Wednesday, December 16, 2009

பொதி சுமக்கும் சிறுவர்கள்

எனக்கு பிடித்த நான் மரியாதை வைத்திருக்கும் ஒரே இலங்கை அரசியல் தலைவர் c.w.w. கன்னங்கரா, இலங்கையின் கல்விக்கண் திறந்த தலைவர். இலங்கையின் எழுத்தறிவு 90 க்கும் அதிகமாக இன்று இருப்பதற்கு முக்கிய காரணகர்த்தா, இவர்தான் இலங்கையின் இலவச கல்வியின் பிதாமகன்,.இலவச சீருடை,இலவச பாடப்புத்தகங்கள் என்பன இவர் கல்வி அமைச்சராக இருந்த காலத்திலேயே அறிமுகப்படுத்தப் பட்டன. இன்று சராசரி மாணவர்களும் ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் இலவசமாக படித்து பட்டம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு இவரது அன்றைய இலவச கல்விக்கான திட்டங்கள்தான் காரணம். இவருக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லாவிட்டாலும் எதோ அவரைப்பற்றி எழுத வேண்டும் போல் இருந்ததால் c.w.w. கன்னங்கராவை நினைவு கூர்ந்தேன்,அவ்வளவுதான். இன்று பாடசாலைக்கு செல்லும் 11 -14 வயதுடைய மாணவர்கள் கொண்டுசெல்லும் புத்தகப்பை குறைந்தது 7-10 கிலோவாவது இருக்கும்.அதனை வீட்டிலிருந்து நடந்தே காவிக்கொண்டு செல்லும் மாணவர்கள் அதிகம்,அதன் பின்னர் அந்தப்புத்தக மூட்டையை மூன்றாம் மாடிக்கு தூக்கிக்கொண்டு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஆஜானுபாகு தோற்றமுடைய பிள்ளைகளென்றாலும் பரவாயில்லை, மிகவும் மெலிந்த பிள்ளைகள் இந்த புத்தக மூட்டையை தூக்கிக்கொண்டு மூன்றாம் மாடிக்கு ஏறுவது எவ்வளவு கடினமான விடயம் ? அதிகாலையில் உடலளவில் சோர்வுறும் பிள்ளைகளால் எப்படி நூறு வீத கவனத்துடன் கற்க முடியும்? மீண்டும் மாலையில் இரண்டு மணிக்கு பின்னர் பசிக்களை, மூளைக்களை, உடற்களை என்பவற்றுடன் எப்படி மீண்டும் அந்த பார மூட்டைகளை தூக்கிக்கொண்டு வீடு செல்லமுடியும்? இது ஏன் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் புரியவில்லை என்று தெரியவில்லை. எனக்கு எந்த வழியில் இந்த பிரச்னையை தீர்க்கலாமேன்று தெரியாது, ஆனால் வளரும் சிறார்கள் மீது அதிக சுமையை எப்படி சுமத்தாமல் தவிர்க்கலாம் என்பதற்கு குறிப்பிட்ட கல்வி அதிகாரிகள் மனம் வைத்தால் சரியான தீர்வைக்கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அடுத்து புதிய புத்தகங்கள் சம்பந்தமான விடயம், ஒவ்வொரு ஆண்டும் இறுதிகளில் அடுத்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை வழங்குவது வழக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் யாழ்ப்பாணத்திற்கு 40 மாணவர்கள் உள்ள வகுப்பறைக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு அல்லது மூன்று புதிய புத்தகங்கள் வீதமே கிடைக்கும். மிகுதி புத்தகங்கள் அடுத்த ஆண்டு மூன்றாம் மாதமளவிலேயே வந்து சேரும், அதுவரை முதல் வருடம் படித்த மாணவர்களது புத்தகங்கள் தற்காலிகமாக வழங்கப்படும். ஆனால் கிடைக்கும் அந்த இரண்டு அல்லது மூன்று புத்தகங்களையும் வகுப்பில் முதலாவதாக வரும் மாணவர்களுக்கு கொடுப்பதுதான் சற்று சிந்திக்க வேண்டியவிடயம். ஆசிரியர்கள் நன்றாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவோ அல்லது ஏனைய மாணவர்கள் அவர்களைப்போல் அடுத்த ஆண்டு முதல் இடங்களுக்கு வரவேண்டும் எண்ணியோ புதிய புத்தகங்களை முதலிடங்களில் வரும் மாணவர்களுக்கு கொடுக்கலாம். ஆனால் 11 - 14வயது மாணவர்கள் அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அடையவில்லை என்பதை அவர்கள் ஏனோ எண்ணுவதில்லை. அந்த வயதில் புதிய புத்தகங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும், ஒருவித தாழ்வு மனப்பான்மையும்தான் ஏனைய மாணவர்களிடத்தில் அதிகமாக ஏற்படும்.இது நிச்சயமாக ஆரோக்கியமான விடயமில்லை. குறைந்தளவு புதிய பாடப்புத்தகங்கள் வருமிடத்தில் அந்தப்புத்தகங்களை யாருக்கும் கொடுக்காமல் அனைவருக்குமான புத்தகங்கள் வந்தவுடன் சேர்த்து கொடுக்கலாம், அதுவரை ஏனையவர்களுக்கு கொடுப்பது போல் பழைய பாடப்புத்தகங்களையே முதலிடம் வரும் மாணவர்களுக்கும் கொடுக்கலாம். இதன் மூலம் பிஞ்சு மனங்களில் உருவாகும் தாழ்வு மனப்பான்மையையும் போட்டி பொறாமையையும் களையலாம். இது சிறார்களின் உளவியல் சம்பத்தப்பட்ட விடயம், தயவுசெய்து யாராவது இதனை உரியவர்களிடம் எடுத்து கூறுங்கள். இந்த விடயத்தில் நேரடியாக நான் பாதிக்க படாவிட்டாலும் என் நண்பனின் அக்காவின் 11 வயது பிள்ளையுடன் பேசியபின்னர் இது மிகவும் முக்கியமான விடயமாக எனக்கு பட்டது அதனால்தான் இந்தப் பதிவு. உங்கள் கருத்துக்களை பின்னூட்டல் மூலமாக தெரிவியுங்கள்.

