Thursday, October 6, 2011

பண்டிகைகள் கொண்டாட்டமும், பகுத்தறிவும்........





ஒரு மதம் சார்ந்த பண்டிகை வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள் (குறிப்பாக இந்துமதம்); அந்த பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னாடியே அந்த பண்டிகையை இணையத்தில் ஞாபகப்படுத்துபவர்கள் குறிப்பிட்ட பண்டிகையை கொண்டாடுபவர்கள் அல்ல; அப்பண்டிகையை "எதற்காக கொண்டாடுகிறார்கள் இந்த முட்டாப்பசங்க" என்று கூறும் பகுத்தறிவாத சிங்கக் குட்டிகள்தான். எந்த பண்டிகை வந்தாலும் இவர்கள் தங்கள் கடமையை செவ்வனே சிறப்பாக செய்து வருகின்றார்கள்; அனைத்து மதப் பண்டிகைகளும் இவர்களது நாட்குறிப்பில் 2 நாட்களுக்கு முன்னாடியே பக்காவாக குறித்து வைக்கப்பட்டிருக்குமென்று நினைக்கின்றேன.

இவர்கள் குறிப்பிட்ட பண்டிகைகளை கேவலமாக கூறுவதாலோ, அப்பண்டிகையை கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என்று கூறுவதாலோ; அப்பண்டிகைகளை கொண்டாடும் யாரும் கொண்டாடாமல் விடப்போவதில்லை. அப்படியிருந்தும் ஏன் இதை அவர்கள் செய்கின்றார்கள் என்றால்; இரண்டே காரணங்கள்தான்! 1) இயலாமை 2) வெறுப்பேற்றுதல். இது ஒரு சாதாரண மனோநிலைதான், அதாவது எமக்கு புரிந்த ஒரு விடயத்தை புரியாத ஒருவருக்கு புரியவைக்கும் முயற்ச்சியில் தோல்வியடையும்போது ஏற்ப்படும் இயலாமையினால் வரும் கோபமும்; புரியவைக்கும் விடயத்தை கவனத்திலேயே கொள்ளாமல் "போடாங் நீயும் உன்....." என்பவன் மீது வரும் கோபமும்தான் இந்த இயலாமையும், வெறுப்பேற்றுதலும்.



அப்படி இவர்கள் என்னத்தைத்தான் புரிந்து வைத்திருக்கிறார்கள்? இவர்கள் புரிந்து வைத்திருப்பதை ஏன் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை? கடவுள் வழிபாடு தேவையில்லை, பண்டிகைகள் தேவையில்லை என்று சொல்லும் இவர்களால் எதற்கு பெரியாருக்கு சிலை? எதற்கு பெரியாருக்கு நினைவு தினம் என்று கேட்டால் சொல்லத் தெரியவில்லை? தனக்கு வந்தா இரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி. அடுத்தவன் கடவுளை வணங்குவதிலும், பண்டிகைகளை கொண்டாடுவதிலும் இவர்களுக்கு என்ன அப்படி ஒரு கடுப்பு என்றுதான் புரியவில்லை!!! நீங்கள் கடவுளை உணரவில்லை; ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரம் இருக்கு என்று உணர்ந்தவன் உணர்வுகளை ஏன் சாகடிக்கிறீர்கள்?

இல்லாததை ஏன் உணர்கிறான் என்கின்ற கோபமா? அப்படி பார்த்தால் உயிர், காதல், பாசம் எல்லாமே உணர்வுகள்தானே? (உடலுக்குள் எங்கே உயிர் உள்ளது? உயிருக்குள் காதல் எங்குள்ளது? என்கின்ற வைரமுத்துவின் வரிகளை ஞாபகப்படுத்துகிறேன்) அந்த உணர்வுகளையும் வேண்டாம் என்கின்றீர்களா? 'இல்லை' என்று நீங்கள் உணர்ந்தது உங்களுக்கு சரியாக இருக்கும் பட்சத்தில்; அதையே 'இருக்கு' என்று உணர்ந்தவன் முட்டாளா? அவனும் உங்களது 'இல்லை' என்கின்ற உணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது பகுத்தறிவா? இல்லை பாசிசமா? நீங்கள் இயற்க்கை என்கிறீர்கள், அவன் கடவுள் என்கின்றான்; நீங்கள் இயற்கையை உருவத்துடன் காண்கின்றீர்கள், அவன் கடவுளுக்கு உருவம் கொடுத்து காண்கின்றான். இதில் அவனுக்கு கிடைப்பது நினம்தி, மகிழ்ச்சி, ஆத்ம திருப்தி; அவளவுதான்.



