Sunday, January 30, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 4)நியூசிலாந்து
உலகக் கிண்ண வரலாற்றில் பெரிதாக எந்த சாகசங்களையும் இதுவரை நிகழ்த்தாத பழமையான இரு அணிகளில் நியூசிலாந்தும் ஒன்று, மற்றையது தென்னாபிரிக்கா. இதுவரை எந்த இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறாத நியூசிலாந்து 1975, 1979, 1992,1999, 2007 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் அறையிறுதிக்கு தகுதிபெற்ற போதும் அந்த ஐந்து அரையிறுதிப் போட்டிகளிலும் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்பை நியூசிலாந்து இழந்துள்ளது.

குறிப்பிட்ட ஐந்து அரையிறுதிப் போட்டிகளில் 1992 இல் பாகிஸ்தானுடனான அறையிருதிப் போட்டியில் 'மாட்டின் க்ரோ' அடித்த அற்புதமான 91 ஓட்டங்களால் நியூசிலாந்திற்கு கிட்டிய வெற்றி வாய்ப்பு யாருமே எதிர்பாராத வகையில் ஜாவிட் மியான்டாட்டின் அனுபவத்தினாலும், அன்றைய இளம் வீரர்களான 'இன்சமாம் உல் ஹாக்' மற்றும் 'மொய்ன் கானின்' அதிரடியாலும் பாகிஸ்தான் கைக்கு மாறியது நியூசிலாந்து ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாதது. அந்த போட்டித்தொடரில் நியூசிலாந்து தான் விளையாடிய எட்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஒரே போட்டி இதுதான்.1992 இன் பின்னர் ஸ்டீபன் பிளமிங்கின் தலைமையில் இளம் வீரர்களுடன் சர்வதேச கிரிக்கட்டில் புதிய அணுகு முறையிலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அனைத்து முன்னணி அணிகளுக்கும் சவாலான அணியாக கடந்த உலக கிண்ண போட்டிகள்வரை (2007) சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தது. பிளெமிங் தலைமையில் கென்யாவில் இடம்பெற்ற icc யின் 'மினி வேர்ல்ட் கப்' கிண்ணத்தை நியூசிலாந்து கைப்பற்றியதை நியூசிலாந்தின் ஒருநாள் போட்டிகளின் உச்சக்கட்ட சாதனையாக சொல்லலாம்.

ஆனால் அதன் பின்னர் பிளெமிங், அஸ்டில், மக்மிலன், ஹெயின்ஸ், ஹரிஸ், பொன்ட் என அணியின் முக்கிய வீரர்களின் ஓய்வின் பின்னர் தற்போது நியூசிலாந்து அணி சிறிய அணிகளுடனான போட்டிகளில்கூட தடுமாறும் அணியாகவே உள்ளது. இன்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணியிலுள்ள பெயர் சொல்லக்கூடிய ஒரு சில வீர்ர்கள் தனி மனித சாகசம் (one man show) நிகழ்த்தினால் தவிர நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளை வெல்வது சாத்தியமில்லாத விடயமாகியுள்ளது.ஆனாலும் நியூசிலாந்து அணியில் அண்மைக்காலங்களில் தங்கள் தனித் திறமையால் போட்டியை தங்கள் பக்கம் கொண்டுவரக்கூடிய ரோஸ் ரெய்லர், ஜெசி ரெய்டர், பிரெண்டன் மக்கலம் போன்ற தனி மனித சாகசகாரர்களும் (one man army); அனுபவம் வாய்ந்த வீரர்களான ஸ்கொட் ஸ்டைரிஸ், ஜேக்கப் ஓரம் போன்ற சகலதுறை வீரர்களும்; அனுபவமும் மிரட்டக் கூடிய சுழல் பந்துவீச்சு திறமையுமுடைய அணித்தலைவர் டானியல் வெட்டோரியும்; தன் டெக்னிக்கலான வேகப்பந்துவீச்சால் எதிரணிகளை நிலை குலைய வைக்கும் டிம் சௌதியும்; மார்டின் குப்டில், கன் வில்லியம்சன் போன்ற சிறப்பான போமிலிருக்கும் (in form) வீரர்களும் ஒன்றாக இணைந்துள்ள நியூசிலாந்து 2011 உலகக் கிண்ணத்தில் வலுவான அணியாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

