Monday, January 3, 2011

ஆஸ்திரேலியா கிரிக்கட் அணி 1999 முதல் இன்றுவரை...

1999 - 2007 வரை கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் உலகையே தங்கள் அசாத்திய திறமையால் கிறங்கடித்த அணி; ஆஸ்திரேலியா போல் வேறொரு அணி எதிர்வரும் காலங்களில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியுமா? என்கின்ற கேள்விக்கு 'இல்லை' எனும் டெம்ளேட் பதிலை ஓட்டுமொத்த பேரையும் சொல்லவைத்த அணி; துடுப்பாட்டம், பந்து வீச்சு, களத்தடுப்பு என மூன்று பிரிவுகளிலும் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு போட்டி வகைகளிலும் எதிரணிகளை துவைத்து காயப்போட்ட அணி; இன்று இருக்கும் நிலை என்ன? இன்றும் வீழ்த்தப்பட முடியாத அணியா? அல்லது ஏனைய முன்னணி அணிகளுடன் சமபலமான அணியா? இல்லை எல்லா அணிகளாலும் இலகுவாக வீழ்த்தப்படகூடிய அணியா?

ஒருநாள் போட்டிகள்
1999 உலக கிண்ண போட்டிகளின் 'சூப்பர் சிக்ஸ்' போட்டிகள் வரை ஏனைய முன்னணி அணிகளுடன் சமபலத்தில் இருந்து வந்த அவுஸ்திரேலியா தென்னாபிரிக்காவுடனான 'சூப்பர் சிக்ஸ்' போட்டியில் ஹெர்ஷல் கிப்ஸ் ஸ்டீவ் வோவினுடைய இலகுவான பிடியை தவறவிட்ட தருணத்தில் இருந்து அதிஷ்டத்துடன் கூடிய அசுர வளர்ச்சிக்கு அத்திவாரமிட ஆரம்பித்தது.

குறிப்பிட்ட 'சூப்பர் சிக்ஸ்' போட்டியில் ஸ்டீவ் வோவின் சதத்தின் மூலம் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியாவிற்கு வோனின் சுழலும் குளூஸ்னரின் தவறான விக்கட்டுகளுக் கிடையிலான ஓட்டத் தெரிவின் மூலமான அதிஸ்டமும் கை கொடுக்க அரையிறுதியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா இறுதிப் போட்டியில் பலம் மிக்க பாகிஸ்தானை இலகுவாக வென்று தனது அசுர வளர்ச்சியை ஆரம்பித்தது.1999 உலக கிண்ண வெற்றிக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை துடுப்பாட்டத்தை பொறுத்தவரை முன்வரிசையை கில்கிறிஸ்ட், மார்க் வோ, பொண்டிங் போன்றோர் பலப்படுத்த; மத்திய வரிசையை மார்டின், ஸ்டீவ் வோ, லீமன், பெவன் போன்றோர் கவனித்துக்கொள்ள பந்து வீச்சில் மக்ரா, வோனுக்கு துணையாக கிலப்சி மற்றும் புதுமுகம் பிரெட் லீ இணைய முழுப்பலம் பொருந்திய ஒருநாள் அணியாக அவுஸ்திரேலியா உருவெடுத்தது.

1999 - 2007 வரை மார்க் வோ விற்கு பதிலாக ஹெய்டனும், மார்டினுக்கு பதிலாக கிளாக்கும், லீமனுக்கு பதிலாக சைமன்சும், பெவனுக்கு பதிலாக ஹசியும், வோனுக்கு பதிலாக பிரட் ஹோக்கும் மாற்றீடாக அணிக்குள் நுழைந்தாலும் முன்னவர்களது பணியை எந்தவித குறையுமில்லாமல் நிவர்த்தி செய்தனர். இவர்களை தவிர டேமியன் பிளமிங், இயன் ஹாவி, ஷேன் லீ, நாதன் பிராக்கன், அண்டி பிக்கல், ஷேன் வொட்சன், மைக்கல் காஸ்ப்ரோவிக், ஸ்டுவட் கிளாக், சைமன் கட்டிச் போன்றோரும் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவுஸ்திரேலியாவிற்கு வலு சேர்த்தனர்.இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் பாகிஸ்தான் தவிர்த்து (பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா செல்லவில்லை) ஏனைய டெஸ்ட் அந்தஸ்துள்ள அனைத்து நாடுகளிலும் ஒருநாள் தொடரை வென்றுள்ள அவுஸ்திரேலியா 3 உலக கிண்ணங்களையும் ஒரு ICC சாம்பியன் கிண்ணத்தையும் அக்காலப்பகுதியில் கைப்பற்றியிருந்தது. அவுஸ்திரேலியாவுக்கு வெளியே தென்னாபிரிக்காவில் 2 ஒருநாள் போட்டி தொடர்களையும் இலங்கை மற்றும் நியூசிலாந்தில் தலா 1 ஒருநாள் போட்டித் தொடரையும், 3 ICC சாம்பியன் கிண்ணத்தையும் மட்டுமே இழந்திருந்த அவுஸ்திரேலியா மிகுதி அனைத்து போட்டித்தொடர்களையும் கைப்பற்றியிருந்தது.

