Sunday, December 5, 2010

இந்தவார இருவர் (05/12/10)சார்லி (நடிகர்)
எந்த துறையானாலும் சிலருக்கு இருக்கும் திறமைக்கேற்ப சரியான அங்கீகாரமோ பெயரோ கிடைப்பதில்லை, அப்படி சினிமாவில் திறமைக்கேற்ப அங்கீகாரம் கிடைக்காதவர் பட்டியலில் முக்கியமான ஒருவர் 'நடிகர் சார்லி'. இவரது திறமைக்கு ஏற்ப பெயரும், அங்கீகாரமும் தமிழ் சினிமா இவருக்கு கொடுக்கவில்லை என்பதே நிஜம். இவரை நகைச்சுவை நடிகர் என்று அழைப்பதைவிட 'குணச்சித்திர நடிகர்' என்றழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். சார்லியை பல படங்களில் பார்த்த ஞாபகம் இருந்தாலும் 'பூவே உனக்காக' திரைப்படம்தான் சார்லி என்னும் பெயரை எனக்கு அறிமுகப்படுத்தியது. படம் முழுவதும் விஜயுடன் கூடவரும் சார்லி ஆரம்பத்தில் நகைச்சுவையிலும் இறுதியில் செண்டிமென்டிலும் சிறப்பான நடிப்பாற்றலை வெளிக்காட்டியிருப்பார். .

பின்னர் 'காதலுக்குமரியாதை' திரைப்படத்தில் மீண்டும் விஜயுடன் இணைந்து தாமு கூட்டணியில் கலக்கியிருப்பார், குறிப்பாக ரெஸ்ரோரண்டில் ஷாலினியும், சார்லியும், தாமுவும் மாறிமாறி 'ஹலோ' சொல்லும் காட்சி செம கலாட்டா. அதன்பின்னர் பல திரைப்படங்களில் தாமு, வையாபுரி போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து வந்தாலும் தனது வித்தியாசமான முகபாவங்களால் தன்னை வேறுபடுத்திக் காட்டி சிரிக்கவும், ரசிக்கவும் வைத்தார். நகைச்சுவை நடிகர்களுக்கு மிகமுக்கிய தேவையான டைமிங்கில் சார்லி ரொம்ப ரொம்ப கெட்டிக்காரர், 'டூயட்' திரைப்படத்தில் போனிலும் நேரிலும் மாற்றிமாற்றி பேசும் காட்சி சார்லியின் டைமிங்கிற்கு மிகச்சிறந்த சான்று.அதேபோல முகபாவனையையும், வசன உச்சரிப்பையும் நகைச்சுவை காட்சிகளின் தேவைக்கேற்றால் போல் வழங்குவதிலும் சார்லி கெட்டிக்காரர், உதாரணமாக 'ப்பிரன்ஸ்' திரைப்படத்தில் சார்லியின் வசன உச்சரிப்பை ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது, 'ப்பிரன்ஸ்' திரைப்படத்தில் வடிவேலுவையே சார்லி ஓவர்டேக் செய்திருந்தார் என்று சொன்னாலும் அது மிகையில்லை. புதுவசந்தம், பூவே உனக்காக போன்ற திரைப்படங்களில் சார்லியை நகைச்சுவைக்காகவும் சென்டிமென்ட் டிற்க்காகவும் பயன்படுத்திய விக்கிரமன் 'உன்னை நினைத்து' திரைப்படத்தில் சார்லியை முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக பயன்படுத்தியிருப்பார். அனைத்து நகைச்சுவைகளுமே நன்றாக இருந்தாலும் சார்லி 'சிங்கமுத்து பையனுக்கு' ஜோசியம் பார்க்கும் காட்சி ஹைலைட், அதில் முகபாவத்தில் சார்லி பிச்சு உதறியிருப்பார்.

