Thursday, April 26, 2012

இரவுநேரங்களில் வீடுகளில் தொலைக்காட்சியை ஆக்கிரமிக்கும் முக்கியமான நிகழ்ச்சிகள்.....ஐ.பி.எல் - ஆசியாவின் மிகப்பெரும்  செல்வந்த குழாமான BCCI ஆல் நடாத்தப்படும் மிகச்சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி, வருடத்தில் கிட்டத்தட்ட; 45 நாட்களுக்கு இரவு 8 மணி ஆனதும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் போதை வஸ்திற்கு  அடிமை ஆகியவர்களைபோல டிவிக்கு முன்னால் உட்கார வைக்கும் அளவிற்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வருடாந்த திருவிழா!! சமூக ஆர்வலர்களாலும், கிரிக்கட் விரும்பிகளாலும் விமர்சிக்கப்பட்டாலும்; கிரிக்கட்டை; ஆழமாக ரசிப்பவர்கள் தொடக்கம், கிரிக்கட்டை மேலோட்டமாய் பார்ப்பவர்கள்வரை அனைவரையும் ஐ.பி.எல் ஈர்த்துள்ளது என்பதை மறுக்கமுடியாது!!! ஐ.பி.எல் ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதெல்லாம் விவாதத்திற்கு வேண்டுமானால் கருப்பொருளாக இருக்கலாம், ஆனால் நிதர்சனத்தில் அது வெறும் வெட்டிப் பேச்சுத்தான்!!! ஐ.பி.எல் பார்ப்பவர்களுக்கு வேண்டியது பொழுதுபோக்கு, அதனை ஐ.பி.எல் 100% திருப்தியாக கொடுக்கின்றது!!

சர்வதேசப் போட்டிகளில் வெவ்வேறு நாடுகள் சார்பாக  முட்டிக்கொண்ட வீரர்கள் நண்பர்களாக ஒருமித்தும்;  ஒன்றாக தாய் நாட்டிற்காக  ஆடிய  வீரர்கள் எதிரெதிர் அணிகளில் ஒருவரை ஒருவர் முட்டிக்கொள்வதும் சுவாரசியம்!!!  40 வயதிலும் கலக்கும் முதிய நட்சத்திரங்கள், முகம் தெரியாமல் அறிமுகமாகி ரசிகர்களை  கவரும் இளைய நட்சத்திரங்கள், சிக்சர் வானவேடிக்கை, பவுண்டரி மழை, துள்ளி எறியும் விக்கட்டுகள், பிரமாதமான கேட்ச்கள்(Catch), உற்சாக  நடன அழகிகள், வான வேடிக்கைகள் என அமர்க்களப்படுத்தும் ஐ.பி.எல் ஒரு பக்கா கமர்சியல் விருந்து என்பதில் சந்தேகமில்லை....

கிறிஸ் கெயிலை கையில் பேட்டுடன்  பார்க்கும் பொது; அந்த எமதர்மராஜனே நேரில் வந்ததுபோல பிரம்மாண்டமாய் இருக்கும்!!  கங்குலியை கேப்டனாக பார்க்கையில் பழைய ஞாபகங்கள் நினைவாக வந்து  ஒருவிதமான மரியாதை கலந்த ஹீரோயிசம் தெரியும்!!! நாம் ரசித்த, இனிமேல்  ரசிக்க முடியாதென்று நினைத்த முரளிதரன், டிராவிட், கங்குலி,  கில்க்ரிஸ்ட் என பல ஜாம்பவான்களை மீண்டும் மைதானத்தில் விளையாடுவதை  பார்ப்பதில்  இனிய, சுகமான அனுபவம் கிடைக்கின்றது!! பணத்தையும்  தாண்டி  ஸ்போட்மன்ஷிப், நட்பு, மரியாதை, விட்டுக்கொடுப்பு, போட்டி, திறமைகள்  என பல நல்ல விடயங்களும் ஐ.பி.எல் லில் உள்ளதை மறுக்க முடியாது!!!நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை வாராவாரம்  நடிகர் சூர்யாவினால் நடாத்தப்படும் கேம்ஷோ; உலகம் முழுவதும் பிரபலமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம். SMS மூலம் மக்களின் பணம் அதிகளவில் சுரண்டப்படுகின்றது, மிகவும் இலகுவான கேள்விகள் கேட்கப்படுகின்றது என  பலராலும் பலவிதமாக  விமர்சனம் செய்யப்பட்ட நிகழ்ச்சி!!!   விமர்சனங்கள் என்னதான் எதிர்மறையாகவும், கிண்டலாகவும் சொல்லப்பட்டாலும் 'நீங்களும் வெல்லாலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி 'மெகா'ஹிட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!!  அதிகமாக ஒவ்வொரு வீட்டிலும் இந்த நிகழ்ச்சியை குடும்பம் குடும்பமாக பார்க்கின்றனர்!!!

