Tuesday, December 29, 2009

சனத்தை விமர்சிப்பவர்களுக்கு.....சனத் டில்ஷானுடன் நைட் கிளப் ஒன்றில் மதுவருந்துவது போன்றும் அருகில் ஒரு அழகி இருப்பது போன்றும் புகைப்படங்கள் வெளியாகின. இது போதாதா நம் பதிவர் சிங்கங்களுக்கு ? ஆளாளுக்கு பொட்டு வைத்து , பூ வைத்து, சீவி, சிங்காரித்து பலவிதமான கற்பனைகளுடன் பல கதைகளை தமது திறமைக்கேற்றால் போல் உலவவிட்டனர். போதாக்குறைக்கு சனத் வேறு அண்மைக்காலமாக பெரிதாக எதுவும் சாதிக்க வில்லை, விடுவார்களா? மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு விட்டார்கள்.

இரவு இரண்டு மணிக்குத்தான் சனத்தும் டில்சஹானும் தங்குமிடம் திரும்பினார்களாம் , அடுத்தநாள் போட்டியில் இருவரும் சோபிக்காததற்கு இதுதான் காரணமாம். அடுத்தநாள் 2.30 மணிக்குதான் போட்டிகள் ஆரம்பமாக இருந்தன, வீரர்கள் மைதானத்திற்கு 12 மணியளவில்தான் அழைத்து வரப்படுவார்கள், பத்து மணிவரை உறங்கினால் கூட 8 மணித்தியால நித்திரை போதுமானதே. அது தவிர இரவு விடுதியில் மது,மாதுவுடன் களியாட்டத்தில் ஈடுபட்டதாக கூறுபவர்கள் தயவுசெய்து அந்த புகைப்படங்களை பாருங்கள், சனத் அந்த அழகியுடன் அனாகரிகமாகவா இருக்கிறார்? சாதாரணமாக பேசிக்கூட இருந்திருக்கலாமில்லையா ? அதற்காக சனத்திற்கு நான் வக்காளத்து வாங்கவில்லை, இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெறுவதுதான், அதை ஏன் மிகைப்படுத்த வேண்டும் ? இதை பெரிது படுத்தி என்ன லாபம்?

யுவராஜ் , டோனி செல்லாத நைட் கிளப்பிற்கா சனத் சென்றுவிட்டார்? , அல்லது ஸ்மித், டி வில்லியஸ் போல அடிச்ச சரக்கு இறங்காமல் போட்டிகளில் விளையாடியுள்ளாரா? , அல்லது மேற்கிந்தியாவில் உலக கிண்ண போட்டிகளின் தண்ணியை போட்டுவிட்டு படகில் நினைவில்லாமல் கிடந்த பிளின்டொப் போலதான் கிடந்தாரா? , அல்லது பொண்டிங், சிமன்ஸ் போல நட்சத்திர ஹோட்டல்களில் ஆர்ப்பரித்தாரா ? இலங்கை தோற்ற கோபத்தை வக்கிரமாக சனத் மீது காட்டும் இலங்கை ரசிகர்களும், சனத்தை அவமானப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்து விட்டதால் சனத்தை போட்டுத்தாக்கும் இலங்கைக்கு எதிரானவர்களும் ஒரு விடயத்தை மறவாதீர்கள் , சனத் தனது 20 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் மைதானத்தில் ஏதாவது தவறு செய்துள்ளாரா? சக வீரகளுடனோ அல்லது எதிரணியினருடனோ வாய்த்தர்க்கம் செய்து பார்த்திருக்கிறீர்களா? சனத் தலைமை  தாங்கும் போது கூட கடினமாக நடந்து கொண்டதில்லை.

