Wednesday, March 10, 2010

தமிழ் கட்சிகளும் அடுத்த தலைமையும்....ஆரம்பகாலத்தில் (செல்வநாயகத்தின்) தமிழரசுக்கட்சியாகவும் (G.G .பொன்னம்பலத்தின்) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியாகவும் பிளவுபட்டிருந்த தமிழர்களின் ஓட்டுக்கள் பின்னர் இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழர் விடுதலை கூட்டணி என்று ஒன்றை உருவாக்கியபோது ஒன்று சேர்க்கப்பட்டது. பின்னர் தமிழ் விடுதலை இயக்கங்களின் அரசியல்பாதை திரும்பலுக்கு பின்னர் தமிழ் மக்களின் ஓட்டுக்கள் நாலாபுறமும் திருப்பப்பட்டன, ஆனாலும் தமிழர் விடுதலை கூட்டணியே பலமானதாக இருந்து வந்தது. கடந்த 2004 பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியுடன் தலைமையின் மீதான நம்பிக்கை இன்மையால் அதிகமான தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் (கட்சித்தலைவர் ஆனந்த சங்கரியை விடுத்து மீதி அனைவரும் ) தத்தமது பழைய கட்சிகளுக்கே சென்றனர் (தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கரஸ் )பின்னர் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கரஸ் மற்றும் EPRLF கட்சியின் ஒரு பிரிவான சுரேஷ் பிரேமச்சந்திரன் (இன்றைய தமிழ் கூட்டமைப்பின் பேச்சாளர்) பிரிவினரும் ஸ்ரீகாந்தா தலைமையிலான TELO அமைப்பினரும் இணைந்து உருவாக்கியதே சென்ற ஜனாதிபதி தேர்தல் வரையில் ஒற்றுமையாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு. ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து TELO வின் சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தாவும் தமிழ் காங்கிரஸ்காரர்களும் பிரிந்து தனித்து போட்டியிடுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு சென்ற தேர்தலில் யாழ்மக்களால் அதிகளவு ஓட்டுப்போட்டு (?) நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட பல்கலைகழக முன்னாள் மாணவன் கஜேந்திரன் இந்ததடவை தமிழ் காங்கிரசில் போட்டியிடுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சித்தலைவர் விநாயகமூர்த்தி தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக தலமைபதவியை உதறிவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார், இப்போது இந்த முடிவை எடுக்காவிட்டால் தான் தமிழின துரோகியாகிவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


இப்படி ஒற்றுமையாக இருந்திருந்தால்? இனியாவது இருந்தால் ?