சொந்த நாட்டில் தென்னாபிரிக்கா (2001/2002) மற்றும் இங்கிலாந்திடம் (2006/2007) தலா ஒரு தடவை முக்கோண தொடரையும், பாகிஸ்தானிடம் ஒருநாள் போட்டித்தொடர் ஒன்றையும் இழந்ததை தவிர மிகுதி அனைத்து தொடர்களையும் வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா உலக நாடுகளின் தெரிவு அணிக்கெதிரான 3 போட்டிகளையும் வென்று ஒட்டுமொத்த நாடுகளுக்கும் தனியாளாக பதில் சொல்லியது. துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகல துறைகளிலும் உச்சக்கட்ட பங்களிப்பை வழங்கிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு புச்சானன் சிறந்த பயிற்ச்சியாளராக கூடுதல் உதவி புரிந்தார்.இப்படியாக பொசிடிவ் அப்ரோச் மூலம் உலக அணிகளை கிறங்கடித்த 'வீழ்த்தப்பட முடியாத' கொடிகட்டி பரந்த அவுஸ்திரேலியா அணியின் 2007 க்கு பின்னர் இன்று வரையான ஒருநாள் போட்டிகளின் சறுக்களுக்கு முதல் காரணம் பந்து வீச்சு வரிசையின் வீழ்ச்சிதான் என்றால் மிகையில்லை. கிளன் மக்ராத்தின் ஓய்வு, பிரட்லீயின் உபாதை, கிலப்சி மற்றும் பிராக்கனின் திறன் குறைவடைந்தமை போன்ற காரணிகள் அவுஸ்திரேலியாவின் பலம் மிக்க பந்துவீச்சு வரிசையை ஆட்டம் காண செய்தது. அதற்க்கு பின்னர் பல வேகப்பந்து வீச்சாளர்கள் வந்தாலும் யாரும் இவர்களுடைய இடத்தை நிரப்ப முடியவில்லை.

சுழல் பந்துவீச்சில் வோனின் இடத்தை சிறப்பாக நிவர்த்தி செய்து வந்த பிரட் ஹோக்கின் ஓய்வுக்கு பின்னர் இன்றுவரை சரியான சுழல் பந்து வீச்சாளர் அமையாதது அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சு வரிசைக்கு மேலும் சோதனையாக உள்ளது. குரூக்ஸ், ஸ்மித் போன்ற பந்து வீச்சாளர்கள் ஒப்புக்கு பந்தை சுழற்றினாலும் வோர்ன் மற்றும் ஹோக்கின் இடத்திற்கு சரியான நபர் இன்னமும் அவுஸ்திரேலியாவிற்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை, இதில் சோகம் என்னவென்றால் அப்படி ஒரு பந்து வீச்சாளர் பிராந்திய அணிகளிலும் இல்லாததுதான். இனிவரும் காலங்களில் இளம் வீரர் யாராவது உருவாகும் வரை சுழல் பந்துவீச்சு அவுஸ்திரேலியாவிற்கு பெரும் பின்னடைவாகத்தான் இருக்கபோகிறது என்று தோன்றுகிறது.இன்றைய அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஜோன்சன், ஹரிஸ், போலிங்கர், மிக்கி, ஹெல்பன்ஹவுஸ், சிட்டில், நானிஸ் போன்றோர் அவுஸ்திரேலிய அணியில் சுழற்ச்சி முறையில் தெரிவு செய்யப்பட்டாலும் இவர்களால் தொடர்ச்சியாக சிறப்பான பெறுதியை ஒருவராலும் கொடுக்க முடிவதில்லை. இவர்கள் அனைவரும் திறமையானவர்களாக இருந்தும் அவர்களால் தொடர்ந்து சிறப்பாக பந்து வீச முடியாமல் இருப்பதற்கு இன்றைய ஆடுகளங்களின் அமைப்பும், ஆட்டத்தின் போக்குமே முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இவர்களுக்கு மட்டுமல்ல இன்று அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் இதுவொரு மிகப்பெரும் பிரச்சினைதான்!!!

