Thursday, October 7, 2010

நான் முதல் மற்றும் அதிகதடவை பார்த்த திரைப்படங்கள்.

பாலாவின் பக்கத்தில் தனது பதிவிலே பாலா தான் பார்த்த முதல்படம் 'மனிதன்' என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது எனக்கு வந்த ப்ளாஷ்பாக்தான் இந்த பதிவு.

நான்பார்த்த முதல்படம் - மனிதன்

அப்போ எனக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும், முதலாம் வகுப்பு படித்து கொண்டிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன் (இப்ப மட்டும் அவளவுதானே படித்திருக்கிறாய் என்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது). யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இருந்த காலமது(1990 இல் இல்லாமல் போன மின்சாரம் மீண்டும் கிடைத்தது 1996 இல்தான்), ஆனால் அதிகமான வீடுகளில் தொலைக்காட்சிகள் இல்லை, அப்படி தொலைக்காட்சிகள் இருந்தாலும் டெக்(VCR) இருந்த வீடுகள் மிக மிக குறைவு. அப்படி ஒரு வீட்டில் டிவி,டெக் இருந்தால் அயலவர்கள் அனைவரும் அந்த வீட்டில்தான் படம் பார்ப்பது வழக்கம்.

எனது பெரியம்மாவின் வீட்டில் டிவி, டெக் வசதி இருந்ததால் அங்குதான் எம் அயலவர்கள் எல்லோரும் படம்பார்ப்பது வழக்கம், வீடியோ கேசட் வாடகைக்கு எடுப்பது மட்டும்தான் செலவு என்பதால் வாரம் மூன்று படங்களாவது போடுவது வழக்கம். அங்குதான் எனது முதல் திரைப்படத்தை (மனிதன்) பார்த்ததாக ஞாபகம். படத்திலே குற்றவாளியான ரஜினியும் (மறைந்திருப்பார்) அவரைதேடும் பொலிசாரும் ரஜினியின் அக்கா வீட்டிலே (அக்காவின் கணவர் போலிஸ்) அவரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவில் இருப்பார்கள், அந்த காட்சியில் எங்கே ரஜினி போலீசிடம் பிடிபட்டு விடுவாரோ என்கிற பயத்தில் காதுகளை பொத்தியபடி கதிரையின் பின்புறத்தில் மறைந்திருந்தது இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது. வேறெந்த காட்சிகளும் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் இந்த ஒரு காட்சிதான் எனது மனதில் பதிந்த முத்தை சினிமா காட்சி.திரையரங்கில் பார்த்த முதல்ப்படம் - ராஜாதிராஜா

யுத்தம் காரணமாக திரையரங்குகள் மூடப்படுவதற்கு சொற்பநாட்களுக்கு முன்னால் (1990) இரண்டு திரைப்படங்களை திரையரங்கில் பார்த்த ஞாபகம் உள்ளது, முதலாவது திரைப்படம் 'ராஜாதிராஜா' மற்றையது 'பணக்காரன்' . இன்று எந்திரனால் கல்லாவை நிரப்பும் ராஜாதிரையரங்கில்தான் அன்று நான் முதல்முதலாக 'ராஜாதிராஜா' திரைப்படத்தை பார்த்தேன். என்கிட்ட மோதாதே, மாமா பொண்ணைகொடு, மீனம்மா மீனம்மா பாடல்களும்; ரஜினி தோளிலே பழமில்லாத வாழைத்தண்டை அழுதபடி நதியாவிடம் கொண்டுவரும் காட்சியும்; இறுதியில் ஒரு ரஜினி தூக்குகயிற்றில் மாட்ட தயாராக இருக்க மற்றைய ரஜினி காப்பாற்றவரும் காட்சியும் 1996 இற்கு பின்னர் மீண்டும் 'ராஜாதிராஜா' திரைப்படத்தை பார்க்கும்வரை நினைவில் நின்றவை.

மீண்டும் 1998 இல் திரையரங்கு (ராஜா) யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டபோது நான்பார்த்த முதல் திரைப்படம் 'முத்து', ஆனால் அதற்க்கு முன்னர் பலதடவைகள் வீடியோ கேசட்டில் முத்து திரைப்படத்தை பார்த்திருந்தேன்.அதிகமாக பார்த்த திரைப்படம் - சிவா

முன்னர் நான் குறிப்பிட்டதுபோல 1990 முதல் 1996 வரையான காலப்பகுதியல் யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இல்லை. அந்த காலப்பகுதியில் பெரியம்மா வீட்டில் ஒரு ஜெனரேட்டர் வைத்திருந்தார்கள். முழுக்க முழுக்க மண்ணெண்ணையில் ஓடுமாறு அந்த ஜெனரேட்டர் மாற்றியமைக்க பட்டிருந்தது, ஒரு படம்பார்க்க ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் தேவை, அங்கு வாரம் ஒரு திரைப்படம் பார்ப்பது வழக்கம். கொழும்பில் 10 ரூபாய் விற்ற மண்ணெண்ணையின் விலை யாழில் ரூபா 30 (இலங்கை பெறுமதி), வீடியோகேசட் வாடை 30, ஆக மொத்தம் எங்களுக்கு (சிறுசுகளுக்கு) ஒரு ரஜினி படம் பார்க்க 60 ரூபாய் தேவை. வாரம் 30 ரூபாயை அப்பாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியாவது சேர்த்துவிடுவோம், இருந்தாலும் 30 ரூபாய் குறைவாகவே இருக்கும், அந்த நேரங்களில் எங்களுக்கு கைகொடுத்ததுதான் ரஜினியின் 'சிவா' திரைப்படத்தின் கேசட்.

