Friday, April 27, 2012

கலைஞரே இத்தோட நிறுத்திக்கோங்க, பிளீஸ்!!ஆரம்ப காலங்களில் பதிவுகளில் கலைஞரை கேலி செய்தே அதிக பதிவுகள் எதுதினேன்; சில காலங்களின் பின்னர் அது வேண்டாமென்று தோன்றியதால்  நீண்ட  நாட்களாக கலைஞர் பற்றி எதுவும் எழுதவில்லை. ஒருவரை திட்டிக்கொண்டே இருப்பதால் என்ன வந்துவிடப் போகின்றது என்கின்ற எண்ணம்தான் அதற்கு காரணமன்றி  கலைஞர் மீதான எனது எண்ணங்களின் மாற்றமல்ல!!  பொதுவாக  இலங்கைத் தமிழர்களுக்கு கலைஞர்மீது வெறுப்பும், கோபமும் ஏற்ப்பட காரணம்; அவர் இறுதிநேர யுத்தத்தை நிறுத்தி அப்பாவி மக்களை காப்பாற்ற வழிசெய்யவில்லை என்பதுதான்!! ஆனால் எனக்கு கலைஞர் மீதான வெறுப்புக்கும், ஆத்திரத்திற்கும் அது காரணம் அன்று!!

ஏனெனில் கலைஞரின் கைகளில் அன்று களமுனை மக்களை  காப்பாற்றும் அளவிற்கு சக்தி இருக்கவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது! கலைஞர் மத்தியில் ஆட்சியில் இருந்து விலகிவிடுவேன் என எச்சரித்து, விலகியிருந்தாலும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி;  தான் முன்வைத்த காலை பின்வாங்கும் நிலையில் இல்லை  என்பது வெட்டவெளிச்சமாக உணரக்கூடிய  உண்மை! அந்த விடயம் கலைஞருக்கும் தெரியும், ஜெயலலிதாவிற்கும் நன்கு தெரியும்!!  கலைஞர்  காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாததை வைத்து கலைஞரை தமிழினத்  துரோகி போலவும், தன்னை ஈழத்து காவலாளி போலவும் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா ஒன்றும் ஈழத்துப் பிடிப்பில் அதை செய்யவில்லை என்பதும்,  அதுவொரு  பக்கா அரசியல் என்பதும்  சிந்திக்கத் தெரிந்தவர்க்கு தெரிந்த உண்மை!!

அந்தவகையில் எனக்கு கலைஞர் காங்கிரசை விட்டு விலகாததுகூட ஆச்சரியமோ, கோபமோ இல்லை; அவர் தனக்கெதிராக தமிழக எதிர்கட்சிகள் கொண்டு நடாத்தும் தமிழினத் துரோகி பட்டத்தை மறைக்க, தனக்கான இமேஜை நிலை நிறுத்த;  தமிழக 'பாமர'மக்களை முட்டாளாக்கத் திட்டமிட்டு  நடத்திய உண்ணாவிரத போராட்ட  நாடகம்தான் இத்தனைநாள்  மாறாத கலைஞர் மீதான கோபத்திற்கு காரணம். அவரது நாடகத்தின் இறுதியில் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்ப்பட்டுவிட்டதாக  சொல்லிய பொய்களை இப்போது நினைத்தாலும் மனம் குமுறுகின்றது!!! 'யுத்த நிறுத்தம்'  நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என இந்திய செய்திகளில் (தமிழக மற்றும் இந்திய ஆங்கில தொலைக்காட்சிகளில்) அறிவித்த கணம்  கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களுமே மிகுந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைந்த தருணம் என்று சொல்லலாம்!!!


பசுமரத்து ஆணிபோல அந்த நாட்கள் இன்னமும் என்நினைவில்; கொழும்பில் ஒரு Food City யில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அம்மாவின் தொலைபேசி செய்தி மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது; "கலைஞர் எங்களுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார்" என்பதுதான் அந்த செய்தி. அடுத்த கணமே கொழும்பு, யாழ்ப்பாணம் என தமிழர்கள் வாழும் அத்தனை இடங்களுக்கும் இந்த செய்தி மிகப்பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. நான் மதியம்  சாப்பிட வீட்டிற்கு  வருவதற்குள் உண்ணாவிரதம் 'யுத்த நிறுத்தம்' என்னும் சாதகமான  தீர்வுடன் நிறைவடைந்திருந்தது; எல்லோருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி; காரணம் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என மிகவும் வேண்டியவர்கள் யுத்த பிரதேசத்தில் மாட்டிக்கொண்டு தத்தளித்த நேரமது!!! அதனால் அனைவருக்கும் தம் உறவுகள் மீண்டு தம் கைகளில் இணைந்ததாக ஒரு பூரிப்பு!

