Saturday, December 18, 2010

2010 இல் தமிழ் சினிமா

2009 ஐ விட 2010 இல் வெற்றிப் படங்களும் தரமான திரைப்படங்களும் அதிகளவில் வெளியாகியுள்ளமை மகிழ்ச்சியான விடயம்., இது 2011 இல் தமிழ் சினிமா காலடி எடுத்து வைப்பதற்கு நேர்மறையான சக்தியாக இருக்கும். தமிழ் சினிமாவிற்கு ஓரளவு சிறப்பான ஆண்டான 2010 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் 2010 இல் வெளிவந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோரது பங்களிப்புக்கள் பற்றிய பார்வைதான் இந்தப்பதிவு.

திரைப்படங்கள்
* 2010 ஆம் ஆண்டு தை 1 முதல் இன்றுவரை (மார்கழி 20 வரை) மொத்தமாக 129 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன; இவற்றில் அதிக பட்சமகாக ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் 15 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன, குறைந்த பட்சமாக மாசி மாதம் 5 திரைப்படங்கள் மாத்திரமே திரையிடப்பட்டுள்ளன. தை 22, மாசி 19, புரட்டாதி 24, ஐப்பசி 8, கார்த்திகை 12 ஆகிய வெள்ளிக்கிழமைகள் தவிர்ந்த மிகுதி அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் குறைந்த பட்சம் ஒரு திரைப்படமேனும் திரையிடப்பட்டுள்ளது.

* ரஜினிகாந்த், ஐஸ்வர்யா நடிப்பில் ஷங்கர் இயக்கிய சண் பிக்சர்ஸின் எந்திரன் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி வணிகரீதியாக வரலாறு காணாத மாபெரும் வெற்றியடைந்தது. எந்திரன் தவிர்த்து பையா, சிங்கம், தமிழ் படம், விண்ணை தாண்டி வருவாயா, நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்த ஏனைய திரைப்படங்கள்.

* அங்காடித்தெரு, மைனா, களவாணி, வம்சம், மதராசப்பட்டினம், இரும்புகோட்டை முரட்டு சிங்கம் போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு வணிக ரீதியாகவும் வசூலித்த திரைப்படங்கள்.

* சுறா, அசல், கோவா, ராவணன், ரத்த சரித்திரம், ஆயிரத்தில் ஒருவன், நந்தலாலா போன்ற திரைப்படங்கள் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி வணிக ரீதியாய் நஷ்டமடைந்த முக்கியமான திரைப்படங்கள்.
நடிகர்கள்
* ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, ஆர்யா, சிம்பு ஆகிய நால்வருமே இந்தாண்டு வெற்றிபெற்ற பிரபல கதாநாயகர்கள்.

*கார்த்திக்கு இந்தாண்டு சிறப்பான ஆண்டு, நடித்த இரண்டு திரைப்படங்களுமே வணிகரீதியாக நல்ல வசூலை குவித்தன.

* ஆர்யாவிற்கு பாஸ் என்கிற பாஸ்கரன் நல்ல வசூலையும் மதராசப்பட்டினம் நல்ல பெயரையும் ஏற்ப்படுத்திக் கொடுத்தது, சிக்குபுக்கு வெற்றி பெறாவிட்டாலும் சுமாரான வசூலை பெற்று ஒட்டிக்கொண்டிருக்கிறது.

* சூர்யாவிற்கு சிங்கம் சிறந்த வசூலை அள்ளிக்கொடுத்தாலும் மிகவும் எதிர்பார்த்த ரத்த சரித்திரம் சூர்யாவிற்கு கை கொடுக்கவில்லை.

* முன்னணி நாயகர்களான அஜித், விக்ரம், விஜய் மூவரும் தத்தமது ரசிகர்களை ஏமாற்றினர்.

