Saturday, July 3, 2010

ஜெர்மனியும் குளோஸும்





அடுத்தடுத்த இரண்டு உலகக்கிண்ண கால் இறுதிப்போட்டிகளில் ஆர்ஜெண்டீனாவை வீழ்த்தியுள்ளது ஜெர்மனி. கடந்த 2006 உலகக்கிண்ண கால் இறுதிப் போட்டியில் ஆட்டம் 1-1 என சமநிலையில் நிறைவடைய இறுதியாக பனால்டி ஷூட் மூலம் ஆர்ஜெண்டீனாவை வீழ்த்திய ஜெர்மனி இம்முறை ஆர்ஜெண்டீனாவை 4-0 என இலகுவாக வீழ்த்தியது . இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக உலககிண்ண அரை இறுதிப்போட்டிக்கு ஜெர்மனி தெரிவாகியுள்ளது. அரையிறுதிப்போட்டியில் ஸ்பெயினை சந்திக்கும் ஜெர்மனி அதில் வெற்றி பெற்றால் நெதர்லாந்து அல்லது உருகுவேயை இறுதிப்போட்டியில் சந்திக்கும்.



பொதுவாக football என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வரும் நாடு பிரேசில்தான், இதில் தவறேதும் இல்லை. இதுவரை இடம்பெற்ற 19 உலகக்கிண்ண போட்டிகளில் அனைத்திலும் விளையாடுவதற்கு தகுதி பெற்ற ஒரே நாடு பிரேசில் மட்டும்தான், அது தவிர ஐந்து தடவை உலககிண்ணத்தை வென்ற பிரேசில் இரண்டு தடவை இரண்டாமிடத்தையும் இரண்டு தடவை மூன்றாமிடத்தையும் தட்டிச் சென்றுள்ளது. மேலும் உலககிண்ணப்போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்தநாடும் பிரேசில்தான்(64). king of football nations என்றால் அது பிரேசில்தான், இதில் மாற்றுக்கருத்தேதுமில்லை. ஆனால் பிரேசிலுக்கு இணையாக இல்லாவிட்டாலும் இதுவரை பிரேசிலுக்கு போட்டியாக இருந்துவந்துள்ள ஒரே அணியென்றால் அது ஜெர்மனி மட்டுமே.



ஜெர்மனி 17 உலககிண்ண போட்டித்தொடர்களில் விளையாடியுள்ளது, மிகுதி இரண்டு போட்டித்தொடர்களிலும் (1930 ,1950) முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களாலேயே தெரிவாக முடியாமல் போனது. மூன்று தடவைகள் உலகக்கிண்ணத்தை வென்றுள்ள ஜெர்மனி நான்கு தடவைகள் இரண்டாமிடத்தையும் மூன்று தடவைகள் மூன்றாமிடத்தையும் வென்றுள்ளது. அதுதவிர அதிக தடவைகள் உலகக்கிண்ண அரையிறுதிப்போட்டிக்கு(12) தெரிவாகியுள்ள அணியும் ஜெர்மனிதான். அதேபோல அதிக உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ள அணியும் ஜெர்மனிதான், இதுவரை பிரேசிலுடன் சமனாக 93 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெர்மனி ஸ்பெயினுடன் அறையிறுதியில் விளையாடும் போட்டி சாதனைப் போட்டியாகும்.



உலககிண்ண போட்டிகளை போலவே ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நான்காண்டுகளுக் கொருதடவை இடம்பெறும் eurocup கிண்ணத்தை அதிக பட்சமாக மூன்றுதடவைகள் வென்றுள்ள ஜெர்மனி மூன்று தடவைகள் இரண்டாமிடத்தையும் (Runners-up ) தட்டிச்சென்றுள்ளது, ஜெர்மனி தவிர்ந்தத வேறெந்த ஐரோப்பிய அணியும் ஆறு தடவைகள் இறுதிப்போடிக்கு தெரிவாகவில்லை (ரஷ்யா நான்கு தடவைகள்). ஆனால் பிரேசிலை கொண்டாடுமளவிற்கு ஜெர்மனியை தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியளவில் யாரும் பெரிதாக கொண்டாடுவதில்லை, பிரேசிலுக்கு அடுத்து ஆர்ஜெண்டீனா, இங்கிலாந்து, போர்த்துக்கல்,பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கே வெற்றிவாய்ப்பு அதிகமாக இருப்பது போன்ற பிரம்மை தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியளவில் உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே உருவாக்கப்படுகிறது.



