Thursday, November 3, 2011

தமிழை காப்போம் வாரீர்.......

மும்பை எக்ஸ்பிரஸ் என்றொரு படத்தை கமலஹாசன் வெளியிடும்போது தமிழில் பெயர் வைக்குமாறு தமிழ் உணர்வாளர்கள் என்கின்ற பெயரில் சிலர் கமலை மிரட்டினார்கள். அந்த நேரத்தில் கமலஹான் ஒரு நேர்காணலில் "கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த தமிழை கமலஹாசன் அழித்து விடுவான் என்பது வேடிக்கையாக இல்லை" என்று கூறினார். இன்றைக்கு நாம் இருக்கும் நிலையில் எங்கே அது நடந்துவிடுமோ என்றே எண்ணத் தோன்றுகின்றது!!

உலகின் ஆதி மொழிகளில் ஒன்றான காலத்தால் அழிக்க முடியாத தமிழை தம் உதிரத்துடன் கலந்து உள்ளத்தில் சுமந்து தாயைவிட உயர்வாக பேணிய வரலாறு தமிழனுடயது. ஆனால் இன்று தமிழை ஒரு நடிகன் சினிமாவிலும், ஒரு அரசியல்வாதி மேடையிலும் பேசும்போதுதான் எம்மால் உணர முடிகின்றதென்றால் தமிழ் மொழி இன்று கடைகளில் வாங்கும் குளுக்கோஸ் போலாகிவிட்டதா என்றே எண்ணத் தோன்றுகின்றது!!!

திரைப்படங்களில் தமிழ், தமிழன் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. காரணம் 65-70 சதவீதத்தை எழுத்தறிவாக கொண்ட எம்மில் வரலாற்றை பாடமாக படிப்பவர்கள் எத்தனைபேர்? கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், பாரதியார் போன்ற வரலாற்றின் நாயகர்களை பாமர மக்களுக்கு எடுத்து உரைத்தது திரைப்படங்கள்தான். அந்த வரிசையில் போதிதர்மன் வரலாற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்த முருகதாஸிற்கு மனமார்ந்த நன்றிகள்.அதே நரம் போதிதர்மன் வரலாற்றை இதுவரை தமிழர்கள் அறிந்திராததை குறையாக காட்டியமைக்கு கண்டனங்கள்; போதிதர்மனை மக்கள் அறிந்து கொள்வதாயின் பாடப்புத்தகங்களில் போதிதர்மன் வரலாறு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், இல்லை தாத்தா பாட்டி என முன்னோர்கள் கூறிய வரலாற்று கதைகள் மூலம் அறிந்திருக்க வேண்டும். இவ்விரண்டும் இல்லாமல் ஒரு வரலாற்றை எப்படி மக்கள் அறிந்து கொள்வார்கள்? அப்படி அறியாத மக்கள் மீது எப்படி குறைகாண முடியும்?

போதிதர்மன் வரலாறு தவிர்த்து முருகதாஸ் ஈழத்திற்க்கும், தமிழர்களுக்கும் ஆதரவாக எழுதிய வசனங்கள் திணிக்கப்பட்டவையாக இருந்தாலும் பார்ப்பதற்கும் கேட்ப்பதர்க்கும் நன்றாகவே உள்ளது. முருகதாஸ் தமிழை வியாபாரம் செய்து காசு பார்த்ததாக ஒருசாராரும்; முருகதாஸ் தமிழனின் பெருமையை பறை சாற்றியுள்ளார் என்று மற்றொரு சாராரும் சமூகத்தளங்களில் கூறி வருகின்றனர். இந்த இரண்டு விதமான கருத்து மோதலிலும் 'எடுத்தார் கைப்பிள்ளையாக' தமிழ் சிக்கி தவிக்கின்றது. திரைப்படத்தை திரைப்படமாக பார்த்தால் இது ஒரு விடயமே இல்லை; அதே நேரம் 7 ஆம் அறிவில் தமிழ் வியாபாரமா? பெருமையா? என்று விவாதித்தால் முடவு காண்பது முடியாதது; அதன் முடிவு முருகதாஸ் மற்றும் உதயநிதியின் மனச்சாட்சிகளுக்குத்தான் வெளிச்சம்.

