Friday, July 27, 2012

ரஜினி - கமல் நட்பும்; அடுத்த தலை முறையினரின் தவறான புரிதலும்!!!சன் தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு கலை நிகழ்ச்சியின் ஒளிபரப்புக்கான விளம்பரம் அப்பப்போ ஒளிபரப்பப்படுகின்றது!!! அதில் சிம்பு மற்றும் தனுஸ் இருவரும் மேடையில் நட்புடன் ஒருவரை ஒருவர் அணைத்து ஆனந்த கண்ணீர் சொட்டும் காட்சி முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றது!! அவர்களது தலைமுறையில் உச்ச நட்சத்திரங்களான இருவரும் ஒருவருக்கொருவர் நட்பாக உள்ளனர் என்கின்ற மாயையை தோற்றுவிக்கு ஒரு அப்பட்டமான மோசடி அது!!! திரைப்படங்களிலும் டுவிட்டர் சமூகத்தளத்திலும் நாயும் பூனையுமாய் மாத்திமாத்தி சண்டை போட்டுக்கொண்டும், ஒருவரை ஒருவர் கேவலமாக மறைமுகமாக கிண்டல் செய்துகொண்டும் இருந்த இவ்விரு நடிகர்களுக்கும் ஒரு மேடையில் நட்பு பொங்கி வழிந்தது என்பதை பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது!!!

அதேபோல நடிகர்களான அஜித், விஜய் இருவரும் திரைப்படங்களில் வசனங்களிலும், பாடல்களிலும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் தாக்கியும், கேவலப்படுத்தியும் நடித்துக்கொண்டிருந்த மற்றுமொரு முக்கிய ஜோடி!!! இவர்களுக்குள்ளும் சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு துளிர்விட்டது!! அதன் பின்பு இருவருக்கும் இடையில் அப்பப்போ சந்திப்புக்கள், குடும்ப நட்பு, ஒருவர் திரைப்படத்தை அடுத்தவர் பார்ப்பது போன்ற ஆரோக்கியமான விடயங்கள் நிகழ ஆரம்பித்தது!!! திரைப்படங்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கும் சம்பவங்கள் பெருமளவில் குறைவடைந்துள்ளது மற்றுமொரு ஆரோக்கியமான விடயம்!!

எலியும் பூனையுமாக இருந்த சிம்புவும் தனுசும் சரி, அஜித்தும் விஜயும்சரி தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட நட்பு என்னும் அடையாளம் எந்தளவிற்கு சத்தியமானது, அது எப்படி சாத்தியமானது என்பதை எண்ணிப்பார்க்கையில் சற்று கடினமாகத்தான் இருக்கும்!! இது ஏற்க்கனவே உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமல் வரிசையில் தங்கள் காலத்தில் அடுத்த இரட்டையர்கள் தாம்தானென தங்கள் பெயரை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் ஒரு தந்திரமோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது!!! அதற்காக இதுதான் உண்மையென்றாகிவிடாது, சில நேரங்களில் திடீர் காதல்போல திடீர் நட்பாக கூட இருக்கலாம்!!! அல்லது கனவில் தேவதைகள்/கடவுள் தோன்றி நட்பு வரம் கொடுத்திருக்கலாம்; வழமைபோல ரஜினி, கமல் நட்பினையும் பார்த்து அதன்பால் ஈர்க்கப்பட்டு அவர்களைப்போல நாமும் உச்ச நட்சத்திரங்களாக, எமக்குள் போட்டி இருந்தாலும் நண்பர்களாக இருக்கலாம் என முடிவெடுத்திருக்கலாம்!!!


