Tuesday, December 21, 2010

இந்தவார இருவர் (20/12/10)கே.பாலசுப்ரமணியம் (ஒளிப்பதிவாளர்)
எனக்கு மிகவும் பிடித்தமான ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர் பாலசுப்ரமணியம். ஒளிப்பதிவின் நுட்பங்கள் எதுவும் தெரியாவிட்டாலும் ஒரு திரைப்படத்திற்கு ஒளிப்பதிவின் முக்கியத்துவம் என்ன என்பதை அறிந்துகொண்ட பின்னர் முதல்முதலில் தொலைக்காட்சியில் பார்த்தது பாலசுப்ரமணியம் அவர்களின் உருவத்தைத்தான். k டிவியில் இவரது நேர்காணலை முழுவதுமாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனக்கு மிகவும் பிடித்த பீ.சி.ஸ்ரீராமின் உதவியாளர் என்பதால் இவர்மீது ஆரம்பத்தில் பிடிப்பு ஏற்ப்பட்டாலும் (இவர் தவிர கே.வி ஆனந்த், ஜீவா, எம்.எஸ்.பிரபு, ரவி ஷங்கர், திரு போன்றோரும் பீ.சி ஸ்ரீராமின் சிஷ்யர்களே) எம்.குமரன் திரைப்படம் வெளிவந்த பின்னர் இவர்மீது அதிக பிடிப்பு ஏற்ப்பட்டது.லோ ஆங்கிளில் மிரட்டுவது, கமெராவை ஷேக் பண்ணுவது, அடிக்கடி கலர் டோன் மாத்துவது என எதுவுமே இல்லாமல் பாமரனும் ரசிக்க கூடியவகையில் அழகான ரம்யமான ஒளிப்பதிவுக்கு சொந்தக்காரர்தான் பாலசுப்ரமணியம். இவருக்கு மிகவும் பிடித்த நிறம் பச்சை. படம் முழுக்க பச்சை பசேலென்று இருக்கிறதா? ஒரு தடவை டைட்டிலை பாருங்கள் பாலசுப்ரமணியம் என போட்டிருக்கலாம். பச்சை தவிர வானத்து நீலம், தோட்டத்து மண்ணிறம் என்பனவும் பாலசுப்ரமணித்தின் கமெராவில் அடிக்கடி நான் காணும் நிறங்கள். நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் திரைப்படத்தை மூன்றுமுறை பார்த்துள்ளேன் என்றால் அதற்க்கு ஒரே காரணம் பாலசுப்ரமணிம்தான், அதில் குற்றாலத்தின் அழகை பாலசுப்ரமணித்தின் கேமரா ரம்யமாக காட்டியதுபோல வேறு யாரும் காட்டியிருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.