பிரெண்டன் மக்கலம் (விக்கட் காப்பாளர்)
ஜெசி ரெய்டர்
மார்டின் குப்டில்
ரோஸ் ரெய்லர்
ஸ்கொட் ஸ்டைரிஸ்
கன் வில்லியம்சன்
ஜேகப் ஓரம்
டானியல் விட்டோரி (தலைவர்)
நாதன் மக்கலம்
கையில் மில்ஸ்
டிம் சௌதி

மிகுதி நால்வரும்

ஜேம்ஸ் பிராங்க்ளின்
லுக் வூட்கோக்
ஜெமி ஹொ
ஹமிஸ் பென்னெட்

*--------------------*


தென்னாபிரிக்கா
உலகக் கிண்ண போட்டிகளில் துரதிஸ்டமான அணிஎன்றால் அது தென்னாபிரிக்காதான், மிகவும் திறமையான வீரர்கள் எப்போதும் அணியில் இருந்தபோதும் இதுவரை தென்னாபிரிக்காவால் ஒரு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு கூட செல்ல முடியவில்லை. அதிலும் 1999 உலகக் கிண்ண போட்டிகளில் அரையிறுதிப் போட்டியில் குளூஸ்னரும் டொனால்டும் ஓடிய தவறான விக்கட்டுகளுக் கிடையிலான ஓட்டம் (runs between the wicket) தென்னாபிரிக்க ரசிகர்களால் மட்டுமல்ல குறிப்பிட்ட காலப்பகுதியில் கிரிக்கட் போட்டிகளை பார்த்த யாராலும் காலம் முழுவதும் மறக்க முடியாதது.

அதற்க்கு முன்னர் 1992 உலககிண்ண போட்டிகளில் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துடனான போட்டியில் நான்கு விக்கட்டுகள் மீதமிருக்க 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்த நிலையில் மழை குறிக்கிட்டதால் போட்டி தடைப்பட்டு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டபோது தென்னாபிரிக்காவிற்கு 1 பந்தில் 21 ஓட்டங்கள் இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டது, இதை தென்னாபிரிக்காவின் மோசமான துரதிஸ்டமாக சொல்லலாம்.அதேபோல 1996 உலக கிண்ண போட்டிகளில் லீக் போட்டிகளில் தான் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற தென்னாபிரிக்காவிற்கு மேற்கிந்திய தீவுகளுடனான காலிறுதிப் போட்டியில் பிரைன் லாராவின் அதிரடி சதம் தடைக்கல்லாக அமைந்தது. 94 பந்துகளில் 16 பவுண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்களை குவித்த லாரா குறிப்பிட்ட போட்டியை தென்னாபிரிக்காவிடமிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கைகளுக்கு மாறினார். அதன் பின்னர் 2003 உலகக் கிண்ண போட்டிகளிலும் லீக் போட்டியொன்றில் தென்னாபிரிக்காவுடன் லாரா அடித்த சதம் மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 2003 இல் இலங்கையுடனான ஆட்டத்தில் வெற்றிவாய்ப்பு அருகாமையில் இருக்கும்போது (30 பந்துகளில் 40 ஓட்டங்கள்) மழை குறுக்கிட்டதால் போட்டி சமநிலையில் (tie (not draw )) முடிவடைய தென்னாபிரிக்காவின் அடுத்த சுற்றுப் பயணம் தடைப்பட்டது. கடந்த 2007 உலக கிண்ண போட்டிகளில் சிறப்பாக ஆடியபோதும் அவுஸ்திரேலியாவின் பலத்திற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் அறையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிய தென்னாபிரிக்கா இதுவரை 1998 இல் பங்களாதேசில் இடம்பெற்ற 'மினி வேர்ல்ட் கப்' கிண்ணத்தை மட்டுமே icc நடாத்திய போட்டிகளில் வென்றுள்ளது.2011 உலகக் கிண்ணத்தை பொறுத்தவரை தென்னாபிரிக்கா முன்னைய உலகக் கிண்ண போட்டிகளில் கலந்து கொண்டதைப்போல மிகவும் பலமான அணியாக இல்லை என்பதுதான் உண்மை. ஆசிய ஆடுகளங்களில் அனுபவம் குறைவான வீரர்கள் ஆடுவது சாதகமான விடயமல்ல, குறிப்பாக சுழல் பந்துவீச்சை சமாளிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டி இருக்கும், அதிலும் சுழல் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் மாக் பவுச்சர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படாமை ஆச்சரியமாக உள்ளது.