குணச்சித்திர நடிப்பில் சார்லி முத்திரைபதித்த முக்கிய திரைப்படங்களில் 'வெற்றிக் கொடிகட்டு' முக்கியமானதொரு திரைப்படம். ஏஜென்டிடம் பணத்தை தொலைத்த சிலநாட்களின் பின்னர் பார்த்தீபனை கிராமத்து தெருவில் சந்திக்கும்போது பேசும் காட்சி கிளாஸ், அதிலும் கடைசிடில் பார்த்தீபனிடம் சாப்பிட பணம்கேட்கும் காட்சி கல் நெஞ்சக்காரனது கண்களிலும் ஈரம் வரவைக்கும். கே.பாலச்சந்தரால் 'பொய்க்கால் குதிரை' திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சார்லி இதுவரை ஐந்நூறுக்கு மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் குறிப்பிட்ட சில இயக்குனர்கள் தவிர வேறுயாரும் அவரை சரியாக பயன்படுத்தவில்லையோ? என்றே எண்ணத் தோன்றுகிறது. தனக்கு வழங்கும் பாத்திரங்களை நூற்றுக்கு நூறுவீதம் வீதம் சிறப்பாக நிறைவாக்கும் சார்லி நிச்சயம் 'தமிழ் சினிமாவில்' தனக்கென தனி முத்திரையை பதித்தவர்களில் ஒருவர்.

பிற்சேர்க்கை


யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை; அனால் சிறுவயதுமுதல் சந்திரபாபுவின் பையன்தான் சார்லி என்று நினைத்திருந்தேன், இதில் எனக்கு சந்தேகம் இதுவரை எழவில்லை, உங்கள் பின்னூட்டல்களினை பார்த்த பின்னர் கூகிளின் உதவியில் தேடியதில் சார்லி அவரது மகன் இல்லை என்பதே சரியென்று நினைக்கிறேன்.

ஆகையால் பதிவிலிருக்கும் சார்லியின் தந்தை சந்திரபாபு என்னும் வாசகத்தை எடுத்துவிடுகிறேன், சந்திரபாபு அவர்கள் சார்லியின் அப்பாவாக இல்லாதவிடத்து தவறான தகவலுக்காக சார்லியிடமும் தங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

லான்ஸ் குளூஸ்னர் (கிரிக்கெட்)
தென்னாபிரிக்காவின் முன்னாள் சகலதுறை வீரரான லான்ஸ் குளூஸ்னரை (Lance Klusener) 1999 ஆம் ஆண்டு கிரிக்கட் தெரிந்த யாருக்குமே தெரிந்திருக்காமல் இருக்க சாத்தியமில்லை. 1996 இல் சனத் ஜெயசூரியா 'பிஞ்ச் ஹிட்டர்' (Pinch hitter) ஆக ஒருநாள் போட்டிகளுக்கு புதிய பாதையை அறிமுகப்படுத்திய காரணத்தால் 1999 உலககிண்ண போட்டிகளுக்கு எல்லா அணிகளுமே 'பிஞ்ச் ஹிட்டிங்'கிற்கு தயாராக களமிறங்கி இருந்தன. கிரிக்கட்டை பொறுத்தவரை பின்வரிசை துடுப்பாடவீரர் முன் வரிசைக்கு மாற்றப்பட்டு வேகமாக ஓட்டங்களை குவிப்பதையே 'பிஞ்ச் ஹிட்டிங்' என்று அழைப்பது வழக்கம்; இந்தவகை 'பிஞ்ச ஹிட்டிங்கில்' சனத் ஜெயசூர்யா, களுவிதாரண, அப்பிடி, கில்கிறிஸ்ட் போன்ற வீரர்கள் ஒருநாள் போட்டிகளின் போக்கையே மாற்றியமைத்த வீரர்களில் முக்கியமானவர்கள்.

