Monday, February 22, 2010

கிரிக்கெட் தொடர் பதிவுக்கு முன்னோட்டம்...

என்னை கிரிக்கெட் தொடர்பதிவு எழுத அழைத்த எட்வினுக்கு (தமிழ் எட்வின் ) முதற்கண் நன்றிகள்.இந்த பதிவை எழுதுவதற்கு முன்னால் கிரிக்கெட்டுக்கும் எனக்குமான உறவு எப்படி இருந்தது, இருக்கிறது என்பதை ஞாபகபதிவாக எழுதலாமென்று நினைக்கிறேன்.

எனக்கு இப்போது கிரிக்கெட்மீது உள்ள ஈடுபாடு ஆரம்பகாலத்தில் இருந்ததை விட பல மடங்கு குறைவடைந்து விட்டது, கிரிக்கெட் என் வாழ்வில் என்ன பங்கு வகித்ததென்பதை என்னால் எழுத்தில் நிச்சயம் சொல்லமுடியாது,இருந்தாலும் முடிந்தவரை உங்களுக்காக.


இப்படியும் விளையாடலாம்
 
கிரிக்கெட் சிலருக்கு ஒரு 'வேதம்' என்று சொல்லுவார்கள் என்னை பொறுத்தவரை கிரிக்கெட் அதையும் தாண்டி என்னை பூரணமாக ஆட்கொண்டிருந்தது. காலை 3 மணிக்கு நியூசிலாந்தில் ஆரம்பிக்கும் போட்டிகளில் ஆரம்பித்து இரவு 2 மணிக்கு மேற்கிந்தியாவில் நிறைவடையும் போட்டிவரை 23 மணி நேரம் கிரிக்கட்டுடன் இருந்த நாட்கள் அவை. இதற்கிடையில் பாடசாலை கிரிக்கெட் பயிற்சி (வாரம் 2 நாள் போட்டிகள் ) , உள்ளூரில் மென்பந்து கிரிக்கெட் போட்டி , வீட்டுக்கு பக்கத்து வளவுக்குள் one jump out game , மிகுதி நேரத்தில் கிரிக்கெட் அரட்டை என எமக்கு வேறெந்த நினைப்புமே இருந்ததில்லை. நாம் என்கிறேன் என்று பார்க்கிறீர்களா? நிச்சயமாக நான் மட்டுமல்ல, எனது தம்பி (எப்பூடியில் என்கூட சேர்ந்து பதிவு எழுதுபவர் ) மற்றும் மூன்று முக்கியமான 'முன்னாள்' நண்பர்களும் (பெயர் குறிப்பிட வேண்டாம் என்று நினைக்கின்றேன்) இதர சில நண்பர்களும்தான் இந்த 'நம்மில் ' அடங்குவார்கள்.


இலங்கை அணியும் நானும் 
எங்களுக்கு இலங்கை எவ்வளவு பிடிக்குமோ அதேபோல இந்தியாவை அந்தளவிற்கு பிடிக்காது, எங்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை. பள்ளிகூடத்தில் இலங்கை , இந்தியா ரசிகர்கள் என இரு பிரிவிருக்கும், இவர்களில் இலங்கை ரசிகர்கள் அனைவருக்கும் இந்தியா எதிர் , அதேபோல இந்தியா ரசிகர்களுக்கு இலங்கை எதிர். இதனால் இலங்கை வென்றால் மறுநாள் இறுமாப்போடு இந்திய ரசிகர்களை ஒருவழிபண்ண தேடும் நாம் இலங்கை தோற்றுவிட்டால் அதை எப்படி கதையால் வெட்டுவது என்பதற்கான காரணங்களுடன்தான் பள்ளிக்கூடமே போவது வழக்கம்.உண்மையை சொல்வதென்றால் அன்று எனக்கு இலங்கை அணிக்கு பின்னர்தான் சாப்பாடுகூட(எனக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்ததே சாப்பாடுதான் ) மதியம் ஆரம்பமாகும் போட்டிகள் முடியும்வரை பட்டினியாக இருந்த நாட்கள் அதிகம், இலங்கை வென்றாலோ இந்தியா தோற்றாலோ போட்டி முடிந்தவுடன் பசி வயிற்றை கிள்ளும், இல்லாவிட்டால் அம்மாவிடம் கூட எரிந்துவிழுந்த நாட்கள் அவை.


