரம், நினைத்துக் கூட பார்க்கமுடியாத அபரிமிதமான வளர்ச்சி.......இந்த இடத்தை அடைய சிவாஜிராவ் என்னும் அந்த இளைஞன் பட்டபாடு கொஞ்ச நெஞ்சமில்லை. சினிமாக் கனவுடன் சினிமா கல்லூரிக்காக நண்பனின் பணத்தில் சென்னைக்கு வந்தவன் வீதியோரங்களில் தூங்கியிருக்கிறான், உணவகங்களின் சமையல் அறைகளில் அடுப்பு வெக்கையில் தூங்கியிருக்கிறான், கட்டணம் கட்ட பணமில்லாமல் கூலிவேலை செய்திருக்கிறான், சக மாணவர்களால் ஏழ்மையின் நிமித்தம் ஏளனமும் செய்யப்பட்டிருக்கிறான்; எத்தனை அவமானங்களைத்தான் அவன் கல்லூரிக் காலங்களில் சந்தித்திருப்பான்!!! அத்தனைக்கும் அன்று அவனுக்கு உறுதுணையாய் நின்றவர்கள் அவன் நண்பர்கள், இன்றைக்கும் அவர்கள் அவனுக்கு நண்பர்கள்தான்!!! அதுதான் இன்றைய அவன் உயரத்தின் ரகசியம்!

இந்த 5 ஆண்டுகளில் ஒரு மிகப்பெரும் சினிமா இண்டஸ்ரிக்கே முதல்வனாகுவதென்பது வெளியில் இருந்து பார்த்தால் வியப்பாக தோன்றும், ஆனால் அதற்க்கு சிவாஜிராவ் கொடுத்த உழைப்பு இருக்கிறதே!!! அது ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகம். தினமும் 16 மணி நேர வேலை, 2 மணி நேரம்தான் தூக்கம்; வருடத்திற்கு குறைந்தது நான்கு மொழிகளிலும் 15 படங்கள்; இத்தனைக்கும் அவன் ஷூட்டிங்கிற்கு நேரம் தவறியதில்லை!!! முன்னுக்கு வரவேண்டும் என்கின்ற வெறி, அவனுள் இருந்த சினிமா மீதான மோகம், தொழில் மீதிருந்த பக்தி; இவைதான் ஐந்தே ஆண்டுகளில் வெறும் சிவாஜிராவை 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தாக மாற்றியது........

12 வாசகர் எண்ணங்கள்:

தர்ஷன் said...

70 கள் ஒரு பொற்காலம்தான்.
சாதிக்காமல் போன நட்சத்திரங்கள் பட்டியலில் சிவகுமாரை சேர்க்க முடியுமா? என்பது சந்தேகம்தான். 90கள் வரை கூட குறிப்பிடத் தக்கவளவு படங்களில் பிரகாசித்தவர் அவர்.
தலைவரை என்ன சொல்வது “புவனா ஒரு கேள்விக் குறி” யில் ராஜா என்பார் பாட்டுக்கு முந்திய காட்சியில் சுமித்ராவிடம் தன் நிலையை சொல்லி புலம்பி “ஆமா நான் யாரு?” ந்னு கேட்பாரே. முள்ளும் மலரும் சொல்லவே தேவையில்லை. அவர்கள், மூன்று முடிச்சு எல்லாம் மிகையில்லாத யதார்த்தமான வில்லன்கள்,ஆறிலிருந்து அறுபது கதாபாத்திர சித்தரிப்பு இப்போது எனக்கு கொஞ்சம் மிகையாக தோன்றினாலும் அமைதியான நடிப்பில் அசத்தியிருப்பார் தலைவர்.
இதை விடுங்கள் கவிக்குயில், சன்கர் சலீம் சைமன் போன்ற மொக்கை படங்களை எல்லாம் இவர் ஒருவருக்காகவே பார்த்திருக்கிறேன். தப்பு தாளங்களை விட்டு விட்டீர்கள் பாஸ்
என்ன 70 களில் அருமையான ஒரு பொற்காலத்தை ஆரம்பித்து வைத்த தலைவரும் கமலும் பின் 80களில் ஏவியெம்மோடு சேர்ந்து மீண்டும் நட்சத்திர யுகத்தை ஆரம்பித்தது கொடுமை.

எப்பூடி.. said...

@ தர்ஷன்

//என்ன 70 களில் அருமையான ஒரு பொற்காலத்தை ஆரம்பித்து வைத்த தலைவரும் கமலும் பின் 80களில் ஏவியெம்மோடு சேர்ந்து மீண்டும் நட்சத்திர யுகத்தை ஆரம்பித்தது கொடுமை.//

1980 களில் நிச்சயம் இதுபற்றி அலசலாம்!

ஹாய் அரும்பாவூர் said...

ஹாய் நண்பா !?
நீண்ட நாட்களுக்கு பிறகு
பிறந்த நாள் சிறப்பு பதிவு அருமை
சிறந்த திறனாய்வு படிக்க சுவாரசியம் நிறைந்து உள்ளது

குறைவாக எழுதினாலும் நிறைவான பதிவுகள் தரும் எப்பூடிக்கு வாழ்த்துக்கள்

ஷர்புதீன் said...

நல்ல அலசல்

Jayadev Das said...