ஜெர்மனியை இங்கு எவ்வாறு பெரிதாக கண்டு கொள்வதில்லையோ அதேபோல நான்குதடவைகள் உலககிண்ணத்தை வென்ற இரண்டுதடவைகள் இரண்டாமிடத்தை தக்கவைத்த இத்தாலி அணியையும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதற்க்கு முக்கிய காரணம் espn , மற்றும் star sports அலைவரிசைகளே, இங்கிலாந்தில் கழகங்களுக்கு இடையில் இடம்பெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டிகளே மேற்படி அலைவரிசைகளால் அதிக விளம்பரப்படுத்தி ஒளிபரப்பப்படுகின்றன, இதற்கடுத்து ஸ்பெயினில் இடம்பெறும் ஸ்பானிஸ் லா லிகா போட்டிகளுக்குத்தான் மேற்படி தொலைகாட்சிகளால் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.



தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியளவில் மேற்படி அலைவரிசைகளிலேயே அதிகமானவர்கள் football ஆட்டங்களை பார்க்கின்றார்கள். இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளில் கழகங்களுக்கு இடையிலான போட்டிகள் ஆண்டுதோறும் இடம்பெறுவதால் பெரும்பாலான football ரசிகர்கள் தாங்கள் விரும்பும் கழகங்கள் வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியோடு இந்தப்போட்டிகளை பார்ப்பது வழக்கம்.இதனால் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டு கழகங்களில் சோபிக்கும் வீரர்கள் இவர்களுக்கு நன்கு பரிச்சியமானவர்களாகின்றனர். இதனால் மேற்படி இருநாட்டு கழகங்களிலும் சிறப்பாக விளையாடும் பிரேசில், ஆர்ஜெண்டீனா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ் நாட்டு வீரர்கள் தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாட்டு மக்களால் அறியப்பட்டிருப்பதாலும் விரும்பப்படுவதாலும் மேற்படி நாட்டுகளுக்கு இங்கு பலத்த வரவேற்பு இருக்கின்றது.



ஆனால் ஜெர்மனி மற்றும் இத்தாலி நாட்டு வீரர்களில் அதிகமானவர்கள் தங்களது சொந்த நாட்டு கழகங்களுக்கே விளையாடுகின்றனர்.ஜெர்மனியில் கழகங்களுக்கிடையில் இடம்பெறும் பண்டேஸ்லிகா (Bundesliga) போட்டிகளையோ அல்லது இத்தாலியில் கழகங்களுக்கிடையில் இடம்பெறும் Serie A போட்டிகளையோ தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியளவில் பிரபலமான விளையாட்டு சானல்கள் ஒளிபரப்பாமையாலும் இத்தாலி, ஜெர்மனி கழகங்கள்கங்கள் வேறுநாடுகளை சேர்ந்த பிரபலமான வீரர்களை அதிகதொகை கொடுத்து வாங்காதமையாலும் இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் கழகங்களுக்கிடையில் இடம்பெறும் போட்டிகள் இங்குள்ளவர்களால் அதிகம் விரும்பிபார்க்கப்படுவதில்லை, இதனால் மேற்படி நாட்டு வீரர்களை பற்றி இங்குள்ளவர்கள் அறிந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் குறைவாகவே இருந்துள்ளது, இதனாலேயே ஜெர்மனி மற்றும் இத்தாலி அணிகளுக்கு இங்கு எதிர்பார்ப்பும் ஆதரவும் குறைவாக இருக்கின்றது.



