Monday, January 10, 2011

ஒருநாள் போட்டிகளின் கனவு அணி





கடந்தவாரம் icc இதுவரை காலமும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்களில் இருந்து பன்னிரண்டுபேர் கொண்ட அணியை தேர்வு செய்திருந்தனர். குறிப்பிட்ட அணித்தேர்வில் பிரபலமான வீரர்களுக்கும் டெம்பிளேட் பொஷிசன்களுக்குமே முன்னுரிமை வழங்கப் பட்டுள்ளது, ஒரு திருப்தியான அணியாக அந்த கனவு அணி என் பார்வைக்கு தெரியவில்லை. எனது பார்வையில் ஒருநாள் போட்டிகளின் முழுமையான கனவு அணி or சிறந்த அணி ஒன்றை தேர்வு செய்கின்றேன், இந்த அணியுடன் உங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்கலாம்,உங்கள் மாற்றுக் கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவிக்கலாம். .

-----------------------


NO 1
சச்சின் டெண்டுல்க்கர்


ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்க்கரை தெரிவு செய்வதில் எந்த தயக்கமும் கடினமும் இருக்கவில்லை. ஐம்பதை நெருங்கும் சத்தங்கள், நூறை நெருங்கும் அரைச்சதங்கள், 20000 நெருங்கும் மொத்த ஓட்டங்கள், அறுபதை கடந்த ஆட்டநாயகன் விருதுகள், ஐநூறை நோக்கி போட்டிகளின் எண்ணிக்கை என யாருமே நினைத்துகூட பார்க்கமுடியாத சாதனையை நிகழ்த்தியுள்ள சச்சின்தான் அவரது ஆஸ்தான பொசிஷனான ஆரம்பத்துடுப்பாட்ட வரிசையின் முதல் வீரர். சச்சினை match winner இல்லை என்பவர்களுக்கு அவரது ஒருநாள் போட்டிகளுக்கான 61 ஆட்டநாயகன் விருதுகளும் பதில் சொல்லும். போட்டிகளை இறுதிவரை கொண்டு சென்று முடிப்பதில்லை என்கின்ற குற்றச்சாட்டும் சச்சின் மீது வைக்கப்படுவதுண்டு, உண்மைதான்; ஆனால் அது அவரது (ஆரம்ப துடுப்பாட்ட வீரரது) வேலையில்லையே!!!

-----------------------


NO 2
அடம் கில்கிறிஸ்ட்


ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் அடுத்த வீரரை தெரிவு செய்வதுதான் மிகவும் சிரமமான விடயம். கிறிஸ் கெயில், வீரேந்திர சேவாக், சனத் ஜெயாசூர்யா, அடம் கில்கிறிஸ்ட் ஆகிய நால்வரில் ஒருவரை தெரிவு செய்வதென்பதைவிட எந்த மூவரை நீக்குவதென்பதுதான் சங்கடமாக இருந்தது. இவர்களில் கெயில், சேவாக் மிக சிறந்த ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் + சுழல் பந்து வீச்சாளர்களாக இருப்பினும்;

அதிரடி ஆட்டத்தின் ஆரம்பமாக அதிகமான உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரையும் துவம்சம் செய்த அதிரடி மன்னன் + சிறந்த சகலதுரைவீரர் சனத் ஜெயசூர்யா மற்றும் மூன்று உலக கிண்ணத்தை ஜெயித்த அவுஸ்திரேலியாவின் ஆரம்பதுடுப்பாடவீரராக மிகப்பெரும் பங்காற்றிய அதிரடி மன்னன் + விக்கட் காப்பாளர் அடம் கில்கிறிஸ்ட் இருவரில் ஒருவர்தான் இரண்டாவது ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு பொருத்தமாக இருப்பார்கள்.

