Sunday, May 30, 2010

சீமானுக்கு ஒரு கடிதம்.....சீமான் அவர்களே.....

இன்றைய ஈழத்தமிழர்களின் இந்தியப் பிரதிநியாக உங்களை அதிகமான இலங்கை தமிழர்கள் பார்க்கிறார்கள்,உணர்கிறார்கள். வன்னி இறுதி யுத்தத்தின்போது தமிழகத்தில் இருந்து ஈழத்தமிழர்க்கு ஆதரவாக குரல்கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், இதற்காக நீங்கள் சிறையும் சென்றவர். உங்களது ஈழத்தமிழர் அக்கறையின் உண்மைத்தன்மையை நான் உணர்கிறேன், அதேவளை உங்களது செயற்பாடுகளில் எனக்கு வரவர நம்பிக்கை குறைவடைந்துகொண்டே வருகிறது. சில சமயங்களில் உங்களது செயற்பாடுகள் மேலோட்டமானவை போலத்தெரிகிறது.

இலங்கையில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு நடிகர்கள் யாரும் வரக்கூடாதென்று நீங்கள் கூறுவதன் நியாயம் எனக்கு புரிகிறது. சர்வதேசத்திற்கு இந்திய கலைஞர்களின் நிலைப்பாட்டை உணர்த்துவதற்காக இலங்கைக்கு நடிகர்களை செல்லவேண்டாம் என்ற கோரிக்கையை வைத்த நீங்கள்போராட்டம் நடாத்தி (மிரட்டியும்) சிலரது வருகையை நிறுத்தியது நிச்சயம் அவசியம்தானா? அவர்கள் ஒரு உணர்வும் இல்லாமல் மிரட்டலுக்காக மட்டும் இலங்கைக்கு வராமல் இருப்பதுமொன்று இலங்கையில் விழாவில் கலந்துகொள்வதுமொன்று.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக விழாவை புறக்கணிக்குமாறு நீங்கள் கூறுகின்றீர்கள், இன்று சர்வதேசம் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு தயாராக இருக்கின்றபோதும் மறைமுகமாக அதனை எதிர்க்கும் இந்திய அரசை உங்களால் என்ன செய்யமுடிந்தது? சரி இந்திய அரசு எதிர்க்கவில்லையென்றே வைத்துக்கொள்வோம் இந்தியஅரசு விசாரணையை துரிதப்படுத்தச்சொல்லியாவது அழுத்தம்கொடுக்கலாமே. இதற்காக இந்தியஅரசை ஆட்சேபித்து , அதாவது சோனியாவையோ மன்மோகனையோ இந்த விடயத்தில் அக்கறையெடுக்குமாறு வேண்டி போராட்டம் செய்யலாமே? அமிதாப்பச்சனுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை விட சோனியாவையோ மன்மோகனையோ எதிர்த்து போராட்டம் செய்தால் மிகமிக கூடுதல் பலன் கிடைக்கும், அப்படி உங்களால் செய்யமுடியுமா சீமான் அவர்களே?1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்தமிழாராட்சி மாநாட்டில் இடம்பெற்ற கலவரத்தில் 14 அப்பாவிகளின் உயிர்கள் பறிபோனது உங்களுக்கு தெரிந்திருக்குமென்று நினைக்கின்றேன். ஏறத்தாழ ஒருவருடத்திற்குமுன்னர் வன்னியில் எத்தனை உயிர்கள் யுத்தத்தால் இழக்கப்பட்டன என்பதும் தங்களுக்கு தெரியாததல்ல. இந்தநிலையில் இன்று திரைப்படவிழா இலங்கையில் நடந்தாலே சர்வதேசம்  ஏமாந்துவிடும் என்று நம்பும் நீங்கள் உலக தமிழர்களின் சார்பாக தமிழாராட்சி மாநாடு கொண்டாடினால் இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் கவனம் குறைவடைந்துவிடும் என்பதை அறியவில்லையா? இதற்கெதிராக நீங்கள் ஏன் இன்னமும் கலைஞருக்கெதிராக போராட்டம் ஆரம்பிக்கவில்லை? உடனடியாக இந்த மாநாட்டை எதற்காக நிறுத்த முயற்ச்சிக்கவில்லை?

நீங்கள் திரைப்படவிழாவுக்கு செல்லவேண்டாம் என்று நடிகர்கள் வீட்டின் முன்னால் போராட்டம் செய்வதைவிட சோனியா,மன்மோகன், கருணாநிதி வீடுகளுக்கு முன் நடத்த வேண்டிய போராட்டங்கள்தான் அவசரமானவையும் அவசியமானவையும். இதை விடுத்து அமிதாப்வீட்டின் முன்பும் சல்மான்கான் வீட்டின் முன்பும் போராட்டம் நடாத்துவது பல்பிடுங்கிய பாம்பை கையில்பிடித்து வித்தைகாட்டுவது போன்றது.

இதற்கு உங்களின் பதில் என்ன?

35 வாசகர் எண்ணங்கள்:

பாலா said...

///இதற்கு உங்களின் பதில் என்ன? ///

சீமான்கிட்ட இருந்து நீங்க பதில் எதிர்பார்க்கறதுக்கும், மன்மோகன் வீட்டு முன்னாடி போராட்டம் நடத்துறதுக்கும் ரிசல்ட் ஒன்னுதான்.

அது உங்களுக்கே தெரியும்.

ஹாய் அரும்பாவூர் said...

