Friday, October 14, 2011

தீபாவளி திரைப்படங்கள் - ஸ்பெஷல்

வருகின்ற 26 ஆம் திகதி தீபாவளி திருநாளில் தமிழ் திரையரங்குகளுக்கு புதிதாக களமிறங்க 7ஆம் அறிவு, வேலாயுதம், ரா-ஒன் திரைப்படங்கள் தயாராக உள்ளன. இவற்றில் ரா-ஒன் மற்றும் 7ஆம் அறிவு திரைப்படங்கள் தீபாவளியன்று வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது; வேலாயுதம் உறுதி செய்யப்படவில்லை ஆயினும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் என்பதால் எப்படியாயினும் வெளிவரும் என்று நம்பப்படுகின்றது. தீபாவளிக்கு வெளிவருமென்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சிம்பு, தரணி கூட்டணியின் 'ஒஸ்தி'யும்; செல்வராகவன், தனுஸ் கூட்டணியில் 'மயக்கம் என்ன'வும் திரையரங்குகளின் போதாமையாலும், மேற்கூறிய திரைப்படங்களின் போட்டிப் பயத்தினாலும் பின்வாங்கியுள்ளன.

இந்த இரு திரைப்படங்களும் (ஒஸ்தி, மயக்கம் என்ன) 11-11-11 என்னும் வரலாற்றுப் புகழ் மிக்க நாளில் வெளிவரப்போவதாக சினிமா செய்திகள் கூறுகின்றன. அப்படி வெளிவரும் பட்சத்தில் 2004 ஆம் ஆண்டிற்கு பின்னர் சிம்பு, தனுஸ் திரைப்படங்கள் ஒன்றாக வெளிவரும் சந்தர்ப்பமாக இது அமையும். இதற்கு முன்னர் கடைசியாக 2004 இல் சிம்புவின் மன்மதனும் தனுஸின் ட்ரீம்ஸ் திரைப்படமும் ஒரே நாளில் வெளிவந்தன ; அந்த போட்டியில் சிம்பு ஜெயித்தற்கான பதிலடியை'மயக்கம் என்ன'மூலம் தனுஷ் சிம்புவுக்கு கொடுப்பாரா? அல்லது சிம்பு மீண்டும் தனது வெற்றியை 'ஒஸ்தி' மூலம் தக்கவைப்பாரா! என்கின்ற சுவாரசியம் 11-11-11 அன்று தெரிந்துவிடும்!!!தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் திரைப்படங்களை நோக்கினால்; அதிக எதிர்பார்ப்புள்ள படம் என்னவோ 7 ஆம் அறிவுதான். தீனா, ரமணா, கஜினி என மூன்று மெகா ஹிட் திரைப்படங்களுக்கு பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதால் மாபெரும் எதிர்பார்ப்பு 7 ஆம் அறிவுக்கு இருக்கும் அதே நேரத்தில்; இன்றைய முன்னணி நாயகர்களில் அண்மைக்காலத்தில் அதிகளவு வெற்றிப்படங்களை கொடுத்தவர்களில் முன்னணியில் இருக்கும் சூரியாமீதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருப்பது 7 ஆம் அறிவுக்கு மிகப்பெரும் பலம். அத்துடன் உலகநாயகன் புதல்வியின் தமிழ் அறிமுகமாக 7 ஆம் அறிவு இருப்பதுவும் கூடுதல்ப்பலம். இவற்றைவிட படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமையவேண்டிய ஹாரிஸின் பாடல்கள் சொதப்பியது 7 ஆம் அறிவின் எதிர்பார்ப்பில் சிறு பின்னடைவு.

