Saturday, February 5, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 7)



2011 உலகக் கிண்ணத்தை ஜெயிக்கப் போவது யாரு?




பதின்நான்கு நாடுகள் பங்கேற்க, ஆங்கில காலணித்துவத்தின் கீழிருந்த பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கட் ரசிகர்கள் காத்திருக்க மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகிறது 10 ஆவது உலககிண்ண கிரிக்கட் போட்டிகள். கிரிக்கட் பற்றி பேசுபவர்களும், கிரிக்கட் பற்றி எழுதும் பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களும், கிரிக்கட் சூதாட்ட இணையதளங்களும் இப்போது பேசும் or அலசும் முக்கியமான விடயம் எந்த அணி 2011 உலக கிண்ணத்தை கைப்பற்றும் என்பதுதான். அந்த வகையில் 2011 உலகக் கிண்ணத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பதை பற்றிய பார்வைதான் இப்பதிவு.

லீக் ஆட்டங்கள் (குறிப்பிட்ட ஒருபிரிவில் இருக்கும் ஒரு அணி ஏனைய அனைத்து அணிகளுடனும் மோதும்) இடம்பெறும் எந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியாக இருந்தாலும் எந்த அணி கிண்ணத்தை கைப்பற்றும் என்று கேட்டால் அதற்க்கு ஒரு அணியின் பெயரை சொல்வதென்பது ஒரு குறிப்பிட்ட அணியின் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கை or அச்சத்தின் அடிப்படையில்த்தான் இருக்கும். அதேநேரம் லீக் போட்டிகளில் விளையாடும் அணிகளில் இருந்து முதல் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறும் என்று நினைக்கும் நான்கு அணிகளின் பெயரை குறிப்பிட்டு அவற்றிலிருந்து ஏதாவதொரு அணிதான் கிண்ணத்தை கைப்பற்றும் என்று கூறுவது ஓரளவு ஊகிக்கக் கூடிய விடயமாக இருக்கும். அவ்வாறு ஊகம் கூறும் சந்தர்ப்பங்களில் நான்கில் இரண்டு அணியாவது அரையிறுதிக்கும் ; அவற்றில் ஒரு அணியாவது இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.



மேற்குறிப்பிட்டது போல லீக் ஆட்டங்களின் அடிப்படையில் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகும் நான்கு அணிகளை தெரிவு செய்வதற்கு ஏதுவாக போட்டி அட்டவணைகள் icc யினால் அறிமுகப் படுத்தப்பட்டது 1999 உலக கிண்ண போட்டிகளில்தான். A பிரிவில் 6 அணிகளில் 3 அணிகள், B பிரிவில் 6 அணிகளில் 3 அணிகள் என முதலில் இடம்பெற்ற லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற 6 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு அதாவது SUPER 6 போட்டிகளுக்கு தேர்வுசெய்யப்பட்டு அவற்றில் இருந்து முதல் நான்கு புள்ளிகளை பெற்ற அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.

A பிரிவில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஜிம்பாவே, கென்யா ஆகிய ஆறு அணிகளில் இருந்து தென்னாபிரிக்கா, இந்தியா, சிம்பாவே அணிகளும்; B பிரிவில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து அணிகளில் இருந்து அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் SUPER 6 போட்டிகளுக்கு தகுதிபெற்றன. பின்னர் SUPER 6 போட்டிகளில் இடம்பெற்ற லீக் ஆட்டங்களில் முதல் நான்கு இடங்களை பெற்ற பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று பின்னர் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா பாகிஸ்தானை தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.



இந்த சுற்றுப்போட்டியில் முதல் சுற்றில் சிம்பாவே அணி இலங்கை மற்றும் இங்கிலாந்தை பின்தள்ளிவிட்டு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிகழ்வும், SUPER 6 போட்டிகளில் இந்தியாவை பின்தள்ளிவிட்டு நியூசிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிகழ்வும் எதிர்பாராமல் நிகழ்ந்தாலும் முன்னரே எதிர்வு கூறப்பட்ட பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தன.

2003 உலககிண்ண போட்டிகளில் A பிரிவில் அவுஸ்திரேலியா, இந்தியா, சிம்பாவே, இங்கிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா அணிகளில் இருந்து அவுஸ்திரேலியா, இந்தியா, சிம்பாவே அணிகளும்; B பிரிவில் இலங்கை, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், கென்யா, பங்களாதேஷ், நியூசிலாந்து, கனடா அணிகளில் இருந்து இலங்கை, கென்யா, நியூசிலாந்து அணிகள் SUPER 6 போட்டிகளுக்கு தகுதிபெற்று அவற்றில் இருந்து அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, கென்யா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று பின்னர் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து அவுஸ்திரேலியா கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.