இருவரும் துடுப்பாட்டத்தில் தத்தமது பாணியில் அணிக்கு சிறப்பான பெறுதியை கொடுப்பவர்கள் என்பதால் துடுப்பாட்டத்தை தவிர்த்து ஏனைய காரணிகளை பார்க்கும்போது இவர்கள் இருவரில் சனத் ஜெயசூர்யா சுழல்பந்து + துடுப்பாட்ட வீரராக இருப்பினும்; அடம் கில்கிறிஸ்ட் மிகச்சிறந்த விக்கட் காப்பாளர் + துடுப்பாட்ட வீரராக இருப்பதால்; தனியாக விக்கட் காப்பாளர் ஒருவருக்கு 6 ஆம் இலக்கத்தை விட்டுக்கொடுப்பதை தவிர்த்து அதற்குபதில் ஆறாம் இலக்கத்தில் சிறந்த வீரர் ஒருவரை உட்கொள்வதற்காக அடம் கில்கிறிஸ்ட் இரண்டாவது ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக சேர்த்து கொள்ளப்படுகிறார். கில்கிறிஸ்ட்டோ, ஜெயசூர்யாவோ ஆரம்ப துடுப்பாட்ட நிலைகள் தவிர்ந்து வேறு இலக்கங்களில் ஆடக்கூடிய வீரர்கள் இல்லை என்பதால் சனத் ஜெயசூர்யா அவர்களை அணியில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை.

ஒருநாள் போட்டிகளின் போக்கையே தனது துடுப்பாட்ட ஸ்டையிலால் அப்படியே புரட்டிப்போட்ட வீரர்; ஒரு நாட்டு கிரிக்கட் அணிக்கே சர்வதேசரீதியில் அங்கீகாரம் கிடைக்க மிக முக்கிய காரணமாக இருந்த வீரர்; அனைத்து நாட்டு ஆடுகளங்களிலும் ஓட்டங்களை குவிக்கும் திறமைமிக்க வீரர்; உலகின் எந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் வயிற்றில் புளியை கரைத்த வீரர்; 13000 + ஓட்டங்களையும், 320 + விக்கட்டுகளையும், 120 + காட்சுகளையும், 48 ஆட்டநாயகன் விருதுகளையும் தனது ஒருநாள் கணக்கில் தக்கவைத்திருக்கும் ஒருநாள் போட்டிகளின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் (Best ODI Cricketer For Ever ); 'அதிரடி மன்னன்' சனத் ஜெயசூர்யா அவர்களை குறிப்பிட்ட கனவு அணியில் இணைக்க முடியாமை துரதிஸ்டமே!!!

-----------------------


NO 3
ரிக்கி பொண்டிங்


மூன்றாம் இலக்கத்திற்கான வீரரை தெரிவு செய்வதிலும் எந்த பிரச்சனையும் இல்லை, தொடர்த்து மூன்று உலககிண்ண வெற்றிகளை சுவைத்த அவுஸ்திரேலிய அணியின் மூன்றாம் இல்லாக துடுப்பாட்ட வீரரும்; அவற்றில் இரண்டு உலககிண்ண வெற்றிகளுக்கான அணித்தலைவருமான ரிக்கி பொண்டிக் மூன்றாம் இலக்கத்திற்கு மிகவும் பொருத்தமான வீரர் மட்டுமன்றி கனவு அணியை தலைமைதாங்கி வழி நடத்துவதற்கும் மிகவும் தகுதியானவர். மூன்றாம் இலக்கத்தில் பாண்டிங்கிற்கு போட்டியாக கலிஸ் மட்டுமே இருந்தாலும் பொண்டிங்கின் துடுப்பாட்ட பெறுதிகள் கலிசைவிட சிறப்பாக இருப்பதால் பொண்டிங் மூன்றாம் இலக்கம் + அணித்தலைவராக ஒருநாள் போட்டிகளுக்கான கனவு அணிக்கு வலுச்சேர்ப்பார்.