தமிழர்களின் பெருமையை உலகறிய செய்கின்றேன் என முருகதாஸ் கையில் எடுத்திருக்கும் போதிதர்மன் கதை தமிழ் ரசிகர்களுக்கு புதிதுதான் என்றாலும் எந்தளவிற்கு அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். படத்தின் ட்ரெயிலரை பார்க்கும்போது நிறைய இடங்களில் மக்கள் நம்பும்படியாக லாஜிக் இருக்குமா என்கின்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. 7 ஆம் அறிவை பொறுத்தவரை 'படம் விஷுவலாக பக்கா பிரமாதமாக இருக்கும் என்பதை மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும்; ரவி k சந்திரனின் ஒளிப்பதிவு 100% 7 ஆம் அறிவின் விஷுவலை திருப்திப்படுத்தும் என்று நம்பலாம்.படத்தில் சரக்கு கம்மியாக இருந்தாலும் பிரம்மாண்டம் என்கின்ற விடயத்தை வைத்து எப்படியும் முதலுக்கு சேதாரமில்லாமல் ஓட்டிவிடுவார்கள்; அதேநேரம் படம் பிரம்மாதமாக அமைந்துவிட்டால் வசூலில் அனல் பறக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம் தொலைக்காட்சிகளில் ஏ.ஆர்.முருகதாசும், சூர்யாவும் பண்ணப்போகும் ப்ரோமொஷனை நினைத்தால் இப்பவே கண்ணை கட்டுது; அதிலும் முருகதாஸ் 'அவித்த மீன் துடிக்குது' என்கின்ற ரேஞ்சில விடுற பீலாக்கள் ரொம்ப கொடுமையாய் இருக்கும் (கஜினி ரிலீஸ் சமயம் சண் டிவில முருகதாஸ் பண்ணின அலப்பறைய இப்ப நினைச்சாலும் பீதியாயிருக்கும் :-) )

அடுத்து தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் மற்றுமொரு முக்கிய திரைப்படம் வேலாயுதம்; ஆக்ஷன் ஹீரோவாக ஐந்து தொடர் தோல்விகளுக்கு பின்னர் காவலன் என்கின்ற ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படத்தில் நடித்த பிற்ப்பாடு விஜய் நடிக்கும் ஆக்ஷன் திரைப்படம்தான் வேலாயுதம். முதல் நான்கு ரீ-மேக் திரைப்படங்களையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்த ராஜாவுக்கு இறுதியாக இயக்கிய தில்லாலங்கடி காலை வாரினாலும் வேலாயுதம் முதல் முதலாக நேரடியாக இயக்கும் (?) திரைப்படம் என்பதால் எப்படி இருக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை. படத்தின் ட்ரெயிலரில் சாதாரண தோற்றத்தில் விஜய் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு ஜனரஞ்சகமாகவும், சுப்பர் ஹீரோ தோற்றத்தில் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு செம காமடியாகவும் உள்ளன.வழக்கமாக விஜய் படங்கள் ரிலீசிர்க்கு முன்னமே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகிவிடும், அதே வரிசையில் வேலாயுதம் பாடல்கள் மிகவும் பிரபலமாகியமை அதன் பிளஸ் பாயின்ட். விஜய் ரசிகர்களின் அமோக ஓப்பினிங் வேலாயுதத்திற்கு மிகப்பெரும் பலமாக அமையும் அதேநேரம், அந்த ஓப்பினிங்கை தக்கவைத்துக் கொள்வது வேலாயுதத்தின் திரைக்கதை கைகளில்த்தான் உள்ளது. ரீ- மேக்குகளை தமிழுக்கு ஏற்றால்ப்போல சூப்பராக திரைக்கதையமைக்கும் ராஜா (தில்லாலங்கடி தவிர்த்து) திரைக்கதையில் மாஜிக் செய்துள்ளாரா! இல்லை லாஜிக் மீறல் செய்துள்ளாரா! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்விரு திரைப்படங்களுக்கும் புதிதாக தோன்றியிருக்கும் தலையிடிதான் ரா-ஒன். நேரடி தமிழ்ப் படமல்லாத ஒரு டப்பிங் படம் முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலையில் ஒரு தீபாவளி என்றால் அது இம்முறைதான். ஷாருக்கான் கரீனா கபூர் நடித்திருக்கும் ரா-ஒன் என்னும் ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் டப்பிங்கை முன்னெப்போது மில்லாதவாறு மிகமிக அதிகளவு திரையரங்குகளில் ரிலீஸ் செய்கிறார்கள். தமிழ் திரைத்துறையின் முன்னணி வினியோகிஸ்தர் அபிராமி ராமநாதன் சென்னையில் மட்டும் 20 திரையரங்குகளில் வெளியிடுகின்றார் (முதல் முதலில் 20 க்கு மேற்ப்பட்ட திரையரங்குகளில் சென்னையில் வெளியான திரைப்படம் சிவாஜி)அப்படி என்ன ஒரு ஈர்ப்பு ரா-ஒன் மீது ? காரணம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை; ரஜினி ரஜினி ரஜினி....... ரஜினியின் முகத்தை புகைப்படத்தில் காணவே காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ரஜினி ஓரிரு நிமிடங்கள் திரையில் வருகிறார் என்பது தெரிந்தால் சும்மா இருப்பார்களா? சும்மாவே ஆடுவார்கள், இப்போது காலில் சலங்கை வேறு கட்டப்பட்டுள்ளது, விளைவு??? தீபாவளியன்று தெரியும் :-) தெற்கிலே தமிழகம், கர்நாடகா, கேராளாவிற்கு ரஜினி என்னும் மந்திரம் போதும் ஓப்பினிங்கை அள்ளிக்கொட்ட!!! ஆனால் படம் வெற்றி பெறுமா இல்லையா என்பது ரா-ஒன்னின் திரைக்கதையில்த்தான் தங்கியுள்ளது.