அதிக ரசிகர்களை கவர்வதற்காக போடப்படும் மட்டமான 'பிட்ச்' களும், குறுந்தூர எல்லை கோடுகளும் இன்றைய பந்து வீச்சாளர்களுக்கு சாபக்கேடாக மாறியிருக்கிறது. ஒரு நாள் போட்டியே இரு இனிக்சாக மாற்றி கொலைவெறி ஆட்டத்தை ஆடும் முதல்தர கிரிக்கட்டும், T/20 கிரிக்கட் போட்டிகளும் பந்து வீச்சாளர்கள் கிழித்து நார்நாராக தொங்க விடுகின்றன. இப்படி அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் இருக்கும் பிரச்சினைதான் இன்றைய திறமையான அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கும் இருக்கின்றது; இதனால்தான் இவர்களால் மக்ரா, லீ, கிலேப்சியின் அளவிற்கு பந்துவீச முடிவதில்லை.அதே போல் துடுப்பாட்டத்தில் 'ஸ்ட்ரோக் மேக்கிங்'கிற்கு மரியாதை போய் டப்பாங்கூத்து ஷோட்களுக்கு பெறுமதி வந்ததால் இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகளுக்கு கிளாசை விட மாஸ்தான் தேவைப்படுகிறது. இதனால் முன்னர் 50 ஓவர்களுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பல வீரர்கள் இன்றைய காலத்திற்கு ஏற்றால்ப் போல தங்களை மாற்ற முடியாமல் தவிக்கிறார்கள். இப்படி இன்றைய வேகத்துக்கு மாற அவுஸ்திரேலியாவின் பொண்டிங், கிளாக் போன்ற வீரர்கள் சிரமப்பட்டாலும் டேவிட் ஹசி, வைட், வொட்சன், ஹடின், வோனர் போன்ற வீரர்கள் இன்றைய ஒருநாள் போட்டிகளுக்கான தகுதியான வீரர்களாக உள்ளமை அவுஸ்திரேலியாவிற்கு அறுதல். ஆனாலும் கில்கிறிஸ்டின் இடம் இன்னமும் முழுமையாக நிரப்பப் படவில்லை என்பது அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வரிசைக்கு சிறு பின்னடைவே!!!

1999 -2007 வரை வீழ்த்தப்படாமல் இருந்த அவுஸ்திரேலியா அணி இன்று அந்த நிலையில் இல்லை என்றாலும் இன்றைய முன்னணி அணிகளால் சுலபமாக வீழ்த்தப்படும் நிலையிலும் அது இல்லை என்பதே உண்மை. இன்றைய எந்த முன்னணி அணியுடனும் மோதுவதற்கு சமபலத்துடன் இருக்கும் அவுஸ்திரேலியாவுடன் ஒருநாள் போட்டிகளை வெல்வதற்கு ஏனைய அணிகள் தொடர்ந்தும் போராட வேண்டித்தான் இருக்கும். இன்று சற்று அதிகமாகவே பின்னடைவு உள்ளதாக தோன்றினாலும் நிச்சயம் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை அவுஸ்திரேலியா இன்னமும் முதல்தரமான அணிதான். ஆனால் 1999 -2007 வரை இருந்ததைப்போல இன்னொரு தடவை 'வீழ்த்தப்படாத அணியாக' மாறுவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றுமட்டும் அடித்து கூறலாம்.