மறுநாளே கலைஞர் செய்தது உண்ணாவிரதம் அல்ல, அதுவொரு பக்கா அரசியல் நாடகம் என அறிந்தபோது ஒடுமொத்த நம்பிக்கைகளும் தூக்குவாரிப் போட்டன!!!  கலைஞர் எம்மை செருப்பால் அடித்ததைபோல உணர்ந்தோம்.  கலைஞர் என்னும் எழுத்தாளர், அரசியத்தலைவர் மீதிருந்த மரியாதை, ஈடுபாடு எல்லாம் அந்த நொடியிலேயே காற்றில் பறந்தது. அதன் பின்னர்கூட  மனதில் ஏதோ ஒரு மூலையில் கடைசி நேரங்களிலாவது கலைஞர் ஏதாவது செய்யமாட்டாரா என்கின்ற நம்பிக்கை இருந்துகொண்டே இருந்தது!.  40,000 பொதுமக்களின் உயிரைவிட தனது அரசியல் வாழ்க்கைதான் முக்கியம் என நினைத்த கலைஞரை எப்படி எமக்கு பிடிக்கும்!!!

அந்த தேர்தல் முடிவுகளின் பின்னர்  பிள்ளைகளின் அமைச்சர் பதவிகளுக்காக  டெல்லிவரை  பேச்சுவார்த்தைக்கு சென்ற கலைஞர் அன்று ஈழத்து மக்களுக்காக கடதாசியும், மின்னஞ்சலும் அனுப்பியதோடு நிறுத்தியிருந்தால்க்கூட எமக்கிந்த கோபமும் ஆத்திரமும் இருந்திருக்காது!! அவரது அந்த ஒருசிலமணிநேர உண்ணாவிரத நாடகம்தான் இலங்கை தமிழ் மக்களுக்கு  இரத்தம் உறையும் அளவிற்கு கோபத்தையும்,. ஆத்திரத்தையும் தூண்டியது!!!  இந்த ஏமாற்றமும், கோபமும், ஆத்திரமும் இறுதி மூச்சிருக்கும்வரை பல இலங்கை தமிழருக்கு தீராத வடுக்கள்!! எதிரியைகூட மன்னிக்கலாம் நம்பிக்கை துரோகியை????


இவை நடந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் கலைஞருக்கு என்ன ஆச்சு? தேர்தல் காலம் கூட இல்லை, அப்படி இருந்தும் ஏன் இப்போதெல்லாம்  ஈழம், ஈழம் என்று புலம்ப ஆரம்பித்திருக்கின்றார் என்றுதான் புரியவில்லை!!  சனல் 4 இன்  'கொலைக்களம்' பார்த்து கண்ணீர் வடித்ததாக இவர் சொல்லியபோது; இவர் மீதிருந்த கோபமும், ஆத்திரமும் பன்மடங்கு  ரீசாஜ் செய்யப்பட்டது!!! இப்போதெல்லாம் இலங்கை தமிழர்கள்மீது பரிவு உண்டாகி தனி ஈழம் என்றெல்லாம் பேசுகின்றார்; இதை கேட்கும்போது ஆத்திரம் தவிர்த்து வேறெந்த உணர்வும் ஏற்படவில்லை!! இந்த லட்சணத்தில் இவரது விசிறிகள் இலங்கை தமிழர்கள் ஈழம் அமைவதற்கு கருணாநிதியை  கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டுமாம்!! இதை கேட்க்கும்போது நகைப்பை தவிர வேறெந்த உணர்வும் தோன்றவில்லை!!


அன்று ஈழத்து பெண்களை சிங்களம் கற்பழித்தது!!
இன்று ஈழத்து எச்சங்களை தமிழக அரசியல் கற்பழிக்கின்றது!! 

 

தமிழகமே !!!

உங்கள்  அரசியல் சுயலாபத்துக்கு எதற்கு எங்களது  குருதியையும் நின்மதியையும் சுரண்டுகிறீர்கள்! போதும், தயவு செய்து உங்களது  ஈழத்து மீதான காதலின் ஒப்பாரியை நிறுத்திவிடுங்கள்!!! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஈழத்து பெயர் சொல்லி வாக்கு பிச்சை கேட்க்கப்போகின்றீர்கள்!!  போதும்,  தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள்!!! கருணாநிதியும், ஜெயலலிதாவும் அடித்த பல்ட்டிகள் போல் சர்க்கஸ் குரங்கு கூட இத்தனை தடவை குட்டிக்கரணம் போட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்!!  அத்தனை பல்ட்டிகளும் உங்களுக்கு  ஒட்டு, எங்களுக்கோ வேட்டு!!!  உண்மையில் யாராவது தமிழக தலைமைக்கு எம்மீது அக்கறை இருந்தால் தயவுசெய்து இனிமேலாவது எங்களை வைத்து அரசியல் செய்யாமல் விட்டுவிடுங்கள்!! நீங்கள் காட்டும் குறளி வித்தைகள் எம்மை இன்னமும் காயப்படுத்துகின்றது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்!!

* தமிழக மக்களை எந்த இடத்திலும் நான் குற்றம் சொல்லவில்லை, அவர்களால் அதிகபட்ச உணர்வுகள் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன, வெளிக்காட்டப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன; அதற்க்கு பதிலான ஈடுபாட்டை  இலங்கைத் தமிழர்கள்  இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை, அந்தவகையில் இலங்கை தமிழனாய் நானும் குற்ற உணர்ச்சி உள்ளவன்தான்!! என் கோபம் அத்தனையும் எம்மை பலிக்கடா ஆக்கும் தமிழக அரசியால் சாக்கடைகள் மீதுதான் அன்றி மக்கள் மீதல்ல!!