இப்படி இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் உள்ளன; அவற்றில் ஒன்றாக கூட இருக்கலாம்!!! இருந்துவிட்டு போகட்டும், அது அவர்களது சுதந்திரம்!!! ஆனால் ரசிகர்களும், மீடியாக்களும் ரஜினி,கமல் போன்று என இவர்களது நட்பை ஒப்பிடும் போதுதான் வேடிக்கையாகவும், கோபமாகவும், நகைப்பாகவும் இருக்கின்றது!!! நடிகர்களை சொல்லி தப்பில்லை; மேற்சொன்ன நடிகர்களுக்கு திரைத்துறையில் மேலும் பல நண்பர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள், ஆனால் அவர்களுடனான நட்பை சொல்லிக்கொள்வதிலும் பார்க்க போட்டி நடிகருடனான நட்பை பெரிதுபடுத்திக் காட்டுவதில் ஊடகங்களுக்கு பணமும், ரசிகர்களுக்கு பெருமையும் கிடைக்கின்றது!!! நடிகர்களும் அப்பப்போ போட்டோக்கு போஸ் குடுப்பதை விடுத்து, சக போட்டியாளர்களான 'நண்பர்களின்' படைப்புக்களை பாராட்டினாலே அது மிகப்பெரியவிடயம்!!! அதேபோல தமது தலைமுறையின் தமக்கு போட்டியான ஏனைய நடிகர்களுடனும் மேடைகளிலோ, வெளியிடங்களிலோ நட்பாக போட்டோக்கு போஸ் கொடுத்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்!!!!

எம்.ஜி.ஆர் சிவாஜிக்குள் இருந்திராத நட்பு (அவர்களுக்குள் பகையும் இருந்ததில்லை) இன்றைய அடுத்த தலைமுறையையினர் தங்களை சக போட்டியாளரின் நண்பனாக வெளியுலகிற்கு காட்டிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை தூண்டிய நட்பு எப்படி ரஜினிக்கும் கமலுக்கும் இடையில் மட்டும் இருக்க முடியும்? அது ஏன் எம்.ஜி.ஆர் சிவாஜிக்குள் ஏற்ப்படவில்லை!!! இதற்கு விடை மிக சுலபமானது!! சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும்தான் முக்கிய கரணம்!! எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரும் சமகாலத்தில் போட்டியாளர்களாக இருந்தவர்கள்; இருவரும் 'கூண்டுக்கிளி' என்னும் ஒரேயொரு திரைப்படத்தில்த்தான் இணைந்து நடித்திருப்பார்கள், அவ்விருவரும் அதிகமாக நெருங்கிப்பழக சந்தர்ப்பம் அமையவில்லை, அதனால் அவர்களுக்குள் நட்பு உருவாக சந்தர்ப்பம் அமையவில்லை!! மாறாக அவ்விருவரும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருந்தார்கள், திரைப்படங்களில் சிறுபிள்ளைத்தனாமாக மோதிக்கொண்டதில்லை!!!!

ஆனால் ரஜினி கமல் கதை வேறு!! ரஜினி திரையுலகுக்கு அறிமுகமான முதல்திரைப்படமே கமல்ஹாசன் நடித்த திரைப்படம்தான்! அபூர்வராகங்கள் முதல் தில்லுமுல்லு வரை 12 திரைப்படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர்! பல திரைப்படங்களில் இணைந்து நடிக்கும்போது நட்பு ஏற்பட்டாலும் 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்திற்காக முதல்முதலாக சிங்கப்பூர் சென்றபோதுதான் ரஜினிக்கும் கமலுக்குமான நட்பு ஆழமானது!!! ஒரு அறை நண்பர்களாக, சிங்கப்பூரை சுற்றிப்பார்ப்பது, சூட்டிங் இடைவெளிகளில் ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்து தூங்குவது என இவர்கள் நட்பு உறுதியடைந்தது அப்போதுதான்!!! ஆரம்பத்தில் ஏற்பட்ட/தோன்றிய நட்பை இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகிய பின்னரும்; சினிமாவில் உள்ள போட்டி வேறு, நிஜவாழ்க்கை நட்பு வேறு என பிரித்துணர்ந்து ஈகோ, பொறாமை இன்றி இன்றுவரை தொடர்வது மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான விடயம்!!!