பிதாமகனில் "இளங்காற்று வீசுதே", எம்.குமரனில் "சென்னை செந்தமிழ்", தம்பியில் "சுடும் நிலவு", அழகிய தமிழ் மகனில் "கேட்டு ரசித்த பாடல்", ஜெயம் கொண்டானில் "நான் வரைந்து வைத்த ஓவியம்", குட்டியில் "என் காதல் சரியோ தவறோ", உத்தம புத்திரனில் "கண் இரண்டில் மோதி", மஜாவில் "சிச்சி சிச்சி" மற்றும் "சொல்லித்தரவா", நினைத்தாலே இனிக்குமில் "அழகாய் பூக்குதே" போன்ற பாடல்களை பாருங்கள் பாலசுப்ரமணித்தின் கண்ணை உறுத்தாத கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவின் அருமை புரியும். இவற்றைவிட இவரது முதல் திரைப்படமான 'முரளி' மற்றும் 'மீனா' நடித்த இரணியன் திரைப்படத்தில் ஒரு பாடல் சிறப்பான ஒளிப்பதிவாக அமைந்திருக்கும், அந்த பாடலின் பெயரை தெரிந்தவர்கள் சொல்லலாம் :-)ஒளிப்பதிவை சினிமா பார்ப்பவர்களில் அதிகமானவர்கள் கவனிக்காமல் விடுவதுபோலவே பல ஒளிப்பதிவாளர்களை இணையமும் கவனிக்காமல் விட்டுவிட்டது, கூகிளில் பாலசுப்ரமணித்தின் ஒரு பாஸ்போட் சைஸ் புகைப்படம்கூட கிடைக்கவில்லை :-( , அவரைபற்றிய தகவல்கள்கூட மிகமிக குறைவாகவே கிடைக்ககூடியவாறு உள்ளது. முன்னணி ஓரிரு ஒளிப்பதிவாளர்கள் தவிர ஏனைய ஒளிப்பதிவாளர்களுக்கு இணையத்தில் இந்த நிலைதான், விக்கிப்பீடியா கூட கண்டு கொள்வதில்லை. பீ.சி.ஸ்ரீராம், ரவி.கே.சந்திரன்,சந்தோஷ் சிவன், கே.வி.ஆனந்த், ஜீவா போல பாலசுப்ரமணித்தின் பெயர் பலருக்கும் தெரிந்திருக்காவிட்டாலும் இவரும் அவர்களுக்கு குறைந்தவரில்லை. இவரது திறமைக்கு இன்னும் நிறைய வாய்ப்புகளும் உரிய அங்கீகாரமும் கிடைக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

ஹீத் ஸ்ட்ரீக் (கிரிக்கெட்)
ஜிம்பாவே அணியின் முன்னால் தலைவர் மற்றும் சிறந்த சகலதுறை வீரர்தான் ஹீத் ஸ்ட்ரீக். அண்டி பிளவருக்கு (Andy Flower) அடுத்து (67 போட்டிகள்) அதிக டெஸ்ட் போட்டிகளில் ஜிம்பாவேக்காக ஆடியவர் ஹீத் ஸ்ட்ரீக். 65 டெஸ்ட் போட்டிகளில் ஜிம்பாவேக்காக ஆடியுள்ள ஹீத் ஸ்ட்ரீக் 1990 ஓட்டங்களை 1 சதம் 11 அரைச்சதங்கள் அடங்கலாக 22.35 சராசரியில் பெற்றதோடு ஜிம்பாவே அணிக்காக அதிகூடிய விகட்டுகளாக 216 விக்கட்டுகளை 7 ஐந்து விக்கட்டுகள் அடங்கலாக பெற்றுக்கொடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 70 விக்கட்டுகளே அதிகபடியாக போல் ஸ்ராங்கால் (Paul Strang) பெறப்பட்டுள்ளது. தற்போது ஜிம்பாவேயின் டெஸ்ட் அந்தஸ்து பறிக்கப் பட்டுள்ள நிலையில் இன்னுமொருவர் ஹீத் ஸ்ட்ரீக்கின் சாதனையான 216 விக்கட்டுகளை தாண்டுவது அவளவு சுலபமில்லை.