*.......*

26 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

தமிழக தமிழன் கையறு நிலையில் தான் இருந்தான்...அவனால் ஏதும் செய்ய முடியவில்லை(!) எனினும் தன் எதிர்ப்பை பலமாக பதிவு செய்தான்...இதில் தாங்கள் சொல்லும் நபர் எப்போதும் தன் குடும்பத்துக்கு மட்டுமே உழைக்கும் ஆள்...இன்னும் எதாவது எலும்புகள் இருக்கா(!)...அதை வைத்து எதாவது பிழைப்பு நடத்த முடியுமா என்று மட்டுமே பார்க்கும் நல்லவர்!!!!!!!!!!!!!!!!

Hajananth said...

சீமானைப் பற்றியும் கொஞ்சம் புட்டு புட்டு வையுங்களேன்.. இன்னும் பலர் இருக்கிறார்கள்.. இராமதாஸ் , திருமாவளவன் போன்றோரும் பக்கா சுயநல அரசியல்வாதிகள்.. வை.கோவைப் பற்றிப் பெரிதாகப் புரியவில்லை.. உயிரைப் பணயம் வைத்து வன்னியெல்லாம் சென்று வந்தார் பின்னர் பொடா சட்டத்தில் வருசக் கணக்கில் சிறையில் இருந்தார்.. ஆனால் பின்னாடி ஜெயலலிதாவின் காலைப் பிடித்தார்.. 2008 களில் வை.கோவின் கட்சி சார்பிலும் நான்கோ ஐந்து பாராளமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள்.. அவர்கள் பெயருக்காவது இராஜினாமா செய்திருக்கலாம்,, ஆனால் செய்யவில்லை.. ஆக எல்லாரும் பச்சைக் கள்ளர் போலத் தான் தெரிகிறது!!

RegisKavin said...

எப்பூடி நம்ம அரசியல்?

எனக்கு குடும்பத்தை சமாளிக்க நேரமில்லை இவனுகள் வேறை !

இப்படிக்கு,
தமிழ் காவலன், கலைஞர்

பாலா said...

//தமிழகமே !!!

உங்கள் அரசியல் சுயலாபத்துக்கு எதற்கு எங்களது குருதியையும் நின்மதியையும் சுரண்டுகிறீர்கள்! போதும், தயவு செய்து உங்களது ஈழத்து மீதான காதலின் ஒப்பாரியை நிறுத்திவிடுங்கள்!!!

தலைவரே நீங்கள் கடைசியில் சொல்லி விட்டாலும், தமிழகமே என்று சொன்னது என்னையும் சேர்த்து சொன்னது போல சுருக்கென்று தைக்கிறது. நானும் கையாலாகாத குற்ற உணர்ச்சியுடைய ஒருவன்தான்.

Unknown said...

தல செருப்பால அடிச்ச மாதிரி எழுதி இருக்கீங்க, அந்தாளு இதைப்படிச்சா நாண்டுகிட்டுதான் சாவனும், பாதிக்கப்பட்ட இடத்தில இருக்கறவனுக்குதான் தெரியும் வலியும், வேதனையும், தூரத்துல உட்கார்ந்துகிட்டு புண்ண நோண்டி நோண்டி விட்டுகிட்டு இருந்தா மனுசனே இல்ல, இத்தனை நாளா ஓரளவுக்காவது மரியாதை இருந்தது, ஆனா இப்ப நல்ல சாவு கூட கலைஞருக்கு வராதுன்னு உறுதியா நம்பறேன்

Jayadev Das said...

\\\ஆரம்ப காலங்களில் பதிவுகளில் கலைஞரை கேலி செய்தே அதிக பதிவுகள் எதுதினேன்;\\ அடடே, அதையெல்லாம் தேடித் பிடிச்சு படிக்கணும் போல இருக்கே.

Jayadev Das said...

\\ "கலைஞர் எங்களுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார்"\\ காலையில மூக்கு பிடிக்கச் சாப்பிட்டார், அப்படியே காத்து வாங்க பீச்சுக்குப் போனார், படுத்திருந்தார், அப்புறம் மதியம் சாப்பாட்டு டைம் வந்து, வயிறு பசித்தது, ஜூஸ் குடிச்சிட்டு சாப்பிடப் போயிட்டார். இது உண்ண விரதம்னா ஒவ்வொருத்தரும் தினமும் சாப்பிடும் நேரம் போக மீத நேரம் உண்ணா விரதம் இருக்கிறார்கள் என்று ஆகிவிடும்!!

Jayadev Das said...