* தனுஸ் நடித்த குட்டி, உத்தம புத்திரன் இரண்டு திரைப்படங்களையும் யாரடி மோகினி ஜவகர் இயக்கியிருந்தார், இந்த இரண்டு திரைப்படங்களுமே தனுசிற்கு கை கொடுக்கவில்லை.

* பழம்பெரும் நடிகர்களான சத்யராஜ் (கௌரவர்கள், குரு சிஷ்யன்), சரத்குமார் (ஜக்குபாய்), அர்ஜுன் (வல்லக் கோட்டை) போன்றோரது திரைப்படங்கள் 10 நாட்களுக்கு கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.

* கேப்டன் இயக்கி நடித்த விருத்தகிரி திரைப்படமும் வசூலும் பரவாயில்லை ரகம்.

* மற்றொரு பிரபல நடிகர் கமலஹாசனது திரைப்படம் ஆண்டின் இறுதி வாரத்தில் (மார்கழி 23) வெளிவருவதால் அதனது வசூல் நிலைப்பாட்டை அடுத்தாண்டே கூற முடியும்.

* ஜெயம் ரவி, ஜீவா, பரத், ஜெய், விஷால் போன்ற வளர்ந்துவரும் நடிகர்களுக்கு 2010 கை கொடுக்கவில்லை.

நடிகைகள்
* எந்திரன், ராவணன் என 10 ஆண்டுகளுக்கு பின்னர் நேரடியாக தமிழ் திரைப்படத்தில் நடித்து சிறுசு முதல் பெரிசு வரை அனைவரதும் அபிமானத்தை அள்ளியுள்ளார் ஐஸ்வர்யாராய்.

* 2007, 2008, 2009 ஆம் ஆண்டுகளில் வெறிக்காக ஏங்கிய திரிஷாவிற்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது விண்ணைத் தாண்டி வருவாயா. விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வெற்றி பெற்றதோடு திரிஷாவிற்கு நல்ல பெயரையும் ஏற்ப்படுத்திக் கொடுத்தது.

* அதிகமான பேருக்கு பிடித்த 2010 இன் நாயகி என்று 'அங்காடித்தெரு' அஞ்சலியை சொல்லலாம். அதிகமான வரவேற்பை அங்காடித்தெருவில் பெற்றாலும் அடுத்து வெளிவந்த ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி போன்ற திரைப்படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை.

* அனுஷ்கா வெற்றிபெற்ற 'சிங்கம்' திரைப்படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் அதில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தார்.

* சுறா, தில்லாலங்கடி கை கொடுக்காவிட்டாலும் பையாவின் வெற்றி 2010 இல் தமன்னாவிற்கு ஓரளவு ஆறுதல், கார்த்தியுடன் தமன்னா இணையும் அடுத்த திரைப்படமான சிறுத்தைக்கும் பையாவின் வெற்றி பலமாக அமைத்துள்ளது.

* 'மைனா' அமலா , 'வம்சம்' சுனைனா, களவாணி 'ஓவியா' போன்றவர்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்ற சில நடிகைகள்.

* மதராசப்பட்டினம் திரைப்படத்தில் நடித்த இங்கிலாந்தின் லிவர்பூலினை சேர்ந்த 'எமி ஜாக்சன்' இந்தாண்டு அதிகமானவர்களின் தூக்கத்தை கெடுத்த நாயகி என்பதில் சந்தேகமில்லை.

இயக்குனர்கள்
*அதிகமான முன்னணி இயக்குனர்களது திரைப்படங்கள் 2010 இல் வெளிவந்தாலும் வெற்றிப் படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்த்தான் உள்ளன.

* தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னம் இருவரதும் திரைப்படங்களும் 17 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரே ஆண்டில் தமிழில் வெளியாவது 2010 இல்தான். இதற்கு முன்னர் 1993 இல் ஷங்கரது 'ஜென்டில்மன்'னும் மணிரத்தினத்தின் 'திருடா திருடா'வும் வெளியாகியிருந்தன.