கமலஹாசன் ஒரு நிகழ்வில் "இனிவரும் காலங்களில் பகுத்தறிவாதி கோவில்களை இடிக்க மாட்டான் ஆஸ்திகர்கள்தான் இடிப்பார்கள்" என்று சொன்னது ஞாபகத்தில் வருகிறது. ஆனால் இன்று பண்டிகையை கொண்டாடுபவன் மறந்தாலும் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னாடியே அந்த பண்டிகையை 'பகுத்தறிவு' ஞாபகப்படுத்துகிறது. இதையே " இனிவரும் காலங்களில் மதம்சார்ந்த பண்டிகை ஒன்றை; கொண்டாடுபவர்கள் மறந்தாலும் பகுத்தறிவாதி ஞாபகப்படுத்துவான்" என்று மாற்றி சொல்லலாம். உலகம் போய்க்கொண்டிருக்கும் வேகத்திற்கு அவ்வப்போது ஒருவனுக்கு கிடைக்கும் பிடிப்பு, ரிலாக்ஸ், மகிழ்ச்சியாகத்தான் இன்று அதிகமானவர்கள் பண்டிகையையும், திருவிழாக்களையும் பார்க்கின்றார்கள்.

ஏன் கொண்டாடுகின்றோம்? எதற்கு கொண்டாடுகின்றோம்? கொண்டாடுவது சரியா? தவறா? ஏழைகள் ஒருவேளை சோற்றுக்கு இல்லாமல் இருக்கும்போது பணத்தை விரயமாக்கும் இப்பண்டிகைகள் தேவையா? போன்ற கேள்விகளை கேட்பதுதான் பகுத்தறிவென்றால்; அந்த பகுத்தறிவை சோதித்து பார்க்க பெரும்பான்மையானவர்கள் தயாரில்லை, தயாராக வேண்டிய தேவையும் அவர்களுக்கில்லை, அதில் தவறுமில்லை. பண்டிகை வருகிறதா? பண்டிகை வரும்போது கொண்டாட வசதி இருக்கிறதா? கொண்டாடுகிறார்கள். ஏழ்மை நீங்கி எல்லோருமே நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மையானவர்களது ஆசை; அதற்காக அந்த நாள் வரும்வரை வரும் பண்டிகை, கொண்டாட்டங்களை கொண்டாடாமல் இருக்க முடியுமா?



காத்திருப்பதற்கு மனித வாழ்வு ஒன்றும் 200,300 ஆண்டுகளல்ல, இன்று வசதி இல்லாதவன் நாளை வசதி வரும்போது பண்டிகைகளை கொண்டாடாமல் தவிர்ப்பானா? நன்றாக இருக்கும் போதும், வசதி வாய்ப்புக்கள் அமையும்போதும் பண்டிகைகளை கொண்டாடுபவர்களுக்கு ஏழ்மையை சுட்டி காட்டுபவர்கள் ஒரு முறை சுய பரிசோதனை செய்துவிட்டு சுட்டி காட்டுங்கள். உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் பலதரப்பட்ட மட்டத்திலான மக்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்; ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றால்ப்போல பண்டிகைகளை கொண்டாடுகின்றார்கள்.

கடவுள் நம்பிக்கை, ஏழ்மை, புரட்சி, பகுத்தறிவு என்று ஜாதார்த்தத்தை கொல்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது; அது ஒருவித நாகரீக வியாதிபோல் ஆகிவிட்டது. இருக்கும்வரை அடுத்தவனுக்கு தீமையில்லாமல் வாழவேண்டும். அப்பப்போ கிடைக்கும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களையும், திருவிழாக்களையும் விருப்பமானவர்கள் தாராளமாக கொண்டாடலாம்; நித்திரைக்கே நேரமில்லாத காலகட்டத்தில் பகுத்தறிந்து ஆராய்ந்து வாழ்வை வீணடிக்க சிந்திக்கும் ஆற்றலுள்ள யாரும் தயாராக இல்லை, நானும்..........