நீங்கள் திரைப்படவிழாவுக்கு செல்லவேண்டாம் என்று நடிகர்கள் வீட்டின் முன்னால் போராட்டம் செய்வதைவிட சோனியா,மன்மோகன், கருணாநிதி வீடுகளுக்கு முன் நடத்த வேண்டிய போராட்டங்கள்தான் அவசரமானவையும் அவசியமானவையும்

பிரச்சினை ஆரம்பம் முடிவும் ஆளும் அரசின் கையில் இருக்கும் போது
விருது விழாவில்குறை கூறி என்ன செய்வது
தமிழ் நாட்டில் இதனை மந்திரிகள் இருந்து என்ன பயன்
ஒற்றுமையும் தமிழரும் ரொம்ப தூரம்

Unknown said...

அவர் இந்த அளவுக்காவது செய்கிறாரே என சந்தோசப் படுங்கள், ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இணையத்தில் எழுதுவது சுலபம், முதலில் நீங்கள் போராட்டங்களில் வந்து பங்கு பெறுங்கள்..

ஒரு இயக்கம் நடத்துவது இந்தியா போன்ற உணர்ச்சியற்ற மக்கள் உள்ள தேசத்தில் எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கு தெரியவில்லை.

தயவு செய்து இந்திய அரசியலை புரிந்து கொள்ளுங்கள்..

நீங்கள் சொல்வது மாதிரி மன்மோகன் மற்றும் கருணாநிதி வீட்டின் முன் சென்று போராடினால் அத்துணை தோழர்களும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே போகவேண்டி வரும், அப்புறம் அவர்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவது.

மாற்றம் மெல்லத்தான் வரும் அதற்குள் எப்பூடி ...?

Unknown said...

இன்னுமாடா நம்மளை இந்த உலகம் நம்பிக்கிட்டிருக்கு

-தங்கத் தலைவன் சீமான் தொண்டரடிப்பொடிகள் சார்பில்

ஜோதிஜி said...

ஒரு இயக்கம் நடத்துவது இந்தியா போன்ற உணர்ச்சியற்ற மக்கள் உள்ள தேசத்தில் எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கு தெரியவில்லை.

NADESAN said...

திரு சீமான் தமிழ் உணர்வாளர் ஆனால் அவரிடம் ஜாதி வெறி உள்ளது
நடேசன் துபாய்

தமிழ்போராளி said...

அன்பு நண்பருக்கு...
சீமானுக்கு கடிதம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படித்தேன். உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளது.ஆனால் நீங்கள் கூறும் குற்ற சாட்டுக்கள் மிக கேவலமாக இருக்கிறது. இறுதி யுத்தம் நடந்த போது இந்திய,தமிழக தலைவர்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன என்பது நீங்கள் அறியவில்லை என்று நினைக்கிறேன்....
தற்போது நடக்க இருக்கும் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது. உணர்வுள்ளவர்கள் என்பதால் சில பேர் விழாவை புறக்கணிக்க சம்மதித்துள்ளார்கள்..
மிரட்டி பணிய வைத்ததாய் கூறி இருக்கிறீர்கள். அதை பற்றி விளக்கம் தர முடியுமா உங்களால்? எத்தனையோ தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்தும் இளைஞர்களை ஒன்றினைத்து தலைவர் பிரபாவின் புகைப்படத்துடன் பொதுக்கூட்டம் நடத்தினாரே யாருக்கு வரும் இந்த துணிச்சல்...
காங்கிரஸ்,தி.மு.க உள்ள தமிழகத்தில் இப்படி செய்ததே மிக பெரிய வெற்றியாகும். உங்களை போன்று கீழ்தரமான தமிழர்கள் இருப்பதால் தான் இன்னும் தமிழினம் துரோகிகளுக்கிடையே தோல்வியை சந்திதுக்கொண்டிருக்கிறார்கள்..
நீங்கள் இணையத்தில் இருந்து கொண்டு எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம் என்று நினைக்காதீர்கள். மாவீரன் முத்துக்குமாருக்கு சொந்த இடத்திலே சிலை வைப்பதற்கு அனுமதி மறுத்தது தமிழக அரசு..குற்றம் சொல்வது சுலபமானது. நீங்கள் தயாராக இருக்கிறீங்களா? தமிழகம் வாருங்கள் உங்கள் தலைமையில் சோனியா,மன்மோகன்சிங்குக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்துவோம்>>?? தயார் என்றால் தொடர்பு கொள்ளுங்கள்...
veera766@gmail.com

r.v.saravanan said...

சரியான கேள்வி தான்

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல கேள்வி ....ஏன் உலகத்தமிழ் மாநாட்டை சீமான் எதிர்க்க வில்லை

Unknown said...

சீமான் அவர்களுக்கும் நாம் தமிழர் இயக்கத்தினர்க்கும் வணக்கம்

நீங்கள் ஈழத்தமிழர் பால் காட்டி வரும் அன்புக்கும் பரிவுக்கும் நன்றி. உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் ஈழ மண்ணில் உள்ள தமிழனாக கேட்க விளைகிறேன்.