* லிங்குசாமி (பையா), கவுதம் மேனன் (விண்ணைத்தாண்டி வருவாயா), வசந்தபாலன் (அங்காடித்தெரு), பாண்டியராஜ் (வம்சம்), விஜய் (மதராசப் பட்டினம்), பிரபுசாலமன் (மைனா) ஆகியோர் பிரபலமானவர்களில் வெற்றி பெற்ற இயக்குனர்கள்.

* சிம்பு தேவன் இயக்கிய 'இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்' மற்றும் பாண்டியராஜ்சின் 'வம்சம்' திரைப்படங்கள் சுமாரான வெற்றியை பெற்றன.

* மணிரத்னம் தவிர்த்து பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன், சரன், வெங்கட் பிரபு, மிஸ்கின், 'ஜெயம்' ராஜா, கரு பழனியப்பன், சாமி போன்ற பிரபலமான இயக்குனர்களது திரைப்படங்களை 2010 இல் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, சசிக்குமாரும் இந்த லிஸ்டில் இணைவார் என்றே தோன்றுகின்றது

* இந்தாண்டு அதிகமான திரைப்படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் ரசிகர்களின் பொறுமையை மூன்று தடவை (மாஞ்சா வேலு, வல்லக் கோட்டை, வாடா) சோதித்துள்ளார்.

* நீண்ட நாட்களுக்கு பின்னர் சுந்தர்.c இயக்கிய நகரம் திரைப்படம் அவர் ஏனைய இயக்குனர்களிடம் நடித்த திரைப்படங்களுக்கு 10 மடங்கு பரவாயில்லை என்று சொல்லப்பட்டாலும் வணிகரீதியாக நன்றாக போகவில்லை.

* களவாணி திரைப்படத்தை இயக்கிய ஆர். சற்குணம் முதல்ப்படத்திலேயே எதிர்பார்ப்புள்ள இயக்குனர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.

இசையமைப்பாளர்கள்
* ஏ.ஆர். ரஹுமான் 3 திரைப்படங்களுக்கு 2010 இல் இசையமைத்துள்ளார், மூன்று திரைப்படங்களுமே (எந்திரன், ராவணன், விண்ணைத்தாண்டி வருவாயா) பாடல்கள் சூப்பர் கிட்டாகினாலும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் வெற்றிக்கு ரகுமானது இசை மிகப் பெரும் பலமாக அமைந்தது.

* ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்த எந்த திரைப்படங்களுமே 2010 இல் வெளியாகாவிட்டாலும் அவரது இசையில் 'எங்கேயும் காதல்' திரைப்பட பாடல்கள் வெளியாகியுள்ளமை அவரது வெறுமையை அவர் ரசிகர்களுக்கு போக்கியது.

* கோவா, பானா காத்தாடி, பையா, நான் மகானல்ல, தில்லாலங்கடி, காதல் சொல்ல வந்தேன், தீராத விளையாட்டுபிள்ளை, பாஸ் என்கிற பாஸ்கரன் என 2010 இல் அதிக பட்சமாக ஒன்பது திரைப்படங்களுக்கு யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்துள்ளார். இவற்றில் பையா மற்றும் நான் மகானல்ல திரைப்படங்களின் வெற்றிக்கு யுவனின் இசை மிகப்பெரும் பலமாக அமைந்தது.

* அங்காடித்தெரு, மதராசப்பட்டினம் திரைப்படங்களின் வெற்றிக்கு துணை புரிந்த ஜீ.வி.பிரகாஷின் இசை வா திரைப்படத்திற்கு கை கொடுக்கவில்லை.

* இளையராஜாவின் இசை நந்தலாலாவில் பெருமைப்படுத்தப் பட்டாலும் திரைப்படம் படு தோல்வியடைந்துள்ளது.

* விஜய் ஆண்டனி 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாடலை தவிர வேறெந்த அழகையும் தரவில்லை.

