Monday, November 16, 2009

தவறு யார்மீது?

கடந்த தீபாவளிக்கு வெளியாகி விமர்சனங்களிலும் வசூலிலும் நல்ல வரவேற்ப்பை பெற்ற படம்தான் பேராண்மை.இந்தப்படத்தை தயாரித்த ஐங்கரன் நிறுவனம் தற்போது இந்தப்படத்தை கொலிவூட்டில் வெளியிடுவதற்கு தயாராகி வருகிறதாம்.இதற்காக 150 நிமிடங்கள் வரை நீளமான படத்தை பாடல் காட்சிகள் மற்றும் தேவையற்ற காட்சிகளை நீக்கி90 நிமிடப்படமாக நீளத்தை குறைக்கும் பணியில் இயக்குனர் ஜனநாதன் ஈடுபட்டுள்ளாராம். கொலிவூட்டில் தமிழ்ப்படத்தை திரையிடுவது வரவேற்கத்தக்க விடயம் தான்.ஆனால் ஒருவிடயம் மட்டும் உறுத்துகிறது. கொலிவூட்டில் ரிலீஸ் செய்யும்போது மட்டும் ஏன் பாடல்க்காட்சிகள் மற்றும் தேவையில்லாத காட்சிகள் நீக்கப்பாட்டு நேரம் குறைக்கப்படுகிறது.கொலிவூட்டில் தயாராகும் தொண்ணூறு நிமிடப்படங்களை தமிழில் டப்பிங் செய்து திரையிடும்போது வரவேற்கும் மக்கள் நேரடியாக தமிழில் ஒரு படத்தை அதே தொண்ணூறு நிமிடத்தில் எடுத்தால் ரசிக்கமாட்டார்களா? இயக்குனர்களை கேட்டால் தயாரிப்பாளர்களையும் தயாரிப்பாளர்களை கேட்டால் மக்களையும் குற்றம் சாட்டுகிறார்களே அன்றி இதுவரை யாரும் இதனை முழுமையாக முயற்சி செய்யவில்லை. தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு கொண்டு செல்வதற்கு பாடுபடுபவர்கள் என்று கூறப்படும் கமலஹாசன் , மணிரத்தினம் படங்களிலேயே இன்னமும் பாடல்க்காட்சிகள் இடம்பெறுகிறது என்றால் மற்றவர்களை குறைகூறி என்ன செய்வது? கேட்டால் ஏதாவது ஓரிரு படங்களின் பெயர்களை கூறி மக்கள் இந்தப்படங்களை வரவேற்கவில்லை என்று ஒப்புக்கு சப்பாணி கூறுவார்கள்.படிப்படியாகத்தான் ரசனையை மாற்றவேண்டுமென்று கதை விடுவார்கள். உடனடியாக மாற்றம் கஷ்டம்தான் ஆனால் சில நல்லஸ்கிரிப்ட் மாட்டும் போதாவது முயற்சி செய்யலாமில்ல.உதாரணமாக சுப்ரமணியபுரம் ,பருத்திவீரன் போன்ற படங்களில் பாடல்கள் சிறப்பானதாக இருந்தாலும் படத்தில் பாடல்கள் இல்லாவிட்டால் இந்த இரண்டுபடங்களும் உலக சினிமாவுக்கு எந்தவகையிலும் குறைந்தவையில்லை. பாலா,அமீர்,சசிகுமார்,பாலாஜிசக்திவேல்,ஜனநாதன்,ராதாமோகன்,சேரன்,சிம்புதேவன் எனப்பல புதிய சிந்தனையுள்ள சிறந்த இயக்குனர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் நினைத்தால் தேவையற்ற சண்டைக்காட்சிகள் , பாடல்க்காட்சிகள் (திரைப்படத்தின் தேவைக்கேற்ப பின்னணி இசையில் பாடல்கள் வந்தால் தவறில்லை), நகைச்சுவைக்காட்சிகள் மற்றும் வர்த்தக நோக்கத்துக்காக திணிக்கப்படும் தேவையற்ற காட்சிகள் இல்லாமல் குறைந்த நேரத்தில் படமெடுக்கலாம். அப்படி இவர்கள் படமெடுத்தால் ஏன் edit செய்து கொலிவூட்டில் ரிலீஸ் செய்யவேண்டும்? நேரடியாக sub title உடனேயே படத்தை வெளியிடலாமே. நல்ல மாற்றங்களை தமிழ் ரசிகர்கள் ஒருபோது வரவேற்க தவறவில்லை, மக்களுக்கு புரியும்படி சொல்லவந்த விடயத்தை குழப்பாமல் தெளிவாக ரசிக்கும்படியாக கொடுத்தால் நிச்சயம் மக்கள் வரவேற்ப்பார்கள்.