முன்னர்போல ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை சுவைக்க முடியாவிட்டாலும் ஏனைய அணிகளைவிட அதிகமான வெற்றிகளை அவுஸ்திரேலியா தொடர்ந்தும் சுவைக்கும்!!!!!

டெஸ்ட் போட்டிகள்
1999 ஆம் ஆண்டு இலங்கையில் 1:0 என டெஸ்ட் தொடர இழந்த அவுஸ்திரேலியா அடுத்து இந்தியாவில் கொல்கத்தா டெஸ்டில் தோல்வியடையும் வரை ஜிம்பாவே, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியதீவுகள், நியூசிலாந்து அணிகளுடன் தொடர்ச்சியாக விளையாடிய 16 போட்டிகளையும் வென்று இலகுவில் முறியடிக்க முடியாத மாபெரும் சாதனையை நிலை நாட்டியது. அப்போதிலிருந்து 2007 ஆசஸ் வரை டெஸ்ட் கிரிக்கட்டையே தன் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் அவுஸ்திரேலியா வைத்திருந்தது.

ஹெய்டன், ஸ்லேட்டர், லாங்கர், பொண்டிங் போன்ற வீரர்கள் முன் வரிசையிலும் மார்டின், மார்க் வோ, ஸ்டீவ் வோ, லீமன், கில்கிறிஸ்ட் போன்ற வீரர்கள் மத்திய வரிசையிலும் துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்த மக்ரா மற்றும் வோனுடன் இணைந்து பிரெட்லீ மற்றும் கிலேப்சி விக்கெட்டுகளை அள்ள வெற்றிக்கனியை பறிப்பது அவுஸ்திரேலியாவிற்கு சாதாரண விடயமாக இருந்தது. 1999 உலக கிண்ண வெற்றியிலிருந்து மக்ரா, வோர்ன், லாங்கர், மாட்டின் போன்ற முதல் தரமான வீரர்கள் ஓய்வுபெறும் வரை (2007 ஆசஸ் தொடரின் இறுதியில்) அவுஸ்திரேலியா விளையாடிய 94 டெஸ்ட் போட்டிகளில் 70 போட்டிகளில் வெற்றி பெற்றதோடு வெறும் 11 போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்திருந்தது, இதுவொரு மாபெரும் சாதனை.குறிப்பிட்ட காலப்பகுதியில் சொந்த நாட்டில் வைத்து 49 போட்டிகளில் 40 போட்டிகளில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் இந்தியாவுடன் மட்டும் தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்திருந்தது. சொந்த நாட்டில் வைத்து எந்த அணிகளுடனும் டெஸ்ட் தொடரை இழக்காத அவுஸ்திரேலியாவுடன் இந்தியாவும், நியூசிலாந்தும் தலா ஒரு தடவை டெஸ்ட் தொடரை சமன் செய்திருந்தன, ஏனைய அணிகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மட்டுமே அவுஸ்திரேலியாவில் வைத்து ஓரளவேனும் தாக்கு பிடித்திருந்தது.

அவுஸ்திரேலியாவிற்கு வெளியே குறிப்பிட்ட காலப்பகுதியில் 45 போட்டிகளை விளையாடியுள்ள அவுஸ்திரேலியா 30 போட்டிகளில் வெற்றியும் 9 போட்டிகளில் தோல்வியும் பெற்றிருந்தது. இந்தியா(3), இங்கிலாந்து(3), மேற்கிந்தியா(1), இலங்கை(1), தென்னாபிரிக்கா(1) அணிகள்தான் குறிப்பிட்ட ஒன்பது போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி பெருமையடைந்த அணிகள். டெஸ்ட் தொடரை பொறுத்தவரை இலங்கை, இந்தியா, இங்கிலாந்து அணிகளுடன் மட்டுமே தலா ஒரு தடவை தொடரை இழந்த அவுஸ்திரேலியா மிகுதி அனைத்து டெஸ்ட் தொடர்களையும் வெற்றி கொண்டிருந்தது, வேறெந்த தொடரும் சமநிலையில்கூட முடியவில்லை, இழந்த 3 தொடர்களுமே 1 போட்டியை எதிரணி அதிகமாக வென்றதாலே அவுஸ்திரேலியாவால் இழக்கப்பட்டிருந்தது.இப்படி உச்ச ஸ்தாயியில் சென்று கொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் வெற்றிப் பயணம் 2007 க்கு பின்னர் இன்றுவரை ஆட்டங்காண்பதற்கு காரணமாக அமைந்தத முதற்காரணி பந்து வீச்சுத்தான். என்னதான் மாங்கு மாங்கென்று ஓட்டங்களை குவித்தாலும் எதிரணியின் 20 விக்கட்டுகளையும் வீழ்த்தாவிட்டால் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற முடியாது என்கின்ற நியதியில் அவுஸ்திரேலியாவின் விக்கட் கொள்ளைக் காரர்களான மக்ரா மற்றும் வோனினது ஓய்வும் பிரெட்லீயினது உபாதையும் அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சு வரிசையில் பாரிய தாக்கத்தை தற்போது ஏற்ப்படுத்தியுள்ளது.