இதற்கு முன்னரும் ஒரே சமயத்தில் ஷாருக்ஹான் (நேரேடி), விஜய், சூர்யா படங்கள் மோதியுள்ளன. 2007 தீபாவளிக்கு வெளிவந்த விஜயின் அழகிய தமிழ் மகன், சூர்யாவின் வேல், ஷாருக்கின் ஓம் ஷாந்தி ஓம், தனுஸின் பொல்லாதவன் திரைப்படங்கள் மோதின. இந்த போட்டியில் ஷாருக்கின் ஓம் ஷாந்தி ஓம் தமிழகம் மற்றும் தெற்கில் வசூலில் களை கட்டாவிட்டாலும் ஹிந்தியில் சக்கைபோடு போட்டது. இந்த போட்டியில் தமிழகத்தில் சூர்யாவின் வேலும் தனுஸின் பொல்லாதவனும் வெற்றி பெற்றது. இப்போது மீண்டும் மூவரும் மோதுவதற்கு தயார் (தனுஸ் கடைசி நேரத்தில் மிஸ்ஸிங்) இந்த தடவை விஜய் பழிவாங்குகிறாரா? இல்லை சூர்யா தன் வெற்றியை தக்கவைத்துக் கொள்கிறாரா? ஷாருக்கான் தமிழ் சினிமாவில் தனக்கென(?) ஒரு இடத்தை பெற்றுக் கொள்கிறாரா ? இப்படியான கேள்விகளுக்கான பதில் இன்னும் 10 நாட்களில் தெரிந்து விடும்........ஐப்பசி 26 & கார்த்திகை 11 இரண்டு நாட்களுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனால் போட்டிபோடும் முன்னணி நடிகர்களுக்கும் அவர்தம் ரசிகர்களுக்கும் சங்கடம்தான் :-) என்னதான் ரஜினி ரா-ஒன்னில் நடித்திருந்தாலும் எனக்கென்னமோ எதிர்பார்ப்பு 'மயக்கம் என்ன' மீதுதான், காரணம் செல்வராகவன் & பாடல்கள். ஆனாலும் ரா-ஒன் மீது எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை, ஒரு நிமிடமோ ஒரு செக்கனோ! தலைவரை காண கசக்குமா என்ன?? அனால் இங்கு (யாழ்ப்பாணம்) எந்த திரையரங்கிலும் ரா-ஒன் திரையிடப்படும் சாத்தியம் இல்லை, ஆகவே ஒரிஜினல் DVDக்காக காத்திருக்க வேண்டியதுதான் :-(

11 வாசகர் எண்ணங்கள்:

கார்த்தி said...

// ரீ- மேக்குகளை தமிழுக்கு ஏற்றால்ப்போல சூப்பராக திரைக்கதையமைக்கும் ராஜா
அவர் அத அப்பிடியே எல்ல எடுக்கிறவர். காட்சி கூட மாத்தாம?

என்ன சார் வேலாயுதம் பாட்டு சல்லாவா இருந்திச்சு?? வேட்டைக்காரனோடு ஒப்பிடும்போது 35%மும் இல்லை. எனக்கு உண்மையில் trailer பாத்து 7ம் அறிவில் சம்பிக்கை வரல. ஆனா பாட்டு எதிர்பாத்த அளவு இல்லதான்!

எப்பூடி.. said...

@ கார்த்தி

பாட்டு நல்லா இருக்கின்றது என்பது வேறு, ஹிட் ஆக்குவது என்பது வேறு, வேலாயுதம் பாடல்கள் ஒவ்வொரு சைனா போனிலும் எங்கு பார்த்தாலும் கதறிக்கொண்டு இருக்கின்றன; இன்னும் சொல்லப்போனால் பண்பலை ஊடகங்கள் அப்படி செய்துவிட்டார்கள்.

