Sunday, June 26, 2011

இலங்கை கிரிக்கட் அணியின் எதிர்காலம்(கிரிக்கட் ஆர்வம் இருக்கிறவங்க நேரம் கிடைக்கும்போது வாசியுங்க, பதிவு மிகவும் நீண்டு விட்டது)
1975 உலகக்கிண்ண போட்டித் தொடரில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாட கால்பதித்த இலங்கை கிரிக்கட் அணி 1979 உலகக் கிண்ண போட்டித் தொடரில் இந்தியாவை வென்று முதல் அதிர்ச்சியை சர்வதேச கிரிக்கட்டுக்கு கொடுத்தது.. அதன் பின்னர் 1996 வரை அவ்வப்போது பெரும்பாலான முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவந்த இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்த தென்னவோ 1996 உலகக் கிண்ணப் போட்டிகளில்த்தான், எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாமல் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி சர்வதேச கிரிக்கட்டையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது இலங்கை கிரிக்கட் அணி.

1996 வரையான இலங்கை அணியை பலர் இன்றைய பங்களாதேஷ் அணியுடன் ஒப்பிடுகின்றார்கள், அது மிகவும் தவறானது. இலங்கை அன்றிருந்த ஏனைய முன்னணி அணிகளுக்கு சமபலாமாக இல்லாமல் இருந்தது எவ்வளவு உண்மையோ அதேபோல இன்றைய பங்களாதேசை விட அன்று மிகவும் பலமானதாகவே இருந்ததுள்ளது. 1982 இல் டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது முதல் 1996 இல் சர்வதேச கிரிக்கட்டில் உச்சத்தை அடைந்தது வரையான காலப்பகுதிகளில் டெஸ்ட் கிரிக்கட்டில் 1985 இல் இந்தியாவுடன் தொடர் வெற்றி, 1986 இல் பாகிஸ்தானுடன் ஒரு போட்டியில் வெற்றி மற்றும் தொடர் சமநிலை, 1992 இல் நியூசிலாந்துடன் தொடர் வெற்றி, இங்கிலாந்துடன் இடம்பெற்ற ஒரே போட்டியில் வெற்றி, 1995 இல் நியூசிலாந்தில் வைத்து தொடர் வெற்றி என அவ்வப்போது அசத்தியிருந்தது.அதே போலவே ஒருநாள் போட்டிகளிலும் 1996 இற்கு முன்னர் இரு தடவைகள் அவுஸ்திரேலியாவுடன் தொடரை வென்றுள்ள (1983 & 1992) இலங்கை 1986 இல் ஆசிய கிண்ணத்தையும் வென்றுள்ளது. இவை தவிர 1992 இல் நியூசிலாந்து, 1993 இல் இங்கிலாந்து, 1993 இல் இந்தியா, 1995 இல் பாகிஸ்தான் மற்றும் சிங்கர் கிண்ணம் ஆகியவற்றில் தனது தொடர் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இப்படியாக 1996 வரை எப்போதாவதொரு அதிர்ச்சியை கொடுத்துவந்த இலைங்கை கிரிக்கட் அணி 1996 இன் பின்னர் விஸ்வரூப வளர்ச்சியை எட்டியது. ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை எந்த அணியையும் எந்த நாட்டு மைதானத்திலும் எதிர்கொள்ளும் ஸ்திரமான, பல்வகை திறமைகள் உள்ளடக்கிய அணியாக 1996 முதல் இன்றுவரை இலங்கை தனக்கென ஒரு சிறப்பான இடத்தை கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை (அப்பப்போ சில சரிவுகளை சந்தித்தாலும் பீனிக்ஸ் பறவைபோல மீண்டு வந்துள்ளார்கள்).

