Thursday, November 18, 2010

தொண்டனதும் ரசிகனதும் எதிர்பார்ப்பு!

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லமால் ஒரு சம்பவம் அல்லது நிகழ்வு ஒன்று இடம்பெறுகின்றது என்றால் அது விபத்து அல்லது தற்செயலாக நிகழ்ந்ததாகத்தான் இருக்க முடியும். அன்போ உதவியோ எதுவானாலும் ஏதோவொரு பிரதி எதிர்பார்ப்பில்லாமல் அல்லது சுய நன்மை இல்லாமல் யாராலும் கொடுக்க முடியாது, அப்படி கொடுக்க முடியுமென்று ஒருவர் சொன்னால் அவர் பொய் சொல்பவராக அல்லது உணர்ச்சி அற்றவராக இல்லை சுயநினைவு அற்றவராகத்தான் இருக்கமுடியும்.

எதிர்பார்ப்புக்களின் அளவு அதிகரிக்கும் போதுதான் பிரச்சனைகளும், முறிவுகளும், மனஸ்தாபங்களும் அதிகமாக ஏற்ப்படுகின்றன. அதற்க்கு முக்கிய காரணம் தாம் வழங்கும் அன்பிற்கு/உதவிக்கு உரிய பிரதி எதிர்பார்ப்பு குறைவாகவோ இல்லை கிடைக்காமலோ போவதுதான். இந்த எதிர்பார்ப்புக்கள் சிலருக்கு ஏமாற்றத்தையும் பலருக்கு கோபத்தையும் ஏற்ப்படுத்துவதாலேயே உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் விரிசல்வருவதற்கு காரணமாகிறது. இதை புரிதல் உள்ளவர்கள் சுலபமாக கையாளக் கூடிதாக இருப்பினும் எப்போதும் அது சாத்தியமாக இருக்குமா என்று கேட்டால் அது சந்தேகமே!

அதேபோல சிலர் ஏழைகளுக்கு தானம் செய்வதையோ இல்லை பிறருக்கு உதவி செய்வதையோ பிரதி உபகாரம் இல்லாமல் செய்வதாக நினைக்கலாம். ஆனால் இதில்தான் தானம்/உதவி செய்பவர்களுக்கு பெறுபவர்களைவிட அதிகமான பலன் கிடைக்கிறது. ஒருவருக்கு உதவும்போதும்சரி இல்லை தானம் கொடுக்கும்போதும்சரி கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு இணையாக எந்த பிரதி உபகாரமும் கிடைக்காது; அப்படியான சந்தர்ப்பங்களில் தாங்கள் உதவியதை நினைத்து மனதிற்குள் மகிச்சியும், நிறைவும் கொஞ்சம் கர்வமும் ஏற்ப்படுவதை யாராவது மறுக்க முடியுமா? ஆனாலும் இந்தவிதமான பிரதி எதிர்பார்ப்புகளோடு செய்யும் காரியங்கள் நன்மையானவை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

இப்போது விடயத்துக்கு வருவோம், எதோ ஒன்றை எதிர்பார்த்து சிலர் செய்யும் செய்கைகைகள் பலருக்கும் பார்ப்பதற்கு முட்டாள்த்தனமாக தோன்றும். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர்களை திட்டுவதிலும் குறிப்பாக முட்டாளாக்குவதிலும்தான் பலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பார்களே அன்றி அவர்களிடத்திலிருந்து சிந்தித்துப்பார்க்க மாட்டார்கள்.அவர்களது இடத்தில் இருந்து பார்த்தால்தான் அவர்களது நிலை புரியும். இப்படி அறிவு ஜீவிகளென்று தங்களை காட்டிக்கொள்ளும் பலராலும் முட்டாள், படிப்பறிவில்லாதவன், மெண்டல் என பட்டம் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள்தான்.தொண்டர்களில் இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள், இருவகையினருமே எதோ ஒரு எதிர்பார்ப்பிர்காகவே தலைவனை நாடினாலும் ஒரு பிரிவினர் தங்கள் தேவைகளுக் கேற்றால்போல தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதிக்காதவகையில் தொண்டனாக இருப்பார்கள். இந்த வகை தொண்டர்கள் காரியக்காரர்கள், இவர்களால் தலைவனுக்கும் தலைவனால் இவர்களுக்கும் நன்மை கிடைப்பதால் இருவருக்கும் ஒருவரிடத்தில் ஒருவர் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிடும். இவர்கள் பிழைக்கத்தெரிந்த தொண்டர்கள், இவர்களது எதிர்ப்பார்ப்பில் எந்த தப்பும் இல்லை.