காட்சியை மாற்றாமல் எடுத்தாலும் எந்த திரைப்படத்திலும் தெலுங்கு வாடை இதுவரை அடித்ததில்லை, மற்றும் காட்சிகளின் ஒளிப்பதிவும் வசனமும் தேவையான இடங்களில் சேர்க்கப்பட்ட நகைச்சுவைகளும், சில வேண்டப்படாத காட்சிகளை நீக்கியமையும், குறிப்பாக தமிழுக்கு மாற்றக்கூடிய படங்களை தேர்வு செய்தமையும் தான் ராஜாவின் வெற்றி.

எத்தனை பேர் ரீ-மேக் செய்கிறார்கள், ஏன் யாருமே ராஜாபோல் ஜெயித்ததில்லை ???

bandhu said...

//. ரஜினியின் முகத்தை புகைப்படத்தில் காணவே காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ரஜினி ஓரிரு நிமிடங்கள் திரையில் வருகிறார் என்பது தெரிந்தால் சும்மா இருப்பார்களா?//
குசேலன் அப்படின்னு ஒரு படம் வந்ததும், அதில் ரஜினி நடித்திருந்தது, சத்தம் போடாமல் அந்த படம் பெட்டியில் பதுங்கிக்கொண்டதும் தெரியுமா?

எப்பூடி.. said...

@ bandhu

கண்ணா, தங்களுக்கு குசேலன் ஓப்பினிங் எவ்வளவென்று தெரியுமா? அதாவது 3 நாள் வசூல்? 87 லட்சம் அன்றைய தேதியில் இதுதான் சிவாஜி, தசாவதாரத்திற்கு அடுத்த அதிக பட்ச ஆரம்ப வசூல். அதன் பின்னர் அதிகளவு திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடும் கலாச்சாரம் (அதுகூட சிவாஜிதான் கண்ணா ஆரம்பம்) வரவே பல முன்னணி திரைப்படங்கள் ஓப்பினிங்கை அமோகமாக அள்ளத் தொடங்கின.

இங்கு நான் சொன்னது ரஜினி ரா-ஒன்னில் இருப்பதனால் ஓப்பினிங் அதிகரிக்கும் என்றுதான், படத்தின் வெற்றியை அதன் திரைக்கதைதான் தீர்மானிக்க வேண்டும் என்று பதிவிலே அழுத்தமாக கூறியுள்ளேன். மற்றும் ரஜினி மரணத்தின் வாசல் வரை சென்று வந்துள்ளதால் அவருக்கான எதிர்பார்ப்பு அவர்தம் ரசிகர்களிடம் முன்பைவிட மிக மிக அதிகமாகவே இருக்கும், அதனால் மிகப்பெரும் ஓப்பினிங் ரா-ஒண்ணுக்கு நிச்சயம் கிடைக்கும்.(சந்தேகமென்றால் பதிவை மீண்டும் ஒரு தடவை கவனமாக படித்து பார்க்கலாம் )

பாபாவும், குசேலனும் இல்லையின்னா உங்க நிலைமைதான் என்ன?

bandhu said...

நீங்கள் சொன்னது சரி. நான்தான் ஓபனிங் என்று நீங்கள் எழுதியதை படத்தின் வெற்றியுடன் போட்டு குழப்பி விட்டேன்..

மனோரஞ்சன் said...

நல்ல அலசல்...நல்லப்பதிவு...!
//அதிலும் முருகதாஸ் 'அவித்த மீன் துடிக்குது' என்கின்ற ரேஞ்சில விடுற பீலாக்கள் ரொம்ப கொடுமையாய் இருக்கும்//
ஹி..ஹி...மிகவும் ரசித்தேன்..!
நானும் 'மயக்கம் என்ன..'வைத்தான் அதிகமாக எதிர்ப்பார்த்திருக்கின்றேன்..!

HajasreeN said...

ஒரிஜினல் DVDக்காக காத்திருக்க வேண்டியதுதான் :-( //

walakkam pola kalla dvd thaan warum

எப்பூடி.. said...

@ bandhu

It's Ok Boss Cool :-)

r.v.saravanan said...

ரஜினி ரஜினி ரஜினி....... ரஜினியின் முகத்தை புகைப்படத்தில் காணவே காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ரஜினி ஓரிரு நிமிடங்கள் திரையில் வருகிறார் என்பது தெரிந்தால் சும்மா இருப்பார்களா?

அதானே

Babu Ganesh said...

superb

அம்பாளடியாள் said...

உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவரிற்கும் எனது திபாவளி நல் வாழ்த்துக்கள்.மிக்க நன்றி பகிர்வுக்கு ...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)