Friday, August 19, 2011

லஞ்சம் கொடுப்பது தவிர்க்க முடியாததா?

எனக்கு இந்தியன் தாத்தாவை ரொம்ப பிடிக்கும், அதேபோல அந்நியனையும் ரொம்ப பிடிக்கும், ஏன்னா அந்த கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் சந்தித்துவரும் பிரச்ச்சனைகளுக்கு நிழலிலே இறுதித் தீர்வை தந்தவை. நாம் கையாலாகாதவர்களாக வேடிக்கை பார்த்த, அனுபவித்த மோசமான சம்பவங்களுக்கு மரணம் என்னும் மிகவும் அதிகபட்ச தீர்வை குறிப்பிட்ட சினிமா கதாபாத்திரங்கள் வழங்கியபோதும் அதை நாம் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டோமென்றால் அதற்க்கு காரணம் அந்தளவிற்கு எமக்கிருந்த ஆற்றாமையும் கோபமும்தான். மேற்க்கத்தைய நாடுகளில் கடமையை செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்குவார்கள்;ஆனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில்த்தான் கடமையை செய்ய லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது பலரும் சொல்லும் பொதுவான, வேதனையான குற்றச்சாட்டு.

லஞ்சம் வாங்குவது எப்படி மிகவும் மோசமான செயலோ, அதேபோல லஞ்சம் கொடுப்பதும் மிகவும் தவறான செயல். "நீ கொடுத்ததால்தான் நான் வாங்கினேன்" என்கின்ற லஞ்சம் வாங்கும் விற்பன்னரின் அடாத்து கதைகளுக்கு லஞ்சம் கொடுப்பவரால் 100 சதவிகிதம் இதயசுத்தியுடன் முன்னின்று பதில் சொல்ல முடியாது. இந்தப் பதிவில் லஞ்சம் வாங்குபவர்களை பற்றி நான் எதுவுமே எழுதப் போவதில்லை; ஏனெனின் இதுவரை லஞ்சம் வாங்கிய அனுபவம் எனக்கில்லை, அதற்க்கு காரணம் லஞ்சம் வாங்குமளவிற்கு எந்த உத்தியோகத்திலும் நான் இதுவரை பணியாற்றி இருக்கவில்லை; ஒருவேளை அவ்வாறான இலாக்காக்களில் பணியாற்றியிருந்தால் இந்தப்பதிவை எழுதும் ஜோக்கியதை எனக்கிருந்திருக்குமோ தெரியாது? ஆகவே அனுபவ ரீதியாக எனக்குத் தெரியாத லஞ்சம் வாங்குபவர்களை பற்றி எழுதாமல்; நான் அனுபவரீதியாக உணர்ந்த, தெரிந்த, புரிந்த லஞ்சம் கொடுப்பவர்களை பற்றி எழுதலாமென்று நினைக்கின்றேன்.

லஞ்சம் கொடுப்பது தவறு என்று தெரிந்தும் இன்றுவரை லஞ்சமே கொடுத்ததில்லை என்று இதயசுத்தியுடன் சொல்பவர்கள் எத்தனைபேர்? பேச்சிற்க்கும், சினிமாவிற்கும், சட்டத்திற்கும், நியாயத்திற்கும் தப்பாக தோன்றும் லஞ்சம் கொடுக்கும் விடயம் அன்றாட நடைமுறை வாழ்வில் எத்தனை சதவிகிதம் சாத்தியமாக இருக்கும்? அடித்து சொல்வேன் என்னையும் சேர்த்து 99 சதவீதமானவர்கள் ஏதாவதொரு சந்தர்ப்பத்திலேனும் லஞ்சம் கொடுத்தவர்கள்தான். லஞ்சம் கொடுப்பது தவறென்பது எத்தனை சதவிகிதம் உண்மையோ; அதேபோல லஞ்சம் கொடுக்காமல் இன்று வாழ்க்கையை ஓட்டுவது சிரமமான விடயம் என்பதும் அத்தனை சதவீதம் உண்மை. இல்லை என்று வீரவசனம் பேசுபவர்களுக்கு என்னால் எந்த பதிலும் சொல்லமுடியாது; காரணம் வீரவசனம் வேறு, வாழ்க்கை வேறு.50+ கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஒரு தேவைக்கு அரசபேரூந்தில் நகரத்துக்கு வரும் நபரொருவர் ஒரு அலுவலகத்தில் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வருகிறார்; அங்கிருக்கும் அலுவலகப் பணியாளர் "ஐயா/அம்மா நீங்க சந்திக்க வேண்டிய அலுவலகர் இன்றைக்கு இந்த வேலையை பார்க்கும் நாள் அல்ல, நீங்க(ள்) நாளைக்கு வாங்க" என்கிறார். உடனே குறிப்பிட்ட நபர் "தம்பி நான் தூரத்தில இருந்து வாறன் இன்றைக்கே பல வேலைகளை வீடுவிட்டுத்தான் வந்தேன், போக்குவரத்து செலவும் அதிகம், நாளைக்கு வாறதென்றால் அலைக்கழிவு, ஏதும் செய்ய முடியாதா? ப்ளீஸ்" என்கிறார்; அதற்க்கு அந்த அலுவலகப் பணியாளர் "நான் வேண்டுமானால் பேசிப் பார்க்கிறேன், என்னை போகும்போது கவனிக்கணும் ஓகேவா?" என்கிறார்........