நீங்கள் இலங்கைக்கு எதிராக அரசியல் பொருளாதார போர் தொடுத்துள்ளீர்கள். உங்கள் உணர்வு புரிகிறது.
ஆனால் நீங்கள் ஈழ மண்ணில் உள்ள தமிழர்களாகிய எங்களின் நிலைமையை எண்ணி பார்த்தீர்களா? எங்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தற்போது இந்த இலங்கை மண்ணை நம்பி உள்ளது என்பது உங்களுக்கு புரியும். நீங்கள் இலங்கை பொருளாதாரத்துக்கு எதிராக நகர்த்தும் ஒவ்வொரு காயும் ஈழ தமிழரின் அடிவயிற்றை காயப்படுத்தாதா?
விரும்பியோ விரும்பாமலோ ஈழத்திலுள்ள தமிழர் நாம் இலங்கை பொருளாதாரத்தில் தங்கியுள்ளோம். இலங்கையின் உல்லாச துறையின் (Tourism industry) வளர்ச்சி(IIFA நிகழ்ச்சி ) , ஐரோப்பிய சலுகைகள் என்பனவற்க்கு எதிரான நடவடிக்கைகள் ஈழத்திலுள்ள தமிழர் எம்மையும் பாதிக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்கள். உங்களதும் இந்த நடவடிக்கைகள் இலைங்கை பொருளாதாரத்தில் தங்கியிராத புலம் பெயர் ஈழ மக்களை மகிழ்ச்சி படுத்தும், ஆனால் ஈழத்திலுள்ள தாயக மக்களின் வளர்ச்சியை மட்டுபடுத்தும். 30 வருட போரினால் நைந்து போன எம்மக்களின் வாழக்கையை, மேலும் காயப்படுத்துவது நியாயமா?

இலங்கைக்கு எதிரான உங்கள் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் உணர்வுகள் நியானமானவையே. அவற்றுக்கு நாம் நன்றி கடமை பட்டுள்ளோம்.

நன்றிகளுடன்
தாயக தமிழன்

தமிழ்போராளி said...

நண்பர் வெண்ணிற இரவுகள்... உலக செம்மொழிமாநாடு எங்க இலங்கையில் நடக்குதா???

நண்பர் கிச்சா அவர்களே!
ஒருத்தனுக்கு அடிமையாக வாழ்வதைவிட இறப்பதே மேல். தமிழனுக்கு என்று ஒரு சுயமரியாதை உண்டு. நீங்கள் இத்தனை ஆண்டுகளா எங்கே இருந்தீர்கள். தமிழகத்தில் எத்தனை தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்தார்கள். அப்போது எந்த சிங்களவன் கூட நீங்கள் இருந்தீர்கள். எத்தனை உயிர்கள் மாண்டு போயின. உங்கள் அம்மாவுக்கோ,தங்கைக்கோ உங்கள் குடும்பத்துக்கோ ஒரு பிரச்சனை நடந்து இருந்தால் நீங்கள் இப்படி கேள்வி கேட்க வந்து இருக்க மாட்டீர்கள்.கேவலமாக இல்லை நீங்களே இப்படி கேள்வி கேட்பது?? ராஜபக்சே இதுவரை என்ன செய்தான் உங்களுக்கு? இனியும் செய்வான் என்று எதிர்பார்க்கிறீங்க? சில தமிழின துரோகிகளால்தான் ஈழத்தில் தமிழன் இன்னும் அடிமை வாழ்வு வாழ்கிறான்... அங்கு திரைப்பட விழா நடந்தால் தமிழன் வாழ்வு உயர்ந்து விடுமா?? சிங்களவன் கும்மாளம் அடிப்பான். அவனுக்கு வேண்டிய உதவிகளை நீங்கள் செய்து கொண்டு அவன் தூக்கி போடும் எலும்பு துண்டுகளை கடைசிவரை கடித்துக்கொண்டிருப்பீர்கள்...அதை தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்....

அ.ஜீவதர்ஷன் said...

ஹாலிவுட் பாலா


//சீமான்கிட்ட இருந்து நீங்க பதில் எதிர்பார்க்கறதுக்கும், மன்மோகன் வீட்டு முன்னாடி போராட்டம் நடத்துறதுக்கும் ரிசல்ட் ஒன்னுதான்.

அது உங்களுக்கே தெரியும்.//


உண்மைதான், சீமான் பதில் சொல்லாவிட்டாலும் அவரது ஆதரவாளர்களாவது குறைந்தபட்சம் பதில் சொல்வார்கள் அல்லவா?


.......................................

ஹாய் அரும்பாவூர்

//பிரச்சினை ஆரம்பம் முடிவும் ஆளும் அரசின் கையில் இருக்கும் போது
விருது விழாவில்குறை கூறி என்ன செய்வது
தமிழ் நாட்டில் இதனை மந்திரிகள் இருந்து என்ன பயன் ஒற்றுமையும் தமிழரும் ரொம்ப தூரம்//

ஒற்றுமையா ? அது இருந்திருந்தால் ஏன் இந்த நிலைமை.

.....................................

தமிழ்போராளி said...

துரோகிகளும்,பொருக்கி தின்னும் சில தமிழர்கள் இன்னும் ஈழத்தில் இருக்கும் போது எத்தனை மந்திரிகள் இணைந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது. எதிரிகளை விட முதலில் ஒழிக்க வேண்டியது துரோகிகளைதான்..

அ.ஜீவதர்ஷன் said...

கே.ஆர்.பி.செந்தில்

//அவர் இந்த அளவுக்காவது செய்கிறாரே என சந்தோசப் படுங்கள்//

உண்மைதான்

// ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இணையத்தில் எழுதுவது சுலபம், முதலில் நீங்கள் போராட்டங்களில் வந்து பங்கு பெறுங்கள்..//

எதோ ஒரு மூலையில் இல்லை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்துதான் எழுதுகிறேன், போராட்டம் எங்களுடன் ஊறிப்போனது. கடந்த முப்பது ஆண்டுகளாக தினமும் போராட்டத்துடன்தான் வாழுகிறோம்.

//ஒரு இயக்கம் நடத்துவது இந்தியா போன்ற உணர்ச்சியற்ற மக்கள் உள்ள தேசத்தில் எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கு தெரியவில்லை.//

உண்மைதான் , சீமானும் இந்திய அரசியல்வாதிகள்மாதிரி குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள்மாதிரி ஆகிவிடுவாரோ என்பதுதான் எனது கவலை.

