Wednesday, September 28, 2011

லசித் மலிங்க என்னும் நாகாஸ்திரம்





மகாபாரதக் கதையில் கர்ணன் கையில் இருந்த நாகாஸ்திரம் ஒரு தடவைதான் கர்ணனுக்கு பயன்பட்டது. ஆனால் இன்று மலிங்க இருக்கும் அணியின் தலைவருக்கு மலிங்க என்னும் நாகாஸ்திரம் தேவைக்கேற்ப பயன்படுத்த உதவுகின்றது என்றால் அது மிகையான வார்த்தை இல்லை. எனக்கு தெரிந்து ஆரம்பகால ஷொஹைப் அக்தருக்கு பின்னர் ரசிகர்கள் காணும்போதெல்லாம் ஆர்ப்பரிக்கும் ஒரே பதுவீச்சாளர் மலிங்கதான். மலிங்க Run-up இல் பந்துவீச தயாராக இருக்கும்போது ஏற்ப்படுத்தப்படும் ரசிகர்களின் ஆரவாரம்கூட ஆரம்பகால ஷொஹைப் அக்தரை ஞாபகப்படுத்தும். என்னைக் கேட்டால் அக்தரின் வேஷன்-2 தான் மலிங்க என்பேன்.

அக்தர் அளவிற்கு வேகம் இல்லாவிட்டாலும்; விவேகத்தில் அக்தருக்கு மலிங்க எந்த விதத்திலும் குறைந்தவரில்லை. வக்கார்,வசீம்,அக்தர் வரிசையில் நான்காவது 'ஜோக்கர்' மன்னன் மலிங்கதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காதென்று நம்புகின்றேன். புதிய பந்தில் (New Ball) ஜோக்கர்களை வீசுவது சாதாரண விடயமல்ல; ஒரு சில பந்து வீச்சாளர்களால் ஆரம்ப ஓவர்களிலும் சிறப்பாக யோக்கர் வீச முடியுமாயினும், மலிங்க அளவிற்கு ஆரம்ப ஓவர்களில் யாராலும் ஜோக்கர்களை நேர்த்தியாக வீச முடியாது (இங்கிலாந்தின் 'டரன் கவ்' கூட இதில் கில்லாடி)



ஒருநாள் போட்டிகளின் இறுதி பத்து ஓவர்களும், T/20 போட்டிகளின் இறுதி நான்கு ஓவர்களும் பந்து வீசுவதற்கு இன்றைய தேதியில் சிறந்த தெரிவாக மலிங்கவைவிட வேறு யாராகவும் இருக்க முடியாது. Full A Length Delivery (Blochold Arias), Yorker, Low Full Toss, Slow Delivery, Bouncer, Slow Ball Bouncer என பத்துவீச்சின் அத்தனை உக்திகளையும் பயன்படுத்தி இறுதி ஓவர்களில் மலிங்க ஆடும் கதகளியில் தப்பித்து ஓட்டங்களை குவிப்பதென்பது எதிரணியினருக்கு சாதாரண விடயமல்ல. பிரபலமான தொழில்சார் துடுப்பாட்ட வீரர்களே இறுதிநேரத்தில் மலிங்கவிற்கு திணறும்போது; பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் நிலை எப்படி இருக்கும்? அதிலும் பின்வரிசை 'இடதுகை' துடுப்பாட்ட வீரர்களின் நிலை ரொம்பவும் பரிதாபகரமாக இருக்கும்.

மலிங்காவின் சக வீரர்களும், இன்றைய சர்வதேச கிரிக்கட்டின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களும், மலிங்கவிற்கு அணித்தலைவர்களாக இருந்தவர்களுமான மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்ககார போன்றவர்களே மலிங்காவின் ஜோக்கருக்கு பதிலளிக்க முடியாதபோது; பாவம் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களால் என்னதான் செய்யமுடியும்? இறுதி நேரங்களில் மட்டுமல்ல, ஆரம்ப ஓவர்களிலும் மலிங்காவின் சிறந்த பந்துவீச்சு பல தடவை அணியின் வெற்றிக்கு வழிசமைத்துள்ளது. ஆனாலும் ஆரம்ப ஓவர்களிலும் பார்க்க இறுதி ஓவர்களில்த்தான் மலிங்க ஸ்பெஷலிஸ்ட்.