அதே நேரம் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இலங்கையில் வைத்து எந்த அணியையும் வெற்றிகொள்ளும் நிலையிலிருந்த இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், சிம்பாவே, மேற்கிந்திய நாடுகளில் வெற்றிகளை பதிவு செய்திருந்தாலும் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா நாடுகளில் இதுவரை எந்தவொரு போட்டியையும் வென்றிருக்கவில்லை. அதாவது ஒருநாள் போட்டிகளில் செலுத்திய ஆதிக்கத்தைபோல டெஸ்ட் போட்டிகளில் இலங்கை ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதே உண்மை. ஆனாலும் சொந்த மண்ணில் இடம்பெறும் போட்டிகளில் எந்த அணிக்கும் இலங்கை சிம்ம சொப்பனம்தான் என்பதையும் மறுக்கமுடியாது.ஆரம்பம் முதல் இன்றுவரை இலங்கை கிரிக்கட் அணியின் வளர்ச்சிக்கும் ஸ்திரமான நிலைக்கு பல வீரர்கள் மிகப்பெரும் பங்களிப்பை ஆற்றி இருப்பினும் அவர்களில் முக்கியமாக குறிப்பிட்டு சொல்லக் கூடியவர்கள் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டீ சில்வா, சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ் எனும் இந்த பஞ்ச பாண்டவர்கள்தான். இந்த ஐவரில் ஒருவர் இல்லாமல் இருந்திருந்தாலும் 1996 இல் இலங்கையின் அசுர வளர்ச்சி சாத்தியமாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் இவர்களின் போதாதகாலம் இவர்களில் எந்த ஒருவரும் உரிய மரியாதையுடன் இறுதிக்காலத்தில் அனுப்பிவைக்கப் படவில்லை, முரளி மட்டும் ஓரளவிற்கு கௌரவமாக ஓய்வு பெற்றார் என்று கூறலாம். இது இலங்கை கிரிக்கட்டின் மட்டுமல்ல ஆசிய கிரிக்கட்டின் சாபமும் கூட. அசாருதீன், கங்குலி, டிராவிட், ஸ்ரீநாத், கும்ளே, வசீம், வக்கார், அக்தர், இன்சமாம், யுஹானா, இஜாஸ், அன்வர் என இந்திய, பாகிஸ்தான் கிரிக்கட்டின் வரலாற்றின் மறக்கப்படாத வீரர்களுக்கும் இதே நிலைதான்.

இலங்கையின் முன்னணி வீரர்களான அரவிந்த, அர்ஜுனாவின் காலத்தின் பின்னர் இலங்கை கிரிக்கட் வீழ்ச்சி அடையும் என்பதுதான் அன்று பலரதும் எதிர் பார்ப்பு, இதற்க்கு காரணம் அர்ஜுனாவின் தலைமையும் அரவிந்தாவின் துடுப்பாட்டமும் இல்லாத இலங்கை அணியினை அன்று கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாமையே. ஆனால் 1999 இல் அர்ஜுனா, அரவிந்தவின் வெளியேற்றத்தின் பின்னர் இலங்கை கிரிக்கட்டில் பாரிய பின்னடைவுகள் எவையும் ஏற்ப்படவில்லை. இலங்கை கிரிக்கட் வீழ்ச்சி அடையும் என்கின்ற எதிர்பார்ப்பை அன்று பொய்யாக்கியது மஹேலா மற்றும் சங்ககாரவின் வருகையும் எழுச்சியும்தான் என்றால் அது மிகையில்லை . சனத் தலைமையில் மார்வன், மஹேல, சங்கா, வாஸ் , முரளி என இலங்கை கிரிக்கட் அணி ஏனைய முன்னணி அணிகளுக்கு தொடர்ந்தும் சவாலாகவே இருந்து வந்தது.அதன் பின்னர் சனத், மார்வன், வாஸ் ஒவ்வொருவராக அணியிலிருந்து விலகிப் போனாலும் (விலக்கப்பட்டனர் என்பதே சரியான பதம்) இலங்கை தனது ஸ்திரத்தை இன்றுவரை இழக்கவில்லை, யாருமே எதிர்பாராத வகையில் டில்ஷானின் ஆரம்பவீரர் பாத்திரமும், அதிரடியும் இலங்கைக்கு கை கொடுக்க உப்பிள் தரங்க, அஜந்த மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ், குலசேகரா என இளந் திறமைகளுடன் லசித் மலிங்காவின் புல்லட் வேகமும் மஹேல மற்றும் சங்ககாரவின் அனுபவம் கை கொடுக்க இலங்கை கிரிக்கட் அணி இன்றுவரை எந்த அணிக்கும் சவாலான அணியாக தன்னை முன்னிறுத்தி வருகிறது.