//தயவு செய்து இந்திய அரசியலை புரிந்து கொள்ளுங்கள்..//

அதை புரிந்து கொண்டதால்தான் சொல்கிறேன் கீழ்மட்டங்களில் நடாத்தும் போராட்டங்கள் இந்திய அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

//நீங்கள் சொல்வது மாதிரி மன்மோகன் மற்றும் கருணாநிதி வீட்டின் முன் சென்று போராடினால் அத்துணை தோழர்களும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே போகவேண்டி வரும், அப்புறம் அவர்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவது.//

அனைவருக்கும் குடும்பம் முக்கியம்தான் , ஆனால் போராளிக்கு? தனக்கும் தனது குடுமத்துக்கும் ஒன்றும் ஆகாமல் சுயபாதுகாப்பை கருத்தில் கண்டு மேலோட்டமாக போராட்டப்படும் போராடம் போராட்டமே அல்ல, அவர் போராளியுமல்ல.

//மாற்றம் மெல்லத்தான் வரும் அதற்குள் எப்பூடி ...?//

நிச்சயமாக, அதற்காக மாற்றத்தை ஒரே இடத்தில் திரும்பத்திரும்ப தேடினால் கிடைக்காது.

அ.ஜீவதர்ஷன் said...

Kiruthikan Kumarasamy

//இன்னுமாடா நம்மளை இந்த உலகம் நம்பிக்கிட்டிருக்கு

-தங்கத் தலைவன் சீமான் தொண்டரடிப்பொடிகள் சார்பில்//

இப்பதான் சந்தேகம் வர ஆரம்பிச்சிருக்கு

.........................................

ஜோதிஜி

//ஒரு இயக்கம் நடத்துவது இந்தியா போன்ற உணர்ச்சியற்ற மக்கள் உள்ள தேசத்தில் எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கு தெரியவில்லை.//


இதற்கான பதிலை கே.ஆர்.பி.செந்தில் அவர்களுக்கு கூறியுள்ளேன்.


..........................................

NADESAN

//திரு சீமான் தமிழ் உணர்வாளர் ஆனால் அவரிடம் ஜாதி வெறி உள்ளது
நடேசன் துபாய்//

அவரது தமிழ் உணர்வில் சந்தேகமில்லை, ஆனால் இன்று அதைவைத்து அரசியல் செய்கிறாரோ என்பதுதான் எனது சந்தேகமே.

அ.ஜீவதர்ஷன் said...

விடுத‌லைவீரா

//அன்பு நண்பருக்கு...//

நன்றி.

//சீமானுக்கு கடிதம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படித்தேன். உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளது.ஆனால் நீங்கள் கூறும் குற்ற சாட்டுக்கள் மிக கேவலமாக இருக்கிறது.//


எழுத்தில்தானே குற்றச்சாட்டு உள்ளது! எழுத்து நன்றாக இருந்து குற்றச்ச்சாட்டு எப்படி கேவலமானது :-)

//இறுதி யுத்தம் நடந்த போது இந்திய,தமிழக தலைவர்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன என்பது நீங்கள் அறியவில்லை என்று நினைக்கிறேன்....//

முதலில் பதிவை ஒழுங்காக வாசியும், அதிலே சீமானின் இறுதிப்போர் போராட்டம் பற்றி குறிப்பிடப்பட்டள்ளது.

//தற்போது நடக்க இருக்கும் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது. உணர்வுள்ளவர்கள் என்பதால் சில பேர் விழாவை புறக்கணிக்க சம்மதித்துள்ளார்கள்..//

எங்கே நடாத்தப்பட்டது? , யார்யார் புறக்கணித்துள்ளனர்? , எத்தனை பிரபலங்கள் பங்குபெறவில்லை என்று குறிப்பிட முடியமா? அமிதாப் வீட்டின் முன்னால் போராடிய சீமான் விழாவுக்கு போகவேண்டாமென்று நடிகர்கள் வீட்டின் முன்னாலோ கவிஞர்கள் வீட்டின் முன்னாலோ நின்று போராட்டம் செய்வாரா?


//பிரபலங்களும் இதுகுறித்து மிரட்டி பணிய வைத்ததாய் கூறி இருக்கிறீர்கள். அதை பற்றி விளக்கம் தர முடியுமா உங்களால்? //

கோரிக்கை வைப்பதுதான் உண்மையான பண்பு, அதைவிடுத்து அவகளது வீட்டுக்குமுன்னால் நின்று போராடினால் பிரபலங்கள் தமது இமேஜை காப்பாற்றிக்கொள்ள கோரிக்கையை வேண்டா வெறுப்பாகஏற்றுத்தானே ஆகவேண்டும். இதுவும் ஒரு மிரட்டல்தான்.

//எத்தனையோ தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்தும் இளைஞர்களை ஒன்றினைத்து தலைவர் பிரபாவின் புகைப்படத்துடன் பொதுக்கூட்டம் நடத்தினாரே யாருக்கு வரும் இந்த துணிச்சல்...//

அடே முட்டாளே பிரபாகரனை வைத்து முதலில் அரசியல் செய்வதை நிறுத்தசொல், வைக்கோ பிரபாகரனுடன் நின்று புகைப்படமெடுத்தார் என்பதற்காக அவர் பிரபாகரன் ஆகிட முடியுமா ? பிரபாகரன் படத்துடன் போராடினால் தமிழ் உணவாளர்கள் உள்ள நாட்டில் தமிழகஅரசு அதிகபட்ச தண்டனை வழங்காது என்பது சீமானுக்கு தெரியாதென்று நினைக்கிறீர்களா? அவளவு வீரமானவறேன்றால் காங்கிரஸ் தலைவர்களது அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் செய்யச் சொல்லும் பார்க்கலாம்.

