Saturday, January 22, 2011

லியோனியும் கடுப்பும்!





எனக்கும் லியோனிக்கும் எந்த வாய்க்கால் சண்டையும் இல்லை என்பதை முன்னரே தெரிவித்துக் கொள்கிறேன்.


அது ஒரு பழைய லியோனியின் பட்டிமன்ற DVD, 1996 காலப்பகுதியில் இடம்பெற்ற பட்டிமன்றம் என்று நினைக்கிறேன், மக்களால் அதிகம் ரசிக்கப்படுபவை புதிய பாடல்களா? இல்லை பழைய பாடல்களா? என்கிற தலைப்பில் ஒரு பட்டிமன்றம். அதன் முன்னுரையில் லியோனி கூறுகிறார் "இதற்க்கு முன்னர் நான் இதே தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றம் ஒன்றில் மக்களால் ரசிக்கப்படுவது பழைய பாடல்கள்தான் என்று கூறிய தீர்ப்பிற்கு புதிய கவிஞர்கள் சிலர் கண்டனம் தெரிவித்தனர்; அதனால் இந்த தடவை புதிய மற்றும் பழைய பாடல்களை பாடிக்காட்டுகிறேன் இறுதியில் நீங்களே தீர்ப்பை கூறிவிடுங்கள்" என்று கூறிவிட்டு பட்டிமன்றத்தை(?) ஆரம்பித்தார்.

பழைய பாடல்களில் தெரிந்தெடுத்த சிறந்த பாடல்களையும், புதிய பாடல்களில் தேர்ந்தெடுத்த மோசமான பாடல்களையும் ஒப்பிட்டு தனது பாணியில் மொக்கை காமடிகள் சகிதம் பேசிக்கொண்டிருந்தார் (பினாத்திக்கொண்டிருந்தார்) அவரால் மோசமாக விமர்சிக்கப்பட்ட பாடல்கள் வரிசையில் 'டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா' பாடல் தப்பான புரிதலோடு கிண்டல் செய்யப்பட்டபோதுதான் அவரது விளக்கத்தின் அளவுகோல் புரிந்தது.

குறிப்பாக வைரமுத்துவையும் ரகுமானையும் குறிவைத்து வாரிக்கொன்டிருந்தார், 'முஸ்தப்பா முஸ்தப்பா' பாடலின் முதல் வரியை கிண்டல் செய்தவர் அதற்கடுத்த வரியையும் அதன் சரணத்தின் சிறப்பையும் கண்டு கொள்ளாமல் விட்டமை புதிய பாடலாசிரியர்களை மட்டம் தட்டுவது அவரால் திட்டமிட்டு செய்யப்படும் செயலைபோல் இருந்தது (இளையராஜாவின் ஆரம்பகால பாடல்களும் புதிய பாடல்கள் பிரிவிலேயே இடம்பெற்றிருந்தது)

பழைய பாடல் ஒவ்வொன்றிற்கும் இணையாக புதிய பாடல்களில் மொக்கை பாடலொன்றை உதாரணத்துக்கு இழுத்தவருக்கு புதிய பாடல்களில் எந்த சிறந்த பாடலும் உதாரணமாக கிடைக்கவில்லை; சின்ன ராசாவே, ஓம்காரி பானிபூரி போன்ற புதிய பாடல்களை உதாரணத்திற்கு இழுத்த லியோனிக்கு வாலியும் வைரமுத்துவும் சமகால சக கவிஞர்களும் எழுதிய எத்தனை எத்தனையோ முத்தான பாடல்கள் இருந்தும் அவை எவையும் கண்ணில் படாமல் போயிற்றா ? இல்லை வேண்டுமென்றே கவனிக்கப்படாமல் விடப்பட்டனவா? என்றுதான் புரியவில்லை.

