Friday, January 7, 2011

கிரிக்கெட் சூதாட்டம் என்றால் என்ன ?

கிரிக்கட் சூதாட்டம் என்றதும் நம் மனதிற்குள் உடனே ஞாபகத்திற்கு வரும் பெயர்கள் சில பாகிஸ்தான் வீரர்கள் , அசாருதீன், ஹான்சி குரேனியே போன்றவர்களுடயதுதான். ஆனால் கிரிக்கட் சூதாட்டத்தை பொறுத்தவரை இவர்கள் எல்லாம் கருவிகள்தான், இவர்களை இயக்கி இவர்களுக்கு சிறு எலும்பு துண்டை பிச்சையாக போட்டுவிட்டு கொள்ளை கொள்ளையாக லாபம் சம்பாதிக்கும் பிரபல சூதாட்ட நிறுவனங்கள் பெயர்கள் அதிகமானவர்களுக்கு தெரிவதில்லை.

விளையாட்டு வீரர்களுக்கு பணத்தையும் ரசிகர்கள் மத்தியில் கெட்டபெயரையும் வாங்கி கொடுத்துவிட்டு கோடி கோடியாக சம்பாதிக்கும் முக்கிய சூதாட்ட நிறுவனங்களான williams hill, paddy power, coral, bat365 போன்றவைதான் கிரிக்கட்டை வைத்து (கிரிக்கட் மட்டுமல்ல டெனிஸ், கால்ப்பந்து, மோட்டார்,கார் பந்தயங்கள், ext...) கோடி கோடியாக பணத்தை சம்பாதிக்கும் முக்கிய நிறுவனங்கள்.

குறிப்பிட்ட இந்த நிறுவனங்கள் தங்கள் சொந்த நாட்டு அரசாங்கத்துக்கு வரி கட்டும் முறையாக சூதாட்ட அனுமதி பெற்ற நிறுவனங்கள் தான். இவர்களுடனான கிரிக்கட் பந்தயங்கள் அதிகமானவை இணையத்தளங்கள் ஊடாகவே நடத்தப்படுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு போட்டியும் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து போட்டி முடிவடையும் இறுதி நிமிடம்வரை பலவிதமான பந்தயங்கள் பலவிதமான தொகைகளுக்கு குறிப்பிட்ட நிறுவனங்கள் நிர்ணயிக்கும்.

அந்த பந்தய தொகை போட்டியின் போக்கிற்கேற்ப அவ்வப்போது மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும். உதாரணமாக 300 ஓட்டங்களை எதிரணி துரத்த வேண்டிய நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அந்த அணி எட்டுமா என்கின்ற கேள்விக்கு 'ஆம்' என பந்தயம் கட்டினால் 1$ இற்கு 10$ வழங்குவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தால் பின்னர் அந்த அணி 2 or 3 விக்கட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை பெற்றிருப்பின் பந்தயதொகை 1$ இற்கு 1.2$ அளவிற்கு குறைக்கப்படும். இதேபோலத்தான் ஏனைய விளையாட்டுகளுக்கும் பந்தயம் நிர்ணயிக்கப்படும்.கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்தயத்தில் கேட்கப்படும் முக்கியமான சில கேள்விகள்


1) குறிப்பிட்ட போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்? அல்லது போட்டி சமநிலையா?

2) இரு அணிகளிலும் அதிக ஓட்டம் பெறும் வீரர் யார்?

3)இரு அணிகளிலும் அதிக விக்கட்டுகள் எடுக்கும் வீரர்கள் வார்?

4) குறிப்பிட்ட ஓவர்களில் குறிப்பிட்ட அணி குறிப்பிட்ட ஓட்டங்களை எட்டுமா? இல்லையா?

5) மைதானத்துக்குள் ஆடிக்கொண்டிருக்கும் வீரர்கள் இருவரும் குறிப்பிட்ட சொந்த ஓட்ட எண்ணிக்கையை எட்டுவார்களா? இல்லையா?

6) குறிப்பிட்ட ஓட்டங்களுக்குள் அடுத்த இலக்கு சரியுமா? இல்லயா?

7) அடுத்ததாக ஆட்டமிழக்கபோகும் வீரர் யார்?

8) அடுத்த வீரர் ஆட்டமிழக்கபோகும் முறை என்ன? (காட்சா? விக்கட் கீப்பர் காட்சா? போல்டா? LBWW வா? அல்லது வேறா?)

9) இனிங்க்ஸ் முடிவில் குறிப்பிட்ட அணி குறிப்பிட்ட ஓட்டங்களை தாண்டுமா? மாட்டாதா?