இன்னொருவனை இவர்கள் நம்பித்தான் இவர்கள் வாழ வேண்டுமா என்று சிலர் கேட்கலாம், உண்மைதான்; ஆனால் கேட்பவர் அளவிற்கு சிந்திக்கும் திறன், பொருளாதாரவளம் அவர்களிடம் இருப்பதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுயம் என்பதால் ஒவ்வொருவரதும் வாழ்க்கைமுறை வேறுபட்டது, அவர்களது நடைமுறை சிக்கல் அவர்களுக்குத்தான் தெரியும் என்பதால் எதையும் பொதுவில் வைத்து பேசமுடியாது. 'புரட்சி' பேசுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும், அனால் நடைமுறைக்கு ஒத்துவராது.

சமூக வளர்ச்சியில் எப்படி தனிமனிதர்கள் தங்கியிருக்கிறதோ அதேபோல சில தனி மனிதர்களது வளர்ச்சியில் சமூகமும் சமூகத்திலுள்ள வழர்ச்சியடைந்தவர்களும் தங்கியிருக்கிறார்கள். இவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு சமூகத்தை பொருளாதார கல்வி மற்றும் உலக அறிவில் முன்னேற்றினால் எதிர்காலத்தில் இவர்களுக்கு சிந்திக்கும் திறன் தானாகவே அதிகரிக்கும்., அப்போது இவர்கள் சுயமாக இயங்கும் காலம் வரும், அதுவரை அவர்கள் யாரையும் நாடி இருக்க கூடாதென்பது வார்த்தையில் வேண்டுமானால் நன்றாக இருக்கும், ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராது.

அடுத்து இரண்டாவது வகையான தொண்டனை நோக்கினால்; அவன் தன் தலைவனிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பான், யாரவது தலைவனை பற்றி தப்பாக பேசினாலே உண்டு இல்லை என்றாக்கிவிடுவான், தன் குடும்பத்தையே மறந்து தலைவனுக்காக அல்லும் பகலும் படாத பாடுபடுவான். அவன் ஏதோவொரு எதிர்பார்ப்பில்த்தான் தலைவனுக்காக உழைக்கிறான் என்றாலும் அவன் எதிர்பார்க்கும் ஒன்றிற்காக நூறுமடங்கு அதிகமாக உழைக்கிறான் என்கின்ற உண்மை அவனுக்கு புரியாது. இதில் தொண்டன் செய்வது பொதுப்பார்வையில் தப்பாகத்தான் தெரியும். ஆனால் இதையே அவன் நிலையில், அவனது சிந்திக்கும் ஆற்றலோடு பார்த்தால்தான் அவனது நிலை புரியும்.

பெரும்பாலான தொண்டர்கள் தலைவனாக நினைப்பவனிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ தலைவனது நன்மைதிப்பைத்தான் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். நான்கு பேருக்கு முன்னிலையில் அந்த தொண்டனை பற்றி தலைவன் நாலு வார்த்தை பெருமையாக பேசினால் போதும், அவனுக்கு வானத்தில் ரெக்கை கட்டி பறக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்; அப்போது அவனுக்கு இருக்கும் மனநிலைக்கு இன்னும் நான்கு நாட்கள் தூக்கமில்லாமல் தலைவனுக்காக வேலை செய்ய காத்திருப்பான். இந்த விடயத்தில் தலைவன் அவனை தன் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறான் என்கின்ற உண்மையை அவனுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லி புரியவைக்க முடியாது.

