Sunday, January 31, 2010

வைரமுத்துவிடம் சில சந்தேகங்கள்


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைரமுத்துவின் 'கவிதை தொகுப்பில்' இடம் பிடிக்காததால் இதற்கு முன்னர் நான் அந்த கவிதையை பார்க்கவில்லை. ஆனால் அதை பார்த்த கணத்திலிருந்து சில சந்தேகங்களை வைரமுத்து அவர்களிடம் வசன நடையில் கேட்கவேண்டும் போல் தோன்றியது. அந்த சந்தேகங்களை இந்த பதிவின் மூலமாக வைரமுத்து அவர்களிடம் அல்லது அவரின் தீவிர வெறியர்களிடம் .....

வைரமுத்து அய்யா....


உங்கள் தமிழ்மீது வைத்திருக்கும் மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு சென்றாலும் உங்கள் மீதுள்ள மரியாதை நாளுக்கு நாள் குறைவடைந்து கொண்டே செல்கிறது. கவிஞருக்குரிய மிடுக்கு உங்கள் தோற்றத்தில் இருந்தாலும் உங்கள் நடத்தையில் இல்லைபோல் தெரிகிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்,

1 ) உங்களை கலைஞர் அவைப்புலவர் ஸ்தானத்தில் வைத்திருந்தபோது நீங்கள் ஜெயலிதாவை பாராட்டியதற்காக; உங்கள் இடத்திற்கு புதிதாக பா. விஜயை நியமித்து அவருக்கு 'வித்தாக கவிஞர்' பட்டத்தை கலைஞர் கருணாநிதி வழங்கிய நாளிலிருந்து விட்ட இடத்தை பிடிக்க தாங்கள் கலைஞர் துதிபாடாத இடமில்லை, ஏனென்றால் உங்களுக்கு ஆட்சிபலம்தேவை.

2 ) இளைய கவிஞர்களில் யாராவது ஒருவருடன் நல்லுறவு வைத்துள்ளீர்களா? அல்லது நீங்கள்தான் யாரையாவது புகழ்ந்திருக்கின்றீர்களா? அதற்கு பதிலாக "இருக்கும் கவிஞர்கள் இம்சைகள் போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே" என்ற பாடல் வரிகளை அல்லவா எழுதி   உள்ளீர்கள்

3 ) கண்ணதாசனின் 'கவியரசர்' பட்டத்திற்குமேல் ஒரு பட்டம் வேண்டும் என்பதற்காக 'கவிப்பேரரசு' என அடைமொழி வைத்து உங்கள் தரத்தை குறைத்து கொண்டவர்தானே தாங்கள்?

4 ) இயக்குனர் சரணின் அனைத்து படங்களுக்கும் பாட்டு எழுதுவது நீங்கள்தான் என்பதால் சரண் கேட்டால் எதையும் எழுதிக்கொடுத்து விடுவீர்களா? உங்களுக்கு பணம் தந்தால் யாரை வேண்டுமானாலும் கேவலமாக விமர்சிப்பீர்களா? இல்லாவிட்டால் விஜயை பார்த்து அஜித் "எனக்கொரு நண்பன் என்று இருப்பதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை" என பாடும் கீழ்த்தரமான வரிகளை எழுதியிருப்பீர்களா? இன்று அதே சரணின் 'அசல்' திரைப்படத்தில் 'எம் தந்தை' பாடலில் சிவாஜியை புகழ்ந்து பாட்டெழுதுவதாக கூறி சரணுக்கு பிடிக்காத உங்களின் நண்பன் கமலை காயப்படுத்தும் வகையில் "உன்போல சிலர் இன்று உருவாகலாம், உன்னுடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா?" என சிவாஜியை புகழ்வதுபோல கமலை தாக்கியது எதற்காக? பணத்திற்காகவும் சரணின் அடுத்த திரைப்பட வாய்பிற்க்காகவும்தானே?

இப்படி உங்களிடம் கேட்க பல சந்தேகங்கள் இருந்தாலும் 'இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்' புத்தகத்தில் நீங்கள் ராஜாவிற்கு எழுதிய கவிதையில் இருந்து சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.


 //இசை ஞானியே! , என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை,உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.//

உண்மைதான் யாரையும் நம்பி யாரும் இல்லைதான், ஆனால் இளையராஜா இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்று நினைக்கும்போது எனக்கு எல்லாமே சூனியமாகத்தான் தெரிகிறது. உங்களுக்கு 1981 இல் இளையராஜா 'நிழல்கள்' திரைப்படத்தில் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றால் எப்படி உங்களை வெளிக்கொண்டு வந்திருப்பீர்கள்? சந்திரபோஸ், சங்கர் கணேஷ், 1980 களின் பின்னர் எம்.எஸ்.வி என எப்போதாவது ஒரு படத்தின் பாடல்கள் பிரபல்யமாகும் இசையமைப்பாளர்களின் மூலம் உங்களை நிரூபித்திருக்க முடியுமா?

ரகுமானின் வருகையின் பின்னர் வைரமுத்து அவர்கள் தன்னை நிரூபித்திருப்பார் என்று கூறும் உங்கள் ஆதரவாளர்களுக்கு; ரகுமான் ஆரம்பகாலங்களில் பிரபல்யமான பாடலாசிரியர்களைதான் பயன்படுத்தினார் என்பது தெரியாதென்று நினைக்கிறேன்! அதனால்தான் தனது ஆரம்பகால படங்களுக்கு உங்களையும் 'வாலி அய்யா' அவர்களையும் பயன்படுத்தினார். இளையராஜாவால் நீங்கள் பிரபல்யம் அடையவில்லை என்றால் அன்று ரகுமான் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியிருப்பாரா? இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியுமா? நீங்கள் கேட்கலாம் ராஜாவிற்கு எனது பாடல்கள் பலமில்லையா என்று; உண்மைதான் உங்கள் இருவரது கூட்டணியில் உருவான பாடல்கள் போல் ஒருபோதும் பாடல்கள் அமையாதென்பது எனது கருத்து. ஆனால் நீங்கள் இல்லாவிடாலும் இளையராஜாவிற்கு பாட்டெழுத வாலி, புலமைபித்தன், முத்துலிங்கம் என நிறைய கவிஞர்கள் இருந்தார்கள்; ஆனால் உங்களுக்கு ராஜாவை விட்டால்?

//சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்,நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்,உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்,ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.//

//திரை உலகில் நான் அதிகநேரம் செலவிட்டது உன்னிடம்தான்,மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்//

//உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்,ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்,இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்,என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.//

//நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.//

எதற்காக அந்த வக்கீல் நோட்டீசை அனுப்பினாரென்று நீங்கள் கடைசிவரை கூறவே இல்லை, அதுதவிர உங்களுக்கு இத்தனை நன்மை செய்த இளையராஜா ஒரு காரணமும் இல்லாமலா உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பார்? இளையராஜாவின் குணம் உங்களுக்கு அதுவரை தெரியாதா? அவர் நோட்டிஸ் அனுப்பினாலும் அந்த பிரச்சனையை பேசித் தீர்க்கவேண்டியது தாங்களா? அல்லது இளையராஜாவா? பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியாதுள்ளதே, இறுதியாக அந்த வக்கீல் நோட்டிஸ் என்னவானது என்பதை தயவுசெய்து கூறமுடியுமா?


//உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்,உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்,காரணமே இல்லையே.//

காரணமில்லாமல் கோவப்பட இளையராஜா என்ன மனநலம் பாதிக்கபட்டவாரா? அல்லது சிறு குழந்தையா ? அப்படிஎன்றால்கூட நீங்கள் அவரைவிட்டு விலகியிருக்ககூடாதே? இளையராஜா மீது முழுவதும் குற்றம் சுமத்தும் நீங்கள் இளையராஜாவுக்கு ஒருதீங்கும் செய்யவில்லையா? நீங்கள் அம்புட்டு நல்லவரா?

//நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்,ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.//

இங்குதான் எனக்கு சில சந்தேகங்கள், இளையராஜா அப்படி சொன்னதாகவே இருக்கட்டும் அது உங்களுக்கு எப்படி தெரியும்? கமல் வந்து சொன்னாரா? அப்படியென்றால்றால் கமல் 'புறம்' பேசுபவரா ? ராஜா பேச்சை கேட்டு உங்களுக்கு வரவிருந்த வாய்ப்பை நிறுத்துகிறார் என்றால் கமல்  சொந்தமாக சிந்திக்க மாட்டாதவரா? அல்லது ராஜாவை நம்பித்தான் கமல் இருக்கிறாரா? கமல் ராஜாவின் நண்பன் என்றால்; நண்பன் சொன்னதை வேறொருவரிடம் போய் போட்டுக் கொடுப்பவரா? அல்லது கமல் உங்கள் நண்பன் என்றால்; உங்களுக்கு பிடிக்காதவர் உங்களை  பற்றி சொன்னதை உங்களிடம் சொல்லுமளவிற்கு நாகரிகம் தெரியாதவரா? அதன் பின்னர் தாங்கள் எத்தனை திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளீர்கள்? தொடர்ந்தும் உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை இளையராஜா தடுத்துவிட்டாரா? அல்லது உங்களை நல்லவராக காட்டிக்கொள்ள ராஜாவை வில்லனாக்குகின்றீர்களா?

// நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!,இப்போது சொல்கிறேன்,உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன,ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்,ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.//

இளையராஜாவின் பாசறையில் அம்புகள் மட்டுமே தயாரிகட்டும் , ஆனால் தங்களின் இந்த கவிதையை பார்த்தால் தாங்கள் பேனாவால் 'விஷ அம்பை' ராஜாமீது எய்துள்ளது போலல்லவா தெரிகிறது. விஷ அம்பு எப்படி கேடயமாகும்?


//உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்,உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்,நான் கொதித்தேன், "அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.//

வைரமுத்து அவர்களே உங்கள் வாயால் ராஜாவை சிங்கம் என்று கூறியதற்கு நன்றி, ஆனால் குள்ளநரியான உங்களையும் சிங்கம் என்று கூறுவது சிங்க இனத்துக்கே அவமானமில்லையா? சிங்கம் ஒருபோதும் முதுகில் குத்துவதில்லையாமே? இது உண்மையா?


//நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை,இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.//

நீங்கள் நினைத்தாலும் அவரை வீழ்த்த முடியாது, தமிழ் இருக்கும் வரை அவர் இருப்பார். உங்கள் இயற்தமிழிலும் பார்க்க அவரது இசைத்தமிழுக்கு ஆயுள் அதிகம்.

//நீயும் நானும் சேர வேண்டுமாம்,சில தூய இதயங்கள் சொல்லுகின்றன,உனக்கு ஞாபகமிருக்கிறதா?,‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம், திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன்.,நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்,மழை வந்தது,நின்று விட்டேன்,என்னை நீ பிடித்து விட்டாய்,அப்போது சேர்ந்து விட்டோம்,ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்,இப்போது முடியுமா? இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?//

நீங்கள் வேறுவேறு திசையில் ஓடினாலும் வட்டப்பாதையில் ஓடுவதாக அல்லவா நாம் நினைத்தோம் , ஆனால் நீங்கள் நேர்கோட்டில் ஓடுவது எனக்கு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த கவிதையை படித்த பின்னர்தான் தெரிந்தது, உங்களுக்கு தேவையென்றால் வளைந்து  நெளிந்த பாதையிலும் போகும் நீங்கள் இன்று உங்களுக்கு தேவைப்படாத ராஜாவிற்கு எதிர்த்திசையில் நேர்கோட்டில் ஓடுவதில் ஆச்சரியமில்லை. ஓடுங்கள், நன்றாக ஓடுங்கள்; பணத்துக்காகவும், புகழுக்காகவும், ஜால்றாக்காகவும் கூட இருப்பவர்களையும், நண்பர்களையும் தூக்கி எறிந்துவிட்டு இப்படியே ஓடினால் நீங்கள் மட்டும்தான் கடைசியில் மிஞ்சுவீர்கள்.


ஔவையார், திருவள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதியார், பாரதிதாசன், அண்ணா, கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் என ஒரு பெரும்பட்டியலே உங்கள் தமிழுக்கு முன்னால் இருக்கிறது, ஆனால் இளையராஜாவின் தமிழிசைக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி கண்ணுக்கெட்டியதூரம்வரை யாருமில்லை என்பதை மறவாதீர்கள்.

வைரமுத்துவை விமர்சிக்க உனக்கென்ன தகுதி இருக்கிறது என்பவர்களுக்கான விடை "இளையராஜாவின் ரசிகன் என்கிற தகுதியும், வைரமுத்துவின் தமிழுக்கு   [மட்டும் ] ரசிகன் என்கிற தகுதியும்  போதுமானது  என்பது எனது தாழ்மையான  கருத்து

நன்றி

59 வாசகர் எண்ணங்கள்:

arumbavur said...

வைரமுத்து அவர்களே உங்கள் வாயால் ராஜாவை சிங்கம் என்றதற்கு நன்றி , ஆனால் குள்ளநரியான உங்களையும் சிங்கம் என்று கூறுவது சிங்க இனத்துக்கே அவமானமில்லையா? சிங்கம் ஒருபோதும் முதுகில் குத்துவதில்லையாமே? இது உண்மையா?

வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை

வைரமுத்து பற்றி அனைவருக்கும் தெரிந்ததுதானே
இருந்தாலும் அவர் ஒரு சிறந்து கவிஞர் என்பதில சந்தேகம் இல்லை

Thekkikattan|தெகா said...

:-)) அது.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அலசல் அசத்தல்

வெற்றி said...

இந்த கேள்விகளுக்கெல்லாம் வை.மு பதில் சொல்லுவாரா :)

ஞானப்பழம் said...

நல்ல பகிர்வு நன்றி... கலைஞ்யர்களை அவர்களின் குணங்கள் மூலம் மதிப்பிடுவதை நான் என்றோ விட்டுவிட்டேன்.. ஆனாலும் உங்கள் கூற்றில் நியாயம் உண்டு... இளையராஜாவிற்கு வைரமுத்துவைப்போல் வார்த்தைகளால் தாக்கத் தெரியாததற்கு நீங்கள் ஈடுகட்டி விட்டீர்கள்!

ரெண்டு said...

எப்பொழுது வைரமுத்து கலைஞர் க்கு வால் பிடிக்க ஆரம்பித்தாரோ அன்றே அவர் தனது தனித்தன்மையை இழந்துவிட்டார். இவருக்கும் ரகுமானுக்கும் வராத கருத்து வேறுபாடா. எந்த இசையமைப்பாளர் உடனும் இவர் ஒத்திணங்கி இருந்தது இல்லை.

-ram

sam said...

கொஞ்சம் காரத்தை குறைத்து இருந்தால் இந்த பதிவை கவிஞர் வீட்டுக்கே அஞ்சல் செய்யலாம்.. நியாயமான கேள்விகள் நண்பரே .

ஜீவன்பென்னி said...

:-))

Anbu said...

வைரமுத்து மட்டும் அல்ல இளையராஜா உடன் யாரும் மே
இணக்கமாக இருப்பது இயலாத ஒன்று. வைரமுத்துவின் கவிதை மட்டும் மே ரசிக்க முடியும் இளையராஜாவின் இசையை மட்டுமே ரசிக்க முடியும்

சிங்கக்குட்டி said...

தலைகனம் திறமையை மறைத்து விடும்.

இது ஒருவருக்கு மட்டுமல்ல :-)

அத்திரி said...

SUPERB

அரங்கம் said...

என்றோ எப்படியெல்லாமோ கேட்க நினைத்த கேள்விகள்?
நாகரீகமான வார்த்தைகளால் உங்கள் மூலமாக
இன்று வெளிச்சம் பெறுகிறது!

இளையராஜா நிழல்கள் திரைப்படத்தில் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றால் எப்படி உங்களை வெளிக்கொண்டு வந்திருப்பீர்கள்?

ஔவையார், திருவள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதியார்,பாரதிதாசன், அண்ணா, கலைஞர், பட்டுக்கோட்டை கண்ணதாசன் என ஒரு பெரும்பட்டியலே உங்கள் தமிழுக்கு முன்னால் இருக்கிறது, ஆனால் இளையராஜாவின் தமிழிசைக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி கண்ணுக்கெட்டியதூரம்வரை யாருமில்லை என்பதை மறவாதீர்கள்

கவிப்பேரரசுக்கு சாணியில் தோய்த செருப்பால் அடித்தது போல் இருக்கும்.இந்த பதிவை அவர் கவனத்திற்கு கொண்டு செல்லும் முறைகளை பாருங்கள்.

ஒவ்வொரு வரியையும் சுவைத்தேன் சார்.

"இந்த குளத்தில் ஒன்னுக்கடித்தவர்கள்" என்று அவை ஒரு பாகம் எழுதலாம்.

டிஸ்கி:என் கையில் தற்போது வைரமுத்துவின் "வடுகபட்டி முதல் வால்கா வரை" யும் , செவியில் ராஜாவின் "பழசிராஜா" வும்.

யோ வொய்ஸ் (யோகா) said...

இதே கேள்வியை நான் ”இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்” வாசித்த போது கேட்க நினைத்தது, பல ஆண்டுகளுக்கு பின்னால் இன்று நடந்துள்ளது,

நானும் பள்ளிக்காலத்தில் வைரமுத்துவின் கவிதைகளை ரொம்பவே காதலித்தவன், ஆனால் இன்று அப்படி இல்லை. இதுதான் வாலி போன்ற கவிஞர்களுக்கும், வைரமுத்துவுக்குமான வித்தியாசம்.

சபாஷ் சிறந்த பதிவு

அன்புடன் மலிக்கா said...

சும்மா அதிருதுங்கோஓஓஓஓஓஓஓஓஓ..

வாங்க நம்ம பக்கமும்

mvalarpirai said...

" உங்களை கலைஞர் அவைப்புலவர் ஸ்தானத்தில் வைத்திருந்தபோது நீங்கள் ஜெயலிதாவை பாராட்டியதற்காக உங்கள் இடத்திற்கு புதிதாக பா. விஜயை நியமிக்க அவருக்கு 'வித்தாக கலைஞர் ' பட்டத்தை கலைஞர் கருணாநிதி வழங்கிய நாளிலிருந்து நீங்கள் விட்ட இடத்தை பிடிக்க கலைஞர் துதிபாடாத இடமில்லை, ஏனென்றால் உங்களுக்கு ஆட்சிபலம்தேவை."

இதை யாரு உங்கள் கிட்ட சொன்னா? நீங்களா எதாவது கற்பனை பண்ணிகிட்ட..அதுக்கு கவிஞர் எப்படி பொறுப்பேற்பார்? கலைஞரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவருக்கும் பிடிக்க கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்..அவர் கலைஞர் முதல் அமைச்சராக இருக்கும்போது மட்டும் அவர் கூட இல்லை... இல்லாத போதும், 10 ஆண்டுகள் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போதும் கலைஞர் கூடதான் இருந்தார்.நீங்கள் அப்போது பிறந்தீர்ப்பர்களா என்பது எனக்கு தெரியவில்லை. வேண்டாதவன் பொண்டாட்டிக்கு கைபட்டா குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போல் இருக்கு உங்கள் கேள்வி...

"இளைய கவிஞர்களில் யாராவது ஒருவருடன் நல்லுறவு வைத்துள்ளீர்களா? அல்லது நீங்கள்தான் யாரையாவது புகழ்ந்திருக்கிரிகளா? அதற்கு பதிலாக "இருக்கும் கவிஞர்கள் இம்சைகள் போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே" என்ற பாடல் வரிகளை எழுதி அல்லவா உள்ரிர்"

கவிஞர்களுக்குள் நல்லுறவு கொண்டுள்ள இரண்டு கவிஞர்களை சொல்லுங்கள் பார்போம்.கவிஞர்களுக்கு செருக்கு இருப்பது இயல்பு.பா.விஜயின் ஞாபகங்கள் படத்தின் ஒலி வெளியீடடு விழாவில் கவிஞர் இருந்தார். நீங்கள் கண்ணை மூடி கொண்டு உலகம் இருட்டு என்று சொன்னால் எப்படி ..