இந்த சுற்றுப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்க அணி SUPER 6 போட்டிகளுக்கு தகுதி பெறாததும்; சிம்பாவே மற்றும் கென்யா அணிகள் SUPER 6 போட்டிகளுக்கு முன்னேறியது எதிர்பாராத விடயங்களாக அமைந்தன. சிம்பாவே பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக தடைப்பட்டதாலும் இங்கிலாந்து அணி சிம்பாவே செல்லாததும் சிம்பாவே அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாக காரணமான அதேவேளை; இலங்கையுடன் கிடைத்த எதிர்பாராத வெற்றியும் நியூசிலாந்து அணி கென்யா செல்லாமையும் கென்யாவை SUPER 6 போட்டிகளுக்கு கொண்டு சென்றது.

2003 உலகக் கிண்ண போட்டிகளில் ஒரே குழுவிலிருந்து SUPER 6 போட்டிகளுக்கு சென்ற அணிகளுக்கு SUPER 6 லீக் ஆட்டங்களில் போட்டிகள் இடம்பெறாமல் முன்னைய லீக் போட்டிகளில் பெறப்பட்ட புள்ளிகளே சேர்க்கப்பட்டதனால் இலங்கையுடன் முன்னைய சுற்றில் கிடைத்த புள்ளிகளும், நியூசிலாந்து அணி கென்யா செல்லாத காரணத்தால் கிடைத்த புள்ளிகளும், கூடவே SUPER 6 போட்டிகளில் சிம்பாவே அணியுடனான வெற்றியால் கிடைத்த புள்ளிகளும் சேர்ந்து கென்யா அணியை அரையிறுதிக்கு கொண்டு சென்றன.



2007 உலகக் கிண்ண போட்டிகளில் A,B,C,D என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் ஒரு பிரிவில் இருந்து 2 அணிகள் SUPER 8 போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டன. A பிரிவில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, ஸ்கார்ட்லாந்து, நெதர்லாந்து அணிகளில் இருந்து அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவும்; B பிரிவில் இலங்கை, இந்தியா, பெர்முடா, பங்களாதேஷ் அணிகளில் இருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளும்; C பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, கென்யா, கனடா அணிகளில் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும்; D பிரிவில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, சிம்பாவே அணிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளும் SUPER 8 போட்டிகளுக்கு தகுதிபெற்றிருந்தன.

பின்னர் SUPER 8 போட்டிகளில் அதிகப்புள்ளிகளை பெற்ற அவுஸ்திரேலியா, இலங்கை, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகி பின்னர் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. இந்த உலக கிண்ண போட்டிகளில் மிகப்பெரும் அதிர்ச்சியாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறி இருந்தாலும்; பலராலும் எதிர்பார்க்கப்பட்டது போலவே அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இலங்கை அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தன.



இப்படியாக 1999 - 2007 வரையான உலக கிண்ண போட்டிகளில் SUPER 8 or 6 போட்டிகள் இடம்பெற்றமையால் அரையிறுதிக்கு தெரிவாகும் அணிகளை ஓரளவு எதிர்வு கூறக் கூடியவாறு இருந்தது, அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நான்கு அணிகளில் மூன்று அல்லது இரண்டு அணிகளாவது அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தன. ஆனால் இதற்க்கு முன்னர் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் 1992 இல் இடம்பெற்ற போட்டித்தொடர் தவிர்ந்த ஏனைய எந்த தொடரிலும் அனைத்து முன்னணி அணிகளையும் சந்திக்கும் லீக் ஆட்டம் இடம்பெறவில்லை.

1992 இல் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டித்தொடரில் முக்கிய அணிகள் அனைத்தும் ஒன்றையொன்று சந்திக்கும் லீக் ஆட்ட முறையில் போட்டிகள் இடம்பெற்று அவற்றிலிருந்து அதிக புள்ளிகளை பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு தெரிவுசெய்யப்பட்டன. ஒரே குழுவில் இடம்பெற்ற 9 அணிகளும் இதர 8 அணிகளுடனும் மோதியதில் அதிக புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.



அதற்க்கு முன்னர் 1975 - 1987 வரையான நான்கு உலகக் கிண்ண போட்டித் தொடர்களிலும் A,B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் உள்ள நான்கு அணிகளும் தமக்குள்ள மோதி முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு தெரிவு செய்வது வழக்கம். இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டித்தொடர் (4 போட்டித்தொடர்கள்) ஒவ்வொன்றிலும் தலா 15 போட்டிகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன.