-----------------------


NO 4
விவ்வியன் ரிச்சட்ஸ்


187 போட்டிகளில் விளையாடி 47 சராசரி மற்றும் 90 + ஸ்ரைக்ரேட்டுடன் 6721 ஓட்டங்களை குவித்து இரண்டு உலககின்னங்களை மேற்கிந்திய தீவுகள் அணி வெல்வதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த மேற்கிந்திய அணியின் 'எவர்கிரீன் சூப்பர்ஸ்டார்' சேர் விவ்வியன் ரிச்சட்ஸ் அவர்களால்தான் நான்காம் இலக்கத்துக்கு மிகச்சரியான வீரர். 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவீரர் 90 + ஸ்ரைக்ரேட்டுடன் இருந்தார் என்பதையே நம்ப கடினமான நிலையில் விவ்வியன் ரிச்சட்ஸ் அவர்கள் 90 + ஸ்ரைக்ரேட்டுடன் 47 + சராசரியுடன் 6721 ஓட்டங்களை குவித்தமை உண்மையில் மிரளவைக்கும் ஒரு சாதனை, அத்துடன் 118 விக்கட்டுகளையும் சாய்த்துள்ள விவ்வியன் ரிச்சட்ஸ் நான்காம் இலக்கத்திற்கு மிகவும் தகுதியான வீரர்.

ரிச்சட்ஸ்சிற்கு போட்டி இல்லாவிட்டாலும் அவரது ரசிகரான; அதிக ஓட்டங்களை நான்காம் இலக்கத்திற்காக குவித்த (6870 ஓட்டங்கள், 39 + சராசரி, 80 + ஸ்ரைக்ரேட் ) இலங்கையின் '96' உலகக்கிண்ண வெற்றிக்கு மிக முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவரான இலங்கையின் வராற்றின் 'தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்' அரவிந்த டி சில்வாஅவர்களும் நான்காம் இலக்கத்திற்கு தகுதியானவர்தான்.

-----------------------


NO 5
இன்சமாம் உல் ஹாக்


இலங்கையின் அர்ஜுன ரணதுங்க, அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் வோ போன்றோர் ஐந்தாம் இலக்கத்தில் அதிகளவு ஓட்டங்களை குவித்திருப்பினும்; நான்காம் + ஐந்தாம் இலக்கங்களில் அதிக ஓட்டங்களை குவித்தவரும்; இறுதிவரை போட்டியை கொண்டுசென்று வெற்றியாக்குவதில் வல்லவரும்; நேரத்திற்கு தகுந்தாற்போல பொறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் ஆடக்கூடியவரும்; 10000 ஓட்டங்களுக்கு அதிகமாக (11000 +) குவித்த ஒரே பாகிஸ்தான் வீரருமான இன்சமாம் உல் ஹாக் ஐந்தாம் இலக்கத்திற்கு மிகவும் பொருத்தமான வீரர். டென்ஷன் என்றால் கிலோ என்னவிலை? என்று கேட்குமளவிற்கு துடுப்பாடும்போது மிகவும் கூலாக ஆடும் இன்சமாம் ஒரு மிகச்சிறந்த match winner.

ரணதுங்க, ஸ்டீவ் வோ, அஜாருதீன், முகம்மது யூசப் போன்றோரும் ஐந்தாம் இலக்கத்திற்கு மிகச் சிறந்த வீரர்கள்தான் என்றாலும்; இவர்கள் அனைவரையும்விட ஐந்தாம் இலக்கத்திற்கு மிகவும் பொருத்தமானவர் இன்சமாம் உல் ஹாக் என்பதால் ஐந்தாம் இலக்கத்திற்குவலுச்சேர்ப்பார்.

-----------------------


NO 6
மைக்கல் பெவன்


ஒருநாள் கிரிக்கட்டின் மிகச்சிறந்த வீரர்களை ஒருவரும்; தனிமனிதராக இறுதிவரை போராடி கிடைக்காது என்றிருந்த பல வெற்றிகளை அவுஸ்திரேலியாவிற்கு பெற்றுக் கொடுத்தவரும்; மிகச்சிறந்த புத்திசாலித் துடுப்பாட்ட வீரருமான மைக்கல் பெவன் ஆறாம் இலக்கத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். 5000 ஓட்டங்களை 55 க்கும் அதிகமான சராசரியில் கடந்த பெவன் 6 சத்தங்கள் உட்பட 6900 + ஓட்டங்களை 53 + சராசரியில் பெற்றுள்ளவர். வேகம்,விவேகம் என அணியின் நிலமைக்கேற்ப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பெவன் தேவைக்கேற்ப முனவரிசயிலும் மாறி ஆடக்கூடியவர்.