இதற்க்கு உங்களது பதில் என்னவாக இருக்கும் 1) சரி தம்பி அலுவலை முடித்து கொடுங்கள், உங்களை கவனிக்கிறேன் என்பதா? இல்லை 2) உன்னை எதுக்கு கவனிக்கணும் நான் போய்ட்டு நாளை வருகிறேன் என்பதா? என் பதில் நிச்சயமாக முதலாவதுதான், இதை நான் பெருமையாகவோ, கெட்டித்தனமாகவோ சொல்லவில்லை; அந்த இடத்தில் லஞ்சம் கொடுப்பது தவறென்கின்ற எண்ணத்தைவிட எமது வேலை அலைச்சல் இல்லாமல் முடியவேண்டும் என்கின்ற சராசரி மனித எண்ணம்தான் எம்மிடமிருக்கும். இதில் எதிர்க்கருத்துடையவர்களும் இருக்ககூடும்; அப்படியான எதிர்க்கருத்துடைய, அலைச்சல் ஏற்ப்பட்டாலும் பரவாயில்லை லஞ்சம் கொடுக்க மாட்டேன் என லஞ்சத்தை எதிர்க்கும் உண்மையான நேர்மையான மனிதர்களுக்கு சமூகம் கொடுக்கும் பெயர் முட்டாள், கஞ்சன், வாழத்தெரியாதவன்.மேலே குறிப்பிட்டது ஒரு சாதாரண சம்பவம், இதேபோல லஞ்சம் கொடுக்கும் இடங்கள் பற்பல. லஞ்சம் கொடுப்பதே தவறுதான் என்றாலும் ஜதார்த்த வாழ்வில் சில இடங்களில் லஞ்சம் தவிர்க்கமுடியாததாக இருக்கும். உதாரணமாக இன்னுமொரு சந்தர்ப்பத்தை கூறுவதானால்; ஒரு நிறுத்தற்தடை (No Parking) உள்ள இடத்தில் தவறுதலாகவோ, போலிசை அவ்விடத்தில் காணவில்லை என்பதாலோ வண்டியை நிறுத்தி விடுகின்றோம். திடீரென அங்கு வரும் போலிஸ் "No Parking கில் வண்டியை நிறுத்தியதற்கு குற்றம் எழுதினால் கோட்டுக்கு போய் 500 ரூபாய் தண்டப்பணம் கட்ட வேண்டும், தண்டப்பணம் காட்டுகிறாயா? இல்லை என்னை கவனிக்கிறாயா? " என கேட்குமிடத்தில் நீதிமன்றம் போய் அலைக்கழிந்து 500 ருபாய் தண்டப்பணம் கட்டுவதற்கு பதிலாக இவனுக்கு 200 ரூபாயை கொடுத்து விடலாமென்றுதான் தோன்றும்.