ஆரம்பம் முதல் இன்றுவரை எந்த இடத்திலும் ரஜினி கமலை உயர்த்தியும், விட்டுக்கொடுக்காமலும் பேசினாலும்; கமல் ரஜினி பற்றி பெரிதாக எங்கும் எதுவும் சொல்வதில்லை என்கின்ற குற்றச்சாட்டு கமல்மீது வைக்கப்படுவதுண்டு!! இலகுவில் எல்லோரையும் பாராட்டும் குணம் கமலுக்கு மிக மிக குறைவு என்பதுகூட இதற்கு காரணமாக இருக்கலாம்!!! அதனால் ரஜினிமீது கமல் நட்பில்லாதவர் என்றாகிவிடாது!!! 80 களின் மத்தியில் ரஜினி மனதில் குழப்பங்களுடன் சினிமாவை விட்டே விலகப்போவதாகவும், ஆன்மீகத்தை நாடப்போவதாகவும் கூறப்பட்ட வேளையில் ரஜினியை மீண்டும் சினிமாவுக்குள் கையைப்பிடித்து அழைத்துவந்தவர் கமல்தான்; அந்தக்காலப்பகுதியில் ரஜினி கமலைவிட அதிக வியாபாரம் கொண்ட நடிகர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்!!

அதேபோல முள்ளும் மலரும் திரைப்படத்தினை முடிக்காமல் மகேந்திரனும், ரஜினியும் கஷ்டப்பட்ட வேளையில் தன் பணத்தை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய உதவியவர் கமல் என்பதையும் மறக்க முடியாது! ஆரம்பத்தில் ஏற்பட்ட நட்பை வளரும் காலங்களிலும், வழர்ந்து சிகரம் தொட்ட பின்னாலும் இன்றுவரை கொண்டாடும் ரஜினி கமல் நட்புடன் தயவு செய்து எல்லா நட்புகளையும் ஒப்பிட்டு சிறுமைப்படுத்தாதீர்கள்; நட்பு என்பது யாருக்கிடையிலும், எப்போதும் ஏற்படலாம்; அது உண்மையான நட்பாக இருந்தால் வரவேற்கத்தக்கது!!! அது வேறு ஒன்றை குறிவைத்து உருவாகியிருக்கும் என்றால் அதற்க்கு பெயர் நட்பு அல்ல; அதற்க்கு வேறு பெயர் உண்டு!!!!

குறிப்பு - தனுஸ், சிம்புவையோ; அஜித் விஜயையோ குறை சொல்வது நோக்கமல்ல, இவர்கள் வெளிப்படுத்தும் நட்பு திட்டமிட்ட, திணிக்கப்பட்ட ஒன்றாக எனக்கு பட்டதால் இதை பகிர்ந்துள்ளேன்!!!

15 வாசகர் எண்ணங்கள்:

Jayadev Das said...

\\சிம்பு மற்றும் தனுஸ் \\ தனுஷ் தனது வயதுக்கு அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக காளை படத்தில் சிம்பு வாரியிருக்கிறார்.

\\ இது ஏற்க்கனவே உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமல் வரிசையில் தங்கள் காலத்தில் அடுத்த இரட்டையர்கள் தாம்தானென தங்கள் பெயரை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் ஒரு தந்திரமோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது!!!\\ ஆஹா....... இதை நான் யோசிக்கவே இல்லியே....... ஆனா, இது சரியாத்தான் இருக்கும்னு தோணுது!!

\\இலகுவில் எல்லோரையும் பாராட்டும் குணம் கமலுக்கு மிக மிக குறைவு என்பதுகூட இதற்கு காரணமாக இருக்கலாம்!!! \\ ஏ.ஆர். ரஹ்மானை ஆஸ்கார் வாங்கியதற்காக [மனதாரப்] பாராட்டாத ஒரே தமிழ் திரைப் பட டெக்னீஷியன் இவராகத்தானிருப்பார். ஏனோ இந்தாளுக்கு அப்படி ஒரு அல்ப புத்தி.

Unknown said...

தல நீங்க சொல்றதும் சரியாத்தான் படுது, பாப்போம் காரியத்துக்காக சேர்ந்தவங்களா இருந்தா காரியம் முடிஞ்சதும் என்னைக்கு இருந்தாலும் சண்டை போடுவாங்க

ஹாரி R. said...

நல்ல பதிவு அண்ணா ரஜினியை பற்றிய உங்க ஒவ்வொரு பதிவும் சூப்பர்..

V said...

அவர்களின் நட்பு மட்டும் இல்லை.அவர்களுக்கு இடையே இருப்பதாக காட்டி கொள்ளும் போட்டியும் செயற்கையாக உருவாக்கபட்டதுதான்.

Unknown said...

