Sunday, September 18, 2011

இங்கிலாந்தில் இந்தியா - என் பார்வையில்

இந்திய கிரிக்கட் அணியினருக்கும், இந்திய கிரிக்கட் ரசிகர்களுக்கும், பொதுவான கிரிக்கட் ஆர்வலர்களுக்கும் எப்போதுமே மறக்கமுடியாத ஒரு தொடராக இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையிலான போட்டித்தொடர் அமைந்தது என்றால் அது மிகையில்லை. டெஸ்ட் போட்டியில் 4:0, T/20 யில் 1:0, ஒருநாள் போட்டியில் 3:0 என இங்கிலாந்து அனைத்து போட்டித் தொடர்களையும் இலகுவாக கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு இந்த தொடரின் 10 போட்டிகளில் ஒரு போட்டியிலேனும் வெற்றி கிட்டாதது யாருமே எதிர்பாராதது; சர்வதேச கிரிக்கட்டிற்கு இது ஒரு பேரதிர்ச்சி, இந்திய கிரிக்கட்டில் இது ஒரு கறுப்புப் புள்ளி.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம், ஒருநாள் போட்டிகளில் உலக சாம்பியன், மிகப் பலமான துடுப்பாட்ட வரிசை, இதற்கு முன்னைய இங்கிலாந்து தொடர்களின் சிறப்புப் பெறுதி என மிகவும் சாதகமான விடயங்களை தம்மகத்தே கொண்டு இங்கிலாந்துக்குள் காலடி வைத்த இந்திய அணியின் இந்த படுதோல்விக்கு காரணம் என்ன? இந்த தோல்வி இந்திய அணியை எவ்விதத்தில் பாதிக்கும்? இந்த தோல்வியில் இருந்து இந்தியா மீண்டு வருமா?

டெஸ்ட் போட்டித் தொடர்
இந்தியா இந்த தொடர் முழுவதும் எதிர்கொண்ட மிகப்பெரும் பிரச்சனை உடல் உபாதைகள் (காயங்கள்). டெஸ்ட் போட்டிகளின் ஆரம்பம் முதல் ஒருநாள் போட்டிகளின் இறுதிவரை வீரர்களின் உடல் உபாதைகள் இந்தியாவை திணற வைத்தது இந்தியாவின் மிகப்பெரும் துரதிஸ்டம். உபாதைகளால் வீரர்கள் ஆடமுடியாமல் போனது இந்தியாவிற்கு பாதகமென்றால் உபாதையான வீர்ர்களை ஆடவைத்த தெரிவுக் குழுவினரதும், அணியின் தலைவர் டோனியினதும் முடிவு மிகவும் மோசமானது. டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக உடற்த்தகுதிக்கு திரும்பாத ஷேவாக், கம்பீர், சஹீர்கான் மூவரையும் அணியில் இணைத்தது டெஸ்ட் போட்டிகளின் பின்னடைவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்று.

ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதாயின் எதிரணியினரின் இருபது விக்கட்டுகளை வீழ்த்தியாகவேண்டும்; வெளிநாடுகளில் 20 விக்கட்டுகளை வீழ்த்துமளவிற்கு முழுமையான உடற்த்தகுதியுள்ள சஹீர் தவிர்த்து வேறு எந்த நம்பிக்கையான பந்து வீச்சாளர்களும் இன்றைய இந்திய அணியில் இல்லை. இங்கே சஹீரின் உடற் தகுதியே தள்ளாடுகிறது, இந்த லட்சணத்தில் 20 விக்கட்டுகளை சரிப்பது எவ்வகையில் சாத்தியம்? ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப (condition) அப்பப்போ இசாந்த் சர்மாவின் வேகம் மற்றும் ஸ்விங் ஓரளவிற்கு இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்தாலும் அதனை தொடர்ந்து கொண்டு செல்ல இசாந்த் சர்மாவிற்கு எந்த துணையுமில்லை. முக்கியமாக அணில் கும்ளேயின் இடம் மிகப்பெரும் காலியாக உள்ளது; கும்ளே இருக்கும் போது சிறப்பாக பந்து வீசிய ஹர்பஜன் இன்றைய நிலையில் அகமதாபாத், நாக்பூரை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில் உள்ளது இந்திய பந்துவீச்சு வரிசையின் மிகப்பெரும் பலவீனம்.பலவீனமான பந்துவீச்சு வரிசையை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து ஆசஸ் கிண்ணத்தை கைப்பற்றிய மிகப்பலமான இங்கிலாந்து துடுப்பாட்ட வரிசையை தகர்ப்பதென்பது இலகுவான விடயமல்ல. ஆனால் போட்டிகளை சமநிலைப் படுத்துமளவிற்கு தகுதியான சிறப்பான துடுப்பாட்ட வரிசையை இந்தியா கொண்டிருந்தது! நான்கு போட்டிகளிலும் 20 இந்திய விக்கட்டுகளை வீழ்த்துவதென்பது இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை இலகுவான விடயமல்ல; ஆனால் அது எப்படி சாத்தியமாயிற்று? இந்தியாவின் மிகப்பெரும் துடுப்பாட்ட குறையான 'பவுன்சர்'களை ஆயுதமாக பயன்படுத்தியே இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் இந்தியாவை சுருட்டினர். முட்டிக்கு கீழே வரும் பந்துகளை உள்ளூரிலே போட்டுத்தள்ளிய சிங்கக்குட்டிகளுக்கு சீறிவரும் பவுன்சரை சமாளிப்பது சிரமம் என்பதை புரிந்துகொண்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் short pitch பந்துகளை போட்டே பாதிக்கும் மேலான இந்திய விக்கட்டுகளை தகர்த்தனர்.

டிராவிட் தவிர வேறெந்த இந்திய துடுப்பாட்ட வீரரும் இயல்பினிலேயே short pitch பந்துகளுக்கு விளையாடுவதற்கு சிரமப்படுவார்கள், இந்த தொடரிலும் அதேதான் நடந்தது. தனி மனிதனாக போராடிய டிராவிட் தவிர்த்து இந்தியாவின் துடுப்பாட்டம் இந்த தொடரில் கை கொடுக்காததே இந்த பாரிய தோல்வியின் முக்கிய காரணம். அதுதவிர off stump & out side the off stump இல் out swinger பந்துகளை அதிகமாக வீசி caught behind இலும் அப்பப்போ in swing பந்துகளை நேர்த்தியாக வீசி lbw முறையிலும் சச்சினை திட்டமிட்டபடி ஆட்டமிழக்க செய்தமை இங்கிலாந்தின் புத்தி சாதுரியமான திட்டமிடல். மிகவும் அற்ப்புதமாக திட்டமிட்டு விளையாடிய இங்கிலாந்திற்கு பதிலளிக்க இந்தியா எந்தவித திட்டமிடலையும் மேற்கொள்ளாமல் எப்படி சிறப்பாக ஆடமுடியும்?தொடர்ந்து சர்வதேச போட்டிகள் மற்றும் IPL போட்டிகளால் வீரர்கள் களைப்படைந்தனர் என்பதெல்லாம் வெறும் ஒப்புக்கு சொல்லும் காரணங்கள். இந்திய வீரர்களை விட அதிக முதல்த்தர போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் ஆடுகின்றனர். உதாரணமாக சொல்வதானால் நேற்றைய போட்டியில் இந்தியாவுடன் ஆடிய கீஷ்வேட்டர், டென்பெர்ஜ் இருவரும் இன்று இடம்பெற்ற 40 ஓவர்கள் கொண்ட முதல்த்தர போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளனர். 40 ஓவர்கள், T/20, நான்குநாள் போட்டிகள் என இங்கிலாந்து, அவுஸ்திரேலியா,தென்னாபிரிக்க வீரர்களும் சர்வேதேச போட்டிகளுக்கு இடையே தொடர்ந்து கிரிக்கட் ஆடி வருகிறார்கள் என்பதை நினைவிற் கொண்டால் எடுத்ததற்கும் IPL இனை சாட்டுக்கு இழுப்பதை தவிர்க்கலாம்.