பெவனை தவிர்த்து ஆறாம் இலக்கத்திற்கு டெம்ளேட் தேர்வாக விக்கட் காப்பாளர் ஒருவரை தெரிவுசெய்யும் பட்சத்தில் மகேந்திரசிங் டோனி அல்லது மார்க் பவுச்சர் தேர்வாகலாம். ஆனால் அவர்களால் நிச்சயம் பெவனைபோல 6 ஆம் இலக்கத்தை பூரணப்படுத்த முடியாது, அதேபோல 6 ஆம் இலக்கத்திற்கு கில்கிரிஸ்டையும் தேர்வுசெய்ய இயலாது. கில்கிறிஸ்ட், பெவன் இருவரும் அணிக்கு மிகவும் முக்கியம் என்பதால் இவ்விருவரையும் தெரிவுசெய்யும் பொருட்டு சனத் ஜெயசூர்யா அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-----------------------


NO 7
அன்று பிள்ண்டோப்


ஒருநாள் போட்டிகளின் வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் என்றதுமே ஞாபகத்திற்கு வருபவர் ஜக் கலிஸ்தான், 11000 ஓட்டங்களையும் 259 விக்கட்டுகளையும் தன்வசத்தே கொண்டிருந்தாலும் எழாம் இலக்கத்திற்கு கலிஸ் தகுதியானவர் அல்லவே. கலிஸ் தவிர குளூஸ்னர், கபில்தேவ், இம்ரான் கான், பிளின்டோப், ஷோன் போலக், கிறிஸ் கெயின்ஸ், அப்துல் ரஸாக் என பல வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர்கள் எழாம் இலக்கத்திற்கு தகுதியானவர்கள்.

இவர்களில் கபில், இம்ரான்,போலக் போன்றோர் சிறந்த சகலதுறை வீரர்கள் ஆயினும் பந்துவீச்சுத்தான் அவர்களுக்கு அடையாளம். அவர்களைதவிர்த்து சகலதுறை வீரர்கள் என பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் சமவளவு தின் படைத்த வீரர்களாக ரஸாக், கெயின்ஸ்,குளூஸ்னர் போன்ற வீரர்கள் இருப்பினும் இவர்கள் அனைவரையும்விட அன்று பிளின்டாப் சிறப்பான தெரிவாக இருப்பார்.

இறுதி ஓவர்களில் பினிஷிங்கிற்கும், ஓட்டவேகம் குறைவாக இருக்கும் நேரங்களில் பிஞ்ச் ஹிட்டிங்கிற்கும் தனது துடுப்பாட்டத்தின் மூளலாம் உதவக்கூடிய பிளின்டோப் முழுமையான இனிங்க்ஸ் ஒன்றையும் ஆடக்கூடிய வல்லமை படைத்தவர். அதேபோல போட்டியின் முக்கியமான தருணங்களில் வேகத்துடன் புத்திசாலித்தனமாகவும் பந்துவீசக்கூடிய மிகச்சிறந்த பந்துவீச்சாளரான பிளின்டாப் இங்கிலாந்தின் பந்துவீச்சு வரிசையின் மிகப்பெரும் பலமாக இருந்துள்ளார். இவரை எழாம் இழக்க வீரராக தெரிவு செய்வது மிகவும் சிறப்பாக அமையும்.

-----------------------


NO 8
வசீம் அக்ரம்


எப்படி சச்சினுக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அணியில் இடம் வழங்க கடினமாக இருக்கவிலையோ; அப்படித்தான் பந்துவீச்சாளராக வசீம் அகரம் அவர்களுக்கும் அணியில் இடம் கொடுப்பதற்கு தயக்கமோ கடினமோ இருக்கவில்லை. ஸ்விங் கொன்றோல், ரிவேர்ஸ் ஸ்விங், யோக்கர், பவுன்சர், ஸ்பீட், வேரியேசன் என வசீமிடம் இல்லாத பந்துவீச்சு திறனே இல்லை. மட்டமான ஆடுகளங்களிலும் துடுப்பாட்டவீரர்களுக்கு தண்ணி காட்டும் வசீம்; பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எந்த துடுப்பாட்ட வீரருக்கும் சிம்ம சொப்பனம்தான். பின்வரிசை வீரர்கள் என்ன நடக்கிறது என்பதை ஊகிக்கமுடியாமலே வசீம் அக்ரமின் யோக்கர் பந்துகளில் வெளியேறுவது அப்பப்போ நடக்கும் வாடிக்கை.