\\40,000 பொதுமக்களின் உயிரைவிட தனது அரசியல் வாழ்க்கைதான் முக்கியம் என நினைத்த கலைஞரை எப்படி எமக்கு பிடிக்கும்!!!\\ இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமால், தமிழக மக்களையும் நம்ப கழுத்தருத்தவர் இவர். அண்டை மாநிலப் பிரச்சினைகள் எல்லாவற்றிலும் தமிழக உரிமையை தன்னுடைய சொந்த நலனுக்காகவும் பேரன்களின் வியாபாரத்திர்க்காகவும் தாரை வார்த்தவர். இவர் குடும்பம் செல்வத்தில் இன்று கொழிக்கிறது, ஆனால் அதன் விளைவுகளை ஆறு கோடி தமிழக மக்கள் இனி வரும் எல்லாக்காலமும் சித்திரவதையாக அனுபவிப்பார்கள்.

Jayadev Das said...

\\இந்த லட்சணத்தில் இவரது விசிறிகள் இலங்கை தமிழர்கள் ஈழம் அமைவதற்கு கருணாநிதியை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டுமாம்!! \\ ரெண்டு நாள் முன்னால் தினமலரில், தமிழர்கள் ஈழம் அமைவதற்கு 'காந்திய வழியில் போராடப் போகிறேன்' என்று இவர் சொன்னார் என்று படித்தேன். எனக்கும், இதை கேட்க்கும்போது நகைப்பை தவிர வேறெந்த உணர்வும் தோன்றவில்லை!!

Jayadev Das said...

\\இன்று ஈழத்து எச்சங்களை தமிழகம் கற்பழிக்கின்றது!! \\ தமிழக அரசியல்வாதிகள் என்று திருத்திக் கொள்ளலாமே. ஈழ தமிழ் மக்கள் படும் கஷ்டம் குறித்து தமிழக மக்கள் மனதில் குமுறல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நீங்கள் அங்கு நலமுடன் வாழ வேண்டும் என்ற ஆதங்கமும் இருக்கிறது.

Jayadev Das said...

\\அதற்க்கு பதிலான ஈடுபாட்டை இலங்கைத் தமிழர்கள் இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை.\\ நீங்கள் இருக்கும் நிலையில் இதை உங்களிடமிருந்து நாங்கள் எதிர் பார்க்கவும் இல்லை.

Jayadev Das said...

ஓட்டுகள் போட முடியாது என்றால் ஓட்டுப் பட்டைகள் எதற்கு பாஸ்.......!!

boopathy perumal said...

கருணா ஒரு தமிழ் ஈனத் தலைவன். சொந்த மக்கள் (வாரிசுகள்) நலம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட குடும்பத் தலைவன்

Rajaraman said...

நீங்க அறிவில்லாம அடிச்சிகிட்டு செத்ததுக்கு ஏனய்யா கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் குறை சொல்றீங்க, முதல்ல உங்ககிட்ட இருக்கிற குறைகளை களைய பாருங்க இல்லாட்டி காலம் பூரா இப்படியே புலம்பிகிட்டே இருக்க வேண்டியதுதான்.

எப்பூடி.. said...

@ Jayadev Das

தமிழக அரசியல் என்று திருத்திவிட்டேன் நண்பரே!!

........................

@ Rajaraman

நாங்கள் உங்களை குற்றம் சொல்வது, நீங்கள் எங்களுக்கு உதவி செயாததர்கல்ல ; உபத்திரவம் கொடுக்காதீர்கள் என்பதைத்தான்!!! நாங்கள் செத்துக்கொண்டிருக்கும்போது எதுக்கு கொள்ளிக்கட்டை எடுத்து நீட்டுகிறார்கள் என்றுதான் கேட்கின்றோம்!!! எங்களை வைத்து அரசியல் போக்கிரித்தனம் செய்யாதீர்கள் என்றுதான் சொல்கின்றோம்!!!

Prakash said...

தனியீழம் பற்றிப் பேசுவதற்கு யாரும் தனி உரிமை - காப்புரிமை கொண்டாட முடியாது.

பிரச்சினையின்மீது அக்கறையும், கவலையும் உடையவர்கள் - தனியீழத்துக்காகக் குரல் கொடுக்க யார் முன்வந்தாலும் - அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரவேற்க முன்வரவேண்டும்!

அதை விட்டுவிட்டு, நேற்று என்ன சொன்னாய்? அதற்கு முதல் நாள் என்ன சொன்னாய்? என்றெல்லாம் பேச ஆரம்பிப்பது - எடுத்துக்கொண்ட பிரச்சினையைப் பலகீனப்படுத்தத்தான் அது உதவும்- எதிரிகளுக்குக் கொண்டாட்டமாகவும் முடியும். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் என்ன என்னவெல்லாம் பேசினார்கள் என்று பட்டியல் போட ஆரம்பித்தால் பலரின் முகவரிகள் காணாமலே போய் விடும். அது இப்பொழுது தேவையா?

தனியீழம்பற்றி இன்றைய முதலமைச்சர் என்ன சொன்னார்? பிரபாகரன்பற்றி அவர் கூறியது என்ன?

யுத்தம் ஒன்று நடந்தால் என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அன்று என்ன சொன்னார்? என்றெல்லாம் பேச ஆரம்பித்தால், முதலமைச்சராக இருக்கும் நிலையில் சொல்லும் தற்போதையை கருத்தின் வலிமையைச் சிதைப்பது ஆகாதா? அதையும் எவரும் செய்யக் கூடாது - வந்தவரை லாபம் - பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே கருதவேண்டும் - பொது இலட்சிய நோக்கோடு!