எமது மொழியை இன்னுமொருவன் திரைப்படத்திலோ, அரசியல் மேடையிலோ உணர்ச்சி ததும்ப பேசும்போதுதான் எம்மொழியை நாம் உணர்கின்றோமேன்றால் நாம் உண்மையான தமிழர்களா? ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். அரசியல் மேடைகளிலும், சினிமா திரையரங்குகளிலும் கிடைக்கும் தமிழ் உணர்ச்சிதான் எமக்கு மொழிப்பற்றை உண்டாக்குமானால், இதுவரைநாள் எமது மொழி எது? எம் உள்ளத்தில் தமிழ் எப்போதுமே இரண்டற கலந்திருக்குமானால் எமக்கு இன்னொருவன் தமிழ் உணர்வை தூண்ட வேண்டிய அவசியமில்லை. இதனை பயன்படுத்தித்தான் பல திரைப்பட நடிகர்களும், இயக்குனர்களும் தம் திரைப்படங்களில் மொழிப்பற்றை காசாக்கியுள்ளார்கள், இன்னும் காசாக்குவார்கள். அது அவர்களது வியாபார உக்தி, இதில் அவர்களை குறை சொல்ல முடியாது.அதே நேரம் இதனை நாம் தமிழின், தமிழனின் பெருமையாக நினைத்தால் நம்மை விட அப்பாவிகள் வேறு யாருமில்லை. 7 ஆம் அறிவை மொழிகொண்டு விளம்பரப்படுத்தாமல், விமர்சிக்காமல் அணுகியிருந்தால் அதனை ஒரு சாதாரண திரைப்படமாக விமர்சித்தோ அணுகியோ இருக்கலாம். ஆனால் படத்தின் டிரெயிலர் வெளியீடு முதற்கொண்டு இன்றுவரை படத்திற்கு விளம்பரமே தமிழ்தான்! அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி தமிழை வைத்து வியாபாரம் செய்யவில்லை என்றும்; தமிழை பெருமைப்படுத்துகிறார்கள் என்றும் கூறமுடியும்?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்றார்கள்; திரைப்படத்துக்கு தமிழில் பெயர் வைத்து வரிச்சலுகை பெற்ற திரைப்படங்களின் 50 சதவீதமானவை ஆங்கில உப தலைப்புக்களை கொண்டவைதான். சுய விருப்பம் இல்லாமல் பணத்தை காட்டி தமிழை டைட்டில்களில் வாங்கிய இந்த கேடுகெட்ட செயலுக்கும் விபச்சாரத்திற்க்கும் என்ன வித்தியாசம்!!! எல்லாவற்றுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கொதித்தெழுந்த டாக்டர் ஒருவர் தன் பட்டப்பெயரையே மருத்துவர் என்று மாற்றி புரட்சி செய்தார்; ஆனால் அவர் பேரப்பிள்ளைகள் கல்வி கற்பது டெல்லியிலுள்ள ஆங்கில மொழி பள்ளியில் ; இப்படியான சில அரசியல் சாணக்கியர்களும், சில சினிமா புரட்சிகளும் தமிழுக்கு அப்போ காவல்காப்பது வேடிக்கையான வினோதம்.

அதேபோல ஒருவன் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்கின்றான் என்று கூறினால்; "அவன் அதாவது செய்கின்றான் நீ என்ன செய்தாய்?" என்று புத்திசாலித்தனமாக பதிலுக்கு கேள்வி கேட்கின்றார்கள். உன் முகத்தில் ஒருவன் உமிழ்கிறான் என்று கூறும்போது "அவனாவது உமிழ்கிறான் நீ என்ன செய்தாய்" என்பதை போன்றது இவர்களது வினா!! நான் ஈழத்திற்காக எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்; அதற்காக என்னை வைத்து ஒருவன் வியாபாரம் செய்கின்றான் என்று தெரிந்த பின்பும் அவனுக்கு 'ஈ'ன்னு பல்லை இளிக்க சொல்கிறார்களா? இப்படியான ஈழ வியாபாரிகளை பார்த்து கேள்விகேட்டால்; அவர்களின் ஆதரவாளர்கள் எமக்கு கேட்காமல் கொடுக்கும் பட்டம் 'துரோகி', கூடவே நாலு தலைமுறையையும் தோண்டி எடுத்து கேவலமாக திட்டுவார்கள்.திரைப்படங்களில், அரசியல் கூட்டங்களில், சினிமா தலைப்புக்களில், பிறமொழி கண்டு பிடிப்புக்களை தமிழ் மொழிமாற்றம் செய்வதில்தான் தமிழ் வாழும், வளரும் என்று நினைத்தால் 'எனது பார்வையில்' அது சுத்த முட்டாள்த்தனம். இசை முதல் இணையம் வரை இன்று உலகில் வியாபித்திருக்கும் தமிழை காலத்தாலும் அழிக்க முடியாது. இன்றைய வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களிடத்திலும், படித்த இளைஞர்களிடத்திலும் மொழி மீதான பற்று மிகவும் அதிகரித்து காணப்படுவது மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான விடயமே; அதே நேரம் அவர்களில் சிலர் மொழிப்பற்றை ஒரு நாகரீகமாக (Fashion) வெளிக்காட்டுவதற்கு எத்தனிப்பது எந்தளவிற்கு ஆரோக்கியமான விடயம் என்றும் தெரியவில்லை!!!