//காங்கிரஸ்,தி.மு.க உள்ள தமிழகத்தில் இப்படி செய்ததே மிக பெரிய வெற்றியாகும். உங்களை போன்று கீழ்தரமான தமிழர்கள் இருப்பதால் தான் இன்னும் தமிழினம் துரோகிகளுக்கிடையே தோல்வியை சந்திதுக்கொண்டிருக்கிறார்கள்..//

உன்னைபோன்ற முட்டாள்களால்தான் தமிழனுக்கு இந்தநிலை.சீமான பற்றி கருத்து சொன்னால் துரோகியோ? தமிழர்களின் அழிவை வேடிக்கை பார்த்தா கருணாநிதி நடாத்தும் மாநாட்டை எதிர்க்காத சீமானை ஆதரிக்கும் நீ ஒரு பச்சை துரோகி . வெளிநாடுகளில் பதுங்கியிருந்து வீரம் பேசுவது யாராலும் முடியும், இங்கு வந்து இங்குள்ள நடைமுறை பிரச்சினைகளை பார் , இலங்கையில் நின்று பார் உனக்கு சீமானின் போராட்டங்கள் மேலோட்டமானவை என்பது புரியும்.

//நீங்கள் தயாராக இருக்கிறீங்களா? தமிழகம் வாருங்கள் உங்கள் தலைமையில் சோனியா,மன்மோகன்சிங்குக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்துவோம்>>//

முட்டாளே! போராட்டத்தை பற்றி நீ எங்களுக்கு படிப்பிக்காதே , தம்மை பிரபலபடுத்த போராடும் குணம் ஈழத் தமிழர்களிடமில்லை.

அ.ஜீவதர்ஷன் said...

விடுத‌லைவீரா

//துரோகிகளும்,பொருக்கி தின்னும் சில தமிழர்கள் இன்னும் ஈழத்தில் இருக்கும் போது எத்தனை மந்திரிகள் இணைந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது. எதிரிகளை விட முதலில் ஒழிக்க வேண்டியது துரோகிகளைதான்..//


வெட்டி வீரம் நல்லாத்தான் பேசிறாய், நாயே போராட்டத்தை பற்றி உனக்கேன்ன்ன தெரியும்? நடைமுறை வாழ்வைப்பற்றி உனக்கு ஒன்றும் புரியாது 30 வருடமாக போராட்டத்தை ஆதரித்த ஈழத்தவர்களை பற்றி பேச நாயே உனக்கு ஒரு அருகதை கிடையாது. ஒவ்வொரு காலபகுதியிலும் போராட்டத்தினது எத்தனை விதமான கஷ்டங்களை அனுபவித்தோம் என்பது உனக்கு புரியாதடா பரதேசி . துரோகி என்ற வார்த்தையை உபயோகிக்கும் பொது சிந்தித்து உபயோகப்படுத்து, அதன் வலி உனக்கு புரியாது. சொத்துக்களை இழந்து குடும்ப உறுப்பினர்களை இழந்து மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நாம் பட்டிருக்கும் தாக்கம் உனக்கு புரியாதடா நாயே.

//"ஒருத்தனுக்கு அடிமையாக வாழ்வதைவிட இறப்பதே மேல். தமிழனுக்கு என்று ஒரு சுயமரியாதை உண்டு"//

இந்த வாசகத்தை சொன்ன நீ சீமான் காங்கிரசுக்கும் கலைஞருக்கும் எதிராக போராடினால் உள்ளே பிடித்துப் போட்டுவிடுவார்கள் என்று சப்புக்கட்டு கட்டுகிறாயே உனக்கு வெட்கமாக இல்லை. இங்கு தமிழர்கள் யாரும் திரைப்பட விழாவை அங்கீகரிக்கவில்லை , ஆனால் அதை எதிர்ப்பதை விட அவசியமான அவசரமான தேவை மத்திய மாநில அரசுகளை இலங்கை குற்ற விசாரணைக்கு சர்வதேசத்திற்கு ஆதரவு கொடுக்கும்படி வேண்டுவதுதான். அதேபோல தமிலாராசி மாநாட்டை நிறுத்துவதுதான். இது கூட புரியாமல் சீமானுக்கு தூபம் போடும் நீ துரோகி என்ற பதத்தை பயன் படுத்தாதே. உனக்கு விளக்கமில்லாவிட்டால் முதலில் எழுதியதை விளங்கிக்கொள். பின்னர் பின்னூட்டலாம்

அகிறினையில் எழுதியதற்கு மன்னித்து கொள்ளும்.

அ.ஜீவதர்ஷன் said...

வெண்ணிற இரவுகள்....

//நல்ல கேள்வி ....ஏன் உலகத்தமிழ் மாநாட்டை சீமான் எதிர்க்க வில்லை//

அதுதான் எனக்கும் புரியவில்லை.

..............................................

r.v.saravanan

//சரியான கேள்வி தான்//


நன்றி

..............................................

kichaa

உங்கள் தரப்பு நியாயம் எனக்கு புரிகிறது, கருத்துக்கு நன்றி

அ.ஜீவதர்ஷன் said...

@ விடுத‌லைவீரா

பின்னூடம் போடும்போது என்னிலையில் நான் இல்லை, துரோகி என்னும் பதத்தை எடுத்ததற்கும் பாவிக்காதீர்கள். அந்த சொல்லின் சக்தி அணுவைவிட பயங்கரமானது, எனது பின்னூட்டல்களில் அநாகரிகமான முறையில் பயன்படுத்தியிருக்கும் சொற்களுக்காகவும் அகிறினையில் எழுதியதற்காகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பின்னூட்டங்களை அழித்துவிட்டால் அந்தக்கணத்தில் ஏற்ப்பட்ட எனது உணர்வுகளை அழித்துவிட்டது போலாகும் என்பதால் அழிக்கவில்லை, அதற்கும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் வருகைக்கு நன்றி.

