Sunday, January 8, 2012

இந்தவாரஇருவர் (08/01/12)

2010 ஐப்பசி மாதம் வாரம் ஒரு பதிவில் இரண்டு பிரபலங்களை (ஸ்போர்ட்ஸ் & சினிமா) பற்றி எழுதலாமென்று எண்ணி எழுத ஆரம்பித்ததுதான் 'இந்தவார இருவர்' பதிவு; ஆனால் வெறும் ஆறு பதிவுகளுடன் ஏனோ தடைப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் எழுதலாமென்று நினைத்துள்ளேன்; அதே 'இந்தவார இருவர்' பெயரில்த்தான்; ஆனால் ஒவ்வொரு வாரமும் சரிவருமான்னு தெரியல, முயற்ச்சிக்கிறேன். வாரம் ஒருமுறை எழுதாவிட்டால் அப்புறம் எதற்கு 'இந்தவார இருவர்' என்கின்ற டைட்டில் என்கின்ற டவுட்டு உங்க சிறுமூளையில் தோன்றி பெருமூளைக்கு டிராவல் ஆவதற்குள் நானே சொல்கின்றேன்; இந்தவார இருவர் என்பது என்னவெனின் "இந்தவாரம் இவ்விருவர் பற்றி மட்டும்தான் எழுதப்படும், வேறு இருவர் பற்றி எழுதப்படாது என்பதாகும்" அப்பாடா .........

ஆர்.சுந்தர்ராஜன்
முன்னரே சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானது சூரியவம்சம் திரைப்படத்தின் மூலம்தான்; சரத்குமாரும் மணிவண்ணனும் வாத்து மேச்சுக்கிட்டு இருக்கும்போது தேவயாணிகூட காரில் வரும் சுந்தர்ராஜன் சூரியவம்சம் திரைப்படம் முழுவதும் சிறப்பான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் சுந்தர்ராஜனை சிறந்த குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக அடிக்கடி காணமுடிந்தது; சூரியவம்சத்திற்கு பின்னர் சுந்தர்ராஜனை நான் ரசித்தது "ஆசை ஆசை..... ஆசை ஆசை, தூக்கம் விற்றுத்தானே " பாடலில்த்தான்; 'திருப்பதி ஏழுமலை வெங்கடேஷா' திரைப்படத்தில் எஸ்.எ.ராஜ்குமார் இசையில் இயக்குனர் ராம நாராயணன் எழுதிய அருமையான வரிகளுக்கு திரையில் நடிப்பு வடிவம் கொடுத்தவர் சுந்தர்ராஜன்தான்.

அதன் பின்னர் மின்சாரக் கண்ணா, பாட்டாளி, உன்னை நினைத்து, நினைத்தேன் வந்தாய், நட்ப்புக்காக, கொண்டாட்டம் என பல திரைப்படங்களில் சுந்தர்ராஜன் முக்கிய வேடங்களில் நடித்து என்ன கவர்ந்திருந்தார்; குசேலனில் ரஜினியை கடுப்பாக்கும் கேரக்டரில் நடித்திருந்தாலும் சுந்தர்ராஜன் போல வேறு யாரும் அந்த கேரக்டருக்கு செட் ஆக மாட்டார்கள் என சொல்லுமளவிற்கு அட போட வைத்திருப்பார்! ஒரு நடிகராக எனக்கு அறிமுகமான ஆர்.சுந்தர்ராஜனது இன்னொரு முகம் எனக்கு ஆரம்பத்தில் தேர்ந்திருக்கவில்லை; ஆம் தமிழ் சினிமாவிற்கு பல வேர்ரித்திரைப்படங்களையும் காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களையும் கொடுத்த 'இயக்குனர்' என்கின்ற ஆர்.சுந்தர்ராஜனது முகம் எனக்கு 2003 களின் பின்னர்தான் தெரியும்.ஒரு இயக்குனராக கிட்டத்தட்ட 20 திரைப்படங்களை இயக்கியுள்ள ஆர்.சுந்தர்ராஜனின் திரைப்படங்களில் இளையராஜாவின் இசையில் காலத்தால் அழியாத பல அற்ப்புதமான பாடல்கள் அமைத்திருந்தன. ஆர்.சுந்தர்ராஜனது ஆஸ்தான நடிகர் விஜயகாந்த்தான்; ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையில் விஜயகாந்த் நடித்த 'வைதேகி காத்திருந்தாள்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'என் ஆசை மச்சான்' திரைப்படங்களும் அவற்றின் பாடல்களும் மிகப்பெரும் வெற்றியடைந்தன; இந்த மூன்று திரைப்படங்களின் பாடல்களைப்பற்றி சொல்வதென்றால் தனிப்பதிவுதான் வேண்டும்; அத்தனையும் அற்ப்புதமான பாடல்கள்.

