Monday, November 8, 2010

இந்தவார இருவர் (8/11/10)ரகுவரன் (நடிகர்)தமிழ் சினிமாவின் விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கியமான நடிகர்களில் ரகுவரனும் ஒருவர் என்றால் அது மிகையில்லை. ரகுவரன் நடித்த பல திரைப்படங்களில் ரகுவரனுக்கு பதிலாக வேறுயார் நடித்திருந்தால் ரகுவரனின் பாத்திரம் பொருந்தியிருக்குமென்று கற்பனை பண்ணிப்பார்த்தால் மீண்டும் மீண்டும் ரகுவரன் முகம்தான் எம் கண்முன்னே வந்துநிற்கும்; ஒரு வில்லனாக, குணச்சித்திர நடிகராக ரகுவரனின் வெற்றி இதுதான். இதற்கு உதாரணமாக வில்லன் நடிகராக பாட்ஷா, முதல்வன், ராஜா சின்ன ரோஜா போன்ற திரைப்படங்களையும் குணச்சித்திர நடிகராக புரியாத புதிர், அஞ்சலி, என் பொம்மைக் குட்டி அம்மாவுக்கு, தொட்டா சிணுங்கி, லவ் டுடே, அமர்க்களம், சிவப்பதிகாரம், யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களையும் குறிப்பிடலாம்.ரகுவரன் குணச்சித்திர நடிகர்களிலேயே ஒரு 'மாஸ்' அந்தஸ்துள்ள நடிகர். உதாரணமாக சொல்வதென்றால் சிவாஜி திரைப்படத்தில் ரஜினியை உயிர்ப்பிக்கும் டாக்டராக முக்கிய பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருப்பார், அந்தக் காட்சியில் முதலில் அமிதாப் நடிப்பதாக ஷங்கர் கூறியிருந்தார், பின்னர் எதோ காரணங்களுக்காக அமிதாப் நடிக்க முடியாமல்போகவே ரகுவரன் அதில் நடித்திருப்பார்ர். அந்த டாக்டர் வேடத்தை அமிதாப், மம்முட்டி, மோகன்லால் போன்ற Power Full நடிகர்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்குமென்பது ஷங்கருக்கு நன்கு தெரியும், இருந்தும் அமிதாப்பிற்கு நிகரான ஷங்கரின் தெரிவு ரகுவரன் என்பதிலிருந்து ரகுவரனின் Power மீது ஷங்கர் வைத்திருந்த நம்பிக்கை எத்தனை பெரியது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதேபோல ரஜினி மிகப்பெரும் மாஸ் ஹீரோவாக உருவாகியபின்னர் ரஜினிக்கு சமமான மாஸ் அந்தஸ்துள்ள நடிகராக ரஜினி படத்தில் நடித்த இருவரில் ரகுவரன் ஒருவர், 'சிவா' திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இது நன்கு தெரிந்திருக்கும்; மற்றையவர் (தளபதியில்) மம்முட்டி.