Monday, October 18, 2010

மணமகன் தேவை

யாழ் .........(மதம்), உயர் .........(ஜாதி), வயது 24 , ........ ராசி, ........ நட்சத்திரம், மெல்லிய வெள்ளை மிகஅழகான் பெண்ணுக்கு மணமகன் தேவை, வெளிநாட்டு மணமகன் மட்டும் தொடர்பு கொள்க(மத்திய கிழக்கு நாடுகள் அல்ல),.........பெயர், ..........தொலைபேசி இலக்கம்)

19/9/2010 அன்று இலங்கையின் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் மணமகன் தேவையென ஒருவர் கொடுத்திருந்த விளம்பரம்தான் மேலுள்ளது. இந்த விளம்பரத்தை கொடுத்தவர் ஒரு டாக்டர்(எந்த டாக்டரின்னு தெரியல)

இலங்கையில் குறிப்பாக தமிழ் பெற்றோர்களில் பெரும்பான்மையானவர்களது மணமகன்தெரிவு மேற்க்கத்தைய நாடுகளில் வசிக்கும் இளைஞர்கள்தான். கடந்த இரு தசாப்தங்களாக தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் கட்டிக்கொடுக்கவே பெரும்பான்மையான இலங்கைத் தமிழ்ப்பெற்றோர்கள் விரும்புகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக இரண்டு காரணங்களை சொல்லலாம்.

1) குடும்பநிலை/வறுமை

குறிப்பாக இரண்டு மூன்று பெண்களை வீட்டில் வைத்திருப்பவர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு சீதனம் கொடுக்க வசதியிருக்காது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் சீதனம் அதிகமாக தேவையில்லை, அதுதவிர பெண்ணின் அண்ணன் தம்பிகளில் யாரையாவது ஒருவரை மாப்பிளையின் உதவியுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி குடும்ப கஷ்டங்களை தீர்க்கலாமேன்கிற நம்பிக்கை. இப்படி பலவிடயங்களில் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தட்டு பெற்றோர்களுக்கு வெளிநாட்டு மாப்பிளைகள் தேவைப்படுகிறார்கள்.

2) பாதுகாப்பு

நாட்டின் பாதுகாப்பற்ற சூழ்நிலை, எந்த நேரம் எது நடக்குமோ என்கிற அச்சம், இன்றைக்கிருக்கும் நிலைமை நாளைக்கு இருக்காதென்பதால் இடம்பெயர்வொன்று வந்துவிட்டால் அதனால் ஏற்ப்படும் சிரமம், மற்றும் வேறு சில முக்கியமான பாதுகாப்பற்ற காரணிகள் என பலவிடயங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலை இங்கு நிலவுவதால் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளில் கட்டிக்கொடுத்தால் அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் வெளிநாட்டு மாப்பிளைகளை அதிகமான பெற்றோர் விரும்புகிறார்கள்.இவற்றைவிட வசதிவாய்ப்பு, கௌரவமென வேறுபல காரணங்களுக்காகவும் வெளிநாட்டு மாப்பிளைகளை பல பெற்றோகள் விரும்புகின்றனர். தமது உறவுகளை விலகி, சொந்த மண்ணினை நீங்கி பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் இளைஞர்களுக்கு வாழ்க்கைத்துணையாக தங்கள் பெண்ணை கட்டிக்கொடுப்பது ஒன்றும் தவறான விடயமில்லை, அது அவரவர் குடும்ப்பநிலை மற்றும் மனம் சார்ந்தது. இது அவர்களது சொந்தப் பிரச்சனை, ஆனால் அதில் யார்மனதும் புண்படக்கூடாதென்பதை அவர்கள் புரிந்து கொண்டால் நல்லது. மேலுள்ள விளம்பரத்தில் குறிப்பிட்ட அந்த பெண்ணிற்கு வெளிநாட்டு மாப்பிளையை பார்ப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது அனால் அதிலே வெளிநாட்டு மணமகன் மட்டும் என்கிறதும், மத்தியகிழக்கு நாடுகள் அல்ல என்கின்றதும் நிச்சயமாக சம்பந்தபட்ட தரப்பினரை காயப்படுத்தும் வரிகளே.

உள்நாட்டில் இருப்பவர்களையும், மத்தியகிழக்கு நாடுகளை சேர்ந்தவர்களையும், ஆசிய நாடுகளில் வசிப்பவர்களையும் இரண்டாம் தரமாக பார்க்கும் புதிய கலாச்சாரம் இப்போது உருவாக ஆரம்பித்திருக்கிறது. இந்த விளம்பரத்திலே இன்னுமொரு கவலையான விடயமென்னவென்றால் பையன் எப்படி இருக்கவேண்டும் என்பதை பற்றிய எதிர்பார்ப்பைவிட எங்கு இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்புத்தான் முக்கியமாக இருக்கிறது. உதாரணமாக தன் பெண்ணின் வயது, அழகு, குலம், கோத்திரம், ராசி , நட்சத்திரம் என எல்லாவற்றையும் பத்திரிகையில் வெளியிட்டவருக்கு மணமகன் வெளிநாட்டவராக மட்டும் இருக்கவேண்டுமென்பதுதான் முக்கியமாக படுகிறது.

இந்த விளம்பரம் ஒரு புதிய வியாதியின் அறிமுகம்தான். இது ஒரு உதாரணம்தான், ஆனால் கல்யாண தரகர்களிடம் இதுபோன்ற கோரிக்கைகள்(வெளிநாடுகள் மட்டும்; மத்தியகிழக்கு,ஆசிய நாடுகை அல்ல) இப்போது சில பெற்றோர்களால் முன்வைக்கப்படுவது அதிகரித்துக்கொண்டு வருகிறது. இது ஆரம்பம்தான், ஆனால் போகப்போக இந்த வியாதி முற்றிப் போவதற்க்கான சந்தர்ப்பங்களும் உண்டு. முன்பெல்லாம் தங்கள் பொண்ணு காதலில் விழுந்தால் குடும்பமானம் என்னவாகுமென பயந்த காலம்போய் இன்று சில பெற்றோர்கள் தங்கள் பொண்ணு காதலில் விழுந்தால் வெளிநாட்டு மாப்பிளைக்கு அரோகரா ஆகிவிடுமோ என்றுதான் பயப்பிடுகிறார்கள், உண்மையில் இதுதான் இன்றைய யதார்த்தம்.

4 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

முன்பெல்லாம் தங்கள் பொண்ணு காதலில் விழுந்தால் குடும்பமானம் என்னவாகுமென பயந்த காலம்போய் இன்று சில பெற்றோர்கள் தங்கள் பொண்ணு காதலில் விழுந்தால் வெளிநாட்டு மாப்பிளைக்கு அரோகரா ஆகிவிடுமோ என்றுதான் பயப்பிடுகிறார்கள், உண்மையில் இதுதான் இன்றைய யதார்த்தம்.......என்ன சொல்வதென்றே தெரியவில்லை... ம்ம்ம்ம்.....

எஸ்.கே said...

படிக்க கஷ்டமாக இருக்கிறது! வாழ்க்கையின் விநோதங்கள்! நல்ல அலசல் கட்டுரை!

r.v.saravanan said...

நல்ல அலசல் jeevadharshan

எப்பூடி.. said...

@ Chitra

@ எஸ்.கே

@ r.v.saravanan

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றி.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)