இயக்குனர் விஜய் அவர்களுக்கு............
முதலில் தெய்வத்திருமகள் திரைப்படத்தை தித்திக்க தித்திக்க கொடுத்ததற்கு தங்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் இயக்கிய 'கிரீடம்' முதல் தெய்வத்திருமகள் வரையான நான்கு திரைப்படங்களுமே எனக்கு மிகவும் பிடித்தவை. கிரீடம் மலையாளத் திரைப்படத்தின் ரீமேக்காகவும், பொய்சொல்லப் போறோம் ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்காகவும், மதராசப்பட்டினம் Titanic திரைப்படத்தின் தழுவலாகவும், தற்போது தெய்வத்திருமகள் i am sam திரைப்படத்தின் தழுவலாகவும் கொடுத்துள்ளீர்கள். இந்தக் காரணங்களால் தங்களை சொந்த சரக்கில்லாதவன் என்றும், மூலத் திரைப்படங்களுக்கு நன்றி போடாததால் திருடன் என்றும் எம்மில் சிலர் முத்திரை குத்துகிறார்கள். இவர்களுக்கு நிச்சயமாக உங்களால் பதில்கூற முடியாது, ஏனெனின் இவர்கள் பக்கம் நியாயம் உள்ளது.
ஆனால் பிற வெளிநாட்டு திரைப்படங்களை தழுவி திரைப்படம் இயக்கம் போது குறிப்பிட்ட திரைப்படத்தின் பெயரையோ அல்லது குறிப்பிட்ட திரைப்படத்தின் இயக்குனரின் பெயரையோ டைட்டிலில் 'நன்றி' எனப் போடுவதால் படத்தின் உரிமை சம்பந்தமாக சில பல பிரச்சனைகள் ஏற்ப்படும் என்பதால் அதனை தாங்களும் சக 'தழுவல்' இயக்குனர்களும் செய்யாமல் இருந்திருக்கலாம். வெளிநாட்டு திரைப்படங்களின் உரிமையை வாங்கி தமிழில் ரீமேக் செய்வது தமிழ் சினிமாவில் வணிகரீதியாக சாத்தியமில்இல்லை என்பது 100 சதவீதம் உண்மை. அப்படியானால் இதற்கு ஒரே வழிதான்; அதாவது வெளிநாட்டு திரைப்படங்களை தழுவி திரைப்படங்களை தமிழில் இனிவரும்காலங்களில் யாருமே கொடுக்கக் கூடாது என்பதுதான். ஆனால் இதில் எனக்கு சம்மதமில்லை, எனக்குமட்டுமல்ல பலருக்கும் இதில் சம்மதமில்லை.
தமிழ் சினிமா ரசிகர்களில் 95 சதவீதமானவர்கள் (என்னையும் சேர்த்து) உலக சினிமாக்களை பார்ப்பவர்கள் அல்ல; நாங்கள் பார்க்கும் உலக சினிமா விஜய், சன், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தமிழ் டப் செய்யப்பட்ட உலக சினிமாக்கள்தான். இலட்சத்தில் ஒரு வெளிநாட்டுத் திரைப்படம்தான் இவ்வாறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுபவை!! இந்த நிலையில் உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களை நாங்கள் எப்படி பார்ப்பது? எங்களால் உலக சினிமாவை நேரடியாக பார்த்து புரிந்துகொள்ள இயலாது, அந்தளவிற்கு நாங்கள் இன்னமும் வளர்ச்சி அடையவில்லை; புத்திசாலிகளின் வார்த்தையில் சொல்வதானால் நாங்கள் முட்டாள்கள். ஆனால் நல்ல சினிமாவை பார்க்க வேண்டும் என்கின்ற தவிப்பு எங்களிடம் உள்ளது, அதனால்த்தான் பாரதிராராஜா முதல் சசிகுமார் வரை புதுமைகளை நாங்கள் வரவேற்றோம்.
