Wednesday, June 15, 2011

'விஷவு' இயக்கம் ஆரம்பம், ஆதரவு தாரீர்.....

இணைய பயன்பாட்டாளர்களே உங்களுக்கு சமுதாயத்தின்பால் அக்கறை இருப்பது போன்ற பிரம்மையை உண்டாக்கா ஆசையா?????? உடனடியாக நீங்கள் நாம் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் விஷவு இயக்கத்தில் இணைந்து கொள்ளலாம். இதன் மூலம் சர்வதேச சமூகத்தில் உள்ள மனிதர்கள் முதல் புழு பூச்சிகள் வரை யாரையும் மட்டம் தட்டி, கீழ்த்தரமாகவும், கேவலமாகவும், ஒருபக்க சார்பாகவும், அடுத்தவர் மனம் நோகும் வண்ணம் விமர்சித்து நம்மை நாமே அறிவாளிகள் போல காட்டிக் கொள்ளலாம். இதன் மூலம் எம்மை நாமே ஒரு மிகச்சிறந்த சமூக ஆர்வல விமர்சகப் புண்ணாக்குகள் ஆக பறை சாற்றலாம்.

எதற்க்காக இந்த இயக்கம்?

வீதியில் இறங்கி புரட்சி செய்தால் பல முன், பின், மேல், கீழ், பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் நோகாமல் நோம்பு குடிக்கும் விதமாக வீட்டிலோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிந்துகொண்டோ முதலாளித்துவத்தின் அடையாளமான கணணி, இணையம் துணை கொண்டு தட்டச்சு மூலமாக புரட்சி செய்வதே எமது இயக்கத்தின் நோக்கம். இந்த விஷவு இயக்கத்தின் மூலமாக அடுத்தவனின் உணர்வுகளை சொறிந்து அவனை காயப்படுத்தி அதில் கிடைக்கும் அற்ப சந்தோசத்தை புரட்சி என்னும் பெயரில் நாம் அனுபவிக்கவே இந்த விஷவு இயக்கம்.

விஷவு இயக்கத்தில் இணைய தேவையான அடிப்படை தகுதிகள்

*அதி புத்திசாலிகளாக இருக்க வேண்டும், அதாவது எப்போதும் அடுத்தவனை முட்டாளாகவே நோக்க வேண்டும்.

*எந்த நல்ல விடயத்திலும் கெட்ட விடயங்களை தேடிக் கண்டுபிடித்து அதை ஊதிப் பெரிதாக்கி நல்ல விடயங்களை மறக்கடிக்கும் வண்ணம் யாரையும் எதையும் விமர்சனம் செய்யும் தகுதி இருக்க வேண்டும் (அதற்கு தகுதி - தட்டச்சு தட்ட தெரிந்தால் மட்டும் போதும்)

* எப்போதும் கோபமாக இருப்பது போன்று பிரம்மையை உருவாக்க வேண்டும். அதாவது எதுவுமே இங்கு சரியில்லை என்பதே அந்த கோபத்தின் பொருள்.

எமது இயக்கத்தின் கொள்கைகள்

*கடவுள் எதிர்ப்பு -: கடவுள் எதிர்ப்பு செய்கிறோமோ இல்லையோ கடவுளை நம்பும் மக்களின் நம்பிக்கையையும் அவர்களது உள்ளங்களையும் காயப்படுத்த வேண்டும். இதற்காக சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்து சந்தர்ப்பம் அமைந்ததும் முடிந்தவரை கெட்ட வாரத்தையை பயன்படுத்தி நம்பிக்கைகளை காயப்படுத்தவேண்டும்.

*அமேரிக்கா முதல் அடுப்பங்கரைவரை, காங்கிரஸ் முதல் கம்யூன்ஸ் கட்சிவரை, பார்ப்பன் முதல் பாட்டாளிவரை, மந்திரி முதல் மக்கள்வரை, சினிமா முதல் விளயாட்டுவரை (ரஜினி முதல் சச்சின் வரை) யாரையும் எதையும் எதிர்மறையால் மட்டும் நோக்குதல்.

* நடைமுறைக்கு கொஞ்சம் கூட சாத்தியமில்லாத விடயங்களை மட்டும் அப்பபோ வரவேற்கலாம்.

*இறந்து போனவர்களையும் தோண்டி எடுத்து கேவலப்படுத்தி கட்டுரை புனைவது.

*இருக்கும் அத்தனை கட்சியையும் மோசமாக விமர்சித்து மக்களை யாருக்கு ஓட்டுப் போடுவதென்று முடிவெடுக்காதவாறு குழப்புவது.

*ஆக மொத்தத்தில் எதுவுமே சரியில்லை, இந்த நாடு நாசமாகத்தான் போகும், வேறு வழியில்லை என்று சாபம் கொடுப்பது.