உண்மயான விஷயம் ரஜினி கமல் ரியல் நட்பு , மத்தவங்க பண்றது buisness , இதுக்கு மீடியா சப்போர்ட் அவ்ளோ தான்

முத்தரசு said...

நட்பு அப்படின்னா....துட்டு மாமே துட்டு

r.v.saravanan said...

எனக்கு கூட சிம்பு தனுஷ் நட்பை பார்க்கையில் அது உண்மை என்றே தோன்றவில்லை செயற்கையாக தான் தோன்றுகிறது

Anonymous said...

எல்லாம் செயற்கைதான் பாசு:)

சண்டியர் கரன் said...

///எல்லோரையும் பாராட்டும் குணம் கமலுக்கு மிக மிக குறைவு என்பதுகூட இதற்கு காரணமாக இருக்கலாம்!!!///

கமல் ஆபிஸில் வேலை பார்த்தீங்களா??
இல்லை
கமலை வச்சி படம் டைரக்ட் பண்ணிருக்கீங்களா?

சும்மா இந்த மீடியா (கமல் காசு கொடுக்காததால்) சொன்ன தவறான செய்திகளெல்லாம் உண்மையா பரப்ப கூடாது....

ROBOT said...

ரொம்ப சரியா சொன்னீங்க.....

அப்படி உண்மையான நட்பு என்றால் இப்போ கூட வாலு பட ட்ரைலரில் சம்பந்தமே இல்லாமல் தனுஷ் பட வசனத்தை கிண்டல் செய்து விட்டு இப்போ மேடையில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்பது எல்லாம் ரொம்ப ஓவர்.

என்ன தான் இருந்தாலும் சிகரங்கள் (legends ) சிகரங்கள் தான். சில்லரைங்க சில்லரைங்க தான் ......

எப்பூடி.. said...

@ சண்டியர் கரன்

நான் ரஜினி ரசிகன் என்பதால் கமலைப்பற்றி குறைவாக, தப்பாகவோ சொல்பவன் என நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல; நான் பார்க்கும் சினிமாவிலும், நியத்திலும் ரஜினியும் கமலும் யார் என்று எனக்கு புரிந்துகொள்ளும் அளவுக்கு ஏதோ இத்தனூண்டு அறிவு உண்டு!! கமலைப்பற்றி தெரிந்துகொள்ள கமல் ஆபீசில் வேலைபாக்கணும் என்றோ, கமலை இயக்கணும் என்றோ அவசியம் இல்லை!!! அப்டின்னா மஹிந்த, கருணாநிதி, சோனியா பற்றி சொல்வதென்றால் அவர்களிடம் வேலை பார்த்தால், அல்லது அவர்களை இயக்கினால்தான் கருத்து கூற முடியுமோ!!!

கமல் பொது மேடைகளிலும், பேட்டிகளிலும் கூறிவருவதை வைத்து கமல் பாராட்டும் குணத்தை சாதாரண சினிமா அறிவுள்ளவனாலும் புரிந்துகொள்ள முடியும்!!! 'காசு கொடுக்காததால்' என்னும் சொல் நகைப்பையும்/அறியாமையும் தவிர வேறெதையும் உணர்த்தவில்லை!!! ஒரு ரசிகனாக உங்களுக்கு கமல் மீதிருக்கும் பற்றுக்கு வாழ்த்துக்கள்!!!

ARASIAL said...

நல்ல கட்டுரை எப்பூடி!

-வினோ

ARASIAL said...

கமல் எப்படி காசு கொடுப்பார் என்பதை வேண்டுமானால் அவரது பிஆர் நிகில் முருகனிடம் கேட்டு தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள் சண்டியர்களை. நிற்க, இங்கே கமலை என்ன குறை சொல்லிவிட்டார்கள். பெருமைப் படுத்தத்தானே செய்திருக்கிறார் எப்பூடி?

Unknown said...

ரஜினி-கமல் நட்பு பற்றி நல்ல பதிவு!!

Anonymous said...

இவனுக பண்ணுறத பார்த்தா... இப்புடிதான் சொல்ல தோணுது!!
தனுசுக்கும் சிம்புக்கும் சண்ட, அந்த சண்டக்கு காரணம்.........

நோ.... நோ பேர்ட் வர்ட்ஸ்...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)