Wednesday, December 23, 2009

மின்சாரமற்ற இரவுகளில்......


இப்போதெல்லாம் ஒருமணி நேரம் இரவில் மின்சாரம் இல்லாமல் போனாலே சமாளிப்பது கடினமாக உள்ளது. ஆனால் ஆறு வருடங்களுக்கு மேலாக மின்சாரமே இல்லாமல் எப்படி வாழ்ந்தோம் என்று இப்பொழுது நினைக்கும் போது அன்றைய நாட்கள் தரும் ஞாபகங்கள் சிலிர்ப்பூட்டுகின்றன.


1990 களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாணம் மின்சாரத்தை இழந்தது. அன்று முதல் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் எமக்கு ஒளிரும் மின்குமிள்களை பார்ப்பதேன்றாலே அரிது. எங்காவது ஒரு விசேஷம் இடம்பெறும் வீட்டில் ஜெனறேற்றர்கள் (மின் பிறப்பாக்கி ) மூலம் பெறப்படும் மின்சாரத்தினால் வரும் வெளிச்சங்களை பார்த்தல்த்தான் உண்டு. அந்த விசேஷங்களில்த்தான் அந்தக்காலப்பகுதியில் திரைப்படங்களை பார்க்கமுடிந்தது , அதில் யாரது படத்தை பார்ப்பதென்று வேறு சலசலப்புக்கள் இடம்பெறும். யார் வீட்டிலாவது எப்படா ஏதாவதொரு விசேஷம் வருமென்று கத்துக்கிடப்போம், அன்று மின்சாரத்துக்காக ஏங்கிய நாட்கள் அவை.
ஆனாலும் நாம் சந்தோசமாகத்தான் இருந்தோம். மண்ணெண்ணெய் விளக்குகள், நிலா வெளிச்சம் என அன்றைய இரவுகளும் சிறுவர்களாகிய எமக்கு சந்தோசமான இரவுகளாகவே கழிந்தன. மண்ணெண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்திருந்த நேரம் (ஒரு லீற்றர் 600 ரூபாவுக்கும் விற்ற நேரம்) அதிகமான மக்கள் வாங்குவது அரைக்காப்போத்தல் எனப்படும் 125 ml மண்ணெண்ணையைத்தான்.இதனை வைத்துக்கொண்டு சாதாரண விளக்குகள் எரிக்கமுடியாது. அதனால் அப்போது கண்டுபிடித்த எமது கண்டு பிடிப்புத்தான் பஞ்சுவிளக்கு. ஜாம் போத்தலின் அடியில் பஞ்சை அடைந்து அதனுள் சிறிதளவு எண்ணெயை (50 ml ) ஊற்றி ஜாம் போத்தலின் மேற்பகுதியில் சைக்கிளின் வால்க்கட்டையினை பொருத்தி அதனூடாக திரியை செலுத்தி மண்ணெண்ணையில் ஊறிய பஞ்சுடன் சேர்க்கப்படும். பஞ்சில் ஊறிய எண்ணை சிறிது சிறிதாகவே திரிக்கு பஞ்சால் வழங்கப்படும், இதனால் சாதரணமாக எரியும் விளக்குகளைவிட இந்த பஞ்சு விளக்கு மூன்று மடங்கு நேரம் அதிகமாக எரியும்.