தனக்கென்றொரு உடல்மொழி (Body language), வசன உச்சரிப்பு (Dialog delivery), மானரிசம் என தனித்துவமாக தன்னை வெளிப்படுத்தும் ரகுவரன் தனது வசன உச்சரிப்பை ஒரே திரைப்படத்தில் ஒரே பாத்திரத்திற்கு காட்சியின் தேவைக்கேற்றாற்போல் ஏற்ற இறக்கமாக மாற்றிமாற்றி பேசுவதில் கில்லாடி. இன்றைக்கு மிமிக்கிரியில் குறிப்பிட்ட சில குரல்களை மிமிக் செய்யும்போது ரசிகர்கள் ஆர்ப்பரிப்பது வழக்கம், அப்படியான குரல்களில் ரகுவரனது குரல் முக்கியமானது, இதிலிருந்து மக்கள் மனதில் ரகுவரனுக்கிருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளலாம். அவரது வசன உச்சரிப்பைபோலவே அவரது சிரிப்பும் தேவைக்கேற்றாற்போல இருக்கும், உதாரணமாக 'ஸ்டார்' திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னதாக "அப்பன் புள்ள ரெண்டுபேரும் என்னை நீதிபதியாக்கீட்டீங்களேடா" என்ற வசனத்தை ஒரு சிரிப்போடு ரகுவரன் சொல்லுவாரே!! அந்த சிரிப்பை பார்த்தால் புரியும்.ரகுவரனது திறமைக்கு தமிழ் சினிமா தீனியிட்டுள்ளதா என்றால் அதற்க்கு 25 வீதம்தான் ஆமென்று பதில் கூறலாம், அற்புதமான நடிகரான ரகுவரனை அதிகமான 75 வீதமான படங்களில் வீணடித்திருக்கிரார்கள் என்பதே உண்மை. ஆனாலும் அந்த 25 வீதமான திரைப்படங்களிலும் ரகுவரன் தன் முத்திரையை பதித்திருப்பார், அவை என்றும் நிலைத்து ரகுவரனது பெயரை தமிழ்சினிமா வராற்றில் காலத்தால் அழியாதவாறு பார்த்துக்கொள்ளும். ரகுவரனுக்கு அவரது குடும்பவாழ்க்கை திருப்தியாக அமையாவிட்டாலும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ரகுவரனென்னும் அவரது பெயர் திருப்திகரமான நடிகராக என்றும் நிச்சயமாக ஞாபகப்படுத்தப்படும். ரகுவரனது நடிப்பு மட்டுமல்ல அவரது உருவம், குரல், மூக்கு கண்ணாடியினூடாக அவரது காந்த கண்கள், அந்த காந்த சிரிப்பு என்றுமே மக்கள் மனதைவிட்டு நீங்காது.'யாரடி நீ மோகினி' திரைப்படத்தில் ரகுவரன் இறப்பதுபோன்ற காட்சி இருக்கும், அந்த திரைப்படம் வெளிவந்து சில நாட்களில் அவர் உண்மையிலேயே இறந்ததால் 'யாரடி நீ மோகினி' திரைப்படத்தில் ரகுவரன் நடித்த கிளிப்பிங்கை எப்போது பார்த்தாலும் மனதில் எதோ ஒரு இனம்தெரியாத பாரம் ஏற்ப்படும். என்னை பொறுத்தவரை நான் ரசித்த முதல் மற்றும் கடைசி திரைப்பட வில்லன் ரகுவரன்தான்; அதேபோல குணச்சித்திர நடிகராகவும் எனக்கு பிடித்த ஒருசில முக்கியமான நடிகர்களில் ரகுவரன் முதன்மையானவர். அவர் இப்போது எங்களோடு இல்லாவிட்டாலும் அவர் திரைப்படங்கள் எப்போதும் எங்களுடன் இருக்கும், நாங்கள் இருக்கும் காலம்வரை; இல்லையில்லை தமிழ் சினிமா இருக்கும் காலம்வரை.