-----------------------


NO 9
முத்தையா முரளிதரன்


எப்படி சச்சின், வாசீமை அணியில் சேர்ப்பதற்கு சிரமமும் தயக்கமும் இருக்கவில்லையோ அதேபோல முத்தையா முரளிதரன் அவர்களையும் அணியில் சேர்த்துக்கொள்ள எந்தவித தயக்கமும் இருக்கவில்லை. மிகச்சிறந்த சராசரி, மிகச்சிறந்த எக்கனாமி, அதி கூடிய விக்கட், எந்தமாதிரியான மற்றும் எந்தநாட்டு ஆடுகளங்களிலும் பந்தை திருப்பும் (Turn) திறன், இக்கட்டான நேரங்களில் சிறப்பாக பந்துவீசி ஓட்டங்களை கட்டுப்படுத்துவதோடு விக்கட்டுகளையும் பறிக்கும் அசாத்திய திறமை என முரளிபற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றுடன் இலவச இணைப்பாக உயிரைகொடுத்து முரளி செய்யும் களத்தடுப்பு!!!!

சக்லைன் முஸ்டாக் ஒருநாள் போட்டிகளின் மிகவும் சிறப்பான பந்துவீச்சாளராக இருப்பினும் முரளி என்னும் இமயம் இருப்பதால் சக்லைனை அணியில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை.

-----------------------


NO 10
அலன் டொனால்ட்


வக்கார் யூனுஸ், ஷோன் பொலக், அலன் டொனால்ட் இம்மூவரும் வேகப்பந்துவீச்சாலர்களாக அணியில் சேர்த்துக் கொள்வதற்கு தகுதியானவர்களாக இருப்பினும் இம்மூவரில் ஒருவரையே அணியில் இணைக்கலாம் என்பதால் இம்மூவரில் பௌலிங் ஸ்ரைக்ரேட் , பௌலிங் அவரேஜ், ஒரு போட்டிக்கான சராசரி விக்கட் எண்ணிக்கை, எக்கனாமி போன்ற காரணிகளை வைத்து ஒப்பிடும்போது வக்கார் யூனுஸ் மற்றும் ஷோன் பொலக் இருவரையும் விட சற்று அதிகமான பெறுபேறுகளுடன் ஒருகாலத்தில் தன் வேகத்தால் சகல துடுப்பாட்ட வீரர்களையும் நடுங்கவைத்த அலன் டொனால்ட் சிறந்த தெரிவாக உள்ளார்.

போட்டிக்கு 1.65 விக்கட்டுகளை ஏனைய இருவரையும்விட அதிகமாக கைப்பற்றும் டொனால்டின் வியத்தகு பௌலிங் அவரேஜ் 21.78. டொனால்ட்டைவிட வக்கார் பௌலிங் ஸ்ரைக்ரேட்டிலும்; பொலக் எக்கனமியிலும் சிறப்பான பெறுதியை கொண்டிருப்பினும் மிகுதி மூன்று விடயங்களிலும் டொனால்ட் இவர்கள் இருவரையும் விட சிறப்பான பெறுதிகளை கொண்டிருப்பதால் அலன் டொனால்ட் வேகப் பந்துவீச்சாளராக ஒருநாள் போட்டிகளுக்கான கனவு அணிக்கு பலம் சேர்ப்பார்.