எஸ்.எம்.எஸ்சில் பணத்தை அள்ளுகிறார்களா? அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுகிற நிலையில் அதை அனுப்புபவனும் இல்லை, நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பவனும் இல்லை!!  காரணம்; அனுப்புபவன் தனக்கு பங்குபற்ற சந்தர்ப்பம் கிடைக்கவேண்டும் என்கிற விருப்பத்தில், எதிர்பார்ப்பில் அனுப்புகிறான். அதை பார்ப்பவனுக்கு அதுபற்றிய எந்த கவலையும் இல்லை, அவனுக்கு வேண்டியது பொழுதுபோக்கு, அது கிடைக்குமிடத்து  அவன் இதெல்லாம் சிந்திக்கப் போவதில்லை!!! சமூக ஆர்வலர்கள் பொங்குவதும், அப்புறம் ஆப் ஆவதும் சகஜம்தானே :-)

விமர்சனங்களை தாண்டி இந்த நிகழ்ச்சியை நோக்கினால் இதுவொரு சிறந்த பொழுதுபோக்கு + பொது அறிவு நிகழ்ச்சி என்பதில் சந்தேகம்  இல்லை. மிக இலகுவான கேள்விகள் கேட்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு; போட்டிக்கு தேர்வாகும் எவரும் எந்தக் கேள்விக்குமே  சரியான பதில் சொல்லாமல் திரும்ப செல்லக்கூடாது என்பதற்காகவே அவ்வாறான கேள்விகள் முதல் இரண்டு கேள்விகளுக்குள் கேட்கப்படுகின்றது!!! (அவற்றுக்கு  கூட பதில் தெரியாமல் போன 'படித்த' ஞான சூனியங்களும் உண்டு) 10,0000 உறுதிப்பணம் கடந்த பின்னர் கேள்விகள் வலுக்கத் தொடங்குகின்றன; பலருக்கும்  இலகுவாக தோன்றும் கேள்விகளுக்கு சிலருக்கு பதில் தெரியாமல் இருக்கும்!! பலருக்கும் பதில் தெரியாத கேள்விகள் சிலருக்கு இலகுவாக இருக்கும்!

தமிழ், சமயம், புராணம், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், மருத்துவம் என ஒவ்வொரு துறையிலும் தெரியாத பல விடயங்களை அறியக்கூடியதாயும், சில மறந்த விடயங்களை ஞாபகப் படுத்த வசதியாகவும் இந்த நிகழ்ச்சி உதவுகின்றது!!  பொதுஅறிவு என்றாலே  ஓடிப்போகும் குழந்தைகளுக்கும் இப்போது பொதுஅறிவில் ஆர்வம் தூண்டப்பட்டிருக்கின்றது!! வெளி உலகமே மறந்து குடும்பத்திகற்காக தேயும் அம்மாக்களுக்கும், தமது கெட்டித்தனத்தை காட்ட துடிக்கும் அப்பாக்களுக்கும், வயது முதிர்ந்த பெரியவர்களுக்கும், தமது பொது அறிவை சுயபரிசோதனை  செய்யும் இளசுகளுக்கும், புதியதை அறிந்துகொள்ளும் சிறுசுகளுக்கும் 'நீங்களும் வெல்லலாம் ஒருகோடி' ஆரோக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி!!