கலைஞர் அவர்கள் தனியீழம் குறித்து இப்பொழுதுதான் முதன்முதலாகப் பேசுகிறாரா? எழுதுகிறாரா?

டெசோவை மீண்டும் தொடங்குவோம் என்று கூறுகிறார் கலைஞர் அவர்கள்; அப்படித் தொடங்கு வதற்கு வைகோ அவர்களைக் கேட்டு அனுமதி பெற வேண்டுமா, என்ன?

எது நம்மைப் பிரிக்கிறதோ, அதனைப் பொருட் படுத்தாமல், ஈழத் தமிழர் பிரச்சினையில் எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத்த ஆழப்படுத்த வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகம் தொடர்ந்து கூறிவரும் ஆழமான கருத்தாகும்.

பிரச்சினைமீது கவலை உள்ள எவரும் இப்படித்தான் சிந்திப்பார்கள் - முடிவெடுப்பார்கள்.

விவாதத்துக்காக என்று வைத்துக்கொண்டாலும் கூட நேற்று மாறுபட்டவர்கள், இன்று ஏற்றுக் கொள்வார்களேயானால், அதனை வரவேற்பதுதான் புத்திசாலித்தனமும், பொறுப்புணர்வும், பிரச்சினைமீது கவலையும், அக்கறையும் உள்ள செயலாகக் கருதப்பட முடியும்.

தமிழர்கள் ஒன்று சேர்ந்து அடிப்படைப் பிரச்சினை யில் குரல் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனைக்கு ஊறுவிளைவிக்க வேண்டாம் என்பதே நமது கனிவான வேண்டுகோள்!

உலகத் தமிழர்கள் மதிமுக பொதுச் செயலாளரின் இந்தக் கருத்தை - நிலைப்பாட்டை ஏற்க மாட்டார்கள் என்பதில் அய்யமில்லை.

என்ன சொன்னாலும் தனியீழம்பற்றி கலைஞர் பேசத் தகுதியில்லை என்பதில் வைகோ அவர்கள் உறுதியாக இருப்பாரேயானால் கீழ்க்கண்ட முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கும்.

ஈழத் தமிழர்கள் பற்றியும், விடுதலைப்புலிகள் பற்றிப் பேசியதற்காகவும், அந்த மேடையில் இருந்ததற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டபொழுது வைகோ போன்ற வர்களை வெளியில் கொண்டு வருவதற்காகத் தள்ளாத வயதிலும் நீதிமன்ற வாயிலிலும், சிறை வாசலிலும் கடும் வெயிலில் நின்றாரே - வெளியில் கொண்டு வர பல வகைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டாரே - விடுதலை ஆன நிலையிலும் போடப்பட்ட வாய்ப்பூட்டு களை ஆட்சிக்கு வந்த நிலையில் உடைத்தாரே இவையெல்லாம் தகுதி குறைவுதான் கலைஞர் அவர்களுக்கு என திரு வைகோ அவர்கள் நினைத்தால் நாம் என்னதான் செய்ய முடியும்? இந்தக் கருத்தைச் சொன்னதற்காக பிற்காலத்தில் வைகோ அவர்கள் வருந்துவார் என்பதில் அய்யமில்லை.

கலி. பூங்குன்றன்
சென்னை 27.4.2012 பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

Prakash said...

அபிஅப்பா என்ற‌ ப‌திவ‌ர் க‌ருணாநிதியின் ஆத‌ர‌வாள‌ர். என‌வே அவ‌ரை ஆத‌ரித்து ஒரு ப‌திவினை எழுதிவிட்டார். உட‌னே பொங்கி எழுந்துவிட்ட‌ன‌ர் ந‌ம் ஈய‌ த‌மில‌ர்க‌ள்.


க‌ருணாநிதிக்கு இதுவும் வேண்டும், இன்ன‌மும் வேண்டும். உன‌க்கு ஏன் இந்த‌ வேண்டாத‌ வேலை. இப்போது எதுக்கையா த‌மில் ஈல‌ம். யாருக்கு வேண்டும் த‌மில் ஈல‌ம். யாழ்பாண‌த்து த‌மிள‌னுக்கா, ம‌ட்ட‌க‌ள‌ப்பு த‌மில‌னுக்கா அல்ல‌து திரிகோண‌ம‌லை த‌மில‌னுக்கா. நீங்க‌ள் சொல்லும் ஈல‌த்தில் ம‌லைய‌க‌ த‌மில‌னுக்கு இட‌ம் உண்டா?