8 வாசகர் எண்ணங்கள்:

ஞானப்பழம் said...

நல்லா சொன்னீங்க போங்க... 90 நிமிடப் படம் வந்தாலாவது எங்க அப்பா திரையரங்கில் வந்து படம் பார்ப்பாரான்னு பார்ப்போம்... ஆம்.. நீங்கள் சொல்வது கவணிக்கப்பட வேண்டியதுதான்!! தினமும் 9 - 5 வேலைசெய்யும் நம் மாந்தர்களுக்கு, திரைப்படம் ஒரு இளைப்பாறும் அம்சமாகவே கருதப்படுகிறது... அப்படியிருக்கும்போது, முன்புகாலங்களைபோல ஆர அமர்ந்து இரண்டரை மணி நேரம் ஒரு திரைப்படத்தை திரையரங்குகளில் உட்கார்ந்து பர்ர்ப்பது கடுமையாகத்தான் இருக்கும்(என் அப்பனைப் போன்றோருக்கு!!)... ஆனால் நம் தொன்றுதொட்ட நாடக வகைகளைப் பார்த்தீரானால், "நாடகம்" என்பதே இசையோடு கலந்துதான் வழங்கப் பட்டது... இதே, நீங்கள் ஆரம்பகாலங்களில் வந்த கருப்பு/வெள்ளை படங்களைப் பார்தீரானால், ஒரு படத்திற்க்கு 12 - 15 பாடல்கள் இருக்கும்... நம் இலக்கியங்களைப் பார்தீரானல் "உரை நடை" என்பதே கிடையாது... "உரைப்பதே" பாடல்கள் மூலமாகத்தான் உரைத்தனர்... நாடகத் துரையில் நம் மொழியின் வரலாறு அப்படியிருக்கையில், இப்போது வரும் திரைப் படங்களிலும் அந்த சாயல் இருப்பதில் வியப்பில்லை. (இன்னும் நம் கலச்சாரத்தின் சாயல் இருப்பதில் ஒருவிதத்தில் நாம் மகிள்ச்சி அடைய வேன்டும்!!).. ஆனால், நீங்கள் சொல்வது எங்கே உண்மைப்படுகின்றது என்றால், "டப்பாங்குத்து" பாடல்களிலோ, தேவையற்ற சண்டைக் காட்ச்சிகளிலோ நம் கலச்சாரம் எப்படி வெளிப்படுகிறது என்றுதான்... தேவையில்லமல், ஒவ்வொரு படங்களிலும், தெவையற்ற இடங்களில் பழைய பாடல்களை மறுகலப்பு செய்வதில் நம் கலாச்சாரம் எப்படி வெளிப்படுகிறது என்பதில்தான்!! இந்த மாதிரி தேவையற்ற பகுதிகளை திரைப்படங்களில் நீக்குவது நல்லதே.. ஆனால் நன்றாக திரையமைக்கப் பட்ட பாடல்களையும் காட்சிகளையும் நாம் வரவெற்க்க வேன்டும்(அது நம் கலச்சாரம் அல்லவா?).. எடுத்துக்காட்டாக "நாட்டுபுற படல்களை" நான் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும்தான் பார்த்துக் கேட்டுள்ளேன்(தொலைத்த மரபை தொலைக்காட்சிகளில் தேடிக்கொள்கிறேன்!!).. அது திரைப்படங்களில் இடம்பெறுவது கண்டிப்பாக நாம் கலச்சார வெளிப்படுதானே? அதை பாராட்ட வேன்டும் எங்கிறேன்.. என்ன சொல்கிறீர்?