10) குறிப்பிட்ட ஜோடிகளின் இணைப்பாட்டம் குறிப்பிட்ட ஓட்டங்கள் வரை வீழ்த்தப் படாமல் இருக்குமா?இப்படியான கேள்விகளுக்கு நேரத்திற்கு ஏற்றால்போல சூதாட்ட தொகைகள் மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்,சூது விளையாடுபவர்களும் தங்களது எண்ணத்திற்கேற்ப பணத்தை கட்டிக்கொண்டிருப்பார்கள். இதில் இரு பகுதியினருக்கும் (கம்பனி & கஸ்டமர்) இலாப நஷ்டம் மாறிமாறி வந்தாலும் அதிகமான இலாபம் கிடைக்கும் சந்தர்ப்பம் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கே அதிகம். இதனால் கிரிக்கட்டுக்கோ அல்லது ஏனைய எந்த விளயாட்டுகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை, இதனால் வரும் லாப நஷ்டங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களையும் அவர்களுடன் சூதாடும் வாடிக்கையாளர்களும் சார்ந்தது.

ஆனால் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கிடைக்கும் இலாபம் போதாமையோ! அல்லது பேராசையோ!! இல்லை சிலநேரங்களில் ஏற்ப்படும் நஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்காகவோ! இவர்கள் நாடும் குறுக்கு வழிதான் பிரச்சினையின் ஆரம்பம். சாதாரணமாக போகும் போட்டி முடிவுகளால் இவர்களுக்கு அதிகளவு பணத்தை சம்பாதிக்க முடியாது என்பதால் இவர்கள் நாடும் குறுக்கு வழிதான் match fixing என்றழைக்கப்படும் கிரிக்கெட் சூதாட்டம்.போட்டிகளின் முடிவுகளை மாற்றியமைப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சில வீரர்களிடம் பெரும்தொகை பணத்தை கொடுத்து ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வதுதான் கிரிக்கெட் சூதாட்டம். குறிப்பிட்ட வீரர்களிடம் இதை இவர்கள் நேரடியாக கையாள்வதில்லை, இவர்களுக்காக வீரர்களிடம் எஸ்.எம்.எஸ் மூலமாகவோ, விளம்பர ஏஜன்ட் போல நடித்து நேரடியாகவோ சென்று பேரம்பேசியோ காரியத்தை சுமூகமாக முடித்து கொடுப்பதற்கென்று இருப்பவர்கள்தான் இடைத்தரகர்கள் எனப்படுபவர்கள்.

போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே போட்டி முடிவை மாற்ற சூதாட்டத்திற்கு ஒத்துக்கொண்ட குறிப்பிட்ட வீரர்களை இவர்கள் தயார் படுத்தி விடுவார்கள். போட்டியின் முக்கிய தருணங்களில் குறிப்பிட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் உத்தரவுகளை அந்தந்த வீரர்கள் செவ்வனவே நிறைவேற்றி பேசிய தொகையை தாங்கள் பெற்றுக்கொண்டு கிரிக்கெட்டிற்கும், கிரிக்கட் ரசிகர்களுக்கும், சூதாட்டத்தில் பங்குபெறும் வாடிக்கையாளர்களுக்கும் நாமத்தை பூசிவிடுவார்கள், இதுதான் கிரிக்கட் சூதாட்டத்தின் வேலை. இதனால் கம்பனிகளுக்கு கிடைக்கும் இலாபத்தில் 'சில'கோடிகளை குறிப்பிட்ட வீரர்களுக்கும், தரகர்களுக்கும் கொடுக்கும் சூதாட்ட நிறுவனங்கள் மிகுதி பல கோடிகளை லம்பாக ஏப்பமிடுகின்றன.

சூதாட்டத்தில் எப்படி குறிப்பிட்ட நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம்5 ஆவது ஓவர் பந்து வீசிக்கொண்டிருக்கும் போது பந்தயகாரர்களால் "7 ஆவது ஓவரின் நான்காவது பந்தை குறிப்பிட்ட பந்துவீச்சாளர் no ball ஆக வீசுவாரா?" என்றொரு கேள்வி கேட்க்கப்படுகிறது. இதற்க்கு 'ஆம்' என்பவர்களுக்கு 1$ இற்கு 10$ வழங்குவதாகவும் 'இல்லை' என்பவர்களுக்கு 1$ இற்கு 1.5$ டொலர் வழங்குவதாகவும் அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு பந்தை no ball ஆக ஒருவர் வீசும் சந்தர்ப்பம் மிக மிக குறைவு என்பது கிரிக்கட் தெரிந்த எல்லோருக்குமே தெரிந்த விடயம்.