தமிழை நேசியுங்கள், சுவாசியுங்கள், கற்றுக்கொள்ளுங்கள், கற்றுக்கொடுங்கள்; தமிழன் என்பதில் பெருமை கொள்ளுங்கள், அதேநேரம் நீங்களும் மனிதர்கள்தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். உலகிற்கு அஷ்ட சாஸ்திரங்களையும், திருக்குறளையும் கற்றுக்கொடுத்த தமிழ் மொழியை வைத்து வியாபாரம் மட்டும் செய்யாதீர்கள்; அடுத்தவனையும் வியாபாரம் செய்ய அனுமதிக்காதீர்கள்......

25 வாசகர் எண்ணங்கள்:

புகல் said...

//
"கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த தமிழை கமலஹாசன் அழித்து விடுவான் என்பது வேடிக்கையாக இல்லை"
//
தமிழ் மொழியை அழித்துவிடும் என்பதற்காக அல்ல
ஏன் ஒரு கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ் மொழி படத்துக்கு தமிழில் பெயர் வைக்க முடியாதா?
இவ்வுளவு பெரிய துணியில் ஒரு சின்ன ஒட்டைதானே உள்ளது என்றால் அந்த துணியை வாங்கி கொள்விர்களார, அதுபோலதான் இது முழுக்க தமிழ்படம்
ஆனால் தலைப்பு மட்டும் ஆங்கிலம் அல்லது சமற்கிருதம் என்றால் எப்படி?
ஒரு தமிழ் படம் வெற்றி பெற்று உலக அரங்கில் வரும்போது.
உலக திரை ஆர்வலர்கள் ஏன் உங்கள் தமிழ்மொழி படத்துக்கு எதற்காக ஆங்கிலமொழி பெயரை வைத்துள்ளிர்கள் என்றால் என்ன சொல்வது?

புகல் said...

//
எல்லாவற்றுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கொதித்தெழுந்த டாக்டர் ஒருவர் தன் பட்டப்பெயரையே மருத்துவர் என்று மாற்றி புரட்சி செய்தார்; ஆனால் அவர் பேரப்பிள்ளைகள் கல்வி கற்பது டெல்லியிலுள்ள ஆங்கில மொழி பள்ளியில்
//
இப்ப எதற்காக மருத்துவரை வம்புக்கு இழுக்கிறிர்கள்
ஏன் அவர் ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியானாலும் அவர் நடத்தும் மக்கள் தொலைகாட்சி அலைவரிசையை எளிய தமிழில் நல்ல முறையில்தானே நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் தமிழை பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது எந்தவகையில் குற்றமாகும்
அவர் தமிழ்நாட்டில் எந்த குழந்தையும் ஆங்கிலம் கற்க்ககூடாது என்று சொல்லவில்லையே.
இப்ப அழகிரியை எடுத்துகொள்ளுங்கள் இவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை
என்றுதானே மக்கள் கேலி செய்கிறார்கள் என்ன ஒரு கொடுமை
தமிழக பிரிதிநிதியான அவருக்கு ஏன் ஆங்கிலம் தெரிய வேண்டும்?,
ஆங்கிலம் தெரியவில்லை என்பது ஒரு குற்றமா,
இப்படி ஒரு மனநிலையில் இருக்கும் தமிழ்நாட்டு தமிழர்களை என்ன சொல்ல?

புகல் said...

//உலகிற்கு அஷ்ட சாஸ்திரங்களையும், திருக்குறளையும் கற்றுக்கொடுத்த தமிழ் மொழியை வைத்து வியாபாரம் மட்டும் செய்யாதீர்கள்; அடுத்தவனையும் வியாபாரம் செய்ய அனுமதிக்காதீர்கள்...
//
அஷ்ட சாஸ்திரங்கள் தமிழ் பெயரும் அல்ல தமிழரின் பண்பாடும் அல்ல
தமிழ், தமிழர்கள் என்று வசனம் பேசிவிட்டு,
பிறகு ‘நவக்கிரகம், ஆரிய பட்டா, பஞ்சாங்கம், அமாவாசை’
என்று சொல்லிகொள்வது தமிழ், தமிழர் தலையில் மண்னைவாரி போடுதற்க்கு ஒப்பாகும்.

கார்த்தி said...

லோசன் அண்ணாவின் பதிவுக்கு நான் போட்ட அதே கொமண்டேயே என்ர கருத்தா இங்கயும் திருப்பி போடுறன். இந்த பதிவுக்கும் அது பொருந்தியிருப்பதால். திருப்பி அடிக்க பஞ்சியா இருக்கு சார்....