அ.ஜீவதர்ஷன் said...

cshmech ...


பாடல்கள் முளுமையாள நீக்கப்படவேண்டும் என்று கூறவில்லை, நான் முதலிலே குறிப்பிட்டபடி தேவைக்கேற்ப பின்னணியில் (B G M) பாடல்கள் வருவது என்பதனை நான் வரவேற்க்கிறேன். ஆனால் ஹீரோவோ ஹீரோயினோ வாயால் ஒரு பாடலை பாடுவது மாதிரி படமாக்குவதை இயலுமான வரை தவிர்க்கலாம்.எமக்கே இவர்கள் பாடலை இயற்றி அதற்குள் மெட்டுப்போட்டு நடனத்தை இவர்களே கம்போஷ்பண்ணி ஆடுகிறார்களா என்ற எண்ணம் தோன்றும் போது வேற்று மொழிக்காரனுக்கு அந்த எண்ணம் தோன்றாதா? கிராமியப்பாடல்கள் நாட்டுப்புறப்பாடல்கள் என்பன இவற்றில் அடங்காதவை அந்தமாதிரியான பாடல்களை ஒரு குழுவாக பாடுவதாகவோ அல்லது உரியவர்கள் (நகரத்து ஹீரோவோ அல்லது ஹீரோயினோ அல்லாமல் )பாடுமிடத்தில் அதற்க்கு தனி மதிப்பே உருவாகும். மற்றும் 90 ந்மிமிடங்களில் ஐந்து பாடல்கள் என்று பார்த்தல் 30 நிமிடம் போய்விடும் பின்னர் எப்படி கதையை சொல்வது. அதற்க்காக பாடல்களை நான் வெறுப்பதாக அர்த்தமில்லை.அவற்றை முறையான விதத்திலே திரைக்கதைக்கு தேவையான விடத்து பின்னணியில் ஒலிக்கும் பாடல்களாக பயன்படுத்தலாம் அல்லது நமது பாடல்களை எமது கலாச்சாரத்தோடு கலந்து ஒலி , ஓளி அல்பங்களாக வெளியிடலாம்.(நான் கூறியவை அனைத்தும் தரமான இயக்குனர்களின் படங்களுக்கு மட்டும் பொருந்தும் ) இது எனது தனிப்பட்ட கருத்து.

ஞானப்பழம் said...

(நான் கூறியவை அனைத்தும் தரமான இயக்குனர்களின் படங்களுக்கு மட்டும் பொருந்தும் )///
தரமான இயக்குனர்னா யார்? அப்படியே மேற்கத்திய பாணியில் படம் எடுப்பவரா?

///எமக்கே இவர்கள் பாடலை இயற்றி அதற்குள் மெட்டுப்போட்டு நடனத்தை இவர்களே கம்போஷ்பண்ணி ஆடுகிறார்களா என்ற எண்ணம் தோன்றும் போது வேற்று மொழிக்காரனுக்கு அந்த எண்ணம் தோன்றாதா?///
உங்கள் எண்ணம் மிகவும் சரி.. இப்படி நகல் செய்யும் முறை, நமது கலாச்சாரத்தை இழந்ததின் வெளிப்பாடாகப் படுகிறது.. வெறென்ன?