அவ‌னுங்க‌ளே ஒருத்த‌னை ஒருத்த‌ன் காட்டி கொடுத்து கொண்டு இருக்கின்றான், சுட்டு த‌ள்ளுகின்றான், க‌ட‌த்தி கொண்டு போய் ப‌ண‌ம் ப‌றிக்கின்றான். நேற்று வ‌ரைக்கும் தாயாய் பிள்ளையாய் ப‌ழ‌கிய‌ ம‌க்க‌ளை கொலை செய்த‌வ‌னுட‌ன் கூடி குலாவி கும்மாள‌ம் இடுகின்றான். அப்புற‌ம் எதுக்கு அவ‌னுங்க‌ளுக்கு என்று ஒரு த‌னி நாடு? இதுல‌ க‌ருணாநிதிக்கு கொலைஞ‌ர் என்று ப‌ட்ட‌ பெய‌ராம். என்ன‌ கொடுமை அய்யா இது?

ஈல‌ம் கிடைத்தால் அது யாருக்கு ட‌க்ள‌ஸ்க்கா? எம்மான் க‌ருணாவிற்கா? அல்ல‌து பிள்ளையானுக்கா? ஈய‌ த‌மில‌ர்க‌ளே, முத‌லில் நீங்க‌ள் உங்க‌ளின் வ‌ர‌லாற்றை ச‌ற்று க‌வ‌ன‌மாக‌ ப‌டியுங்க‌ள். பிற‌கு க‌ருணாநிதியை காறித் துப்ப‌லாம்.

எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் , உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு. இது எங்க‌ ஊரு த‌மிழ‌ரான‌ திருவ‌ள்ளுவ‌ர் எழுதிய‌து. அவ‌ரையாவ‌து ம‌திப்பீர்க‌ளா அல்ல‌து அவ‌ரும் வ‌ட‌க்கில் இருந்து வ‌ந்த‌ வேசி ம‌க‌னா?

http://venthati.blogspot.in/2012/04/blog-post.html

Prakash said...

இணையத்தில் இப்போதும் ஈழ பிரச்சனைக்காக திமுகாவையும் கருணாநிதியையும் குறை குற்றம் சொல்லிகொண்டிருப்பதை பார்த்தல் எரிச்சல்தான் வருகிறது...

2009 ஆம் ஆண்டு, திமுக , மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தால், மத்திய அரசு கவிழிந்திருக்காது, இலங்கைக்கான உதவிகள் நின்றிருக்காது , போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்காது, இந்த படுகொலைகளும் தடுக்கபட்டிருக்காது.....என்ன, திமுகவின்மேல் ஒரு கரும்புள்ளி வந்திருக்காது....


ஒருக்கால், அப்போது திமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால், உடனே தற்போதைய ஈழ தாய், போர் என்றல் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று பஞ்ச் டயலாக் சொல்லிய, LTTE தான் மக்களை மனித கேடையமாக பயன்படுத்துகிறார்கள் என்று சொன்ன, LTTE தான் மக்களை அடைத்து வைத்திருகிறார்கள் அதினால்தான் மக்கள் சாகின்றார்கள் என்று சொன்ன, இலங்கை அரசு தமிழர்களை கொல்லவில்லை LTTE என்ற தீவிரவாத இயகத்தை எதிர்த்து போர் செய்கின்றது என்று ராஜபக்ஸ அரசுக்கு ஆதரவாய் கருத்து தெரிவித்த, போர் நிறுத்தம் வேண்டும் என்ற அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த, போர்நிறுத்தத்தை வலியுறுத்தி எந்தவிதமான வேண்டுகோள் அல்லது போராட்டமோ செய்யாத ஜெயாவின் அதிமுக, மத்திய அரசிற்கு அதரவு அளித்திருக்கும்...

அதேபோல, தமிழகத்தில் எந்த அரசு இருந்திருந்தாலும், அந்த நேரத்தில் எதுவும் செய்திருக்க முடியாது, ஒரு மாநில அரசிற்கான அதிகாரம் அவ்வளவே...தமிழ்நாட்டு அரசிற்கு ராணுவமோ, வெளியுறவு கொள்கைகளை தீர்மானிக்கும் சக்தியோ கிடையாது....

தமிழக மக்களின் உணர்வுகளையும் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் அவலங்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு, தமிழக அரசின் எந்த ஒரு வேண்டுகோளையோ, தீர்மானத்தையும் ஒரு பொருட்டாக மதித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க இயலாத நிலையே உள்ளது.

ஈழத்தமிழர்கள் தொடர்பாக இது வரை தமிழக மக்கள் நடத்தியிருக்கிற போராட்டங்களையோ, விடுத்திருக்கிற வேண்டுகோள்களையோ அல்லது சட்டப்பேரவைத் தீர்மானங்களையோ இந்திய அரசு கடுகளவும் மதித்ததில்ல என்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது.

குறிப்பாக ஈழத்தமிழர்கள், தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு தொடர்பாக ஏராளமான தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவையெல்லாம் சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இடம்பெறும் தகவல்களாக மட்டுமே அமைந்துவிட்டன.