"கண்ணதாசனின் 'கவியரசர்' பட்டத்திற்குமேல் ஒரு பட்டம் வேண்டும் என்பதற்காக 'கவிப்பேரரசு' என அடைமொழி வைத்து உங்கள் தரத்தை குறைத்து கொண்டவர்தானே நீங்கள்? "

அதை கொடுத்தது கலைஞர். ஏன் கொடுத்தார் என்பதை கலைஞரே பல மேடைகளிலே சொல்லியிருக்கிறார். உங்களுக்கு ஏன் பொறாமை..?

"எனக்கொரு நண்பன் என்று இருப்பதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை"
இதில் என்ன கீழ்தரம் என்று சற்று விளக்கினால் நல்லாயிருக்கும். கவிஞரின் படைப்பு அவரது புத்தகங்கள். சினிமா அவரது தொழில்..மெட்டுக்கு பாட்டு எழுதுகிறார். அதில் இவரது கருத்தாக நீங்கள் கருதிகொள்ள கூடாது. இவரது படைப்பில் அதாவது புத்தங்களில் பிழை கண்டீர் என்றால் அது உத்ததம். நான் கவிஞர் தவறே செய்யாதர் ஆபாசமா எழுதியதே கிடையாது என்று சொல்லவில்லை. தொழிலில் சில சங்கடங்களை அனுபவித்துதான் ஆகவேண்டும்.அதை அவரே அவரது இன்னொரு தேசியகீதத்தில் சொல்லிருக்கிறார். சமரசம் செய்யாத மனிதர் இத்த உலகத்தில் எவனும் இல்லை உங்களையும் சேர்த்துதான். ...

mvalarpirai said...

''ஆனால் இளைய ராஜா இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்று நினைக்கும்போது எனக்கு எல்லாமே சூனியமாகத்தான் தெரிகிறது '''
அடப்போயா... மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைக்கும். சினிமாவால் கவிஞர் பிரபலமானார்.பணம் சம்பாதித்தார்.ஆனால் அவர் பிறவி படைப்பாளி. 14 வயதில் கவி பாடியவர். நீங்கள இளையாராஜவை போற்றுங்கள் நானும் போற்றுகிறேன்.அதற்காக வைரமுத்துவை இகழ வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பார்த்தால் பாரதிராஜா இல்லாட்டி இளையாராஜா பரதேசியா இருந்திருப்பார் என்கிறீரா? அதுவும் கிடையாது. திறமை உள்ளவனை எவனாலும் தடுக்க முடியாது.பாரதிராஜா ஏன் ரகுமான் கிட்ட போனார்.. என்ற கேள்விக்கு பதில் இருக்குதா?
"எதற்காக அந்த வக்கீல் நோட்டீசை அனுப்பினாரென்று நீங்கள் கடைசிவரை கூறவே இல்லை, அதுதவிர உங்களுக்கு இத்தனை நன்மை செய்த இளையராஜா ஒரு காரணமும் இல்லாமலா உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பார்? "
இந்த காரணம் உங்களுக்கும் தெரியுமா ? எப்படு கவிஞர் மீதுதான் தப்பு இருக்கும் என்று ஊகிக்கிறீர்கள்..ஏன்னா உங்களுக்கு அவரை பிடிக்காது.
"காரணமில்லாமல் கோவப்பட இளையராஜா என்ன மனநலம் பாதிக்கபட்டவாரா? அல்லது சிறு குழந்தையா ?"
இது நல்ல கேள்வி..பாரதிராஜா, மணிரத்னத்துக்கிட்ட போய் கேளுங்க..சொல்வாங்க..
"இளையராஜாவின் பாசறையில் அம்புகள் மட்டுமே தயாரிகட்டும் ,ஆனால் உங்களின் இந்த கவிதையை பார்த்தால் நீங்கள் பேனாவால் 'விஷ அம்பை' ராஜாமீது எய்துள்ளது போலல்லவா தெரிகிறது. விஷ அம்பு எப்படி கேடயமாகும்?"

இதில் விஷ அம்பு என்று எந்த எழுத்தை எந்த பகுதியை குறிப்பீடுகிறீர்கள் ?

"வைரமுத்து அவர்களே உங்கள் வாயால் ராஜாவை சிங்கம் என்றதற்கு நன்றி , ஆனால் குள்ளநரியான உங்களையும் சிங்கம் என்று கூறுவது சிங்க இனத்துக்கே அவமானமில்லையா? சிங்கம் ஒருபோதும் முதுகில் குத்துவதில்லையாமே? இது உண்மையா?"

கவிஞர் யாரை முதுகில் குத்தினான் அதை நீ பார்த்தீர் ? சும்மா எதாவது எழுதனும் எழுத கூடாது.
"நீங்கள் நினைத்தாலும் அவரை வீழ்த்த முடியாது" " இளையராஜாவின் தமிழிசைக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி கண்ணுக்கெட்டியதூரம்வரை யாருமில்லை என்பதை மறவாதீர்கள். "
அதைதான் கவிஞரும் சொல்கிறார்.கவிஞர் எங்கேனும் இளையராஜா திறனற்றவர் என்று சொல்லி இருக்கிறாரா? .நீங்க என்ன துக்ளக்கில் வேலை பார்க்கிறீங்களா ?
வைரமுத்துவிடம் நான் கேட்ட கேள்விக்கு நீ யாரு பதில் சொல்ல என்று கேட்பீர்காளானால் நான் வைரமுத்துவின் தமிழையும் , படைப்புகளையும், வாழ்க்கை பயணத்தையும் (எந்த வித pre-mindset இல்லாமல் ) admire பண்ணும் ஒரு தமிழன்.

Muthu said...

எப்பூடி சூப்பர்

பிரியமுடன் பிரபு said...

அதே சரணின் 'அசல்' திரைப்படத்தில் 'எம் தந்தை' பாடலில் சிவாஜியை புகழ்ந்து பாட்டெழுதுவதாக கூறி சரணுக்கு பிடிக்காத உங்களின் நண்பன் கமலை காயப்படுத்தும் வகையில் "உன்போல சிலர் இன்று உருவாகலாம் , உன்னுடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா? " என சிவாஜியை புகழ்வதுபோல கமலை தாக்கியது எதற்காக பணத்துக்கும் சரணின் அடுத்த படவாய்ப்புக்கும்தானே?


...................


இது எனக்கு புரியல

தவறான புரிதல்

எப்பூடி ... said...

arumbavur

//வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை

வைரமுத்து பற்றி அனைவருக்கும் தெரிந்ததுதானே
இருந்தாலும் அவர் ஒரு சிறந்து கவிஞர் என்பதில சந்தேகம் இல்லை//

உங்கள் கருத்திற்கு நன்றி.

....................................

Thekkikattan|தெகா

// :-)) அது.//

வருகைக்கு


.................................

ஆ.ஞானசேகரன்

//நல்ல அலசல் அசத்தல்//

நன்றி ஞானசேகரன்

.....................................

வெற்றி

//இந்த கேள்விகளுக்கெல்லாம் வை.மு பதில் சொல்லுவாரா :)//

பார்க்கலாம் :)

....................................


ரெண்டு சொன்னது…

//எப்பொழுது வைரமுத்து கலைஞர்க்கு வால் பிடிக்க ஆரம்பித்தாரோ அன்றே அவர் தனது தனித்தன்மையை இழந்துவிட்டார். இவருக்கும் ரகுமானுக்கும் வராத கருத்து வேறுபாடா. எந்த இசையமைப்பாளர் உடனும் இவர் ஒத்திணங்கி இருந்தது இல்லை.//


நிதர்சனமான உண்மை


...................................

sam

//கொஞ்சம் காரத்தை குறைத்து இருந்தால் இந்த பதிவை கவிஞர் வீட்டுக்கே அஞ்சல் செய்யலாம்.. நியாயமான கேள்விகள் நண்பரே .//

ஐயோ வேண்டாம், பின்னர் 'இந்த குட்டையில் மாங்காயால் அடித்தவர்கள்' என்று எனக்கும் எதிர்பாட்டு படித்து விடுவார், ஹி ஹி . உங்கள் வருகைக்கு நன்றி

thumb said...

mvalarpirai கு....

வைரமுத்து எவ்வளவு பெரிய இலக்கியவாதியாக படைப்பாளியாக இருந்தாலும் இந்த கவிதையில் இளையராஜாவை மட்டும் சாடி இருப்பது வைரமுத்து நண்பனுக்கு செய்த துரோகம் இந்த வேலையை மணியோ ,பாரதியரஜவோ ஏன் ரகுமான் !!! செய்யவில்லை என்பது என்னுடைய கருத்து

எப்பூடி ... said...

ஞானப்பழம் சொன்னது…

// இளையராஜாவிற்கு வைரமுத்துவைப்போல் வார்த்தைகளால் தாக்கத் தெரியாததற்கு நீங்கள் ஈடுகட்டி விட்டீர்கள்!//

நீங்களும் கொஞ்சம் ஈடு கட்டுவீங்கேன்னு நினைச்சன், பருவாயில்லை இன்னும் நேரமிருக்கு , ஹி ஹி ஹி

.....................................

ஜீவன்பென்னி

வருகைக்கு நன்றி


..................................

Anbu

//வைரமுத்து மட்டும் அல்ல இளையராஜா உடன் யாரும்மே இணக்கமாக இருப்பது இயலாத ஒன்று. வைரமுத்துவின் கவிதை மட்டும் மே ரசிக்க முடியும் இளையராஜாவின் இசையை மட்டுமே ரசிக்க முடியும்//

அப்படி சொல்ல முடியாது வாலி, பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், சித்திரா, கரிகரன், மனோ, ஜானகி, மலேசியா வாசுதேவன், பாலா, மகேந்திரன், பாசில், s.p.முத்துராமன், பாலு மகேந்திரா என ஒரு பெரிய பட்டியலே இன்னமும் இளையராஜாவுடன் இணக்கமாக இருப்பவர்களே

உங்களுக்கு அவரின் வெளிப்படையான பேச்சு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன், பருவாயில்லை ஒவ்வொருவருக்கும் வேறுவேறு எண்ணங்கள் யுப்பது தவறில்லைதானே.


.................................

சிங்கக்குட்டி

//தலைகனம் திறமையை மறைத்து விடும்.
இது ஒருவருக்கு மட்டுமல்ல :-)//

என்னை பொறுத்தவரையில் 'வித்தை கர்வம்' ஏற்றுக்கொள்ள படகூடியது.