கிம் கிளைஸ்டர்ஸ் (டென்னிஸ்)இருபத்தெட்டு வயது, இரண்டரை வயது பெண்குழந்தையின் தாய், கூடைப்பந்து வீரரான பிரைன் லைஜின் மனைவி; இவை எல்லாவற்றையும்விட இன்றைய மகளிருக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 3 ஆமிடத்தில் இருக்கும் டெனிஸ் வீராங்கனை , இவர்தான் கிம் கிளைஸ்டர்ஸ் (Kim Clijsters). பெல்ஜியத்தை தாய்நாடாக கொண்ட கிளைஸ்டர்ஸ் ஷரபோவா போன்றோ இவனோவிக் போன்றோ பேரழகியில்லாவிட்டாலும் கவர்ச்சிகரமான அழகிதான். திறமையில் இன்று முன்னணியில் இருக்கும் சகவீராங்கனைகளுக்கு எந்த வகையிலும் இவர் சளைத்தவரில்லை. 2007 ஆம் ஆண்டு திருமணத்தின் பின்னரான ஓய்வுக்கு பிறகு மீண்டும் விளையாட வந்த கிம் கிளைஸ்டர்ஸ் மூன்றாவது போட்டித்தொடரிலேயே 'அமெரிக்கன் ஓப்பின்' கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றபோதுதான் கிம் பலருக்கும் பரிச்சியமானார், அதற்க்கு காரணம் அவரது ஒன்றரைவயது குழந்தை மைதானத்தில் போட்டியை பார்க்கும்போது அவர் வென்ற அமெரிக்கன் ஓப்பின் சாம்பியன்தான்.2005 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஓபின் சாம்பியன் பட்டத்தை வென்ற கிளைஸ்டர்ஸ் உடல் உபாதை காரணமாக 2006 அமெரிக்கன் ஓப்பின் போட்டிகளில் பங்குபற்றவில்லை, பின்னர் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதால் 2007,2008 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற அமெரிக்கன் ஓப்பின் போட்டிகளில் பங்குபற்றாத கிளைஸ்டர்ஸ் 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் பங்குபற்றிய 2009 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றார், தொடர்ந்து 2010 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் கிண்ணத்தையும் வென்ற கிளைஸ்டர்ஸ் ஒற்றையர் பிரிவில் மொத்தமாக மூன்று கிராண்ட்சிலாம் பட்டத்தை இதுவரை வென்றுள்ளார். ஹார்ட் தரைகளில் மூன்று கிராண்ட்சிலாம்களை ஒற்றையர்பிரிவில் வென்றுள்ள கிளைஸ்டர்ஸ் ஜப்பானின் 'ஐ சுகியமா' வுடன் இணைந்து 2003 ஆம் ஆண்டு இரட்டையர் பிரிவில் விம்பிள்டன் புற்தரையிலும், பிரெஞ்சு களிமண்தரையிலும் (கிராண்ட்சிலாம்) சாம்பியன் பட்டத்தையும் ஜெயித்துள்ளதிலிருந்து மூன்றுவிதமான ஆடுகளங்களிலும் கிளைஸ்டர்ஸ் திறமையாக ஆடக்கூடியவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.தன் சகநாட்டு வீராங்கனையான 8 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை வென்ற ஜஸ்டின் ஹெனினுடன் விளையாடும்போது கிளைஸ்டர்சின் போராட்டக் குணத்தை அவதானிக்கலாம், இந்திய பாகிஸ்தான் கிரிக்கட் போட்டியைபோல விறுவிறுப்பாக இடம்பெறும் இவர்கள் இருவருக்குமிடயிலான போட்டியில் கிளைஸ்டர்ஸ் 12-9 என்னும் கணக்கில் முன்னணியில் உள்ளார். 2009 ஆம் ஆண்டு விம்பிள்டன் Centre Court டில் இடம்பெற்ற கண்காட்சிப்போட்டியில் ஸ்டெபிகிராபை தோற்கடித்த கிம் இரட்டையர் பிரிவில் டிம் ஹென்ஸமனுடன் இணைந்து ஸ்டெபிகிராப், அந்திரே அகாசி ஜோடியை வீழ்த்தினார். நீண்ட நாட்களின் பின்னர் ஆடியபோதும் சிறப்பாக அடிய கிளைஸ்டர்ஸ்சிற்கு தனது மீள்வருகைகான ஆரம்ப உந்துதலாக இந்த பயிற்சிப்போட்டி அமைந்திருந்தது. கிளைஸ்டர்ஸ் முன்னாள் முதல்த்தர வீராங்கனையாக இருந்தாலும் இன்னமும் 1300 பாயிண்டுகள் எடுத்தால் மீண்டும் முதலிடத்தை அடையும் வாய்ப்பு உள்ளது. இறுதியாக இடம்பெற்ற வருட இறுதி WTA Tour Championships போட்டிகளிலும் கிம் கிளைஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார், இது இவரது மூன்றாவது WTA Tour Championships பட்டமாகும்.அனைத்து விதமான ஆடுகளங்களிலும் ஆடுவதில் எப்படி கிளைட்ச்டர்ஸ் திறமையானவரோ அதேபோல serve, grip, forehand, backhand, volley, half volley, lob, overhead smash, drop shot என எல்லாவிதமான ஷாட்களையும் விளையாடுவதில் இவர் கில்லாடி. அதுதவிர இவரது பவறும் (power) பிளேஸ்மன்டும் (placement) இவரது ஆட்டத்தின் ஏனைய சிறப்பம்சங்களாகும். பல துறைகளிலும் ஓய்விற்கு பின்னர் மீண்டும் விளயாடவந்த ஜாம்பவான்கள் மீண்டும் சோபிக்கவில்லை என்பதுதான் கிளிஸ்டர்சின் மீள்வருகைவரை வரலாறாக இருந்தது, இவர் வரலாற்றை புதுப்பித்த வீராங்கனை. ரோஜர் பெடரருக்கு அடுத்து நான் அதிகம் விரும்பி பார்க்கும் டென்னிஸ் வீரர்/வீராங்கனை இவர்தான், அடுத்தவர் இவரது சகநாட்டு வீராங்கனை ஜஸ்டின் ஹெனின்.