1996 முதல் இன்றுவரை இலங்கை கிரிக்கட் அணி சர்வதேச கிரிக்கட்டில் தனக்கென தக்கவைத்திருந்த இடத்தை இன்னமும் தொடர்ந்து தக்க வைத்திருக்க வேண்டுமென்றால் இலங்கை கிரிக்கட்டில் சில மாற்றங்கள் நிச்சயம் நிகழ்ந்தாக வேண்டும். அவற்றில் மிக முக்கியமாக இலங்கை கிரிக்கடில் ஆழ ஊடுருவி இருக்கும் அரசியலும், இனவாதமும் களையப்படவேண்டும். அதற்க்கு முதற்படியாக இடைக்கால நிர்வாக சபையை ஒட்டுமொத்தமாக தலை முழுகி முறையான தேர்தலினை நடாத்தி யாருக்கும் கட்டுப்படாத கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையையும், சிறந்த தேர்வாளர்களையும் தெரிவு செய்ய வேண்டும்.முரளிதரன் இல்லாத நிலையில் இனிவரும் காலங்களில் இலங்கை டெஸ்ட் போட்டிகளை எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்கின்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உண்டு, மிகப் பெரும்பான்மை யானவர்களின் எதிர்பார்ப்பு முரளி இல்லாமல் இலங்கை இனிமேல் டெஸ்ட் போட்டிகளை வெல்வது சாத்தியமில்லை என்பதுதான்; இன்றைய நிலையில் இலங்கை அணியின் பந்துவீச்சினை வைத்துப் பார்க்கும்போது அவர்களது எதிர்பார்ப்பு உண்மையானதுதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அதை பொய்யாக்குவது தேர்வாளர்களது கைகளில்தான் உள்ளது. இன்னுமொரு முரளிக்கு சாத்தியமில்லை என்பது நூறுக்கு நூறு உண்மை; ஆனால் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகள் பெறும் டெஸ்ட் வெற்றிகள் முரளி இல்லாமல்த்தானே பெறப்படுகின்றன? அப்படியானால் இலங்கைக்கு மட்டும் ஏன் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கிடைக்க முரளிதரன் வேண்டும்? !!!!!

எந்த வீரர் ஓய்வு பெற்றாலும் இலங்கை அணிக்கு அவருக்கு இணையான வீரர் இல்லாவிட்டாலும் ஒரு சிறந்த மாற்று வீரர் கிடைப்பார்; இது இலங்கைக்கு மட்டுமல்ல எந்த முன்னணி அணிகளுக்கும் பொருந்தும். இப்போது மஹேல, சங்கா இல்லாத டெஸ்ட் அணியை நினைத்துப் பார்த்தால் சூனியமாகத்தான் தெரியும். ஆனால் அந்த காலகட்டத்தில் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றால்ப்போல சிறந்த வீரர்கள் நிச்சயம் இலங்கை அணியில் இருப்பார்கள், நிச்சயம் இருக்க வேண்டும்!!!. ஆனால் அது இலங்கை கிரிக்கட்டின் சுதந்திரமான நேர்மையான செயற்ப்பாட்டில்த்தான் தங்கியுள்ளது.வளர்ந்துவரும் வீரரும் தலைமைத்துவத்திற்கு சிறப்பான தகுதியுமுடைய அஞ்சலோ மத்தியூசிற்கு வரவேண்டிய உப தலைவர் பதவியை இன/மத காரணிகளால் தில்லானா மோகனாம்பாள் படத்தில வரும் பாலையா மாதிரி இருக்கிற தில்லானா கண்டாம்பிக்கு கொடுத்தால் இலங்கை கிரிக்கட் எப்படி எதிர்காலத்தில் உருப்படும்??????? முரளிக்கு தமிழன் என்கிற காரணத்தால் தலைவர் பதவி கடைசிவரை வழங்கப்படவில்லை என்கிக்ற குற்றச்சாட்டு இன்றுவரை உள்ளது, அந்த குற்றச்சாட்டு எவ்வளவு உண்மையோ அதேபோல ஒரு அணியை தலைமையேற்று நடாத்தும் அளவிற்கு முரளிக்கு தலைமைப்பண்பு இல்லை என்பதும் உண்மை. இதனால் முரளி விடயத்தில் எனக்கு பெரிதாக ஏமாற்றம் ஏதும் ஏற்ப்படவில்லை.