இது ஒருவருக்கு மட்டுமே இருக்கிறதென்று நினைக்கிறேன். :-)

எப்பூடி ... said...

அரங்கம்

//கவிப்பேரரசுக்கு சாணியில் தோய்த செருப்பால் அடித்தது போல் இருக்கும்.இந்த பதிவை அவர் கவனத்திற்கு கொண்டு செல்லும் முறைகளை பாருங்கள்.//

வைரமுத்து பாவம், ஹி ஹி ஹி

//ஒவ்வொரு வரியையும் சுவைத்தேன் சார்.//

நன்றி


//"இந்த குளத்தில் ஒன்னுக்கடித்தவர்கள்" என்று அவை ஒரு பாகம் எழுதலாம்.//

நல்ல சிந்தனை.


டிஸ்கி:என் கையில் தற்போது வைரமுத்துவின் "வடுகபட்டி முதல் வால்கா வரை" யும் , செவியில் ராஜாவின் "பழசிராஜா" வும்.

நம்மாளுதானா நீங்க...


....................................


யோ வொய்ஸ் (யோகா)

//இதே கேள்வியை நான் ”இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்” வாசித்த போது கேட்க நினைத்தது, பல ஆண்டுகளுக்கு பின்னால் இன்று நடந்துள்ளது,//

நன்றி

//நானும் பள்ளிக்காலத்தில் வைரமுத்துவின் கவிதைகளை ரொம்பவே காதலித்தவன், ஆனால் இன்று அப்படி இல்லை. இதுதான் வாலி போன்ற கவிஞர்களுக்கும், வைரமுத்துவுக்குமான வித்தியாசம்.//

சத்தியமான வார்த்தைகள்

//சபாஷ் சிறந்த பதிவு//

மீண்டும் நன்றி , உங்கள் வருகைக்கு நன்றிகள்.

..................................

அன்புடன் மலிக்கா

//சும்மா அதிருதுங்கோஓஓஓஓஓஓஓஓஓ..

வாங்க நம்ம பக்கமும்//

நன்றி, நிச்சயம் வருகிறேன் .

எப்பூடி ... said...

அத்திரி

//SUPERB//

thanks

எப்பூடி ... said...

mvalarpirai



//இதை யாரு உங்கள் கிட்ட சொன்னா? நீங்களா எதாவது கற்பனை பண்ணிகிட்ட..அதுக்கு கவிஞர் எப்படி பொறுப்பேற்பார்? கலைஞரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவருக்கும் பிடிக்க கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.//

எல்லாமே யாரும் சொல்லித்தான் தெரியவேண்டுமென்றில்லை, சில விடயங்களை அவதானித்தாலே தெரியும் , நீங்கள் கவிஞரை நல்லவராகவே பார்க்கும் ஒரு கிணற்று தவளைபோல் இருந்துள்ளீர்கள் போலும், அதனால்தான் இவை உங்களுக்கு தெரியவில்லை.


.//அவர் கலைஞர் முதல் அமைச்சராக இருக்கும்போது மட்டும் அவர் கூட இல்லை... இல்லாத போதும், 10 ஆண்டுகள் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போதும் கலைஞர் கூடதான் இருந்தார்.நீங்கள் அப்போது பிறந்தீர்ப்பர்களா என்பது எனக்கு தெரியவில்லை. //

நல்ல காமடி கவிஞர் சினிமாவில் அறிமுகமாகியதே 81 ஆம் ஆண்டுதான் m.g.r 87 இல் இறந்தால் எப்படி 10 வருடம் கணக்கில் வரும். கலைஞர் கவிஞரை தனது ஜால்ராவாக சேர்த்துக்கொண்டதே 87 க்கு பின்னர்தான்.

மற்றும் நான் அக்காலப்பக்தியில் பிறந்துவிட்டேன் , அப்படி பிறக்காவிட்டால் எழுதக்கூடாதா ? அப்படி என்றால் இன்று மாவீரன் நெப்போலியனை பற்றியோ அல்லதுஅலெக்ஸ்சாண்டரை பற்றியோ எழுதுவதென்றால் அவர்கள் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டுமா?

//கவிஞர்களுக்குள் நல்லுறவு கொண்டுள்ள இரண்டு கவிஞர்களை சொல்லுங்கள் பார்போம்.கவிஞர்களுக்கு செருக்கு இருப்பது இயல்பு.பா.விஜயின் ஞாபகங்கள் படத்தின் ஒலி வெளியீடடு விழாவில் கவிஞர் இருந்தார். நீங்கள் கண்ணை மூடி கொண்டு உலகம் இருட்டு என்று சொன்னால் எப்படி ..//

உங்களுக்கு தெரியாவிட்டால் இதோ உங்களுக்காக கண்ணதாசன், இவர் வாலியை m.s.v அறிமுகப்படுத்தியபோது அன்று இரவு m.s.v இடம் செல்லமாக கடிந்துகொண்ட பின்னர் அன்றே வாலியை தொடர்பு கொண்டு பாராட்டியது உங்களுக்கு தெரியாதா? இன்றைய இளம் கவிஞர்கள் எல்லாரும் எதற்காக வாலியை தமது வழிகாட்டி என்று கூறுகிறார்கள், அவர் கொடுக்கும் நம்பிக்கையும் பாராட்டுக்களும்தான்.

இளைய கவிஞர்களை வைரமுத்து கண்டுகொள்கிறார் என்றால் சென்றமாதம் அவரது ஒரே பிரபலமான சிஷ்யன் 'சினேகன்' எதற்காக"வைரமுத்துவிடம் பாராட்டும் குணம் இல்லை " என்று கூறவேண்டும்? இது உங்களுக்கு தெரியாதா? அல்ல்லது மறைக்கிறீர்களா?


//அதை கொடுத்தது கலைஞர். ஏன் கொடுத்தார் என்பதை கலைஞரே பல மேடைகளிலே சொல்லியிருக்கிறார். உங்களுக்கு ஏன் பொறாமை..?//

இதிலென்ன பொறாமை, கலைஞர் எதை கொடுத்தாலும் வேண்டி பெயருக்கு முன்னால் போட்டுவிடுவாரா வைரமுத்து, கலைஞர் திரையுலகினரை பார்த்து 'காக்கைகள்' என்றாரே அதையும் பெயருக்கு முன்னால் போட்டால் ஒத்துக்கொள்ளுவீர்களா?

// சினிமா அவரது தொழில்..மெட்டுக்கு பாட்டு எழுதுகிறார். அதில் இவரது கருத்தாக நீங்கள் கருதிகொள்ள கூடாது. //

தொழில் என்றால் காசு குடுத்தா எத வேணுமெண்டாலும் எழுதுவாரா? அப்ப கவிஞருக்கும் விபச்சாரிக்கும் என்ன வித்தியாசம்? நீங்களே கவிஞரை கேவலப்படுத்துகிறீர்களே .

//இவரது படைப்பில் அதாவது புத்தங்களில் பிழை கண்டீர் என்றால் அது உத்ததம்//

நான் முன்னரே தெளிவுபடுத்தி உள்ளேன், நான் அவரது படைப்புகளின் வெறியன், இதை நீங்கள் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.

எப்பூடி ... said...

mvalarpirai

//அடப்போயா... மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைக்கும். சினிமாவால் கவிஞர் பிரபலமானார்.பணம் சம்பாதித்தார்.ஆனால் அவர் பிறவி படைப்பாளி. 14 வயதில் கவி பாடியவர்.//

ஹி ஹி ஹி, நல்லகாமடி, விதை மண்ணுக்குள் இருந்தால்தான் விருட்சமாகும், பொலுத்தீன் பைகளுக்குள் இருந்தால் அப்படியேதான் இருக்கும். இளையராஜா இல்லாவிட்டால் கவிஞர் எப்படி தன்னை வெளிக்கொண்டந்திருப்பார் என்பதற்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பம் உங்களால் கூறமுடியுமா?

//அப்படி பார்த்தால் பாரதிராஜா இல்லாட்டி இளையாராஜா பரதேசியா இருந்திருப்பார் என்கிறீரா? //

பாரதிராஜாவின் கதை வேறு, உங்களுக்கு தெரியுமா பாரதிராஜா ஒரு அரச சுகாதார உத்தியோகஸ்தராக பண்ணயபுரம் சென்றபோது அங்கு ராஜாவின் குடும்ப நட்பால்தான் சினிமாமீது காதல் வந்து சென்னைக்கு வந்தார், பின்னர் ராஜாவும் அவரது சகோதரர்களும் சென்னைக்கு வந்தனர், பாரதிராஜாதான் இவர்களை கவனித்துகொண்டார் , அவர் வசம் அப்போது ஒரு வேலை இருந்தது (இதை பாரதி ராஜாவே பலதடவை தொலைகாட்சிகளில் கூறியுள்ளார் ). ஆனால் சினிமாவுக்கு ராஜாவை அறிமுகம் செய்தது யார்? பாரதிராஜாவா? இல்லை பாரதிராஜா படங்கள்தான் இளையராஜா இல்லாமல் வேறு யாராவது இசையமைத்தால் முழுமை பெற்றிருக்குமா?

//திறமை உள்ளவனை எவனாலும் தடுக்க முடியாது.பாரதிராஜா ஏன் ரகுமான் கிட்ட போனார்.. என்ற கேள்விக்கு பதில் இருக்குதா?//

அது கருத்து வேறுபாடாக கூட இருக்கலாம் , ஆனால் ராஜாவின் 3 இன் 1 நிகழ்ச்சியில் இதற்காக தனது வருத்தத்தை பாரதிராஜா தெரிவித்திருந்ததை நீங்கள் பார்க்கவில்லையா? "நான் ராஜாவிடமிருந்து விலகியபோதுதான் அவனது உயரம் எனக்கு தெரிந்தது, அவனை விட்டு நான் விலகியபின்னர் எனது படைப்புக்கள் முழுமையடையவில்லை" என்று பாரதிராஜா கூறியதை கேட்கவில்லையா?