இந்த உலக கிண்ணத்தை எடுத்துக்கொண்டாலே இங்கிலாந்தின் ரூனி (மன்செஸ்டர்), ஆர்ஜெண்டீனாவின் மெசி (பார்சிலோனா), பிரேசிலின் காகா (ரியல் மாட்ரிட்), போர்த்துக்கலின் ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) ஆகியோரே உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட வீரர்கள், ஆனால் மேற்படி வீரர்கள் யாரும் இந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் சோபிக்கவில்லை.அதேபோல மேற்படி வீரர்கள் உள்ள அணிகள் எவையுமே அரையிறுதிக்கு தெரிவாகவில்லை. ஆனால் இறுதி மூன்று உலகக்கிண்ணப் போட்டிகளின் ஆரம்பத்திலும் எதிபார்க்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் இடம்பெறாமல் உலகக்கிண்ணப் போட்டிகளின் முடிவில் அதிககோல் அடித்தவர் பட்டியலில் இடம்பிடித்த வீரர் யாரென்றால் அவர்தான் 'மிரோஸ்லவ் குளோஸ்'.



2002 மற்றும் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டிகளில் தலா ஐந்து கோல்களை அடித்த குளோஸ் முறையே வெள்ளி மற்றும் தங்க பாதணிகளை பரிசாக வென்றவர், அதேபோல இம்முறையும் இதுவரை நான்கு கோல்களை அடித்துள்ள குளோஸ் உலகக்கிண்ண போட்டிகளில் இதுவரை காலமும் அதிக கோல்களை அடித்த பிரேசிலின் ரொனால்டோவை(15) சமன் செய்ய மேலதிகமாக ஒரு கோல் மட்டுமே தேவைபடுகின்றது, இன்னும் ஒரு கோலை அடிக்கும் பட்சத்தில் குளோஸ் உலகக்கிண போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் இடம்பிடிப்பதுடன் தொடர்ச்சியாக தான் விளையாடிய மூன்று உலகக்கிண்ண போட்டித்தொடர்களிலும் ஐந்து கோல்களை அடித்தவீரர் என்ற சாதனையையும் நிலைநாட்டுவார், அத்துடன் இம்முறையும் தங்க அல்லது வெள்ளி பாதணியை வெல்லும் சாத்தியமும் உள்ளது.

ஜெர்மனி அரையிறுதிப்போட்டியில் ஸ்பெயினை வீழ்த்துமா? குளோஸ் ஒருகோலை அடித்து சாதனையை நிலைநாட்ட அவரது திறமையுடன் அதிஸ்டமும் கை கொடுக்குமா? தங்க பாதணியை பெறப்போவது குளோஸா அல்லது ஸ்பெயினின் டேவிட் வில்லாவா? என்பதை பொறுத்திருத்து பார்ப்போம்.

சொந்தக்கருத்து



எது எப்படியோ 'மைக்கல் பல்லாக்' இல்லாத குறை தெரியாமல் அணியை வழிநடத்தும் 'பிலிப் லாம்'பின்மீதும் மைக்கல் பல்லாக்கின் இடத்தை எந்தவித குறையுமில்லாமல் நிவர்த்திசெய்யும் ஷுவைன்ஸ்டைகர் (Schweinsteiger) மீதும், கிடைத்த சந்தர்ப்பங்களை கோல்களாக மாற்றியமைக்கும் திறமைவாய்ந்த குளோஸ் மற்றும் பொடோல்ஸ்கி (முல்லர் அரை இறுதியில் விளயாடாதமை துரதிடமே) ஆகியோர்மீதும் உள்ள நம்பிக்கையிலும் ஜெர்மனி இந்தத்தடவை 2008 யூரோகிண்ண இறுதிப்போட்டியில் ஸ்பெயினுடன் தோற்றதற்கான பதிலடியை ஸ்பெயினுக்கு அறையிறுதியில் கொடுத்து 2010 உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் என நம்பலாம். ஆனாலும் 2002 உலககிண்ண இறுதிப்போட்டியிலும், 2006 உலககிண்ண அரையிறுதிப்போட்டியிலும், 2008 யூரோ கிண்ண இறுதிப்போட்டியிலும் என்னை ஏமாற்றிய ஜெர்மனி இந்தத்தடவையும் ஏமாற்றிவிடுமோ என்கிற சந்தேகம் அடிமனதில் இல்லாமல் இல்லை.

come on germany .......go .... go .....go.....


