Monday, March 12, 2012

முட்டாப் பயலுக்கு வந்த இரண்டு சந்தேகங்கள்......நீதிமன்றங்களில் எதற்கு வக்கீல்கள்?
மன்னர் ஆட்சி காலத்தில இரண்டு மனிதர்களுக்குள்ளே பிணக்கு ஏற்ப்பட்டால்; அவர்களில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை மன்னன் விசாரித்து தீர்ப்பளித்ததாக கதைகளிலும், புத்தகங்களிலும் அறிந்திருக்கின்றோம். அதன் பின்னர் பஞ்சாயத்து, ஊர் பெரியவர்கள் சம்பந்தப்பட்ட இருவரையும் விசாரித்து தீர்ப்பை சொல்லும் வழக்கம் காணப்பட்டது. ஆனால் இன்று ஜனநாயக நாடுகளில் நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இருவரையும் விசாரித்து தீர்ப்பை சொல்வதற்கு எதற்கு வக்கீல்கள் என்கின்ற மூன்றாம் தரப்பை பயன்படுத்துகின்றார்கள்? தாமாக விசாரித்து நீதி யார்பக்கம் என்பதை அறியும் அளவுக்கு நீதிபதிகளுக்கு விபரம் போதாதா? மன்னனாலும், பஞ்சாயத்து பெரிசாலும் முடிந்தது ஏன் இன்று படித்த அனுபவம் வாய்ந்த நீதிபதிகளுக்கு முடிவதில்லை?

ஒருவேளை ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்க பட கூடாது என்கின்ற ஜனநாயக சிந்தாந்தத்தை காப்பாற்றவா வக்கீல்கள்? ஆம் என்றால் சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. வக்கீல்களை ஒட்டுமொத்தமாக குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை, அடிப்பையில் கீழ்த்தட்டு, நடுத்தட்டு மக்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனை வக்கீல் பீஸ்!! எதுக்கு குடுக்கிறம், ஏன் குடுக்கிறம் என்கிறது தெரியாமலே நிறையபேர் கடன் வாங்கி வக்கீலுக்கு படி அளக்கிறாங்க!! வக்கீல்களை குறை சொல்ல முடியாது, ஏன்னா அதுதான் அவங்க பொழைப்பு, எதுக்கு வக்கீலுங்க என்கிறதுதான் என்னோட சந்தேகமே!!!ஜீ.ஜீ. பொன்னம்பலம் என்று ஒரு வக்கீல் இருந்தாராம், அவர் எந்த வழக்கையும் வென்று கொடுப்பாராம், தனது கட்சிக்காரன் கொலையாளி என்றாலும் காப்பாறும் அளவுக்கு வாத திறமையும், சாட்சிகளை பார்வையாலேயே மிரட்டி குழப்பும் அளவிற்கு திரமயானவராம்!!! இவர் ஒரு உதாரணம், இப்படி ஒவ்வொரு நாட்டிலும், மாகாணத்திலும், மாவட்டத்திலும் சில, பல வக்கீல்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். நியாயம் இல்லாத பணம், அதிகாரம் இருக்கிறவன் பக்கம் சிறப்பான வக்கீல்களும், நியாயம் இருக்கின்ற பணம் இல்லாத அன்றாடம் காய்ச்சி பக்கம் ஒப்புக்கு ஒரு வக்கீலும் நீதிக்காக முன்னிற்பது நீதியின் முன் எவ்வகையில் நியாப்படுத்தப்படுகின்றது!!!! அதிகாரம் உள்ளவன், அரசியல்வாதி, பணக்காரன் நீதியை வாங்குவதற்கும்; பணம், வசதி வாய்ப்பு இல்லாதவன் நியாயத்தை அதிகாரம், பணத்தின் முன் இழப்பதற்கும் சட்டத்தின் ஓட்டைகள்தான் காரணம் என்றால்; அந்த ஓட்டைகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் வக்கீல்கள் மக்களுக்கு நீதி சொல்ல எதுக்கு துணைக்கு வரணும்?