7 வாசகர் எண்ணங்கள்:

Yoganathan.N said...

நல்ல சிந்திக்க வைக்கும் பதிவு. :)

//எனக்கு எந்த வழியில் இந்த பிரச்னையை தீர்க்கலாமேன்று தெரியாது, ஆனால் வளரும் சிறார்கள் மீது அதிக சுமையை எப்படி சுமத்தாமல் தவிர்க்கலாம் என்பதற்கு குறிப்பிட்ட கல்வி அதிகாரிகள் மனம் வைத்தால் சரியான தீர்வைக்கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். //
நான் நேரடியாக பார்த்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. நான் இருக்கும் இடத்தில், இதனை தீர்வு கானும் வகையில், ஒரு சின்ன 'trial' செய்தார்கள். ஒரே ஒரு பள்ளியை தேர்வு செய்து, அதிலும் ஒரே ஒரு வகுப்பிற்கு மட்டும் 'laptop' வசதியை செய்துக் கொடுத்தனர்.
அரசாங்கம் பல லட்சங்கள் செலவாக்கியது.
சில மாதங்கள் போனது. என்ன ஆயிருக்கும் என ஒரு சின்ன கர்ப்பனை செய்து பாருங்கள்...
குரங்கு கையில் கிடைத்த பூமாலை கதை தான்... :(

Unknown said...

இலங்கையிலும் இந்த problem உண்ட...,

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//நான் நேரடியாக பார்த்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. நான் இருக்கும் இடத்தில், இதனை தீர்வு கானும் வகையில், ஒரு சின்ன 'trial' செய்தார்கள். ஒரே ஒரு பள்ளியை தேர்வு செய்து, அதிலும் ஒரே ஒரு
வகுப்பிற்கு மட்டும் 'laptop' வசதியை செய்துக் கொடுத்தனர்.
அரசாங்கம் பல லட்சங்கள் செலவாக்கியது.
சில மாதங்கள் போனது. என்ன ஆயிருக்கும் என ஒரு சின்ன கர்ப்பனை செய்து பாருங்கள்...
குரங்கு கையில் கிடைத்த பூமாலை கதை தான்... :(//

௦): , இங்கு யாருமே, எதுவுமே சரியில்லை

..............................

பேநா மூடி

/இலங்கையிலும் இந்த problem உண்ட...,//

இதைவிட நிறையவே உண்டு போகப்போக சொல்லுகிறேன்.

ஞானப்பழம் said...

அய்யா.. நான் கேள்விப்பட்டவரை இந்தியாவில் ஒரு பிரச்சனை இருந்தால், அந்தப் பிரச்சனை இலங்கையில் மூன்று மடங்காவது இருக்கும்.. மக்களின் மனப்பான்மைதான் காரணம்!!

பாடசாலையில் படிக்கவேண்டும் என்றுதான் பள்ளிக்கு போகிறார்கள்.. அனால் வீடு திரும்பும்போதும் அதை "சுமக்க" வேண்டும் என்பது ஏன்? மனதிலும் மூலையிலும் சுமக்க வேண்டியதை முதுகில் சுமந்தால் கல்வி வந்துவிடுமோ? பள்ளியில் மட்டுமில்லை, நான் கல்லூரி வந்தபின்பும் இந்தப் பிரச்சனை உண்டு.. இதற்க்கு தற்போதிய சரியான தீர்வு, பாடப் புத்தகங்களை பள்ளியிலேயே விட்டு விட ஒரு வசதி செய்து தர வேண்டும். குழந்தைகள் எந்தப் புத்தகம் தேவை என நினைக்குதோ அதை மட்டும் விட்டுக்கு எடுத்துச் செல்லட்டும்... "வீட்டுப் பாடம்" கொடுக்கும் பழக்கத்தை அடியோடு கைவிடல் வேண்டும்..

அமைச்சர் கன்னங்கரவை பற்றி சொன்னது, நல்ல தகவல்..

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//தற்போதிய சரியான தீர்வு, பாடப் புத்தகங்களை பள்ளியிலேயே விட்டு விட ஒரு வசதி செய்து தர வேண்டும். குழந்தைகள் எந்தப் புத்தகம் தேவை என நினைக்குதோ அதை மட்டும் விட்டுக்கு எடுத்துச் செல்லட்டும்... "வீட்டுப் பாடம்" கொடுக்கும் பழக்கத்தை அடியோடு கைவிடல் வேண்டும்//

மிகச் சரியான தீர்வு.

r.v.saravanan said...

சிந்திக்க தூண்டும் பதிவு

அ.ஜீவதர்ஷன் said...

r.v.saravanan kudandhai

//சிந்திக்க தூண்டும் பதிவு//

நன்றி

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)