ஒரு டெஸ்ட் போட்டியில் 30 ஓவர்கள் அதாவது 180 பந்துகள் பந்து வீசும் ஒருவர் கிட்டத்தட்ட 2 or 3 பந்துகளைத்தான் no ball ஆக வீசுவது வழமை. இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு பந்தினை no ball ஆக வீசுவார் என பந்தயம் கட்டி (கிடைக்காத 10$ இற்காக) 1$ ஐ இழப்பதிலும் பார்க்க; no ball வீசமாட்டார் என பந்தயம் கட்டி (1$ இற்கு) கிடைக்கும் 1.5$ இற்காகதான் மிகப் பெரும்பான்மையானவர்கள் பந்தயம் கட்டுவார்கள்.

குறிப்பிட்ட பந்தினை no ball ஆக வீசும் சந்தர்ப்பம் 'இல்லை' என்பதற்கே அதிகபடியான சாத்தியம் உள்ளதால் அதிகமானவர்கள்(95 % இற்கு மேல் ) அதிகலாபம் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில் பந்தய தொகையை ஆயிரக்கணக்கில் கட்டுவார்கள் (1000$ இற்கு 1500$ கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில்). இதனால் சூதாட்டகம்பனிக்கு மிக அதிகளவிலான பணம் no ball ஆக வீசும் சந்தர்ப்பம் 'இல்லை' என பந்தயம் கட்டியவர்களால் வந்து சேர்ந்துவிடும்; இந்நிலையில் சூதாட்ட கம்பனியினது இடைத்தரகர்களால் குறிப்பிட்ட பந்து வீச்சாளருக்கு குறிப்பிட்ட பந்தினை no ball ஆக வீசுமாறு உத்தரவு வழங்கப்படும். அந்த பந்து வீச்சாளரும் குறிப்பிட்ட பந்தினை no ball ஆக வீசி தனது 'பணநாயக' கடமையை நிறைவேற்றி தனக்குரிய பணத்தை தரகர் மூலம் பெற்றுவிடுவார்.இந்த விடயத்தில் சூதாட்டகம்பனி, இடைத்தரகர், குறிப்பிட்ட வீரர் மட்டும் இலாபத்தை சம்பாதிக்க அணியின் சூதாட்டத்தோடு சம்பந்தப்படாத ஏனைய வீரர்கள், அந்நாட்டு ரசிகர்கள், கிரிக்கட் ரசிகர்கள் என மிகுதி அனைவரும் ஏமாற்றப்படுகின்றனர்.இப்படியான சூதாட்டங்கள் எப்போதெல்லாம் நடக்கின்றன என்பதை அவ்வளவு எளிதில் யாரும் கண்டு பிடித்துவிட முடியாது. அதையும் மீறி சில சமயங்களில் வீரர்கள் பிடிபடும்போது ஒட்டு மொத்த கிரிக்கட் மீதான நம்பிக்கையும் கேள்விக்குறியாகி விடுகிறது. இப்படியான match fixing கிரிக்கெட்டை விட இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்கிடையிலான புகழ் பெற்ற கால்ப்பந்தாட்ட போட்டியான 'இங்கிலீஸ் பிரீமியர்' போட்டிகளில்தான் அதிகளவில் இடம்பெறுகின்றன.

மேலே குறிப்பிட்ட no ball ஒரு சிறு உதாரணம்தான், அதைவிட பலவிடயங்களுக்காக வீரர்களுக்கு பணம் கொடுத்து போட்டியின் முடிவுகளையும், போக்கையும் மாற்றியமைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன, இடம்பெறுகின்றன, இடம்பெறும்!!!! ஆட்டமிழக்கும் முறை, குறிப்பிட்ட ஓட்டத்தில் ஆட்டமிழப்பது போன்ற பல விடயங்களுக்காக அணிவீரர்களை விலைக்கு வாங்கும் கம்பனிகள்; அணித்தலைவர் ஒருவரை சொதப்பும் பந்துவீச்சாளருக்கு OR தன்னுடன் சேர்ந்த கூட்டு களவானிக்கு அதிகளவு ஓவர்கள் பந்துவீச கொடுப்பது, நன்றாக பந்துவீசும் ஒருவருக்கு பந்துவீச சந்தர்ப்பம் கொடுக்காமல் இருப்பது, துடுப்பாட்ட வரிசையை மாற்றியமைப்பது, தான் குறிப்பிடும் விதமாக ஆடும்படி பணிப்பது (வேகமாக or நிதானமாக) போன்ற பணநாயக கடமைகளை செய்வதற்காக நாடுகின்றன.கிரிக்கட்டில் (எந்த விளையாட்டானாலும்) எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்ற எழுதப்படாத விதி துணையாக இருப்பதால் போட்டியின் முடிவை மாற்ற இவர்கள் செய்யும் தில்லு முல்லுக்களை சாதாரண ரசிகர்களால் கண்டு பிடிக்க முடியாது, இது அவர்களுக்கு மிகப் பெரும்பலம். கடந்த சில ஆண்டுகளாக போர்முலா 1 போட்டிகளின் இறுதிப்போட்டிகளில் இறுதிநேரத்தில் இரண்டாம் or மூன்றாம் இடத்தில் இருந்த வீரர்கள் அந்தாண்டுக்கான சாம்பியன்களாக தெரிவாகியமை போர்முலா 1 போட்டிகள் மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்ப்படுத்தி இருந்தாலும் அவற்றிற்கான ஆதாரங்கள் எவையும் சிக்காததால் அவற்றை தற்செயல் என்றே எண்ணவேண்டி உள்ளது !!!!