சிவம் அமுதசிவம் said...

//// முட்டாளே! போராட்டத்தை பற்றி நீ எங்களுக்கு படிப்பிக்காதே , தம்மை பிரபலபடுத்த போராடும் குணம் ஈழத் தமிழர்களிடமில்லை////

இவர் தமிழைப்படித்திருக்கலாம் ; ஆனால், தமிழ்ப்பண்பாடு என்பது இவரது பரம்பரையிலேயே இல்லை என்பதை இவரது வார்த்தைப்பிரயோகமே தெள்ளத்தெளிவாகக்காட்டுகிறது.
நண்பர் வீரா அவர்களே! இஃதொரு மூன்றாந்தர இணையதளம்தான் என்பது இன்னுமா புரியவில்லை? இந்த இணையதளத்துக்கு நீங்கள் வந்ததே உங்கள் தரத்துக்கு ஏற்றதல்ல.இதற்குப்போய் மீண்டும் மீண்டும் பின்னூட்டமிட்டுக்கொண்டிருக்கிறீர்களே!உங்களாற்றான் யானும் இதனுள் வரவேண்டியே வந்தது.ஆனால், எனது வருகை கண்டிப்பாக இதுதான் முதலும் கடைசியும்.
எனது இந்தப்பின்னூட்டமே _ ந்ண்பர் வீரா! உங்களுக்கானதேயன்றி வேறில்லை.

இவ்விணையதளத்தின் பெயரிலேயே தெரியவில்லையா அதன்தரம்?
இதன்மேலேயுள்ளதைக்கவனியுங்கள்: // நாகரிகமான முறையில் பின்னூட்டல்களாக....///
ஹாஹாஹாஹா....
தன்னிடம் இல்லாததைத்தான் அடுத்தவர்களிமிருந்து எதிர்பார்க்கிறார்..
பிற்குறிப்பு: தன் நிலையை இழந்தவர்களை ‘ மனநோயாளி ‘ என்று அழைப்பர்!!!!??????

அ.ஜீவதர்ஷன் said...

@ சிவம் அமுதசிவம்

உங்கள் புரிதலுக்கு நன்றி.

பூராயம்-புதினங்களின் சங்கமம் said...

//"உங்கள் கருத்துக்களையும் / விமர்சனங்களையும் நாகரிகமான முறையில் பின்னூட்டல்களாக ....."//

நாகரிகத்தைப் பற்றிக் கதைப்பதற்கும் ஒரு நாகரிகம் வேணும் நண்பரே.

chosenone said...

ஒன்றுமே செய்யாமல் இருக்குறதுக்கு விட AT LEAST இப்படியாவது போராடுறதுக்கு ஒருத்தர் இருக்காரே ....
நீங்கள் சொல்லுற மாதிரி இப்போது (according to the current political and social circumstances in TN) சோனியா , மன்மோகன் , கருணாநிதி வீடு முன்னால ஆர்பாட்டம் பண்ணால் , 2/3 வர்ஷத்துக்கு உள்ள தூக்கி போடுர்வான் அப்புறம் எவனும் போராட்டம் நடத்துவது மட்டும் இல்ல "ஈழ" என்ற சொற்பதம் உச்சரிக்கவே நடுங்குவான் .... .....எப்படா இவனுங்கள உள்ள வைக்கிறதுன்னு காரணம் தேடிக்கிட்டு இருக்குறவங்களுக்கு சூப்பரா ஒரு காரணம் குடுக்க போறீங்க .....:"இந்திய இரயானமக்கி துரோகம் விளைவித்தல்" .....
அதுவும் 2011 TN தேர்தல்ல நிக்க போகிற சீமானை , எப்படியாவது மடக்குரத்துக்கு இப்பவே plan போட்டு
இருப்பானுங்க....

mnalin said...

@ சிவம் அமுதசிவம்
சொல்லபட்டதை புரிந்துக் கொள்ள முயலுங்கள் இல்லாவிடின் வர தேவை இல்லை சிமான் அவர்கள் செய்வது தவறோ, தேவையில்லை என்று சொல்லவில்லை சொல்லபட்டது "இலங்கையில் நின்று பார் உனக்கு சீமானின் போராட்டங்கள் மேலோட்டமானவை என்பது புரியும். " மற்றது கருத்துக்கள் வேறுபடலாம் அதற்காக இந்ததளத்தை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. பெயரை பார் , முக்கை பார், பல்லை பார்...... என்று சும்மா சீன் போடதிங்கோ !!! இதிலிருந்து நீங்கள் வெறும் சப்பகட்டு கட்டுகின்றிங்க

@ விடுத‌லைவீரா
துரோகி பதத்தை பயன்படுத்தியது தவறு மேலே தமிழ் நாட்டு மக்களின் பங்களிப்பையும் ஆதரவு குரலையும் மறந்து விட்டு எழுதவில்லை . நீங்கள் பிரச்னையை பற்றி பேசுறிங்க ஆனால்........ பிரச்சனையோடு வாழ்பவர்கள் இங்கு . trailer பாத்து முழுக்கதையும் சொல்லமுடியாது தானே !!!!