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சூர்யாவிற்கு ரசிகர்கள் மிகப்பெருமளவில் அதிகரிக்கவும் சாத்தியம் உண்டு!!!  அதிகமான குடும்பங்களில் சூர்யாவை  குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு சூர்யாவின் அணுகுமுறை சிறப்பாக உள்ளது!!  அத்துடன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வரும் ஆடியன்ஸும் அந்த வார முடிவுகளில்  சூர்யாவுடன்  கை கொடுத்து  பேசுவது சூர்யாவின் மீதான ஈர்ப்பை நேரடியாகவும், தொலைக்காட்சி ஊடாகவும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது!!! மற்றும் மனிதர் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார், அதிலும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம், பந்தா துளியளவும் இல்லை!!  ஒரு நடிகனாக என்னை இம்ப்ரெஸ் செய்யாத சூர்யா ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக  இம்ப்ரஸ் செய்துள்ளார்!!சூப்பர் சிங்கர்  - 
விஜய் தொலைக்காட்சியில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் அதிகமான வீடுகளில் பார்க்கப்படும் நிகழ்ச்சி!! பாடலைவிட சிறுசுகள் அடிக்கும் கொட்டமும், கலகலப்புதான் ஹைலைட்!!  துறுதுறுப்பான குழந்தைகள், கலகலப்பான நடுவர்கள், சலசலப்பான தொகுப்பாளர்கள் என வாராவாரம் இசை + பொழுதுபோக்கு நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். இந்தத் தடவை யார் வெல்வார்கள் என்று ஆரூடம் சொல்லுமளவிற்கு Extra Ordinary யாக எந்த சிறார்களும் தென்படவில்லை என்றாலும் அதிகமான சிறுவர்கள் மிகவும் திறமையானவர்களாக உள்ளமை ஆச்சரியப்பட வைக்கின்றது!!  பாடல் மட்டுமல்ல, நடனம், டைமிங்கான பேச்சு என சிறார்கள் அசத்துகிறார்கள்!!

இசை என்பது பொதுவாக எல்லோருகும்மே பிடித்த ஒரு விடயம், அதனை மழலைகள், சிறுவர்கள் பாடும்போது மனதிற்கு சந்தோசமும், திருப்தியும் ஏற்ப்படுகின்றமை இயல்பான விடயம். அதேநேரம் பாட்டுப் பிடிக்கும் எல்லோருக்கும் பாடலின் ராகம், தளம் தெரிந்திருக்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமும் இல்லை, சிலரது பாடல்கள் எமக்கு பிடித்திருக்குமானாலும் நடுவர்கள் குறை சொல்வார்கள்; சிலரது பாடல்கள் எம்மை பெரிதாக ஈர்க்காமலிருக்கும், ஆனால் அவற்றை  நடுவர்கள் ஓகோன்னு  சொல்லுவார்கள்!! எமக்கு பிடித்த, நாம் சிறப்பாக பாடுபவர் என நினைத்த போட்டியாளர் போடியிலிருந்து வெளியேற்றப்படும்போது ஏமாற்றமும், கவலையும் உண்டாகும்!!  இப்படியாக சில ஏமாற்றங்களும்  பல சுவாரசியங்களும் கலந்த நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர்.


மெகா சீரியல்கள் -
வார நாட்களில் குடும்ப பெண்களை குறிவைத்து எடுக்கப்படும் ஏதோ ஒன்றுதான் மெகா சீரியல்கள்!!! ஐ.பி.எல், 'நீங்களும் வெல்லலாம் ஒருகோடி'  நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் மெகாசீரியல்கள்தான் பல வீடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன; விளம்பர இடைவேளைகள்தான் ஏனைய நிகழ்ச்சிகளை பார்வையிட அதிகமான வீடுகளில் வழங்கப்படும் காலக்கெடு!!! அப்படி என்னதான் இருக்கின்றது மெகா சீரியல்களில் என்று நோக்கினால்... நோக்கினால்... நோக்கினால்...... நோக்கிக்கிட்டே இருக்கின்றன் அதில் எந்த விடயம் இந்தளவிற்கு ஈர்ப்பை உண்டாக்கியிருக்கின்றது  என்பது புரியவே இல்லை!! அது பெண்களுக்கு மட்டுமே புரிந்த ரகசியமாககூட இருக்கலாம்!!!