சனத்தின் சிறந்த பண்புக்கு சில சம்பவங்களை உதாரணமாக கூறமுடியும் , சிம்பாவேயில் 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் சமிந்த வாஸ் வீசிய பந்து சிம்பாவே வீரர் குட்வினின் மட்டையின் விளிம்பில் பட்டு சிலிப் திசையில் நின்ற டில்ஷானிடம் ஒரு ஜம்பில் சென்றது, அப்போது வாஸ் தனது காலால் காற்றுக்கு உதைத்து தனது வெறுப்பை காட்டினார்,குட்வினும் வாஸைப்போல செய்துகாட்ட அவர் கிரீஸுக்கு முன்னே சென்றுவிட்டார்,அப்போது டில்ஷான் பந்தை விக்கட்டில் பட ஏறிய குட்வின் ரன் அவுட் ஆனார்.இதனால் கோபமடைந்த குட்வின் மதியபோசன இடைவேளையின் பின்னர் அன்றைய அணித்தலைவரான சனத்தின் மீது தண்ணீர் போத்தல் ஒன்றை எறிந்தார், சனத்தின் தலையில் அந்தப்போத்தல் பலமாக தாக்கியது. அணியின் பயிற்சியாளர் வட்மோர் உட்பட அணியினர் அனைவரும் போட்டி மத்தியஸ்தரிடம் முறையிடுமாறு கூறியும் சனத் மறுத்தவிட்டார். முறையற்ற விதத்தில் ஆட்டமிழந்த கோபத்தில் அப்படி செய்துவிட்டார் இதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார். பின்னர் சகவீரர்கள் மூலம் இந்தசெய்தி கசிந்தபோதும் சனத் அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவே இல்லை என்று கூறிவிட்டார்.

அதேபோல 1995 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கோண தொடரின்போது சனத்தின் அதிரடியை பொறுக்காத மக்ராத் சனத்தை பார்த்து 'black monkey' என்று கூறி வேறு கெட்ட வார்த்தைகளாலும் திட்டினார். இது சனத்துடன் ஆடிக்கொண்டிருந்த ரொஷான் மகாநாமவிற்கு தெரியும், சனத் இந்த விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க மகாநாம இந்த விடயத்தை மறைத்துவிட்டார். பின்னர் 5 ஆண்டு கழித்து மகாநாம எழுதிய சுயசரிதை மூலமாகவே இந்த விடயம் அனைவருக்கும் தெரியவந்தது.

அதேபோல் 1998 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கு இலங்கை விஜயம் செய்தபோது ஒருநாள் போட்டி ஒன்று தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்னதாகவே இரவு விடுதியிலிருந்து வந்த இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த வீரரான அரவிந்த டி சில்வாவும் சமிந்த வாஸும் மாட்டிக்கொள்ள மேலும் சில வீரர்கள் தப்பித்து கொண்டனர். இதனால் அரவிந்தாவின் உபதலைவர் பதவி பறிக்கப்பட்டது , வாஸ் சிலகாலம் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அன்று அந்த விடுதிக்கு செல்லாத சில வீரர்களில் சனத்தும் ஒருவர், அன்று அவர் திருமணம் கூட செய்யவில்லை. அதன் பின்னரே சனத்திற்கு உபதலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இன்றைய சனத்தின் ஓட்டக்குவிப்பின்மைக்கு நிச்சயமாக நைட் கிளப் சம்பவமோ அல்லது அவரது வயதோ காரணமில்லை, சனத்தினது பந்து வீச்சு, களத்தடுப்பு, runs between the wicket என்பனவற்றை பார்த்தால் அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பது தெரியும். அது தவிர சனத்தினது bating timing இன்னமும் குறையவில்லை. இப்போது அவருக்கு தேவை நம்பிக்கை, சனத்தே தனது அண்மைய நேகணலில் "அர்ஜுன கப்டனாக இருந்தால் தன்னை முழுமையாக நம்புவார்" என்று கூறினார்.சனத் எவளவு அழுத்தங்களுடன் விளையாடி வருகிறார் என்று இதிலிருந்து தெரிகிறது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக கலக்கியவரை நடுவரிசையில் இடங்களை மாற்றி மாற்றி இறக்குவது, அவ்வப்போது போட்டிகளில் இருந்து நிறுத்துவது என under presure க்கு உள்ளாக்குகிறார்கள்.சனத்தின் ஓட்டக்குவிப்பின்மைக்கு இதுதான் முக்கியகாரணம்.

 விரும்பியது போல் இன்னமும் ஆறு மாதங்கள் விளையாடும் தகுதியில் சனத் இருக்கிறார், கங்குலி நியூசிலாந்து தொடரில் சேவாக்கிற்கு வழங்கிய நம்பிக்கை போன்று "அடுத்த ஆறுமாதத்திற்கு அடித்தாலும் அடிக்காவிட்டாலும் நீங்கள்தான் ஆரம்ப துடுப்பாட்டவீரர்" என்று இலங்கை அணித்தலைவர் சனத்திற்கு நம்பிக்கை அளித்து பார்க்கட்டும், அப்போது தெரியும் இந்த கிழட்டு சிங்கத்தின் பலம்.