டெஸ்ட் போட்டிகளை அதிக விக்கட்டுகளை கைப்பற்றியது போன்றே ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாவே சார்பாக 239 விக்கட்டுகளை அள்ளியுள்ள ஹீத் ஸ்ட்ரீக்கிற்கு அடுத்து நூறுக்கு மேற்ப்பட்ட விக்கட்டுகளை கைப்பற்றியது 'கிராண்ட் பிளவர்' (Grant Flower) மட்டுமே (104). தற்போது ஆடிவரும் வீரர்களில் இளம்வீரர் 'ப்ரோச்பர் உட்சயா' (Prosper Utseya) மட்டுமே அதிகபடியாக 93 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார், இவருக்கு மட்டுமே ஹீத் ஸ்ட்ரீக்கின் சாதனையான 237 ஐ நெருங்கும் சந்தர்ப்பம் உள்ளது என்றாலும் அது அவளவு சுலபமில்லை. அதேபோல ஒருநாள் போட்டிகளில் 2900 ஓட்டங்களை 13 அரைச் சதங்களுடன் பெற்றுள்ள ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாவேயின் கிரிக்கட் வரலாற்றின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் பந்து வீச்சாளர் மட்டுமன்றி சிறந்த சகலதுறை வீரரும் கூட.வலதுகை பாஸ்ட் - மீடியம் (Right-arm fast-medium) பந்து வீச்சாளரான ஹீத் ஸ்ட்ரீக் இடதுகை துடுப்பாட்ட வீரர்களுக்கு உள்வரும் (in swing) பந்துகளை வீசி நிலை குலைய செய்வதில் கில்லாடி, இவரது உள்வரும் (in swing) பந்துகளுக்கு கால்களை கொடுத்து LBW முறையில் பவிலியன் திருப்பியவர்கள் ஏராளம். இடதுகை துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டுமல்ல வலதுகை துடுப்பாட்ட வீரர்களுக்கும் உள்வரும் பந்துகளை வீசுவதில் ஹீத் ஸ்ட்ரீக் கெட்டிக்காரர்தான். 'ஒருநாள்' போட்டிகளில் டெண்டுல்க்கர் மற்றும் ஜெயசூரியாவை அதிகபட்சமாக 7 தடவைகள் வெளியேற்றிய ஹீத் ஸ்ட்ரீக் 'டெஸ்ட்' போட்டிகளில் இலங்கையின் ரொஷான் மகானாமாவை 6 தடவைகள் அதிகபட்சமாக வெளியேற்றி உள்ளார். உலகின் தரமான ஸ்விங் கன்றோலான (swing control) பந்துவீச்சாளர்களில் ஹீத் ஸ்ட்ரீக்கும் முக்கியமானவர்.

துடுப்பாட்டத்தில் பின் வரிசையில் களமிறங்கினாலும் பல போட்டிகளுக்கு தனது நிதானத்தாலும் வேகத்தாலும் தேவைக் கேற்றால் போல் பங்களிப்பை வழங்கியவர்தான் ஹீத் ஸ்ட்ரீக். இவரது துடுப்பாட்டத்தில் மிகவும் விசேடமான போட்டிஎன்றால் அது 2001 ஆம் ஆண்டு முதல் முதலாக ஜிம்பாவே நியூசிலாந்தில் ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியபோது இடம்பெற்ற மூன்றாம் போட்டிதான். மூன்று போட்டிகள் கொண்ட அந்த தொடரின் இறுதிப்போட்டியில் 67 பந்துகளில் 5 சிச்சர்கள் 4 பவுண்டரிகள் சகிதம் ஹீத் ஸ்ட்ரீக் ஆட்டமிழக்காமல் பெற்ற 79 ஓட்டங்கள் அந்த போட்டியையும் தொடரையும் 2:1 என ஜிம்பாவே கைப்பற்ற உதவியது.ஜிம்பாவேயின் உள்நாட்டு சிக்கல்கள் இல்லாவிட்டால் மேலும் பல போட்டிகளில் ஹீத் ஸ்ட்ரீக் தனது திறமையால் விருந்து வைத்திருப்பார், அவரது பெறுதிகளும் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால் அவரதும் எமதும் போதாதநேரம் அணி வீரர்களுக்கும் நாட்டுத் தலமைக்குமிடயிலான பிரச்சனையால் அவர் இடையிலேயே அணியைவிட்டு விலக வேண்டி நேரிட்டது. இருந்தாலும் இன்று ஜிம்பாவே அணியின் பந்துவீச்சு பயிற்ச்சியாளராக ஹீத் ஸ்ட்ரீக்கை காணும்போது ஹீத் ஸ்ட்ரீக்கின் அன்றைய அற்ப்புதமான பந்துவீச்சு பசுமையாக நினைவிற்கு வருகிறது. ஜிம்பாவே சர்வதேச கிரிக்கட்டில் இருக்கும் வரை ஹீத் ஸ்ட்ரீக்கும் அவரது பந்த்வீச்சு அக்ஷனும் எப்போதும் ஞாபகத்தில் இருந்துகொண்டே இருக்கும்.10 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

ம.தி.சுதா said...