நீதிமன்று சென்று கட்டும் தண்டப்பணம் நாட்டுக்கானது, அதாவது எமக்கானது; ஆனால் போலீசிற்கு கொடுக்கும் பணம் போலிஸ் என்னும் தனி மனிதருக்கானது. இது எமது புத்திக்கு தெரிந்தாலும் 4 மணித்தியாலம் + 300 ரூபாயை நாட்டுக்காக இழப்பதைவிட, பொலிசிற்கு 200 ரூபாய் கொடுப்பதால் 4 மணித்தியாலம் + 300 ரூபாய் எமக்கு சேமிக்கப்படுகின்றது என்கின்ற யாதார்த்தம்தான் எம்மனதில் அக்கணம் தோன்றும்; அதனால்த்தான் அவ்விடத்தில் 200 ரூபாயை லஞ்சமாக கொடுத்துவிட்டு தப்பித்து விடுகின்றோம். இப்படியான சந்தர்ப்பங்களில் லஞ்சம் கொடுப்பது தவறு என்கின்ற உபதேசம் மண்டையில் ஏறவே ஏறாது!!!!! காரணம் உபதேசம் வேறு, வாழ்க்கை வேறு.

ஒரு உணவகத்தில் சாப்பாடு பரிமாறும் பையனுக்கு கொடுக்கும் டிப்ஸ் அவனது பரிமாறலுக்கான அன்பளிப்பு என்றே பொருள்பட்டாலும்; அவனுக்கு டிப்ஸ் கொடுத்ததால் அடுத்த தடவை அவன் எம்மை வந்தவுடன் கவனிப்பான் என்கின்ற எண்ணம் எம் மனதில் இல்லாமலா இருக்கும்? ஒருவகையில் அதுகூட லஞ்சம்தான்! உணவகம், மதுபானசாலை, திரையரங்கு என ஒவ்வொரு இடத்திலும் லஞ்சம் பல பரிமாணங்களில் சுற்றிக்கொண்டிருக்கும்!அடிப்படையில் லஞ்சம் கொடுப்பதற்கான முக்கிய காரணிகளை நோக்கினால்; நேரமின்மை, அவசரத்தேவை, அலைச்சல், பணம் சேமிப்பு, பயம், தப்பித்துக்கொள்ளுதல் (தண்டனையில் இருந்து), சோம்பல், பணத்திமிர் என்பன முக்கியமானவை.இப்படியாக அவரவரின் தேவைக்கேற்ப லஞ்சம் கொடுக்கப்படுகிறது. எம் அன்றாட வாழ்வில் எம்மோடு பின்னிப் பிணைந்திருக்கும் லஞ்சம் கொடுத்தல் என்னும் நிகழ்வு இல்லாமல், அதாவது லஞ்சம் கொடுக்காமல் வாழ்க்கையை ஓட்டுவதென்பது சாதாரண விடயமல்ல. எம்மால் லஞ்சம் கொடுப்பதை முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும் இயலுமானவரை லஞ்சம் கொடுப்பதை குறைக்க முயற்ச்சிக்கலாம்!!!

லஞ்சம் கொடுப்பது தவிர்க்க முடியாததா? என்கின்ற கேள்விக்கு எனது பதில் "லஞ்சம் கொடுப்பது தப்புத்தான், ஆனால் லஞ்சம் கொடுக்காமல் வாழ்வது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது, எனவே லஞ்சம் கொடுப்பது தவிர்க்க முடியாதது" என்பதுதான். இந்தியன் அல்லது அந்நியன் வந்து கேட்டாலும் என் பதில் இதுதான் :-)

12 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

/////காரணம் உபதேசம் வேறு, வாழ்க்கை வேறு. ////

அழுத்தமான இடம் தான் ஜீவ்.... கொடுப்பது தப்புத் தான்.. ஆனால் சில சந்தர்ப்பங்கள் தோற்றுவிக்கிறதே.. சம்பவத்தை தட்டச்சிட நேரம் காணாதப்பா..

Mohamed Faaique said...

//லஞ்சம் கொடுப்பது தப்புத்தான், ஆனால் லஞ்சம் கொடுக்காமல் வாழ்வது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது, எனவே லஞ்சம் கொடுப்பது தவிர்க்க முடியாதது////

உண்மைதான்.. இங்கு கடமையை செய்யக் கூட லஞ்சம் குடுக்க வேண்டி இருக்கு..

கிரி said...

இது தான் எதார்த்தம். நானும் இது பற்றி எழுத நினைத்துள்ளேன் ஆனால் வேறு மாதிரி.

நிரூபன் said...