எங்களின் திரைப்பட பசிக்கு பாலா, அமீர், ராதாமோகன், ஜெகநாதன், சசிக்குமார் என சில இயக்குனர்கள் நேரடியாக தீனி போடுகிறார்கள்; செல்வராகவன், கவுதம் மேனன் மற்றும் தாங்கள் வெளிநாட்டு திரைப்படங்களை தழுவி தீனி போடுகிறீர்கள். உங்களைத்தவிர ரவிக்குமார்,லிங்குசாமி,ஹரி போன்றவர்கள் அரைத்த மசாலாவையே வேறு வேறு பாத்திரங்களில் நிரப்பி தீனி போடுகிறார்கள். ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒவ்வொருவகை பசி, தனக்கு பிடித்ததை அவன் எடுத்துக் கொள்கிறான். அதனால்த்தான் மேல்க்குறிப்பிட்ட அனைவரும் இன்னமும் இண்டஸ்ரியில் இருக்கின்றீர்கள்.
உங்களை இன்ஸ்பிரேஷனாக இளம் சமுதாயம் எடுத்துக் கொள்ளாதா? என்று சிலர் கேட்கலாம். மணிரத்தினத்தின் இன்ஸ்பிரேஷன்தான் தாங்களும் சக 'தழுவல்' இயக்குனர்களும்; பாரதிராஜாவின் இன்ஸ்பிரேஷன்தான் பாலாவும் அமீரும் சசிகுமாரும், எஸ்.பி.முத்துராமனின் இன்ஸ்பிரேஷன்தான் ரவிக்குமாரும், ஹரியும். ஆகையால் உங்களை சிலர் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்வதை போலவே பாலாவையும், அமீரையும் சிலர் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்வார்கள் அதேபோலத்தான் சிலர் ரவிக்குமார், ஹரியையும் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்வார்கள். எங்களுக்கு இம்மூன்று வகை இயக்குனர்களும் தேவை.
உங்களின் தேவை எப்போது எங்களுக்கு தேவையற்றுப் போகுமென்றால்; என்று எம்மவர்கள் 95 சதவீதம் பேரும் உலக சினிமாவை நேரடியாக ரசிக்கும் நிலைக்கு வருகிறோமோ அன்றுதான். அதுவரை நீங்களும், உலக சினிமாவை தமிழுக்கு தமிழ் ரசிகர்கள் புரியும்படி அழகாக வழங்கும் ஏனைய இயக்குனர்களும் நிச்சயம் தேவை. உலகின் சிறந்த சினிமாக்களில் எம்மக்களுக்கு புரியும்படி கொடுக்கக் கூடிய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை எமக்கு ஏற்றால்ப்போல மாற்றியமைத்து, அவற்றிற்கு நேர்த்தியான திரைக்கதை கொடுத்து, சிறந்த டெக்னீசியன்கள் உதவியுடன் சிறந்த குவாலிட்டியில் கொடுப்பதென்பது சாதாரண விடயமல்ல.
மொழி மாற்றம் செய்யும் போதும்சரி, தழுவலாக இருக்கும் போதும்சரி ஒரிஜினல் சினிமாவின் காட்சிகளை , நடிகர்களின் திறன் வெளிப்பாட்டை எம் ரசனைக்கு ஏற்றால்போல மாற்றும்போது கொஞ்சம் தடக்கினாலே அது வேறுமாதிரி ஆகிவிடும். நூலளவு பிசகில்லாமல் ஒரு வெளிநாட்டு படத்தினை தழுவி எமக்கு எம் சினிமாவின் சாயலில் புதிதாக தரும் உங்களை என்றும் நாங்கள் வரவேற்ப்போம். இன்னுமின்னும் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களை தேடி எம் ரசனைக்கு ஏற்றால்ப்போல மாற்றித் தருவதில் தங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம்.