மக்ரா, வோர்ன் இல்லாததன் எதிரொலியாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான 'பேர்த்' ஆடுகளத்தில் இறுதி இனிங்க்சில் 300 க்கு மேற்பட்ட ஓட்டங்களை ஸ்டெயினின் உதவியுடன் தென்னாபிரிக்கா துரத்தி வெற்றி வெற்றிபெற்றதையும்; சுழலுக்கு சாதகமான 'மொகாலி' ஆடுகளத்தில் இறுதி 2 விக்கட்டுகளை வைத்துகொண்டு 90 ஓட்டங்களை பெற்று இந்தியா வெற்றிபெற்றதையும் சொல்லலாம். அதேபோல மெல்பேர்ன் ஒருநாள் போட்டியில் மலிங்க அரைச்சதம் அடித்து இலங்கை 1 விக்கட்டால் அவுஸ்திரேலியாவை வென்றதையும் எடுத்து காட்டலாம்.மக்ரா, லீ, கிலெப்சிக்கு பதில் ஜோன்சன், ஹரிஸ், போலிங்கர், ஸ்டுவட் கிளாக், ஹெல்பன்ஹவுஸ், சிட்டில் என பலர் மாற்றீடாக வந்தாலும் யாராலும் முன்னவர்களுக்கு நிகராக பந்துவீச இயலவில்லை. இனிவரும் காலங்களில் வரும் பந்து வீச்சாளர்களும் மக்ரா, லீ போல் பந்துவீச சந்தர்ப்பம் மிகமிக குறைவாகவே இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது. T/20 மற்றும் நவீன 'இரு இனிங்க்ஸ் ஒருநாள் போட்டி' என்பவற்றில் லைன் & லெந், ஸ்விங் கன்ரோல் என்பவற்றிலும் பார்க்க ஓட்டங்களை குவிப்பதை கட்டுயப்படுத்தும் சமயோகித பந்துவீசும் திறன்தான் தேவைப்படுகிறது, இதனால் பந்து வீச்சாளர்களது கவனம் இப்போது ஓட்டங்களை கட்டுப்படுத்துவதிலேயே(வேரியேஷனிலேயே) இருக்கின்றது.

லைன் & லெந், ஸ்விங் கன்ரோல் என்பவற்றிலும் பார்க்க குறிப்பிட்ட போட்டிகளின் தன்மைக்கேற்ப 'வேரியேஷனுக்கே' பந்து வீச்சாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் டெஸ்ட் போட்டிகளில் என்று வரும்போது லைன் & லேண்ட், ஸ்விங் கன்ரோல் போன்ற டெஸ்ட் போட்டிகளுக்கு தேவயான முக்கிய அம்சங்களை கையாள்வது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. இனிவரும்காலங்களில் அனைத்து நாடுகளுக்கும் ஏற்ப்படப்போகும் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பஞ்சத்தின் ஆரம்பம்தான் இது; இதற்க்கு சரியான முறையில் தீர்வு காணாவிடில் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான வேகப்பந்துவீச்சு மிகவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.தொடர்ந்தும் இதேபோல ஓட்டகுவிப்பை கட்டுப்படுத்தும் விதமாக பந்து வீச்சாளர்களுக்கு வேலை கொடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கட்டுகளையும் கைப்பற்றுவது முன்னர்போல சாத்தியமான விடயமாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு முழுமையாக ஒத்துழைக்காவிட்டால் அதிகமான டெஸ்ட் போட்டிகளை சமநிலையில் முடிக்கும் நிலையில்தான் இன்றைய எந்த டெஸ்ட் அணியும் உள்ளது, ஆஸ்திரேலியாவும் அதற்க்கு விதி விலக்கல்ல. ஆஸ்திரேலியாவிற்கு பந்துவீச்சு 2007 க்கு முன்னிருந்ததைவிட இப்போது வீழ்ச்சி அடைந்திருப்பது எப்படி பெரிய இழப்போ; அதேபோல இன்றைய அனைத்து அணிகளினதும் பந்துவீச்சு வரிசை வீழ்ச்சி அடைந்திருப்பது டெஸ்ட் கிரிக்கட்டை பொறுத்தவரை கவலையான விடயமே.