ஒரு நீதிபதிக்கு ஒரு வழக்கினை விசாரித்து தீர்ப்பளிக்க தடுமாற்றம், நம்பிக்கை இல்லை என்றால் இரண்டு மூன்று நீதிபதிகள் இணைந்தாவது ஒவ்வொரு வழக்கையும் விசாரித்து தீர்ப்பளிக்கலாமே! நேரம் போதாதா? வக்கீல்கள் வாய்தா வாங்கிற காலத்தைவிடவா நேரச்சிக்கல் ஏற்ப்படப் போகிறது!!! சம்பந்தப்பட இரு தரப்பையும், சாட்சிகளையும் ஒரே நபர் (நீதிபதி) விசாரித்து வழங்கும் தீர்ப்பைவிட; ஒருபக்கம் சிறந்த வக்கீலும், ஒரு பக்கம் சாதாரண வக்கீலும் துணைநிற்க இருதரப்பு நியாயங்களையும் கேட்டுவிட்டு வாத திறமைக்கு கிடைக்கும் தீர்ப்பா சிறந்தது? சட்ட ஆலோசனை வழங்கும் ஆலோசகர்களாக வக்கீல்களை ஏற்றுக்கொள்ளலாம், நீதியை கேட்டு நீதிமன்றை நாடும் மக்களின் துணையாக நின்று நீதியை பெற்றுக்கொடுக்கும் (?) ஒருவராக அவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!!!

மறதி குற்றச்செயலா?
மோட்டார் வாகனம் ஒன்றை வீதியில் செலுத்தும்போது மூன்று முக்கிய ஆவணங்கள் எப்போதும் எம்முடன் எடுத்துச்செல்ல வேண்டும் என்கிறது போக்குவரத்துப் பிரிவு சட்டம். ஓட்டுனர் உரிமம், வரி கட்டிய பற்றுச்சீட்டு, காப்புறுதி கட்டிய பற்றுச்சீட்டு என்பவைதான் அந்த மூன்றும். இவை கையில் இல்லாத பொழுது போக்குவரத்து போலிஸ் இடைமறித்து சோதனை செய்தால், அந்த இடத்தில் வாகனம் பொலிசாரால் பறிமுதல் செய்யப்படும், பின்னர் தண்டப்பணம் செலுத்த வேண்டும். அதிகமானவர்கள் இவை அனைத்தையும் தமது பர்சில் தான் வைத்திருப்பார்கள். பர்சை மறந்துபோய் வீட்டில் வைத்துவிட்டு போகும் நாளில் போக்குவரத்து போலீஸின் கைகளில் சிக்கினால்; ஏகப்பட்ட நேர விரயம் மற்றும் தண்டப்பணமாக மாத வருமானத்தின் ஒரு பகுதியை கட்டவேண்டிய கட்டாயம், இது 1% - 50%வரை பலதரப்பட்ட மக்களின் மாத வருமானத் தொகையாக இருக்கின்றது!! இந்த இடத்தில் போக்குவரத்து பொலிசாருக்கு 500 ரூபாவை லஞ்சமாக கொடுப்பது சிறந்த முடிவென்று பலரும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது!!!

குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாதவர்கள், திருடப்பட்ட வாகனங்கள் போன்றவற்றையும்; மறதியால் மேற்ப்படி ஆவணங்கள் தவறவிட்டு சென்றவர்களையும் கண்டறிவதில் இருக்கும் நடைமுறை சிக்கலையும் மறுப்பதற்கில்லை. அதே நரம் மறதி என்னும் ஒரு உளவியல் வியாதிக்கு இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை!!! இதற்கு எது சரியான தீர்வென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை, ஆனால் இவ்வகையில் சிலர் அவ்வப்போது பாதிக்கப்பட்டுக்கொண்டும், அதனால் லஞ்சம் கொடுத்து தப்பித்துக் கொண்டும்தான் இருக்கின்றார்கள் என்பதையும் மறுக்க முடியாது!!!