இன்று i am sam என்று கூப்பாடு போடுபவர்களில் பலருக்கு தெய்வத்திருமகள் வந்த பின்னர்தான் i am sam என்று ஒரு திரைப்படம் வந்ததே தெரியும். கொலைப்பசியோடு இருப்பவனுக்கு சிக்கன் புரியாணியை கொடுத்தால் வாங்கி ஒரு பிடி பிடிப்பானா? இல்லை கேள்வி மேல கேள்வி கேப்பானா? சற்று பழைய புரியாணி ஆயினும் திருட்டு புரியாணிதான்; மிகுந்த வசதியான இடத்தில் இருந்து திருடப்பட்டதால் திருட்டு கொடுத்தவனுக்கு இதனால் நஷ்டமும் அல்ல. திருடியவன் பழைய புரியாணியை புதுப்பித்து எங்களுக்கு பிடித்த மாதிரி மனத்தை, நிறத்தை, சுவையை மாற்றி கொடுப்பதில் என்னை பொறுத்தவரை எந்த தவறுமில்லை, அதைத்தான் தாங்களும் செய்திருக்கிறீர்கள்.
இருப்பவனிடம் இருந்து புடுங்கி இல்லாதவனுக்கு கொடுக்கிறீர்கள், எவனிடம் இருந்து எடுத்தேன் என்று சொன்னால் பிரச்சினை வரும் என்பதால் சொல்லவில்லை, அவளவுதான். இதில் தங்கள் மீது மீது வருத்தப்பட ஒன்றுமில்லை. சில அதிமேதாவி ஒலக சினிமா பார்க்கும் மேதாவிகள் தங்களை குறை சொல்வதை தயவு செய்து காதில் வாங்கிக்கொள்ள வேண்டாம், குறை சொல்வது அவர்களது பொழுதுபோக்கு மற்றும் மேதாவித்தனம்.
எங்களுக்கு நல்ல சினிமா பார்க்கவேண்டும், அது ஒரிஜினலோ திருட்டோ என்பது எமக்கு முக்கியமல்ல; இதை திருட்டுக்கு ஆதரவென்றோ, திருட்டை ஊக்கிவிப்பதென்றோ சொல்பவர்கள் தாரளமாக சொல்லலாம்; எமக்கு அதைப்பற்றி கவலை இல்லை. தங்களது i am sam தழுவல்தான்(திருட்டு) எங்களுக்கு மறக்க முடியாத தெய்வத்திருமகளை கொடுத்தது. இன்னுமொரு திருட்டுத் திரைப்படத்தில் வரும் வாசகம் "நாலு பேருக்கு நல்லது நடக்குமிண்ணா எதுவும் தப்பில்ல"; இத்தால் தங்களுக்கு தெரிவிப்பது என்னவெனின் "நாங்கள் தங்களுடைய அடுத்த திரைப்படத்திற்கு காத்திருக்கின்றோம்" என்பதுதான், அது ஒரு வெளிநாட்டுப்பட தழுவலாக இருந்தாலும் கூட!!!!
இப்படிக்கு ஒலக சினிமான்னா கிலோ என்ன விலை என கேட்கும்,
தமிழ்சினிமா ரசிகன்.
எக்ஸ்ட்ரா மேட்டர்
மனநலம் குன்றிய விக்ரமிற்கு எப்படி குழந்தை பிறந்தது? என்று நிறையபேர் பதிவுலகில் கேட்ட கேள்விகளுக்கு Facebook இல் நானளித்த பதில்;
மன நலம் குன்றிய என்கின்ற சொற்பதமே தவறு, சிந்தனை வளர்ச்சி குன்றிய என்பதே சரியான பதம்; அத்துடன் சிந்தனை வளர்ச்சி குன்றிய ஒருவரால் குழந்தை பெற்றுக்க முடியாதின்னு எதை வச்சு சொல்றாங்க? இயக்குனர் "இருவரில் ஒருவருக்கு விஷயம் தெரிந்தால் போதாதான்னு" இரண்டு மூன்று இடங்களில் வசனத்தை திணித்ததையே புரிந்துகொள்ள இயலாத இவர்களை சொல்லி என்னவாகப்போகிறது!!!