ஆனால் 1999 இல் இங்கிலாந்து ஆடுகளங்கள் 'பிஞ்ச் ஹிட்டிங்'கிற்கு எதிர்பார்த்ததுபோல ஒத்துழைக்காத நிலையில் பின்வரிசையில் 7,8,9 ஆம் இலக்கங்களில் களமிறங்கிய குளூஸ்னர் 'ஆரம்ப ஓவர்களில்' அடித்தாடும் பிஞ்ச் ஹிட்டேர்ஸ்சை விட கடைசி ஓவர்களில் அற்புதமாக அடித்தாடி தனது அணியை உலககிண்ண (1999) அரையிறுதிப் போட்டிவரை கொண்டுசென்றார், ஒருநாள் போட்டிகளில் பினிஷிங் முறையை மாற்றியமைத்த பெருமை இவரையே சாரும். இப்படி சிறப்பாக குளூஸ்னர் ஆடியும் தென்னாபிரிக்காவின் உலககிண்ண துரதிஸ்டமும் குளூஸ்னரின் தவறான விக்கட்டுகளுக்கிடையிலான ஓட்டமும் (Runs between the wickets) தென்னாபிரிக்காவின் 1999 ஆம் உலககிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது தென்னாபிரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் நுழைந்த குளூஸ்னர் தனது கன்னி டெஸ்ட் போட்டியிலேயே சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான கல்கத்தாவின் 'ஈடன் காடன்' மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் இறுதி இனிங்சில் இந்தியாவின் 8 (8/64) விக்கெட்டுகளை கைப்பற்றி தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு வழிகோலினார், அந்தப் போட்டிதான் 'ஹெர்ஷல் கிப்சினது' கன்னி டெஸ்ட் போட்டியும் என்பது கூடுதல் விஷேடம். டெஸ்ட் போட்டிகளுக்கு நேர்மாறாக ஒருநாள் போட்டிகளில் தனது கன்னி போட்டியில் எந்தவிதான விக்கட்டுகளையும் கைப்பற்றாத குளூஸ்னர் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிளந்திருந்தமையினால் அடுத்தடுத்த போட்டிகளுக்காக அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பின்னர் 6 மாதங்களின் பின்னர் அணியில் இணைந்த குளூஸ்னர் தனது மூன்றாவது ஒருநாள் போட்டியில் மூன்றாமிலக்கத்தில் களமிறங்கி ஆஸ்திரேலியாவிற்கெதிராக வெற்றி ஓட்டங்களாக 88 ஓட்டங்களை பெற்று தனது ஒருநாள் போட்டிகளுக்கான இடத்தை அணியில் உறுதிப்படுத்தினார்.

வேகப்பந்துவீச்சாளராக அறிமுகமாகி பின்னர் சகலதுறை ஆட்டக்காரராக தன்னை வளர்த்துக்கொண்ட குளூஸ்னருக்கு காலில் ஏற்ப்பட்ட உபாதை அவரை வேகப்பந்துவீச்சிலிருந்து பாஸ்ட்-மீடியம் ( fast-medium) பந்துவீச்சாளராக மாறும்படி செய்தது. உண்மையை சொன்னால் வேகப்பந்துவீச்சாளராக இருந்ததிலும் பாஸ்ட்-மீடியமாக மாறிய பின்னர்தான் குளூஸ்னரும் அவரது பந்துவீச்சும் பேசப்பட்டது. குலூஸ்னருக்கு சிலகாலம் பிரச்சினையாக இருந்த இன்னுமொருவிடயம் அவரது கண்பார்வை; இரவுநேர ஆட்டங்களில் களத்தடுப்பு செய்வது குலூஸ்னருக்கு சற்று சிரமமான விடயமாக இருந்தது, பின்னர் அவர் அதை மருத்துவரீதியாக சரிசெய்துவிட்டார்.மிகவும் பாரமான துடுப்புடன் (bat) களமிறங்கும் குளூஸ்னர் (சச்சினின் துடுப்பைவிட பாரமானது) தனது கட்டைவிரல், ஆட்காட்டிவிரல் இரண்டுக்கும் சேர்த்தாற்போல ஒரே துளையிருக்கும் துடுப்பாட்ட கையுறையை (batting gloves) பயன்படுத்துவது வழக்கம். ஒருநாள் போட்டிகளில் பந்தை orthodox positions களிற்கு கணித்து பலமாக அடிப்பதால் இறுதி நேரங்களில் ஓட்டங்களை குவிக்கும் குளூஸ்னர் முன்வரிசையில் களமிறங்கும்போது நேர்த்தியான முறையில் ஓட்டங்களை பெறுவதென நேரத்திற்கேற்றால் போல ஆடக்கூடியவர். 2000ஆம் ஆண்டிற்கு முன்னர் முன்னர் அதிகூடிய ஸ்ரைக்ரேட்டில் 45 க்கு மேற்பட்ட சரசரியையுடைய வீரர்களின் பட்டியலில் குளூஸ்னர் பெயர்தான் முதலாவதாக இருந்தது. 66 ஒருநாள் போட்டிகளில் 1718 ஓட்டங்களை 2 சத்தங்கள் 10 அரைச் சத்தங்கள் உட்பட பெற்ற குலூஸ்னரின் சராசரி 46.43, ஸ்ரைக்ரேட் 93.36.