தமிழ் தேசிய கூட்டமைப்பு, EPDP (பொதுமக்கள் ஐக்கிய முன்னணி ),EPRLF வரதர்அணி,சிவாஜிலிங்கத்தின் இடதுசாரி கூட்டணி , PLOTE , தமிழர் விடுதலை கூட்டணி ,மகேஸ்வரன் குடும்பம்  (ஐக்கிய தேசிய கட்சி) , பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் மற்றும் ஏராளமான சுயேட்சைகள் என்று இந்ததடவை இந்ததடவை தேர்தலில் களமிறங்குவதால் தமிழ் மகளின் ஓட்டுக்கள் முன் எப்போதும் இல்லாதவாறு பிரிந்துதான் போகப்போகின்றன. தமிழனின் கடந்த கால ஒற்றுமையற்ற நிலைக்கு கிடைத்த பரிசுதான் இன்றைய நிலைமை, ஆனால் இன்று தமிழினம் அன்றிலும் பாக்க இன்னமும் பலமடங்கு பிளவுபட்டு நிற்கிறது(நிறுத்தப்பட்டிருக்கிறது).இந்த நிலை மாறினால் அனைத்தும் கிடைக்கும் இல்லையேல் 13 ++ அல்ல 13 --- கூட கிடைக்காது. சரியோ தவறோ இன்மேலும் அனைத்து தமிழ் கட்சிகளும் பழசை மறந்தோ மன்னித்தோ ஒன்று சேர்ந்தாலன்றி இலங்கை தமிழருக்கு ஒருபோதும் நிலையான தீர்வு கிடைக்க போவதில்லை.அடுத்து இன்றைய தினத்தில் இலங்கையின் தமிழ் கட்சிகளின் மிகப்பெரும் கவலைக்கிடமான விடயம் அடுத்த தலைவர் யார்? என்பதும், இளம் தலைமுறையினரில் ஓரளவேனும் அனுபவமுள்ள அரசியல்வாதிகள் யாரும் இல்லாமையுமே. அரசியல் தெரியாத கஜேந்திரனையும் தமிழர் பிரதேசங்களே சரியாக தெரியாத கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் விடுத்தால் அனைத்து தமிழ் கட்சிகளும் தற்போது அறிவித்துள்ள வேட்பாளர்களின் பெயர்களிலும் சொல்லிக்கொள்ளும்படியாக இளைஞர்கள் யாரும் அங்கம் வகிக்கவில்லை. அடுத்து எந்த கட்சியிலும் இரண்டாம் நிலை தலைவர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.தந்தை செல்வாவிற்கு பின்னர் அதிமேதகு அரசியல் தலைமை தமிழர்களுக்கு வாய்க்கவில்லை என்பது ஒரு புறமிருக்க இப்போது டக்ளசுக்கு பின்னர்  EPDP இலும் , சித்தார்த்தருக்கு பின்னர் PLOTE இலும், EPRLF  இல் சுரேஷிற்கு பின்னரும் வரதருக்கு (வரதர் அணி )பின்னரும் , TELO விலும் அடுத்த தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. அதேபோல தமிழரசுகட்சியில் சம்பந்தர், சேனாதிராஜா தவிர பழையவர்கள் யாருமில்லை. அதுதவிர பெயர் சொல்லும் அளவுக்கு இளைஞர்களும் யாரும் இல்லை(ரவிராஜ் இருந்திருந்தால்?) என்பதால் முக்கியமாக தமிழரசு கட்சியினர் தமது இளைஞர் அணியையும் எதிர்கால தலைமைகளையும் அடையாளம் காணவேண்டிய நேரமாக இது இருக்கிறது. தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியினர் எப்படியும் ஒருநாள் நிச்சயம் தமிழரசுக்கட்சியில் இணைவார்கள் என்பது உறுதி என்பதால் அவர்களைபற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை.

நன்றி

8 வாசகர் எண்ணங்கள்:

chosenone said...

கனத்த இதயங்களும் , நிறைவேறும் என்ற சமிஞ்ஞைகளே இல்லாத "எதிர்பார்ப்பு துளிகளும்" தவிர என்ன மீதமிரிக்கிறது தமிழருக்கு .......
"இதுவும் கடந்துபோகும் "....

வேலூர் ராஜா said...

நன்றி தல, எங்களுக்கும் ஈழத்தோட நெலய புரிய வச்சதுக்கு.

அ.ஜீவதர்ஷன் said...

chosenone

//கனத்த இதயங்களும் , நிறைவேறும் என்ற சமிஞ்ஞைகளே இல்லாத "எதிர்பார்ப்பு துளிகளும்" தவிர என்ன மீதமிரிக்கிறது தமிழருக்கு .......
"இதுவும் கடந்துபோகும் "....//

விதி வலியது...

..........................................

வேலூர் ராஜா

//நன்றி தல, எங்களுக்கும் ஈழத்தோட நெலய புரிய வச்சதுக்கு.//


நன்றி

தங்க முகுந்தன் said...

ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸிலிருந்து தமிழரசுக் கட்சி ஏன் பிரிந்தது என்பதைக் குறிப்பிடத் தவறி விட்டீர்கள்.

//பின்னர் தமிழ் விடுதலை இயக்கங்களின் அரசியல்பாதை திரும்பலுக்கப் பின்னர்// .. என ஒரு வரியில் மிக சுலபமாக சொல்லிவிட்டடீர். இங்கு எத்தனை வேதனையான சம்பவங்கள் இருக்கிறது எனத் தெரியுமா?