30 வாசகர் எண்ணங்கள்:
நல்ல விமர்சனம் ... படம் பார்க்க துண்டுகிறது . வாழ்த்துக்கள்
நச்சின்னு சொல்லி இருக்கீங்க மாப்ள நன்றி!
இருவரில் ஒருவருக்கு விஷயம் தெரிந்தால் போதாதான்னு" இரண்டு மூன்று இடங்களில் வசனத்தை திணித்ததையே புரிந்துகொள்ள இயலாத இவர்களை சொல்லி என்னவாகப்போகிறது!!! என் நண்பர்களுக்கு நானும் இதையே கூறினேன்
என்னுடைய மன நிலையை பிரதிபலித்த பதிவு. மிக சிறப்பாக பதிவு செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். கொஞ்ச பேர், புரட்சி செய்து, I am sam producer க்கு கடிதம் எல்லாம் எழுதி இருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது..
நீங்கள் சொல்வது ஒரு நல்ல சினிமா ரசிகனின் ஏக்கம். கௌதம் மேனன் மணிரத்னம் போன்ற பலரும் தழுவலோ கொப்பியோ செய்துவிட்டு நல்ல இயக்குனர் என்ற பெயர் எடுத்து விட்ட நிலையில் உங்கள் ஆதாங்கம் சரிதான்.
என்றாலும் சொந்தமாக யோசித்து படைப்புக்களை தரும் இன்னோர் கலைஞனுக்கு இவர்கள் செய்வது பொறுத்துக்கொள்ள முடியாததுதான்.
விஜய் செய்தது சரியென்று கூற நான் வரவில்லை. ஆனால் அவரை வெறுக்குமளவிற்கு இன்னும் என்மனமும் உங்கள் மனமும் பக்குவப்படவில்லை என்றே நினைக்கிறேன்!
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.
நம்மில் பல நபர்களுக்கு உலக சினிமா அறிவு மிக மிக குறைவுதான். அதனால் நம் ரச்சனைக்கு ஏற்ப தழுவல்களை தருவதில் எந்தவித தவறும் இல்லை
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.
நம்மில் பல நபர்களுக்கு உலக சினிமா அறிவு மிக மிக குறைவுதான். அதனால் நம் ரச்சனைக்கு ஏற்ப தழுவல்களை தருவதில் எந்தவித தவறும் இல்லை
அட்டகாசம்
உண்மை நண்பரே......
எத்தனையோ நல்ல விஷயங்களை நமது கவிஞர்கள்
பல இலக்கியங்களில் இருந்து எடுத்து பாமரனும் புரிந்து
கொள்ளும்படியாக எழிய திரைபாடல்கலாக கொடுத்து
சென்றுள்ளார்கள். அதுமாதிரிதான் இதுவும். ஒரு நல்ல
விஷயமானது பலரை சென்றடைய அதை வேறு மொழியில் எடுத்தாழ்வது தவறில்லை என்பதே எனது கருத்து. ஒரு ஊர் வாழ்வதற்கு ஒரு குடும்பம்
அழிந்தால் தவறில்லை என்பதை போல.........
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படமொன்று வந்துள்ளது. அதை பாராட்டாமல் நக்கீரன் மகனைபோல குற்றம் கண்டுபிடித்து மேதாவி தனத்தை காட்டுபவர்களை என்னவென்று சொல்வது.
இந்த பேர்வழிகள் விதண்டாவாதம் பேசாமல் இந்த
படத்தை ஒரு முறை பாருங்கள். நிச்சயம் உங்கள் எண்ணத்தை மாற்றிகொள்வீர்கள்.
ONCE AGAIN HATS OFF TO...........
VIKRAM,VIJAY,BABY SAARA,GV Prakash,Neerav Shah and Team Members.