ஒருநாள் போட்டிகளில் 41.1 சராசரியில் 3576 ஓட்டங்களை மொத்தமாக குவித்த குளூஸ்னர் 192 விக்கட்டுகளை வீழ்த்தி தென்னாபிரிக்க கிரிக்கட்டின் மறக்கப்படமாட்டாத சகலதுறைவீரராக தன்னை நிரூபித்திருந்தார். ஒருநாள் போட்டிகளைபோல டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்காவிட்டாலும் முக்கியமான பல தருணங்களில் அணிக்கு முதுகெலும்பாக உதவியுள்ளார், உதாரணமாக் 2000 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் கண்டியில் இடம்பெற்ற போட்டியில் (2nd test) முதல் இனிங்க்சில் தனிமனிதனாக போராடி குளூஸ்னர் பெற்ற சதம் (118) அந்த போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு வெற்றியையும் தொடரை சமநிலையிலும் முடித்துக்கொள்ள உதவியது.இறுதிக்காலத்தில் விளையாட்டுத்திறன் வீழ்ச்சி மற்றும் அணித்தலைவர் ஸ்மித்துடனான முறுகல்நிலை போன்ற காரணத்தால் நீண்ட நாட்களாக அணியில் சேர்த்துக் கொள்ளப்படாத குளூஸ்னர் இறுதியாக 2008 இல் தனது ஓய்வை அறிவித்தார். தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் ஒருநாள் போட்டிக்கான 'கனவு அணி' தெரிவுசெய்யும் பட்சத்தில் குளூஸ்னர் பெயர் அதில் இல்லாமல் இருக்குமானால் அந்த 'கனவு அணி' நிறைவுபெறாது என்பது எனது எண்ணம். 'சுலு' என்று வர்ணனையாளர்களாலும் ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்பட்ட லான்ஸ் குளூஸ்னர் 1996 - 1999 இல் கிரிக்கட் தெரிந்த அனைவருக்கும் நிச்சயம் இறுதிவரை நினைவிருப்பார்.

16 வாசகர் எண்ணங்கள்:

Philosophy Prabhakaran said...

சார்லி சந்திரபாபுவின் மகன் என்று நீங்கள் சொல்லியே தெரிந்துக்கொண்டேன்...
"பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே..." என்று பாடிய சந்திர பாபுவைத் தானே சொல்கிறீர்கள்...

லான்ஸ் க்ளூஸ்னரையும் அவரது பந்துவீசும் ஸ்டைலையும் மறக்க முடியுமா...?

ஏன் பின்னிரவில் பதிவை வெளியிடுகிறீர்கள்... இது பதிவை வெளியிட உகந்த நேரமல்ல...

எஸ்.கே said...

சார்லி ஒரு சிறந்த நடிகர்! சொன்னதுபோல் அவர் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லைதான்!

லான்ஸ் குளூஸ்னரின் அந்த உலககோப்பை தவறான ஓட்டத்தை மறக்கவே முடியாது!