//தமிழர் விடுதலை கூட்டணியுடன் தலைமையின் மீதான நம்பிக்கை இன்மையால் அதிகமான தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் (கட்சித்தலைவர் ஆனந்த சங்கரியை விடுத்து மீதி அனைவரும் ) தத்தமது பழைய கட்சிகளுக்கே சென்றனர் (தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கரஸ் )//

இந்த விடயம் எதற்காக ஏற்பட்டது என்பதையும் தெரிவிக்க மறுத்துவிட்டீர்.

//அனைத்து தமிழ் கட்சிகளும் பழசை மறந்தோ மன்னித்தோ ஒன்று சேர்ந்தாலன்றி இலங்கை தமிழருக்கு ஒருபோதும் நிலையான தீர்வு கிடைக்க போவதில்லை.//

22 பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்திருந்து கடந்த 6 வருடங்கள் என்ன பண்ணிக் கிழித்தவர்கள் என்று ஒரு அட்டவணை போடலாமே!

//தந்தை செல்வாவிற்கு பின்னர் அதிமேதகு அரசியல் தலைமை தமிழர்களுக்கு வாய்க்கவில்லை // - தமிழரசியல் ஒழுங்காகப் படித்தால் நல்லது. பல தலைவர்களைக் கொன்றுவிட்டு புதிய தலைவர்கள் இல்லை என்று ஓலமிடுவது தெரிந்துதான் தந்தை அப்படிச் சொன்னாரோ?

//தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியினர் எப்படியும் ஒருநாள் நிச்சயம் தமிழரசுக்கட்சியில் இணைவார்கள் என்பது உறுதி //
எப்படி இந்த மக்களை நட்டாற்றில் அம்போ என்று விட்டதை மறந்து விடலாமா?

ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்!

அ.ஜீவதர்ஷன் said...

தங்க முகுந்தன்

//ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸிலிருந்து தமிழரசுக் கட்சி ஏன் பிரிந்தது என்பதைக் குறிப்பிடத் தவறி விட்டீர்கள்.//

உண்மைதான், G.G.பொன்னம்பலம் தலைமையிலும் செல்வா தலைமையிலும் இரு பிரிவாக இருந்ததை குறிக்கவே எழுதியதால் ஆரம்பகாலத்தை எழுதவில்லை , விரிவான பதிவொன்றில் அதனை குறிப்பிடலாம் . இருந்தாலும் ஆரம்ப தமிழ் கட்சியான தமிழ் காங்கிரஸ் வடக்கில் மட்டுமே போட்டியிட்டது , தமிழர் தாயகமான வடக்கு , கிழக்கு இரண்டிலும் முதல்முதலாகதமிழ் கட்சியொன்று போட்டியிட ஆரம்பித்தது செல்வாவின் தமிழரசு கட்சியிலேயே.


//என ஒரு வரியில் மிக சுலபமாக சொல்லிவிட்டடீர். இங்கு எத்தனை வேதனையான சம்பவங்கள் இருக்கிறது எனத் தெரியுமா?//

இதைபற்றி பேசப்போனால் ஒரு பதிவு போதுமா? தமிழ் இயக்கங்களினது (அனைத்தினதும்) துரோகங்களும், ஒற்றுமையின்மையும் , பழிவாங்கல்களும், பதவி ஆசையும் , பணத்தாசையும் , தலைமை வெறியும்தான் இன்றைய தமிழர்களின் இந்த நிலைக்கு காரணம் என்பதை விளக்கினால் அனைத்து தமிழ் இயக்கங்களும், கட்சிகளும் எம்மை துரோகி என்றே கூறுவார்கள்.

//இந்த விடயம் எதற்காக ஏற்பட்டது என்பதையும் தெரிவிக்க மறுத்துவிட்டீர்.//

இதனை விபரமாக கூற யாரால் முடியும் சொல்லுங்கள்? அப்படி சொன்னால் யாராவது ஏற்பார்களா?