இந்த மறதிக்கான தண்டனை பொலிசாரால் மட்டுமல்ல; பெற்றோர், ஆசிரியர்கள் போன்றோராலும் சிறுவயதுமுதலே வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. கடைக்கு போகும்போது சொல்லிவிட்ட பொருட்களில் ஒன்றிரண்டை வாங்க மறந்து வந்து வீட்டில் திட்டு, அடி வாங்கிய பெருமக்கள் இதை அறிவார்கள் :-) அதேபோல பாடசாலையில் மறந்துபோய் சொன்ன பொருட்களை கொண்டு செல்லாமல், வீட்டு பாடத்தை செய்யாமல் போய் அடிவாங்கிய பலரும் அறிவார்கள்; ஆனாலென்ன பஞ்சியில், விளயாட்டுத்தனத்தில் வீட்டு பாடங்களை செய்யாமல் இருப்பவர்களும் மறதியை காரணம் காட்டுவதால் அங்கும் ஆசிரியர்களுக்கு பிரித்தறிவதில் சங்கடம் ஏற்ப்படலாம், ஆனால் நம்ம ஆசிரியர்கள் மறதிக்குத்தான் அதிக ஷொட் போடுவார்கள்; குறிப்பாக "இந்த வயதிலேயே உனக்கு மறதியா" என்று பஞ்சு டயலாக் பேசி மாணவர்களை வெளுத்து வாங்குவதையும் சொல்லியே ஆகவேண்டும் :-)

குறிப்பு :- நாலுநாள் இண்டர்நெட், கம்பியூட்டர் இல்லாம ப்ரீயா இருந்து பாருங்க, உங்களுக்கும் இதேபோல பல சந்தேகங்கள் கிளம்பும் :p

9 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

இரண்டு தான் வந்திச்சே அது வரைக்கும் சந்தோசம்...:P

முத்தரசு said...

ஹி ஹி ஹி..யோசிக்க வேண்ட்டிய விடயம் தான்

Jayadev Das said...

\\ஆனால் இன்று ஜனநாயக நாடுகளில் நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இருவரையும் விசாரித்து தீர்ப்பை சொல்வதற்கு எதற்கு வக்கீல்கள் என்கின்ற மூன்றாம் தரப்பை பயன்படுத்துகின்றார்கள்?\\ நீதிமன்றத்தில் நம் தரப்பு நியாயங்களை வைக்கும் போது ஒரு முறைப்படி வைக்க வேண்டும், அதாவது இன்னின்ன சட்டப் பிரிவுகளின் கீழ் இன்னின்ன ஆதாரங்கள் மூலம் ஏன் பக்கம் நியாயம் இருக்கிறது என்று. சாமானியர்களுக்கு [ஏன் படித்தவர்களிலேயே பெரும்பாலானோருக்கும் கூட] அந்தளவுக்கு சட்டம் குறித்து விவரம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நமக்கு வழக்குரைஞர் வைத்துக் கொள்ளும் வசதி இல்லாத போது நாம் விருப்ப பட்டால் கோர்ட்டே ஒரு வழக்குரைஞரை ஏற்ப்பாடு செய்யும். [ஸ்ரீபிரியாவும், ஜீவனும் Cinema-களில் தாங்களே வாதாடுவது போல காண்பிக்கிறார்கள், நிஜத்தில் இதுவும் சாத்தியப் படலாம், தெரியவில்லை].

Jayadev Das said...

\\தாமாக விசாரித்து நீதி யார்பக்கம் என்பதை அறியும் அளவுக்கு நீதிபதிகளுக்கு விபரம் போதாதா? மன்னனாலும், பஞ்சாயத்து பெரிசாலும் முடிந்தது ஏன் இன்று படித்த அனுபவம் வாய்ந்த நீதிபதிகளுக்கு முடிவதில்லை?\\ தெனாலிராமன், பீர்பால் மாதிரி மதிநுட்பம் இருந்தால் ஆகும், ஆனா அதுக்கு எங்கே போவது!! மன்னர்கள் காலத்தில் நாட்டில் பொதுவான சட்டங்கள் இருந்தாலும், தீர்ப்பு என்பது கேசு வாரியாக மன்னனால் விசாரிக்கப் பட்டே வழங்கப் படும். அதாவது, இன்றைக்கு மாதிரி ஸ்ரீதேவி என் பெண்டட்டின்னு கேசு போட முடியாது,சசிகலா மாதிரி எனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாதுன்னு காரணமாகக் கட்டி வாய்தா வாங்க முடியாது, முன்ஜாமீன் எடுத்துவிட்டு கொலையை பிளான் பண்ண முடியாது. சட்டத்தில் ஓட்டையைக் கண்டு பிடித்து தப்பிக்கவே முடியாது. இந்த மாதிரி நினைப்பவர்களுக்கே ஆப்பு வைக்கப் படும். [இப்போ போற போக்குக்கு, மன்னராட்சியே மேல்னு தோணுது].