இதுவரை இலங்கை, இந்திய மண்ணில் தென்னாபிரிக்கா இதுவரை பெரிதாக எதையும் சாதிக்காவிட்டாலும் (இலங்கையுடன் இலங்கையில் இறுதியாக விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வி) இலங்கை, இந்திய ஆடுகளங்களை ஒத்த பங்களாதேஸ் ஆடுகளங்களில் 'மினி வேர்ல்ட் கப்' (mini world cup) கிண்ணத்தை வென்றதையும்; பாகிஸ்தான் மண்ணில் வைத்து 'பாகிஸ்தான் இண்டிப்பெண்டன்ஸ் கப்' (Pakistan independence cup) கிண்ணத்தை வென்றதையும் மறக்கமுடியாது.தென்னாபிரிக்காவின் மிகப்பெரும் பலம் ஹசிம் அம்லாவின் அசுர போம் (form), 2011 உலகக் கிண்ண போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவிக்கும் வீரர்கள் பட்டியலில் அம்லாவின் பெயர் முன்னணியில் இடம்பிடிக்கும் சாத்தியம் அதிகம். அம்லா தவிர்த்து தென்னாபிரிக்காவின் பலமென்று கூறுவதானால் 'மோனே மோர்க்கல்' மற்றும் 'டேல் ஸ்டெயினின்' வேகத்தை குறிப்பிடலாம், ஆடுகளம் கொஞ்சம் ஒத்துளைத்தாலே போதும் இவர்கள் இருவரும் எதிரணிகளை திணறடித்து விடுவார்கள், அடுத்த தென்னாபிரிக்காவின் பலமென்று ஜோஹன் போத்தாவை குறிப்பிடலாம், இன்றைய தேதியில் உலகின் புத்தி சாதுரியமான சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர் தனது வேரியேஷனான சுழல் பந்து வீச்சினால் தென்னாபிரிக்காவிற்கு நிச்சயம் பலம் சேர்ப்பார்.

தென்னாபிரிக்காவின் பலவீனம் என்று சொன்னால் அவர்களது துடுப்பாட்ட வரிசைதான்; அம்லா, கலிஸ் தவிர்த்து ஏனைய வீரர்களை எடுத்துக் கொண்டால் ஒன்றில் அவர்களது போம் (form) மோசமாக இருக்கிறது அல்லது ஆசிய ஆடுகளங்களில் (சுழல் பந்து வீச்சிற்கு) ஆடுவதற்கான அனுபவம் குறைவாக இருக்கிறது. உதாரணமாக சொல்வதானால் ஸ்மித், டீ வில்லியஸ் இருவரும் மோசமான போமில் (out of form) இருக்கும் அதே நேரம் சிறந்த போமில் (in form) இருக்கும் டுமினி, டூ ப்லீசிஸ், வான் வைக் போன்றவர்கள் ஆசிய ஆடுகளங்களில் சுழல் பந்துவீச்சிற்கு பரிச்சியம் குறைவானவர்களாக இருக்கின்றார்கள்.இதே அணியில் அல்பி மோர்க்கலும் மார்க் பவுச்சரும் இருந்திருந்தால் தென்னாபிரிக்க அணி இன்னும் சிறப்பான அணியாக இருந்திருக்கும். ஆனாலும் ஸ்மித், டி வில்லியஸ் போமுக்கு (form) திரும்பும் பட்சத்தில் அவர்களுடன் அம்லா மற்றும் கலிஸ் இணைந்து சிறப்பான துடுப்பாட்டத்தினை அணிக்கு வழங்கினால் ஸ்டெயின், மோர்க்கல், போத்தா போன்ற சிறப்பான பந்து வீச்சாளர்கள் துணைக்கொண்டு தென்னாபிரிக்கா உலக கிண்ணத்தில் இதவரை தவறவிட்ட சாதனையை சாதிக்கலாம்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