-----------------------


NO 11
கிளன் மக்ரா


முன்னைய மூவருடன் இவரையும் போட்டியில் சேர்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்றாலும் இருபக்கமும் ஸ்விங் கொன்றோல், லைன் & லெந், தேவைக்கேற்ப யோக்கர், எக்ஸ்ரா பவுன்ஸ், துல்லியமான பவுன்சர், வேரியேசன் என்பனவற்றின் மூலம் ஜாம்பவான் துடுப்பாட்ட வீரர்களை திணறவைக்கும் தனித்தன்மை வாய்ந்த பந்துவீச்சாளரான கிளன் மக்ரா அம் மூவரயும்விட ஒருபடி அதிமாகவே சிறப்பாக பந்துவீசக்கூடியவர். அவுஸ்திரேலியாவின் இறுதி மூன்று உலக கிண்ண வெற்றிகளிலும் மிகப்பெரும் பங்காற்றிய கிளன் மக்ராவை ஒருநாள் போட்டிகளுக்கான கனவு அணியில் சேர்த்துக்கொள்வது கனவு அணிக்குத்தான் பெருமை.

-----------------------


NO 12
ஜக் கலிஸ்


ஒரேயொரு எக்ஸ்றா வீரராக மட்டும் பன்னிரண்டாவது வாறார் இருப்பதால்; இவர் பந்து வீச்சாளர் ஒருவரையும், துடுப்பாட்ட வீரர் ஒருவரையும் நிவர்த்தி செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். அந்தவகையில் தொழில்சார் துடுப்பாட்ட வீரராகவும் தனது அணியின் ஆரம்பபந்து வீச்சாளராகவும் 11000 + ஓட்டங்களையும் 250 + விக்கட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் தனது கணக்கில் வைத்திருக்கும் ஜக் கலிஸ் பன்னிரண்டாவது வீரருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார்.

குறிப்பு :- அணியில் முரளி தவிர்த்து சச்சின், விவியன் ரிச்சட்ஸ், மைக்கல் பெவன் போன்றோரும் சுழல்பந்து வீசக்கூடியவர்கள் என்பதால் இன்னுமொரு சுழல் பந்து வீச்சாளரை தேர்வு செய்ய முடியவில்லை.

அதேபோல அனைத்து பொசிஷன்களிலும் சிறப்பாக ஆடக்கூடிய பிறையின் லாராவும் அணியில் சேர்த்துக் கொள்ளப்படாமை தவிர்க்க முடியாமையே.

21 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

ம.தி.சுதா said...

சரியான தெரிவு.. என்னை தண்ணீர் கொடுப்போரில் சேர்த்திருக்கலாம்... ஹ..ஹ..ஹ..

மாணவன் said...

சிறப்பான தேர்வு அனைத்தையும் தெளிவாக தொகுத்து பதிவிட்டமைக்கு சிறப்பு நன்றிகள் பல

Speed Master said...

அருமை

Chitra said...

Super!!!!!!

மதுரை பாண்டி said...

தேர்வு நல்லா இருக்கு

Thirumalai Kandasami said...

Team okay,,but i will add Warne instead of "Murali"

இரவு வானம் said...

நல்ல தேர்வுதான்., ஆனா கனவுதான தல

karthik said...

01. சனத் ஜெயசூரிய
02. அடம் கில்கிரிஸ்ட்
03. ஜாக் கலிஸ்
04. சச்சின் டெண்டுல்கர்
05. விவியன் ரிச்சர்ட்ஸ்
06. மைக்கல் பவன்
07. ஷான் பொல்லாக்
08. வாசிம் அக்ரம்
09. முத்தையா முரளிதரன்
10. க்ளென் மக்ரா
11. அலன் டானல்ட்

12. கபில் தேவ் / குமார் சங்கக்கார

SUREஷ் (பழனியிலிருந்து) said...

விவியன் ரிச்சர்ட்ஸ்ஸை தேர்வு செய்த நீங்கள் நவாப் கபிலை விட்டது எப்படி?

=======================================

12 நபராக கபில் தேவ்.., அதற்கு அவரை மறப்பது எவ்வளவோ மேல்.,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இவர்களில் கபில், இம்ரான்,போலக் போன்றோர் சிறந்த சகலதுறை வீரர்கள் ஆயினும் பந்துவீச்சுத்தான் அவர்களுக்கு அடையாளம்//

ஆல்ரவுண்டர் என்றே பெயரை உருவாக்கியவர் கபில்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

கபிலை நீங்கள் மனோஜ் பிரபாகர் என்று நினைத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்,

கார்த்தி said...