இவைதவிர ஆர்.சுந்தர்ராஜன் இளையராஜா கூட்டணி நடிகர் மோகனுடன் இணைந்து கொடுத்த 'குங்குமச்சிமிழ்', 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படங்களும் அவற்றின் பாடல்களும் மிகப்பெரும் வெற்றியடைந்தன. இளையராஜா, சுந்தர்ராஜன் வெற்றிக் கூட்டணியில் 1989 இல் வெளிவந்து வசூலில் சக்கை போடு போட்டா திரைப்படம்தான் 'ராஜாதிராஜா'. ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்க ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு இசை மட்டுமல்ல, தயாரிப்பும் இளையராஜாதான். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. தமிழ் சினிமாவில் என்றும் மறக்கப்படாத ஒரு ஜோடியாக இளையராஜா, சுந்தர்ராஜன் ஜோடி ஞாபகத்தில் இருக்குமளவிற்கு இந்த கூட்டணி கொடுத்த பாடல்கள் அத்தனையும் அருமையானவை.

ஆர்.சுந்தர்ராஜன் தமிழ் சினிமாவிற்கு புரிந்த மிகப்பெரும் சேவை ஒன்று உள்ளது; ஆம் மெல்லிசை மன்னரையும், இசைஞானியையும் இணைத்த பெருமைதான் அது. தமிழ் சினிமாவின் ஒப்பற்ற இசை மேதைகள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து இசையமைக்க செய்த ஆர்.சுந்தர்ராஜனை எவ்வளவு பாராடினாலும் தகும். ஏ.வி.எம் தயாரிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த 'மெல்லத் திறந்தது கதவு' திரைப்படம்தான் இளையராஜாவும் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைத்த முதல்த் திரைப்படம். அத்தனை பாடல்களுமே மிகப்பெரியளவில் ஹிட்டாகின; பாடல்கள் போலவே திரைப்படமும் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.இதுதவிர ஆர்.சுந்தர்ராஜன் செய்ததாக கூறப்படும் மற்றுமொரு சிறப்பான விடயம் தமிழ் சினிமாவின் பெறுமதிமிக்க இரட்டையர்களை இணைத்தமைதான். தனித்தனியாக காமடியங்களாக நடித்துக்கொண்டிருந்த கவுண்டமணி செந்திலை இணைத்து நகைச்சுவை உலகிற்கு 'கவுண்டமணி, செந்தில்' என்னும் புதிய நகைச்சுவை இரட்டையர்களை அறிமுகப்படுத்தியதும் ஆர்.சுந்தர்ராஜந்தான்.. 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தில் கவுண்டமணி செந்தில் இடையிலான கெமிஸ்ரி, டைமிங் , ரியாக்ஷன், டயலாக் டெலிவரி போன்றவற்றை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆர்.சுந்தர்ராஜன் போட்டுக்குடுத்த ரூட்டு 1980,1990 களில் பல தயாரிப்பாளர்கள் காசை காப்பாறிக் கொடுத்தது என்பதை மறுக்கமுடியுமா!!!!