அத்தகைய தீர்மானங்களையொட்டி இந்திய அரசு கடந்த காலத்தில் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

அதுசரி, பிரபாகரன் சர்வதேச குற்றவாளி, விடுதலைபுலிகள் தீவரவாத கும்பல், பிரபாகரனை இந்தியா இழுத்து வந்து தூக்கில் இட வேண்டும், போர் என்றால் சாகத்தான் செய்வார்கள்...தமிழ மக்களை கொல்வதே விடுதலைபுலிகள்தான், இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்ய்யபடவேண்டும் என்று சொன்ன எழவு தாயை நம்பும் நீங்கள் எல்லாம் வேறு யாரையும் நம்ப போவதில்லை..... கலைஞர் அதுசரி எது செய்தாலும் அது நீலிக்கண்ணீராகவே தோன்றும்..

ஆமா, எப்ப பார்த்தாலும் அவரையே கொற சொல்கின்ற குபீர் திடீர்களே, அவரு கிழிச்சது இருக்கட்டும்... நீங்க என்ன கிழிச்சிங்க?

பதில்,

1. ரெண்டு அப்பாவிகள உசுபேத்தி தீக்குளிக்க வச்சோம்!
2. கருப்பு டி-ஷர்ட் போட்டுக்கிட்டு கூட்டம் நடத்தினோம்!
3. மெழுகுவர்த்தி விற்றோம்!
4. திருட்டு சி டி இல்லை ஒரிஜினல் சி டி விற்றோம்!
5. தமிழினத்தை ரட்சிக்க சில திடீர் தலைவர்களை உருவாக்கினோம்!
6. முகநூலில், ட்விட்டரில் உருகி, அருகி மாய்ந்தோம்!
7. கடைசியாக அதே நாளில் வருசாந்திரம் மறக்காம கொண்டாடுகிறோம் ...

# சந்தோசமா ஈழ தாயிற்கு சொம்படியுங்க ..ஈழம் கிடைச்சுடும்..பெஸ்ட் ஆஃப் லக்..!

baleno said...

உங்கள் அரசியல் சுயலாபத்துக்கு எதற்கு எங்களது குருதியையும் நின்மதியையும் சுரண்டுகிறீர்கள்! போதும் தயவு செய்து உங்களது ஈழத்து மீதான காதலின் ஒப்பாரியை நிறுத்திவிடுங்கள்!!!

இந்த கருத்துடன் முழுக்க உடன்படுகிறேன். கருணாநிதி, ஜெயலலிதா மட்டுமல்ல சீமான், வைகோ, திருமாளவன், விகடன் போன்ற பத்திரிக்கைகள் உட்பட அவர்களது ஈழத்து மீதான காதலின் ஒப்பாரிகளை நிறுத்த வேண்டும்.

பாலா said... என்னையும் சேர்த்து சொன்னது போல சுருக்கென்று தைக்கிறது. நானும் கையாலாகாத குற்ற உணர்ச்சியுடைய ஒருவன்தான்.

நண்பர் பாலா, நீங்கள் வீர முழக்கம் செய்து யுத்தத்தை ஊக்குவித்தவர் இல்லை. அதனால் கவலைபட,குற்ற உணர்வு கொள்ள வேண்டிய தேவையில்லை.

Jayadev Das said... //அதற்க்கு பதிலான ஈடுபாட்டை இலங்கைத் தமிழர்கள் இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை.// நீங்கள் இருக்கும் நிலையில் இதை உங்களிடமிருந்து நாங்கள் எதிர் பார்க்கவும் இல்லை.

இலங்கையில் யுத்தம் செய்யாமல் தமிழர்கள் நல்ல நிலையில் இருந்திருந்தால் தமிழகத்தில் மின்சார வெட்டு வந்தாலோ, தண்ணீர் பிரச்சனை வந்தாலோ இலங்கையில் உள்ள தமிழர்கள் போராட வேண்டுமா? இப்படி ஒருவரிடம் ஒருவர் எதிர் பார்ப்பது ஒரு ஆரோக்கியமான செயல்பாடு இல்லை.இலங்கை தமிழர்கள் பிரச்சனை தீர்க்கபடாமல் இழுபட காரணமே தமிழகம் தான் என்று தமிழ் பெரியவர்கள் கூறி அறிந்திருக்கிறேன்.

பலசரக்கு said...

நீங்கள் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் தான் இப்படி கேடு கெட்ட அரசியல் தலைவர்களை கொண்டுள்ளமைக்கு குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும்.

எப்பூடி.. said...

@ Prakash


பதிவை படித்தபின்னர் கருத்துரையை எழுதினால் நல்லது.

எந்த இடத்தில் ஜெயலிதாவை நம்பினோம் என்று சொல்லி இருக்கிறேன் என்று சொல்ல முடியுமா?

கருணாநிதி மத்தியில் இருந்து விலகவேண்டும் என்று எந்த இடத்தில் சொல்லி இருக்கிறேன் என்று சொல்ல முடியுமா?

நான் சொன்ன விடயம் கருணாநிதியின் கபட நாடக உண்ணாவிரதமும், அதனை தொடர்ந்த ஏமாற்றமும்தான்!! மற்றும் இப்போது அப்பப்போ அவர் எடுக்கும் ஈழம் என்னும் வாந்தியைத்தான்!!! அதைத்தான் வேண்டாம் என்று சொன்னோம்!! மொத்தத்தில் அவர் ஈழம் விடயத்தில் உளறத்தேவயில்லை என்பதைத்தான் சொன்னேன்!!!