நான் புதிய பாடல்களை பழைய பாடல்களை விட சிறந்தவை என்று கூறவில்லை, அதற்காக 'அம்மா' பாடலாக ஒரு பழைய பாட்டுக்கு இணையாக புதிய பாடல்களில் 'அரபிக் கடலோரம்' (ஹம்ம ஹம்ம ஹம்மா) பாடல் தவிர வேறேதும் உதாரணத்திற்கு கிடைக்கவில்லையா? என்று கேட்கத்தோன்றுகிறது. ரகுமானின் பல பாடல்களின் இசையினை தரக்குறைவாக கிண்டல்செய்த லியோனி இன்னமும் தமிழ் தொலைக்காட்சிகளில் பண்டிகைகளுக்குத்தான் காட்சி தருகிறார்; ஆனால் ரகுமான் இருகைகளிலும் குச்சிமிட்டாயை வைத்திருப்பதுபோல ஆஸ்காருடன் கண்டம்தாண்டி சென்றுவிட்டார்.

பழைய பாடலான 'மாட்டுக்காரவேலா' என்கிற கிராமிய பாடலுக்கு இணையாக புதிய நாட்டுபுற பாடல்களில் 'ஒத்தரூபாய் தாறன்' தவிர வேறேதும் லியோனிக்கு உதாரணத்துக்கு கிடைக்கவில்லை. அதிலும் 'ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்' பாடலில் வரும் "பிரசவத்திற்கு இலவசமா வாரேம்மா" வரியை நடைமுறைக்கு ஒவ்வாதது என்றார். இப்படி ஏகப்பட்ட இடங்களில் தனது முன்னைய தீர்ப்பை நியாயப்படுத்துவதற்காக ஒரு பக்க சார்பாகவே நடந்து கொண்டார். புதிய பாடலுக்காக ஆஜராகியவரும் புதிய பாடல்களில் தேர்ந்தெடுத்த மொக்கை பாடல்களை சிறந்த பாடலாக பாடிக்காட்டினார், இப்படி பக்காசார்பாக நடாத்தும் பட்சத்தில் அது எப்படி பட்டி மன்றமாகும்?

இதே காணொளியை 15 வருடத்திற்கு முன்னர் பார்த்தபோது சிறுவயதில் ரசிக்க முடிந்தது, ஆனால் இன்று எரிச்சல்தான் வருகிறது; அப்படியென்றால் லியோனி பட்டிமன்றம் சிறுபிள்ளைகளுக்கானதா ? இல்லை சிறுபிள்ளைத்தனமானதா? என்பதுதான் எனக்கு புரியவில்லை! பதினைந்து வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பட்டி மன்றம்தான், இருந்தாலும் இன்றைக்கு பார்த்தபோது ஏற்ப்பட்ட உணர்வை சொல்லணுமின்னு தோணிச்சு அதனாலத்தான் இந்த பதிவு.

குறிப்பிட்ட இந்த ஒரு பட்டிமன்றத்தை வைத்து ஒட்டு மொத்த லியோனியின் பட்டி மன்றங்களையும் குறைகூற இயலாதுதான்; ஆனால் இந்த பட்டிமன்றத்தை பார்த்த பின்னர் நான் எடுத்த முடிவு "விஜய் படத்தை பார்த்தாலும் பார்ப்பேன்; ஆனால் லியோனி பட்டி மன்றத்தை இனிமேல் பார்ப்பதில்லை" என்பதுதான், இதனால் லியோனிக்கு எந்த நஷ்டமும் இல்லை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாகவேண்டும்:-)

24 வாசகர் எண்ணங்கள்:

சிவகுமார் said...

ஜீவா, அவர் அனைத்து பாட்டையும் ஏளனம் செய்கிறார். சமீபத்தில் பொங்கல் நிகழ்ச்சியில் "காயாத கானகத்தே" என்ற பெரும் புகழ் பெற்ற பாடலையும் நையாண்டி செய்தார். அந்த காலம் முதல் இன்று வரை அசைக்க முடியாத பாடகளில் ஒன்று அது. விட்டுத்தள்ளுங்கள். நமக்கு தெரியும் எதை எடுப்பது, எதை தவிர்ப்பதென.