\\சிவாஜிராவ் ஜெய்க்வாட்\\ சிவாஜி ராவ் கெய்க்வாட் [Shivaji Rao Gaekwad].

\\இயக்குனர் எஸ்.பி.முத்துராமனால் தமிழ் சினிமாவுக்கு அழைத்துவரப்பட்ட மற்றுமொரு மாபெரும் சக்தி - இசைஞானி இளையராஜா.\\ இளையராஜாவை பஞ்சு அருணாசலம் தான் அழைத்துவந்து அன்னக்கிளி படத்தில அறிமுகப் படுத்தியதாகச் சொல்றாங்களே?

\\1975 களின் பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜியின் தாக்கம் கிட்டத்தட்ட இல்லாமல் போயிருந்த காலகட்டத்தில் அடுத்த தலைமுறை நாயகர்கள் என்று அன்று ஆரூடம் கூறப்பட்ட ஜெயஷங்கர், ரவிச்சந்திரன், விஜயகுமார், சிவகுமார் போன்றோரால் தமிழ் சினிமாவை வணிகரீதியாக ஓரடிகூட முன்னால் கொண்டுசெல்ல முடியவில்லை. \\ செம பன்ச்!!

\\இந்த இடத்தை அடைய சிவாஜிராவ் என்னும் அந்த இளைஞன் பட்டபாடு கொஞ்சநெஞ்சமில்லை. \\ உண்மை.

\\தினமும் 16 மணி நேர வேலை, 2 மணி நேரம்தான் தூக்கம்; வருடத்திற்கு குறைந்தது நான்கு மொழிகளிலும் 15 படங்கள்; இத்தனைக்கும் அவன் ஷூட்டிங்கிற்கு நேரம் தவறியதில்லை!!!\\ ஏன் இவ்வளவு கஷ்டப் பட்டார் என்பதைப் பற்றி அவர் பேசும் ஒரு வீடியோ, பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=-w5u25yrzZw

நல்ல விறுவிறுப்பான பதிவு, Good!!

எப்பூடி.. said...

@ Jayadev Das

திருத்தத்திற்கு நன்றி, பதிவில் திருத்தம் செய்கின்றேன்.

ம.தி.சுதா said...

ஜீவ் அறியாத பால விடயங்களை சுவாரசியமாகத் தந்தமைக்கு நன்றிகள்...

இந்தக் கலைஞனின் உழைப்பானது எந“த நடிகராலும் முடியாத ஒன்று...

திரையுலகில் கமல், ரஜனி போல் ஒரு இரட்டையர்கள் எப்பொதும் கிடைக்கப் போவதே இல்லை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

சசிமோஹன்.. said...

nanpar avargaley arumaiyana pathivu meendum thodaravum nan kathu kondu irupen

Endrum Anpudan
SASEMKUMAR

சசிமோஹன்.. said...

Arumayan Padhivu Nanba adutha pathivai seekiram eluthungal nan kaathu kondu irukiren

Endrum Anpudan
SASE M KUMAR
(Rajinigandh Murattu Paktharkal)

கார்த்தி said...

நல்ல தொடர் பதிவு!

அமர பாரதி said...

அண்ணே, சந்தடி சாக்குல அஞ்சே முக்காலடி உயர ரஜினிய ஆறடி உயர ரஜினின்னு ஊத்துறீங்களே.

Maravandu - Ganesh said...

ரஜினி ஆறுபுஷ்பங்கள் படத்தில் நடித்த பொழுது அந்தப் படத்திற்கு கதை வசனம்
எழுதிய கலைஞானம் அவர்களின் நட்பு கிடைத்தது. கலைஞானம் ரஜினியிடம் , தான் ஒரு
படம் தயாரிக்கப் போவதாகவும் அந்தப் படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க வேண்டும்
என்று கூறியிருக்கிறார்.பெருமகிழ்ச்சியடைந்த ரஜினி கலைஞானத்திடம் 5 ஆயிரம்
ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டார்.

இளையராஜா இசையில் டி.எம்.எஸ் நண்டூறுது, நரியூது பாடலை பாடினார்.
www.youtube.com/watch?v=smHDFnff6Y8

ஏதோ ஒரு படப்பிடிப்பிலிருந்த ரஜினி, இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே
ஏவி.எம்.ஸ்டூடியோவிற்கு வந்திருக்கிறார். டி.எம்.எஸ் பாடுவதை கேட்டுவிட்டு
கலைஞானம் கையை பிடித்துக்கொண்டு, “கலைஞானம் சார் .. டி.எம்.எஸ். பாடி அதில்
நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை ” என்று மகிழ்ச்சியுடன்
கூறியிருக்கிறார்.

0
*பைரவி (1978) *, ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் படம். இந்தப்படத்தை
இயக்கியவர் எம்.பாஸ்கர். இந்தப் படம் தான் ரஜினியை உச்சத்தில் ஏற்றியது. இந்தப்
படத்தின் வினியோகஸ்தரான தாணு , ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் அளித்தார்.
எம்.பாஸ்கர் ஸ்ரீதரின் மாணவர், வெண்ணிற ஆடை படத்தில் உதவியாளராகச் சேர்ந்த இவர்
தொடர்ந்து 12 ஆண்டுகள் ஸ்ரீதரிடம் வேலை பார்த்தார்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)