Friday, November 5, 2010

சாட்டலைட் டிவிகள் vs அன்றைய பொதிகை (DD1)





காலையிலிருந்து ஒரேயடியா டிவி பார்த்து பார்த்து இப்ப தலையிடி நிக்க மாட்டேங்கிது. இது இன்னைக்கு மட்டுமில்ல; எப்பெல்லாம் புதுவருடம், பொங்கல், சித்திரை வருஷம், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, தீபாவளி, கிறிஸ்மஸ் வருமோ அப்பெல்லாம் நாள் முழுக்க டிவியை பார்த்து பார்த்து இராத்திரிக்கு தலையிடியை சம்பாத்திக்கிறது நமக்கு பழக்கமாகிப்போச்சு :-) விசேட தினங்களில் பொதிகை(DD1) மட்டும் பார்த்த காலத்தில் இப்படி தலையிடி ஏற்ப்பட்டதில்லை; என்றைக்கு சாட்டலைட் தொலைக்காட்சிகள் பார்க்கத் தொடங்கினேனோ அன்றிலிருந்து இன்றுவரை இந்த தலையிடி தொடர்கின்றது. இப்ப இருக்கும் தலையிடி அடுத்தமாதம் கிறிஸ்மஸ்தின சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஆரம்பிக்கும்போது மறந்துவிடும், மீண்டும் அன்று முழுக்க டிவியை இடைவிடாமல் பார்த்து இரவு மீண்டும் தலையிடி வரும்போதுதான் இப்ப இருக்கிற ஞானோதயம் மீண்டும் பிறக்கும் :-)

உண்மையில் இன்றைக்கு டிவி நிகழ்ச்சிகளை பார்த்ததைவிட 14 -15 ஆண்டுகளுக்கு முன்னர் பொதிகையில் (DD1) விசேட நிகழ்வுகளை பார்க்கும்போது ஏற்ப்பட்ட திருப்தி அதிகம். அதற்க்கு காரணம் அன்றைக்கு ஒரு புதுப்பாடலை வீட்டிலிருந்து பார்ப்பதற்கு பொதிகையின் ஒளிபரப்பாகும் 'புதுப்பாடல்கள்' என்கிற விசேடதின நிகழ்ச்சி மட்டும்தான் ஒரே வழியாகவிருந்தது. அதே பாடலை மீண்டும் பார்ப்பதானால் 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பும்வரை மாதக்கணக்கில் காத்திருக்கவேண்டும், அப்போதுகூட நிச்சயமாக ஒளிபரப்பாகுமென்று கூறமுடியாது. இன்றுபோல அன்று வீட்டுக்குவீடு VCD, VCR, DVD பிளேயர்கள் இல்லாததால் ஒரு புதியதிரைப்படத்தின் பாடலை பார்ப்பதாயின் பொதிகையின் 'புதியபாடல்' நிகழ்ச்சியை தவறவிட்டால் திரையரங்கில்த்தான் தான் பார்க்கமுடியும்; இதனால் 'புதியபாடல்' நிகழ்ச்சி பெரும்பாலனவர்களால் அன்று விரும்பிப்பார்க்கப்பட்டது.



இவற்றால் அன்றைய பொதிகையின் 'புதுப்பாடல்கள்' நிகழ்ச்சிக்கு எம்மிடையே மிகுந்த எதிர்பார்ப்பிருந்தது. அதேபோல புதிய திரைப்படங்களின் காட்சிகளுக்கும் பலத்த எதிர்பார்ப்பிருந்தது. பின்னர் மாலையில் விசேட திரைப்படம் ஒளிபரப்பாகும்; விசேட நாள்களில் அதிகமான ரஜினியின் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுவதால் எமக்கு அன்றையநாள் இரட்டை கொண்டாட்டமாக இருக்கும். சிலநேரங்களில் ரஜினி படமில்லாத வேறு திரைப்படங்களும் ஒளிபரப்பாகும்; அப்படியான சந்தர்ப்பங்களில் அது எந்த திரைப்படமானாலும் அதனை ரசித்துப்பார்ப்பது வழக்கம். அன்று பொதிகைக்கு மாற்றீடாக வேறு தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாததுதான் அதற்க்கு முக்கியகாரணம்.

ஆனால் இன்று முப்பதுக்கு மேற்பட்ட தமிழ் சானல்கள், அவை ஒவ்வொன்றிலும் விசேட நிகழ்ச்சிகள். அதுதவிர ஸ்போர்ட்ஸ் சானல்களில் மூன்று கிரிக்கட் போட்டிகள், இரண்டு டெனிஸ் போட்டிகள் என எமது தெரிவிற்காக மொத்தமாக 30- 35 சானல்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொன்றையும் மாற்றி மாற்றி பார்ப்பதால் ஒரு நிகழ்ச்சியையோ அல்லாதோ ஒரு போட்டியையோ முழுமையாக பார்க்க முடிவதில்லை. அடிக்கடி சானல் மாற்றுவதால் கண்ணுக்கும் கெடுதல், தலையிடி வேறு அப்பப்ப வந்து தொல்லைபண்ணும்.