எப்போதுமே பந்துவீச்சில் கலக்கிவரும் மலிங்க கடந்த 2 சாம்பியன் லீக் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தது அவர் சார்ந்த மும்பை அணிக்கு அவ்விரு போட்டியையும் வெற்றியாக மாற்றியது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் வைத்து 50 ஓட்டங்களை பெற்று இலங்கைக்காக ஒரு போட்டியையும் மலிங்க வென்று கொடுத்துள்ளார். இதில் குறிப்பட்டு சொல்லவேண்டிய முக்கியவிடயம் என்னவெனின் சென்னையுடனான போட்டியில் மலிங்காவின் துடுப்பாட்டத்தை 'மாஸ்டர் பாட்ஸ்மன்' சச்சின் மிகவும் விரும்பி ரசித்ததுதான். இதற்கு முன்னர் வேறு எந்த வீரரது துடுப்பாட்டத்தையும் சச்சின் அந்தளவிற்கு ரசித்து நான் பார்த்ததில்லை; சச்சினையே இம்ப்ரஸ் செய்த மலிங்கவிற்கு சராசரி ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்வது கடினமா என்ன?

அப்படி மலிங்கவினால் இம்ப்ரெஸ் ஆனவர்களில் நானும் ஒருவன், ஆனால் இப்போதல்ல; மலிங்காவின் முதல்ப் போட்டியிலிருந்தே!!! 2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தில் அறிமுக டெஸ்ட் போட்டியில் 6 விக்கட்டுகளை வீழ்த்தி அன்று மலிங்க இலங்கை ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். வழமைக்கு மாறான ஆக்ஷன், இலங்கையில் வேறெந்த பந்துவீச்சாளருக்குமில்லாத பந்து வீச்சு வேகமென மலிங்க புதிதாக தெரிந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் மலிங்கவால் சொல்லிக்கொள்ளும்படியாக பிரகாசிக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் மலிங்கவை அன்றைய இலங்கையின் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து சரியாக பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். அத்தப்பத்து பர்வீஸ் மஹரூபை நம்பிய அளவிற்கு மலிங்கவை நம்பவில்லை என்பதே உண்மை.



மார்வனுக்கு பின்னர் மஹேல தலைமை ஏற்ற சிறிது காலத்தில் இங்கிலாந்தில் இடம்பெற்ற ஒருநாள் போட்டித்தொடரில் மீண்டும் கலக்க ஆரம்பித்த மலிங்க அடுத்து இடம்பெற்ற நியூசிலாந்து தொடரின் டெஸ்ட் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை செய்திருந்தார். ஆனாலும் அடுத்து சில மாதங்களில் இடம்பெற்ற 2007 உலகக்கிண்ணப் போட்டிகள்தான் மலிங்கவை மிகப் பிரபலமாக்கியது. தென்னாபிரிக்காவிற் கெதிராக மலிங்க தொடர்ச்சியாக வீழ்த்திய 4 விக்கட்டுகள் (Double Hat-Trick) மலிங்கவை மிகவும் பிரபலாமாக்கிற்று; ஆனாலும் மலிங்காவின் புகழ் உச்சத்தை அடைந்தது என்னமோ IPL போட்டிகளால்த்தான் என்பதை மறுக்க இயலாது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சினுக்கு அடுத்து அதிக ரசிகர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பையும் பெற்ற லசித் மலிங்க; சொந்த நாட்டு அணிக்காக டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வை அறிவித்தபோது பலத்த சர்ச்சையும், மாற்றுக் கருத்தும் எழுந்தன. சொந்த நாட்டுக்காக ஆடுவதிலும் பார்க்க பணத்திற்கு மலிங்க முன்னுரிமை கொடுத்துள்ளதாக இலங்கையின் தீவிர விசுவாசிகளும், மலிங்கவை பிடிக்காமல் கடுப்பில் இருந்தவர்களும் மலிங்கவிற் கெதிராக குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினர்.