//இது நல்ல கேள்வி..பாரதிராஜா, மணிரத்னத்துக்கிட்ட போய் கேளுங்க..சொல்வாங்க..//


மணிரத்தினம் மீதோ , அல்லது பாரதிராஜா மேதோ இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பவில்லையே, மாறாக வைரமுத்து மீது மட்டும் அனுப்பியுள்ளார் என்றால் காரணமில்லாமலா? ஒரு காரணமும் இல்லாமல் வக்கீல் நோட்டிஸ் எப்படி அனுப்பமுடியும்? அந்த காரணத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...

அடுத்து பாவமன்னிப்பு கேட்க பாரதிராஜாவும் , மணிரத்தினம் மனைவியும் (சுகாஷினி ) 3 இன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராஜாவை புகழ்ந்து தள்ளியதை பார்க்கவில்லையா? அதிலும் சுகாஷினி ராஜாவை பற்றி யாராவது தப்பாக பேசினால் அறைந்து விடுவாராம். அப்படி என்றால் ஒருவேளை மணிரத்தினம் மனைவியிடம் அறை வேண்டியிருப்பாரோ? ஹி ஹி

//இதில் விஷஅம்பு என்று எந்த எழுத்தை எந்த பகுதியை குறிப்பீடுகிறீர்கள் ? //

தன்மீது எந்த குற்றமும் இல்லாதது போலும் ராஜாவை புகழ்வதுபோல புகழ்ந்து பின்னர் கேவலமாக தாக்கியிருக்கும் இந்த 'கவிதையே' ஒரு விஷஅம்புதான்.

//கவிஞர் யாரை முதுகில் குத்தினான் அதை நீ பார்த்தீர் ? சும்மா எதாவது எழுதனும் எழுத கூடாது.//

இதை கவிஞரிடமே போய் கேளும், யாராவது யாரையும் பார்க்கவைத்தா குத்துவார்கள ? சும்மா ஒன்றும் எழுதவில்லை உண்மையைத்தான் எழுதியிருக்கிறேன்.

//நீங்க என்ன துக்ளக்கில் வேலை பார்க்கிறீங்களா ?//

துக்ளக் என்றாலே அலறுகிறீர்களே நீங்கள் என்ன தி.மு.க ஆதரவாளரா?

//வைரமுத்துவிடம் நான் கேட்ட கேள்விக்கு நீ யாரு பதில் சொல்ல என்று கேட்பீர்காளானால் நான் வைரமுத்துவின் தமிழையும் , படைப்புகளையும், வாழ்க்கை பயணத்தையும் (எந்த வித pre-mindset இல்லாமல் ) admire பண்ணும் ஒரு தமிழன்.//

கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிக்கும் 'அப்பாவித்தமிழன்' என்றால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

எப்பூடி ... said...

Muthu சொன்னது…

//எப்பூடி சூப்பர்//

நன்றி

........................................

பிரியமுடன் பிரபு

//இது எனக்கு புரியல

தவறான புரிதல்//


தவறாக புரிந்துகொள்ள படவில்லை. அசல் படத்தில் வரும் 'எம்தந்தை' பாடல் படத்தில் தந்தையாக வரும் அஜித்துக்கும், நிஜத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கும் எழுதப்பட்ட பாடல் என்று சரணே கூறியுள்ளார். அந்தப் பாடலில் வரும் "உன்போல சிலர் இன்று உருவாகலாம் , உன்னுடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா? " என்கின்ற வரிகள் சரணின் இன்றைய எதிரிகளில் ஒருவரான கமல் அவர்களுக்கு அப்படியே பொருந்துவது எல்லோருக்குமே தெரியுமே.


..................................

thumb

//mvalarpirai கு....

வைரமுத்து எவ்வளவு பெரிய இலக்கியவாதியாக படைப்பாளியாக இருந்தாலும் இந்த கவிதையில் இளையராஜாவை மட்டும் சாடி இருப்பது வைரமுத்து நண்பனுக்கு செய்த துரோகம் இந்த வேலையை மணியோ ,பாரதியரஜவோ ஏன் ரகுமான் !!! செய்யவில்லை என்பது என்னுடைய கருத்து//

நிச்சயமாக அவர்கள் எந்தொரு படைப்பிலும் ராஜாவை குத்திக் காட்டவில்லை, இந்த விடயத்தில் அவர்களை பாராட்டலாம்.

Venkat said...

இன்னும் வைரமுத்துவை இலக்கியவாதி என்றே எவரும் ஒப்புக்கொள்ளவில்லை. கலைஞரின் நட்பு இல்லாவிடில் நினைத்து பாருங்கள்...அவருக்கு என்ன அங்கீகாரம் என்று..என்ன அடையாள என்று....அவருக்கு அளிக்கப்பட்ட விருதுகள் அவரின் தமிழ்ப்பாடல்களுக்கு என்று நான் கருதவில்லை , அவரின் துதிபாடல்களுக்கு என்றே தோன்றுகிறது...


அவரின் பாடல்களை இசையோடு கலந்து வார்த்தை ஜாலங்களாக கேளாமல் பொருள் உணர்ந்து கேட்கும்பொழுது புலப்படும் அந்த வார்த்தைகள் அனைத்தும் வெற்று ஜாலங்களே என்று..ஆங்கிலத்தில் fantassy என்று சொல்வார்களே அந்த வகையை சார்ந்தது..பொருள் இல்லாதது...உணர்வு இல்லாதது..சில பாடல்களை தவிர்த்து...

சினிமா உலகிலும் சரி, தமிழ் கூறும் நலுலகிலும் சரி ஒரு ஆச்சர்ய கேள்வி முளைக்கிறது. கவிஞர் வாலி அவர்களுக்கும், கவிஞர் புலமை பித்தன் அவர்களுக்கும், கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கும், கவிஞர் மு. மேத்தா அவர்களுக்கும் கிட்டாத அங்கீகாரம் ஒன்று இவருக்கு கிட்டியது எப்படி என்று...
இவருடைய, ஆட்சியாளர்களின் நட்பு ஊரறிந்த ஒன்று....

ஏன் கவிஞர் வாலி கூடதான் கலைஞர் புகழ் பாடுகிறார்..கலைஞர் காவியம் எழுதுகிறார் என்ற கேள்வி உங்கள் மனதில் முளைப்பது தெரிகிறது.....ஆனால் அதை படித்தவர்க்கும், அந்த புகழ் உரை அறிந்தவர்க்கும் தெரியும்..வாலி அவர்கள் நோக்கம் என்னவென்று...அவை யாசகம் ஒரு புலவனுடைய புகழ்ச்சி அணி இல்லை...அது ஒரு கடந்த கால நிகழ்வுகளை ஒரு புலவன் பதிவு செய்யும் விதம் என்று...

கண்ணதாசன் பாடல் வரிகள் பாடுகிறது கம்பனின் பெருமை..

இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை....

தன்புகழ் பேசுகிறது கவிபேரரசுவின் வரிகள்.....
ரோஜா பட பாடல் வரிகள்..
இது கம்பன் பாடாத சிந்தனை உன் காதோடு யார் சொன்னது......

Venkat said...

தொடர்ச்சி...

இது போதாதா இவர் யார் என்று மக்கள் உணர...

கடைசியில் ஒன்று....

உண்மையும், நேர்மையும் நிச்சயம் வெற்றி பெருமானால்...நாளை உலகம் அறியும் யாரின் திறமை என்னவென்று.....

இந்த பின்னூட்டத்தில் இசைஞானி அவர்களை குறித்து எதுவும் எழுதவில்லை, காரணம்...
ஞானியுடன் எந்த பேரரசரையும் ஒப்பிட முடியாது..... அது நியாமும் ஆகாது.

வாய்ப்புக்கு நன்றி.

வெங்கட்.

பிரபா said...

எனக்கும் ஐயா வைரமுத்துவுக்கும் ஒரு வழக்கு இருக்கு , அதற்கு யாராவது அவரின் e mail முகவரிய தாங்கப்பா ....

Rajaraman said...

வைரமுத்து காசுக்காக தமிழ் மொழியை வைத்து விபச்சாரம் செய்யும் ஒரு மூன்றாதர கவிஞ்சன் அவ்வளவே.

எப்பூடி ... said...

Venkat

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி


//இந்த பின்னூட்டத்தில் இசைஞானி அவர்களை குறித்து எதுவும் எழுதவில்லை, காரணம்...
ஞானியுடன் எந்த பேரரசரையும் ஒப்பிட முடியாது..... அது நியாமும் ஆகாது.//

அருமையாக சொன்னீர்கள், நானும் இதை பின்பற்றப் பார்க்கிறேன்.

........................................

பிரபா

//எனக்கும் ஐயா வைரமுத்துவுக்கும் ஒரு வழக்கு இருக்கு , அதற்கு யாராவது அவரின் e mail முகவரிய தாங்கப்பா ....//


என்கிட்ட இல்ல சார். உங்களுக்கு கிடைச்சா இந்த பதிவையும் கொஞ்சம் போவெட் செய்துவிடுங்கள்.

....................................

Rajaraman

//வைரமுத்து காசுக்காக தமிழ் மொழியை வைத்து விபச்சாரம் செய்யும் ஒரு மூன்றாதர கவிஞ்சன் அவ்வளவே.//


பாடலாசிரியராக என்னை பல நூறு பாடல்களில் பிரமிக்க வைத்திருக்கிறார், ஆனால் அவரது நடத்தைதான்?

good guy said...

எனக்கும் கூட வைரமுத்து அவர்களின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை .... ஆனாலும் கூட, அவரை அதிகமாகவே எல்லோரும் திட்டி விட்டீர்களோ என்ற சந்தேகம் எனக்கு... அவ்வளவே...

ஞானப்பழம் said...