Chitra said...

என்னை பொறுத்தவரை, சன் டிவி - கலைஞர் டிவி போன்ற டிவி நிகழ்ச்சிகளில் - பண்டிகை நேரங்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் - பட்டிமன்றம் என்ற பெயரில் நடத்தப்படும் staged காமெடி அல்லது டிராமா தான். உண்மையான பட்டிமன்றத்துக்குரிய இலக்கணங்கள் எதுவும் இருக்காது. அப்படி நடத்தினால், முகஸ்துதிக்கும் - விளம்பர இடைவெளிக்கும் நேரமும் வழியும் இருக்காதே. :-(

மாணவன் said...

நியாயமான (கடுப்பு) கோபம்தான்....

வேறொன்றும் சொல்வதற்கில்லை....

nerkuppai thumbi said...

சித்ரா சொன்னது போல் ........ விடுமுறை தினங்களில் வரும் நிகழ்ச்சிகள் பட்டிமன்றமா இல்லையா என ஒரு பட்டி மன்றமே நடத்தலாம்.
இலக்கியத் தரம் வாய்ந்த பட்டிமன்றங்களை அறுபதுகளில் ரசித்த எம்மைப் போன்றவர்க்கு கொஞ்சமும் பிடிக்கா
வண்ணம் இவை யுள்ளன.

பழைய, புதிய என்று கோடு போட்டு பிரிப்பதே சரி இல்லை. . த்யாகராஜ பாகவதர் பழையவர், எனக்கு T M S, சுசீலா சமகாலத்தவர்; எஸ் பி பாலசுப்ரமன்ய்மும், இளையராஜவுமே புதியவர்கள் தொண்ணூறுகளில் அதிகமாய் கேட்டவர்க்கு இளையராஜா பழையவர்; ரஹ்மான் புதியவர்; அடுத்த"தலைமுறைக்கு" இது போல் மாறும்.

காலப் போக்கில் வரிகளுக்கு முக்கியம் குறைந்து, இசைக்கு முன் மரியாதை வந்ததை மறுக்க முடியாது.

எல் கே said...

லியோனியை என்றுமே எனக்குப் பிடிக்காது. பல தரவை இரட்டை அர்த்தங்களில் பேசுவார் . அவர் எல்லாம் டம்மி பீசு

சேலம் தேவா said...

கு.ஞானசம்பந்தன் பட்டிமன்றங்களை ஜெயா டிவியில் பாருங்கள்.சற்று வித்தியாசமாக இருக்கும்.

r.v.saravanan said...

நியாயமான கோபம் நண்பா

MANO நாஞ்சில் மனோ said...

கடுப்பாதான் இருக்கு வேற என்னத்தை சொல்ல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

லியோனி செய்வது வெறும் நகைச்சுவை பட்டி மன்றங்களே, கலாய்ப்பதற்கு ஏதுவாக பாடல்கள் செலக்ட் செய்கிறார், அதையெல்லாம் இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

yeskha said...

பட்டிமன்றங்கள் எல்லாம் முன்னரே முடிவு செய்யப்பட்ட தீர்ப்புக்கேற்ப நடத்தப்பெறுபவை... லியோனியிடம் நான் காணும் பெரிய குறை என்னவென்றால் நடுவர் போல நடந்து கொள்ளாமல் ரொம்பப் பேசுவது, பாட்டுப்பாடியே சாகடிப்பது. ஜோக் என்று நினைத்துக்கொண்டு அறுப்பது, எப்போது பார்த்தாலும் சினிமாத்தலைப்புகள், அவையும் உருப்படாத தலைப்புக்கள்..

கக்கு - மாணிக்கம் said...