11 வாசகர் எண்ணங்கள்:

manjoorraja said...

அருமையான கண்ணோட்டம்.

க்ளோஸ், ஷுவைன்ஸ்டைகர், மெசூட் ஓஜில், பொடலோஸ்கி, மீயுல்லர் போன்ற வீரர்களின் வேகமும் பந்தை கடத்தும் லாவகவும் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது.

ஜெர்மனி அரை இறுதியிலும் இறுதியிலும் ஜெயிக்கும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

வாழ்த்துவோம்.

manjoorraja said...

அருமையான கண்ணோட்டம்.

க்ளோஸ், ஷுவைன்ஸ்டைகர், மெசூட் ஓஜில், பொடலோஸ்கி, மீயுல்லர் போன்ற வீரர்களின் வேகமும் பந்தை கடத்தும் லாவகவும் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது.

ஜெர்மனி அரை இறுதியிலும் இறுதியிலும் ஜெயிக்கும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

வாழ்த்துவோம்.

ஹாய் அரும்பாவூர் said...

ஒரு சிறந்த திறனாய்வு
சிறப்பனான கருத்து

தமிழ் மதுரம் said...

விளையாட்டு விமர்சனம் அருமை.. நீங்கள் சொல்வது போல ESPN & Strar Sports இற்கும் ஜேர்மனி போன்ற அணிகளின் புகழ் எம்மவர்களை எட்டாததற்குக் காரணமாக இருக்கலாம். புலம்பெயர்ந்து வந்த பின்னர் தான் ஜேர்மனி பற்றி நிறைய அறிந்து கொண்டேன். ஒஸ்ரேலியாவில் இருந்தே ஜேர்மனிக்கு ஆதரவாக ஒரு படை தென் ஆபிரிக்கா சென்று உதைபந்து ஜோதியில் ஐக்கியமாகியுள்ளது என்றால் பாருங்களேன் அதன் முக்கியத்துவத்தை?ம்... வெல்லப் போவது யாரு! வெகு விரைவில் தெரியும்.

நானும் உங்கடை பக்கம் தான் எப்பூடி! ஜேர்மனி தான் வெல்லும் என்பது எனது கருத்து!

கிரி said...

எனக்கு யார் ஜெயித்தாலும் ஓகே தான் :-) ஆனால் அர்ஜென்டினா இப்படி கேவலமாக தோற்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

பாலா said...

நண்பரே உங்களுக்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன். மறுக்காமல் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என் தளத்தில்
நன்றி...

http://balapakkangal.blogspot.com/2010/07/blog-post_06.html

எப்பூடி.. said...

@ manjoorraja

@ ஹாய் அரும்பாவூர்

@ தமிழ் மதுரம்

@ கிரி

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி

எப்பூடி.. said...

@ பாலா

உங்கள் அன்புக்கு நன்றி, அன்புடன் பெற்றுக்கொள்கிறேன்.

தமிழ் மதுரம் said...

அடுத்த பதிவு எப்ப வரும்?

எப்பூடி.. said...

வழக்கத்துக்கு மாறான போராட்ட குணமற்ற ஜெர்மனியும், ஸ்பெயினின் தடுப்பும் தொடர்ந்து மூன்று தடவைகள் அரையிறுதிக்கு தகுதிபெற்ற ஜெர்மனியை இம்முறையும் கிண்ணத்தை ஜெயிக்க விடவில்லை :((((((

எப்பூடி.. said...

தமிழ் மதுரம்

//அடுத்த பதிவு எப்ப வரும்?//

அதவிடுங்க, அதிஸ்ரம்ற ஸ்போர்ட்ஸ் காலம். பெடரர் , ஜெர்மனி என தொடர்தோல்விகள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)