ஆனால் கண்டாம்பிக்கு உபதலைவர் பதவி கொடுத்து அணிக்கு அடுத்த தலைமையாய் அவரை முன்னிறுத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத சிறுபிள்ளைத்தனம் என்றுதான் சொல்லவேண்டும். டெஸ்ட் போட்டிகளில் எந்த அனுபவமும் இல்லாத கண்டாம்பி விளையாடிய 33 போட்டிகளில் 6 முறை தன்னையும் இன்ன்முமொரு 6 முறை அடுத்தவர்களையும் ரன் அவுட் ஆக்கியதையும், மூன்று ஓடவேண்டிய ஓட்டங்களிற்கு இரண்டும், இரண்டு ஓட வேண்டிய ஓட்டங்களுக்கு ஒன்றும், பல வேகமான ஒற்றை ஓட்டங்களை எடுக்காமலும், களத்தடுப்பில் நடக்கவே முடியாமல் திணறியும் தவிர வேறென்ன சாதனையை செய்துள்ளார்? இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியிலும் 2000 ஆம் ஆண்டு இதே கண்டாம்பி டம்மியாக உப தலைவர் பதவியில் உட்கார்ந்திருந்தவர் என்பது நினைவூட்டப் படவேண்டியது.இலங்கை தேர்வாளர்கள் தவறவிடும் மற்றுமொரு மிகப்பெரும் தவறு இளம் வீரர்களுக்கு வழங்கும் சந்தர்ப்பம். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை கிரிக்கட் தேர்வாளர்கள் இளைஞர்களுக்கு வழங்கும் சந்தர்ப்பங்கள் மிக மிக குறைவ, இப்போதுகூட டினேஷ் சன்டிமல் அணியின் மேலதிக வீரராக வைத்திருந்து வீணடிக்கப்படுகிறார். பயிற்ச்சிப் போட்டிகளில் சிறப்பாக விளயாடவில்லைத்தான் ஒத்துக்கொள்கிறேன், ஆனால் தனது முதல் 5 டெஸ்ட் இனிங்க்ஸ் களிலும் மார்வன் அத்தப்பத்து பெற்றுக்கொண்ட ஓட்டங்களும், பின்னாளில் மார்வன் சாத்தித்த சாதனைகளும் மறக்கப்பட கூடாதவை.

சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து சந்தர்ப்பம் வழங்கினால் சன்டிமல் இலங்கையின் எதிர்கால வீரர்களில் முக்கியமானவராக இடம்பிடிக்கும் சந்தர்ப்பம் உண்டு. இல்லாவிட்டால் இலங்கை கிரிக்கெட்டால் வீணடிக்கப்பட்ட நவீட் நவாஸ், இயன் டானியல்ஸ், முதுமுதலிகே புஸ்பகுமார, ஜீவன் மென்டிஸ் வரிசையில் சன்டிமலும் இணைவார். இவர்களில் ஜீவன் மென்டிஸ் 2003 இல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் கலக்கியவர், அன்றைய காலப்பகுதியில் இலங்கை அணியில் இடம்பிடிப்பார் என்று பலராலும் எதிர்வு கூறப்பட்டவர், கடந்த ஆண்டு 28 வயதில் இலங்கை கிரிக்கட் அணியில் அறிமுகமாகியிருக்கிறார்.இப்போதுகூட 19 வயதில் பானுச ராஜபக்ச அணியில் சேர்த்துக் கொள்ளக் கூடியளவிற்கு தகுதியான வீரர், ஆனால் இலங்கை கிரிக்கட் 28 வயதில்த்தான் பானுஷவை அணிக்குள் கொண்டுவருவோம் என கங்கணம் கட்டினால் யாரத்தான் என்ன செய்ய முடியும்? ஒருநாள் அணியை பொறுத்தவரை முன்னணி வீரர்களுக்கு உபாதை என்றால் மீண்டும் மீண்டும் அணிக்குள் அழைக்கப்படும் சாமர சில்வா, ஜெகன் முபாரக், திலான் சமரவீரா போன்றோருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கலாமே!!!. இன்னும் மூன்று நான்காண்டுகளில் மஹேல, சங்கா ஓய்வு பெற்ற பின்னர் அவர்களின் இடங்களை நிரப்பக் கூடிய இளம் வீரர்களை இப்போதிலிருந்தே இனங்கான வேண்டியது மிக மிக அவசியம்.

அதேபோல மகேலாவும், சங்காவும் இன்னமும் மூன்றாம், நான்காம் இடங்களில்த்தான் (ஒருநாள், டெஸ்ட், T/20 போட்டிகள் அனைத்திலும்) களமிறங்குவோம் என்று அடம் பிடிக்காமல் புதிய வீரர்களுக்கு ஓட்டங்களை குவிக்க உந்துதலாகவும், அனுபவத்தை திரட்ட உதவியாகவும், அழுத்தம் இல்லாமல் துடுப்பெடுத்தாட வசதியாகவும் (இவர்கள் பின்னால் இருப்பது அவர்களுக்கு அழுத்தமில்லாமல் விளையாட மிகவும் உதவும் ) மூன்றாம், நான்காம் இலக்கங்களை விட்டுக் கொடுத்து ஐந்தாம், ஆறாம் இலக்கங்களில் விளையாடினால் சிறப்பாக இருக்கும்.அதேநேரம் இளம் வீரர் ஒருவர் ஓரிரு போட்டிகளில் சோபிக்கத் தவறினால் அவரை அணியில் இருந்து நீக்குவது, பின்னர் முன்னணி வீரர்கள் யாராவது காயமடையும்போது அணியில் சேர்ப்பது, மீண்டும் ஓரிரு போட்டிகளில் சோபிக்காதவுடன் அணியில் இருந்து நீக்குவது என்றில்லாமல் சிலகாலமாவது தொடர்ச்சியாக இளம் வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவது அவசியம், இல்லாவிட்டால் இலங்கை அணியில் பல சாமர கப்புகெதரக்கள் வீணடிக்கப்படுவார்கள்.