* குட்டி, சிங்கம் என இரண்டு திரைப்படங்களுக்கும் சிறப்பான பாடல்களை கொடுத்துள்ள தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தற்போது வெளிவந்துள்ள 'மன்மதன் அம்பு' திரைப்பட பாடல்கள் இப்போது பிரபலமடைந்து வருகிறது.

* வித்யாசாகருக்கு மந்திரப்புன்னகை, மகிழ்ச்சி திரைப்படங்கள் கை கொடுக்காவிட்டாலும் தற்போது வெளியாகியிருக்கும் காவலன் பாடல்கள் 2011 இல் வித்யாசாகருக்கு சிறப்பான ஆரம்பத்தை கொடுக்கும்.

2010 இன் கௌரவம்
சிறந்த நடிகர்- ரஜினிகாந்த் (எந்திரன்)
சிறப்பு பரிசு - ஆர்யா (மதராசப் பட்டினம்)

சிறந்த நடிகை - அஞ்சலி (அங்காடித்தெரு)
சிறப்பு பரிசு - திரிஷா (விண்ணைத்தாண்டி வருவாயா)

சிறந்த இயக்குனர் - பிரபு சாலமன் (மைனா)
சிறப்பு பரிசு - ஏ.சற்குணம் (களவாணி)

சிறந்த திரைப்படம் - மைனா (பிரபு சாலமன்)
சிறப்பு பரிசு - அங்காடித்தெரு (வசந்தபாலன்)
*சிறப்பு பரிசு - எந்திரன் (ஷங்கர்)

சிறந்த தயாரிப்பாளர் - ஐங்கரன் இன்டர்நஷனல் (நந்தலாலா)
சிறப்பு பரிசு - ரெட்டை சுழி (எஸ் பிக்சர்ஸ்)

சிறந்த இசையமைப்பாளர் - ஜீ.வி.பிராகாஷ் (மதராசப்பட்டினம்)
சிறப்பு பரிசு - டீ.இமான் (மைனா)

சிறந்த ஒளிப்பதிவாளர் - மகேஷ் முத்துசாமி (நந்தலாலா)
சிறப்பு பரிசு - எம்.சுகுமாரன் (மைனா)

சிறந்த பட தொகுப்பு - அன்டனி (எந்திரன்)
சிறப்பு பரிசு - டி.எஸ்.சுரேஷ் (தமிழ் படம்)

சிறந்த திரைக்கதை - சீ.எஸ்.அமுதன் (தமிழ் படம்)
சிறப்பு பரிசு - ஹரி (சிங்கம்)

சிறந்த வசன கர்த்தா - பாண்டியராஜ் (வம்சம்)
சிறப்பு பரிசு - ஜவகர் (குட்டி)

சிறந்த பாடலாசிரியர் - மு.மேத்தா (ஒன்னுக்கொன்னு, நந்தலாலா)
சிறப்பு பரிசு - மதன் கார்க்கி (இரும்பிலே ஒரு இருதயம், எந்திரன்)

சிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம் (பாஸ் என்கிற பாஸ்கரன்)
சிறப்பு பரிசு - சிவா (தமிழ் படம்)

சிறந்த வில்லன் நடிகர் - பிராகாஷ் ராஜ் (சிங்கம்)
சிறப்பு பரிசு - பிரித்விராஜ் (ராவணா)

சிறந்த குணச்சித்திர நடிகர் - பார்த்தீபன் (ஆயிரத்தில் ஒருவன்)
சிறப்பு பரிசு - தம்பி ராமையா (மைனா)

சிறந்த சண்டை பயிற்சியாளர் - பீட்டர் கெய்ன் (எந்திரன் & ராவணா)
சிறப்பு பரிசு - ராக்கிராஜேஷ், அனல் அரசு (சிங்கம்)