அந்த நேரத்தில் இலங்கையின் சமகால தூண்களும், மலிங்காவின் அணித்தலைவர்களாக இருந்தவர்க்களுமான மஹேல ஜெயவர்த்தனாவும் குமார் சங்கக்காரவும் மலிங்கவிற்கு ஆதரவாக தம் கருத்துக்களை முன்வைத்தனர். டெஸ்ட் போட்டிகளில் மலிங்க ஆடுவதால் ஏற்ப்படும் உபாதை மலிங்கவை பல மாதங்களுக்கு கிரிக்கட்டில் இருந்து தள்ளி வைப்பதாகவும்; இதற்கு டெஸ்ட் கிரிக்கட்டின் ஓய்வு சரியான முடிவே என்பதும் அவர்களது கூற்று.

மலிங்க டெஸ்ட் போட்டிகளின்போது ஏற்ப்பட்ட காயம் காரணமாக பல தடவைகள் மாதக்கணக்கில் கிரிக்கட் விளையாடாமல் இருந்தது என்னமோ உண்மைதான்; ஆனால் IPL போட்டியென்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இதே காயத்தை காரணம் காட்டி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பாரா என்பது மிகப்பெரும் சந்தேகம்தான். உண்மையை சொல்வதென்றால் IPL என்னும் பணம் கொட்டும் பூதத்திடம் செல்வதற்கு மலிங்க தன் உபாதையை நன்றாக பயன்படுத்தி இருந்தார். நாட்கணக்கில் வெய்யிலில் நின்று குறைந்த சம்பளத்திற்கு உடல் உபாதையை வாங்குவதற்கு; வெறும் நான்கு ஓவர்கள் பந்துவீசி கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவதற்கு யாருக்குத்தான் கசக்கும்!!!!



இலங்கை ரசிகர்கள் மற்றும் கிரிக்கட் ஆர்வலர்கள் பக்கம் நின்று பார்த்தால் மலிங்க செய்தது மிகப்பெரும் தவறுபோல் தோன்றினாலும் மலிங்கவை பொறுத்தவரை அது சரியான முடிவே. மலிங்க பணத்திற்காக இந்த முடிவை எடுத்துக் கொண்டதாகவே வைத்துக்கொண்டாலும்; டெஸ்ட் போட்டிகளின் உபாதை காரணமாக மலிங்க மாதக்கணக்கில் ஆடாதபோது இலங்கைக்காக பல ஒருநாள், T/20 போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது; அந்தக்குறை இப்போது இல்லை. மலிங்க டெஸ்ட் கிரிக்கட்டில் இல்லாத போதும்; ஒருநாள், T/20 போட்டிகளில் தன்னாலான முழுப் பங்களிப்பையும் தன் நாட்டிற்காக கொடுக்கிறார்; சமீபகாலத்து இலங்கையின் ஒருநாள், T/20 வெற்றிகளை பார்த்தால் இதை புரிந்து கொள்ளலாம். அதே சமயம் மலிங்க இல்லாத குறை சமீபத்தைய டெஸ்ட் போட்டி முடிவுகளில் நன்கு புலப்படுகின்றதையும் மறுக்க முடியாது.