;-)
வணக்கம் நண்பரே!! உங்கள் தலைவர் உடல் நலம் பெற்று மேலும் பல படங்கள் நடித்து ரசிகர்களாகிய உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து எனது பின்னூட்டத்தை [நீண்ட இடைவெளிக்குப் பிறகு!!] துவக்குகிறேன். \\எங்களால் உலக சினிமாவை நேரடியாக பார்த்து புரிந்து கொள்ள இயலாது\\ சேம் பிளட், நானும் கூட கஜினியின் ஒரிஜினல் படமான Memento என்ற படம், ரொம்ப நல்லாயிருக்குன்னு பதிவர் செங்கோவி சொன்னார்னு டவுன்லோடு பண்ணிப் பார்த்தேன், அவனுங்க பேசறதும் பாதிக்கு மேல புரியல, காட்சியமைப்பும் என்னன்னே விளங்கலே, ஒரு எழவும் புரியல. பாதியிலேயே மூடிட்டேன். கஜினி படம் நமக்கு புரியற மாதிரி எடுக்கப் பட்டுள்ளது, இல்லாவிட்டால் Memento மாதிரி படங்களை அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இருப்பினும்...... [தொடரும்!! ....]
\\இன்று i am sam என்று கூப்பாடு போடுபவர்களில் பலருக்கு தெய்வத்திருமகள் வந்த பின்னர்தான் i am sam என்று ஒரு திரைப்படம் வந்ததே தெரியும்.\\ நான்கைந்து பதிவர்கள் படம் வந்த அடுத்த நாளே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளனர். பத்து வருடங்களுக்கு வந்த படம் அது, நீங்கள் சொன்ன மாதிரி உலகப் படங்கள் நூற்றுக் கணக்கில் [அல்லது ஆயிரக் கணக்கில்!] அதுவும் பல வருடங்களுக்கு முந்தையது, டக் என்று சொல்வதென்றால் முன்பே பார்த்த படமாகயிருந்தால் மட்டுமே முடியும்.
\\இருப்பவனிடம் இருந்து புடுங்கி இல்லாதவனுக்கு கொடுக்கிறீர்கள், எவனிடம் இருந்து எடுத்தேன் என்று சொன்னால் பிரச்சினை வரும் என்பதால் சொல்லவில்லை, அவளவுதான். \\ இங்கு தான் பிரச்சினையே! நீங்கள் இருப்பவனிடமிருந்து இல்லாதவனுக்குக் கொடுங்கள், எங்கேயிருந்து எடுத்தேன் என்றும் சொல்ல வேண்டாம், ஆனால்......... நான் எவ்வளவு கோடை வள்ளல் தெரியுமா என்று பாராட்டு விழா எடுக்காதீர்கள், ஐம்பது பேரை அழைத்து வைத்து அடேங்கப்பா விஜய் எவ்வளவு பெரிய கதாசிரியர், எப்பேர்பட்ட கதையைச் செதுக்கியிருக்கிறார் என்று புகழச் சொல்லி கேட்டுக் கொண்டு மெய் சிலிர்த்துப் போக வேண்டாமே!! [நந்தலாலா படம் வெளிவந்தபோது Star Vijay தொலைக் காட்சியில் திரைப் படத் துறையினரை அழைத்து வைத்து நீயா நானா நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் மிஷ்கினை ஆளாளுக்கு புகழ்ந்து தள்ளினார்கள். இப்படியெல்லாம் புகழும் போது கொஞ்சமாவது உடம்பு நெளிய வேண்டாமா, சுத்தமாக கூச்சமே இல்லை.] இதோடு நில்லாமல், இதே படத்தை பல சர்தேச விழாக்களுக்கும் அனுப்புகிறார்கள். அது மாதிரி செய்வது நியாயமல்ல எனபது என் கருத்து.[மணி ரத்னத்தின் நாயகன் படத்தை அவ்வாறு அனுப்பினார்கள், அங்கே அதைப் பார்த்துவிட்டு இவற்றையெல்லாம் நாங்கள் முன்னரே The God Father படத்தில் பார்த்துவிட்டோமே அதையே ஏன் திரும்பவும் எடுத்து கொண்டு வந்துள்ளீர்கள் என்று அவமானப் படுத்தி திருப்பியனுப்பினார்கள். அதையெல்லாம் துடைத்து போட்டு விட்டு அந்த மணி இந்தியாவின் தலை சிறந்த டைரக்டர் என்ற பொய்யான புகழுரைகளை எல்லோரையும் பாடச் சொல்லி கேட்டுக் கொண்டு திரிகிறார். Shame...shame...]