சிறந்த பாடகர் - கார்த்திக் (உசிரே போகுது, ராவணா)
சிறப்பு பரிசு - யுவன்ஷங்கர்ராஜா (என்காதல் சொல்ல, பையா)

சிறந்த பாடகி- ஷ்ரேயா கோஷல் (உன்பேரை சொல்லும்போதே, அங்காடிதெரு)
சிறப்பு பரிசு- சுர்முகி (ஏய் துஸ்யந்தா, அசல்)

அதென்ன சிறப்பு பரிசின்னு சந்தேகமா?அது நம்ம தமிழ அரசின் விருது வழங்கும் விழாவை பார்த்தாதால ஏற்ப்பட்ட பக்கவிளைவு :-)

22 வாசகர் எண்ணங்கள்:

! சிவகுமார் ! said...

தெளிவான அலசல் ஜீவா!!எத்தனை மணிநேரம் எடுத்தீர்கள்??. நானும் விருதுப்பட்டியல் போட எண்ணியுள்ளேன். சில நாட்களாகும். ஜீவா, இதற்கு முன்பு நான் ரஜினியின் ஹீரோ அல்லாத சிறந்த பத்து கருப்பு வெள்ளை படங்களை பற்றி பதிவிட கேட்டிருந்தேன். நீங்கள் ரஜினி நடித்த சிறந்த பத்து வேடங்கள் பற்றி பதிவிட்டுள்ளீர்கள். நான் கேட்டதை பதிவிட்டால் வித்யாசமாக இருக்கும் என நம்புகிறேன்.

ம.தி.சுதா said...

அருமையான தெரிவுகள் ஜீவ்... என்னால் பெரிதாக இதற்கு மாற்று காண முடியல வாழ்த்துக்கள்... அது சரி உண்மையில் எனக்குத் தான் சுடு சோறு 30 நிமிடமாக பதிவை வாசித்துவிட்டு ஒறிஜினல் பதிவுக்காய் காத்திருந்தேன்...

Philosophy Prabhakaran said...

புள்ளிவிவரங்கள் அருமை... தமிழ் மாதங்களை ஞாபகத்தில் வைத்திருப்பதற்க்காக பாராட்டுக்கள்...

Philosophy Prabhakaran said...

விருதெல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க... சிறந்த இசையமைப்பாளர் ஏன் ஏ.ஆர்.ரகுமான் இல்லை... புதியவர்களை ஊக்குவிக்கும் எண்ணமோ...

தேவன் மாயம் said...

அசத்தல்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல அலசல்.. அனைத்தும் அருமை.. ரொம்ப மெனக்கட்டிருப்பீங்க போலிருக்கே நண்பரே...

Chitra said...

Great selections!!! Super!

sawme said...

நல்ல விவரம், இதில் இரண்டு முறை மேலிருந்து நான்காவது [சிறந்த திரைப்படம் ,சிறப்பு பரிசு] மறுபடியும் கடைசியில் தந்து இருக்கீங்க..இது என்ன மர்மம்? என்திரன்காகவா :) நன்றி சாமி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super review. but good acter rajini is not good. i think aaryaa is a good acter

Anonymous said...

என்ன ஒரு அருமையான அலசல், கலக்கிட்டீங்க பாஸ்..

Muruganandan M.K. said...

நடுநிலையான நல்ல அலசல். மிகுந்த சிரமம் எடுத்து நிறைவாகச் செய்துள்ளீர்கள்.

Unknown said...

தல சூப்பரு

எப்பூடி.. said...

@ சிவகுமார்

@ ம.தி.சுதா

@ philosophy prabhakaran

@தேவன் மாயம்

@ வெறும்பய

@ Chitra

@ sawme

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

@ Muhavaji

@ Dr.எம்.கே.முருகானந்தன்

@ விக்கி உலகம்


அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி

.............................................