பொன் மாலை பொழுது said...

உண்மைதான், சார்லியின் நடிப்பு நிறைய படங்களில் சிறப்பாக இருக்கும்.காரணம், அவர் பாலச்சந்தரின் கண்டுபிடிப்பு ஆயிற்றே! சிறந்த குணசித்திர மற்றும் சிரிப்பு நடிகர்தான். அவருக்கு இன்னமும்நிறைய சந்தர்பங்கள் வரும், இருக்கிறது.

நிறைய சேதிகள் எழுதுகிறீர்கள்:)))

மாணவன் said...

இந்த வார இருவர் என்ற தலைப்பில் சிறப்பாக எழுதி வருகிறீர்கள் அருமை,

தொடரட்டும் உங்கள் பணி...

வாழ்க வளமுடன்

Chitra said...

சார்லியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் அவரது தந்தை பல்துறை கலைஞர் 'சந்திரபாபு' இலங்கையில் பிறந்தவர் என்பதால் இவர்மீது எனக்கி ஈர்ப்பு கொஞ்சம் ஜாஸ்தி :-),


...... "பம்பர கண்ணாலே" சந்திரபாபு சாரா? இல்லை வேறு ஒருவரா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

சார்லி.. மிகச்சிறந்த நடிகர் என்பதில்லை.. அவரை எவரும் முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது தான் உண்மை...

குளூஸ்னர்..மறக்க முடியுமா... பள்ளிக்காலங்களில் எங்கள் ஹீரோ..

Mohamed Faaique said...

friends படம் மறக்க முடியாது... அதுல அவர் பேசும் ஸ்டைல் superb ..

ம.தி.சுதா said...

ஜீவ் பிரபாவிற்கு ஏற்பட்ட சந்தேகம் தான் எனக்கும்... அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி..

குளுஸ்ணர் என்ற பேரைக் கேட்டாலே எனக்கு குளுக்கோஸ் சாப்பிட்டது போலிருக்கும் அவர் ஒரு ஹிட்டர் என்றாலும் ஒரு நேர்த்தியான ஆட்டத்தை அவரிடம் காணலாம்... 2008 ல் நான் ஊரிற்கு போய் மீன் பிடிக்கப் போகிறேன் என்று அவர் கடைசியாகக் கொடுத்த பேட்டி இப்போதும் மனதில்அழுத்திய படி இருக்கிறது...

சிங்கக்குட்டி said...

சார்லியின் நடிப்பு எனக்கும் பிடிக்கும்,ஆனால் அவர் தந்தை என்று நீங்கள் குறிப்பிடுவது J.P.சந்திரபாபு தானா?

நான் விரும்பும் நடிகர்களில் முதலிடம் எப்போதும் J.P.சந்திரபாபுவுக்குதான், சார்லி அவர் மகன் என்பது சந்தேகமே? இதுவரை நான் கேள்வி பட்டது இல்லை.

r.v.saravanan said...

எனக்கு பூவே உனக்காக படத்தில் சார்லியை ரொம்ப பிடிக்கும்

எப்பூடி.. said...

@ philosophy prabhakaran

//சார்லி சந்திரபாபுவின் மகன் என்று நீங்கள் சொல்லியே தெரிந்துக்கொண்டேன்...
"பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே..." என்று பாடிய சந்திர பாபுவைத் தானே சொல்கிறீர்கள்...//


@ Chitra

//..... "பம்பர கண்ணாலே" சந்திரபாபு சாரா? இல்லை வேறு ஒருவரா?//


@ ம.தி.சுதா

//ஜீவ் பிரபாவிற்கு ஏற்பட்ட சந்தேகம் தான் எனக்கும்... அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி..//@ சிங்கக்குட்டி

//சார்லியின் நடிப்பு எனக்கும் பிடிக்கும்,ஆனால் அவர் தந்தை என்று நீங்கள் குறிப்பிடுவது J.P.சந்திரபாபு தானா?