கிராம் ஸ்மித் (தலைவர்)
ஹசிம் அம்லா
மோனே வான் வைக்
ஜக் கலிஸ்
பீ டீ வில்லியஸ் (விக்கட் காப்பாளர்)
ஜே பி டுமினி
பப் டூ ப்லீசிஸ்
ஜோஹன் போத்தா
டேல் ஸ்டெயின்
மோனே மோர்க்கல்
லோன்வபோ சொட்சொபி

மிகுதி நால்வரும்

ராபின் பீட்டர்சன்
வைனே பார்னெல்
இம்ரான் தாகிர்
கொலின் இங்கிரம்

*--------------------*


முன்னைய பதிவுகள்


உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 1) -> அவுஸ்திரேலியா

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 2)-> பாகிஸ்தான்

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 3)-> இங்கிலாந்து & மேற்கிந்திய தீவுகள்

அடுத்த பதிவு -> இலங்கை

5 வாசகர் எண்ணங்கள்:

Philosophy Prabhakaran said...

தாங்களும் savetnfisherman போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு இடுகை இடலாமே...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாஸ் நான் மறுபடியும் சொல்லுறேன் நமக்கு கிரிக்கெட் சூனியம்! ஓட்டுப் போடத்தான் வந்தேன்! போட்டுட்டேன்! கெளம்புறேன் பாஸ்!!

Unknown said...

கலக்கல் அலசல் தல

கார்த்தி said...

இந்தமுறை உலககிண்ணத்திற்கு வெறுமன கலந்து கொள்வதற்காகவே வரும் அணியாகதான் நியுசிலாந்தை பார்க்க வேண்டியுள்ளது! பிரண்டம் மக்குலமும் consistent வீரராக தற்போது இல்லாத நிலையில் நியுஸிலாந்தின் கதி அதேகதிதான்!
உங்கள் அணியில் பிராங்ளின் உள்ளடக்கப்படவில்லையே??? அனுபவவீரராகவும் சகலதுறைவீரராகவும் அவர் உள்ளெடுக்கப்படலாம்!
தென்னாபிரிக்காவில் ரன்மெசின் அம்லாவையும் கலீஸையும் வெளியனுப்புவதுதான் எதிர்அணிகளின் குறிக்கோலாயிருக்கும்!

எப்பூடி.. said...

@ Philosophy Prabhakaran

//தாங்களும் savetnfisherman போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு இடுகை இடலாமே...//

மீனவர்கள் கொல்லப்படுவதையும் அதற்குரிய தீர்வுகள் எட்டப்படாதத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

...................................

@ மாத்தி யோசி

//பாஸ் நான் மறுபடியும் சொல்லுறேன் நமக்கு கிரிக்கெட் சூனியம்! ஓட்டுப் போடத்தான் வந்தேன்! போட்டுட்டேன்! கெளம்புறேன் பாஸ்!!//

புரியலயின்ன ஓட்டுப் போடாட்டிகூட கோவிச்சுக்க மாட்டேன் :-))

........................................

@ விக்கி உலகம்

//கலக்கல் அலசல் தல//

நன்றி

.........................................

@ கார்த்தி

// உங்கள் அணியில் பிராங்ளின் உள்ளடக்கப்படவில்லையே??? அனுபவவீரராகவும் சகலதுறைவீரராகவும் அவர் உள்ளெடுக்கப்படலாம்!//

ஒராமிற்கு பதிலாக வேண்டுமானால் பிராங்கிளின் சேர்க்கப்படலாம், துடுப்பாட்டத்தில் பிராங்கிளினும் பந்துவீச்சில் ஒராமும் சிறந்தவர்கள் என்பது என் கணிப்பு.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)