///அவற்றை முறையான விதத்திலே திரைக்கதைக்கு தேவையான விடத்து பின்னணியில் ஒலிக்கும் பாடல்களாக பயன்படுத்தலாம் அல்லது நமது பாடல்களை எமது கலாச்சாரத்தோடு கலந்து ஒலி , ஓளி அல்பங்களாக வெளியிடலாம்////
ஆம். இல்லை.. மறுபடியும் நீங்கள் மேற்கத்திய பாணியிலேயே சிந்திக்கிறீர்... மேற்கத்திய நாடகங்களில், இசையின் மூலமாகவோ, இல்லை நடுநடுவே பாடல்கள் வந்தாலோ, அதை "ம்யூசிக்கல்" என்றழைப்பார்கள்... அவர்களுக்கு அது நடகத்தின் ஒரு வகையே ஆகும்.. ஆனால், நமது பண்பாடோ எல்லா நாடகங்களும் "ம்யூசிக்கல்"களாகதான் இருக்கும்!!! அந்த மரபை நாம் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?

மேற்கத்தய நாடகங்களில், ஒரு கதாநாயகனையோ, கதநாயகியையோ மட்டுமே மையப்படுத்துவது அரிது... நாம் பழம்பெரும் இலக்கியங்களைப் பார்த்தாலும், கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.. மேற்கத்திய அதிக்கம், எப்போது நம் பாடல்களிலும், நடனங்களிலும் வந்ததோ, அப்போதே நம் பாரம்பரியத்தை இழந்துவிட்டொம்.. அதன் காரணம்தான், இப்பொது ஆலிவுட்டில் மறு உருவக்கம் செய்யும்போது, அவர்கள் பாணியில் அமைந்த பாடல்காட்சிகளை நீக்க வேண்டியுள்ளது!! நீங்கள் சொல்லும் கருத்து சரிதான்.. ஆனால் அந்த நிலமைக்கு வருவதின் காரணம்தான் வேறு... 80களில் வந்த பாடல் காட்சிகளைப் பாருங்கள்... "தேவர் மகன்"னில் வரும் "வானம் தொட்டு வந்த.." என்ற பாடலை எந்த "வுட்டு"க்கு அனுப்பினாலும் நீக்கம் செய்ய முடியுமா? அதுபோன்று கதையோடு ஒன்றி அமையும் பாடல்கள் இல்லாமல்போனது வருத்தப்பட வேன்டிய விடயம்தான்!

(உங்கள் கருத்துகளை முரண்படுத்துவது என் நோக்கமல்ல... நல்ல வாதங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்)

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

இந்த விடயத்தில் இருவரும் எதிரெதிர் திசையில ஜோசிக்கிரம் என்று நினைக்கிறேன். இரண்டு பேருக்கும் ஒரே கருத்து இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லைத்தானே? நீங்கள் உங்கள் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்கள் நான் எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன். ஆக இந்தவிடயத்துக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைத்து வேறொரு விடயத்தில் மீண்டும் சிந்திப்போம். உங்கள் வருகையும் பின்னூட்டலும் நிச்சயம் எனக்கு அவசியம் .( நான் கூறியதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்)

ஞானப்பழம் said...

hehe.. முற்றும்...

ungalukku facebook profile irukkiradha? irundhaal inge link post pannungal!!

அ.ஜீவதர்ஷன் said...

search "Arulanantham Jeevatharshan" and request me.i'll add as friend.

r.v.saravanan said...

வர்த்தக நோக்கத்துக்காக திணிக்கப்படும் தேவையற்ற காட்சிகள் இல்லாமல் குறைந்த நேரத்தில் படமெடுக்கலாம்

repeat..........

அ.ஜீவதர்ஷன் said...

r.v.saravanan kudandhai

//repeat..........//

உங்கள் தொடர் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள், நேர பற்றாக்குறையால் அனைத்து பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்க முடியவில்லை , தவறாக நினைக்க வேண்டாம்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)