என்னதான் அவர்கள் பிசினசுக்காக செய்திருந்தாலும் எங்களின் சில பிரச்சனைகளை தெரியாத தமிழருக்கும் கொண்டு சேர்த்ததில் நான் மகிழ்வடைகிறேன். இன்னும் எம்மவர்களின் விடயங்கள் தெரியாம தமிழ் நாட்டில ஏன் இங்கயே கனக்க பேர் இருக்கினம். மேலும் தமிழர்களாலும் புதிய முயற்சிகள் செய்ய முடியும் என்று உத்வேகத்தை இந்தபடம் பலருக்கு கொடுத்திருக்கிறது.

ஏன் பதிவர்கள் நாங்களும் பல எம்தமிழ் மக்களின் பிரச்சனைகளை பதிவுகள் மூலமாக எழுதிவருகிறோம். ஒருத்தன் ”நீ சும்மா பேமஸ் ஆகதான் எழுதுறாய்” எண்டு சொன்ன எங்களுக்கு எப்பிடியிருக்கும்.
So அவர்கள் என்னத்துக்கு செய்தார்களோ தமிழர்களை பற்றி சொன்னார்கள் எண்டு நினைச்சு எதிர்த்து அப்பிடி செய்யேலா எண்டு சொல்றதிலயும் விட எதிர்ப்புக்குரல் எழுப்பாம விடுறது நல்லது எண்டுறதுதான் என்ர கருத்து. இதுவரை பல தமிழ்சினிமாவில கூடி பிழையான விதமாக காட்டப்பட்ட எங்களை இப்பவாவது கொஞ்சம் நல்ல மாதிரி கதைக்க வெளிக்கிடுறாங்க என்று சொல்லி கவலையாவது படாம இருக்க வேண்டியதுதான்!!!
இதில சிலர் 7ம் அறிவை ஏன் புறக்கணிக்கோணும் எண்டு வேற காரணங்கள் சொல்லுறாங்க. அத தாங்கவே முடியல..
என்னதான் உள்நோக்கங்கள் இருந்தாலும் சாதாரண தமிழனாக என்ர கருத்து இதுதான்!

எப்பூடி.. said...

@ புகல்

நான் தமிழில் பெயர் வைக்காததை சரி என்று சொல்லவில்லை, தமிழில் பெயர் வைத்தால் சலுகை தருகின்றோம் என்று கூறி தமிழை விபச்சாரம் செய்ததைத்தான் கண்டித்திருக்கின்றேன். அதே நேரம் இவர்கள் தமிழில் பெயர் வைக்காமல் விடுவதால் ஒன்றும் தமிழ் அழிந்து விடப்போவதில்லை. உண்மையான உணர்வுள்ளவன் தமிழில் பெயர் வைக்கட்டும், விருப்பம் இல்லாதவனை கட்டாயப்படுத்தி தமிழை வளர்க்கும் அளவிற்கு தமிழ் ஒன்றும் இளக்காரம் இல்லை!!!!

எப்பூடி.. said...

@ கார்த்தி

தமிழை தமிழனின் பெருமையை அவர்கள் படத்தில் சொன்னதில் நான் எந்த தவறும் சொல்லவில்லை, அது வியாபார நோக்கமாக இருந்தால்கூட. ஆனால் படத்தின் டிரெயிலர் முதல் இன்று விளம்பரம் வரை மூச்சுக்கு மூச்சு இது தமிழன் பெருமை, தமிழர்களின் பெருமை என்று சுய விளம்பரம் செய்வது, தம் தொலைக்காட்சிக்யில் தமிழர்களை முருகதாஸ், உதயநிதி உயர்த்தி உள்ளார்கள் என்று எப்பபாரு பில்டப் கொடுப்பதெல்லாம் சரியென்று சொல்கின்றீர்களா?

Jayadev Das said...

\\தமிழை கமலஹாசன் அழித்து விடுவான் என்பது வேடிக்கையாக இல்லை \\ ஒரு மொழி என்பது பேசுவதில் மட்டுமல்ல, கலாச்சாரமும் கூட. எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்று இவரு கூறுகிறார், இதுவா தமிழ்க் கலாச்சாரம்? இப்படி வாழ்ந்தாக தமிழக வரலாற்றில் எங்கேயாவது இருக்கிறதா? கல்யாணமே பண்ணிக்காம வாழ நாம் என்ன ஆடு மாடுகளா? இவருக்கு நம்பிக்கை இல்லை என்றால் இவரோடு போகட்டுமே, அதை ஏன் பொதுவில் வந்து பேசி மக்கள் மனதில் நஞ்சை கலக்க வேண்டும்?

Jayadev Das said...