அதிகமான விளக்குகள் கொளுத்த முடியாத காரணத்தால் உயர்தரம் படிக்கும் பெரியவர்களுக்கே விளக்கு கொடுக்கப்படும். எங்களுக்கு இரவு 7.30 மணியுடனேயே படிப்பு முடிந்துவிடும். பெரியவர்களுக்கும் வேறு பொழுதுபோக்கில்லை,அதனால் அயலில் உள்ள பெரியவர்கள் எல்லோரும் ஒன்றாக யாரவது ஒருவரது வீட்டு முற்றத்தில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். அரசியல்,பொருளாதாரம் என அவர்களது பேச்சுக்கள் சிலநேரங்களில் மிகப்பெரும் விவாதமாக கூட இடம்பெறும். எமக்கு அவர்களது அரட்டைகளை கேட்பது சுவாரிசியமாக இருக்கும். நிலவொளியில் முற்றத்தில் வாங்குகளிலும் கதிரைகளிலும் அவர்கள் கதைத்த விடயங்கள் எங்களுக்கு அந்தவயதில் அரசியல் பற்றி ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்தன.இந்த நேரங்களில் அவ்வப்போது பலாலியில் இருந்து இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக்கள் மற்றும் விமான தாக்குதல்கள் இடம்பெறுவதால் எங்களுக்கு பதுங்குகுழிகள் இன்னுமொரு வீடாகவே இருந்தது. அதற்குள் சுவாமிப்படங்களை வைப்பது அவற்றுக்கு விளக்கு வைப்பது, என்று ஒருபுறம் பாதுகாப்பையும் நாங்கள் கவனிக்க தவறவில்லை. இரவு நேரங்களில் பதுங்குகுழிகளுக்குள் பாம்பு பூச்சிகள் வந்துவிடும் என்பதற்காக வேப்பெண்ணை தெளித்தல், வெங்காயத்தூசிகளை தூவுதல் என விழிப்பாக இருந்த நாட்கள் அவை. மின்சாரம் இல்லாததால் அன்றைய இரவுகள் 10 மணிக்கெல்லாம் அமைதியாகிவிடும். அந்த நேரங்களில் காற்றடிக்கும் ஓசையே விமானத்தின் ஓசையைப்இருக்கும். இதனால் காற்றின் ஒசைக்கெல்லாம் பதுங்குகுழிக்குள் ஓடிய நாட்களும் உண்டு.
மின்சாரவசதி, தகவல் தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் காலமாகிய இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் பெறும் பெறுபேறுகளை விட அன்றைய மாணவர்கள் மிக சிறப்பான பெறுதிகளை பெற்றிருந்தனர். இந்த யுத்தத்தின் மத்தியிலும் கல்வியில் நமது மாணவர்கள் அன்று சிறந்து விளங்கியதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். அன்றைய சிறந்த பெறுபேறுக்கு முக்கியகாரணம் மின்சாரம் இல்லாமை என்றே இப்போது எண்ணத் தோன்றுகிறது. அதனால் மின்சாரம் கூடாதவிடயம் என்று பொருள் இல்லை, இன்று நாம் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. எது எப்படியாக இருப்பினும் குண்டுவீச்சுக்களின் நடுவிலும் மின்சாரமற்ற நிலவொளியில் வீட்டு முற்றத்தில் இருந்த நாட்கள் ஏனோ தெரியவில்லை எனக்கு பசுமையாகவே இருக்கிறது.

குறிப்பு :-
1990 - 1996 வரையான காலப்பகுதியில் 6 - 12 வயதுக்குட்பட்ட குண்டு வீச்சுக்களாலான உயிர் இழப்புகள் எதனையும் தமது உறவுகளுக்குள் சந்தித்திருக்காத யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அன்றைய பெரும்பான்மை சிறுவர்களுக்கு இந்தப் பதிவு பொருந்தலாம்.

13 வாசகர் எண்ணங்கள்:

பாலா said...

வெரி டச்சிங் நண்பா...!!

எனக்கு 10 நாள் கரண்ட் இல்லைன்னதும்.. ‘கற்காலம்’னு நினைச்சேன்.

ஆறு வருஷமா???????????????? :( :( :(

ஸ்ரீநி said...

இவ்வளவு நெருடலான உண்மையா நாசூக்கா சொல்லிடீங்க ???
படிச்சவுங்களுக்கு நிச்சயமா அடிவயிறு கொலையும்

Unknown said...

அழுத்தமான பதிவு...

ஞானப்பழம் said...

அண்ணே... எப்படிண்ணே தாக்குப்புடிச்சீங்க? நமக்கு இந்தியாவே தாங்கமாட்டீங்குது.. ஆனா அந்த நிலைமையிலும் நம் ஆட்கள் படிப்பில் சிறந்து விளங்கினாங்க(விதிவிலக்குகளும் இருக்கக்கூடும்!!) என்பதை நினைப்பதிலேயே பெருமையா இருக்கு.. என்னைப் பொறுத்தவரை உலகிலேயே மிகவும் அறிவுக்கூர்மையும், ஆற்றலும் வாய்ந்த மக்கள் இலங்கைத் தமிழர்தான்.. ஆனால் அந்த இனம் போரினால் இப்படி பாதிக்கப் பட்டு, பெரும்பாலானோர் புலம்பெயர்ந்து வாழ நேரிட்டதே என நினைக்கும்போதுதான் வருத்தமாக உள்ளது...

ஒரே மரபும், மொழியும், பண்பாடும், வரலாறும் கொண்ட இனத்தை, எவனோ நாட்டைப் பிரித்தான் என்பதற்காக என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை... ஆனால் இலங்கையில் நடக்கும் விடயங்கள் பற்றி பலர் தவறான வதந்திகளை பரப்பி விடுவதுதான் எனக்கு எரிச்சல் ஏற்படுத்தும்... சராசரி மக்கள் அங்கே படும் பலவிதமான துன்பங்களும் சிரமங்களும் வெளிவருவதில்லை...

ஞானப்பழம் said...