18 வாசகர் எண்ணங்கள்:

suryajeeva said...

//பகுத்தறிந்து ஆராய்ந்து வாழ்வை வீணடிக்க சிந்திக்கும் ஆற்றலுள்ள யாரும் தயாராக இல்லை, நானும்.......... //

?????????????????

//1) இயலாமை 2) வெறுப்பேற்றுதல் . இது ஒரு சாதாரண மனோநிலைதான், அதாவது எமக்கு புரிந்த ஒரு விடயத்தை புரியாத ஒருவருக்கு புரியவைக்கும் முயற்ச்சியில் தோல்வியடையும்போது//

உங்களுக்கும் பொருந்தும் அல்லவா?

//எதற்கு பெரியாருக்கு சிலை? எதற்கு பெரியாருக்கு நினைவு தினம் என்று கேட்டால் சொல்லத் தெரியவில்லை? //

அது விளம்பரம் மக்கா... எப்படி நீங்க பணக்காரன் என்று பண்டிகையை பந்தாவாக கொண்டாடி மகிழ்கிரீர்களோ அதே போல் என் தலைவன் மீது எனக்கு எவ்வளவு பாசம் பார் என்று காட்டும் பந்தா... வேறு ஒன்றுமில்லை

my email id
jeevansure@gmail.com

எப்பூடி.. said...

@ suryajeeva

//உங்களுக்கும் பொருந்தும் அல்லவா?//

நன் இதை ஒரு தொழிலாக செய்வதில்லை, இப்போதுதான் முதல் முதலில் பண்டிகைக்கு எழுதுகிறேன், ஆனால் பகுத்தறிவு ஒவ்வொரு பண்டிகைக்கும் எதிர்ப்பதிவு எழுகின்றது தங்களுக்கு தெரியுமா?

//?????????????????//

பகுத்தறிவு , சிந்தனை இரண்டும் ஒரே சொல்லென்று தாம் அர்த்தம் கொண்டால் நான் பொறுப்பல்ல

//நீங்க பணக்காரன் என்று பண்டிகையை பந்தாவாக கொண்டாடி மகிழ்கிரீர்களோ//

i like this joke

கருத்துக்கு மிக்க நன்றி, பண்டிகைகள், திருவிழாக்களை கொண்டாடினால் நான் பணக்காரனா? அருமையாக உங்கள் எண்ணத்தை பதிந்துள்ளீர்கள்:-)

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் தல,
மனித மனங்களின் உணர்வுகளின் அடிப்படையில் வேறுபடும் பண்டிகைகள், விழாக்கள் தொடர்பான முக்கியத்துவத்தினை சிறப்பாக ஆராய்ந்திருக்கிறீங்க.

பாலா said...

மதப்பண்டிகைகளை சாடுகிறேன் என்று இவர்களும் பகுத்தறிவு என்ற மதத்தை தான் பின்பற்றுகிறார்கள்.

காவ்யா said...

“இருக்கும்வரை அடுத்தவனுக்கு தீமையில்லாமல் வாழவேண்டும்”

கரெக்டுதான். ஆனால் பண்டிகைகள் அப்படியா கொண்டாடப்படுகின்றன ? விநாயகர் சதுர்த்திக்குப் போலீசு பாதுகாப்பு கொடுக்க வேண்டியதிருக்கிறதே? தீபாவளியென்றால் வயதுவந்தோரும் நோயாளிகளும் நிம்மதியாக இருக்கமுடியவில்லையே! சாலகளில் நடக்க முடியவில்லையே ! தீவண்டி எப்போதும் தயார் நிலையில் வைக்கவேண்டியதிருக்கிறதே ! துர்கா பூஜாவுக்கு அசாமில் 5000 கால்நடைகளைப் பலியிட்டார்களாம். இஃதெல்லாம் சமூகத்திற்கும் விலங்குகளுக்கும் இழைக்கும் தீமையா இல்லையா ? அவனவன் பண்டிகையை அவனவன் வீட்டுக்குள்ளேயா கொண்டாடுகிறான் ?

காவ்யா said...