ஃஃஃஃலோ ஆங்கிளில் மிரட்டுவது, கமெராவை ஷேக் பண்ணுவது, அடிக்கடி கலர் டோன் மாத்துவது என எதுவுமே இல்லாமல் பாமரனும் ரசிக்க கூடியவகையில்ஃஃஃ

சரியான சுட்டிக்காட்டல் அருமை...

ஹீத் ஸ்ரிக் ஒரு நாகரிகமான விளையாட்டுக்காரர்.. வாசிற்கு சுழற்சி நுட்பம் சொல்லிக் கொடுத்தவரில் ஒருவர்.. அத்துடன் இவரது பந்தில் ஒரு முறை சச்சினின் விக்கெட் துண்டானது இப்போதும் நினைவில் இருக்கிறது..

நல்ல தெரிவுகள் அருமை.. ஜீவ்..

Philosophy Prabhakaran said...

ஆல்- ரவுண்டர் என்ற வார்த்தைக்கு தமிழர்த்தம் தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்... சகலதுறை வீரர் என்று தகவல் தந்து தெளிய வைத்ததற்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

ஹீத் ஸ்ட்ரீக் - பழைய நினைவுகளை கிளறிவிட்டதற்கு நன்றி...

மாணவன் said...

இவ்வளவு தெளிவாக தகவல்களை அவர்களைப்பற்றிய சிறப்புகளுடன் பகிர்ந்துகொள்வது மிகவும் ஆச்சரியமளிக்கிறது நண்பரே,

உங்களின் இந்த உழைப்பிற்கு ஒரு சல்யூட்...

தொடர்ந்து கலக்குங்க நண்பா.....

சேலம் தேவா said...

எனக்கும் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு மிகவும் பிடிக்கும்.யாரா இருந்தாலும் அழகா தெரிவாங்க அவரோட ஒளிப்பதிவில..!!

Unknown said...

இருவரை பற்றிய தகவல்களும் அருமை, நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து பாடல்களும் எனக்கும் பிடித்தவையே

Unknown said...

அருமையான தொகுப்பு

பகிர்வுக்கு நன்றி நண்பரே!

கார்த்தி said...

பாலசுப்பிரமணியம் பற்றி அறிந்து கொண்டோம்.
நீங்கள் கூறியது போல
பிதாமகனில் "இளங்காற்று வீசுதே", எம்.குமரனில் "சென்னை செந்தமிழ்", தம்பியில் "சுடும் நிலவு", அழகிய தமிழ் மகனில் "கேட்டு ரசித்த பாடல்", ஜெயம் கொண்டானில் "நான் வரைந்து வைத்த ஓவியம்", , மஜாவில் "சிச்சி சிச்சி" மற்றும் "சொல்லித்தரவா" போன்ற பாடல்கள் இசையாலும் Visuals ஆலும் நான் ரசித்த பாடல்கள்.

Heath Streak-நான் ரசித்த சிறந்த சகலதுறைவீரர். உள்நாட்டுப்பிரச்னையால் நீணடகாலம் காணாமல் போய் பின் சில போட்டிகளில் விளையாடிவிட்டு ஓய்வு பெற்றவர்.

இவரை தவிர இவருடன் அதே காலப்பகுதியில் விளையாடிய Murray Godwin (தற்போது இங்கிலாந்து பிராந்திய அணிக்காக விளையாடி வருபவர்) Neil Jhonston போன்றோர் பின் Zimbawe அணியில் காணாமல் போனவர்களில் தலைசிறந்த வீரர்கள்.
இவர்களை பற்றியும் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்!

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ philosophy prabhakaran

@ மாணவன்

@ சேலம் தேவா

@ இரவு வானம்

@ விக்கி உலகம்

@ கார்த்தி

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)