@ சிவகுமார்


// இதற்கு முன்பு நான் ரஜினியின் ஹீரோ அல்லாத சிறந்த பத்து கருப்பு வெள்ளை படங்களை பற்றி பதிவிட கேட்டிருந்தேன். நீங்கள் ரஜினி நடித்த சிறந்த பத்து வேடங்கள் பற்றி பதிவிட்டுள்ளீர்கள். நான் கேட்டதை பதிவிட்டால் வித்யாசமாக இருக்கும் என நம்புகிறேன்.//


நேரம் வரும்போது நிச்சயம் எழுதுகிறேன் :-)


...................................
@ sawme said...


//இதில் இரண்டு முறை மேலிருந்து நான்காவது [சிறந்த திரைப்படம் ,சிறப்பு பரிசு] மறுபடியும் கடைசியில் தந்து இருக்கீங்க..இது என்ன மர்மம்? என்திரன்காகவா :) நன்றி சாமி//


சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி, நான் உண்மையில் கவனிக்கவில்லை, உங்களால் பின்னூட்டலுக்கு பின்னர்தான் அவதானித்தேன், இருந்தாலும் எந்திரனை எக்ஸ்ராவாக சிறப்பு பரிசில் இணைத்துள்ளேன், நன்றி :-)

Madurai pandi said...

நல்ல அலசல்... உங்களை தமிழக அரசின் விருது குழுவுக்கு சிபாரிசு செய்கிறேன்...

r.v.saravanan said...

நல்ல அலசல்.. அனைத்தும் அருமை jeevadharshan கலக்கிட்டீங்க

கார்த்தி said...

நந்தலாலா வந்து கொஞ்ச நாள்தானே ஆகுது! இன்னும் ஓடிக்கொண்டுதானே இருக்கு அதுக்குள்ள புளொப்பு என்கிறீர்களே?


//விஜய் ஆண்டனி 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாடலை தவிர வேறெந்த அழகையும் தரவில்லை.
உங்களுடன் பெரும்பாலும் ஒத்து போகிறேன் கீழுள்ளவிடயங்களை தவிர...

என்ன சார் உத்தம புத்திரன் பாடல்கள் கேட்கவில்லையா? அஜீ்ஸ் பாடின பாடலைக்கேளுங்கள். படத்தில் இல்லாவிடினும் பாடல் அற்புதமான மெலடி பாடல். அண்டனியின் இசையில்.

// வித்யாசாகருக்கு மந்திரப்புன்னகை, மகிழ்ச்சி திரைப்படங்கள் கை கொடுக்காவிட்டாலும்
மந்திரப்புன்கையில் 3சுப்பர் பாடல்கள் உள்ளதே. என்ன சொல்கிறீர்கள் நீங்கள்????

DSP ஐ புகழுதல் தாங்க முடியாமல் உள்ளது!!

மற்றும்படி திறமையான அலசல்..

Unknown said...

கேப்டனுக்கு போட்டியா புள்ளி விவரமா, அசத்துங்க, எல்லாமே நல்லா இருக்கு தல, ஆனா நகைச்சுவை நடிகர்ல சிவாவை சேர்த்துட்டீங்களே அவரு ஹீரோதான, அப்புறம் நான் தொடர் பதிவு எழுதிட்டேன் படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க, வெயிட்டிங் பார் யூ

http://iravuvaanam.blogspot.com/2010/12/blog-post_19.html

Unknown said...

ஜீவா, இந்த வருட இறுதியில் இன்னும் சில படங்கள் வரவுள்ளனவே. குறிப்பாக மன்மதன் அம்பு மற்றும் சில. அதற்குள் விருது தந்துவிட்டீர்கள். கமல் மற்றும் வேறு சினிமா ரசிகர்கள் கோபித்து கொண்டால்??

எப்பூடி.. said...

@ மதுரை பாண்டி

@ r.v.saravanan

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்


...............................................