//நித்திரைக்கே நேரமில்லாத காலகட்டத்தில் பகுத்தறிந்து ஆராய்ந்து வாழ்வை வீணடிக்க சிந்திக்கும் ஆற்றலுள்ள யாரும் தயாராக இல்லை, நானும்.....//

நித்திரைக்கு ஏன் நேரமில்லை என்பதை ஆராய்ந்தால்தான் நித்திரைக்கு வழிபிறக்கும். அதற்கு பகுத்தறிவு தேவை. பகுத்தறிவைக்கண்டு பயப்படுபவர்களுக்கு என்றுமே நித்திரையில்லை.

எப்பூடி.. said...

@ காவ்யா

சில இடங்களில் பெற்ற தாயே பிள்ளையை கொல்லும் அவலம் இடம்பெறத்தான் செய்கிறது, அதற்காக ஒட்டுமொத்த தாய்மார்களையும் குற்றமாக பார்க்க முடியுமா? அடுத்தவனுக்கு தீங்கு செய்துதான் (மிருகங்களுக்கு கூட) பண்டிகைகளை கொண்டாட முடியுமா? வருடத்திற்கு ஒருநாள் தீபாவளிக்கு பட்டாசு கொளுத்துபோது உங்களுக்கு இடைஞ்சலா? குண்டுவெடிப்பில் வருடாவருடம் நூற்றுக்கணக்கில் அப்பாவி ஜனங்களை நக்சல்கள் சாகடிக்கப்படும் போது இல்லாத அக்கறை தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தும்போது ஏற்ப்படுகின்றது வேடிக்கைதான்!!!! ஜதார்த்தத்தை கைவிட்டு வாழ்க்கைக்கு உதவாத வெறுவாயை மெல்வதுதான் பகுத்தறிவிற்கு இருக்கும் சிறப்பு.

பகுத்தறிவை கண்டு பயமா? வடிவேலுவை பார்த்தால் சிரிப்புத்தான் வரும்!! யாருக்கும் பயம் வராது :-)

காவ்யா said...

குண்டு வைப்போர் சட்டத்திற்கு ஒழிந்து கொண்டுதான் செய்கின்றனர். பிடிபட்டால் அவர்கள் சட்டம் உள்ளே தள்ளுகிறது. எவருமே குண்டுவெடிப்பைச் சரியென்பதில்லை. தீபாவளிப்பட்டாசு அப்படியா ? ஊரெங்கும் ஒரே புகைமண்டலம். சுற்றுப்புறம் மாசுபடுதல். செய்வோரை அரசு சட்டப்படி குற்றமென்பதில்லை. அவர்களைப்பிடித்து உள்ளே தள்ளுவதுமில்லை. அடுத்த வீட்டில் னோயில் ஒருவர் படுத்துக்கிறார். அல்லது இருமாசக்குழந்தை தூங்குகிறது என்பதெல்லாம் எவரும் சட்டை செய்வதில்லை. லட்சுமி வெடி வெடிக்கவேண்டும். அவர்கள் செய்வது சரி. எனவே குண்டுவெடிப்புக்கும் பட்டாசு வெடிப்புக்கும் அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள தூரம்.
வினாயகர் சதுர்த்தியைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ? தீபாவளி, விநாயகர் ஊர்வலம் ஒரு சிலர் நடத்தவில்லை ஒதுக்கித்தள்ள; ஒட்டு மொத்த இந்துக்களே செய்கிறார்கள். பண்டிகைகள் பக்தியோடு கொண்டாடப்படும்போது பிரச்சினையில்லை. அவர்கள் பிறருக்குத் தொந்தரவு இல்லாமலே கொண்டாடுவார்கள் ஏனெனில் பக்திக்கு மனசாட்சி உண்டு. பண்டிகைகளை ஆரவாரத்துடன் கேளிக்கை களியாட்டம் என்று வரும்போது அதை ஊருக்குமத்தியில் செய்யும்போது பொது அமைதி கெடுகிறது.

ஆயுத பூஜையை போலீசுஸ்டேசனில் கொண்டாடுகிறார்களாம். அதைத் தடுத்ததாம் பெரியார் கழகம். அவர்களை நீங்கள் பகடி பண்ணலாம். தப்பில்லை. அதே வேளையில் ரம்ஜானையும் கிருத்துமஸையும் காவல் னிலையங்களிலும் அரசு அலுவ்லகங்களிலும் கொண்டாடவேண்டுமென்பது பகுத்தறிவு. சரியா தப்பா ?