மேற்குறிப்பிட்ட உலகக் கிண்ண போட்டித் தொடர்கள் அனைத்திலும் இருந்து வேறுபாடும் உலகக் கிண்ண போட்டித்தொடராக 1996 உலகக் கிண்ண போட்டித்தொடர் அமைந்தது. A,B என இரு பிரிவுகள்; ஒவ்வொரு பிரிவிலும் தலா ஆறு அணிகள் தத்தமக்குள் மோதி அவற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். பின்னர் அடுத்த சுற்றில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலே சுற்றுப்போட்டியை விட்டு வெளியேறும் Knockout முறையில்தான் போட்டிகள் இடம்பெற்றன. கால் இறுதிப் போட்டிகள் இடம்பெற்ற ஒரே உலகக் கிண்ண போட்டித்தொடராக 1996 உலககிண்ண போட்டித்தொடர் மட்டும்தான் இதுவரை இருந்துள்ளது. ஆனால் இப்போது இரண்டாம் முறையாக கால் இறுதிப் போட்டிகள் இடம்பெறும் உலக கிண்ண போட்டித்தொடராக 2011 உலகக் கிண்ண போட்டித்தொடரும் இணையப்போகின்றது.



2011 உலக கோப்பை அட்டவணையின்படி A பிரிவில் அவுஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, சிம்பாவே, கனடா, கென்யா என ஏழு அணிகளும்; B பிரிவில் இந்தியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து என ஏழு அணிகளும் தத்தமது குழுக்களில் அனைத்து அணிகளுடனும் மோதிக்கொள்ளும். இவற்றில் ஒவ்வொரு அணியிலும் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அடுத்த கட்டமாக காலிறுதிப் போட்டிக்கு (Knockout ) தகுதிபெறும்; அதன் பின்னர் அரையிறுதி, இறுதி போட்டிகள் இடம்பெறும்.

இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெறும் 8 அணிகளும் SUPER 6 or SUPER 8 போட்டிகள் இடம்பெறாமையால் நேரடியாக காலிறுதி போட்டியில் ஆடுவதால்; முதல் சுற்றிலிருந்து தெரிவாகும் 8 அணிகளில் 4 அணிகள் அடுத்து இடம்பெறும் போட்டியில் (காலிறுதி) தோல்வியடைந்தாலே உலகக் கிண்ண கனவை மறக்க வேண்டியதுதான். தலா ஒரு போட்டியில் நான்கு முக்கிய அணிகள் தொடரைவிட்டு வெளியேறுவதால் எந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் என்று கணிப்பது கடினமான விடயம்.



முதல் சுற்றில் ஒரு குழுவில் 7 அணிகள் இருந்தாலும் அவற்றிலிருந்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் நான்கு அணிகளை சுலபமாக கணிக்கலாம். A பிரிவில் இருந்து அவுஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் B பிரிவிலிருந்து இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளும் அதிகமாக முதல் சுற்றிலிருந்து தெரிவாகும் அணிகளாக இருக்கும். பங்களாதேஸால் மட்டும்தான் தன குழுவில் உள்ள ஏதாவதொரு அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் சாமர்த்தியம் உள்ளது எனினும் அதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவே.

ஆக மொத்தத்தில் காலிறுதியில் மேற்குறிப்பிட்ட 8 அணிகளும் யார்யாருடன் மோதுவது என்பதை தீர்மானிப்பதற்காகவும், ஆட்டத்தொடரின் நாயகனை தீர்மானிப்பதற்காகவும் தான் முதற்சுற்றுப் போட்டிகள் இடம்பெறுகின்றன. 2007 உலகக் கிண்ணம் கொடுத்த பாடம்தானோ என்னமோ (இந்திய பாகிஸ்தான் வெளியேற்றம்) இந்த தடவை 4 or 2 குழுக்களில் இருந்து 6 or 8 அணிகளை தேர்வுசெய்து SUPER 6 or 8 போட்டிகள் நடாத்தப்படவில்லை. முதற் சுற்று ஆட்டங்களில் முக்கிய அணிகளில் இரண்டு வெளியேறினால் SUPER 6 or 8 போட்டிகள் சோபை இழந்துவிடும் என்பது icc யின் இந்த போட்டி அட்டவணை மாற்றத்திற்கான காரணமாக இருப்பினும் ஒரே போட்டியில் 4 முக்கிய அணிகள் வெளியேறுவதால் சிறப்பாக முதல் சுற்றில் ஆடிய ஒரு அணி அரையிறுதிக்கு முன்னரே ஒரு போட்டியில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறவேண்டிய நிலை உருவாகியுள்ளது.