என்ன சார் வோர்னைக்காணல? வேஸ்ட் இண்டிஸின் இண்டிஸின் வேகப்புயல்கள் அம்புறுஸ்/வோல்ஸ்/அண்டி றாபட்ஸையோ காணலயே???

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ மாணவன்

@ Speed Master

@ Chitra

@ மதுரை பாண்டி

@ Thirumalai Kandasami

@ இரவு வானம்

@ karthik

@ SUREஷ் (பழனியிலிருந்து)

@ கார்த்தி

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றிகள்.

................................................


@ Thirumalai Kandasami

//Team okay,,but i will add Warne instead of "Murali"//

நன்றி சார், உங்க அணியில் நீங்கள் வோனை இணைப்பதனால் அணிக்கு பலம் கிடைக்குமென்று எண்ணினால் நிச்சயமாக இணைக்கலாம்.
டெஸ்ட் போட்டிகள் என்றால் நான் இருவரையும் ஒப்பிட்டிருப்பேன் ஒருநாள் போட்டிகள் என்பதால் வோனை முரளியுடன் ஒப்பிடக்கூட இல்லை, காரணம்.....


Name --- warne - murali

wicket --->293 - 517
SR ------->36.3 - 35.3
Ave ------>25.73 - 23.11
econ ----->4.25 - 3.92

................................................


@ கார்த்திக்

உங்கள் தெரிவிற்கு நன்றி, உங்களுக்கு திருப்தியான உங்கள் தெரிவில் சச்சின் நான்காம் இலக்கத்திலும் பொண்டிங் அணியிலும் இல்லாமை மட்டுமே எனக்கு உடன்பாடில்லாதது, இருப்பினும் உங்கள் பார்வையில் அது சரியாக இருந்திருக்கலாம்.

................................................


@ SUREஷ் (பழனியிலிருந்து)

உங்கள் பின்னூட்டல்களில் கபிலை அணியில் இணைக்கவில்லை என்கின்ற கோபம் தெரிகிறது, அதற்க்கு அவசியமே இல்லை. இது எனக்கு திருப்தியான கனவு அணி, உங்களுக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்கலாம் என்று பதிவின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டுள்ளேன்.

எனக்கு ஏழாம் இலக்கத்தில் கபிலைவிட பிளின்டோப் திருப்தியாக இருப்பார் என்று தோன்றியது அதனால் பிளிண்டோப்பை அணியில் இணைத்தேன், உங்களுக்கு கபில் திருப்தியானால் நீங்கள் அவரை உங்கள் கனவு அணியில் இணையுங்கள், அதற்காக எனது பார்வையில் உங்களுக்கு திருப்தியான வீரரை எப்படி இணைக்க முடியும்?

கபில் மட்டுமல்ல; சனத், பொலக், லாரா என எனக்கு மிகவும் பிடித்த பல வீரர்களை எனது கனவு அணியில் இணைக்க முடியவில்லை.

................................................

@ கார்த்தி

//என்ன சார் வோர்னைக்காணல? வேஸ்ட் இண்டிஸின் இண்டிஸின் வேகப்புயல்கள் அம்புறுஸ்/வோல்ஸ்/அண்டி றாபட்ஸையோ காணலயே???//

இது பன்னிருவர் கொண்ட அணி நீங்கள் சொல்பவர்கள் எல்லோரையும் இணைப்பதானால் முப்பதுபேர் கொண்ட குளாமைத்தான் தெரிவு செய்ய வேண்டும் :-)

பிரசன்னா said...

Statistical comparisions (what you have given) of Murali & Warne may justify Murali.. But, I prefer Warne in place of Murali.. :-)
P.S: Warne is the one who achieved in all the cricket playing pitches.. Murali in good only in Asian pitches.. If you dont mind, Pls try to get that statistical report.. That will tell who is best..

எப்பூடி.. said...