முன்பொருமுறை இதேபோன்ற விமர்சனங்கள் லாராமீதும் சுமத்தப்பட்டது, 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடருக்கு லாரா ஒரு அழகியை தனது நண்பி என்று கூறி அழைத்து வந்திருந்தார். அவரது கஷ்டகாலம் முதலாம் இரண்டு போட்டிகளிலும் பெரிதாக லாரா சோபிக்கவில்லை.இது போதாதா நம் விமர்சகர்களுக்கு? போட்டுத்தாக்கினார்கள். அன்றைய தெரிவாளர்களில் ஒருவரும் முன்னாள் மேற்கிந்தியாவின் புகழ் பெற்ற வீரருமான விவ்வியன் ரிச்சர்ட்ஸ் "நாங்கள் மட்டையை மட்டும் நம்பித்தான் களத்தில் இறங்குவோம் அதனால்தான் அதிக ஓட்டங்களை பெறமுடிந்தது " என்று லாராவை குத்திப்பேசினார்.

இதற்கு லாரா எந்தப்பதிலும் கூறவில்லை, மாறாக அடுத்த போட்டியில் 188 ஓட்டங்களை சரமாரியாக குவித்தார். முதல் போட்டிகளில் ஆட்டமிழக்க செய்த மக்ராத்திற்கு மூன்று சிச்சர்களை பரிசளித்தார். இந்தபோட்டியின் பின்னர் லாரா ஒய்வு பெறும்வரை எந்த கொம்பனும் லாராவை விமர்சிக்க வாய் திறக்கவில்லை.சனத்திற்கும் இன்று இதே நிலைதான், அநாகரிக உடையுடனோ அல்லது அந்த அழகியுடன் நெருக்கமாகவோ இல்லாத போதும் சனத் மீது அவதூறு சுமத்தப்பட்டுவிட்டது. தனது ஓய்வை அறிவிக்குமுன்னர் இதற்கான பதிலை தனது மட்டையால் நிச்சயம் சொல்லுவார்.

வாழ்த்து : 20 வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடி அதிகமான வெற்றிகளை பெற்றுத்தந்த சனத்திற்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

எச்சரிக்கை : இன்று அதிகாரம் உள்ளதென்று ஓவராக ஆடும் மஹேலா, சங்கா நாளை தரங்க,கப்புகெதர காலத்தில் உங்களுக்கும் இதே நிலைதான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எரிச்சல் : இலங்கை அணி இன்று தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துள்ளதென்றால் அதற்கு அர்ஜுன, அரவிந்த, வாஸ், முரளி, சனத் என்ற இந்த பஞ்ச பண்டவர்களே முக்கிய காரணம் என்றால் மிகை இல்லை. இதில் முதல் மூவரையும் மோசமாக வழியனுப்பிவைத்த இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இப்போது சனத்தையும் முரளியையும் கூட அவர்களைப்போலவே மோசமான முறையில் வழியனுப்ப தயாராகி வருவது.


9 வாசகர் எண்ணங்கள்:

ஞானப்பழம் said...

வாசின் பந்துவீச்சு எனக்கும் பிடிக்கும்... நான் ஒரு spinner இல்லை என்பதனால் முரளியின் பந்துவீச்சு அவ்வளவு புலப்படவில்லை. இலங்கை அணியில் முரளிமட்டும்தான் தமிழரா, இல்லை வேறேனும் உள்ளனரா? (கவனிக்காமல் விட்டிருப்பேன்!! :P)..
அப்புறம், சனத்தின் பல நல்ல பண்புகள் இந்த பதிவின் மூலம்தான் தெரிந்துகொண்டேன்... அவருக்கு உங்களைப் போல் பல அருமையான ரசிகர்கள் கிடைத்தது ஆச்சர்யம் இல்லை.. ஆமாம், சச்சினைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்திய அணியில் அவரும் நல்ல பண்புகளுக்காக போற்றப் படுபவரே!!

Unknown said...

யார் என்ன சொன்னாலும், இலங்கை கிரிக்கெட் வெளி உலகத்திற்கு தெரியவந்தது நம்ம சனத்தால மட்டும்தான், என்னதான் அர்ஜுன, அரவிந்த, வாஸ், முரளி செய்தாலும் சனத்தின் அதிரடி பல வெற்றிகளை பெற்று கொடுத்தது.