இந்த இடத்தில் தங்களை புத்திசாலியாக காட்டிக்கொள்ளும்/ காட்டிக்கொள்ள ஆசைப்படும் பல அறிவுஜீவிகள் அந்த தொண்டனை முட்டாள் என்கிறார்கள். அவனது சிந்திக்கும் திறனது அளவைவிட்டு அவனால் வெளியில் வரமுடியாது அவனது குற்றமா? இல்லை அவனது குறைபாடா? அவனை முட்டாள் என்பவர்கள் தங்களது கப்பாசிட்டிக்கு (capacity) மேலாக சிந்திக்க முடியுமா என்பதை சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். அவன் இருக்கும் குடும்பப/சமூக சூழல், வசதிவாய்ப்பு, வெளிஉலக அறிவு, பொருளாதாரம் போன்ற அதே காரணிகளோடு அவர்களும் இருந்தால் அவன் செய்வதைத்தான் அவர்களும் செய்வார்கள் என்பதே உண்மை

அவனது சிந்திக்கும் திறன் குறைவு என்பதற்காக அவனை அப்படியே ஒதுக்கிவிட முடியாது, அவனும் எங்கள் சமூகத்தில் ஒருவன் என்கிற அக்கறை இருந்தால் அவனை முட்டாள், படிப்பறிவில்லாதவன் என்று தங்களிடமிருந்து அவனை வேறுபடுத்தி காட்டும் காரணிகளை திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருக்காமல் முடிந்தவரை அவனது மூளையை நல்வளிக்கு சலவை செய்ய முயற்ச்சிக்கலாம்.

இந்த விடயத்தில் தலைவனை திட்டுவதாலோ தொண்டனை முட்டாள் என்பதாலோ ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. சமூக வளர்ச்சி, வெளியுலக அறிமுகம், பொருளாதார வளர்ச்சி, சிந்திக்கும் திறன் என்பன அதிகரிக்கும் பட்சத்தில் ஒருநாள் தொண்டன் தன்னை உணர்ந்து மாற்றிக்கொள்வான். அதுவரை அவனுக்கு பக்குவமாக மெல்ல மெல்ல எடுத்து சொல்வதுதான் ஒரேவழி. மாற்றம் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடாது, ஆனால் ஒருநாள் நிச்சயம் வரும்.அடுத்து ரசிகனை பார்ப்போமானால்; ஒரு ரசிகன் ஒரு நடிகனை கொண்டாடுகிறான் என்றால் அது குறிப்பிட்ட நடிகனுக்காக இல்லை, உண்மையில் அது அவனுக்காகத்தான். தனக்கு எதுவும் கிடைக்காமல் அவனால் எப்படி ஒருவனை கொண்டாடமுடியும்? நடிகனை பிடித்திருந்தால் மட்டும் யாரும் நடிகனை கொண்டாட மாட்டார்கள், அதையும்தாண்டி ஏதோ ஒரு வகையில் அவனுக்குள் ஒரு பொசிட்டிவான விடயம் நிச்சயமாக இருக்கும். அதேபோல ரசிகன் தனக்கு பிடித்த நடிகனை கொண்டாடுவதற்கு அளவுகோல் விதிக்க முடியாது, அது ஒவ்வொருவருக்குமிருக்கும் தனிப்பட்ட உணர்வு; ஆனால் அந்த உணர்வால் தனக்கோ, தன் குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ பாதிப்பு ஏற்ப்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