////மின்சாரவசதி, தகவல் தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் காலமாகிய இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் பெறும் பெறுபேறுகளை விட அன்றைய மாணவர்கள் மிக சிறப்பான பெறுதிகளை பெற்றிருந்தனர். இந்த யுத்தத்தின் மத்தியிலும் கல்வியில் நமது மாணவர்கள் அன்று சிறந்து விளங்கியதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். அன்றைய சிறந்த பெறுபேறுக்கு முக்கியகாரணம் மின்சாரம் இல்லாமை என்றே இப்போது எண்ணத் தோன்றுகிறது. அதனால் மின்சாரம் கூடாதவிடயம் என்று பொருள் இல்லை, இன்று நாம் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. எது எப்படியாக இருப்பினும் குண்டுவீச்சுக்களின் நடுவிலும் மின்சாரமற்ற நிலவொளியில் வீட்டு முற்றத்தில் இருந்த நாட்கள் ஏனோ தெரியவில்லை எனக்கு பசுமையாகவே இருக்கிறது. ////"யாழில் கலாச்சார சீர்கேடு" என்று எங்கோ படித்த நினைவு வருகிறது..

கிரி said...

ரொம்ப சிரமம் தான் ... :-(

அ.ஜீவதர்ஷன் said...

ஹாலிவுட் பாலா

//வெரி டச்சிங் நண்பா...!!//

நன்றி

//எனக்கு 10 நாள் கரண்ட் இல்லைன்னதும்.. ‘கற்காலம்’னு நினைச்சேன்.

ஆறு வருஷமா???????????????? :( :( :( //

இசைவாகிவிட்டோம் என்பதை விட நாங்கள் இசைவாக்கபட்டு விட்டோம் என்பது சரியாக இருக்கும்.

அ.ஜீவதர்ஷன் said...

ஸ்ரீநி

//இவ்வளவு நெருடலான உண்மையா நாசூக்கா சொல்லிடீங்க ???
படிச்சவுங்களுக்கு நிச்சயமா அடிவயிறு கொலையும்//

உங்கள் கருத்துக்கு நன்றி.

......................................

பேநா மூடி

//அழுத்தமான பதிவு...//


நன்றி

....................................
கிரி

//ரொம்ப சிரமம் தான் ... :-(//

எங்களை விட தற்போது வன்னியிலிருந்து முகாம்களுக்கு அனுப்பப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டவர்களின் கதைகளை கேட்டால் ஈரககுலைகளே நடுங்கும்.

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//ஒரே மரபும், மொழியும், பண்பாடும், வரலாறும் கொண்ட இனத்தை, எவனோ நாட்டைப் பிரித்தான் என்பதற்காக என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை... //

நன்றி


//"யாழில் கலாச்சார சீர்கேடு" என்று எங்கோ படித்த நினைவு வருகிறது..
//

இவர்கள் கூறுவது போல் தலைவிரித்தாடவில்லை, ஆனால் ஆரம்பிக்கின்றது. கட்டுப்படுத்த ஆளில்லாத்ததால் இளசுகள் கொஞ்சம் அட்டகாசம் பண்ணினாலும் எப்படியும் விரைவில் இதற்கு உரியவர்களால் ஒரு முடிவு சுவரொட்டிகள் மூலம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஞானப்பழம் said...

சுவரொட்டிகள் மூலமா? என்னைப் பொறுத்த வரை "கலாச்சார சீர்கேட்டை" எவனாலும் தடுத்து நிறுத்தவோ மாற்றி அமைக்கவோ முடியாது... நமது "சிங்காரச்" சென்னையை மாற்ற முடியுமா? "culture flows from top to bottom".. அதற்க்கு இரு பொருள் உண்டு.. அப்பா புகை பிடித்தால், மகனும் புகை பிடிப்பான்.. அது அந்த காலம்.. இன்னொரு பொருள் : இந்த காலத்தில் அப்பா புகை பிடித்தால், மகனோ இல்லை மகளோ இருவருமே புகை பிடிக்கக் கூடும்...

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//சுவரொட்டிகள் மூலமா? என்னைப் பொறுத்த வரை "கலாச்சார சீர்கேட்டை" எவனாலும் தடுத்து நிறுத்தவோ மாற்றி அமைக்கவோ முடியாது...//

இது வேற விதமான சுவரொட்டிகள், மீறினால் காலி...

ஞானப்பழம் said...

ஆகா... அப்போ அந்த சுவரோட்டீல மாளவிகா, நமீதா எல்லாம் இருக்க மாட்டாங்களா? :P

அரசே இந்த மாதிரி சுவரொட்டிகளை அச்சிடுமா என்ன? சர்வாதிகாரம்போல் தோணுதே!!!

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்//அரசே இந்த மாதிரி சுவரொட்டிகளை அச்சிடுமா என்ன? சர்வாதிகாரம்போல் தோணுதே!!!//இதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது வேற. சர்வாதிகாரம் போலத்தான் இருக்கும், எனக்கும் அடக்குமுறை பிடிக்காதுதான் ஆனால் என்ன செய்வது? மாடு சொன்னா கேட்காதவர்கள் மணி கட்டிய மாடு சொன்னா கேட்கிறார்கள், ஆனாலும் நாலு பேருக்கு நல்லது நடக்குமென்றால் எதுவும் தப்பில்லையே.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)