இயக்குனராக புதுமைகள் என்று பெரிதாக எதையும் செய்யாவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்றும் மறக்க முடியாத அற்ப்புதமான பாடல்களையும் கொடுத்தமைக்கும்; கவுண்டமணி செந்திலை இரட்டையர்களாக்கி அடுத்த 15 வருடத்திற்கு நகைச்சுவைக்கு புதிய பாணிய ஏற்ப்படுத்திக் கொடுத்ததற்கும்; M.S.V, இளையராஜாவை இணைத்ததற்கும் ஆர்.சுந்தரராஜனுக்கு தமிழ் சினிமா என்றும் கடமைப்பட்டிருக்கும்; ரசிகர்களும்தான், என்னையும் சேர்த்து........செபஸ்டியன் விட்டல் (Sebastian Vettel)
23 வயதில் முதல்நிலை மோட்டார்கார் பந்தயத்தில் பட்டம் வென்ற ஜேர்மனிய Formula One பந்தய வீரர்; முதலில் 2005,2006 ஆம் ஆண்டுகளில் முறையே வில்லியம்ஸ், BMW செர்பர் அணிகளுக்கு testing Driver ஆக இருந்த செபஸ்டியன் விட்டல் 2007 ஆம் ஆண்டு BMW செர்பர் க்காக 1 போட்டியிலும் அதனை தொடர்ந்து 'டொரோ ரோசொ'விர்க்காக 7 போட்டியிலும் பங்குபற்றினார். அடுத்தா ஆண்டும் (2008) 'டொரோ ரோசொ'விர்க்காக பந்தயத்தில் கலந்துகொண்ட விட்டல் சாம்பியன் ஷிப்பில் 8 ஆவது இடத்தில் 2008 ஐ நிறைவு செய்திருந்தார். 2009 இல் Red bull க்காக பந்தயத்தில் கலந்துகொண்ட விட்டல் 2009 இல் 2 ஆம் இடத்தையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் (2010,2011) சாம்பியன் கிண்ணத்தையும் வென்று உலகையே தான் பக்கம் திருபிப் பார்க்க வைத்தார்.

ஜெர்மனி என்றால் எனக்கு ஏதோ சொந்த நாடு என்பதுபோல ஒரு (F)பீல்; ஜெர்மனி என்கிற ஒரே காரணத்துக்காக ஹிட்லரையே பிடிக்குமென்றால் பாருங்களேன் :p (ஜெர்மனி பிடிப்பதற்கு காரணம் ஒருநாள் நிச்சயம் ஒரு தனிப்பதிவில் சொல்கிறேன்) Foot ball World cup வரும்போதெல்லாம் ஜெர்மனிக்கு நானே விளையாடிற மாதிரி ஒவ்வொரு மட்ச்க்கும் செம டென்ஷனா இருக்கும். ஜெர்மனி தோற்று வெளியேறினால் இரண்டு மூன்றுநாள் எல்லாமே வெறுமையாக இருக்கும்; எனக்கு அப்படி ஒரு ஜெர்மனி பைத்தியம். நான் Formula one பார்க்க ஆரம்பித்த புதிதில் மைக்கல் ஷுமேக்கர் அதகளப்படுத்திக் கொண்டிருந்தார்; அவருடைய நாடு ஜெர்மனி என்று தெரிந்தது முதல் எனக்கு Formula One மீதான காதல் அதிகரித்தது; ஷூமேக்கர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவராக மாறினார்.