தன்னையும், தன் குடும்பத்தையும் பாதிக்குமளவிற்கு ஒருவன் நடிகனை கொண்டாடுகிறான் என்றால் அதற்க்கு அந்த நடிகனை குற்றம் சொல்லுவதோ இல்லை குறிப்பிட்ட ரசிகனை முட்டாள் என்பதோ மேலே தொண்டனுக்கு குறிப்பிட்டது போல அது எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்திவிடாது, அவ்வாறு கூறுவதால் தங்களை பெருமைப்படுத்தலாமே தவிர வேறொன்றும் ஆகப்போவதில்லை. இப்படி பொறுப்பிலாமல் திரியும் ஒருசில ரசிகர்களுக்காக முடிந்தளவில் நல்லவிதமாக சொல்லி மூளைச்சலவை செய்வதுதான் சிறந்தவழி. சாதாரணமாக "இப்பிடி செய்யாதே" என்று அதட்டி கூறினால் அதை இன்னும் அதிகமாக செய்வதுதான் மனித இயல்பு, அதையே அன்பாக புரியும்படி கூறினால் மெதுமெதுவாக வென்றாலும் புரியவைக்கலாம்.

இது தொடர்பான இன்னுமொரு பதிவு சினிமா, விளையாட்டு, இறைநம்பிக்கை பற்றி ஒரு அடிமுட்டாள்...

10 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

நம்ம மக்களை திருத்தவே முடியாது தலைவா............நம்ம ஊருல மட்டும் தான் இப்படின்னு நினைக்குறேன்

Yoganathan.N said...

நல்ல அலசல்.

//நடிகனை பிடித்திருந்தால் மட்டும் யாரும் நடிகனை கொண்டாட மாட்டார்கள், அதையும்தாண்டி ஏதோ ஒரு வகையில் அவனுக்குள் ஒரு பொசிட்டிவான விடயம் நிச்சயமாக இருக்கும். அதேபோல ரசிகன் தனக்கு பிடித்த நடிகனை கொண்டாடுவதற்கு அளவுகோல் விதிக்க முடியாது, அது ஒவ்வொருவருக்குமிருக்கும் தனிப்பட்ட உணர்வு; ஆனால் அந்த உணர்வால் தனக்கோ, தன் குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ பாதிப்பு ஏற்ப்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். //
உண்மை நண்பா... :)

NaSo said...

தொண்டனும் சரி ரசிகனும் சரி அவனிடம் தலைமைப்பண்பு இல்லாததால் தான் இவ்வாறு இருக்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு தலைமைப்பண்பு இருந்தால் அவர்களும் தலைவரே!

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னத்த செல்ல நண்பா...
என்னத்த செல்ல நண்பா...

எஸ்.கே said...

மிக நல்ல அலசல்!

r.v.saravanan said...

நல்ல அலசல் jeevadharshan

ம.தி.சுதா said...

அருமையாக தொண்டரை ஆரய்ந்து கூறியுள்ளீர்கள் ஜீவ்... வாழ்த்துக்கள்... வருகைக்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது மன்னிக்கவும்...

Unknown said...

தனக்காக மற்றவர்களை மாற்றுபவன் தலைவன்
தலைவனுக்காக தனியே மாற்றிகொள்பவன் தொண்டன்

மதுரை சரவணன் said...

//பெரும்பாலான தொண்டர்கள் தலைவனாக நினைப்பவனிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ தலைவனது நன்மைதிப்பைத்தான் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். நான்கு பேருக்கு முன்னிலையில் அந்த தொண்டனை பற்றி தலைவன் நாலு வார்த்தை பெருமையாக பேசினால் போதும், அவனுக்கு வானத்தில் ரெக்கை கட்டி பறக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்; //


நல்ல இடுகை... வாழ்த்துக்கள்

எப்பூடி.. said...

@ denim

@ Yoganathan.N

@ நாகராஜசோழன் MA

@ வெறும்பய

@ எஸ்.கே

@ r.v.saravanan

@ ம.தி.சுதா

@ நா.மணிவண்ணன்

@ மதுரை சரவணன்

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)