பலாலி இராணுவத்தால்தான் யாழ்ப்பாணத்திற்கு கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்படும் (கேபிள் லைன் இல்லாததால் அனைத்து தொலைகாட்சிகளையும் தமது ரிசீவரில் பெற்று மீள எமக்கு ஒளிபரப்புவார்கள்) இதனால் espn , star spots என்பன எமக்கு இலவசமாக கிடைத்தது. ஆனால் இது நிலைக்கவில்லை, 2000 ஆம் ஆண்டு டாக்காவில் இடம்பெற்ற ஆசியகிண்ண போட்டிகளின்போது இலங்கை இந்திய அணிகளுக்கிடயிலான் போட்டியில் சனத் 96 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தபோது ஒளிபரப்பு தடைப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகள் (சண்டையில்) நெருங்கிக்கொண்டிருந்ததனால் மின்சாரம் இல்லாமல் இருந்தது, பல்கலைகழக விடுதியிலேயே (ஒரு அண்ணை அழைத்துப் போயிருந்தார் ) இந்த ஆட்டத்தை பார்த்தேன். அன்று தடைப்பட்ட ஒளிபரப்பு ஒரேயடியாக தடைப்பட்டது தெரியாமல் இறுதிப்போட்டியை பார்ப்பதர்கால(இலங்கை, பாகிஸ்தான் ) அராலியில் இருந்து திருநெல்வேலிவரை (15 km) எதிர்காற்றில் சைக்கிளில் மின்பிறப்பாக்கியை கட்டி ஓடிவந்து போட்டியைகான காத்திருந்தால் கிடைத்தது ஏமாற்றமே.


பின்னர் இணையத்திலிருந்து போட்டியை இராணுவம் ஒளிபரப்பியது(இலங்கை அலைவரிசைகளில் வரும் போட்டிகள் மட்டும் ), அது ஒவ்வொரு frame ஆகத்தான் ஒளிபரப்பாகும், இதனால் பந்து வீசும்போது ஒரு frame வந்தால் அடுத்த frame batsman விளையாடிய பின்னர்தான் வரும், கடுப்பை கிளப்பினாலும் முழு டெஸ்ட் போட்டிகளையும் விடாமல் பார்த்தநாட்கள் அவை. போட்டிகள் டூடடர்சனில் ஒளிபரப்பப்பட்டால் (இந்தியா , சாஜா அல்லது இந்தியா விளையாடும் ஆசியாவில் நடைபெறும் போட்டிகள் ) உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பின்னர் இணைய ஒளிபரப்பும் தடைப்பட போட்டிகளைகாணும் வாய்ப்பே இல்லாமல்போனது. அப்போது ஆரம்பித்ததுதான் நேர்முகவர்ணணை கேட்கும் பழக்கம். கிரீடாபிகாசவில் இலங்கை விளையாடும் அனைத்து போட்டிகளின் நேர்முகவர்ணணையும் இடம்பெறும், ஆனால் யாழ்ப்பாணத்திற்கு தெளிவிருக்காது, இதனால் ஒரு வேப்பமரத்தில் அன்ரனாவை செருகி கதிரையின் மீது ஏறி நின்று (வீதியால் போகிறவர்களின் ஏளனத்திற்கும் ஆளாகி ) மணிக்கணக்கில் வர்ணனையை கேட்ட காலங்கள் அவை.

இப்படியும் சிலகாலம் 

கொழும்பில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசைகள் யாழ்ப்பாணத்தில் தெளிவிருக்காது, இருந்தாலும் பத்து நிமிடங்கள் காத்திருந்து மூன்று வினாடிகள் போட்டியை பார்க்குமளவிற்கு பொறுமையும் வெறித்தனமும் அன்றிருந்தது. போட்டியை யாழ்ப்பாணத்திற்கு ஒளிபரப்பும் இராணுவத்திற்கும், லங்காஸ்ரீ தொலைக்காட்சிக்கும், அரசியல்வாதிகளுக்கும் (டக்ளஸ், மகேஸ்வரன்)போட்டிகளை ஒளிபரப்பும்படி கோரி ஆயிரம் கையெழுத்திட்ட (900 திற்கு மேல் கள்ள கையெழுத்து )கடிதங்களை அனுப்பியிருக்கின்றோம், இதில் உங்களுக்கு நம்பகத்தன்மை இல்லை என்றால் 2001 ஆம் ஆண்டு st/johns college இல் கல்வி பயின்ற கிரிக்கெட் ஆர்வமுள்ள முன்னாள் மாணவர்களை கேட்கலாம். இப்படி எனக்குள் கலந்த கிரிக்கற் எப்படி இன்று என்னை விட்டு விலகிப்போனதென்று ஆச்சரியமாக உள்ளது.