எப்பூடி- சகபதிவர்

அ.ஜீவதர்ஷன் said...

admin

//நாகரிகத்தைப் பற்றிக் கதைப்பதற்கும் ஒரு நாகரிகம் வேணும் நண்பரே.//

உண்மைதான் , ஆனால் இனத்துரோகி என்னும் வார்த்தையை நீங்கள் யாராவது ஈழத்தமிழரிடம் பயன்படுத்திப் பாருங்கள், அப்போது உங்களுக்கு நாகரிகம் என்றால் என்ன என்பது தெரியும். அது தவிர நான் பயன்படுத்திய கடினமான சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளேன். அந்த பின்னூட்டத்தை நீக்கினால் அது களவு செய்வது போன்றது, அதனால்தான் நீக்கவில்லை. மீண்டும் சொல்கிறேன் நான் பயன்படுத்திய வார்த்தைகளும் அகிறினை பதமும் தவறானவையே. ஆனால் துரோகிகள் என்ற வார்த்தை அவற்றைவிட வலிமையானது.துரோகி என்பது தமிழில் உள்ள ஒரு சாதாரண வார்த்தை இல்லை, அதுவும் குறிப்பாக கடந்த 25 வருட போராட்டகாலத்தில் சொந்த மண்ணிலேயே போராட்டம் இடம்பெற்ற இடங்களில் அனைத்து இன்னல்களையும் அனுபவித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ போராட்டத்துடன் வாழ்ந்தவனை பார்த்து இனத்துரோகி என்று மேலோட்டமாக கூறினால்அப்போது ஏற்ப்படும் வலியை நீங்கள் உணர மாட்டீர்கள்.

prabha said...
This comment has been removed by a blog administrator.
prabha said...
This comment has been removed by a blog administrator.
அ.ஜீவதர்ஷன் said...

@ chosenone

நான் சீமானை சந்தேகப்படவில்லை , ஆனால் சீமான் குறைந்தபட்சம் உலக தமிழாராட்சி மகாநாட்டையாவது நிறுத்துவாரென்று நம்பி ஏமார்ந்ததன் எதிரொலிதான் இந்த பதிவு. நான்காம் உலக தமிழாராட்சி மகாநாட்டில் இடம்பெற்ற வன்முறையில் பலியான 14 தியாகிகளுக்கும் அமைக்கப்பட்ட நினைவிடம்தான் மேலே படத்தில் உள்ளது. அந்த நினைவாலயத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கில் சிங்கள மக்களின் சுற்றுலா வாகனங்களும் , வெசாக் கூடாரங்களும் நூற்றுக்கணக்கில் இராணுவத்தினரும்தான் கடந்த சில நாட்களாக உள்ளனர்.இது தவறென்று கூறவில்லை ஆனால் எமது மக்கள் முகாம்களில் இருந்து இன்னமும் முற்றாக வெளியேறவில்லை என்பது கவலையான விடயமே. இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த மாநாடு தேவையா? சர்வதேசத்தின் கவனம் இதனால் திசைதிரும்பாதா? இதனை சீமான் எதிர்க்கவில்லை என்பதுதான் எனது குறை. அதுதவிர சீமனில் எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை.

அ.ஜீவதர்ஷன் said...

@ prabha

உங்க வீரம் புரிகிறது, இன்னொருதடவை நான் டென்சனாக மாட்டேன். உங்கள் குலத்தொழிலை வார்த்தைக்கு வார்த்தை பதிவு செய்ததற்கு நன்றிகள். தன்ஜாவூருப்பக்கம் நண்பர்கள் யாரவது வந்தா வந்தா உங்க வீட்டு முகவரியை கொடுத்து விடுகிறேன். நீங்கள் உங்களால் முடிந்த கலைசேவையை செய்யுங்கள். கணிதத்தில் இரண்டு எங்களை சேர்ப்பதற்கு பயன்படுத்தும் சொல்லில் உங்கள் குடும்பத்தினர் நடாத்தும் தொழிலுக்கு வாழ்த்துக்கள்.

சீனு said...

//சீமான்கிட்ட இருந்து நீங்க பதில் எதிர்பார்க்கறதுக்கும், மன்மோகன் வீட்டு முன்னாடி போராட்டம் நடத்துறதுக்கும் ரிசல்ட் ஒன்னுதான்.//

அது...

சோனியா, மன்மோகன், கருணாநிதி ஆகியோர் வீட்டு முன் சென்று போராட்டம் செய்தால் உள்ள தளிடுவாங்க. அமிதாப் வீட்டுக்கு முன் சென்று போராட்டம் செய்தால், ப்ரேக்கிங் நியூஸ் போடுவாங்க. எது பெட்டர்?

//நல்ல கேள்வி ....ஏன் உலகத்தமிழ் மாநாட்டை சீமான் எதிர்க்க வில்லை//

ஏன்? சீமானை குண்டர் சட்டத்துல உள்ள தள்ளலாம்னு பாக்கறீங்களா?

விடுத‌லைவீரா,

//ஒருத்தனுக்கு அடிமையாக வாழ்வதைவிட இறப்பதே மேல். தமிழனுக்கு என்று ஒரு சுயமரியாதை உண்டு.//

:)

Revolt said...