அரைத்தமா, அப்பப்போ தேவைக்கேற்ப  நல்லவராகவும் கெட்டவராகவும் மாற்றப்படும் கேரக்டர்கள், லாஜிக் என்றால் கிலோவிலா? லீட்டரிலா? என கேட்கும் இயக்கம், எக்கச்சக்க வில்லத்தனம், தியாகத்தின் சொப்பனமான நாயகி என வருடக்கணக்காக ஒரே குட்டையில் மிதக்கும் மட்டைகளாக மெகாசீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் பல பெண்களுக்கு அதுதான் ஆறுதல் என்பதையும் மறுப்பதற்கில்லை!!! ரசனைகள் மாறுபட்டவை.... ஆனாலும் இப்போதெல்லாம் பல டாக்டர்கள்  இரத்த அழுத்தம் உள்ள வயது அதிகமான பெண்களுக்கு மெகா சீரியல்கள் பார்க்க வேண்டாம் என அறிவுரை கூறும் அளவிற்கு மெகாசீரியல்களில் நெகடிவ்வான சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றமை ஆரோக்கியமானதாக படவில்லை!!!மானாட மயிலாட -
ஞாயிற்றுக்கிழமைகளில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை  இன்றைக்கும் அதிகமானவர்கள் விரும்பிப் பார்கின்றார்கள்!!! ஆனால் இப்போதெல்லாம் நடனத்தைவிட 'ஆபாசம்' சற்று தூக்கலாக தெரிவது போலுள்ளது! கலா மாஸ்டர், நமீதா, குஸ்புவை கிண்டலடித்தாலும் பலரும் இதையும் தொடர்ந்தும்  பார்க்கத்தான் செய்கின்றனர். எத்தனை நடன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகினாலும்  மானாட மயிலாட சம்திங் ஸ்பெஷல்!!! 

அது இது எது - விஜய் தொலைக்காட்சியில் அதிகமாவனர்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி; பக்கா பொழுதுபோக்கு + நகைச்சுவை நிகழ்ச்சி. சிவகார்த்திகேயனின் டைமிங் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அழகுதான் ஹைலைட்!!  சிரிக்கவைக்க வருபவர்கள் சில நேரங்களில் கழுத்தறுத்தாலும் பல நேரங்களில் சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கின்றனர்.


கையில் ஒருகோடி -
சண் தொலைக்காட்சியின் மற்றொரு பல்ப்பு  வாங்கிக்கொண்ட  நிகழ்ச்சி!!! 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'க்கு போட்டியாக ஒளிபரப்பினாலும் இரண்டுக்கும் மக்கள் கொடுத்துள்ள வரவேற்ப்பு மலைக்கும் மடுவுக்கும் நிகரானது!!! புலியை பார்த்து பூனை சூடுபோட்ட நிலைதான் இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை சன்னுக்கு!!!

ஜெயா டிவி  - சாரிங்க, எப்ப இந்த சானலை மாத்தினாலும் நியூஸ்தான்  வருது :-)

K TV திரைப்படங்கள் -
முழுமையாக திரைப்படத்தை பார்ப்பது சாத்தியமில்லாவிட்டாலும் இரவு சூப்பர்ஹிட்  காட்சிகளில் அப்பப்போ போடப்படும் சில சுவாரசியமான திரைப்படங்களின் சூப்பர் சீன்கள் விளம்பர இடைவேளைகளில் பார்க்க கிடைக்கின்றது!!

* இவை எவற்றையும் பார்க்காமல்  இசை சானல்கள், காமடி சானல்கள், டிஸ்கவரி, அனிமல் பிளன்ட், BBC , இதர ஆங்கில சானல்கள்,  IPL தவிர்ந்த வேறு SPORTS சானல்கள், செய்தி சானல்கள் என பொழுதை கழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள், அனால் அவர்கள் எண்ணிக்கையில் மிக மிக குறைவு!!!
*--------*

13 வாசகர் எண்ணங்கள்:

கோவை நேரம் said...

எப்படியோ எல்லா ப்ரோக்ராம்மும் பார்த்துட்டு இருக்கீங்க போல...

Unknown said...

மெகா சீரியல்களை நான்காவாதாக பதிவிட்டமைக்கு பெண்கள் குழாம் கொதிக்க போகிறது :P

pragash said...

அருமையான பதிவு.....குடுத்து வைச்சனீங்க....

Jayadev Das said...

\\ஐ.பி.எல் - ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்த குழாமான BCCI ஆல் நடாத்தப்படும் மிகச்சிறந்த\\ பித்தலாட்டம். பார்ப்பதை விட்டுவிட்டேன்.