1996 இல் லீக் போட்டிகள் அனைத்திலும்(5) வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அடுத்த போட்டியான காலிறுதிப் போட்டியில் (Knockout) லாராவின் one man show வினால் மேற்கிந்திய அணியிடம் தோல்வியடைந்து தொடரை விட்டே வெளியேறியது. அதே போன்ற நிலை இந்த 2011 உலகக் கிண்ண போட்டித்தொடளிலும் இடம்பெறலாம்!!. தமது குழுக்களில் முதல் இரு இடங்களுக்குள்ளும் வரும் என்று பலராலும் எதிர்வு கூறப்பட்ட இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, தென்னாபிரிக்கா போன்ற அணிகள் (இவைதான் 2011 உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் என்று பலரும் ஆரூடம் கூறும் முக்கிய அணிகள்) அடுத்த போட்டியில்; அதாவது காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியா, இங்கிலாந்து அணிகளால் வீழ்த்தப்பட்டால் உலகக் கோப்பை கனவை மறக்க வேண்டியதுதான்.

காலிறுதிப் போட்டியில் முன்னணி அணிகளுக்கு அன்றைய நாள் நன்றாக அமையாவிட்டால் என்ன செய்ய முடியும்? one man show, சிறந்த துடுப்பாட்ட இணைப்பாட்டம், சிறப்பான team work என ஏதாவதொரு சிறப்புகாரணி பலம் குறைந்தவை என்று கூறப்படும் நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு கைகொடுக்க; பலமான அணிகளாக கணிக்கப்படும் இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கு அன்றைய நாள் சொதப்பலாக (அதாவது மோசமான துடுப்பாட்டம், மோசமான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு, batting collapse, நடுவரின் தவறான தீர்ப்பு, run out போன்ற காரணிகள்) அமைந்தால் குறிப்பட்ட முன்னணி அணிகளது உலககிண்ண கனவு காலிறுதியிலேயே முடிவடைந்து விடும்.



உதாரணமாக சொல்வதானால் கிறிஸ் கெயில் கோர தாண்டவம் ஒன்று ஆடினால் எந்த எதிர் அணியினாலாவது தாக்குபிடிக்க முடியுமா? மேற்கிந்திய தீவுகளில் கெயில் தவிர போலாட்; இங்கிலாந்தின் பீட்டர்சன், ஸ்வான் (பந்துவீச்சு); நியூசிலாந்தின் டெய்லர், ரெய்டர், மக்கலம் விட்டோரி(பந்துவீச்சு); பாகிஸ்தானின் அப்ரிடி, ரசாக், அக்தர்(பந்துவீச்சு ) என போட்டியை தங்கள் அணிக்கு சார்பாக மாற்றக்கூடிய வீரர்களுக்கு அன்றையநாள் வாய்த்துபோனால் அவுஸ்திரேலியாவும் ஒன்றும் செய்ய முடியாது இந்தியாவும் ஒன்றும் செய்ய முடியாது. காலிறுதி, அரையிறுதி , இறுதி மூன்று Knockout கட்டங்களை தாண்டித்தான் கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்பதால் எந்த பலமான அணியாக இருந்தாலும் ஒரு Knockout போட்டியில் மேலே குறிப்பிட்டதுபோல எதிரணியினர் சவாலை கொடுத்தால் கிண்ணக் கனவை அடுத்த உலகக் கிண்ணம் வரை ஒத்திவைக்க வேண்டியதுதான்.

இப்ப சொல்லுங்க, எந்த அணி கிண்ணத்தை கைப்பற்றும் என்று எதிர்வு கூறமுடியுமா? கடந்த 3 உலகக் கிண்ண போட்டிகளிலாவது அரையிறுதிக்கு தேர்வாகும் என்று நம்பும் நான்கு அணிகளின் பெயரை குறிப்பிட்டு இவற்றில் ஏதாவதொன்று என்று கூறலாம், ஆனால் இந்தத் தடவை அதற்கும் சாத்தியமில்லை. கிண்ணத்தை வெல்லப்போகும் நாடு எதுவென்பதை சித்திரை இரண்டாம் திகதிவரை மிகுந்த எதிர்பார்ப்புடன், பரபரப்புடன், ஒருவித பதட்டத்துடன் எதிர்பார்த்து காத்திருப்போம்.