ஒரு சானல்(பொதிகை)மட்டும் ஒளிபரப்பாகிய காலத்தில் விளம்பர இடைவேளையின் போதும் அந்த சானலையே பார்த்துக்கொண்டிருப்போம், ஆனால் இப்போது விளம்பர இடைவேளையின் போது பல சானல்கள் கைவசமிருப்பதால் வேறொரு சானலுக்கு மாற்றிவிடுவோம், அவ்வாறு மாற்றும்போது நாம் புதிதாக மாற்றிய சானலில் சுவாரசியமான காட்சி ஒளிபரப்பாகும் சந்தர்ப்பத்தில் அதிலேயே லயித்து முதலில் பார்த்த சானலை மறந்துவிடுவோம். இப்பிடி மாற்றி மாற்றி ஒவ்வொரு சானலாக பார்ப்பதால் ஒரு நிகழ்ச்சியையும் முழுமையாக பார்க்க முடிவதில்லை.



உதாரணமாக இன்று ரஜினியின் பேட்டியை சன் டிவியில் பார்த்துவிட்டு கலைஞரில் சிவாஜி திரைப்படத்திற்கு மாற்றும்போது அங்கு சுவாரசியமான காட்சி போகும்போது மீண்டும் சானலை சன்னுக்கு மாற்ற மறந்துவிடுவோம், பின்னர் திடீரென ஞாபகம்வர சன்னுக்கு மாற்றினால் அங்கு பேட்டி மீண்டும் ஆரம்பமாகியிருக்கும். இப்பதான் பேட்டி மீண்டும் ஆரம்பிச்சுதா? இல்லை முதலே ஆரம்பிச்சிட்டுதா? என்கிற குழப்பம் தீருவதற்குள் அடுத்த விளம்பர இடைவேளை வந்துவிடும், மீண்டும் கலைஞரில் சிவாஜிக்கு சானல் மாறும், கடைசியில இரண்டையும் ஒழுங்கா பார்க்கமுடியாமல் போயிருக்கும். எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இன்று இந்த அனுபவம் ஏற்ப்பட்டிருக்கும்.

அதேபோல இப்பெல்லாம் புதுப்பாடல் முதல்முதலாக ஒலிபரப்பாகும்போது அதை பார்ப்பதற்கு ஒருவரும் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை, மறுநாளே 'இசை' என்கிறே பெயரில் ஒளிபரப்பாகும் சானல்களில் மணிக்கொருதரம் ஒளிபரப்புவார்கள் என்கிற நம்பிக்கைதான் இதற்க்கு காரணம். அதேபோல முன்பு ஒரு பழைய திரைப்படத்தை ஒளிபரப்பினாலே உட்கார்ந்த இடம்விட்டு எழுப்பாமல் பார்த்த என்னால் இன்று ஒளிபரப்பான பத்திற்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் ஒன்றைக்கூட முழுமையாக பார்க்க முடியவில்லை. ஒரு பட்டிமன்றத்தைகூட முழுமையாக பார்க்கமுடியவில்லை, கமலின் நேர்காணல்வேறு பட்டிமன்றங்களோடு ஒத்த நேரத்தில் ஒளிபரப்பாகியதால் அதைகூட முழுமையாக பார்க்கமுடியாமல் போயிற்று.

இன்றைக்கு பல சானல்களில் பல புதியபுதிய நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள், பல புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பானாலும் இவற்றைவிட அன்று பொதிகையில் மட்டும் ஒளிபரப்பான புதுப்பாடல், புது திரைப்பட காட்சிகள், ஒரு திரைப்படம் (அதிகமாக தலைவர்படம்) என்னை மிகமிக கவர்ந்தது என்பேன். எப்போதுமே பழையநினைவுகள் பசுமையானவையாக இருப்பதால்கூட இப்படி தோன்றியிருக்கலாம் :-) எது எப்படியோ அடுத்த தடவை சிறப்பு நிகழ்ச்சிகள் பார்க்கும்போது 'பிளான் பண்ணி பார்க்கணும்' என்று முடிவெடுத்துள்ளேன், ஆனால் அன்றையதினம் கையிலிருக்கும் ரிமோட் கன்ரோல் அந்த பிளானுக்கு செவிமடுக்குமா என்றால் சந்தேகமே!!!!!