எனது கஷ்டகாலம்; நான் Formula One பார்க்க தொடங்கிய ஆண்டுதான்(2004) ஷூமேக்கர் இறுதியாக டைட்டில் வென்ற ஆண்டாக மாறியது. ஆம்; அதற்க்கு பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள்(2005,2006) பெர்னாண்டோ அலோன்சோ சாம்பியன் பட்டத்தை வெல்ல ஷூமேக்கரும் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் Formula One பார்க்க பிடிக்காவிட்டாலும் ஷூமேக்கரின் 7 தடவைகள் உலக சாம்பியன் பட்டத்தை அலோன்சோ முறியடிக்கக் கூடாது என்பதற்காக ஆலோன்சொவை எதிர்த்து மட்டுமே formula One போட்டிகளை பார்க்க ஆரம்பித்தேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் கிம்மி ரெயிக்கணன், லூயிஸ் ஹமில்டன், ஜென்சன் பட்டன் என புதிது புதிதாக ஒவ்வொருவரும் பட்டம் வெல்ல வெல்ல; அலோன்சோ மீதிருந்த பயம் விட்டுப்போனது....இந்நிலையில் தற்போது அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் (2010,2011) தொடர்ச்சியாக செபஸ்டியன் விட்டல் பட்டம் வென்றிருப்பது ஓரளவிற்கு ஆறுதல். 2007 இல் 'டொரோ ரோசோ'க்காக ஓடும் போதே செபஸ்டியன் விட்டல் பரிச்சியம் என்றாலும் 2009 போட்டிகளில் Red bull க்காக கலந்துகொண்டபோதுதான் எல்லோரது கவனத்தையும் ஈர்த்ததுபோல எனது கவனத்தையும் ஈர்த்தார். அடுத்த ஆண்டே மேலே சொன்னதுபோல சாம்பியன் ஷிப்பில் 2 ஆம் இடத்தை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 2010 இல் பெராரியை விட்டு கிம்மி ரெயிக்கணன் விலகுவதால்; அந்த இடத்திற்கு F1 இல் மீள்பிரவேசித்த மைக்கல் ஷூமேக்கர் அல்லது செபஸ்டியன் விட்டல் வரவேண்டும் என்பதுதான் அதிகமான பெராரி ரசிகர்களின் விருப்பமாக இருந்தது.

ஆனால் துரதிஸ்டவசமாக பெர்னாண்டோ அலோன்சோ பெராரிக்கு ஓடும் வாய்ப்பை பெற்றுவிட்டார்; மீண்டும் ஷூமியின் 7 டைட்டிலுக்கு ஆபத்தோ என பயந்த வேளையில்த்தான் Red Bull க்காக தொடர்ந்து ஓடிய செபஸ்டியன் விட்டல் அடுத்தடுத்து 2 டைட்டிலையும் கைப்பற்றினார். மிகக் குறைந்த வயதில் தொடர்ந்து இரண்டு டைட்டில்களை வென்ற அலோன்சோவின் சாதனையையும் விட்டல் முறியடித்தார். ஷூமேக்கருக்கு பதிலாக இன்னுமொரு ஜெர்மனி வீரர் formula one இல் சாதிப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த 7 டைட்டில் விவகாரம்தான் விட்டலை முழு மனதாக ஏற்றுக்கொள்ள மறுத்தது :-) இருந்தாலும் இந்தாண்டு Formula One போட்டிகளை முன்னர்போல பார்ப்பதென்று முடிவுசெய்துவிட்டேன்; ஜேர்மனி மற்றும் செபஸ்டியன் விட்டலுக்காக.

செபஸ்டியன் விட்டல் 2014 வரை Red bull க்காக பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஒப்பந்தத்தை செய்திருந்தாலும்; பெராரி மற்றும் மெர்சிட்டிசிர்க்கு ஓடுவதற்கும் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் Red bull நிர்வாகம் தங்களால் விட்டலுக்கு எதிர்காலத்தில் தொடர்ந்தும் சிறப்பான என்ஜினை கொடுக்க முடியுமென்றும் விட்டலை 2016 வரை தாம் இலகுவில் விடமாட்டோம் என்றும் கூறியுள்ளது. 2 சாம்பியன் பட்டத்தையும், 21 முதலிடங்களையும், 30 Pole position களையும் , 9 Fastest lap களையும், 36 Podium களையும் தனது கேரியர் ரெகார்ட்டாக கொண்டுள்ள விட்டலின் வேகத்திற்கு இணையாக சிறப்பான என்ஜினை Red bull வழங்கினால் அடுத்தடுத்த ஆண்டுகளும் செபஸ்டியன் விட்டலின் வெற்றிப்பயணம் தொடரும்.....அன்றைய ஷூமேக்கரளவிற்கு இல்லாவிட்டாலும் விட்டலின் டிரைவிங் தொழில்நுட்ப ரீதியிலும், வேகத்திலும் மிகச்சிறப்பானதே! எனக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அலோன்சோவிற்கு சிறப்பான எஞ்சின் அமைந்தால் நிச்சயம் விட்டலை விட சிறப்பாக ஓடுவார் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தாண்டில் யார் சிறப்பாக ஓடுவார்கள், யார் சாம்பியன் கிண்ணத்தை வெல்லுவார்கள் என்கின்ற கேள்விகளுக்கு முதல் இரண்டு, மூன்று போட்டிகள் நிறைவடைந்தாலே ஓரளவிற்கு விடை கிடைத்துவிடும். விட்டலின் தொழில்நுட்பமா, அலோன்சோவின் அனுபவமா, ஹமில்டனின் வேகமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.....