*--------------------*


முன்னைய பதிவுகள்


உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 1) -> அவுஸ்திரேலியா

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 2)-> பாகிஸ்தான்

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 3)-> இங்கிலாந்து & மேற்கிந்திய தீவுகள்

உலகக்கிண்ண அணிகள் ஒர பார்வை பகுதி 4) -> நியூசிலாந்து & தென்னாபிரிக்கா

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 5) ->இலங்கை

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 6) ->இந்தியா

14 வாசகர் எண்ணங்கள்:

நிரூபன் said...

வணக்கம் சகோதரா, எதிர்வு கூறல்கள் சாத்தியப்படுமா என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அலசல் அருமை தோழா.

Chitra said...

கிரிக்கெட் களஞ்சியமே.... வணக்கம்!

வைகறை said...

ஒரு போட்டியில் இத்தனை ஆராய்ச்சிகளா?

விக்கி உலகம் said...

அருமையான அலசல் பொறுத்திருந்து பாக்க வேண்டியதுதான்.

ஆதவா said...

கலக்கலான பதிவு.. பழைய வர்லாறுகளைத் தேடியெடுத்து தந்திருப்பதிலிருந்தே உங்களது உழைப்பும் தெரிகிறது. இந்த தொடர் முழுக்கப் படித்தேன்... மிக அருமையான அலசல்.

என் தளத்தில் உ.கோப்பை பற்றி என் கணிப்பு எழுதியிருக்கிறேன். பார்வையிடவும்
http://aadav.blogspot.com/2011/02/blog-post.html

Speed Master said...

அருமை

2 ஜின்னா என்ன- செல்போன் பரிசு
http://speedsays.blogspot.com/2011/02/2_04.html

மாத்தி யோசி said...

வந்தேன்! ஓட்டுப் போட்டேன்! கெளம்புறேன்! நமக்கு கிரிக்கெட் என்றால் - கமல்படம் பாத்த மாதிரி! எதுவுமே புரியாது!!

கார்த்தி said...

நானும் எதிர்பார்த்தேன் இப்படி யாரேனும் ஒருவர் பதிவுபோடவேண்டுமென. ஏனெனில் 96ற்குபின்னர் Super SIx இல்லாது நேரடியாக காலிறுதிப்போட்டிகள். இப்படியான போட்டிகளால் ராசியில்லாத அணியாக இருக்கும் தென்னாபிரிக்கா இந்தியா அணிகளுக்கு இது மேலம் under pressure situationதான்.

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும்,வாக்குகளும்...

! சிவகுமார் ! said...

>>> உலக கோப்பை இலங்கையில் நடைபெறுவதால் அதை புறக்கணிக்க சொல்வது குறித்து தங்கள் கருத்து என்ன??

எப்பூடி.. said...

@ நிரூபன்

@ Chitra

@ வைகறை

@ விக்கி உலகம்

@ ஆதவா

@ Speed Master

@ மாத்தி யோசி

@ கார்த்தி

@ பாரத்... பாரதி...

@ ! சிவகுமார் !

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றிகள்.

.................................................................

@ ! சிவகுமார் !

// உலக கோப்பை இலங்கையில் நடைபெறுவதால் அதை புறக்கணிக்க சொல்வது குறித்து தங்கள் கருத்து என்ன??//

புறக்கணிப்பு என்கிற சொல்லை கேட்டாலே செம காமடியா இருக்கு.

r.v.saravanan said...

கிரிக்கெட் களஞ்சியமே.... வணக்கம்!

repeat

r.v.saravanan said...

ஜீவதர்ஷன் நுறாவது பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்

கிரி said...

உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்று தெரியும்..ஆனால் இந்த அளவிற்கு பிடிக்கும் என்று தெரியாது :-) தற்போது கிரிக்கெட் மீதான ஆர்வம் எனக்கு குறைந்து விட்டது.. இருப்பினும் வெற்றி பெறுவதைப்போல இருந்தால் ரசித்துப்பார்ப்பேன்.

ஒருவேளை இவர்கள் அனைவரும் நாட்டுப்பற்றுடன் விளையாடாமல் விளம்பரத்துக்காக விளையாடுவதாலோ! தெரியவில்லை. எது எப்படியோ நானும் மேட்ச் பார்க்க தயார் ஆகி விட்டேன் ;-)

//புறக்கணிப்பு என்கிற சொல்லை கேட்டாலே செம காமடியா இருக்கு//

கோவிச்சுக்காதீங்க ..உங்க பதிவை விட இந்த வரியை நான் ரொம்ப ரசிச்சேன் :-). சும்மா புறக்கணிப்பு புறக்கணிப்புனு காமெடி பண்ணிட்டு இருக்காங்க.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)