மலிங்கவின் பந்துவீச்சு எப்படி சிறப்பானதோ அதைவிட ஒருபடி அதிகம் சிறப்பானது மைதானத்தில் அவரது நடத்தை. இதுவரை எந்த துடுப்பாட்ட வீரருடனும் மலிங்க முறைத்தோ, தர்க்கம் பண்ணியோ பார்த்ததில்லை; ஒரு விக்கட்டை வீழ்த்திய பின்னர் குறிப்பிட்ட துடுப்பாட்ட வீரரை முகம் பார்த்து கேலிபண்ணி மலிங்க தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதில்லை; தன் பந்திற்கு ஆறு, நான்கு என துடுப்பாட்ட வீரர்கள் விளாசியபோதுகூட மலிங்க புன்னகையைத்தான் உதிர்ப்பவர்; எந்த அணிக்காக ஆடியபோதும் தன் அணித்தலைவருடனோ, சக வீரர்களுடனோ இதுவரை எந்த பிணக்கிலும் மலிங்க ஈடுபட்டதில்லை; எந்தப்பொழுதிலும் நடுவருடன் அவரது தீர்ப்பை எதிர்த்து மலிங்க விவாதித்ததில்லை; இப்படியான உயரிய பண்புகளுடன் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்!!!



ஆனால் இதே லசித் மலிங்காவை 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேர்முக வர்ணனையில் கேவலப்படுத்திய பெருந்தகை ஒருவர் இருக்கிறார்; அவர்தான் அர்ஜுன ரணதுங்க. மலிங்கவின் தலைமுடியையும், அவரது இமையில் குத்தப்பட்ட தோட்டினையும் சுட்டிக்காட்டிய அர்ஜுனா மலிங்கவை ஒரு ஒழுக்கமில்லாதவர் என்று கூறியிருந்தார். ஒரு பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக மகேலா, சங்கா, முரளி, வாஸ் இப்படியானவர்களை கூட்டிச்செல்லலாம்; மலிங்காவை கூட்டிச்செல்ல முடியுமா? என்று அன்று அர்ஜுனா கேள்வி எழுப்பினார். ஒரு உயரிய பண்புள்ள ஒரு கிரிக்கட் வீரரை அவரது புறத்தோற்றத்தில் வைத்து எடைபோட்டமை அர்ஜுனா போன்ற மிச்சிறந்த வீரருக்கு அழகாக இல்லை.

மலிங்காவின் புறத்தோற்றம் அவரது மனதுக்கு பிடித்தமானது, ஒருவரது புறத்தோற்றம்தான் அவரது ஒழுக்கத்தை தீர்மானிக்கின்றது என்கின்ற அர்ஜுனாவின் அன்றைய கூற்று அபத்தமான ஒன்று. எந்த மாணவனும் மலிங்காவின் புறத்தோற்றத்தில் இம்ப்ரெஸ் ஆகப்போவதில்லை, அப்படி ஆனாலும் அதிலென்ன தவறு? தலை முடியை வளர்த்து, கலர் அடிப்பது ஒழுக்கம் கெட்ட செயலா? அதிகமான சிறுவர்கள் இன்று மலிங்கவை முன்னுதாரணமாக கொண்டு பந்துவீசவே எத்தனிக்கிறார்கள், தலைமுடியை வளர்ப்பதில் அல்ல என்கின்ற கூற்றில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை; சிறுவர்கள் விளயாடும்போதுகூட போல்ட் முறையில் விக்கட்டை வீழ்த்தினால் 'மலிங்க ஸ்டையில்' என்றுதான் சொல்கிறார்கள். மலிங்காவின் தலைமுடியைவிட மிகமிக அதிகமாக இம்ப்ரெஸ் செய்வது அவரது 'ஜோக்கர்'கள்தான்.



உடல்நிலை ஒத்துளைக்குவரை, உடல் உபாதைகள் தொந்தரவின்றி தான் சார்ந்த அணியினருக்கு மலிங்கவும், மலிங்கவின் ஜோக்கர்களும் எப்போதும் விக்கட்டுகளை அள்ளிக்கொடுக்கும் என்கின்ற நம்பிக்கையில் சமகால கிரிக்கட்டின் எனக்கு பிடித்த ஒரே வேகப்பந்து வீச்சாளருக்கு இன்னுமின்னும் பல விக்கட்டுகளை தகர்க்க அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானுன் வாழ்த்துக் கூறுகின்றேன்.............