அந்த நாள் நினைவுகள் .......

இதற்கு காரணம் நானும் எனது 'முன்னாள்' நண்பர்களும்தான், ஆரம்பத்தில் சுமூகமகாபோன எமது பழக்கம் பின்னர் போட்டியாக மாறியது. ஒவ்வொரு அணிக்குள்ளும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவரை பிடிக்க ஆரம்பித்தது, யாருக்கு கிரிக்கெட் அதிகம் தெரியும் என்ற போட்டியும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகியது, இதனால் நாளடைவில் ஒருவருக்கு பிடித்ததை மற்றவர்கள் வெறுக்க ஆரம்பித்தோம், இதனால் ஒரு அணிக்குள் சிலரை பிடித்தும் சிலரை பிடிக்காமலும் போக ஆரம்பித்தது. நாளடைவில் ஒரு மனநோயாளியைப்போல அது என்னை மாற்றிவிட்டது, எமக்கு பிடித்தவர்கள் பிரகாசிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியைவிட பிடிக்காதவர் சோபிக்க தவறினால் ஏற்படும் மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. பிடிக்காதவர் நன்கு விளையாடினால் உடனே அந்த வீரரின் ஆதரவாளரின்( நண்பரின் ) மீது அளவு கடந்த எரிச்சல் வர ஆரம்பித்தது.

இப்படி தான்  நண்பர்களுடன்  

ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்ட கிரிக்கெட் பின்னர் சண்டையாக மாறியது, சினிமா, football ,tennis என அனைத்திலும் இந்த எதிர்ப்பு வளர்ந்தது, ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்ககூடாது என்பது எழுதாத விதியாக மாறியது. தினமும் 5 மணித்தியலத்திற்குமேல் ஒன்றாக இருந்தவர்கள் இப்போது இந்த விரிசலால் தொலைபெசிதொடர்பு கூட இல்லாமல் இருக்கின்றோம். நாம் மீண்டும் முன்பிருந்த மாதிரி உண்மையாக ஒளிவுமறைவில்லாமல் இப்போது பேசமுடியாதென்று எமக்கு அனைவருக்கும் தெரியும். ஒருவருடன் ஒருவர் எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் அந்த உரையாடலில் உண்மைத்தன்மை இருக்காது, கடமைக்கு பேசுவது போன்றே இருக்கும், இதற்கு பேசாமல் இருப்பதே மேல் என்று நினைப்பதுண்டு.இந்த உட்பூசலால் கிரிக்கெட் மீதான வெறித்தனம் குறைய ஆரம்பித்தது, இலங்கை அணிக்குள் எமது இரண்டு பிரிவு இருப்பதால் முழுமையாக இலங்கையை இப்போது ரசிக்க முடிவதில்லை, சங்கா எனக்கு பிடிக்காதவர் லிஸ்டிலும் டோனி எனக்கு பிடித்தவர் லிஸ்டிலும் இருந்ததனால் இலங்கையின் வெறித்தனமான் ரசிகனான நான் இன்று இந்தியா ஜெயிக்கவும் இலங்கை தோற்கவும் வேண்டுமென்று போட்டிகளை பார்க்கவேண்டி உள்ளது. நானே எனக்குள் சமாதானமாகி இனி பழசை மறந்து இலங்கைக்கு சப்போர்ட் பண்ணிறது என்று முடிவெடுத்தாலும் சங்ககார அடிக்கும்போது அந்த எண்ணம் தானாக மறைந்து விடுகிறது.இலங்கை தோற்கவேண்டுமென்று நினைக்கும் அளவிற்கு எனக்கு இந்தியாவை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை,இதனால் இன்றைய எனது தெரிவு தென் ஆபிரிக்கா. ஆனால் அன்று கிரிக்கெட் பார்த்த எனக்கும் இன்று கிரிக்கெட் பார்க்கும் எனக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.ம்ம்ம்ம் ........ 
அன்று ஒவ்வொரு இலங்கை அணியின் போட்டியையும் ஒரு பந்துகூட தவறவிடாமல் பார்க்கும் நான் இன்று பல இலங்கையின் போட்டிகளில் ஒரு பந்து கூட பார்த்ததில்லை. எனக்கு மீண்டும் முன்னர்போல வெறித்தனமாக இலங்கைக்கு சப்போர்ட் பண்ணி போட்டிகளை காண விருப்பம்தான், நான் நினைத்தாலும் அது சங்கா , மகேலா இருக்கும் வரை நடக்காது, இன்னும் ஒரு ஐந்து வருடமாவது காத்திருக்க வேண்டும். இப்படி இன்னொரு பிரிவுக்கு இடங்கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன், இனிவரும் காலங்களில் எனக்கு பிடித்த விடயம் என்னோடு பழகும் புதியவைகள் யாருக்காவது பிடிக்கவில்லை என்றாலோ அவர்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்கவில்லை என்றாலோ நிச்சயமாக விவாதிக்கமட்டும் மாட்டேன், ஏனென்றால் நான் சூடு கண்ட பூனை.....