இந்த தொடரில் இந்தியா மோசமாக ஆடியுள்ளதால் இந்திய அணி வீழ்ச்சி அடைந்துள்ளதாக யாராவது எண்ணினால் அது மிகவும் முட்டாள்த்தனமான எண்ணம். இந்தியா உள்ளூரிலும், ஆசிய கண்டத்திலும் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தும். ஆனால் சிறப்பான பந்து வீச்சாளர்களை கண்டுபிடிக்காவிட்டால் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் டெஸ்ட் போட்டிகளை சமப்படுத்தாவே இந்தியா போராடவேண்டி இருக்கும். அதுகூட சச்சின், டிராவிட், லக்ஸ்மன, சேவாக் இல்லாத காலத்தில் சாத்தியமா என்று சொல்லமுடியாது. கோலி, ரெய்னா, ரோஹித் சர்மா போன்ற சிறந்த ஒருநாள் மற்றும் T/20 வீர்ர்களை கொண்டுள்ள இந்திய அணி; டெஸ்ட் போட்டிகளுக்கு மிகச்சிறந்த இளம் திறமைகளை அடையாளம் காணவேண்டிய நேரமிது!!!

ஒருநாள் போட்டி மற்றும் T/20
சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ், சஹீர், நெஹரா, ஹர்பஜன் என உலகக்கிண்ண அணியின் முக்கிய வீர்ர்கள் 7 பேருடன் ரோஹித் சர்மாவும் உபாதைக்கு உள்ளாகியிருக்காமல் இந்திய அணியில் இருந்திருந்தால் இந்த தொடரின் முடிவு என்னவாக இருந்திருக்கும் என்பது இங்கிலாந்து வீரர்களுக்கும், இங்கிலாந்து ஊடகங்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும். ஆனாலும் இந்த தொடரில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம் இந்தியாவின் களத்தடுப்பு. கோலி, ரெய்னா தவிர்த்து மிகுதி அனைத்து வீரர்களுமே மிகவும் மோசமான களத்தடுப்பையே இத்தொடரில் முழுவதும் மேற்கொண்டனர்; அதிலும் குறிப்பாக முனாப் பட்டேல் மற்றும் பார்த்தீவ் பட்டேல் இருவரும் மிக மோசமான களத்தடுப்பு. இன்றைய ஒருநாள், T/20 போட்டிகளை பொறுத்தவரை பந்துவீச்சு, துடுப்பாட்டம் போல் களத்தடுப்பும் மிகமிக முக்கியமானது; பல போட்டிகளை இன்று களத்தடுப்பே தீர்மானிக்கின்றது.

ஒவ்வொரு ஓட்டமும் களத்தடுப்பால் சேமிப்பது மிகவும் அவசியம், இந்திய பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை களத்தடுப்பு என்பது வெறும் வாய் வார்த்தைதான். முனாப், பிரவீன், இசாந்த், சஹீர், நெஹெரா, அஷ்வின், மிஸ்ரா என ஒட்டுமொத்த இந்திய பந்துவீச்சாளர்களுமே Ground Fielding இல் சூரக்கோட்டை சிங்கக்குட்டிகள். இவர்களால் எந்த இலக்கையும் எதிரணியினரை துரத்தியடிக்க வைக்கமுடியும்; களத்தடுப்பால் மட்டுமல்ல பந்து வீச்சால்கூடத்தான்; இந்த தொடரிலும் அதுதான் நடந்தது. அனைத்து ஒருநாள் போட்டிகளும் இந்தியாவின் கைகளுக்குள் வந்தே பின்னரே இங்கிலாந்து கைகளுக்கு மாறியது. அதற்க்கு முழுக்காரணமும் இந்தியாவின் மோசமான களத்தடுப்பும் விவேகமற்ற பந்துவீச்சும் தான். மழை குறுக்கிட்டது இந்திய அணிக்கு பாதகமான காரணியாக விளங்கினாலும் இந்திய பந்துவீச்சு, களத்தடுப்பை வைத்து இந்தியாவிற்கு சாதகாமாக எதுவும் கூறமுடியாது.மற்றும் இந்தத் தொடரில் வெளிப்பட்ட இன்னுமொரு முக்கிய விடயம் டோனியின் விவேகமற்ற அணித்தலைமை. உலககிண்ணம், T/20 உலகக்கிண்ணம், 2 IPl, சாம்பியன்ஸ் கிண்ணம், ஆசிய கிண்ணம் என அடுக்கடுக்கான சாதனைகளை தனது தலைமையில் கொண்டிருந்தாலும் நான் சொல்வேன் "டோனி நிச்சயம் ஒரு Ideal Captain அல்ல" மிகச்சிறந்த அணியை சரியான முறையில் கொண்டு நடாத்தும் முன்னாள் அவுஸ்திரேலிய தலைமைகள் (ஸ்டீவ் வோ, பாண்டிங்) போலத்தான் என் பார்வையில் டோனியும். களத்தடுப்பு வியூகங்கள், பந்துவீச்சாளருடனான co-ordination போன்ற விடயங்களில் டோனிமீது உடன்பாடில்லை. முக்கியமான நேரங்களில் யாருமே எதிர்பார்க்காத சில முடிவுகளை எடுப்பதுதான் டோனியின் சிறப்பாக (அதிஸ்டம் என்றும் சொல்லலாம்) இருந்தது, ஆனால் இந்த தடவை இங்கிலாந்தில் டோனியின் திடீர் முடிவுகள் இந்தியாவிற்கு கை கொடுக்கவில்லை; இதுகூட இந்த தொடரின் தோல்விக்கு ஒருவகை காரணம்தான்.