யார் உதவி செய்தலும் பற்றிக்கொள்ள வேண்டுமா?? அடடடா இது நல்லா இருக்கே!!! ஒருத்தனோட அக்க தங்கை கெடுக்கப்படும் போது 'விளக்கு பிடித்தவன்' இப்போது மனம் மாறி வந்து உதவி செய்கிறேன் என்பான், உடனே அந்த வீட்டுக்காரன் அவனை பற்றி எழுந்துவிட வேண்டும்; என்ன லாஜிக்!!!!

நீங்க யார்? எந்த நாடு என்பதெல்லாம் தெரியாது!!! ஈழத்தை பற்றி இந்திய அரசியல்வாதிகள் சுய விளம்பரம் பேச கூடாது என்பதுதான் இந்தப் பதிவு!!! ஈழத்து தமிழன் தனக்குள்ளேயே அடிச்சுக்கிறான், சாகிறான் அது அவனோடே போகட்டும்; தமிழகம் செய்த உதவிகள்(?) போதும், இனிமேலும் எங்களை வைத்து தமிழகம் அரசியல் செய்யவேண்டாம் என்பதுதான் இந்தப் பதிவு!!

அபியின் அப்பா போன்ற கருணாநிதி ஆதரவாளருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எமக்கில்லை!!! நாங்கள் சொல்வதெல்லாம் தமிழகம் ஈழத்தை வைத்து சுயவிளம்பரம் தேடாதே என்பதுதான்!! ஈழம் தேவையா ? இல்லையா? அது கிடைக்குமா? நாம் சிதைக்கப் படுகிறோமோ? அதை நாமே பார்த்துக் கொள்கிறோம்!!

உதவி செய்கிறேன் பேர்வழியில் மேலும் மேலும் தொல்லை கொடுக்காதீர்கள்!!! இப்போதாவது சொல்வது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!!!

அழகர் பட்டாணி said...

என்ன சொன்னாலும் தனி ஈழம் பற்றி கலைஞர் பேசத் தகுதியில்லை

Yoga.S. said...

வணக்கம்!உண்மையை உள்ளபடி எழுதியிருக்கிறீர்கள்!முருக்கம் கொம்பைப் போய் புளியங்கொம்பு என்கிறார்கள்!

அக்கப்போரு said...

தமிழக மக்களை எந்த இடத்திலும் நான் குற்றம் சொல்லவில்லை, அவர்களால் அதிகபட்ச உணர்வுகள் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன, வெளிக்காட்டப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன; அதற்க்கு பதிலான ஈடுபாட்டை இலங்கைத் தமிழர்கள் இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை, அந்தவகையில் இலங்கை தமிழனாய் நானும் குற்ற உணர்ச்சி உள்ளவன்தான்!! ///தமிழர்களில் மலையகத்தவர், தீபகற்பத்தவர் என்ற பிரிவே தேவை இல்லாதது. அனைவரும் தமிழரே என்பதே போதுமானது. காங்கிரஸ் மதிக்கவில்லை. இனி போனால் முகரையில் சுடுதண்ணீர் ஊற்றப்படும். எனவே ஈழம் தொடர்பாக ஏதாவது பேசி, ஏதாவது ஒரு கொழு கொம்பு கிட்டாதா அரசியலில் பிழைக்க என்ற சிந்தித்து ஈழம், என்கிற புளிய மரத்தைப் பிடித்துள்ளார். என்ன அவர்தம் அடிப்பொடிகள் அலப்பறை கொஞ்சம் தூக்கல்

Mahesh said...

ஈழ தமிழர்களுக்காக உண்மையாக குரல் கொடுக்கும் ஒரு அரசியல் தஹ்லைவன் கூட தமிழகத்தில் இல்லை அது மறைந்த M .G ராமசந்திரன் அவர்களோடு முடிந்து விட்டது , ஈழத்தில் இருக்கும் எமது சகதர சகோதரிகள் மேற்கொண்டு தத்தமது இனம் செழித்து வாழ்ந்திட என்ன வழி என்பதை கண்டறிந்து அதை செவ்வனே செய்ய வேண்டும் , தமிழ் அரசியல் ஆதரவு உங்களுக்கு தேவை இல்லை அனால் தமிழகத்து மக்களின் பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுக்கு உண்டாகட்டும்

Mahesh said...

ஈழ தமிழர்களுக்காக உண்மையாக குரல் கொடுக்கும் ஒரு அரசியல் தஹ்லைவன் கூட தமிழகத்தில் இல்லை அது மறைந்த M .G ராமசந்திரன் அவர்களோடு முடிந்து விட்டது , ஈழத்தில் இருக்கும் எமது சகதர சகோதரிகள் மேற்கொண்டு தத்தமது இனம் செழித்து வாழ்ந்திட என்ன வழி என்பதை கண்டறிந்து அதை செவ்வனே செய்ய வேண்டும் , தமிழ் அரசியல் ஆதரவு உங்களுக்கு தேவை இல்லை அனால் தமிழகத்து மக்களின் பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுக்கு உண்டாகட்டும்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)