சுழல் பந்து வீச்சாளர்களுக்கு அவுஸ்திரேலியா படும் பாட்டை பார்க்கும்போது ஷேன் வோர்ன் இருந்த அணிக்கு இப்படி ஒரு நிலையா! என பரிதாபமாகதான் பார்க்க வேண்டி உள்ளது. வோனுக்கு மாற்றீடு இல்லை என்பதே உண்மை, ஆனாலும் வோனை 25% ஆவது நிவர்த்திசெய்யும் பந்து வீச்சாளர்கள் இல்லாததது அவுஸ்திரேலியாவின் சுழல் பந்து வீச்சு துறைக்கு பேரடி. இன்றைய தேதியில் உலகின் மோசமான சுழல் பந்துவீச்சு வளமுள்ள அணியாக அவுஸ்திரேலியா உள்ளமை டெஸ்ட் போட்டிகளில் அவர்களது வெற்றிவாய்ப்பை மேலும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.அவுஸ்திரேலியாவின் இன்றைய துடுப்பாட்டத்தை பொறுத்தவரை 2007 க்கு முன்னர் இருந்த வீரர்கள் அளவிற்கு இன்று உள்ளவர்களால் பிரகாசிக்க முடியவில்லை!! எப்போதுமே அவுஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கு இப்போதுள்ளது போல் பஞ்சம் ஏற்ப்பட்டதில்லை; ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான பஞ்சம் எதனால் ஏற்ப்பட்டிருக்கு மென்று மீண்டும் கூறவேண்டிய அவசியமில்லை, அதே T/20 மற்றும் புதியவகை ஒருநாள் போட்டியின் பிரபலம்தான் காரணம் என்பது வெளிப்படை உண்மை.

மைக்கல் கிளாக்கிற்கு பின்னர் ஒரு சிறந்த டெஸ்ட் அறிமுகம் அவுஸ்திரேலியாவிற்கு அமையாதது பொண்டிங்கின் ஓய்வின் பின்னர் அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையை மிகவும் பாதிக்கும் நிலையை நிச்சயம் உருவாக்கும். 1999 -2007 வரை 7 துடுப்பாட்ட வீரர்களும் நம்பிக்கையான துடுப்பாட்ட வீரர்களாக இருந்த அவுஸ்திரேலியாவின் இன்றைய துடுப்பாட்ட வரிசையில் கிளாக், ஹசி, பொண்டிங் தவிர்த்து மிகுதி அனிவருமே நிச்சயம் அற்ற துடுப்பாட்ட வீரர்கள்தான் என்பது அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை கவலையான விடயமே; மைக்கல் கிளாக்கிற்கு பின்னர் இதுவரை பல புது முகங்கள் மாறிமாறி வந்தாலும் அவர்களில் யாருமே திருப்தியாக இல்லை என்பதே உண்மை.இன்று துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் வீழ்ச்சியை சந்தித்துள்ள அவுஸ்திரேலியா அன்று இருந்ததைப்போல (1999 - 2007) நிச்சயமாக வீழ்த்தப் படமுடியாத அணியல்ல; அதே நரம் ஒரு நாள் போட்டிகளில் உள்ளதைபோல ஏனைய முன்னணி அணிகளுக்கு சமபலமான அணி என்றும் சொல்ல முடியாது. காரணம் இவர்களது பந்துவீச்சு, துடுப்பாட்ட வளத்தை கொண்டு ஆசிய ஆடுகளங்களில் இனிவரும் காலங்களில் (புதிய திறமையான வீரர்கள் வரும்வரை) போட்டியை சமநிலை படுத்தவே போராட வேண்டியிருக்கும்.