கிளைஸ்டர்ஸ் பிரபல வீராங்கனைகளோடு மோதிய போட்டிகளின் முடிவுகள் சில

செரீனா வில்லியம்ஸ் 2-5

வீனஸ் வில்லியம்ஸ் 7-6

ஜஸ்டின் ஹெனின் 12-9

அனா இவனோவிக் 4-0

ஜெலீனா ஜான்கோவிக் 7-1

டினாரா சபீனா 7-2

மரியா சரபோவா 5-3

சுவெட்லானா குஸ்னெட்சோவா 7-1

ஜெனிபர் கேப்ரியார்டி 3-3

ஸ்டெபி கிராப் 0-1

மாட்டினா ஹிங்கிஸ் 5-4

செரீனா வில்லியம்ஸ், ஸ்டெபி கிராப் தவிர வேறு யாரும் கிளைஸ்டர்ஸ் ஜெயித்ததைவிட அதிகமான தடவைகள் கிளைஸ்டர்ஸ்சை ஜெயிக்கவில்லை என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

9 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

ரகுவரன் எப்போதும் ஒரு ஒப்பற்ற கலைஞர்.. தமிழ் நடிகருக்கள் ஆங்கிலத்தை மிகவும் ஸ்டைலாகக் கதைத்தவர் என்றால் இவரைத் தான் நான் குறிப்பிடுவேன்.
அடு்த்த இருவரில் ஒருவரான கிளைஸ்டர்ஸ் இவரைப்பற்றி நான் அறிந்திரந்தாலம் இன்று தான் அவரது முழு தகவலும் அறிகிறேன் வாழ்த்துக்கள் ஜீவ்...

Philosophy Prabhakaran said...

ரகுவரன் எனக்கும் ரொம்ப பிடிக்கும்... டென்னிஸ் பற்றி அதிகம் தெரியாததால் கிம் கிளிஸ்டர்ஸ் பற்றி படிக்கவில்லை... புரியாத புதிர் படத்தில் ரகுவரன் குணச்சித்திர வேடத்திலா நடித்தார்...?

எஸ்.கே said...

ரகுவரன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். நீங்கள் சொல்வது போல் அவர் நடித்த பாத்திரத்தை வேறு யாரையும் பொருத்த முடியவில்லை. அவரின் வில்லன் நடிப்பும், குணச்சித்திர நடிப்பும் மிகவும் கவரும்!

Chitra said...

வில்லத்தனம் + குணச்சித்திரம் - இரண்டுவித நடிப்பிலும் தனி முத்திரை பதித்த ரகுவரன் சார் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. நல்லா எழுதி இருக்கீங்க!

பொன் மாலை பொழுது said...

நல்ல, நியாயமான மதிப்பீடு. ரகுவரன் ஒரு சிறந்த குணசித்திர நடிகராகவே இருந்தார். அவருக்கென ஒரு தனித்தன்மை. உண்மைதான்.

பாலா said...

இந்த இருவருமே என் மனங்கவர்ந்தவர்கள். வில்லன் பெயர் திரையில் தோன்றும் போது கைத்தட்டல் விழுகிறது என்றால் அது ரகுவரனுக்காகத்தான் இருக்கும்.

r.v.saravanan said...

எனக்கு ரகுவரன் நடித்த படங்களில் பிடித்தது பாஷா அவரது நடிப்பு என்னை கவர்ந்த ஒன்று

KICHA said...

In 'Puriyathe Puthir' he played the villan role and his performance was really superb. 'I know, I know, I know'

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ philosophy prabhakaran

@ எஸ்.கே

@ Chitra

@ கக்கு - மாணிக்கம்

@ பாலா

@ r.v.saravanan

@ KICHA

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

........................................


@ philosophy prabhakaran

@ KICHA

ஆம் ரகுவரன் அதிலே நெகட்டிவ் கேரக்டர்தான்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)