பகுத்தறிவைக்கண்டு சிரிக்கும் நீங்கள்தான் இக்கால வாழ்க்கையில் நித்திரை இல்லை என்கிறீர்கள் ? ஏன் என்று ஆராய்வதுதான் பகுத்தறிவு என்றால் வடிவேலுவைக் காட்டி டபாய்க்கிறீர்கள். ஆராயுங்கள். அதுவே பகுத்தறிவு.

If u qn why noisy festivals and provocative festivals like Pillaiyaar chaurthi r hated, u will know they disturb public peace. If someone points out that, u dont like it. Y?

Which God had asked u to disturb public peace ?

இரவு வானம் said...

தல முழுக்க முழுக்க உங்களோட கருத்துக்களோட உடன்படுகிறேன், அருமையாக பதிவு செய்துள்ளீர்கள், பகிர்வுக்கு நன்றி

எப்பூடி.. said...

தாங்கள் சொல்வதுபோல போலிஸ் நிலையங்களில் எல்லாமத கொண்டாட்டங்களையும் கொண்டாடலாம், அதில் தவறில்லை, எங்கள் நாட்டில்அனைத்தும் கொண்டாடப்படுகின்றது. மற்றும் இங்கு விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் கொண்டாடப்படுவதுபோல கொண்டாடப் படுவதில்லை. மக்களுக்கு பாதிப்பென்றால் நிச்சயம் அது தீங்குதான், எந்த பண்டிகையும் அடுத்தவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் கொண்டாடுவது முக்கியம்.

@ காவ்யா

தீபாவளி பற்றிய தங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதல்ல, அது உலகம் முழுவதும் நடை பெறுவதுதான், கிறிஸ்மஸ் பண்டிகை கூட அந்த மாதிரிதான். வருடத்தில் ஒரு நாளில் பட்டாசு கொளுத்துவதால் யாருக்கும் எதுவும் ஆகப்போவதில்லை, இதை ஊதி பெரிதாக பார்த்தால் தவறாகத்தான் இருக்கும்.

நித்திரைக்கு நேரமின்மைக்கு எதற்கு பகுத்து அறிவு? சாதா அறிவே காரணத்தை அறிய போதும்? ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அதை பயன் படுத்த முடியாது. பகுத்தறிவு படிக்க, வாசிக்க நல்லா இருக்கும், வாழ்க்கைக்கு உதவாது.

காவ்யா said...

Where do u live? I don't know. In many countries, Hindu practices of making noise is prohibited under environmental laws. For e.g cremating bodies according to Hindu dharma is forbidden in UK. In islands like Bermuda who r strict with environmental laws, prior permission s got by a few Hindus living there to burst crackers in Deewali. The permission s granted whereby they have to go out of the city in a place where ppl dont live, to burst crackers.

No civilised society which minds environmental laws will allow any noise and air pollution in the name of religious festival. In India, we allow because criticising religious practices becomes a dangerous activity. One may lose one's life.

As regards ur paguthiravu point, you are totally confused about the word. This s due to your only way of linking it to certain political parties of TN. Dont do that. Be independent.

Pagutharivu is using your free thinking fearlessly and understanding any issue w/o any preconceived ideas. This may lead you to qn your own views held earlier. Pagutthariv will tell you we should not disturb public peace and order in the name of religion.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ...
இந்த மாத SUPER BLOGGER விருது

Jayadev Das said...

நல்ல பதிவு. அரசு உத்தியோகம், மென்பொருள் துறை போல நல்ல மாதச் சம்பளத்தில் இருப்போரைத் தவிர்த்துப் பார்த்தால் பெரும்பாலான மக்கள் அன்றாடங் காய்ச்சிகள். தினமும் உழைத்துச் சாப்பிட வேண்டும், ஓய்வே கிடையாது. அம்மாதிரியான மக்களுக்கு இந்த பண்டிகை நாட்களில் மட்டும்தான் ஒரு நாள் வீட்டிலிருப்பார்கள், ஏதாவது பலகாரம் செய்து உண்பார்கள், முடிந்தால் ஏதாவது புதுத் துணியும் உடுத்துவார்கள். இல்லாவிட்டால் அவர்கள் வாழ்வில் ஒரு நாள் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாத எந்திரத் தானமாகத்தான் இருக்கும். இது, கணினி முன் உட்கார்ந்து கொண்டு கை நிறைய சம்பாதித்துக் கொண்டு மால்களில் கார்டைத் தேய்த்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு நெல் எந்த மரத்தில் விளைகிறது என்று கேள்வி கேட்கும் வெள்ளைக் காலர் பணியாளர்களுக்குப் புரியாது.