\\அந்த வரிசையில் போதிதர்மன் வரலாற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்த முருகதாஸிற்கு மனமார்ந்த நன்றிகள். \\ போதி தர்மனின் வாழ்க்கையை எந்தளவுக்கு உண்மையாக இந்தப் படத்தில் எடுத்துள்ளார்கள் என்று தெரியவில்லையே?

Jayadev Das said...

\\ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்றார்கள்; \\
வெறும் சினிமாத் தலைப்பை மட்டும் வைத்து ஒரு மொழியை வளர்த்துவிட முடியாது. படத்துக்குள் அதே கண்றாவியே தான் இருக்கப் போகிறது, அதில் ஊருபட்ட ஆங்கில வார்த்தைகள் இருக்கும். இது தெரிந்தும் கருணாநிதி திரைப் படத் துறையினருக்கு நோகாமல் நொங்கு தின்னுங்கள் என்று கொடுத்த சலுகை. மகா அயோக்கியத் தனம். முதலில் இவருடைய பேரன்களின் நிறுவனங்கள் Sun TV, K TV, Cloud Nine, Red Giant Movies பெயர்கள் எந்த மொழி என்று சொல்லட்டும். வா குவாட்டர் கட்டிங் என்பது தமிழ்ப் பெயரா? ஊருக்குத்தான் உபதேசமா?

Jayadev Das said...

\\திரைப்படங்களில், அரசியல் கூட்டங்களில், சினிமா தலைப்புக்களில், பிறமொழி கண்டு பிடிப்புக்களை தமிழ் மொழிமாற்றம் செய்வதில்தான் தமிழ் வாழும், வளரும் என்று நினைத்தால் 'எனது பார்வையில்' அது சுத்த முட்டாள்த்தனம்.\\ நச்..!! தமிழில் நிறைய ஆங்கில வார்த்தைகளும், பிறமொழிச் சொற்களும் கலந்துள்ளன. மேலும், மெத்தப் படிக்காத அரைகுறைகள், தாங்கள் பேசும்போது அங்கங்கே ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசினால்தான் தன்னையும் படித்தவராக மற்றவர்கள் நினைப்பார்கள் என்று வழிய ஆங்கில வார்த்தைகளைத் திணித்துப் பேசி மொழியைக் குட்டிச் சுவராக்கி வருகிறார்கள். இந்த மாதிரி கேசுகள் இருக்கும் வரை மொழியின் வளர்ச்சி கேள்விக் குறிதான்.

Jayadev Das said...

\\இசை முதல் இணையம் வரை இன்று உலகில் வியாபித்திருக்கும் தமிழை காலத்தாலும் அழிக்க முடியாது. \\ மொழி அழியாது, ஆனால் நல்ல நதியில் சாக்கடையைத் தொடர்ந்தது கலக்கவிட்டால் காலப் போக்கில் அது முற்றிலும் கெட்டு கூவம் மாதிரி ஆகிவிடக் கூடும்.

Jayadev Das said...

\\அதே நேரம் அவர்களில் சிலர் மொழிப்பற்றை ஒரு நாகரீகமாக (Fashion) வெளிக்காட்டுவதற்கு எத்தனிப்பது எந்தளவிற்கு ஆரோக்கியமான விடயம் என்றும் தெரியவில்லை!!! \\ தமிழ்க்காரன் ஆங்கிலம் பேசினால் தான் நாகரீகம் என்று நினைப்பவன், தமிழ் பேசுவதை (Fashion) ஆக நினைப்பவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை!!

Jayadev Das said...

\\அடுத்தவனையும் வியாபாரம் செய்ய அனுமதிக்காதீர்கள்......\\ ஒரு பெரிய வியாபாரி, தமிழை வைத்து விபச்சாரம் பண்ணி மொத்தமா 35000 கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டு போயிட்டாருன்னு விக்கிலீக்ஸ் சொல்லுது. இனிமே சுரண்டறதுக்கு ஒண்ணுமில்ல!!

rajamelaiyur said...

நல்ல அலசல் .. தமிழ் வாழும் கவலை வேண்டாம்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

தலை, தளபதி மற்றும் புத்தர்

பாலா said...

தலைவரே நீங்க சொல்வது சரிதான். என்னதான் குறை சொன்னாலும், வரலாற்றை தப்பா சொல்லிட்டாருன்னு சொன்னாலும், இன்னிக்கி இணையத்துல போதி தர்மர் யாருன்னு தேடுறவுங்க எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கே.. இதுவே அவரது வெற்றிதானே...

புகல் said...

@எப்பூடி
[[நான் தமிழில் பெயர் வைக்காததை சரி என்று சொல்லவில்லை, தமிழில் பெயர் வைத்தால் சலுகை தருகின்றோம் என்று கூறி தமிழை விபச்சாரம் செய்ததைத்தான் கண்டித்திருக்கின்றேன்]]
என் கருத்து
தமிழ் படத்திறக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி சலுகை என்பதை விட
பிற மொழியில் பெயர் வைத்தால் கூடுதல் வரி ஏய்ப்பு செய்யலாம்.