நீங்களும் கொஞ்சம் ஈடு கட்டுவீங்கேன்னு நினைச்சன், பருவாயில்லை இன்னும் நேரமிருக்கு , ஹி ஹி ஹி /////

வைரமுத்து, இளையராஜா, கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி(இன்னும் பல கடந்த காலக் கவிஞ்யர்கள்), விசுவநாதன்-ராமமூர்த்தி , எ.எம்.இராசா, பி.சுசீலா, தி.எம்.சௌந்தரராசன் என்று நான் எல்லோரின் படைப்புகளையும் சமமாக ரசித்துள்ளேன்.. அதனால் நான் எல்லோரையும் அவர்கள் கலைக்காகவே சமமாகப் பார்ப்பேன்(முன்பு சொன்னதைப் போல).. எங்கள் விரிவுரையாளர் சொல்வதுதான் நினைவிற்கு வருகிறது : "Creative fellows wil always be eccentric. Most the times the society wont accept them. But the society cant help but to accept their creative works." "படைப்பாளிகள் பெரும்பான்மையும் விந்தையானவர்களாகவே இருப்பார்கள்.. இந்தக் குமுகம் அவர்களை ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் அவர்களின் படைப்புகளை ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டும்" உதாரணத்திற்கு நம் மைகேல் சாக்சனையே எடுத்துக் கொள்ளுங்கள்.. என்ன அவனை ஒப்பிடும்போது வைரமுத்து பரவயில்லை என எண்ணிக்கொள்ளுங்கள்! :P

எப்பூடி ... said...

good guy …

//எனக்கும் கூட வைரமுத்து அவர்களின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை .... ஆனாலும் கூட, அவரை அதிகமாகவே எல்லோரும் திட்டி விட்டீர்களோ என்ற சந்தேகம் எனக்கு... அவ்வளவே...//

உண்மைதான் , இளையராஜா மீதிருந்த வெறித்தனமான பிடிப்பால் சொஞ்சம் கடினமான வார்த்தைகளை பயன்படுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் கேட்கவந்த கேள்விகள் அத்தனையும்உண்மையானவை.

...................................

ஞானப்பழம்


நீங்கள் நம்புகிறீர்களோ தெரியாது நான் உண்மையில் ஒரு வைரமுத்துவின் வெறிப்பிடித்த ரசிகன், எனது அபாவுடனே பலதடவை கண்ணதாசனுக்கு சளைத்தவரில்லை என வைரமுத்துவை பற்றி வாதாடி இருக்கிறேன். ஆனால் இளையராஜா என்று வரும்பொழுது எல்லாமே மறந்து வைரமுத்து எதோ எனக்கு அநியாயம் செய்ததுபோல ஒரு உணர்வு வந்துவிடுகிறது. இது ஒருவகை வியாதியாக கூட இருக்கலாம். ஆனால் இந்தவியாதி இளையராஜாவுக்காக இருப்பதில் எனக்கு சங்கடமில்லை.

அதுதவிர உங்களைபோல எனக்கு கலைஞர்களின் படைப்பையும் தனிப்பட்ட வாழ்க்கையை பிரித்து பார்க்க முடியவில்லை, இது தவறாக கூட இருக்கலாம். ஆனால் சில விடயங்களை புத்தி சொன்னாலும் மனம்கேட்பதில்லைதானே....

ஞானப்பழம் said...

புரிந்தது.. நல்ல கலை இருப்பவனிடம் நல்ல குணம் இல்லாமல் போவது பொதுவானது... அவர்களோடு பழகவே முடியாதவர்களாய் கூட இருக்கலாம்! வைரமுத்து உங்களுக்கு செய்த துரோகத்தை எப்படி அவருக்கு புரிய வைக்க முடியும்? உங்களையும் தாழ்த்தி (அவரை உயர்த்தி) இன்னொரும் கவிதை வரைந்துவிடுவார்.. பயபுள்ள எப்பப் பார்த்தாலும் கவிதையா எழுதித் தள்ளறான்....

எப்பூடி ... said...

ஞானப்பழம்

//வைரமுத்து உங்களுக்கு செய்த துரோகத்தை எப்படி அவருக்கு புரிய வைக்க முடியும்? //

வைரமுத்து எனக்கு என்ன துரோகம் செய்தார்? அதுதான் புரியல... ஹி ஹி

Venkat said...

பாவம்.. வைரமுத்து ரசிகர்கள்..குறிப்பாக ஞானப்பழம் அவர்கள்..

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியே....கலைஞர்களின் படைப்புகளை மட்டுமே அங்கீகரியுங்கள் என்று.....
உண்மைதான்...
ஆனால் யாரந்த படைப்புக்களை படைத்தார்கள் என்ற அடிப்படை அறிவாவது நமக்கு வேண்டும்...

அவருடைய ஒரு சில படைப்புகள் சொல்லிக்கொள்வதுபோல் கொஞ்சமாவது சுமாராக இருந்தால், அப்படி உங்களுக்கு தோன்றினால்
உங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும் பேராசிரியர் பொன்மணி வைரமுத்து அவர்களுக்கு உரித்தாகட்டும்....

ஆனாலும், திருமதி. பொன்மணி வைரமுத்து அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்..... தனது கற்பனைகளையும், புகழையும் கணவரின் பெயருக்கே தாரைவார்ததற்கு ...

எப்பூடி ... said...

Venkat


நான் இந்த பொன்மணி வைரமுத்து சாமாச்சாரம் பல ஆண்டுகளுக்கு முன்னர் கேள்விப்பட்டிருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை அறியமுடியவில்லை,அதை அறிய முயற்சிக்கவும் இல்லை.அப்படி இருக்க வாய்ப்புக்கள் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக குறைவாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

மற்றபடி நீங்களாச்சு ஞானாபழமாச்சு. இந்த விளையாட்டுக்கு நான் வரல...

Balavasakan said...

நானும் வைரமுத்து பக்கந்தான் இளையராஜா கர்வம் பிடித்தவர் ஒரு கலைஞ்ஞனுக்கு சாதாரணமாக இருக்கவேண்டிய கர்வத்தைவிட பலமடங்கு அவர் எவரையும் மதிப்பது கிடையாது இதனால் தான் பல இயக்குனர்கள் அந்தகாலத்தில் பிரபலமான இயக்குனர்கள் அனைவரும் ஏ.ஆர் ரஹ்மான் பக்கம் திரும்பினார்கள் .. சிறிய உதாரணம் ஹெயா டிவியில் இளைய ராஜாவின் இந்த நிகழ்ச்சியில் அவர் எஸ் பி.பி உட்ன நடந்து கொண்டமுறை..பார்த்தீர்களோ தெரியாது இளையராஜா இதுவரை சண்டை பிடிக்காத ஆடகளே இல்லை எனலாம் இப்போது கூட தன்பாட்டுக்கு தற்பெருமை எதுவும் இல்லாது விருதுகளை வாங்கி குவிக்கும் ரகுமானுக்கு இவர் பாடும் வசைகள்..அபப்பா ... எனக்கு இளைய ராஜாவின் பண்பில் உடன்பாடு இல்லை...

எப்பூடி ... said...

Balavasakan

உங்களுக்கு வைரமுத்து அல்ல பிரச்சனை, உங்கள் பிரச்சனை ரகுமான் என்பது எனக்கு தெரியும். இளையராஜா வலிந்து சென்று இன்று கமல் செய்வதைப்போல ரகுமானை பற்றி எதுவும் கூறவில்லை .அவரைத்தேடி செல்பவர்களிடம்தான் அவ்வாறு கூறுகிறார். நீங்கள் உங்களிடம் வேலை பார்த்து பிரிந்து சென்ற ஒருவர் உங்கள் துறையிலேயே புதிய தொழில் நுட்பங்களை வைத்து நல்ல நிலைக்கு வந்ததபின்னர் அவர் உங்களின் சாதனைக்கு அருகில்கூட நிற்க தகுதியார்ரவராக இருப்பது உங்களுக்கு தெரிந்தபின்னரும் அவருக்கு விருதுகள் கிடைக்கும்போது மனமாக வாழ்த்துவீர்களா ? அப்படி செய்தால் அது நிச்சயம் நடிப்பாகதான் இருக்கும். இளையராஜாவை நடிக்க சொல்லுகிறீர்களா?

இதே ரகுமான் அன்று 'ரோஜா'படத்தின் தேசியவிருதின் பின்னர் 'பிடித்த இசையமைப்பாளர்கள' என்ற விகடனின் கேள்விக்கு இளையராஜாவின் பெயரை கூறாது அன்றைய ஏனைய இசையமைப்பாளர்களின் பெயர்களை கூறிவிட்டு இன்று இளையராஜாவை நல்ல பிள்ளைபோல புகழ்வதுதான் பார்ப்பதற்கு நடிப்பாக தெரிகிறது, இது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதுதவிர ரகுமான் இளையராஜாவிடம்தானே உதவியாளரா இருந்தார் என கூறுபவர்களுக்க்காக கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இளையராஜா தனது தந்தையிடம் உதவியாளராக இருந்தததை நினைவு கூறுகிறார் என்பது உங்களுக்குதெரியுமா?

இளையராஜா அப்படித்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் , மீண்டும் மீண்டும் பண்பில்லாதவர் என நீங்கள் கூறுவது எதற்காக ? இதன் மூலம் இளையராஜாவை தரம்குறைக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா? தமிழன் இருக்கும் வரை இளையராஜாவின் தமிழிசையை யாரும் ஒன்றும் செய்ய முடியாது,அது எப்போதும் உச்சத்தில் தான் இருக்கும்,அதை யாரும் நெருங்கவே முடியாது.

navil said...

mvalarpirai

//கவிஞர் யாரை முதுகில் குத்தினான் அதை நீ பார்த்தீர் ? சும்மா எதாவது எழுதனும் எழுத கூடாது.//
இன்றைய கவிஞர்கள் குழுநடனம் ஆடுகிரார்கள், இவர்களின் பாடலை ஒரு கூட்டமே திருத்துகிரது, முழுப்படத்திர்க்கும்மான பாடளை ஒரே கவிஞரிடம் எழுதச்சொல்லுங்கள். இப்படி கூரியது வேறு யாரும் கிடையாது டை-மண்டு கவிஞர் தான்.
//கவிஞர்களுக்குள் நல்லுறவு கொண்டுள்ள இரண்டு கவிஞர்களை சொல்லுங்கள் பார்போம்//
உங்களுக்கு கவிஞர் அறிவுமதி பற்றி தெரியாது போலும் முடிந்தால் http://arivumathi.wordpress.com/2008/03/12/p7/ இந்த வலைதளத்தில் சென்று தெரிந்து கொள்ளவும்.

எப்பூடி அவர்களுக்கு
அனைவரும் கேட்கநினைத்த கேள்விகலே. நல்ல பதிவு வாழ்த்துக்கள்
ந. நவில்

எப்பூடி ... said...

navil

நன்றி

r.v.saravanan kudandhai said...