Jayadev Das said...

\\கடவுள் வழிபாடு தேவையில்லை, பண்டிகைகள் தேவையில்லை என்று சொல்லும் இவர்களால் எதற்கு பெரியாருக்கு சிலை? எதற்கு பெரியாருக்கு நினைவு தினம் என்று கேட்டால் சொல்லத் தெரியவில்லை?\\ இது குறித்து நண்பர் பாலா சொன்ன கருத்து 100% சரியே. பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லிக் கொண்டாலும் மத நம்பிக்கையாளர்களைப் பார்த்து இவர்கள் சாடும் அத்தனையும் இவர்களே செய்வதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. கோவில் சிலை கல்லு, அதற்க்கு மாலை எதற்கு என்று அறிவுப் பூர்வமாக கேட்கும் இவர்கள் பெரியார் பிறந்த நாள் அன்று கூட்டம் கூட்டமாகப் போய் பெரியார் சிலைக்கு மாலைகளைப் [அதுவும் நாலு பேர் தூக்கும் கனமான மாலைகள்] போடுவது ஏன்? அங்கே பெரியார் நின்று கொண்டு இவர்கள் மரியாதையை ஏற்றுக் கொள்கிறாரா? அதைப் பார்த்து வணக்கம் வேறு போடுகிறார்கள், அதை அந்தக் கல்லு ஏற்றுக் கொள்கிறதா? அண்ணா நினைவு நாளன்று அவரது சமாதிக்குப் போய் மலரஞ்சலி செலுத்தி மவுனமாக நிற்ப்பது இன்னொரு கூத்து. அங்கே படுத்திருக்கும் அண்ணாவின் மிச்ச மீதி எழும்புக் கூடு இவர்கள் அஞ்சலிக்கு மனமுருகிப் போய் விடுமா, இல்லை இவர்களுக்கு அறிவுரை வழங்குமா? இது எல்லாத்துக்கும் மேல வேடிக்கை, இப்போதைய கடவுள் மறுப்பு இயக்கத்துத் தலைவர், தனக்கப்புரம் தன் மகனே தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்று முடி சூட்டி இருப்பதுதான்!!

Jayadev Das said...

\\நித்திரைக்கே நேரமில்லாத காலகட்டத்தில் பகுத்தறிந்து ஆராய்ந்து வாழ்வை வீணடிக்க சிந்திக்கும் ஆற்றலுள்ள யாரும் தயாராக இல்லை, நானும்..........\\ பகுத்தறிவுவாதம் என்று சொல்லி இறை மறுப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கும் இன்றைய அறிவுஜீவிகள், இன்னொரு மூட நம்பிக்கையாளர்கள் அவ்வளவுதான், இவர்களது கொள்கையைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள ஒன்றுமில்லை.

Jayadev Das said...

@காவ்யா
நீங்க பொங்கனும்னா நிறைய விஷயங்கள் இருக்கு. ஏழை மக்கள் கொண்டாடும் பண்டிகைகளைப் பார்த்து அல்ல. முடிஞ்சா இந்தச் சுட்டியைப் பார்க்கவும்.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3724:2008-09-07-18-05-58&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59

எப்பூடி.. said...

@ Jayadev Das

//கணினி முன் உட்கார்ந்து கொண்டு கை நிறைய சம்பாதித்துக் கொண்டு மால்களில் கார்டைத் தேய்த்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு நெல் எந்த மரத்தில் விளைகிறது என்று கேள்வி கேட்கும் வெள்ளைக் காலர் பணியாளர்களுக்குப் புரியாது.//

இதிலே //நெல் எந்த மரத்தில் விளைகிறது// என்னும் வாசகத்தை உண்மையிலே மிகவும் ரசித்து சிரித்தேன்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)