லியோனி போன்றவர்கள் சற்று நேரம் ஊதித்தள்ளும் சிகரெட் போன்றவர்கள். அதற்க்கு மேல் அவர்களிடம் ஒன்றுமில்லை. டி.வி. போன்ற ஊடங்களின் வரவால் இவர் போன்ற "காலி டப்பாக்கள் " அதிக சத்தம் போடத்தான் செய்யும். கோவை செம்மொழி மாநாட்டில் இவருடைய பேச்சை ஆரம்பித்த பொது டி.வி. யை நிறுத்திவிட்டு
வேறு வேலையை பார்க்கசென்றேன். அது சரி , செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளும் அளவுக்கு இவர் என்ன தமிழில் புலமை பெற்ற விற்பன்னரா? வெறும் காவடி தூக்கும் வேலைதான். பொதுவாக திரை இசை பாடல்களை இவ்வாறு தரும் பிரிப்பது வீண் வேலை. இதெற்கெல்லாம் ஒரு பட்டி மன்றம் அதற்கென்று ஒரு தலைவர்?

! சிவகுமார் ! said...

நீங்களும் வாசிக்கலாம் பிரிவில் என் தளத்தை இணைத்ததற்கு நன்றி நண்பரே!!

ஆகாயமனிதன்.. said...

லியோனியின் சதி பதி'விரோதப் பதிவு
இது என்று சொல்ல மாட்டேன்)
நச்சுன்னு ஒரு பதி'வு..
வாழ்த்துகள்

Thirumalai Kandasami said...

ஹிந்தி - அறிந்தும் அறியாமலும்.

http://enathupayanangal.blogspot.com

ஜீவன்சிவம் said...

விடுங்க பாஸ்....ஆரோகியமான விவாத அரங்கமெல்லாம் புழுதி படிந்த பழங்கதையாக போய்விட்டது..எல்லாம் வியாபாரம்..நீங்களே சொன்ன மாதிரி அதனால் அவருகென்ன நஷ்டம். அவர் கட்டில் மழை தான்...

கார்த்தி said...

ஐயோ ஐயோ இவயெல்லாம் தங்கள் வயிற்றுப்பிளைப்புக்காகவும் பட்டிமன்றங்களை காமடியாக கொண்டு செல்வதற்காகவும்தான் இப்படி செய்கிறார்கள் எனநினைக்கிறேன்.
ஆனாலும் பட்டிமன்ற தீர்ப்புகள் ஒவ்வொரு தரப்பினதும் வாதங்களை பார்த்தே வழங்கப்படவேண்டுமே தவிர. எதுசரி எதுபிழை என்பதை பொறுத்தல்ல. எனவே நீங்கள் சொல்லும் பட்டிமன்றத்தை பொறுத்தவரை லீயோனி அவ்வாறு நடக்கவில்லை என்றே தோன்றுகிறது....
நாங்களும் ஒரு பட்டிமன்றம் நடத்தப்போறம்! நடுவரா வாறீங்களா சார்????

சாமக்கோடங்கி said...

விடுங்கப்பு..

பட்டி மன்றத்தில் பேசுவதெல்லாம் நியாயமாகி விடாது.. இவர்கள் பத்து நிமிடத்தில் எந்த நியாயத்தையும் சொல்லி விடவும் முடியாது, அதன் மூல எவனும் எந்தத் தீர்ப்பும் சொல்லி விட முடியாது.. காசுக்கு வந்து கூவி விட்டுப் போகிறார்கள். விடுங்கள்.. ஆனால் நல்ல பட்டி மன்றங்களும் நடை பெறவே செய்கின்றன.. என்ன செய்ய.. இவர்களுக்குத் தான் கிராக்கி..

கந்தசாமி. said...

"அண்டங்காக்கா கொண்டைகாரி ரண்டக்கா ரண்டக்கா"
பொருள் -(அண்டங்காக்கா ) அண்டத்தை காக்கிற பரமேஸ்வரி,
(கொண்டை காரி) மதுரை மீனாட்சி.

அதாவது அண்டத்தை காக்கும் மதுரை மீனாட்சிக்கு இரண்டு அக்காவாம்.