வணக்கம் சகோதரா,
லஞ்சம் கொடுப்பது பற்றிய காத்திரமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.
நடுத்தரப் பொருளாதார நிலமையுடைய மக்களிடமிருந்து லஞ்சம் கொடுக்கும் பழக்கத்தை நாம் இல்லாதொழித்தாலும்,
பணக்காரப் புள்ளிகள், அரசியல்வாதிகளிடமிருந்து லஞ்சத்தினை இல்லாதொழிப்பது கடினமாகும்,

Anonymous said...

இரண்டு தடவை இலஞ்சம் கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு..நீங்கள் எழுதிய இறுதி வரிகள் மறுக்க முடியாதது தான்.

பாலா said...

சரிதான். முடிந்தவரை லஞ்சம் கொடுப்பதை தவிர்த்து விடவேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் கொடுக்கத்தான் வேண்டும். ஒரு சிலருக்கு பயம் கூட லஞ்சம் கொடுக்க காரணியாக இருக்கிறது. அதாவது நான் பணம் கொடுக்க மறுத்தால் என்னை வேண்டுமென்றே இழுத்தடிப்பார்களோ என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.

எதார்த்தமான பதிவு.

Unknown said...

ஹெல்மட் போடாமல் மாமாகிட்டே மாட்டிக்கிட்டீன்களோ!!!

Anonymous said...

யோவ்...இந்தியனும் அந்நியனும் கேட்க மாட்டார்கள்....தலையை எடுத்து விடுவார்களே...
யதார்த்தமான பதிவு...

Jayadev Das said...

நல்ல பதிவு. லஞ்ச லாவண்யம் ஒழிய வேண்டுமென்று மனதளவில் நினைத்தாலும் நீங்கள் கட்டுரையில் சொல்லியுள்ள அத்தனை வழியிலும் நான் லஞ்சம் கொடுத்திருக்கிறேன். லஞ்சம் பெருகுவதற்கு கொடுப்பவர், வாங்குபவர் என இருவருமே காரணம் தான் என்றாலும், இந்த இருவரில் யாராவது ஒரு பிரிவினர் நேர்மையாக இருந்தாலும் லஞ்சம் ஒழிந்து விடும். ஒன்று மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக நின்று லஞ்சம் கொடுக்க மாட்டோம் என உறுதியாக நிற்கலாம், அல்லது மனு நீதி சோழன் மாதிரி ஒரு ஆட்சியாளர் வந்து மக்களை வழி நடத்தலாம். இது இரண்டுமே இந்தியாவில் நடக்குமா என்று சந்தேகமாக உள்ளது!!

Unknown said...

பதிவு புதுசா போடாட்டிக்கும் வந்து கமென்ட் அடிப்போர் சங்கம்...
பதிவு போடுங்கப்பா...இனி ஆள் வைச்சு தான் மிரட்டணும் போல!

SURYAJEEVA said...

//அதேபோல லஞ்சம் கொடுக்காமல் இன்று வாழ்க்கையை ஓட்டுவது சிரமமான விடயம் என்பதும் அத்தனை சதவீதம் உண்மை. இல்லை என்று வீரவசனம் பேசுபவர்களுக்கு என்னால் எந்த பதிலும் சொல்லமுடியாது; காரணம் வீரவசனம் வேறு, வாழ்க்கை வேறு. //

ஏன்பா, உங்கள் சைடு நியாயத்தை மட்டும் தான் பார்ப்பீர்களா?
உங்களால லஞ்சம் குடுக்காம வாழ முடியலேன்னா, முடியவே முடியாதுன்னு வாதாடவும் செய்வீங்களா? நல்ல முயற்சி.. தொடருங்கள்
jeevansure@gmail.com

எப்பூடி.. said...

@ suryajeeva

//ஏன்பா, உங்கள் சைடு நியாயத்தை மட்டும் தான் பார்ப்பீர்களா?
உங்களால லஞ்சம் குடுக்காம வாழ முடியலேன்னா, முடியவே முடியாதுன்னு வாதாடவும் செய்வீங்களா? நல்ல முயற்சி.. தொடருங்கள் //


இல்லை என்று வீரவசனம் பேசுபவர்களுக்கு என்னால் எந்த பதிலும் சொல்லமுடியாது; காரணம் வீரவசனம் வேறு, வாழ்க்கை வேறு

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)