@ கார்த்தி

//நந்தலாலா வந்து கொஞ்ச நாள்தானே ஆகுது! இன்னும் ஓடிக்கொண்டுதானே இருக்கு அதுக்குள்ள புளொப்பு என்கிறீர்களே? //

இதை பாருங்க
http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies/tamil-cinema-topten-movie-nandalala.html

படம் வெளியாகி நான்காம் நாளே சில படங்கள் வெற்றியா தோல்வியா என்பது தெரிந்துவிடும், அந்த வரிசையில் நந்தலாலா நான்காம் நாளே தியேட்டரில் காத்துவாங்க ஆரம்பித்து விட்டது. ஒரு சில திரைப்படங்கள் லேட்பிக்கப் ஆகிய வரலாறும் உண்டு, நந்தலாலா அந்த ஸ்டேஜை தாண்டி விட்டது.


//என்ன சார் உத்தம புத்திரன் பாடல்கள் கேட்கவில்லையா? அஜீ்ஸ் பாடின பாடலைக்கேளுங்கள். படத்தில் இல்லாவிடினும் பாடல் அற்புதமான மெலடி பாடல். அண்டனியின் இசையில்.

//மந்திரப்புன்கையில் 3சுப்பர் பாடல்கள் உள்ளதே. என்ன சொல்கிறீர்கள் நீங்கள்????//

நான் வித்யாசாகரின் தீவிரரசிகன் எனக்கு மந்திர புன்னகையில் எல்லா பாடல்களுமே பிடிக்கும், எனக்கும் உங்களுக்கும் பிடிப்பதல்ல மேட்டர், பொதுவாக எல்லோருக்குமே பிடிக்கவேண்டும், நீங்கள் சொல்லும் பாடல்கள் வந்ததே தெரியாமல் இருக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

//DSP ஐ புகழுதல் தாங்க முடியாமல் உள்ளது!!//

dsp யின் விரிவாக்கம் தேவி பிரசாத் என தாங்கள் கூறிய பின்னர்தான் புரிந்து கொண்டேன் :-)

*****நீங்கள் சொல்லும் பாடல்கள் வந்ததே தெரியாமல் இருக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.****

என நான் கூறியதற்கு தாங்கள் கூறிய


//அது உண்மைதான். ஆனால் அவர்கள் உண்மையான ரசிகர்களின் வகைக்குள் அடக்க முடியாதவர்கள். //

என்னும் பதில் சரியானதே.


வருகைக்கு நன்றி நண்பரே.


.........................................

@ இரவு வானம்

//எல்லாமே நல்லா இருக்கு தல, ஆனா நகைச்சுவை நடிகர்ல சிவாவை சேர்த்துட்டீங்களே அவரு ஹீரோதான, //

கமல்ஹாசனுக்கும் தசாவதாரத்தில சிறந்த காமடியன் விருது குடுத்த விஜய் டிவி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் :-)

//அப்புறம் நான் தொடர் பதிவு எழுதிட்டேன் படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க, வெயிட்டிங் பார் யூ//


இதோ கிளம்பிறன்.

...........................................

@ சிவகுமார்

//ஜீவா, இந்த வருட இறுதியில் இன்னும் சில படங்கள் வரவுள்ளனவே. குறிப்பாக மன்மதன் அம்பு மற்றும் சில. அதற்குள் விருது தந்துவிட்டீர்கள். கமல் மற்றும் வேறு சினிமா ரசிகர்கள் கோபித்து கொண்டால்??//

மார்கழி இறுதி வாரத்தில் வெளிவரும் திரைப்படங்களின் விருதுகள் அடுத்தாண்டு வழங்கப்படுவது நம்ம விருது கமிட்டிகளின் முடிவு :-)

VISWAM said...

அருமை. நல்ல பதிவு.

கிரி said...

நல்லா விரிவா எழுதி இருக்கீங்க.. ரொம்ப நேரம் ஆகி இருக்கும் :-)

எப்பூடி.. said...

@ viswam

@ கிரி

மிக்க நன்றி :-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)