[[அதே நேரம் இவர்கள் தமிழில் பெயர் வைக்காமல் விடுவதால் ஒன்றும் தமிழ் அழிந்து விடப்போவதில்லை]]
"எப்பூடி" உங்களுக்கு தமிழ் மீது அலாதியான பற்று உள்ளது அதை நான் மறுக்கவில்லை ஆனால்
அதே அளவு உங்களின் தனிபட்ட செருக்கையும்
தமிழ்மொழி மீது நிங்கள் திணிக்க பார்க்கிறிர்கள்
விட்டாக்க தமிழில் யாரும் பேசாமல் போனாமல்கூட தமிழ் அழியாது என்று சொல்வதுபோல் உள்ளது,

புகல் said...

@எப்பூடி
[[உண்மையான உணர்வுள்ளவன் தமிழில் பெயர் வைக்கட்டும், விருப்பம் இல்லாதவனை கட்டாயப்படுத்தி தமிழை வளர்க்கும் அளவிற்கு தமிழ் ஒன்றும் இளக்காரம் இல்லை!!!!]]
தோழரே நிங்கள் சொல்வது பிறநாட்டில் வாழும் தமிழர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம், நம் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு அனைத்து வசதியையும் பெற்றுகொண்டு தமிழில் பெயர் வைக்க மட்டும் எங்களை கட்டாயபடுத்த கூடாது என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது
சட்டபடி தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும்
அதை அவர்கள் அன்புடன் எற்று கொண்டு பெயர் வைத்தாலும்,
சட்டத்துக்கு பயந்து பெயர் வைத்தாலும் பரவாயில்லை
முடிவு தமிழாக இருக்க வேண்டும்.

புகல் said...

@Jayadev Das
[[வெறும் சினிமாத் தலைப்பை மட்டும் வைத்து ஒரு மொழியை வளர்த்துவிட முடியாது. படத்துக்குள் அதே கண்றாவியே தான் இருக்கப் போகிறது இது தெரிந்தும் கருணாநிதி திரைப் படத் துறையினருக்கு நோகாமல் நொங்கு தின்னுங்கள் என்று கொடுத்த சலுகை. மகா அயோக்கியத் தனம்]]
ஆனால் ஒரு நடிகர் திருமணத்தை பற்றி விமர்சனம் செய்தால் உடனே எல்லாம் கெட்டுவிடும்?
உங்களுக்கு எற்ற மாதிரி பேச கூடாது.
படத்துக்கு தமிழ் பெயர் வைப்பதை அரசாங்கம் பார்த்துகொள்ளும்.
நல்ல படமாக இல்லாத பட்சத்தில் அது தானாக முடங்க போகிறது.
என்னமோ கலைஞர்தான் ஆங்கிலத்தை கலக்க சொன்னதுபோல் இருக்கிறது தங்களின் உரையாடல்
தமிழ் திரை உலகம் தொடங்கிய காலம் தொட்டே பிறமொழி வார்த்தைகள் தமிழ் திரை படங்களில் காண முடியும்.
இதை களைய எதெனும் வழிவகை செய்ய வேண்டுமே தவிர சும்மா தொட்டதற்கு எல்லாம் கலைஞரை குறை சொல்லலி கொண்டு அலைவது நல்லதல்ல

புகல் said...

@Jayadev Das
[[இவருடைய பேரன்களின் நிறுவனங்கள் Sun TV, K TV, Cloud Nine, Red Giant Movies பெயர்கள் எந்த மொழி என்று சொல்லட்டும். வா குவாட்டர் கட்டிங் என்பது தமிழ்ப் பெயரா? ஊருக்குத்தான் உபதேசமா?]]

ஆமா அப்படியே தாத்தா கிட்ட கேட்டுதான் பேர பிள்ளைங்க பெயர் வைக்கிறார்கள்,
எதாவது தெரிந்துதான் பேசுகிறிர்களா?
ஏன் உங்கள் கண்ணுக்கு கலைஞர், சிரிப்பொலி, இசையருவி போன்ற தொலைகாட்சி அலைவரிசைகள் தெரியாதே.

கோயில்களில்
தமிழ் மொழியில் கடவுள் வழிபாடு(கும்பிடும் கோயிகளில்கூட வேற்றுமொழி),
அனைத்து குலத்தவரும் அர்ச்சகர்
என கலைஞர் கொண்டு வந்த அனைத்தும் நல்ல திட்டங்கள்தானே.
இதை எல்லாம் பேச நா எழாதே

அது என்னனு தெரியல எதையாவது காரணம் கண்டுபடித்து கலைஞரை கருச்சி கொட்டலைனா
சில மத வெறியருக்கும், பார்ப்பன மக்களுக்கும் உறக்கம் வராது.