அருமையான பதிவு எப்பூடி

இந்த வரிகளை நான் வழி மொழிகிறேன் ஏனெனில் நானும் இளையராஜா வின் ( இசைக்கு) ரசிகன் வைரமுத்துவின் தமிழை ரசிப்பவன்

எப்பூடி ... said...

r.v.saravanan kudandhai


//இந்த வரிகளை நான் வழி மொழிகிறேன் ஏனெனில் நானும் இளையராஜா வின் ( இசைக்கு) ரசிகன் வைரமுத்துவின் தமிழை ரசிப்பவன்//

எனக்கு இளையராஜாவின் இசையைதாண்டி அந்த வெள்ளந்தியான வெளிப்படையான கிராமத்து மனிதனையும் பிடிக்கும்.

"ராஜா" said...

நீண்ட நாட்களுக்கு பிறகுதான் இந்த பதிவை படிக்க முடிந்தது...

உங்களுக்கு இளையராஜாவை பிடிக்கும் என்பதற்காக அவரை தவிர அனைவரும் மடையர்கள் என்று கூறுகிறீர்கள்... அவர் அஸ்தமித்து விட ஒரு சூரியன்... ரகுமான் இப்பொழுதுதான் உச்சியில் இருக்கும் சூரியன்... அவர் ஒரு கிணற்று தவளை .. ஒரே மாதிரியான சங்கீதத்தை மட்டும் வைத்து கொண்டு கடைசி வரை வாழ்கையை குண்டு சட்டிக்குள்ளாகவே ஓட்டி முடித்தவர்... உங்களுக்கு அவரை பிடிக்கும் என்பதற்காகவே மற்றவர்களை குறை கூறுகிறீர்கள்.. ரகுமான் ஆஸ்கார் வாங்கியவுடன் ராஜா ஒரு பாடல் பாடினாரே " உலகம் இப்போ எங்கோ போகுது எனக்கு அன்னை பூமி போதும்" என்று ஆனால் அவரின் இப்படிப்பட்ட கீழ்த்தரமான பண்புகளுக்காகவே அன்னை பூமியில்கூட அவரை ஆதரிக்க யாரும் இல்லை... ஒரு சில ஜால்ரா மற்றும் அவரின் நிலை கண்டு அவரிடம் பரிதாபம் கொண்டவர்கள் மட்டுமே அவரிடம் இப்பொழுது உள்ளனர்..

//இதே ரகுமான் அன்று 'ரோஜா'படத்தின் தேசியவிருதின் பின்னர் 'பிடித்த இசையமைப்பாளர்கள' என்ற விகடனின் கேள்விக்கு இளையராஜாவின் பெயரை கூறாது

அது இளையராஜாவின் தவறு ... கல்லூரி மாணவனிடம் படித்து கொண்டு இருக்கும் காலத்தில் உனக்கு பிடித்த ஆசிரியர் யார் என்று கேட்டால் எல்லோரையும்தான் என்று கூறுவான் ... அதே மாணவன் படித்து முடித்து நல்ல வேலைக்கு சென்று அமர்ந்த பின்பு அவனிடம் இதே கேள்வியை கேட்டால் படித்த காலத்தில் தனக்கு யார் உதவி புரிந்தார்களோ , யார் தன்னை ஊக்குவித்தார்களோ அவர்களை மட்டுமே கூறுவான் ... ஒரு ஆசிரியர் எவ்வளவுதான் திறமையுடன் இருந்தாலும் கர்வம் இருந்தால் எந்த மாணவனும் அவரை நினைவுகூர மாட்டான் ...

//கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இளையராஜா தனது தந்தையிடம் உதவியாளராக இருந்தததை நினைவு கூறுகிறார்

இதை ஏன் இளையராஜா ஒரு பேட்டியில்கூட நினைவு கூற மாட்டேன்கிராறு ... அப்ப உங்க லாஜிக் படி அவருக்கு குரு பக்தி இல்லைனுதான அர்த்தம்..

//தமிழன் இருக்கும் வரை இளையராஜாவின் தமிழிசையை யாரும் ஒன்றும் செய்ய முடியாது,அது எப்போதும் உச்சத்தில் தான் இருக்கும்

அதுபோலத்தானே வைரமுத்துவின் இயற்தமிலும் உச்சத்தில்தான் இருக்கும் .... இளையராஜாவை விட்டு பிரிந்த எவ்வளவோ இயக்குனர்கள் இன்னமும் வைரமுத்துவின் பின்னால்தான் செல்கின்றனர்.. இளையராஜாவிற்கு மாற்று வந்து விட்டது ... ஆனால் இன்னமும் வைரமுத்துவிற்கு மாற்று கிடைக்கவில்லை...

இளையராஜாவை நான் குறைத்து கூற வேண்டும் என்பதற்காய் இந்த பின்னூட்டம் இட வில்லை .. ஆனால் அவர் மட்டும்தான் நல்லவர் திறமையானவர் என்பதை போல நீங்கள் எழுதி உள்ளதுதான் என்னை இந்த பின்னூட்டம் இட தூண்டியது ... அவரை விட பல மடங்கு நல்லவர்கள் திறமையானவர்கள் இசைத்துறையில் உள்ளனர்...

எப்பூடி ... said...

"ராஜா"

//அவர் அஸ்தமித்து விட ஒரு சூரியன்...ரகுமான் இப்பொழுதுதான் உச்சியில் இருக்கும் சூரியன்... அவர் ஒரு கிணற்று தவளை//

1980 களின் பின்னர் சிவாஜிகணேசன் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை, அப்போது அவர் அஸ்தமித்த சூரியனாகதான் இருந்தார், நண்டு சுண்டு நடிகன் எல்லாம் ('அன்றைய' கமல் உட்பட ) ஒளிரும் சூரியனாகத்தான் இருந்தாகள் , ஆனால் காலத்தால் நிலைத்திருக்கும் சிவாஜி கணேசனை இவர்கள் யாரும் அருகில் கூட நெருங்க முடியாது. நிலவை சூரியனோடு ஒப்பிடும் உமது இசை அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது, அஸ்தமிக்கும் சூரியனைவிட ஒளிரும் சந்திரன் ஒளிதருவதுபோல தோன்றினால் சந்திரன் சூரியன் ஆகிவிடுமா?

ரகுமானின் இசை வடிவங்கள், இசை கலவைகள் , இசை கோர்வைகள் அனைத்தும் எங்கிருந்து எடுக்கப்பட்டவை ரகுமானால் புதிதாக கண்டு பிடிக்கப்படவையா ? சும்மா போங்கய்யா , விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட கேளுங்க சொலுவாங்க. உமக்கு ராஜாவை கிணற்று தவளையாகதான் தெரியுமென்றால் சுசீலாம்மா, ஜானகியம்மா, S.P.B, சித்திரா, பாலமுரளி கிருஷ்ணா, குல்சார், R.D பரமன் இல்லை என்றாலும் அவருடன் வேலைபார்த்த யாரவது ஒருவரை கேளும் , ஏன் இன்றைய இசையமைப்பாளர்கள் யாரையாவது கேளும் (ரகுமான் உட்பட)அவர்கள் சொல்லுவார்கள் ராஜா யாரென்று.


//இப்படிப்பட்ட கீழ்த்தரமான பண்புகளுக்காகவே அன்னை பூமியில்கூட அவரை ஆதரிக்க யாரும் இல்லை... ஒரு சில ஜால்ரா மற்றும் அவரின் நிலை கண்டு அவரிடம் பரிதாபம் கொண்டவர்கள் மட்டுமே அவரிடம் இப்பொழுது உள்ளனர்.. //

தமிழ் சினிமாவின் ஒப்பீடில்லா இசை மேதைக்கு ஜால்ராவாக இருப்பதே கவுரவம்தான், ராஜாவை பூமியில் ஆதரிக்க ஆட்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதா என்பதை இன்னும் ஒரு முப்பதுஆண்டு காலம் நீர் பூமியில் வாழ்ந்தால் காலம் உமக்கு உணர்த்தும்.

எப்பூடி ... said...

"ராஜா"

//அது இளையராஜாவின் தவறு ... கல்லூரி மாணவனிடம் படித்து கொண்டு இருக்கும் காலத்தில் உனக்கு பிடித்த ஆசிரியர் யார் என்று கேட்டால் எல்லோரையும்தான் என்று கூறுவான்//

ஆனால் ரகுமான் யாரிடம் கற்றாரோ அவரது பெயரை மட்டும் கூறவில்லை சாமி.

//ஒரு ஆசிரியர் எவ்வளவுதான் திறமையுடன் இருந்தாலும் கர்வம் இருந்தால் எந்த மாணவனும் அவரை நினைவுகூர மாட்டான் ...//

இளையராஜா கர்வம் பிடித்தவர் என்பது ரகுமானுக்கு இளய ஆஜாவோடு இருக்கும் வரை தெரியாதா? இளையராஜா கர்வம் பிடித்தவர், பாராட்டத் தெரியாதவர் , பொறாமை பிடித்தவர், கீழ்த்தரமானவர் என்றே வைத்துக் கொள்வம் இதனால் இளையராஜாவின் இசை தரம் குறைந்து விடுமா? கண்ணா நீங்க ரகுமானின் இன்றைய வெற்றியின் களிப்பில் பிதற்றும் ஒரு விட்டில்பூச்சி, உங்களுக்கேல்லாம் ராஜாவை புரியவைக்க முடியாது, அந்தத் தேவையுமில்ல.

//இதை ஏன் இளையராஜா ஒரு பேட்டியில்கூட நினைவு கூற மாட்டேன்கிராறு ... அப்ப உங்க லாஜிக் படி அவருக்கு குரு பக்தி இல்லைனுதான அர்த்தம்..//

உங்க விளக்கம் மறுபடியும் என்னை மெய் சிலிக்க வைக்கிதப்பா., திரும்ப படியுங்க.