பெரியம்மா வீட்டிலே சொந்தமாக இருந்த 'சிவா' கேசட்தான் எங்கள் நச்சரிப்பால் பகல்ப்பொழுதென்றாலும் வாரம் ஒரு முறை போட்டுக்காட்டப்படும். இப்படியாக சிவா திரைப்படத்தை எத்தனை தடவை பார்த்தோமென்பதை எண்ணிக்கையில் சொல்லமுடியாது. அதன் பின்னர்கூட 1996 இல் மின்சாரம் மீண்டும் கிடைத்தபோது தூடதர்ஷனில் ஒலிபரப்பியே மூன்று நான்கு தடவைகள் சிவா திரைப்படத்தை பார்த்திருப்பேன். ஒருநாள் சிவா திரைப்படம் வெற்றி பெறவில்லை என்ற செய்தியை அறிந்தபோது என்னால் அதை நம்ப முடியவில்லை. மிகுந்த ஏமாற்றமாக இருந்தது, இப்போதும் ஏமாற்றமாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் 'சிவா' திரைப்படத்தை ஏதாவதொரு டிவியில் ஒளிபரப்பினால் நிச்சயம் முழுவதும் பார்ப்பேன். சிவா திரைப்படத்தை திரைப்படம் என்பதையும் தாண்டி எனது பசுமையான (யுத்தகாலத்தில்கூட) நினைவாகவே கருதுகிறேன்.

அந்த காலப்பகுதியில் நான் பார்த்த மறக்கமுடியாத இன்னுமொரு திரைப்படம் விஜயகாந்தின் 'ராஜதுரை', இதனது கேசட்டும் வீட்டில் சொந்தமாக இருந்தது, அனாலும் சிவாவோடு ஒப்பிடுகையில் ராஜதுரையை பத்தில் ஒருதடவைதான் பார்த்திருப்பேன்.

நான்பார்த்த விஜய் மற்றும் அஜித்தின் முதல் திரைப்படங்கள் இன்னுமொரு பதிவில்......

10 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

எந்திரன் - எத்தனை தடவை பார்க்க போறீங்க? :-)

ஆர்வா said...

பழைய நினைவுகள் எப்பவும் சுவாரஸ்யமான ஒன்றுதானே

பாலா said...

பழைய நினைவுகளை அசைபோடுவதே ஒரு சுகம்தான்.

நண்பரே நான் அதிக தடவை பார்த்த படம் அண்ணாமலை. தியேட்டரில் மட்டும் பத்து தடவைக்கு மேல்.

ம.தி.சுதா said...

நினைவுகள் எப்போதும் சுகமானவை.... அடுத்ததிற்காய் காத்திருக்கிறேன்..

கிரி said...

நான் அதிக முறை பார்த்த படம் பாஷா தான் திரையரங்கில் மட்டுமே 10 முறை மேலே பார்த்து இருப்பேன்.

r.v.saravanan said...

பழைய நினைவு ஒரு சுகம்தான்.
நான் அதிக முறை பார்த்த படம் பாஷா சந்திரமுகி

எப்பூடி.. said...

Chitra

//எந்திரன் - எத்தனை தடவை பார்க்க போறீங்க? :-)//

தெரியலையே :-)

..................................

@ கவிதை காதலன்

@ பாலா

@ ம.தி.சுதா

@ கிரி

@ r.v.saravanan

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

VJR said...

நல்லது. தலைவர் படங்கள் எப்பொழுதும் கலக்கல்தான். sganeshmurugan.blogspot.com

ARASIAL said...

சகோதரா..
சிவா வெற்றிப்படமில்லைதான்... ஆனால் நஷ்டப்படமில்லை.

நான் இந்தப் படம் FDFS பார்க்கப் போன போது பூந்தமல்லி பகவதி திரையரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழ, தலைவர் ரொம்ப வருத்தப்பட்டார். இத்தனைக்கும் புதிய தியேட்டர் அது. யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. ஆனாலும் தியேட்டர்காரருக்கு கணிசமான தொகையை கொடுத்தார் ரஜினி. அதன் பிறகு நிறைய முறை அந்தப் படம் பார்த்திருக்கிறேன். "அய்யா அய்யா டோய்... உன் அப்பன்காரன் டோய்" பாட்டைக் கேட்டால் இப்போதும் விசில் தன்னால் கிளம்பிவிடும்!

-வினோ

எப்பூடி.. said...

VJR

//நல்லது. தலைவர் படங்கள் எப்பொழுதும் கலக்கல்தான். //

நன்றி

..................................
ARASIAL


//சகோதரா..
சிவா வெற்றிப்படமில்லைதான்... ஆனால் நஷ்டப்படமில்லை.

நான் இந்தப் படம் FDFS பார்க்கப் போன போது பூந்தமல்லி பகவதி திரையரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழ, தலைவர் ரொம்ப வருத்தப்பட்டார். இத்தனைக்கும் புதிய தியேட்டர் அது. யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. ஆனாலும் தியேட்டர்காரருக்கு கணிசமான தொகையை கொடுத்தார் ரஜினி. அதன் பிறகு நிறைய முறை அந்தப் படம் பார்த்திருக்கிறேன். "அய்யா அய்யா டோய்... உன் அப்பன்காரன் டோய்" பாட்டைக் கேட்டால் இப்போதும் விசில் தன்னால் கிளம்பிவிடும்!//

வினோ உங்கள் வருகைக்கும், தகவல்களுக்கும், பின்னூட்டல்களுக்கும் நன்றி.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)