Jayadev Das என்று சமற்கிருத பெயரை வைத்துகொண்டு SUN TV, K TV, Cloud Nine
பற்றி நீல கண்ணிர் வடிக்கிறிர்கள்
இது உங்களின் தமிழ் பற்றை காட்டவில்லை கலைஞர் மீதான தங்களின் காழ்புணர்ச்சியை காட்டுகிறது.
எதோ ஒரு காரணத்தால் உங்க அப்பா, அம்மா உங்கள் பெயரை சமற்கிருதத்தில்
வைத்துவிட்டார்கள் என்று எடுத்துகொள்வோம் அதைபற்றி தாங்கள் என்றாவது வருத்தபட்டதுன்டா?

ஒருவன் இறந்தாலும் அவனுக்கு பின் நிலைக்கபோவது அந்த பெயர் மட்டுமே
ஆக அந்த பெயர் தமிழில் இருத்தலே நன்று.

வரும் தலைமுறைக்காவது
நல்ல தமிழ் பெயரை சூட்டி
தமிழ் நூல்கள் முலம் நல்ல தமிழ் பண்புகளை சொல்லி கொடுத்து வளர்த்தால்
நம் தமிழ் இனம் நாளைய வரலாற்றில் சிறப்பான இடம்பெறும்.

எப்பூடி.. said...

@ புகல்

உங்களுக்கு சரியெனத் தோன்றும் கட்டாய தமிழ் மொழி பெயர் சூட்டல் எனக்கு சரியாக படவில்லை; அதற்காக நான் சொல்வது சரியென்றும் தாங்கள் சொல்வது தவறென்றும் சொல்லவில்லை, எண்ணங்கள் வேறுபடலாம்.

எனக்கு தமிழ் மீது செருக்கு இருப்பதாக தாங்கள் சொன்னதை நான் மறுக்கவில்லை; யாருமே பேசாமல் போகும் நிலைக்கு ஒரு போதும் தமிழ் சென்று விடாது என்பதில் எனக்கு அசுர நம்பிக்கை. அரசியல்வாதி சினிமாக்காரன் சொல்லி, கட்டாயப்படுத்தி வாழவேண்டிய நிலையில் என் தமிழ் இல்லை. தமிழ் மொழிமூல கல்வி, தமிழ் பத்திரிக்கை, தமிழ் தொலைக்காட்சி, தமிழ் இணையம், தமிழ் திரையிசை என தமிழ் எங்கும் வியாபித்திருக்கின்றது. இன்றைய இளைஞர்களின் மொழிப்பற்று ஆச்சரியமூட்டும்வகையில் அதிகமாகவே உள்ளது; இன்று பெருமைக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தமிழை மறுத்து பிற மொழியை நாடுபவர்கள் ஒருநாள் தம்மொழி தமிழ் என்று உணர்ந்து திரும்புவார்கள், அதுவரை அவர்களை கெஞ்சுதலோ, கட்டாயப்படுத்துதலோ தேவையில்லாதது; காரணம் தமிழை காலத்தாலும் அழிக்க முடியாது.

புகல் said...

@எப்பூடி..
உண்மையில் தங்களின் கருத்து மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது தோழரே.

அதிலும் குறிப்பாய் இந்த வாக்கியம் மிக அருமை
எத்தன தடவை படித்தாலும் மகிழ்ச்சி அளிக்கிறது.
"தமிழை காலத்தாலும் அழிக்க முடியாது."
எப்பூடி அப்படி

புகல் said...

@எப்பூடி..
என்ன பொருத்தவரை ஒரு மாணவன்கூட படிப்பை இழந்துவிட கூடாது என்பதே என் வாதம்,
படிக்க மறுக்கும் மாணவர்களை எடுத்துரைத்து/இடித்துரைத்து நல்வழிபடுத்த வேண்டும்
படிக்கவில்லை என்றால் அவர்களுக்குதான் இழப்பு என்று சொல்லி
நாம் அமைதி காப்பது நன்றன்று.

இன்றைய காலகட்டத்தில்
சில மேலை நாடுகளில் மக்கள் திருமணம் செய்ய விரும்புவதில்லை.
அதை அந்த அரசாங்கம் தீர்க்க பலவழி முறைகளை செயல்படுத்தி வருகிறது
ஒரு தனி மனிதன், எதோ ஒரு சிந்தனையில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
சில நேரங்களில் அது நியாயமாககூட தோன்றலாம்
ஆனால் ஒரு இனத்தின் அரசு அவ்வாறு இருக்காது இருக்க கூடாது

நான் ஏன் இதை சொல்கிறேன் ஒரு அலட்சியம் பிற வழியில் ஊறு விழைவிக்கும்
எ-டு எல்லா தமிழ் படமும் வெற்றி பெற்று விருது வாங்குதில்லை
ஆனால் எதேனும் ஒரு தமிழ் படம் சிறந்த படமாக தேர்வு செய்யும் போது உலக அரங்கில் உலா வருபோது
அவை தமிழில் இருந்தால்தானே சிறப்பு.