எமது விஷவு இயக்கத்துக்கு எதிரான கொள்கைகள்

* நேர்மறையான எந்த விடயங்களையும் மக்களுக்கு சொல்ல கூடாது; முக்கியமாக யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது (அப்படி யாரையாவது கை காட்டினால் நாளை அவர்களை நாம் எப்படி விமர்சிப்பது??)

* சுட்டிக்காட்ட வேண்டிய தவறான விடயங்களை உரியவர்கள் புரிந்து கொள்ளும்படி ஒருபோதும் கூறக் கூடாது, (அதாகப்பட்டது அவர்களை மீண்டும் மீண்டும் அதே தவறை செயும்வண்ணம் கடுப்பேற்ற வேண்டும்)

குறிப்பு -: எமது இயக்கம் வளர்ச்சி அடைந்து எம்முடன் பல அதிபுத்திசாலிகள் இணையும் பட்சத்தில் "விஷவுக்கு நன்கொடை தாருங்கள்" என்று நாம் நிதி சேகரிக்கலாம். அப்புறமென்ன நாமளும் ஜாலியா இருக்கலாம்.........

மேற்குறிப்பிட்ட விடயங்களில் ஒத்துப் போனவர்கள் உங்கள் பெயர், வயது, வசிப்பிட முகவரி, பால், தொழில் போன்றவற்றை டைப் செய்து கூடவே யாராவதோ ஒரு பிரபலத்தையோ, அல்லது எல்லோராலும் வரவேற்க்கப்பட்ட சம்பவத்தையோ வசைபாடி 420 சொற்களுக்கு குறையாமல் கட்டுரை வரைந்து mail2eppoodi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். போதிய அளவு ஆட்கள் சேர்ந்ததும் விஷவு விஷத்தை கக்கும்.

வாழ்க விஷவு, வளர்க வசவு................


14 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...

:-)

Sathish said...

உண்மைதான் .....நானும் இணயத்தில் படிக்க ஆரம்பித்த புதிதில் அந்த பசங்க வெப் சைட் பார்த்து ...எதோ வித்தியாசமா இருக்குன்னு படிக்க ஆரெம்பித்தேன்.....அப்புறம் அதுவே எல்லை மீறி எல்லோரையும் வரை முறை இல்லாமல் திட்ட , அய்யோ என்று இப்போதெல்லாம் அந்த பக்கம் போறதே இல்ல.....தன்ன பத்தி தானே ரொம்ப அதி புத்திசாலின்னு நெனச்சிக்கிற மறை கழண்ட கேஸ் அங்க ரொம்ப ஜாஸ்தி.

! சிவகுமார் ! said...

குறைந்தபட்ச நாகரிகம் இல்லாமல் எழுதுவதுதான் தவறு. நம்முடைய கீ போர்டிலும் கெட்ட வார்த்தையை டைப் செய்ய முடியும். அதை புலிகேசிகள் உணர்ந்தால் சரி.

மைந்தன் சிவா said...

என்னய்யா சொல்றீங்க??இதெல்லாம் உண்மையா??

மைந்தன் சிவா said...

ஹிஹி நல்ல ஜாலியான விஷயம் தான் போங்கள்....வெட்டி தொழிலுக்கு இது வேறயா!!

விக்கியுலகம் said...

மாப்ள இம்புட்டு நல்ல இயக்கமா இது...சரி சரி உடனே என் மூளைய கழட்டி ப்ரிஜ்ல வச்சிட்டு சேந்துக்கறேன் ஹிஹி!

பாலா said...

எதிர் கருத்துக்களை கொஞ்சம் கூட காது கொடுத்து கேளாமல் எதிர்த்து பேசுபவனை அடிமுட்டாள் ரேஞ்சுக்கு அல்லக்கைகளை வைத்து மட்டம் தட்டுபவது என்று மிகவும் கீழ்தரமாக போய் கொண்டிருக்கிறார்கள். இவர்களை (அவர்கள் ஸ்டைலிலேயே) புறக்கணிப்பதே நன்று.

Cool Boy கிருத்திகன். said...

:-)வாழ்க விஷவு

Tamil Unicode Writer said...

அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

தனி காட்டு ராஜா said...

:))

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

எந்த வினாவும் வினவாமல் விஷவுக்கு என் முழு ஆதரவை நல்குகிறேன்..! எப்பூடி..?
(நெத்தியடி முஹம்மத்)

நிரூபன் said...

ஒரு சமூகத்திற்கு நன்மை செய்கிறோம் எனும் பாணியில் அந்தச் சமூகத்தின் சிந்தனைகளை முடக்கும் ஒரு கும்பலைப் பற்றிய உங்களின் பதிவினை வரவேற்கிறேன்.

தாம் சொல்வதை மட்டும் பிறர் ஏற்றுக் கொள்ள வேண்டும், தமது தவறுகளைப் பிறர் திருத்துவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனும் கருத்துத் திணிப்போடு இணையத்தில் உலாவரும் இவர்களை நாம் தாம் புரிந்து கொண்டு நடக்கப் பழக வேண்டும் சகோ.

உலக சினிமா ரசிகன் said...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)