@ பிரசன்னா

//Statistical comparisions (what you have given) of Murali & Warne may justify Murali.. But, I prefer Warne in place of Murali.. :-)
P.S: Warne is the one who achieved in all the cricket playing pitches.. Murali in good only in Asian pitches.. If you dont mind, Pls try to get that statistical report.. That will tell who is best..//

முதலில் உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி, இப்போ மேட்டருக்கு வருவோம் :-)

WI -> MURALI --> M- 15, W-29, ECO-4.14 **** WARNE --> M-11, W-17, ECO-4.48
NZ ->MURALI --> M-19, W-27, ECO-3.84 **** WARNE --> M-11, W-16, ECO-3.77
ENG -> MURALI --> M-10, W-14, ECO-4.03 **** WARNE --> M-18, W-31, ECO-4.28
SA -> MURALI --> M-30, W-40, ECO-4.02 **** WARNE --> M-20, W-29, ECO-4.59

இது ஆசிய நாடுகளுக்கு வெளியே முரளியினதும் வோனினதும் பெறுதிகள், இவற்றில் வார்னைவிட முரளிக்குத்தான் சிறப்பான பெறுதிகள் அதிகமாக உள்ளது நன்றாக தெரிகிறது. அவுஸ்திரேலியா வோனினது சொந்த நாடு என்பதால் அவுஸ்திரேலியாவில் முரளியை வோனுடன் ஒப்பிட இயலாது, ஆனாலும் அங்கும் முரளி M-41, W-58, ECO-4.61 எனும் கணக்கில் சிறப்பான பெறுதியை கொண்டுள்ளார்.

ஆனால் ஆசிய நாடுகளில் முரளியின் தாய் நாடான இலங்கை தவிர்த்து இந்திய பாகிஸ்தான் மண்ணிலே முரளி வோனைவிட மிகச்சிறப்பான பெறுதியை கொண்டுள்ளார்

PAK -> MURALI --> M-17, W-29, ECO-3.82 **** WARNE --> M-7, W-6, ECO-4.33
IND-> MURALI --> M-27, W-34, ECO-4.13 **** WARNE --> M-15, W-21, ECO-4.43

டெஸ்ட் போட்டிகள் என்றால் முரளியுடன் வோனினை ஒப்பிட்டுபார்க்கலாம், விவாதிக்கலாம். ஆனால் ஒருநாள் போட்டிகளில் முரளியுடன் ஒப்பிடுமளவிற்கு வோனினது பெறுதிகள் போதாது :-)

arun21 said...

என்ன சார் பாண்டிங்கை விட லாரா இன்னும் தகுதியாக இருப்பார், அல்லது இன்சமாமின் இடத்திற்கு ரிச்சர்ட்ஸை மாற்றி நான்காம் இடத்திற்கு லாராவை போட்டிருக்கலாம், நல்ல தெரிவு.. பொல்லாக் இல்லாமல் போனது கொஞ்சம் கவலையே..

Philosophy Prabhakaran said...

இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

rawanan said...

"சக்லைன் முஸ்டாக் ஒருநாள் போட்டிகளின் மிகவும் சிறப்பான பந்துவீச்சாளராக இருப்பினும் முரளி என்னும் இமயம் இருப்பதால் சக்லைனை அணியில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. "

WARNE ஐ விட எந்த வகையில் SAQLAIN சிறந்தவர் ?

எப்பூடி.. said...

@ arun21

@ Philosophy Prabhakaran

@ rawanan

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

................................................


@ rawanan

//WARNE ஐ விட எந்த வகையில் SAQLAIN சிறந்தவர்?//



ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை வோனைவிட சக்லைன் சிறந்தவர்தான். உங்களுக்காக இருவரதும் பெறுதிகள்.


Name --- warne -saqlain
Match----->193 - 169
wicket ---->293 - 288
SR ------->36.3 - 30.4
Ave ------>25.73 - 21.78
econ ----->4.25 - 4.29

வோன் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் ஒருநாள் போட்டிகளில் வோனைவிட முரளி, சக்லைன் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள்

கந்தசாமி. said...

ஜெயசூர்யா சிறந்த நிலையில் இருக்கும் போதே ஓய்வு அறிவித்து விலகி இருந்தார் என்றால் நிச்சயமாக 11 வரில் இணைந்திருப்பார் .ஆனால் தற்சமயம் ஜெயசூர்யாவின் நிலை தெரியும் தானே.. அருமையாக எழுதியுள்ளீர்கள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)