Jayadev Das said...

\\நியாயம் இல்லாத பணம், அதிகாரம் இருக்கிறவன் பக்கம் சிறப்பான வக்கீல்களும், நியாயம் இருக்கின்ற பணம் இல்லாத அன்றாடம் காய்ச்சி பக்கம் ஒப்புக்கு ஒரு வக்கீலும் நீதிக்காக முன்னிற்பது நீதியின் முன் எவ்வகையில் நியாப்படுத்தப்படுகின்றது!!!!\\ இன்றைய ஆட்சிமுறையில் உள்ள வீக்னஸ்களில் இதுவும் ஒன்று.

Jayadev Das said...

\\ஒரு நீதிபதிக்கு ஒரு வழக்கினை விசாரித்து தீர்ப்பளிக்க தடுமாற்றம், நம்பிக்கை இல்லை என்றால் இரண்டு மூன்று நீதிபதிகள் இணைந்தாவது ஒவ்வொரு வழக்கையும் விசாரித்து தீர்ப்பளிக்கலாமே! நேரம் போதாதா?\\ இது எப்படி இருக்குன்னா, கிரிக்கெட் அம்பயர் ரெண்டு பேர் + மூன்றாவது நடுவர் இவங்களே பேட்டிங்கும், பவுலிங்கும் பண்ணி வெற்றி தோல்வியைத் தீர்மானித்தால் எப்படியிருக்கும்-கிற மாதிரி இருக்கு. நடைமுறைக்கு ஆகாது பாஸ்..!!

Jayadev Das said...

\\சட்ட ஆலோசனை வழங்கும் ஆலோசகர்களாக வக்கீல்களை ஏற்றுக்கொள்ளலாம், நீதியை கேட்டு நீதிமன்றை நாடும் மக்களின் துணையாக நின்று நீதியை பெற்றுக்கொடுக்கும் (?) ஒருவராக அவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!!!\\ பலமுறை இவர்கள் நீதியையும் பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஆனாலும் காசு உள்ளவனுக்கே நீதி என்பது வேதனைக்குரிய விஷயம்தாம். [அதுசரி, இன்றைக்கு வைத்தியம் கூட அப்படித்தானே ஆகியுள்ளது, வக்கீல்களை மட்டும் குற்றம் சொன்னா எப்படி!!]

Jayadev Das said...

\\மறதி குற்றச்செயலா?\\ போலீஸ் காரங்களுக்கு மாசக் கடைசின்னா கொஞ்சம் நேர்மையா நிறையே கேசுகளை புடிப்பாங்க. ஒரு முறை பைன் கட்டினால் அடுத்த முறை மறக்கவே மாட்டோமுல்ல!! [இதையெல்லாம் அனுமதிச்சா, கொலையை பண்ணிட்டு, ஐயா மறதியால கத்தியை ஷெல்புல வைக்காம இவர் வயித்தில சொருகிட்டேன்னு எல்லா பயலும் சொல்ல ஆரம்பிச்சுடுவானே!!]

பாலா said...

தலைவரே கடைசி வரிகள்தான் இந்த பதிவுக்கே காரணமா?

வக்கீல்கள் சட்டம் படித்தவர்கள், மற்றும் சட்டப்படி எது சரி எது தவறு என்பதை எளிதில் கூறி விடுவார்கள் என்பதால் இருக்கலாம். ஆனால் இப்போது நிலமை வேறுமாதிரி இருக்கிறது.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)