நான் விரும்பும் நடிகர்களில் முதலிடம் எப்போதும் J.P.சந்திரபாபுவுக்குதான், சார்லி அவர் மகன் என்பது சந்தேகமே? இதுவரை நான் கேள்வி பட்டது இல்லை.//

......................................


யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை, அனால் சிறுவயதுமுதல் சந்திரபாபுவின் பையன்தான் சார்லி அப்பிடின்னு நான் நினைத்து வருகிறேன், சந்திரபாபு இலங்கையில் பிறந்தது நூறு சதவீதம் உண்மை, ஆனால் சார்லி அவரது மகனா? இல்லையா? என்பதை சார்லியைப்பற்றி சரியாக தெரிந்தவர்கள் உறுதிப்படுத்துங்கள். சந்திரபாபு மகனில்லாவிட்டால் எழுதிய வாசகத்தை டிலீட் செய்யவேண்டும், இல்லாவிட்டால் அப்புறம் அது தப்பாகிவிடும் :-)

எப்பூடி.. said...

@ philosophy prabhakaran

@ எஸ்.கே

@ கக்கு - மாணிக்கம்

@ மாணவன்

@ Chitra

@ வெறும்பய

@ Mohamed Faaique

@ ம.தி.சுதா

@ சிங்கக்குட்டி

@ r.v.saravanan


உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

சிங்கக்குட்டி said...

மீண்டும் குறுக்கிடுவதாக தவறாக நினைக்க வேண்டாம் நண்பா,

சந்திரபாபு பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில், கலைமுத்து பனிமயதாசன் என்பதுதான் அவர் பெயர். கடும் காய்ச்சலில் இருந்து பிழைத்தது கர்த்தரின் கருணை என்று ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள், பாபு என்பது அவர் செல்லப் பெயர், சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று அவரே வைத்துக்கொள்ள அதுதான் J.P.சந்திரபாபு.

அவரின் பெற்றோர் ரோட்ரிக்ஸ், ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையை நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பபட்டுதான் அவர்கள் இலங்கை வந்தது, அப்படி வரும் போது அவர்களுடன் சென்ற சந்திரபாபு கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்.

கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்பதால் சந்திரபாபு குடும்பம் காமராஜருக்கு மிக நெருக்கம்.

திரு.J.P.சந்திரபாபு மறைந்த போது முதலில் ஓடி வந்தது காமராஜரும் நடிகர் திலகம் சிவாஜியும்தான்.

நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

//உண்மைதான், சார்லியின் நடிப்பு நிறைய படங்களில் சிறப்பாக இருக்கும்.காரணம், அவர் பாலச்சந்தரின் கண்டுபிடிப்பு ஆயிற்றே!//
ஹே அறிய தகவல்!!!!

Riyas said...

உங்கள் தளத்தில் இப்போதுதான் பின்னூட்டம் இடுகிறேன்ன எல்லாம் அருமையான பத்வுகள்..

சார்லி சிறப்பான நடிகர்..

லான்ஸ் குலூஸ்னரை மறக்க முடியுமா..

உங்கள் தளத்தை இப்போதுதான் கவனிக்க முடிந்தது நீங்கள் இலங்கையர் என்பதையும்..

நானும் இலங்கையைச்சேர்ந்தவந்தான்

என் தளத்தையும் வந்து பாருங்க.. கருத்துக்களை சொல்லுங்க

எப்பூடி.. said...

@ சிங்கக்குட்டி

தகவலுக்கு நன்றி, சந்திரபாபு அவர்கள் கொழும்பில் சிறுவயதுமுதல் வசித்ததையும், கொழும்பில் கல்வி பயின்றதையும் வைத்து தவாறாக நினைத்துவிட்டேன்.

இதில் குறுக்கீடு ஒன்றுமில்லை, எதுவானாலும் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லதே, நன்றி.

திருத்திக்கொள்கிறேன்.

................................................

@ நாஞ்சில் மனோ

@ ரியாஸ்

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)