\\40 வயதிலும் கலக்கும் முதிய நட்சத்திரங்கள்,\\ விளையாட்டுன்ன 16 முதல் 25 வயது வரை உள்ளவங்க அடினா பரவாயில்லை. கிழடுங்க, தமிழ் நாடு போலீஸ் மாதிரி பானை வயிறு வைத்துக் கொண்டு ஓட முடியாதவன், ஒரு கண்ணே இல்லாதவன் இவனுங்க தான் அதிகம் ஆடுறானுங்க. இதையும் பார்க்க இளிச்சவாப் பயல்கள் இருப்பதால் ஸ்பான்சர்ஸ் மூலம் பணம் கொழிக்கிறார்கள். இவர்கள் ஸ்பான்சர் செய்வது பெரும்பாலும் கோலாக்களே, அதைக் குடிப்பவன் ஆரோக்கியம் அதோ கதிதான்.

Jayadev Das said...

\\ மிகவும் இலகுவான கேள்விகள் கேட்கப்படுகின்றது\\ முதல் நாலைந்து கேள்விகள் தான் இலகு. அப்புறம் அவுரங்கசீப்பின் குதிரை பேரு என்ன என்பது போல கேள்விகள் வரும்.
\\(அவர்ரிர்ற்கு கூட பதில் தெரியாமல் போன 'படித்த' ஞான சூனியங்களும் உண்டு)\\ தமிழில் உள்ள உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்ற கேள்விக்கு பதில் தெரிர்யாமல் ஆடியன்ஸ் போல் க்குப் போன கேசுகளும் உண்டு. 16 என்ற எண்ணின் வர்க்க மூலம் என்னன்னு தெரியாத வாத்திகளும் உண்டு. என்னத்த சொல்ல...

Jayadev Das said...

\\ அப்படி என்னதான் இருக்கின்றது மெகா சீரியல்களில் என்று நோக்கினால்... நோக்கினால்... நோக்கினால்...... நோக்கிக்கிட்டே இருக்கின்றன் அதில் எந்த விடயம் இந்தளவிற்கு ஈர்ப்பை உண்டாக்கியிருக்கின்றது என்பது புரியவே இல்லை!! அது பெண்களுக்கு மட்டுமே புரிந்த ரகசியமாககூட இருக்கலாம்!!! \\ பொதுவா ஒரு வில்லி இன்னொரு குடும்பத்தை கெடுப்பதற்கு படாத பாடு படுவது போலவே சீரியல்கள் இருக்கின்றன. அது தான் இவங்களுக்கு புடிக்குது போல. பொதுவாகவே, அடுத்தவன் வீட்டில என்ன அக்கிரமம் நடக்குது என்பதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள், அதனால்தான் \\வருடக்கணக்காக ஒரே குட்டையில் மிதக்கும் மட்டைகளாக மெகாசீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் பல பெண்களுக்கு அதுதான் ஆறுதல் என்பதையும் மறுப்பதற்கில்லை!!!\\

பாலா said...

தலைவரே இப்போதெல்லாம் இவற்றை நான் பார்ப்பதே இல்லை, ஏனென்றால் கரண்ட் இருப்பதே இல்லை.

Jayadev Das said...

எழுத்துப் பிழைகளை நாளை காலைவரை பொறுத்தருள்க :P

\\புளியைபார்த்து பொண்ணை சூடுபோட்ட நிலை\\ இதைப் பொறுத்துக்க முடியாது!! புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட நிலை. மாத்திடுங்க, பெண்கள் பார்த்தா சண்டைக்கு வந்திடுவாங்க.. ஹா..ஹா...ஹா...

எப்பூடி.. said...

@ Jayadev Das

எழுதணும் எங்கிறதுக்காக எழுதின பதிவிது!! UEFA Semi Final பாத்துக்கிட்டே எழுதினன்; எழுதி முடிக்க அதிகாலை 4 மணி ஆயிடிச்சு, அதனாலதான் எழுத்துப் பிழை சரிபார்க்க முடியல; இப்ப திருத்தியாச்சு :-)

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான அலசல் பகிர்வுகள்..

கார்த்தி said...

கையில் ஒரு கோடிய ஏன் இங்க போட்டீங்க சார்?

நாற்பது said...

உண்மையிலே மிகவும் சிறப்பாக இருந்நது....

அனைவருக்கும் அன்பு  said...

நேரில் பார்த்திருந்தாலும் கிடைத்திடாத காட்சிகள் அழகாய் திரையிட்டு இருக்கிறீர்கள் .........

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)