//அதுபோலத்தானே வைரமுத்துவின் இயற்தமிலும் உச்சத்தில்தான் இருக்கும் .... //

வைரமுத்துவின் இயற்தமிழை விட நான் பதிவில் குறிப்பிட்ட அந்த பத்துப்பேரது தமிழும் காலத்தால் விஞ்சி நிற்பவை

//இளையராஜாவை விட்டு பிரிந்த எவ்வளவோ இயக்குனர்கள் இன்னமும் வைரமுத்துவின் பின்னால்தான் செல்கின்றனர்.. இளையராஜாவிற்கு மாற்று வந்து விட்டது ... ஆனால் இன்னமும் வைரமுத்துவிற்கு மாற்று கிடைக்கவில்லை...//

ராஜாவிடமிருந்து பிரிந்த பின்னர்தான் ரைமானிடம் செல்கிறார்கள், இதிலிருந்தே விளங்கவில்லை ராஜாவின் பின்னர்தான் ரகுமான் என்பது.
ராஜாவுடன் ரகுமானை ஒப்பிடும் உமது சிறுமையை நினைத்தால் எனக்கு கோபம் வரவில்லை மாறாக உம்மை நினைக்க பாவமாகத்த்தான் உள்ளது. ராஜாவை கிணற்றுத்தவளை என்று கூறும் நீர் ஒருதடவை நீர் எங்கிருக்கின் என்று எட்டிப்பாரும் , சிரட்டைதண்ணீருக்குள் இருப்பது உமக்கு புரியும் .

//ஆனால் அவர் மட்டும்தான் நல்லவர் திறமையானவர் என்பதை போல நீங்கள் எழுதி உள்ளதுதான் என்னை இந்த பின்னூட்டம் இட தூண்டியது ... //

எந்த இடத்திலும் அவ்வாறு எழுதவில்லை , இது வைரமுத்து, ராஜா விவகாரம். இதில் தேவை இல்லாமல் ரஹ்மானை இழுத்து விட்டவருக்கு பதில்தான் கூறினேன்.

//அவரை விட பல மடங்கு நல்லவர்கள் திறமையானவர்கள் இசைத்துறையில் உள்ளனர்...//
நல்லவர்கள் ஓகே , திறமையானவர்கள் என்று நீர் கூறும் யாருமே உமது கருத்தை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் , வேண்டுமென்றால் முயற்சி செய்துபாரும்.

உமது வருகைக்கும் , நீண்ட பின்னூடத்திற்கும் நன்றிகள்.

கிறிச்சான் said...

///வைரமுத்துவின் கவிதை மட்டும் மே ரசிக்க முடியும் இளையராஜாவின் இசையை மட்டுமே ரசிக்க முடியும்///

இது தாங்க உண்மை !!!

எப்பூடி.. said...

கிறிச்சான்

///////

///வைரமுத்துவின் கவிதை மட்டும் மே ரசிக்க முடியும் இளையராஜாவின் இசையை மட்டுமே ரசிக்க முடியும்///

இது தாங்க உண்மை !!!


//////


உங்கள் பார்வையில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

ம.தி.சுதா said...

வைரமுத்து யோக்கியமானவர் என நான் சொல்லமாட்டேன் அதுவும் ஈழத்தமிழர் விடயத்தில் படு கேவலமாக நடந்திருக்கிறார்..

Villavarayens said...

// நீங்கள் நினைத்தாலும் அவரை வீழ்த்த முடியாது, தமிழ் இருக்கும் வரை அவர் இருப்பார். உங்கள் இயற்தமிழிலும் பார்க்க அவரது இசைத்தமிழுக்கு ஆயுள் அதிகம்.//

சத்தியம்....

நல்லா பிரிச்சு மேஞ்சுட்டீங்க...

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ Villavarayens

உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

Socrates said...

எப்படி உங்கள் பதில் அருமை .
நான் கேள்விப்பட்ட சிலவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன் .
இளையராஜாவிற்கு வைரமுத்து பாடல் எழுதியபோது , பாடல் சந்ததிர்ககவும் , பாடல் கதை சார்ந்து இருக்கவும் சில திருத்தங்கள் கூருவார் . வைரமுத்து தனக்கு அடையாளம் கிடைக்கும் வரை ராஜாவின் கருத்தை ஏற்றார் . வைரமுத்து தேசிய விருது வாங்கிய பின்னர் தான் ராஜாவை காட்டிலும் சிறந்தவன் என்று கூறி , பின்னர் ஜாதிய சாயல் பூசி சிலவற்றை கூறினர். அதற்காகதான் ராஜாவர்கள் வழக்கு பதிவு செய்தார் .

ரகுமானின் தந்தை இசையில் ராஜா அவர்கள் வேலை பார்கவில்லை . சேகர் மாஸ்டர் கண்டக்டர் ஆக இருக்கும் பொழுது ( தேவராஜன் , சலில் சௌதரி ), அவருக்கு இளையராஜா கிடார் வாசித்தார் . அதற்காகதான் தான் ராஜா அவர்கள் இவரின் இசையில் வாசித்தேன் என்று கூர்ரவில்லை .
பாலச்சந்தர் அவர்கள் புது புது அர்த்தங்கள் பின்னி இசையை பசிய படைகளில் இர்ருந்து எடுத்து சேர்த்து படத்தை ரிலீஸ் செய்துவிட்டார் , இதில் வருத்தம் கொண்ட ராஜா பலசென்டரின் உதவியாளர் அனதுவிடம் நான் இனி கவிதாலய நிருவதிற்கு இசை அமைகமாட்டேன் என்று கூறிவிட்டார் .
பாரதிராஜாவின் விசயத்தில் இளையராஜா முன்பு தனக்கு ஓதிகியது போல் நேரம் ஒதுகதது அவர்களின் உடலுக்கு காரணம்.
மணிரத்தினம் ரோஜா படத்தை கவிதலயவிற்காக டைரக்ட் செய்தார். ராஜா முன்பு கூறியபடி கவிதாலய நிறுவனத்திற்கு இசை அமைக்க மறுத்துவிட்டார். இதனால் மணிரத்தினம் இளையராஜாவை வீட்டு ரகுமானை அறிமுகம் செய்தார் .

எப்பூடி.. said...

Socrates

இளையராஜா பற்றிய தங்கள் தரவுகளுக்கு நன்றி.

KUMARAN said...

arumaiyana vaadhangal, arpudhamaana thagavalgal. Iruvarume uttruparkavendiya kalaignargal, yaaraiyum kurai sollavendiyadu illai. avargal Thamizh inathin adaiyalangalaga thigazhappogiravargal.

kannan said...

ஒன்று மட்டும் உண்மை இளையராஜாவை மட்டமானவர் கர்வம் உள்ளவர் என விமர்சிக்கும் எல்லோரும் இளையராஜாவின் படல்களை ரசிதவர்களே! ஒவ்வொரு மனிதனும் தனக்குள் கர்வம் இருந்தால்தான் சாதிக்க முடியும் அதை நாம் செய்தால் ஒன்றும் இல்லை அடுத்தவர் செய்தல் மண்டைக்கனம் ,திமிர் என்ன உலகம் இது? ராஜாவை மட்டமாக விமர்சிக்கும் வாதிகளுக்கு ஒன்றே ஒன்று சொல்லி கொள்ள ஆசைபடுகிறேன் அப்படி இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான தாலாட்டுகள் நமக்கு கிடைத்திருக்காது . இன்று வரை ராஜ்ஜா ராஜாதான் அவர் பாடல்கள் இந்த உலகம் அழியும் வரை இனிமைதான் கேக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும்,,, மட்டமாக விமர்சித்தால் அவர் படைப்புகள் அழியபோவதில்லை ..... அவர் கடந்து வந்த பாதை (இன்பம், துன்பம்) அவருக்கு மட்டும்தான் தெரியும் . நாம் மட்டாம்க விமர்சிக்க நமக்கு அருகதை இல்லை. அவர் ஒரு மருத்துவர். நமக்கு ஒருவர் இசையை பிடிக்கும் என்றல் மற்றவரை மட்டமாக விமர்சிக்க கூடாது. பிடித்தால் கேப்போம் இல்லையா கேக்க வேணாம் .. ராஜா எப்போதும் ராஜாதான் அவரது இசையால் அவரவ குணம் தனிமனித வாழ்கை ........ இசையை பொறுத்த வரை அவர் என்றுமே பெயருக்கேற்ப ராஜாதான்.....

இப்ராஹிம்சிற்பி said...

வைரமுத்துவின் தமிழ் இளைய ராஜாவின் இசையை விட உயர்ந்தது:

VSKumar said...

திரு. சாக்ரடிஸ் சொன்னது உண்மையே..நான் கேள்வி பட்டவரையில் வைரமுத்து காரியம் ஆகும் வரும் கால் பிடிக்கும் ஆள் தான். மதுரையில் நடந்த அவரின் சாதிய மாநாட்டில் மிகவும் கீழ்த்தரமாக மற்ற ஜாதிகளை பேசினார் என்பதே ராஜா சார் வக்கீல் நோட்டீஸ் அனுப்ப காரணம். அதற்க்கு விளக்கம் கொடுக்க கூட ராஜா சாரை தேடி தனது நிலையை விளக்கவில்லை. அந்த கேஸ் அப்டியே அமுங்கி கொண்டதற்கு காரணம் ராஜா சாரின் பெருந்தன்மைதான். இது வைரமுத்துவுக்கு நன்றாகவே தெரியும். அங்கே இசையமைப்பாளர், கவிஞர் என்கிற நிலை இல்லாமல். பொது மனிதனாய் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இன்றுவரை ராஜா சார் வைரமுத்து பற்றி ஒரு வார்த்தை என்றுமே பேசியதில்லை. ஆனால் ராஜா சார் பற்றி மட்டுமுமேழுத அல்லாமல் அவரை சீண்டி பார்த்தவர்கள் அனைவருக்கும் பதில் சொல்வதற்க்க்காகதான் ''இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்'' என்கிற புத்தகம். அதில் தெரியும் வைரமுத்துவை எத்தனை பேருக்கு பிடிக்காது என்று அவரே முன்மொழிந்த கதை. அடுத்தவர்களுக்கு முகத்தில் கரி பூச நினைத்தவர், தானே பூசி கொண்டதுதான் அந்த புத்தகம்.

நிலவன் மடல் said...

//*ஔவையார், திருவள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதியார், பாரதிதாசன், அண்ணா, கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் என ஒரு பெரும்பட்டியலே உங்கள் தமிழுக்கு முன்னால் இருக்கிறது, ஆனால் இளையராஜாவின் தமிழிசைக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி கண்ணுக்கெட்டியதூரம்வரை யாருமில்லை என்பதை மறவாதீர்கள்*//
அருமை

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)