இறுதியாக...............

ஆரம்பகாலங்களில் தோல்வியடைந்த போதும்சரி, பின்னர் ஒரு சில போட்டிகளை வெற்றிபெற்ற போதும்சரி, 1996 முதல் இன்றுவரை தனக்கென ஒரு இடத்தை சர்வதேச ரீதியில் தக்கவைத்திருக்கும் போதும்சரி இலங்கைக்கு தராமான வீரர்கள் எப்போதுமே இருந்துள்ளனர், இப்போதும் இருக்கிறார்கள், இனிமேலும் வருவார்கள்; இனி வருபவர்களாலும் இன்றிருக்கும் இலங்கையின் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணமுடியும் ; ஆனால் அது சாத்தியமாக வேண்டுமென்றால் நிச்சயமாக இலங்கை கிரிக்கட்டில் இருந்து அரசியல், இன/மத வேறுபாடுகள் விரட்டியடிக்கப் படவேண்டும். இல்லாவிட்டால் மஹேலா, சங்கா காலத்தின் பின்னர் சர்வதேச கிரிக்கட்டில் இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறிதான்!!!

7 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...

///அந்த குற்றச்சாட்டு எவ்வளவு உண்மையோ அதேபோல ஒரு அணியை தலைமையேற்று நடாத்தும் அளவிற்கு முரளிக்கு தலைமைப்பண்பு இல்லை என்பதும் உண்மை./// முரளியின் மென்மையாக சுபாவத்தை வைத்த சொல்லுகிறீர்கள்...

Anonymous said...

முரளி ஓய்வு பெற்ற பின் சிறிது காலம் பந்துவீச்சில் அணியை தாங்கி நிற்க வேண்டிய கடமை மலிங்கவிற்கே, ஆனால் இக்கட்டான நேரத்தில் அவர் எடுத்த முடிவு சுயநலமானது ...

Unknown said...

ஜீவன் மென்டிஸ் ஒரு சகலதுறை வீரராக இடம்பெற்றிருக்க வேண்டியவர்..
வீண்டடித்து விட்டனர்..
சந்டிமளுக்கு குஐந்தது ஒரு ஐந்து ஆறு போட்டிகலாவது வழங்கி பார்க்க வேண்டும்..
இந்தியாவில் முரளி விஜய்க்கு எத்தனையோ சந்தர்ப்பம் வழங்குகிறார்களே!!

கார்த்தி said...

ஏன்ஜலோ மத்தியுசின் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டதன் காரணம் வெளிப்படையா இப்ப தெரியுது!
நீங்கள் இலங்கை அணியின் ஆரம்ப வெற்றிகள் பற்றி சொன்ன பல தகவல்கள் புதுசு!
இலங்கை Aஅணிக்கோ under19அணிக்கோ தெரியிவில்லை இலங்கை அமைச்சரவை பேச்சாளரின் மகன் வேண்டுமென்றே அணியில் இணைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

Unknown said...

கண்டாம்பி ரசிகர் மன்றம் சார்பாக கண்டன பேரணி நடத்த இருக்கிறோம்..
சுக்கிர ஜோகம் அடித்திருக்கும் தலை கண்டம்பியை கண்டபடி பேசிய எப்பூடியை எதிர்த்து நாளை
மெரீனா பீச்சில் போராட்டம்!

Unknown said...

அலசலு சூப்பருங்கோ!

ம.தி.சுதா said...

ஃஃஃஃசனத், மார்வன், வாஸ் ஒவ்வொருவராக அணியிலிருந்து விலகிப் போனாலும் (விலக்கப்பட்டனர் என்பதே சரியான பதம்)ஃஃஃஃ

ஜீவ் மேலோட்டமாகத் தான் வாசித்தப் போகிறேன்... ஆறுதலாக மிகுதியை போனில் வாசிக்கிறேன்..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)