கொஞ்சம் அல்ல ரொம்பவே பதிவு நீண்டுவிட்டது என்பதால் எனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத கிரிக்கெட்டின் தொடர் பதிவை அடுத்த கிரிக்கெட் பதிவில் தருகிறேன்....

6 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

எனக்கு கிரிக்கெட் பிடிக்காது அதற்க்கு முக்கிய காரணம் இந்திய மீடியா கிரிக்கெட் விளையாட்டிற்கு காட்டும் முக்கியதுவம் காரணமாக இந்திய தேசிய விளையாட்டை பற்றி யார்க்கும் தெரியாமல் போனது

இப்போ இந்தியாவின் தேசிய விளையாட்டு எது என்று கேட்டால் கிரிக்கெட் என்று சொல்வார்கள்

வெற்றி said...

கிரிக்கெட் பற்றி பேசினால் என்றுமே மகிழ்ச்சி தான்..நேற்று கூட சச்சின் அடுத்த செஞ்சுரி போடுவது போல் கனவு வந்தது..

உங்கள் நாட்டில் கிரிக்கெட்டுக்கு இந்தியா,இலங்கை ரசிகர்கள் என்று தனியாக இருக்கிறார்களா..இவ்வளவு நாளா யோசிச்சிருக்கேன்..இ.தமிழர்கள் இந்தியா ரசிகர்களா,இலங்க ரசிகர்களா என்று..தெளிவுபடுத்தி விட்டீர்கள் :))

Ramesh said...

இந்த பதிவை படிக்கும் போது ஒரு குறும் படம் பார்த்த அனுபவம் எனக்குள்,

நன்றி,

உங்கள் எழுத்துக்கு ரசிகன்....

அ.ஜீவதர்ஷன் said...

arumbavur

கொக்கியின் சுவாரசிய குறைவே கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்

...................................

வெற்றி

//உங்கள் நாட்டில் கிரிக்கெட்டுக்கு இந்தியா,இலங்கை ரசிகர்கள் என்று தனியாக இருக்கிறார்களா..இவ்வளவு நாளா யோசிச்சிருக்கேன்..இ.தமிழர்கள் இந்தியா ரசிகர்களா,இலங்க ரசிகர்களா என்று..தெளிவுபடுத்தி விட்டீர்கள் :))//


கிட்டத்தட்ட இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இலங்கை தமிழர்களிடத்தில் சமமான ஆதரவே, படித்த வசதியான பேர்வழிகள் அதிகம் இந்தியா அதரவு.

.....................................

Ramesh

//இந்த பதிவை படிக்கும் போது ஒரு குறும் படம் பார்த்த அனுபவம் எனக்குள்,


நன்றி,//


நான்தாங்க நன்றி சொல்லணும் , நன்றி

ம.தி.சுதா said...

சகோதரா, அருமையான ஒரு சேரன் படம் பார்த்தது போல் உள்ளது. இதேபோல் என்னீடமும் பல சுவாரசியமான கதையிருக்கிறது. இதே போட்டியை வன்னியில் காடு மேடெல்லாம் அலைந்து சைக்கிள் மின்பிறப்பாக்கியில் டெஸ்ட் போட்டியையும் சுற்றிப்பார்த்தவன். அதனால் தான் எனக்க பேய்ப்பயம் விட்டுப்போனது. இந்த தொடர் பதிவு பற்றிய விளக்க மொன்றை மின்னஞ்சலிடுவீர்களா?

எப்பூடி.. said...

ம.தி.சுதா

//இந்த தொடர் பதிவு பற்றிய விளக்க மொன்றை மின்னஞ்சலிடுவீர்களா?//

கணணி பழுது காரணமாக பதிலளிக்க முடியவில்லை நிச்சயம் கூறுகிறேன்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)