லியானியின் பட்டிமன்றத்தில் கேட்டது இது ;-)

டக்கால்டி said...

லியோனி செய்வது வெறும் நகைச்சுவை பட்டி மன்றங்களே, கலாய்ப்பதற்கு ஏதுவாக பாடல்கள் செலக்ட் செய்கிறார், அதையெல்லாம் இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

Well said MR.PANNIKUTTY.

Robin said...

லியோனியின் பட்டிமன்றங்களை விரும்பிப் பார்ப்பேன். நல்ல நகைச்சுவையாக பேசுவார். அவர் ஏதோ பெரிய குற்றம் செய்தமாதிரி இங்குள்ளவர்கள் சீரியஸாக பின்னூட்டியிருப்பதுகூட நகைசுசுவைதான் :)

யாவரும் கேளிர் said...

முன்பே எழுதி வைத்த தீர்ப்புக்கு நடத்தும் பொழுதுபோக்கு மற்றும் வியாபாரத்திற்கான பட்டிமன்றங்கள் ...அவ்வளவுதான் .....

banu said...

அவருக்கு அதுதான் பிழைப்பு. பிழைத்து விட்டு போகட்டும் விட்டு விடுங்கள். இப்படி பட்டவர்களின் நிகழ்ச்சியை AVIOD பண்ணுவதே நமக்கு நாமே செய்யும் நன்மை. இதில் அவருக்கு எந்த பதிப்பும் இல்லாவிட்டாலும் அனைவரும் AVOID பண்ணும் பட்சத்தில் , நிகழ்ச்சியை தயாரிக்கும் PRODUCER எதிர்காலத்தில் திருந்த CHANCE உள்ளது. ENGLISH PROVERB : A JOURNEY OF THOUSAND MILES STARTS WITH A SINGLE STEP . இன்று நீங்கள் எடுத்த முடிவு நாளை TOTAL தமிழ் நாட்டு மக்களும் எடுப்பார்கள்

Madurai pandi said...

ரைட்டு!!

எப்பூடி.. said...

@ சிவகுமார்

@ Chitra

@ மாணவன்

@ nerkuppai thumbi

@ எல் கே

@ சேலம் தேவா

@ r.v.saravanan

@ MANO நாஞ்சில் மனோ

@ பன்னிக்குட்டி ராம்சாமி

@ yeskha

@ கக்கு - மாணிக்கம்

@ ஆகாயமனிதன்..

@ Thirumalai Kandasami

@ ஜீவன்சிவம்

@ கார்த்தி

@ சாமக்கோடங்கி

@ கந்தசாமி.

@ டக்கால்டி

@ Robin

@ யாவரும் கேளிர்

@ banu

@ Madurai pandi

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றிகள்.


................................................


@ டக்கால்டி

@ பன்னிக்குட்டி ராம்சாமி

@ Robin


சாதாரண லியோனின் பட்டி மன்றம் என்றால் இந்த பதிவே எழுதியிருக்க மாட்டேன், குறிப்பிட்ட பட்டிமன்றத்தில் முன்னைய தனது பட்டிமன்றத்தில் தான் கூறிய "பழைய பாடல்களைத்தான் மக்கள் இன்னமும் ரசிக்கிறார்கள்" தீர்ப்பிற்கு எதிராக யாரோ ஒரு கவிஞர் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையை கண்டித்து மீண்டும் குறிப்பிட்ட தலைப்பிலே பட்டி மன்றத்தை நடத்தி மக்களை ஒரு துண்டில் தீர்ப்பை எழுதி தருமாறு கூறிவிட்டுத்தான் குறிப்பிட்ட பட்டி மன்றத்தை ஆரம்பித்தார்.

மக்களின் கைகளில் தீர்ப்பை கூறும்படி சொல்லிவிட்டு ஒரு சார்பினரை வாரியம் ஒரு சார்பினரை தூக்கியும் பேசி நிகழ்த்திய பட்டிமன்றத்தைதான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)