8 வாசகர் எண்ணங்கள்:

philosophy prabhakaran said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள டாக்டர் சுமந்த தொகுத்து வழங்கும் புதிர் போட்டி என்னுடைய பேவரிட் நிகழ்ச்சிகளில் ஒன்று... நிகழ்ச்சியும் அவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலும் அருமையாக இருக்கும்...

r.v.saravanan said...

உண்மையில் இன்றைக்கு டிவி நிகழ்ச்சிகளை பார்த்ததைவிட 14 -15 ஆண்டுகளுக்கு முன்னர் பொதிகையில் (DD1) விசேட நிகழ்வுகளை பார்க்கும்போது ஏற்ப்பட்ட திருப்தி அதிகம்.

கண்டிப்பாக ஜீவதர்ஷன்
டிவி சானெல் மாற்றி மாற்றி பார்க்கும் போது வரும் பிரச்னை பற்றி சுவையா சொல்லியிருக்கீங்க
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா

கக்கு - மாணிக்கம் said...

வெறும் பொதிகைக்கு மட்டும் ஆண்டென (முன்பு போல )வைத்துக்கொண்டு மற்ற கருமம் புடிச்ச அணைத்து கேபிள் டீ.வி .தொடர்புகளை தூக்கி கடாசுங்கள்.டீ. வி. பார்ப்பது மீண்டும் ஒரு இனிய அனுபவமாகும். உண்மையில் சில வருடங்களுக்கு முன்புவரை என் வீட்டில் இபடித்தான் இருந்தது. இப்போது பிள்ளைகள் வளர்ந்து விட்டன. அவர்களுக்கு பிடித்த படி எல்லாம் மாறிவிட்டன. அதனால் மண்டை இடி நிச்சயம். நேற்று காதுகளில் டிஷு பேப்பர் செருகி அடைத்துக்கொண்டு, பின்னர் தாங்க
முடியாமல் இரண்டு -கால்பால்- மாத்திரைகளை முழங்கி பின்னரும் மூன்ற மணி வரை பாடாய் பட்டதனால் எழுதுகிறேன்.

எஸ்.கே said...

//உண்மையில் இன்றைக்கு டிவி நிகழ்ச்சிகளை பார்த்ததைவிட 14 -15 ஆண்டுகளுக்கு முன்னர் பொதிகையில் (DD1) விசேட நிகழ்வுகளை பார்க்கும்போது ஏற்ப்பட்ட திருப்தி அதிகம்.//
உண்மைதாங்க. நானும் அனுபவிச்சிருக்கேன். டிடியில் நிகழ்ச்சிகள் போடும்போது ஆர்வமாய் உட்கார்ந்து பார்த்தபோது கிடைத்த திருப்தி இப்போது கிடைக்கவில்லை.
தாங்கள் சொன்னதுபோல் சேனல் மாற்றி மாற்றி ஒரு நிகழ்ச்சியும் பார்த்தாற்போல் இல்லை.
இன்றும் சில நிகழ்ச்சிகளை நான் டிடியில் பார்க்கிறேன். அதில் அந்த ஸ்போர்ட்ஸ் க்விஸ்-ம் ஒன்று!

"ராஜா" said...

நமக்காவது பரவா இல்லை .. மண்டை இடி வரும் போது நினைத்து பார்க்க டிடி அனுபவம் இருக்கு ... இனி வரும் சந்ததிகளின் நிலமை ....

டம்பி மேவீ said...

நானெல்லாம் அப்படி இல்லை சார் ..... வைச்சா ஒரே சேனல் தான். (பெரும்பாலும் இப்போதைக்கு ஆத்தியாவாக தானிருக்கும்)

ஆனால் DD நாட்களின் சந்தோஷத்தை இப்போ உள்ள எந்த சேனலும் தர முடியாது

ம.தி.சுதா said...

ஜீவ் எனக்கப் பிடிக்காத தலையிடி பிடித்த விசயம் இந்த தொடர் நாடகங்கள் தான்... போட்டி கூடக் கூட புதுப் புது நாடகங்கள் என குடும்பப் பெண்களைப் பழுதாக்ககினறார்கள்... இப்போது எப்படித் தான் நாடகம் போட்டாலும் அப்போது பார்த்த சக்திமானை வெல்ல முடியுமா.? அப்புறம் அஞ்சு, மஞ்சு இதெல்லாம் விளம்பரம் குறைந்த நாடகங்களாகவும் ஓரளவு திருப்தி தரக் கூடியதாகவும் இருந்தது...

எப்பூடி.. said...

@ philosophy prabhakaran

@ r.v.saravanan

@ கக்கு - மாணிக்கம்

@ எஸ்.கே

@ "ராஜா"

@ டம்பி மேவீ

@ ம.தி.சுதா

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)