\\மனநலம் குன்றிய விக்ரமிற்கு எப்படி குழந்தை பிறந்தது? \\ மருத்துவ ரீதியாக இது சாத்தியமா? இது குறித்து மருத்துவ உலகம் என்ன சொல்கிறது என்று யாராவது விஷயம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.
நீண்டநாட்களின் பின்னர் வருகைக்கு நன்றி :-)
//எவ்வளவு கோடை வள்ளல் தெரியுமா என்று பாராட்டு விழா எடுக்காதீர்கள், ஐம்பது பேரை அழைத்து வைத்து அடேங்கப்பா விஜய் எவ்வளவு பெரிய கதாசிரியர், எப்பேர்பட்ட கதையைச் செதுக்கியிருக்கிறார் என்று புகழச் சொல்லி கேட்டுக் கொண்டு மெய் சிலிர்த்துப் போக வேண்டாமே!! //
இந்தக் கருத்தை 100 சதவிகிதம் ஆமோதிக்கிறேன். இந்த டிவி பேட்டிகளில் சொந்தப் படம் மாதிரியும், அதற்க்கு மண்டையை போட்டு உடைத்த மாதிரியும், கதையை சொந்தக்கதை போலவும் நம்ம தழுவல் இயக்குனர்கள் பந்தா பண்ணினா காணிற இடத்தில கண்டதாலையும் தூக்கியடிக்க எனது ஆதரவு உண்டு :-)
பாஸ்... தலைப்பை மாத்துங்க.
தெய்வத்திருமகளை விஜய் திருடவில்லை, ஐ யாம் சாமைத்தான் திருடினார்!!
உங்கள் காத்திருப்பு அனேகமாக வீண் போகாது. விஜய் ஒரு ஆங்கில படத்தை திருடி அடுத்த திரைப்படமும் தருவார்.
சரிதான். நம்ம இயக்குனர்கள் காப்பி அடித்து விட்டு சும்மா இருப்பதில்லை. ஜேம்ஸ் கேமரூன் ரேஞ்சுக்கு பீட்டர் விடுகின்றனர். இப்போதெல்லாம் இந்த காப்பி சமாச்சாரத்தை நான் கவனிப்பதை விட்டு விட்டேன். இவரது மேக்கிங் எப்படி என்று மட்டும் பார்க்கிறேன். நாம் தமிழ் சினிமா முன்னேற வெகு காலம் இருக்கிறது. அதுவரை காப்பி என்பது தவிர்க்க முடியாதது.
சும்மா அதிருது...
கருத்துக்கள் ஒவ்வொன்றும் பலமானவை!!!ஒரு இடத்தில் கூட கடிக்க இடம் தரவில்லை..சோகத்துடன் வெளியேறுகிறேன் அவ்வவ்வ்வ்வ்
அருமை நண்பரே! உங்கள் கருத்தில் எனக்கும் சம்மதமே!
இது தான் 100 சதவீதம் உண்மையும் கூட. அருமையான விமர்சனம்
இது தான் 100 சதவீதம் உண்மையும் கூட. அருமையான விமர்சனம்
தெரிந்தவன் சொந்தமா மூளையபோட்டு கசக்கி வெற்றி படத்தை கொடுக்கிறான்..விஜயை போல தெரியாதவர்கள் எக்சாமில காப்பியடிக்கிரதைப்போல நல்ல ஆங்கில படத்தைப்பார்த்து காப்பியடிக்கிறார்கள்..நடிகர் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் வேட்டைக்காரன் மட்டும் என்னவாம்..?