//22 பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்திருந்து கடந்த 6 வருடங்கள் என்ன பண்ணிக் கிழித்தவர்கள் என்று ஒரு அட்டவணை போடலாமே!//

இந்த விடயத்தில் உங்களுடன் மாற்றுக்கருத்து எனக்குண்டு, உயிர்பயம் யாருக்கும் உண்டு அதையும் தாண்டி ரவிராஜ், ஜோசப் ஆகியோர் தங்களது கருத்து யுத்தத்தால் தங்கள் உயிரையும் இழந்தவர்கள் என்பதை மறக்கக்கூடாது. அது தவிர இன்றைய நிலையில் இவர்களை நம்பித்தான் ஆகவேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கு வந்துள்ளது. இவர்கள் வென்றவுடன் வெளிநாடுகளில்தானே போய் பதுங்குகிறார்கள் என்பவனும் தனது வாக்கை இவர்களுக்கே செலுத்தவேண்டிய திணிக்கப்பட்ட சூழ்நிலை இன்று இருப்பதென்பது மறுக்கப்பட முடியாத உண்மை

//- தமிழரசியல் ஒழுங்காகப் படித்தால் நல்லது. பல தலைவர்களைக் கொன்றுவிட்டு புதிய தலைவர்கள் இல்லை என்று ஓலமிடுவது தெரிந்துதான் தந்தை அப்படிச் சொன்னாரோ?//

மீண்டும் கூறுகிறேன் past is past , இதை பற்றி பேசி எதுகும் ஆகப்போவதில்லை, இவை எமது இனத்தின் வரலாற்றுப் பிழைகள், பிழைகளை பற்றி பேசுவது வெறுவாய் மெல்வதற்கு சமம், அதனால்தான் இனியாவது தமிழ் தலைமைகள் அனைத்தம் (பெரிசு முதல் சிரிசுவரை ) ஒருகுடையின் கீழ் இணையவேண்டும் என்று சொல்கிறேன் (இது கூட வெறுவாய் மெல்லல்தான்)

//எப்படி இந்த மக்களை நட்டாற்றில் அம்போ என்று விட்டதை மறந்து விடலாமா?//

மீண்டும் சொல்கிறேன் "past is past " , அதேபோல இத்தனையும் மீண்டும் சொல்கிறேன் "இன்றைய நிலையில் இவர்களை நம்பித்தான் ஆகவேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கு"

//ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்!//

நீங்க வேற , யாரவது இது சம்பந்தமா கலந்துரையாட வரமாட்டாங்களா என்று இருக்கையில் உங்கள் வருகையும் பின்னூட்டமும் சில விளக்கங்களை என்னை கொடுக்க உதவியது, நன்றி.

இதனால் என்னை நீங்ககள் தமிழ் கூட்டமைப்பின் ஆதரவாளன் என்று நினைத்து விடாதீர்கள், எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை முதல் முதலாவதாக தவறவிட்ட சேர்.பொன். ராமநாதன் முதல் இன்று இருக்கும் நண்டு சுண்டு தலைவர்கள் வரை இலங்கையின் தமிழ் தலைமைகள் யாரையும் பிடிக்காது, செல்வா மட்டும் விதிவிலக்கு. ஆனால்.......... இன்றைய தமிழர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தமிழ் கூட்டமைப்புத்தான் என்பதுஎனது கருத்து.

தங்க முகுந்தன் said...

//தமிழ் தலைமைகள் யாரையும் பிடிக்காது. செல்வா மட்டும் விதிவிலக்கு//

நானும் செல்வாவை நேரில் பார்த்திருக்கிறன்! எனது அரசியல் குரு அவரே!

Kandumany Veluppillai Rudra said...

உடை கோவணம் உண்டு,உறங்கப் புறந் திண்ணை யுண்டு உணவிங்கு
அடைக்காய் இலையுண்டு அருந்தத் தண்ணீர் உண்டு,அருந்துணைக்கே,
விடையேறும் ஈசர் திரு நாமம் உண்டு,இந்த மேதியினில்
வட கோடு உயர்ந்தென்ன, தென் கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?

அ.ஜீவதர்ஷன் said...

உருத்திரா

//உடை கோவணம் உண்டு,உறங்கப் புறந் திண்ணை யுண்டு உணவிங்கு அடைக்காய் இலையுண்டு அருந்தத் தண்ணீர் உண்டு,அருந்துணைக்கே, விடையேறும் ஈசர் திரு நாமம் உண்டு,இந்த மேதியினில் வட கோடு உயர்ந்தென்ன, தென் கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?//

உங்களுக்கு நின்மதி இருக்கா சாமி?

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)