நண்பரே! உங்கள் குற்றச்சாட்டுகள் நியாயம் அற்றவை. சென்னை சென்று பாருங்கள். உங்களுக்கு ஒரு போராட்டத்தை ஆர்பாட்டத்தை நடத்துவதில் உள்ள சிரமங்கள் தெரியும். நாம் தமிழர் கட்சியின் விளக்கங்களை சிறு செய்தியாக கூட ஊடகங்கள் வெளியிடுவதில்லை. சமீபத்தில் ஒரு கல்வி நிறுவனங்களின் அதிபர் தொடங்கி உள்ள IJK கட்சிக்கு தரும் முக்கியத்துவம் கூட நாம் தமிழர் கட்சியின் செய்திகளுக்கு ஊடகங்கள் தருவதில்லை என்பதே உண்மை. போராட்டங்களும் வழிமுறைகளும் தினம் வகுக்க பட்டு கொண்டுதான் இருக்கிறது. அதை நம்மை போன்றவர்கள் தான் பிறர்க்கு பரப்புரை செய்ய வேண்டும். சீமனால் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் நண்பரே? இதே மித மிஞ்சிய நம்பிக்கையை அண்ணன் பிரபாகரன் மேல் வைத்துகொண்டு நாம் சும்மா இருந்ததால் வந்த விளைவு தான் இவ்வளவும். தமிழன் ஒவ்வொருவனும் போராட வேண்டும். முடிந்தால் நீங்கள் உங்கள் தெருவில் கோவை தமிழ் மனத்தை எதிர்த்து பத்து போஸ்டர் ஒட்டுங்கள். உங்களை தொடர்ந்து மேலும் பத்து பேர் ஓட்டுவார்கள். ஓட்டும் போது போலீஸ் கிழிக்க முடியா வண்ணம் பீங்கான் மற்றும் கண்ணாடி தூள்களை பசையாக செய்து போஸ்டர் மேல் தடவவும். கிழிப்பவன் கை கிழியும். அவன் இரத்தம் சிந்தி நாம் நம் எதிர்ப்பை காட்டுவோம். இந்த technique நம்ம அண்ணன் பிரபாகரன் செய்தது தான். நன்றி!

தமிழ் மதுரம் said...

இது ஒரு காத்திரமான பதிவு. நண்பா தங்களின் கேள்விகளில் உள்ள நியாயத் தன்மை ஒரு சில அறிவிலிகளுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். ஆளும் வர்க்கத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டம் நடத்துவதை விடுத்து, சம்பந்தமே இல்லாமல் திரைப்பட விழாவினைப் புறக்கணிக்கும் வகையில் கொதித்தெழுவதென்பது தவறு தான்?’


உறியில் நெய்யிருக்க ஊரெல்லாம் ஏன் அவர்கள் அலைய வேண்டும்? நான் சீமானைக் கேட்கிறன்?

உள் வீட்டுக்குள்ளே பிரச்சினையைக் கேட்டுத் தீர்க்கலாம் தானே? பிறகு ஏன் அடுத்த நாட்டில் நடைபெறும் விழாவைப் புறக்கணிக்க வேண்டும்?

Vijayakanth said...

எம்மவர் நிலை இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும் என்பதைப்போல் அவர்கள் நிலையும் அங்கு சென்று பார்ப்பின் மட்டுமே புரியும்.... ஊடகங்களை நம்பி எங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்கலாமே.....

ராவணனையும் நியாப்படுத்தலாம் ... ராமனையும் குற்றவாளியாக்கலாம்... வாதங்களில் யார் யாரை வேண்டுமானாலும் வெல்லலாம்..... அவரவர்க்கு உள்ள நியாங்களை வைத்து போராடட்டும்.....பாதைகள் வேறாக இருப்பினும் பயணமும் நோக்கமும் ஒன்றென நம்புவோம்.....!

arunmullai said...

ஒருவன்,ஏர்பிடிப்பான்,எருவிடுவான்,விதைப்பான், நீர்பாய்ச்சுவான்,அதுவரை ஒதுங்கி நின்றவன்,
விளைந்தப்பின் அறுவடைசெய்யமட்டும்
அரிவாளும் சாக்குமாய் வருவதுபோல்தான்
சீமானைக் குறைசொல்பவர்கள்.

எப்பூடி.. said...

Revolt

//சென்னை சென்று பாருங்கள். உங்களுக்கு ஒரு போராட்டத்தை ஆர்பாட்டத்தை நடத்துவதில் உள்ள சிரமங்கள் தெரியும். //

உங்கள் வருகைக்கு நன்றி, உண்மைதான் போராட்டங்கள் நடாத்துவது தமிழகத்தில் எவ்வளவு கடினம் என்பது புரிகிறது, ஆனால் இலகுவாக நடிகர்கள் வீட்டின்முன் நின்று போராட்டம் நடாத்தகூடியதாக இருப்பதால் இவர்கள் அடிக்கடி நடிகர்கள் வீட்டின் முன் நின்று போட்டாட்டம் நடாத்தி சுய விளம்பரம் தேடுகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.

........................................

@ கமல்

@ சீனு

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

.................................................

Vijayakanth

//ராவணனையும் நியாப்படுத்தலாம் ... ராமனையும் குற்றவாளியாக்கலாம்... வாதங்களில் யார் யாரை வேண்டுமானாலும் வெல்லலாம்..... அவரவர்க்கு உள்ள நியாங்களை வைத்து போராடட்டும்.....பாதைகள் வேறாக இருப்பினும் பயணமும் நோக்கமும் ஒன்றென நம்புவோம்.....!//

உங்கள் பொறுப்பான கருத்துக்கு நன்றிகள்.
.............................................

arunmullai
//ஒருவன்,ஏர்பிடிப்பான்,எருவிடுவான்,விதைப்பான், நீர்பாய்ச்சுவான்,அதுவரை ஒதுங்கி நின்றவன்,
விளைந்தப்பின் அறுவடைசெய்யமட்டும்
அரிவாளும் சாக்குமாய் வருவதுபோல்தான்
சீமானைக் குறைசொல்பவர்கள்.//

உங்கள் காமடியை நன்கு ரசித்தேன்

//ஒருவன்,ஏர்பிடிப்பான்,எருவிடுவான்,விதைப்பான், நீர்பாய்ச்சுவான்,அதுவரை ஒதுங்கி நின்றவன்,
விளைந்தப்பின் அறுவடைசெய்யமட்டும்
அரிவாளும் சாக்குமாய் வருவதுபோல்தான்//

இதையே சீமானிடமும் சொல்லுங்கள்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)