படம் சிறப்பாக உள்ளது ஆனால் பெயர் தமிழில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக என்று ஒரு விமர்சனம் வரும்.
தமிழ் பெயரே இல்ல ஆனால் தமிழ் படம்னு சில கூட்டம் விமர்சிக்கும்
அரசாங்கத்துக்கு கொள்ளை அடிப்பதில்தானே கவனம்
இதை பற்றி ஏங்க சிந்திக்க போகிறார்கள் என்று இன்னொரு விமர்சனம் எழும்.


தமிழ் படங்கள் இந்தியா மற்றும் பிற நாட்டின் திரை விருதுக்கு அனுப்பியதாக எங்கோ படித்தேன்
படங்களின் பெயர்கள் வருமாறு
அங்காடி தெரு, ஆடுகளம், மைனா, களவானி
என்று சொல்லும் போது எவ்வளவு பெருமையாக இருக்கிறது
இந்த படங்களை வெளிநாட்டுகாரர்கள் மற்றும் பிற மாநிலத்தவர்களும்
இதை ஒலிபெருக்கில் அழைக்கும்போது இன்னும் கூடுதல் அழகாக இருக்கும்
தப்பாய் பெயரை உச்சரிபார்கள் என்று நேர்மறையான எண்ணங்கள் எழ வேண்டாம்
விமர்சனங்கள் முலம் அது சரியாகி விடும்.
அதை விடுத்து shopping complex, two roosters, Rascal
போன்ற ஆங்கில பெயர் வைப்பதால் உண்மையில் நம்மளை ஏளனமாகதான் பார்ப்பார்கள்
இது தமிழுக்கு இழுக்கு, தமிழ் இனத்துக்கு இழுக்கு.

அரசாங்கத்தின் செயல்களை நாம் கட்டாயம் என்றோ,
அல்லது கெஞ்சல் என்றோ கொச்சைபடுத்த தேவையில்லை
அதறக்கும் மேலான கடமையாகும்
அது அனைத்து துறையிலும் பின் பற்ற வேண்டும் என்பதே மக்களின் ஆவல்
படி படியாக தமிழை நீக்கமற இடம்பெற செய்வதே
சிறந்த செயல்பாடாக இருக்க முடியும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு எற்ப
தமிழ் படங்களின் பெயர்கள் தமிழில் இருத்தலே அழகு.

எப்பூடி.. said...

@ புகல்

//தமிழ் படங்கள் இந்தியா மற்றும் பிற நாட்டின் திரை விருதுக்கு அனுப்பியதாக எங்கோ படித்தேன்
படங்களின் பெயர்கள் வருமாறு; அங்காடி தெரு, ஆடுகளம், மைனா, களவானி
என்று சொல்லும் போது எவ்வளவு பெருமையாக இருக்கிறது//


நிச்சயமாக, ஆனால் இதை உணர்ந்து இயக்குனர்களே படத்திற்ற்கு தமிழ்ப் பெயரை வைக்க முன்வரவேண்டும் என்பதுதான் என் அவா; அவர்களை அரசாங்கம் தமிழ்ப் பெயரை வைக்க சொல்வது "உனது அம்மா மீது நீ நேசம் வை" என்று ஒருவனுக்கு சொல்வது போன்றது என்பதுதான் என் கருத்து. இந்த ஓரிடத்தில்த்தான் எம் இருவரது கருத்திலும் வேறுபாடு உள்ளது. உங்கள் கருத்தை தெளிவாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஒரு நடிகன் சினிமாவிலும், ஒரு அரசியல்வாதி மேடையிலும் பேசும்போதுதான் எம்மால் உணர முடிகின்றதென்றால் தமிழ் மொழி இன்று கடைகளில் வாங்கும் குளுக்கோஸ் போலாகிவிட்டதா என்றே எண்ணத் தோன்றுகின்றதுஃஃஃஃ

தமிழ் எங்கே எப்படி வாழ்கிறதென்பதை விட தமிழன் எங்கே எப்படி வாழ்கிறான் என்பதை கண்ணூடு பார்க்கும் போது தான் உச்ச கடுப்பேறுகிறது.... ஒருத்தனை ஒருத்தன் தின்னாமல் இருந்தாலே போதும்பா... தமிழ் வாழும்..

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)