குட்டிப்பையனாக ஷூமேக்கருடன் புகைப்படமெடுத்துக்கொண்ட விட்டல்; பின்னர் ஷூமேக்கர் காலத்தில் டெஸ்டிங் டிரைவராக Formula One உலகில் நுழைந்து, ஷூமேக்கரின் ஓய்வின் பின்னர் பந்தயங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்து, பின்னர் மீண்டும் ஷூமேக்கர் மீள்பிரவேசித்த இரண்டு ஆண்டுகளிலும் சூமேக்கருக்கு போட்டியாக பந்தயத்தில் கலந்து சாம்பியன் ஷிப்பை கைப்பற்றியுள்ளார் என்றால் எவளவு பெரிய வளர்ச்சி!! எவளவு பெரிய சாதனை!!! Hats off to Sebastian Vettel....

10 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

அப்பப்பா எவ்வளவு புதிய தகவல்..நன்றிகள்..அடிக்கடி எழுதுங்க...!!

கார்த்தி said...

அந்தக்காலத்தில கவுண்டமணி செந்தில் வடிவேலுக்கு அடுத்ததா நான் படத்தில தேடின குணச்சித்திர நகைச்சுவை நடிகர் R.சுந்தர்ராஜன். அவர் இயக்குனராக இருந்ததேயும்விட கூட ரசிச்சது அவற்றின் அலட்டலில்லாத நடிப்பைதான்!
மற்றது இவர் நடிச்ச படத்திலதானே அந்த மிச்சக்காசு எங்கஎண்டு செந்தில கேட்டுகேட்டு குழப்புவார்..
செபாஸ்டியன் விட்டலப்பற்றி எனக்கு அவ்வளவா தெரியாது!!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
திரு சுந்தரராஜன் நல்ல நடிகர்.
வாழ்த்துகள்.

தர்ஷன் said...

இளையராஜா சுந்தர்ராஜன் கூட்டணி உண்மையில் டாப்தான். சுந்தர்ராஜன் அந்த ரஜினியை கடுப்பேற்றும் காட்சி பற்றி சுகாசினியும் அவரைத் தவிர வேறு யாரும் அதில் நடிக்க முடியாது என்று சொன்னதாய் ஞாபகம்.

shabi said...

இளையராஜா இசையில் விஜயகாந்த் நடித்த 'வைதேகி காத்திருந்தாள்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'என் ஆசை மச்சான்' திரைப்படங்களும் //// en aasai machan DEVA music

Unknown said...

அருமையான பதிவுதான் நிறைய தகவல்களை கொண்டு சிறப்ப்பாக எழுதப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.


நேரம் இருந்தால் அப்படியே இப்பதிவையும் வாசித்து விடுங்கள்.
இரவுச் சத்தம்.

எப்பூடி.. said...

@ shabi

ஆம், தவறு என்மேல்த்தான், மாற்றிவிடுகின்றேன், நன்றி......

Jayadev Das said...

இயக்குனர் ராம நாராயணன் பற்றி பல புதிய தகவல்கள், நன்றி.

\\செபஸ்டியன் விட்டல்\\ தலை சுத்திடிச்சு. நான் ஒன் ஸ்டெப் பேக் ஆகிடறேன்.

Jayadev Das said...

Correction: இயக்குனர் R.சுந்தர்ராஜன் பற்றி பல புதிய தகவல்கள், நன்றி. What a blunder!!

stalin wesley said...

இயக்குனர் R.சுந்தர்ராஜன் பற்றி பல புதிய தகவல்கள்ன்

றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)