I am Sam கேள்விப்பட்ட பின்னரும் அந்த படத்தை பார்க்கணும் என்று தோன்றவில்லை. காப்பியோ, இல்லையோ, தெய்வத்திருமகளின் தாக்கம் கொஞ்ச நாட்கள் மனதுக்குள் ஓடட்டும் என்றுதான்.
''உங்களின் தேவை எப்போது எங்களுக்கு தேவையற்றுப் போகுமென்றால்; என்று எம்மவர்கள் 95 சதவீதம் பேரும் உலக சினிமாவை நேரடியாக ரசிக்கும் நிலைக்கு வருகிறோமோ அன்றுதான்'' இது நல்ல பாயிண்ட்தான். ஆனால் உலக சினிமாவை முதலில் எம்மவர்கள் அதிகம்பேர் பார்க்க கற்றுக்கொண்டால் தான் பின்னர் அத்தரத்தில் படம் எடுப்பது பற்றியோ, அல்லது அத்தரத்தில் எடுக்கப்பட்ட படம் என போலியாக கூறுபவர்களை அடையாளம் காணவோ எம்மால் முடியும்.
உண்மையான உலக சினிமா பாருங்கள். காமர்ஷியல் ஹாலிவூட் படங்களே எத்தனை போலியானது என்று தெரியும்.
எனக்கு இப்போது தோன்றும் இரண்டே இரண்டு மில்லியன் டாலர் கேள்வி..!
1.I am Sam இயக்குனர் Jessie Nelson க்கு எப்படி இந்த கதைக்கரு தோன்றியது? - அனுபவம், நேரில் பார்த்து, பாதித்த சம்பவங்கள் ஆக இருக்கலாம்...? என்றால், அவர் ஒரு சூப்பர் இயக்குனர் தான்.
(96,99,2001,2003,2005,2007 இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் செய்பவர் அவர் - ஒரு படத்திற்கு எவ்வளவு உழைத்திருப்பார்..?!)
இரண்டாவது கேள்வி : விஜய் சார்... வலைப்பதிவாளர்கள் இப்படி உங்களை போட்டுத்தாக்குகிறார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?!
முனி-2 காஞ்சனா திரை விமர்சனம்
நேற்று தான் ஐ யாம் சாம் படம் பார்த்தேன்.. எனக்கு உங்கள் பதிவில் மாற்றுக்கருத்து இருக்கிறது. இது பற்றி எழுதுகிறேன்.
உங்கள் கருத்துக்களோடு முழுமையாக உடன்படுகிறேன்,, அருமையான பதிவு.. ஆங்கிலப்படங்களின் கதையை தழுவி தமிழுக்கு ஏற்றவிதத்தில் கொடுப்பதற்கும் திறமை வேண்டுமல்லவா..
சொந்த கதை எடுக்கிறேன் எண்டு வேங்கை, சுறா, வ, சுள்ளான், அசல், ........ இப்பிடி இன்னும் எவளவோ பீத்தல் படங்களா எடுக்கிறதா விட்டுட்டு. வெளிநாட்டு படத்த தழுவி இப்பிடிப்பட்ட நல்ல படங்களா தார இயக்குநர்கள நாங்க பாராட்ட வேணும்.
உங்க பதிவு என்னப் பொறுத்தவரைக்கும் 100% சரியானதே.
இன்று i am sam என்று கூப்பாடு போடுபவர்களில் பலருக்கு தெய்வத்திருமகள் வந்த பின்னர்தான் i am sam என்று ஒரு திரைப்படம் வந்ததே தெரியும்.
nachchunu sonninga sir......
I apriceate it.!!!!
Post a Comment
"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."
*******************
வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)