செய்யும் தப்புக்கள் பிடிபடும்வரை எல்லோருமே உத்தமர்கள்தான் என்கின்ற 'சுஜாதா' அவர்களின் வாசகம்போல பிடிபட்ட வீரர்களை தூற்றும் நாம் இதுவரை பிடிபடாத பல வீரர்களை உத்தமர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். யார் கண்டார்கள் எந்த புற்றில் எந்த பாம்பிருக்குமென்று!!!

14 வாசகர் எண்ணங்கள்:

மாணவன் said...

ஆத்தாடி இது என்ன என் வரலாற்றுப்பதிவ விட பெரிய பதிவால இருக்கு இருங்க படிச்சுட்டு வரேன்....

மாணவன் said...

//செய்யும் தப்புக்கள் பிடிபடும்வரை எல்லோருமே உத்தமர்கள்தான் என்கின்ற 'சுஜாதா' அவர்களின் வாசகம்போல பிடிபட்ட வீரர்களை தூற்றும் நாம் இதுவரை பிடிபடாத பல வீரர்களை உத்தமர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். யார் கண்டார்கள் எந்த புற்றில் எந்த பாம்பிருக்குமென்று!!!//

முற்றிலும் உண்மையான கருத்து வெளிச்சத்துக்கு (வெளிய) வராத இன்னும் எத்தனைபேரோ? யாருக்கு தெரியும் ஆண்டவனுக்கே வெளிச்சம்....

மாணவன் said...

//
கிரிக்கெட் சூதாட்டம் என்றால் என்ன ?//

மிகச்சிறப்பாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கீங்க அருமை நண்பரே

தொடரட்டும் உங்களின் இந்த பணி..

பகிர்வுக்கு நன்றி

பாலா said...

அது சரி, பெரும்பாலும் பாகிஸ்தான் வீரர்களே மாட்டிக்கொள்கிறார்களே அவர்களுக்கு மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்யும் திறமை இல்லையோ

பாலா said...

மிகவும் எளிமையாக புரியும்படி எழுதி இருக்கிறீர்கள். நன்றி

Chitra said...

செய்யும் தப்புக்கள் பிடிபடும்வரை எல்லோருமே உத்தமர்கள்தான் என்கின்ற 'சுஜாதா' அவர்களின் வாசகம்போல பிடிபட்ட வீரர்களை தூற்றும் நாம் இதுவரை பிடிபடாத பல வீரர்களை உத்தமர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். யார் கண்டார்கள் எந்த புற்றில் எந்த பாம்பிருக்குமென்று!!!


......சரியாக சொல்லி இருக்கீங்க....

மதுரை பாண்டி said...

நல்லதொரு அலசல்!!! உலக கோப்பை நெருங்கி கொண்டு இருக்கிறது!!!

இரவு வானம் said...

நல்ல அலசல் தல, எனக்கு தெரியாத பல விசயங்களை தெரிஞ்சுகிட்டேன், பகிர்வுக்கு நன்றி.

விக்கி உலகம் said...

நல்ல அலசல்

நண்பா கலக்குறீங்க.

கார்த்தி said...

அதுசரி இந்தப்புற்றில கறையானோ நல்ல பாம்போ யார் கண்டது!

Philosophy Prabhakaran said...

// கிரிக்கட் சூதாட்டம் என்றதும் நம் மனதிற்குள் உடனே ஞாபகத்திற்கு வரும் பெயர்கள் சில பாகிஸ்தான் வீரர்கள் , அசாருதீன், ஹான்சி குரேனியே போன்றவர்களுடயதுதான். //

நான் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன்... நிறைய உண்மைகளை புரிய வைத்தது உங்கள் பதிவு...

Philosophy Prabhakaran said...

குறிப்பாக நோபால் சமாச்சாரம் அருமை... அதிர்ச்சியாக இருக்கிறது...

ம.தி.சுதா said...

அது தான் உங்க விட்டுக்கு பக்கத்து மைதானத்துக்க நான் ஆட வருவதில்லை...

எப்பூடி.. said...

@ மாணவன்

@ பாலா

@ Chitra

@ மதுரை பாண்டி

@ இரவு வானம்

@ விக்கி உலகம்

@ கார்த்தி

@ Philosophy Prabhakaran

@ ம.தி.சுதா

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றிகள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)