இந்தியாவிற்கு இங்கிலாந்து வரும்போது இந்தியா பழிவாங்கும் என பலரும் (இந்திய ரசிகர் அல்லாதோரும்) நம்புகிறார்கள். இந்தியா ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் வைத்து இங்கிலாந்திற்கு தர்ம அடி கொடுக்கும் சந்தர்ப்பம் உண்டு; ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அது சாத்தியமா என்பது என்னை பொறுத்தவரை சந்தேகம்தான்;பொறுத்திருந்து பார்க்கலாம்!!!!!!!

இந்திய ரசிகர்கள்
எனது நண்பன் ஒருவன் ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகன், அந்த நடிகனின் படம் சூப்பர் ஹிட்டானால் அவனை கையில் பிடிக்க முடியாது, அவன் பேச்சை கேட்டால் அம்மிக்கல்லை தூக்கி தலையில் போடத்தான் மனம் வரும். ஆனால் அந்த நடிகனின் படம் பிளாப் ஆனால் எங்களுக்கு முன்னாடி அந்த நடிகனை அவனே கேவலப்படுத்துவான், திட்டுவான்; ஒருசில இந்திய ரசிகர்களின் நிலையும் இதுதான். இந்தியா ஜெயிக்கும்போது தலையில் வைத்து கொண்டாடுவது, அதே இந்தியா சொதப்பும்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு கேவலப்படுத்துவது. இது ஒருவித 'எஸ்கேப்'பாபோபியா :-)இந்த 'எஸ்கேப்'பாபோபியா பல இடங்களில் பல பரிமாணங்களில் சுற்றிக்கொண்டு திரிந்தாலும் இந்திய ரசிகர்களிடையில் சற்று அதிகமாகவே உள்ளது :-)

8 வாசகர் எண்ணங்கள்:

Mohamed Faaique said...

நல்லதொரு அலசல். கடைசியில் சொன்னீங்க பாருங்க.. அது சரியான கதைதான்..

Unknown said...

ம்ம்ம்...!!

Unknown said...

எஸ்கேப்'பாபோபியா உண்மை.

Nirosh said...

ம்ம்ம் அருமையான அலசல்....!

”தளிர் சுரேஷ்” said...

நல்ல அலசல்! ஆடத் தெரியாதவன் கூடம் பத்தலைன்னு சொன்ன கதைதான் இந்தியாவினுடையது!

Ramesh said...

ஜெயித்தாலும் தோற்றாலும் என்ன மாதிரி எப்பவும் சப்போர்ட் பண்ற கூட்டமும் இருக்கு பாஸ்
நல்ல பதிவு!!!!..

பாலா said...

இங்கிலாந்தின் சிறப்பான ஆட்டம் வெளியான தொடர்களுள் இதுவும் ஒன்று. இதனால் கண்டிப்பாக இந்திய அணி வீழ்ந்து விட்டது என்று சொல்ல முடியாது. இதை விட படுதோல்விகளை சந்தித்தவர்கள்.

Ashwin-WIN said...

நல்ல கிரிக்கட் பதிவு...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)