அதேபோல் அவுஸ்திரேலியாவிற்கும், ஆசியாவிற்கும் வெளியே ஏனைய நாடுகளில் விளையாடும்போது போட்டிகளில் வெல்வதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும். வெற்றி வாய்ப்புக்கள் அந்தந்த நேரத்து எதிரணியின் பலத்தை பொறுத்து அமையும்; கிடைக்கும் வெற்றிகளை முன்னர்போல அவுஸ்திரேலியர்கள் தாங்களாக ஒருதலை பட்சமாக இலகுவாக எடுத்துகொள்ள முடியாது. அதேநேரம் சொந்த நாட்டில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள் ஆயினும் முன்பிருந்ததோடு ஒப்பிடுகையில் டெஸ்ட் வெற்றிகள் கணிசமான அளவு குறைவாகவே இருக்கும்.இப்போது அவுஸ்திரேலிய அணியின் ஸ்திரம் குறைவடைந்து வரும் நிலையில் மீண்டும் விஸ்வரூபமெடுத்து 1999 - 2007 வரையிருந்த அணி போன்ற அணி உருவாகுவது சாத்திய குறைவு என்றாலும்; ஸ்திரமான டெஸ்ட் அணியொன்றை கட்டியெழுப்ப அவுஸ்திரேலியா சில/பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப்படலாம்!! அதிலும் பொண்டிங், ஹசி போன்ற வீரர்களின் ஓய்வின் பின்னர் அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசை எப்படி இருக்குமென்று கற்பனை பண்ணினால் ஒட்டு மொத்தமாக சூனியமாகத்தான் தெரிகிறது.

டெஸ்ட் வெற்றிகளை இலகுவாக தன் கணக்கில் சேர்த்த அவுஸ்திரேலியா இனி வரம் காலங்களில் ஒவ்வொரு டெஸ்ட் வெற்றிக்கும் கடுமையாக போராட வேண்டி இருக்கும்!!!!!

T/20 போட்டிகள்
இந்த மல்யுத்த போட்டிகளை பற்றி நிலையாக எதுவும் கூற முடியாது, இரண்டு ஓவர்களில் மொத்த போட்டியுமே மாறலாம் என்பதால் குறிப்பிட்ட எந்த அணியுமே தொடர்ந்து ஒருபோதும் ஆதிக்கம் செலுத்த முடியாது. முதல்தர T/20 போட்டிகளுக்கு அவுஸ்திரேலியாவில் மிக அதிக வரவேற்பு இருப்பதால் அவுஸ்திரேலியா T/20 போட்டிகளில் எப்போதும் அனைத்து அணிகளுக்கும் சவாலான அணியாகவே இருக்கும் என்று சொல்லலாம்.

T/20 போட்டிகளில் அனைத்து அணிகளுக்கும் எப்போதும் அவுஸ்திரேலியா சவாலாகத்தான் இருக்கும்!!!

நன்றி.


16 வாசகர் எண்ணங்கள்:

மாணவன் said...

வந்துட்டேன் இருங்க படிச்சுட்டு வரேன்.........

மாணவன் said...

விரிவான பார்வையுடன் தெளிவாகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை

இந்ததகவல்களை எல்லாம் நீங்கள்தொகுத்து வழங்கியிருப்பது வியப்பாக உள்ளது நண்பரே
உங்களின் உழைப்பிற்கு ஒரு ராயல் சல்யூட்....

தொடர்ந்து இதுபோன்ற தகவல்களை வழங்க வேண்டும்

மாணவன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!
இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

பாலா said...

உண்மையிலேயே நல்ல விரிவான பார்வை. ஆஸ்திரேலியாவுடன் மோதும்போது எல்லா அணிகளுமே ஒரு வித தயக்கத்துடனே விளையாடி வந்தன. இது அவர்களுக்கு மிக சாதகமாக இருந்தது. தற்போது பெரும்பாலான அணிகள் ஆக்ரோஷமாக விளையாட கற்றுக்கொண்டு விட்டன. முன்பைப்போல் அவ்வளவு முனைப்பான பீல்டிங்கும் ஆஸ்திரேலியர்களிடம் இல்லை.