ஓவர் அடித்து விளையாடி கத்து கொடுத்தது சனத் & கழு தான் என்றால்................. ஏற்றுகொள்ளதான்வேண்டும்.

Unknown said...

நல்ல பதிவு..., எத்தனை அதிரடி மன்னர்கள் வந்தாலும் சனத் அவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி...

creativemani said...

வேற ஒண்ணுமில்ல.. புலி இளைச்சா எலி ஏறி விளையாடுமாம்... விடுங்க.. ஜெயசூர்யாவின் மட்டையை பார்த்து பயப்படாத பௌலர்களே இல்லை.. அன்றும்.. இன்றும்..

கிரி said...

//மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு விட்டார்கள். //

இதற்கும் மேலே உள்ள படத்திற்கும் சம்பந்தம் இல்லையே! :-)))

கிரிக்கெட் ல நிறைய விஷயம் தெரிந்து வைத்து இருக்கீங்க ... நான் செய்திகளில் இந்த விஷயத்தை படித்தேன்.. ஆனால் வலைபதிவுகளில் படித்தது போல நினைவு இல்லை.

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

/// இலங்கை அணியில் முரளிமட்டும்தான் தமிழரா, இல்லை வேறேனும் உள்ளனரா? //

ரசல் ஆர்ணல்ட் விளையாடி உள்ளார், மற்றும் புஸ்பகுமார கலப்பு இனத்தவர் (பழைய வீரர் ).// சச்சினைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்திய அணியில் அவரும் நல்ல பண்புகளுக்காக போற்றப் படுபவரே!!//

எனக்கு தெரிந்து இந்தியாவின் சிறந்த பண்புள்ள வீரர்கள் என்றால் சச்சின், டிராவிட், கும்ளே,சேவாக் ஆகியோரே.

..............................

dialog

//யார் என்ன சொன்னாலும், இலங்கை கிரிக்கெட் வெளி உலகத்திற்கு தெரியவந்தது நம்ம சனத்தால மட்டும்தான், என்னதான் அர்ஜுன, அரவிந்த, வாஸ், முரளி செய்தாலும் சனத்தின் அதிரடி பல வெற்றிகளை பெற்று கொடுத்தது.//

என்னை பொறுத்தவரை இவர்களில் ஒருவர் இல்லாவிட்டாலும் இலங்கை நிச்சயம் இந்த நிலையை அடைந்திருக்காது.

....................................

அன்புடன்-மணிகண்டன்

//வேற ஒண்ணுமில்ல.. புலி இளைச்சா எலி ஏறி விளையாடுமாம்... விடுங்க.. ஜெயசூர்யாவின் மட்டையை பார்த்து பயப்படாத பௌலர்களே இல்லை.. அன்றும்.. இன்றும்..//

நெத்தியடி

..............................
கிரி சொன்னது…

//இதற்கும் மேலே உள்ள படத்திற்கும் சம்பந்தம் இல்லையே! :-)))//

அதிகமாக அந்தப் புகைப்படம் வெளியாகி உள்ளதால் அந்தப் புகைப்படத்தை பிரசுரிக்கவில்லை.//நான் செய்திகளில் இந்த விஷயத்தை படித்தேன்.. ஆனால் வலைபதிவுகளில் படித்தது போல நினைவு இல்லை.//

நான் குறைந்தது ஒரு 10 பதிவுகளுக்கு மேலாக பார்த்திருக்கிறேன்.

அ.ஜீவதர்ஷன் said...

பேநா மூடி

//நல்ல பதிவு..., எத்தனை அதிரடி மன்னர்கள் வந்தாலும் சனத் அவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி...//

சரியாக சொன்னீர்கள்..

priyamudanprabu said...

கிரிக்கெட்டில் சச்சின்8உக்கு பிறகு எனக்கு ;லாராவையும் சனத்தையும்தான் பிடிக்கும்

அ.ஜீவதர்ஷன் said...

பிரியமுடன் பிரபு

//கிரிக்கெட்டில் சச்சின்8உக்கு பிறகு எனக்கு ;லாராவையும் சனத்தையும்தான் பிடிக்கும்//

சூப்பர்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)