Unknown said...

தல பெரிய கிரிக்கெட் ரசிகரா இருப்பீங்க போல :-)

Unknown said...

விரிவான அலசல் சூப்பரு நண்பரே

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல விரிவான பார்வை அன்பரே.. தொண்ணூறுகளின் இறுதியில் தான் எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வமே வந்தது.. அந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது எனலாம்... அப்போதும் அவர்கள் பயந்த ஒரே நாடு இந்தியாவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.. அதிலும் குறிப்பிட்டு சச்சினுக்கு... இப்போது எல்லாம் தலைகீளாகிவிட்டது...

ஆஸ்திரேலியாவின் நிலை அவலம்...

Akash said...

நல்ல ஒரு பார்வை....அவுஸ்திரேலிய அணித்தேர்வாளர்களின் மோசமான தெரிவுகளும் இதற்கு ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.
http://akashks.blogspot.com/

viththy said...

அருமையான பதிவு :)
ஆஸ்திரேலியாட இன்றைய நிலைபாட்டை அப்பிடியே சொல்லி இருகுரிங்கள். ஆஸ்திரேலியாவின் இன்றைய வீழ்சிக்கு அவர்களின் அணித்தேர்வாளர்களும் ஒரு காரணி என்பது என்கருத்து.

Philosophy Prabhakaran said...

மார்க் வாக், ஸ்டீவ் வாக் உட்பட பழைய வீரர்கள் பலரை நினைவூட்டியது சூப்பர்...

Philosophy Prabhakaran said...

எனக்கென்னவோ ஆஸ்திரேலியா மீண்டும் எழுச்சி பெரும் என்றே எண்ணத் தோன்றுகிறது...

r.v.saravanan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கார்த்தி said...

என்னமா ஒரு அலசல்! நல்லா இருந்தது

ஆனால் நீங்கள் ஆஸ்திரேலியா முந்தய டெஸ்ட் அணியப்பற்றி சொல்லும்போது மத்தியவரிசையில் லீமனைக்குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் லீமன் டெஸ்ட் போட்டிகளுக்காக அணிக்கு உள்வாங்கப்பட்டமை மிக்ககுறைவான போட்டிகளிலேயே????

கிரி said...

ஆஸி போட்ட ஆட்டத்துக்கு மற்றும் அவர்களின் நாற வாய்க்கு இப்ப தர்ம அடி இங்கிலாந்து கொடுத்து விட்டது..டெஸ்ட் ல் கேவலமான தோல்வி.

வார்னே மற்றும் மெக்ராத் இல்லாததே இவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம்.

நீங்கள் கூறியது போல அடி வாங்கினாலும் இன்றும் சவாலான அணி தான் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் சில வருடம் சென்றால் நிலை மாறலாம்.

எப்பூடி.. said...

@ மாணவன்

@ பாலா

@ இரவு வானம்

@ விக்கி உலகம்

@ Tamilulagam

@ வெறும்பய

@ Akash

@ viththy

@ Philosophy Prabhakaran

@ r.v.saravanan

@ கார்த்தி

@ கிரி

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி.

.................................................

@ கார்த்தி

//நீங்கள் ஆஸ்திரேலியா முந்தய டெஸ்ட் அணியப்பற்றி சொல்லும்போது மத்தியவரிசையில் லீமனைக்குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் லீமன் டெஸ்ட் போட்டிகளுக்காக அணிக்கு உள்வாங்கப்பட்டமை மிக்ககுறைவான போட்டிகளிலேயே????//

பொண்டிங் ஆறாம் இலக்கத்திலிருந்து மூன்றாம் இலக்கத்திற்கு மாற்றப்பட்டதில் இருந்து சைமன்ஸ் ஆறாம் இலக்கத்தில் விளையாட ஆரம்பிக்கும் வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் லீமன் ஆறாம் இலக்கத்தில் அவுஸ்திரேலியாவிற்காக ஆடியுள்ளார். குறிப்பிட காலப்பகுதி குறைவாகினும் இலங்கையில் அவுஸ்திரேலியா 3 : 0 என தொடரை வெல்ல லீமனது துடுப்பாட்டம் மிகப்பெரும் பங்காற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது .

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)